Monday, 19 October 2015

ஹாமஸிற்கு போட்டியாக ஈரான் உருவாக்கும் அல் சபிரின் அமைப்பு



ஈரானுக்கும் ஹமாஸிற்கும் இடையில் அண்மைக்காலங்களாக உறவு சீராக இல்லை. இருதரப்பினருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டமைக்கு மூன்று முக்கிய  காரணங்கள் உள்ளன. முதலாவது சிரியாவில் ஈரானின் நட்பு ஆட்சியாளரான அல் அசாத்திற்கு உதவி செய்ய ஹமாஸ் மறுத்து விட்டது. மாறாக அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களுக்கு ஹமாஸ் ஆதரவு வழங்கியது. இரண்டாவது ஹமாஸ் தனது தலைமயகத்தை இரகசியமாக துருக்கிக்கு மாற்றியது. மூன்றாவது ஹமாஸ் தலைவர்கள் ஈரானின் எதிரியும் சுனி முஸ்லிம்களின் நாடுமாகிய சவுதி அரேபியாவிற்குப் பயணம் செய்து பேச்சுவார்த்தை நடத்தியது.

மதசார்பற்ற பாத் கட்சியைச் சேர்ந்த பஷார் அசாத்தின் ஆட்சிக்கு எதிராக அரபு வசந்தக் கிளர்ச்சி உருவான போது அதில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு முக்கிய பாகம் வகித்தது. ஹமாஸ் அமைப்பின் தாய் வீடான இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு ஆதரவு நிலையை ஹமாஸ் எடுத்தது ஈரானைக் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. எகிப்தில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு ஆட்சிக்கு வந்த போது ஹமாஸ் ஈரானிலும் பார்க்கச் சிறந்த ஒரு நட்பு தனக்கு உருவாகிவிட்டது எனக் நம்பியது. ஆனால் அந்த நம்ப்பிக்கை ஓராண்டில் தகர்ந்துவிட்டது.

ஈரானில் தங்கியிருக்கும் ஹமாஸ்
அரபு சுனி அமைப்பான ஹமாஸிற்கு பாரசீக சியா நாடான ஈரான் நீண்டகாலமாக உதவி செய்து வருகின்றது. ஆண்டு ஒன்றிற்கு 250 மில்லியன் டொலர்களுக்கு மேல் ஈரான் ஹமாஸிற்கு உதவியாக வழங்குகின்றது. ஈரான் மீதான பொருளாதாரத் தடை நீக்கப் பட்ட பின்னர் அதற்கு மேலதிகமாக 100பில்லியன் டொலர்கள் வெளிநாட்டு நிதி கிடைத்துள்ளது. அந்த நிதியில் ஒரு பகுதி ஈரான் உதவி செய்யும் தீவிரவாத அமைப்புகளுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதில் கணிசமான அளவு லெபனானில் இருந்து செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு காசா நிலப்பரப்பில் செயற்படும் ஹமாஸ் அமைப்பு யேமனில் செயற்படுக் ஹூதி மக்கஅமைப்பிற்குச் செல்லப் படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. ஆனால் இஸ்ரேலின் உளவுத்துறைத் தகவலின் படி ஹாமாஸ் அமைப்பிற்கு அண்மைக்காலமாக ஈரானிடமிருந்து பெருமளவில் பணமோ படைக்கலன்களோ செல்வதில்லை எனச் சொல்லப்படுகின்றது. ஹமாஸ் தனக்குத் தேவையான படைக்கலன்க்ளைத் தானே உற்பத்தி செய்கின்றது. அத்துடன் ஹமாஸ் பெரும் நிதித் தட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

உலகமயமான ஹமாஸ்
ஈரானின் வேண்டுதலின் பேரில் சியா முஸ்லிம்களின் அமைப்பான ஹிஸ்புல்லா அமைப்பு சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் போராடுகின்றது. 2014-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இஸ்ரேலுக்கும் ஹமாஸிற்கும் இடையில் நடந்த மோதலின் போது அழிக்கப் பட்ட பல நிலக்கீழ் சுரங்கங்களை மீள நிர்மானிக்க ஈரான் நிதி உதவி செய்தது. ஹமாஸின் அரயற்துறைத் தலைவர் கலீட் மேஷால் சவுதி அரேபியாவின் மன்னர் சல்மன் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத்தை மட்டுமல்ல முன்னாள் பிரித்தானித் தலைமை அமைச்சர் ரொனி பிளேயரையும் சந்தித்து உரையாடினார். இதைத் தொடர்ந்து இரசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்கி லவ்ரோவ், துருக்கியின் அதிபர் ரயிப் எர்கோடன் ஆகியோரையும் சந்தித்து உரையாடினார். இச் சந்திப்புக்கள் ஹமாஸை ஈரானிடம் இருந்து பிரிப்பதற்கான முயற்ச்சியா என எண்ணத் தோன்றுகின்றது.  

ஹமாஸின் வரலாறு
ஹமாலின் தோற்றத்தை சற்றுப் பார்ப்போம். இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு படைக்கலன் போராட்டத்தில் நம்பிக்கை இல்லாத ஒரு மதவாத அமைப்பு. அது பலஸ்த்தீனத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கையில் மத சார்பற்ற பலஸ்த்தீன விடுதலை இயக்கத்திற்கும் அதற்கும் இடயில் மோசமான முறுகல் நிலை உருவானது. அது மோதலாக மாறிய போது இஸ்ரேலிய உளவுத்துறையினர் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்குப் படைக்கலன்கள் வழங்கினர். இதனால் 1987-ம் ஆண்டு இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பில் இருந்து பலர் பிரிந்து சென்று தனியான அமைப்பை உருவாக்கினர். அதுவே இன்று இஸ்ரேலுக்கு பெரும் சவாலாக இருக்கும் ஹமாஸ் அமைப்பாகும்.  பலஸ்த்தீன விடுதலை இயக்கம் இஸ்ரேலை ஒரு நாடாக ஏற்றுக் கொண்ட போது ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் என ஒரு நாடு இருக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்து அதை இன்றுவரை பேணி வருகின்றது. அத்துடன் பலஸ்த்தீனப் பிரச்சனை பேச்சு வார்த்தை மூலம் தீக்கப்பட முடியாத ஒன்று அது புனிதப் போரின் மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்ற கொள்கையுடையது. இஸ்ரேல் ஹமாஸ் தலைவர்களைத் தேடித் தேடி அழிக்கத் தொடங்கியதில் இருந்து ஹமாஸ் அமைப்பு சிறு குழுக்கள் பலவற்றைக் கொண்ட ஒரு அமைப்பாக மாற்றம் பெற்றது. இதனால் தலைவர்கள் கொல்லப்பட்ட போதும் அது தொடர்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது

ஹமாஸ் அமைப்பு 2006-ம் ஆண்டில் நடந்த பலஸ்த்தீனியப் பாராளமன்றத் தேர்தலில் பலஸ்த்தீனிய விடுதலை இயக்கத்தைத் தோற்கடித்து வெற்றி பெற்றது. . பின்னர் 2007-ம் ஆண்டு இரு அமைப்புக்களும் போரிட்டுக் கொண்டன. பலஸ்த்தீனியத்தின் மேற்குக் கரையை பலஸ்த்தீனிய விடுதலை இயக்கமும் காசா நிலப்பரபபை காசாவும் தமதாக்கிக் கொண்டன.  தொடர்ந்து இன்றுவரை காசா பிரதேசத்தை ஆண்டு  வருகிறது. ஹமாஸிற்குப் படைக்கலன்களும் நிதி உதவியும் ஈரானிடமிருந்தே சென்றன..

அரபு வசந்தம் ஹமாஸ் இயக்கத்திற்கும் பாதிப்பு
அரபு வசந்ததம் என்னும் தன்னாட்சி ஆட்சியாளர்களுக்கு எதிரான கிளர்ச்சி சிரியாவிற்கும் படர்ந்த போது ஈரானின் வேண்டுதலினால் ஹிஸ்புல்லா அரச படைகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. அது ஹமாஸ் இயக்கம் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவாக செயற்பட்டது.  இதுதால் ஈரான் ஹமாஸ் இயக்கத்திற்கான நிதி உதவியை நிறுத்தி விட்டது. ஆனால் படைக்கல உதவிகளை நிறுத்தவில்லை. ஈரானின் ஆதரவுடன் இயங்கும் ஹிஸ்புல்லா இயக்கம் சிரிய அதிபர் அசாத்தின் படைகளுடன் இணைந்து கிளர்ச்சிக் காரர்களுக்கு எதிராகப் போராடுகிறது. எகிப்தியப் படைத்துறையினருக்கும் இஸாமிய சகோதரத்துவ அமைப்புடன் நல்ல உறவு பேணும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையில் எப்போதும் நல்ல உறவு இருந்ததில்லை.

எகிப்திய ஆட்சி மாற்றங்களும் ஹமாஸ் இயக்கமும்
எகிப்தில் முஹமட் மேர்சி தலைமையில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் நீதிக்கும் சமாதானத்திற்குமான கட்சி ஆட்சியைக் கைப்பற்றியவுடன் ஹமாஸ் இயக்கத்தினர் பெரு மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் மேர்சியின் ஆட்சி கலைக்கபட்டு படைத்துறையினர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் ஹமாஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காசாப் பிரதேசத்தில் எகிப்தியப் படையினருக்கு எதிராக பல பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. சினாய் பகுதியில் இருக்கும் ஹமாஸ் இயக்க ஆதரவாளர்கள் எகிப்தியப் படையினருக்கு எதிராக தாக்குதல்களும் நடாத்தினர். ஹமாஸ் இயக்கத்தின் மத போதகர்கள் எகிப்தியப் படைத் துறையினருக்கு எதிராக பலத்த பரப்புரைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இது எகிப்தியப் படைத்துறையினரை கடும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியது.

நூற்றுக் கணக்கான சுரங்கைப் பாதைகள்
காசா நிலப்பரப்பிற்கான வழங்கற் பாதை எகிப்திய எல்லையில் உள்ள நூற்றுக் கணக்கான சுரங்கைப் பாதைகளினூடாக நடக்கிறது. சில கணிப்புக்கள் 1200 வரையிலான சுரங்கப் பாதை இருப்பதாகச் சொல்கிறன. இதனூடாக எரிபொருள் படைக்கலன்கள் உணவு எனப் பலவகையானவை எடுத்துச் செல்லப்படுகின்றன.  ஈரானில் இருந்து ஹமாஸ் இயக்கப் போராளிகளுக்கு ஏவுகணைகள் உட்படப் பல படைக்கலன்கள் இந்த சுரங்கப்பாதைகளூடாக கிடைக்கின்றன.  ஹமாஸ் இயக்கம் இந்தச் சுரங்கப்பாதையால் ஆண்டு ஒன்றிற்கு ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகவும் பெறுகின்றது. ஹமாஸ் இயக்கத்தினர் எகிப்தில் இசுலாமிய சகோதரத்து அமைப்பிற்கு ஆதரவாக செயற்பட்டமையால் ஆத்திரமடைந்த எகிப்தியப் படைத்துறையினர் காசாவிற்கான நிலக்கீழ் சுரங்கப்பாதைகளைச் சிதைத்தும் மூடியும் வருகின்றனர். இதனால் காசாப் பிரதேசத்தில் பொருடகளின் விலைகள் அதிகரித்ததுடன் மின்வெட்டும் கடுமையாக அமூல் செய்யப்படுகிறது. விழித்துக் கொண்ட ஹமாஸ் அமைப்பின் தலைமை தனது உறுப்பினர்களுக்கும் மத போதகர்களுக்கும் எகிப்தின் படைத்துறையினருக்கு எதிரான பரப்புரைகளை நிறுத்தும்படி உத்தரவிட்டனர்.

ஹமாஸ் அமைப்பிற்கு ஒரு புறம் இஸ்ரேலும் மறு புறம் இஸ்ரேலியக் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய தரைக் கடலும் இருப்பதால் எகிப்த்தின் சினாய் பாலைவனத்தினுடனான நிலக் கீழ் சுரங்கப்பாதையால் மட்டும் ஹமாஸ் வெளியுலகத் தொடர்பை வைத்திருக்கின்றது. இஸ்ரேலுடன் ஒரு நீண்ட கால மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் செய்தால் ஹாமாஸிற்கு மத்திய தரைக்கடலினூடாக போக்குவரத்து செய்ய இஸ்ரேல் அனுமதிக்கும் எனத் தெரிவித்துள்ளது. ரொனி பிளேயர் ஹமாஸ் அரசியற் துறைத் தலைவருடன் நடத்திய பேச்சு வார்த்தை இது பற்றியதாகவே இருந்தது.

2014-ம் ஆண்டில் இருந்து ஹமாஸ் அமைப்பிற்குப் போட்டியா இன்னும் ஒரு அமைப்பை ஈரான் காசா நிலப்பரப்பில் உருவாகி வருகின்றது. அதற்கு அல் சபிரின் எனப் பெயரிடப்பட்டுள்ளது. சபிரின் என்னும் சொல் பொறுமை எனப் பொருள்படும். இதன் தலைவராக பலஸ்த்தீனிய இஸ்லாமியப் புனிதப் போராளிகள் என்னும் பெயர் கொண்ட அமைப்பின் தலைவர் ஹிஷாம் சலீம் நியமிக்கப்பட்டுள்ளார். இவரும் இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்கக் கூடாது என்ற கொள்கையுடையவர். ஈரான் இப்போது  அல் சபிரினின் தலைவர் ஹிஷாம் சலீமிற்கு ஆண்டு தோறும் 10மில்லியன் டொலர்களை வழங்கத் தொடங்கியுள்ளது. இதில் ஒரு பகுதியை அவர் இஸ்ரேலியச் சிறையில் உள்ள பலஸ்த்தீனியர்களின் குடும்பத்தவர்களுக்குப் பகிர்ந்தளிக்கின்றார். மேற்குக் கரையில் செயற்படும் பலஸ்த்தீனிய இஸ்லாமியப் புனிதப் போராளிகள் அமைப்பில் இருந்து விலகிப் பலர் அல் சபிரின் அமைப்பில் இணைந்து வருகின்றார்கள். ஆரம்பத்தில் தனது எதிரி அமைப்பான பலஸ்த்தீனிய இஸ்லாமியப் புனிதப் போராளி அமைப்பு வலுவிழப்பதை ஹமாஸ் விரும்பியது. பின்னர் தமக்குச் சவால் விடக்கூடிய அளவிற்கு அல் சபிரின் வளர்வதையிட்டு ஹமாஸ் கரிசனை கொள்ள ஆரம்பித்தது. ஹிஷாம் சலீம் பல சிறு அமைப்புக்களையும் தனது அல் சபிரின் அமைப்புடன் இணைத்து வருகின்றார். ஆனால் இத்தனைக்கும் மத்தியில் அல் சப்ரின் பலஸ்த்தீனியர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு பிரபலம் அடையவில்லை என ஈரானும் ஹிஸ்புல்லாவும் அதிருப்தி அடைந்துள்ளன. ஆனால் அல் சபிரினின் வளர்ச்சி மூலம் ஈரான் ஹமாஸிற்குத் தனது செய்தியைத் தெளிவு படுத்தியுள்ளது. அதாவது தனது நிதி மற்றும் படைக்கல உதவி பெறும் அமைப்பு தனது சொற்படி நடக்க வேண்டும் என்பதே அச்செய்தி. ஆனால் பலஸ்த்தீனியர்களுக்கு தேவையே இல்லாத ஒன்று என்று சொன்னால் ஹமாஸிற்கும் அல் சபிரினிற்கும் இடையிலான சகோதரப் போர் ஆகும்.


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...