
சீனா தனது இலங்கையுடனான உறவை நீண்டகால அடிப்படையில் நிதானமாக வளர்த்து வருகிறது. இலங்கையில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அது தனது உறவிலோ அல்லது உதவிகளிலோ சிறிதளவும் மாற்றம் காட்டுவதில்லை. அது மட்டுமல்ல சிங்களத் தேசியவாதிகளின் மிகச்சிறந்த நண்பனாகச் சீனாவே திகழ்கிறது. இந்த அக்டோபர் மாதம் இந்தியாவிலிருந்து வந்த சில அறிக்கைகள் இந்தியாவின் சில நடவடிக்கைகள் சீனாவைத் திகைக்க வைத்திருக்கும்.
இலங்கையில் இராணுவப் புரட்சி நடந்தால் இந்தியா அதை எப்படி அணுகும் என்பது பற்றி ஒரு தகவல் டில்லியில் இருந்தும் கொழும்பில் இருந்தும் வெளிவந்தது. பொதுவாக இப்படிப் பட்ட திட்டங்களோ எண்ணங்களோ பகிரங்கப் படுத்துவதில்லை. ஆனால் இது ஏன் பகிரங்கமாக அறிவிக்கப் பட்டது? இலங்கை தொடர்பான சீனாவின் தெரிவுகளில் ஒன்று சீனாசார்பு இராணுவ ஆட்சியை மியன்மார் பாணியில் இலங்கையிலும் ஏற்படுத்துவது என்று கருதப்படுகிறது. அதன் மூலம் இலங்கையில் தனது மிகப் பெறுமதி மிக்க அம்பாந்தோட்டைத் திட்டத்தை பாதுகாக்க முடியும் என்று சீனாகருதலாம். அம்பாந்தோட்டை முதலீட்டின் பின் இலங்கையில் தனக்கு எதிரான எந்த ஒரு அரசும் இலங்கையில் இருக்காமல் பார்த்துக் கொள்வது சீனாவின் முக்கிய பணி.
சர்வதேச நாணய நிதியம் இரண்டாவது பகுதி கடனுதவியை வழங்காவிடில் அந்தக் குறையை இந்தியா நிவர்த்தி செய்ய இந்தியா தயாராக இருப்பதாக இந்தியாவில் இருந்து ஒரு அறிக்கை வந்தது. இது இலங்கைக்கு உதவுவதில் சீனாவை தான் முந்திக்கொள்ள இந்தியா எடுத்த முன்னேற்பாட்டு நடவடிக்கை. இதுவும் சீனாவை சிந்திக்க வைத்திருக்கும்.
அடுத்து இலங்கைக்கு இப்போது பெரும் தலையிடியாக இருப்பது வன்னி முகாம்கள் பற்றிய சர்வதேச அபிப்பிராயம். அதற்கு உதவி செய்ய இந்தியாவே முன் வந்தது. இதற்காக ஒரு பாராளமன்றக் குழுவை இலங்கைக்கு அனுப்பி அந்தப் பாராளமன்றக் குழு தனது அறிக்கையை டெல்லியில் சமர்க்கும் முன்பே இலங்கையின் முகாம்கள் தொடர்பாக தாம் முழுத்திருப்தி அடைந்துள்ளதாக இந்தியா அறிக்கை வெளியிட்டது. முகாம்கள் தொடர்பாக உலக அபிப்பிராயத்தை மாற்ற சீனாவால் எதுவும் செய்யவில்லை. உண்மையில் மியன்மாரைப் போல் இலங்கையும் மேற்குலக நாடுகளின் எதிரியாக மாறுவதை சீனா விரும்பலாம்.
இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு சீனா சில மாற்று நடவடிக்கைகளை மேற் கொள்ளும். அதில் ஒன்று ஈழத் தமிழர்கள் சார்பாக மூன்றாம் தரப்பினூடாக சீனா தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அந்த மூன்றாம் தரப்பினூடாக சீனா ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்யப் போவதாக இலங்கையை மிரட்டி இலங்கையை இந்தியா நோக்கி சாய்வதை தடுக்க முயல்கிறதா?
இவ்வளவு காலமும் இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக எந்தவிதத்திலும் அலட்டிக் கொள்ளாத இந்திய நக்ஸலைட் இயக்கம் திடீரென்று இலங்கைத் தமிழர்களுக்கு தாம் ஆயுதம் கொடுத்து அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக ஏன் அறிவித்தது?