Saturday, 2 March 2013

இணைய வெளிப் போரில் அமெரிக்கா தோல்வியடைகிறதா?

பலஸ்த்தீனப் போராளிகள் இஸ்ரேலிய அரச கணனிகளை ஊடுருவி அங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தினர். இஸ்ரேல் பல முனைகளில் இருந்து வரும் இணையவெளித் தாக்குதலகளைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறது. இலங்கைப் பாதுகாப்புத் துறையின் இணையத் தளத்துக்குள் சனல் - 4 இன் "சூடற்ற பிரதேசம்" ஆவணப்படத்தின் முன்னோட்டத்தைப் புகுத்தினர் இணைய வெளி ஊடுருவிகள். பிரித்தானிய உளவுத் துறை அல் கெய்தாவின் இணையத் தளத்தை ஊடுருவி அங்கு குண்டு செய்வது எப்படி என்ற பக்கத்தை அழித்துவிட்டு கேக் சமைப்பது எப்படி என்னும் பதிவை இட்டது,

இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான்மீது பல இணையவெளித்தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இது பற்றிய தகவல்களை இந்த இணைப்பில் காணலாம்: ரான்மீது தாக்குதல்

சீனாவின் செம் படையில் அமெரிக்காவின் இணையத் தளங்களை ஊடுருவல் செய்வதற்கு என ஒரு சிறப்புப் படைப் பிரிவு இருக்கிறது என்பதை அமெரிக்கா அமபலப் படுத்தியது. அமெரிக்காதான் தனது இணையத் தளங்களை ஊடுருவுகிறது என்றது சீனா.

அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகன் வெளிவிட்ட அறிக்கை:
  • Chinese actors are the world’s most active and persistent perpetrators of economic espionage. Chinese attempts to collect US technological and economic information will continue at a high level and will represent a growing and persistent threat to US economic security. The nature of the cyber threat will evolve with continuing technological advances in the global information environment.
 இணைய வெளிப்போரில் நாடுகள் ஒன்றின் மீது ஒன்று உளவு பார்க்கவும் படைத்துறை இரகசியங்களைத் திருடவும், மக்களுக்கான வழங்குதல்களைச் சிதைக்கவும் பயன்படுத்துகின்றன. போராளி அமைப்புக்கள் தமக்குப் பிடிக்காத நாடுகளுக்கு இழப்புக்களை ஏற்படுத்தப் பயன்படுத்துகின்றன. வர்த்தக நிறுவனங்கள் மற்ற வர்த்தக நிறுவனங்களின் தொழில்நுட்பத் தகவல்களை திருடப் பயன்படுத்துகின்றன. தனிப்பட்டவர்கள் தகவல்களை அழிக்கும் நிலையை ஏற்படுத்தி மற்றவர்கள் அல்லது மற்ற நிறுவனங்களிடம் இருந்து மிரட்டிப் பணம் பெறப் பயன்படுத்துகின்றனர். கொக்க கோலா நிறுவனத்தின் கணனிகள் மீது பல நூறுதடவைகள் சீனாவில் இருந்து ஊடுருவல் நடாத்தப்பட்டதாக அது தெரிவிக்கிறது.

ஈரானில் இருந்து அமெரிக்க நிதிநிறுவங்களின் இணையங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்க மத்திய வங்கியான Federal Reserve மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டது. 

2012இல் முன்னாள் சீனப் பிரதமர் பதவியில் இருக்கும் போது பல மில்லியன்களைச் சுருட்டியதாக நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை அம்பலப்படுத்தியது. இதற்குப் பதிலடியாக சீனாவில் இருந்து அப்பத்திரிகையின் கணனிகள் ஊடுருவப்பட்டுச் செயலிழக்கச் செய்யப்பட்டன.

இணையவெளிப் போரில் சீனாவிடம் அமெரிக்கா தோற்று வருகிறது என இரசிய ஊடகம் ஒன்று தெரிவித்தது:


தனது இணையவெளிப் படைத்துறையின் பலத்தை பெருக்குவதற்கு அமெரிக்கா சீனாவின் இணையவெளித்தாக்குதல்களை மிகைப்படுத்திச் சொல்கிறது என்றும் சொல்லப்படுகிறது. அமெரிக்காவிடம் மிக வளர்ச்சியடைந்த இணையவெளிப்படைத்துறை இருக்கிறது எனப்படுகிறது. அதுமட்டுமல்ல இணையவெளிப்படைத்துறையை முதலில் உருவாக்கியது அமெரிக்காவே என்றும் சொல்லப்படுகிறது. வட கொரியா தனது நாட்டவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி இணைய வெளி ஊடுருவல்களைப் பற்றிய தனது அறிவை வளர்த்தது.

அமெரிக்காவின் இணையவெளிகளை ஊடுருவும் வெளிநாட்டு இராசதந்திரிகளுக்கான இராசதந்திரப்பாதுகாப்பை (diplomatic immunity) நீக்கும் சட்டத்தை நிறைவேற்ற எண்ணியுள்ளது. அமெரிக்காவின் தனிநபர் ஒருவரது கணனியில் தாக்குதல் செய்யும் வெளிநாட்டவர் ஒருவரது அல்லது அரசுக்கு எதிராக அந்த அமெரிக்காவின் தனிநபர் பதிலடித் தாக்குதல் செய்ய அனுமதிக்கும் சட்டம் இயற்றப்படவேண்டும் எனச் சில சட்ட அறிஞர்கள் முன்மொழிந்துள்ளனர்.

Thursday, 28 February 2013

புரட்சியின் தந்தை, போராட்டத்தின் அன்னை.

பணத்தின் வறுமை பத்தையும்
பறக்கச் செய்யும்
அன்பின் வறுமை அனைத்தையும்
இழக்கச் செய்யும்
அறிவின் வறுமை பிறப்பை
பயனற்றதாக்கும்
பண்பின் வறுமை முரண்பாடுகளை
உருவாக்கும்
உரிமையின் வறுமை போராட்டங்களை
வெடிக்க வைக்கும்
பொறுமையின் வறுமை மோதல்களை
வரவைக்கும்

அன்பில்லாதவனிடமிருப்பதே வறுமை
பணமில்லாதவனிடமிருப்பதல்ல வறுமை
அரசுகளை கவிழ்த்தது வறுமை
ஆட்சியாளர்களைக் கலைத்தது வறுமை
புரட்சியின் தந்தை இது
போராட்டத்தின் அன்னை இது
சுரண்டலுக்கு தப்பாகப் பிறந்த குழந்தை இது

நல்லவை கேளான்
குறள் சொல்லும் வறியோன்
இல்லார்க்கு இடாதவன்
ஔவை காட்டும் வறியோன்

உறவில்லாப் பிள்ளைகளயும் உருவாக்கும்
உறவுகளையும் வெறுக்கச் செய்யும்
உணர்வுகளையும் மரக்கச் செய்யும்
கொடியது இந்த வறுமை

சில சமயம் வறுமை
களவிற்கும் வழிவகுக்கும்
நீதியையும் புறந்தள்ளும்
சிவப்பு விளக்கையும் ஏற்றி வைக்கும்

பொருளியலின் பிழையான அத்தியாயம்
அரசியலின் அப்பட்டமான பயங்கரவாதம்
சோம்பலின் குழந்தையுமாகும்
ஆசைகளை வதைக்கும் வறுமை

கனவுகளையும் சிதைக்கும் வறுமை

இந்தியச் சதியை அம்பலப் படுத்துகிறது Times of India

இலங்கை இன அழிப்புப் போரில் இந்தியாவின் பங்கு இதுவரை சரியாக அம்பலப்படுத்தப்படவில்லை. ஆனால் அவ்வப்போது இந்தியாவிலிருந்து வரும் செய்திகள் இதை உறுதிப்படுத்துகின்றன. 27-02-2012 Times of Indiaஇல் இப்படி ஒரு செய்தி:

India has more problems with the report of the UN High Commissioner for Human Rights Navi Pillay. Her report, which the US has said it will support, calls for an "independent, international inquiry" into the Lankan actions during the concluding phase of the war against the LTTE. The report also calls for investigations of "violations" of international law. In addition, India is uncomfortable with the idea of special rapporteurs being appointed to visit Sri Lanka, fearing that at some stage it could come back to bite New Delhi. 

"ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவி பிள்ளை மனித உரிமைக்கழகத்திற்கு சமர்பித்த அறிக்கையின் படி இறுதிப் போரில் பன்னாட்டுச் சட்டங்கள் மீறப்பட்டது தொடர்பாக சுதந்திரமான பன்னாட்டு விசாரணை ஒன்று வேண்டும் என்றார். இதற்காக சிறப்பு அதிகாரி இலங்கை செல்ல நியமிக்கப்பட்டால் அது இந்தியாவிற்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதுடன் ஒரு கட்டத்தில் புது டில்லியையும் தாக்கும் என இந்தியா அஞ்சுகிறது." என்கிறது  Times of India.

"இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை வந்தால் அது இந்தியாவையும் குற்றவாளியாகக் காணுமா?" இதற்கான பதில்:

இலங்கையில் 2009 மே மாதத்தில் போர் முடிந்தவுடன் இலங்கையைத் தன் வழிக்குக் கொண்டுவர தன்னிடம் இலங்கைப் படை செய்த போர் குற்ற ஆதாரங்கள் இருப்பதாக இந்தியா இலங்கையை மிரட்டியதாம். பதிலுக்கு மஹிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபாய தன்னிடம் இந்தியா இலங்கையுடன் நடாத்திய உரையாடல்களின் ஒலிப்பதிவு இருப்பதாகவும் இந்தியா இலங்கையின் போர் குற்றங்களைப் பகிரங்கப் படுத்தினால் தான் அந்த உரையாடல் களைப் பகிரங்கப் படுத்துவேன் என்றும் பதிலுக்கு மிரட்டி இந்தியாவைப் பணியவைத்தாராம். இப்படி The Ground Report India என்னும் ஊடகத்தில் எழுதினார் வீ. எஸ்.சுப்பிரமணியம் என்னும் இந்திய ஆய்வாளர். இதை கிரிக்கெட் பாணியில் கோத்தபாயாவின் master stroke என்று வர்ணித்தார் அவர்.

2009 மே மாதத்திற்கு முன் இந்தியப் பாதுகாப்புத் துறை ஆலோசகர் சிவசங்கர மேனனும் வெளியுறவுத் துறைச் செயலர் நாராயணன் ஆகிய இருவரும் அடிக்கடி இலங்கை வந்து போனதுண்டு. வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாம் முகர்ஜியும் இலங்கை வந்து போனதுண்டு. போர் முடிந்தபின் இந்தியா இலங்கையின் போரக்குற்றம் பற்றி வாய் திறக்கவில்லை. இலங்கையின் மிரட்டலுக்குப் பயந்த இந்தியா 2009-ம் ஆண்டு ஐநா சபையின் மனித உரிமைக் கழகக் கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்த தீர்மானத்தை சீனாவிடன் இணைந்து இலங்கையைப் பாராட்டும் தீர்மானமாக மாற்றித் தன்னைத் தானே கேவலப் படுத்திக் கொண்டுவந்தது.

இலங்கையில் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டமைக்கு இந்தியாதான் காரணமென்றும் அதிலும் சோனியா காந்திக்கு தமிழர்கள் மேல் உள்ள ஆத்திரத்திலும் பார்க்க மேனன் - நாராயணனுக்கு அதிக ஆத்திரம் இருந்தது என்று எழுதினார் வீ. எஸ். சுப்பிரமணியம். ஆனால் எந்த உரையாடலை வைத்து கோத்தபாய இந்தியாவை மிரட்டினார் என்று வீ. எஸ். சுப்பிரமணியம் எழுதவில்லை. வேறு ஆய்வாளர்கள் இலங்கை போரை ஆகஸ்ட் 2009இல் முடிக்க எண்ணியிருந்ததாகவும் ஆனால் இந்தியாதான் மே- 2009இல் முடிக்க வலியுறுத்தியதாகவும் எழுதியிருந்தனர்.

நேற்று ஒரு வலயக் தொலைக்காட்சியில் நடந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஒரு தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த ஒரு பெண்மணி பல பொய்களை அங்கு அடுக்கினார்:

பொய் - 1: இலங்கையில் மாகாண சபைகளுக்கு ஆட்சி அதிகாரம் உண்டு.

பொய் - 2 : இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தற்போது பிள்ளையான் என்பவர் தலைமையில் தமிழர்கள் தம்மைத் தாமே ஆள்கிறார்கள.

 இலங்கையில் மாகாண சபைகளுக்கு ஆட்சி அதிகாரம் இல்லை என 1987இலேயே பிரபல சட்ட அறிஞர் நடேசன் சந்தியேந்திரா சொல்லிவிட்டார். 2012-ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த  ஒரு மாநாட்டிலும் இது ஏற்றுக் கொள்ளப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் பிள்ளையானிடம் இருந்து ஆட்சி பறிக்கப்பட்டு இப்போது கிழக்கு மாகாணத்தையும் சிங்களவர்கள் ஆள்கிறார்கள்.

அது மட்டுமல்ல தமிழர்கள் உரிமை என்று கோரிக்கொண்டிருந்தால் மீண்டும் அழிவுதான் ஏற்படும் என்றார் அந்தக் காங்கிரசுக்காரி. இந்தியாவின் மிரட்டல்  இனிப் போராட்டம் என்று தொடங்கினால் இன்னும் அழிவைத் தருவோம் என்பதை அந்தக் காங்கிரசுக்காரி வலியுறுத்துகிறார்.

Wednesday, 27 February 2013

மனித உரிமைக் கண்காணிப்பகம்: மாறி மாறிக் கற்பழித்த சிங்களவர்

இலங்கைச் சிங்களப் படையினர் என்னை நிர்வாணமாக்கி மிதித்தனர். மாறி மாறிக் கற்பழித்தனர். சிகரெட்டால் என் உடலில் சுட்டனர். மனித உரிமைக் கழகம் அம்பலப்படுத்துகிறது. ஆண்களையும் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய சிங்களப்படையினர்.



அமெரிக்காவில் இருந்து செயற்படும் மனித உரிமைக் கண்காணிப்பகம் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களைத் தேடி அறிந்து அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் பதிவு செய்து ஒரு 140 பக்க அறிக்கையைத் தயாரித்துள்ளது. "உங்களுக்கு ஒரு பாடம் கற்பிப்போம்" எனத் தலைப்பிடப்பட்ட அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தின் 22வது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது.75 பேரை மனித உரிமைக் கண்காணிப்பகம் பேட்டி கண்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் யாவரும் சட்டவாளர்கள், மருத்துவர்கள், மற்றும் உறவினர்களைச் சந்திக்கச் சந்தர்ப்பம் வழங்கப்படாமல் தடுத்து வைத்திருந்து கொடுமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

"Sri Lankan security forces have committed untold numbers of rapes of Tamil men and women in custody," said Brad Adams, the group's Asia director.

இது நல்லிணக்கமல்ல; ஆனால்  நாம் வென்று விட்டோம்;  நீங்கள் தோற்றுவிட்டீர்கள்; உங்களுக்கு மேல்தான் நாம் என்று சொல்வதாகும். பாலியல் கொடுமைகள் ஒழுங்காக நடைபெற்றன. இது பாரிய துஷ்பிரயோகத்தின் ஒரு பகுதி மட்டுமே இது என்கிறார் ஜோன் சிஃப்ரன் என்னும் மனித உரிமைக்கண்காணிப்பகத்தின் ஆசிய அதிகாரி.

இலங்கையில் ஆய்வு செய்வதற்கு தாம் தடை செய்யப்பட்டதால் இலங்கியில் பாதிக்கப்பட்டு அங்கிருந்து தப்பி வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களிடை தாம் ஆய்வுகள் மேற்கொண்டதாகக் கண்காண்பிப்பகம் தெரிவிக்கிறது. இதனால் இது பரவலாக நடந்த ஒரு இனக்கொலையின் ஒரு சிறுபகுதியே இது எனக் கூறலாம்.

மனித உரிமைக் கண்காணிப்பகம் நான்கு ஆண்டுகளாக இது நடக்கிறது என்கிறது. ஆனால் தமிழர்களுக்கு எதிரான வன்முறை 1956இல் இருந்தே நடக்கிறது என்பதை மனித உரிமைக் கண்காணிப்பகம் அறியத் தவறிவிட்டது.

வெளிநாடுகளில் இருந்து தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்பட்ட தமிழர்கள் பலர் பாலியல் கொடுமை முதல் பல கொடுமைகளுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர் என்பதை மனித உரிமைக் கண்காணிப்பகம் கோடிட்டுக் காட்டுகிறது.

The violent 26-year war saw ethnic minority Tamil rebels fighting for their own homeland against troops from the Sinhalese majority government. More than 100,000 people were killed on both sides before the government crushed the rebels with a bloody push into rebel-controlled northern areas. A U.N. report has said tens of thousands of civilians were killed in the final five months of fighting alone.
இலங்கை அரசே இலங்கையின் தமிழர் வாழும் பகுதிகளான வடக்கிலும் கிழக்கிலும் 90,000 போர் விதவைகள் இருக்கின்றனர் என்று. இறந்த கணவன்மார்கள் மட்டும் 90,000 என்றால் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 300,000இற்கு மேல் இருக்கவேண்டும் என்பது உறுதியாகிறது. மனித உரிமைக் கழகத்தின் 100,000 மேல் இருதரப்பிலும் கொல்லப்பட்டனர் என்பது மிகவும் தப்பான கணிப்பீடு.

அயோக்கிய இந்தியாவின் கேடு கெட்ட வெளிநாட்டமைச்சர் இதையும் தன்னால் நம்பகத் தன்மை உறுதிசெய்யப்படாத ஒன்று என்று சொல்வாரா? இலங்கை தனது நட்பு நாடு என்று பிதற்றுவாரா?

Tuesday, 26 February 2013

ஆஸ்கார் விருதும் அரசியலும்

84வது ஆஸ்கார் விருதுகள் 24/02/2013 ஞாயிற்றுக் கிழமை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்லிஸ் நகரில் வழங்கப்பட்டன. இதில் அரசியலும் கலந்திருப்பதாகக் குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன. ஈரான் ஆர்கோ திரைப்படத்தை சிறந்த படமாகத் தெரிவு செய்தது அமெரிக்க  சிஐஏ உளவு நிறுவனத்திற்கு ஒரு விளம்பரம் எனக் கூறியுள்ளது.

Academy Awards எனப்படும் ஆஸ்கார் விருது Academy of Motion Picture Arts and Sciences (AMPAS) என்னும் அமைப்பினால் வழங்கப்பட்டு வருகிறது. முதலில் 1929-ம் ஆண்டு இது ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஹாலிவூட்டில் இருக்கும் ரூஸ்வெல்ற் ஹொட்டலில் முதலாவது விருது வழங்கும் வைபவம் நடந்தது.  ஆஸ்கார் விருது வழங்கும் வைபவம் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் ஒளிபரப்புச் செய்யப்படும்.

Academy of Motion Picture Arts and Sciences (AMPAS) இன் ஆறாயிரம் உறுப்பினர்கள் விருதுகளுக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்த ஆறாயிரம் உறுப்பினர்களும் அவர்களின் திரைப்பட பின்னணிக்கு ஏற்ப வேறுவேறு பிரிவினராக வகுக்கப்பட்டுள்ளனர். இயக்குனர்களுக்கான பிரிவில் இயக்குனர்கள் மட்டும் இருப்பார்கள், நடிகர்களுக்கான பிரிவில் நடிகர்கள் மட்டுமே இருப்பர். ஒருவர் நடிகராகவும் இயக்குனராகவும் இருந்தால் அவர் ஒரு பிரிவில் மட்டுமே இருக்க முடியும். சிறந்த நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதில் நடிகர்கள் மட்டுமே வாக்களிப்பார்கள். சிறந்த இயக்குனருக்கான தேர்வில் இயக்குனர்கள் மட்டுமே வாக்களிப்பார்கள். இப்படியே பிற பிரிவுகளுக்கும். வாக்களிப்பவர்கள் ஐந்து பேர்களை விருப்ப அடிப்படையில் நிரைப்படுத்துவார்கள். குறித்த எண்ணிக்கையான வாக்குகளுக்கு கூட எடுப்பவர்கள் பெயர்கள் விருதுக்கான பரிந்துரையாளர்களாக (nominee) அறிவிக்கப்படுவர். பிறகு இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு இந்தப் பரிந்துரை செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் நடக்கும். இப்படி ஐந்து பேரைத் தெரிந்து எடுக்கும் வரை வாக்கெடுப்புத் தொடரும். பின்னர் இந்த ஐந்து பேரும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு ஒருவர் விருதுக்குத் தேந்தெருக்கப்படுவர். தெரிவிற்கு அரசியல் கட்சித் தேர்தல் போல் தீவிரமான பரப்புரைகள் செய்யப்படும். இதில் ஸ்ரிஃபன் ஸ்பைஸ்பெர்க் போன்ற பிரபலங்கள் அதிக செல்வாக்குச் செலுத்துவர். வயது போனவர்களும், ஆண்களும், வெள்ளையர்களுமே இதில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஒரு திரைப்படத்தின் கலைத்துவ தராதரங்களிலும் பார்க்க அது ஏற்படுத்திய வசூலே அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

அண்மைக் காலங்களாக அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ ஹாலிவூட் மூலமாக தன்னை ஒரு நல்ல பிள்ளையாகக் காட்ட முயல்கிறது.  இதனைப் பல திரைப்படங்களிலும் காணக்கூடியதாக இருக்கிறது.
ஆஸ்கார் விருது பெற்ற ஆர்கோ திரைப்படம் ஈரானைக் களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஈரானுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஹாலிவூட் நடசத்திரங்களை சிஐஏ பாவிப்பதுதான் கதை. இது ஈரானின் புகழைக் களங்கப்படுத்துவதாகவும் சிஐஏயின் புகழை மேம்படுத்துவதாகவும் இருக்கிறது. ஆர்கோவிற்கு  விருது வழ்ங்கியதை ஈரானிய ஊடகங்கள் சிஐஏயிற்கான விளம்பரம் எனக் கண்டிக்கின்ற்ன.

Monday, 25 February 2013

பாலச்சந்திரனின் படுகொலைப்படம் ஜெனீவாவில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

சனல் - 4 வெளியிட்ட பாலச்சந்திரனின் இறந்த படம் தமிழ் ஊடகங்களில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அது பல நாட்டினரையும் உலுக்கியுள்ளது என்றெல்லாம் எழுதுகின்றனர். இந்தப் படம் பன்னாட்டு மட்டத்தில் ஒரு தந்திரோபாய மாற்றத்தை ஏற்படுத்துமா?

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் தீர்மானம் கொண்டுவரும் அமெரிக்காவின் அத்திவாரம் இனக்கொலையிலும் நில அபகரிப்பிலும் உருவாக்கப்பட்டது. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டறிந்த பின்னர் அங்கு குடியேறிய ஐரோப்பியர் அதற்கு அமெரிக்கா எனப் பெயரிட்டு அங்கு வாழ்பவரை இந்தியர் என்றனர். தம்மை அமெரிக்கர் என்றனர். முப்பது கோடிக்கு மேற்பட்ட இந்தியர் எனபடும் உள்நாட்டவர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் நிலங்கள் அபகரிக்கப்பட்டன.  இந்த அமெரிக்கா தமிழர்களின் நலன் கருதிச் செயற்படுகிறதா? இதன் செயற்பட்டுகளுக்குப் பின்னால் உலகத் தமிழர் பேரவையும் தமிழர் கூட்டமைப்பும் செல்கின்றன. முன்பு இணைத் தலைமை நாடுகள் என்னும் பெயரில் வந்து தமிழர்களின் பலத்தை அழித்தவர்கள் இன்று புலம் பெயர் தமிழர்களின் பலத்தைச் சிதைக்க தென் ஆபிரிக்காவையும் சுவிற்சலாந்தையும் பாவிக்கின்றனர். முன்பு பகிரங்கமாக தமிழீழ விடுதலைப் புலிகளை ஐரோப்பிய நகர்களுக்கு அழைத்துப் பேச்சு வார்த்தை என அழைத்து ஏமாற்றியவர்கள் இப்போது திரை மறைவில் உலகத் தமிழர் பேரவையையும் தென் அமெரிக்காவிற்கு அழைத்து பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.

சிலர் பாலச்சந்திரனின் படத்தைப் பார்த்து உலகநாடுகளின் மனம் இரங்கும், மனம் மாறும் என்கின்றனர். சிலர் அந்தப் படத்தைக் காட்டி நீதி கேட்கிறார்கள். சிலர் அந்தப்படம் போர்க்குற்ற ஆதாரம் என்கின்றார்கள். இலங்கை அரசு அந்தப்படம் போலியானது என்றது. இந்திய வெளிநாட்டமைச்சர் இலங்கை தமது நட்பு நாடு அதனால் படத்தின் உண்மைத் தன்மையை தன்னால் உறுதி செய்ய முடியாது என்றார். பாலச்சந்திரனின் படத்தைப்பார்த்து இந்தியா தனது இலங்கை தொடர்பான வெளிநாட்டுக் கொள்கையை மாற்றிக் கொள்ளும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. சனல் - 4 தனது முதலாவது காணொளியில் தமிழர்கள் நிர்வாணமாக்கி கைகள் கட்டுப்பட்ட நிலையில் கொல்லப்படும் காணொளியை வெளிவிட்டவுடன் இந்திய வெளிநாட்டமைச்சர் ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டார். அந்த விசாரணையின் முடிவு இதுவரை வெளிவிடப்படவில்லை. அந்த விசாரணை போரில் இந்தியாவின் பங்களிப்புத் தொடர்பான காணொளிப்பதிவுகள் ஏதாவது இருக்கிறதா என்பதைப் பற்றியதா என்ற கேள்வி அப்போது எழுப்பப்பட்டது. பாலச்சந்திரனின் படத்திலும் பார்க்க மோசமான படங்கள், கைக்குழந்தைகள் உடல் சிதறுண்டு கிடக்கும் படங்கள் கர்ப்பிணிப் பெண்கள் குண்டு வீச்சால் உடல் சிதைவுண்டு உள்ளிருக்கும் குழந்தையின் கால் வெளியில் தெரிந்தபடி இறந்து கிடக்கும் படங்கள் பல ஏற்கனவே வெளிவந்தன. அவற்றால் மாறாத வெளிநாட்டுக் கொள்கைகள் பாலச்சந்திரனின் படத்தால் மாறுமா?

2009-ம் ஆண்டு போர் முடிந்த பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைப் போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டன என்று இலங்கையைக் கண்டிக்கும் தீர்மானம் வந்த போது இந்தியா அதை மாற்றி இலங்கையை பாராட்டும் தீர்மானமாக மாற்றியது. அதற்கு தென் ஆபிரிக்காவும் ஒத்துழைத்தது. தென் ஆபிரிக்காவின் ஆளும் கட்சி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்படும் ஒரு அமைப்பு. தென் ஆபிரிக்க அரசு ஈழ விடுதலைக்கு உதவிகள் பல செய்துள்ளது. இருந்தும் தென் ஆபிரிக்கா ஏன் அப்படி வாக்களித்தது. தற்போதைய முன்னணி நாடுகளில் அதன் வெளிநாட்டுக் கொள்கை, நிதிக் கொள்கை, பாதுகாப்புக் கொள்கை போன்றவற்றை Think Tank எனப்படும் நிபுணர்கள் குழுவே பெரும்பாலும் நிர்ணயம் செய்கின்றன. பன்னாட்டு அரங்கிலும் மற்றும் பிரிக்ஸ் அமைப்பிலும் தென் ஆபிரிக்காவிற்கு இந்தியாவைத் தேவைப்படுகிறது. இந்தியா சொல்வதின் படி தென் ஆபிர்க்கா வாக்களித்தால் இன்னொரு நிலைமையில் தென் ஆபிரிக்கா சொல்வதின் படி இந்தியா வாக்களிக்கும்.

பன்னாட்டு அரங்கில் நாடுகள் செயற்படுவது அதன் கேந்திரோபாய நலன்கள் பொருளாதார நலன்கள் சார்ந்தவையாக அமையும். பல கட்டங்களில் அவை எடுக்கும் தீர்மானங்கள் வாக்களிப்புக்கள் நீதி நியாயத்திற்கு அப்பாற்பட்டவையாகவும் இருக்கும். ஒரு போது உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டதாக இருக்க மாட்டாது.

இலங்கயில் தமிழர்களுக்கு இழைக்கபப்ட்ட அநீதிகள் கொடுமைகள், அட்டூழியங்கள், இன அழிப்புக் கொலைகள் பற்றி நன்கு அறிவிக்கப்பட்ட நாடும் நன்கு உணர்த்தப்பட்ட நாடும் பிரித்தானியா ஆகும். ஆனால் இலங்கை தொடர்பாக பிரித்தானியா தனது வெளிநாட்டுக் கொள்கைகளில் எந்த மாற்றத்தையும் இதுவரை ஏற்படுத்தவில்லை. தமிழரின் தாயக்கோட்பாடு, சுயநிர்ணய உரிமை போன்றவற்றை பிரித்தானியா அங்கீகரிக்கவில்லை. அமெரிக்காவைப்போலவும் இந்தியாவைப் போலவும் பிரித்தானியாவும் சிங்களவர்களைப் பகைக்க விரும்பவில்லை. அத்துடன் இலங்கை தொடர்பாக இந்தியாவின் சொல்லுக்கு மதிப்பளிக்கும் நிலையீல் உள்ளது. அதனால்தான் இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு நடக்கக் கூடாது என பிரித்தானியா இதுவரை தெரிவிக்கவில்லை.

பாலச்சந்திரனின் படம் எந்த ஒரு நாட்டின் வெளிநாடுக்குக் கொள்கையையும் தமிழர்க்குச் சார்பாக மாற்றாது. சனல் - 4 இன் காணொளியும் அப்படியே.

பாலச்சந்திரனின் படத்திலும் பார்க்க இலங்கைப் பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தென் சீனக் கடலில் சீனாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ள முறுகலில் சீனாவிற்கு ஆதரவாகத் தெரிவித்த க்ருத்து ஜெனிவாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

Sunday, 24 February 2013

ஈரான் மீண்டும் ஒரு ஆளில்லா விமானத்தைக் கைப்பற்றினோம் என்கிறது

தமது வான் பரப்புக்குள் புகுந்த ஒரு வேவு பார்க்கும்ஆளில்லா விமானத்தைக் கைப்பற்றியதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் Great Prophet-8 என்னும் குறியீட்டுப் பெயருடன் தன்னை உளவு பார்க்கும் வேவு விமானங்களுக்கு எதிரான படை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

ஈரானிய ஜெனரல் ஹமிட் சர்கெய்லி தமது இலத்திரனியல் போராளிக் குழுக்கள் ஈரானில் வான்பரப்புக்குள் வேவுபார்க்க வந்த ஆளில்லா விமானத்தைப் பொறுப்பேற்றுத் தரை இறக்கியதாகச் சொல்கிறார்.இது ஈரானிய நகரான சர்ஜனில் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விமானம் எந்த நாட்டைச் சேர்ந்தது என்று இதுவரை அறியப்படவில்லை.



ஈரான் அணுவலு உற்பத்திக்காக யூரேனியம் பதப்படுத்தி வருகிறது. ஈரான் அணுக் குண்டு உற்பத்தி செய்யப் போவதாக இஸ்ரேலும் அமெரிக்காவும் கருதுகின்றன. ஈரான் நிலத்தின் கீழ் மிகவும் ஆழமான இடங்களில் தனது யூரேனியப் பதப்படுத்தலைச் செய்து வருகிறது. இதை எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் பலவிதங்களில் சேதப்படுத்தி வருகிறது. அணு விஞ்ஞானிகளைக் கொல்லுதல், இணைய ஊடுருவிகள் மூலம் யூரேனியம் பதப்படுத்தும் பொறிகளைச் சேதப்படுத்துதல் பலதடவை நடந்துள்ளன.

அண்மையில் ஈரான் உயர்ந்த ரக மையச் சுழற்ச்சிப் பொறிகளையும் வலுமிக்க காந்தங்களையும் கொள்வனவு செய்ததாக செய்திகள் வெளிவந்தன. இச்செய்திகள் ஈரான தனது யூரேனியப் பதப்படுத்தலை துரிதப்படுத்த முனைகிறது எனக் கருதப்படுகிறது.

ஈரானின் எறிகணைத் தொழில் நுட்ப வளர்ச்சி நிண்ட தூரம் பாயக் கூடிய ஏவுகணைகளைப் பரீட்சித்துப் பார்த்தமை போன்றவை இஸ்ரேலை மிகவும் கரிசனை கொள்ள வைத்துள்ளது. அமெரிக்காவுடன் இணைந்து ஈரானை யூரேனியப் பதப்படுத்தல் நிலையங்களைத் தாக்கி அழிக்க வேண்டும் என இஸ்ரேல் கருதுகிறது. இது தனக்கு எதிரான கடும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் என்பதாலும் உலகெங்கும் வாழும் இஸ்லாமியரகளை தனக்கு எதிராகக் கிளர்ந்து எழச் செய்யும் என்பதாலும் அமெரிக்கா தயக்க காட்டுகிறது. அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் ஈரானுக்கு எதிரான் பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தின. அவற்றையும் மீறி ஈரன் தனது அணுக் குண்டு உற்பத்தித் திட்டத்தை நகர்த்தி வருகிறது.

ஈரானை அமெரிக்காவும் இஸ்ரேலும் உளவுத் துறை மூலமும் வேவு பார்க்கும் ஆளில்ல விமானங்கள் மூலமும் கண்காணித்து வருகின்றன. தான் பல ஆளில்லா விமானங்களைக் கைப்பற்றியதாக ஈரான் தெரிவிக்கிறது. பெப்ரவரி 24-ம் திகதி ஈரான் கைப்பற்றியதாகச் சொல்லும் ஆளில்லா விமானம் தொடர்பாகக் கேட்ட போது அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டது.

ஈரான் கைப்பற்றிய ஆளில்லா விமானங்களில் 2011 டிசம்பர் மாதம் 4-ம் திகதி கைப்பற்றிய RQ-170 Sentinel spy drone மிகவும் வலுமிக்கதாகக் கருதப்படுகிறது. தான் கைப்பற்றிய ஆளில்ல விமானங்களை வைத்து reverse engineering தொழில் நுட்பத்தின் மூலம் ஈரானும் ஆளில்லா விமாங்களை உற்பத்தி செய்கிறது. ஈரான உற்பத்தி செய்த ஆளில்லா விமானங்களை லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேலை வேவு பார்க்கப் பயன்படுத்துகின்றனர். அப்படி ஒரு ஆளில்லா விமானத்தை இஸ்ரேல் சுட்டு வீழ்த்தியது.

அமெரிக்க ஆளில்லா விமானங்களில் தகவல் பரிமாற்றத்தை இடைமறித்து அறியும் ஈரான்.

அமெரிக்காவிடம் இருந்து கைப்பற்றிய ஆளில்லா விமானங்களின் குறியீட்டு முறைமைகளை அறிந்து அதன் மூலம் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் தனது நாட்டில் இருந்து அனுப்பும் சமிக்ஞைகளை தான் தகவலாக்கி அறிந்து கொள்வதாக ஈரான் தெரிவிக்கிறது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...