Monday, 14 November 2016

சீனாவின் J-20 போர்விமானங்களின் சவால்களும் சமாளிப்புக்களும்

2016 நவம்பர் முதல் வாரம் சீனாவில் நடந்த விமானக் காட்சியில் சீனா தனது J-20 என்னும் ரடார்தவிர்(Stealth) போர்விமானத்தை முக்கிய காட்சிப் பொருளாக்கியது. அமெரிக்காவின் F-22, F-35 ஆகியவற்றைப் போல் சீனாவின் இந்த J-20 stealth fighter விமானமும் ஐந்தாம் தலைமுறை விமானமாகக் கருதப்படுகின்றது. சீனாவின் வான் போர்விமான உற்பத்தியில் மைல்கல்லாக J-20 போர் விமானங்கள் இருக்கின்றன என சீனா உலகிற்கு காட்ட முயன்றது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகக் கருதப்படும் சீனா தனது படைத்துறையையும் அதற்கு ஏற்ப மேம்படுத்தி உலகில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய நாடாக தன்னை மாற்ற முயல்கின்றது. உலகிலேயே அதிக அளவு நீர் மூழ்கிக் கப்பலைக் கொண்ட நாடாகிய சீனா தனது வான் படைய வலிமை மிக்கதாக்குவதிலும் அதிக கவனம் செலுத்துகின்றது.

ஐந்தம் தலைமுறைப் போர்விமானங்களின் முக்கிய அம்சங்கள்:
1. பல விதமானபடைக்கலங்களை ஏந்திச் செல்லக் கூடியவை
2. விமானத்தில் உட்புறத்திலும் படைக்கலன்களை ஏந்திச் செல்லக் கூடியவை. 3, வீசக்கூடிய ரடாருக்குப் புலப்படாதவை (stealth)
4. ஒன்றுபடுத்தப்பட்ட எண்மியமான பறப்பு முறமைகளும் (integrated all-digital flight systems) உயர் தரப்பறப்புச் செயற்பாடுகளும் (Avionics)
5. மிகப் புதிய ரகக் கணனிகள்.
6. போர்ச் சூழலில் மற்ற விமானங்களுடனும் படைக்கருவிகளுடனும் கட்டுப்பாட்டகத்துடனும் சிறந்த தொடர்பாடல்களை ஏற்படுத்துதல்.

J-20 மிக்கடிச்சான் கொப்பியா?
சீனாவின் J-20 மணிக்கு 2100கிலோ மீட்டர் தூரம் பறக்கக் கூடிய 20 மீட்டர் நீளமும் 13 மீட்டர் அகலமும் கொண்ட இரட்டைச் செலுத்து பொறி விமானமாகும். இதைக் கருங்கழுகு என்னும் குறியீட்டுப் பெயருடன் அழைப்பர். சீனாவின் ரடார்தவிர் போர் விமானத்தை உருவாக்கும் திட்டம் 1990களில் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக சீனா அமெரிக்காவினதும் இரசியாவினதும் படைத்துறைத் தொழில்நுட்பங்களைப் பிரதிபண்ணி வருகின்றது. அதனால் சீனா தனது வான் படையின் வலுவிற்கும் அமெரிக்காவின் வலுவிற்கும் இடையில் இருந்த பாரிய இடைவெளியைக் குறைத்துக் கொண்டு வருகின்றது. இதன் ஒரு அம்சம் தான் J-20. இரசியர்கள் சீனாவின் J-20 தமது MiG 1.44.போர்விமானங்களின் பிரதி என்கின்றனர். 2018-ம் ஆண்டு சீனா தனது J-20 ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களைச் சேவையில் ஈடுபடுத்தவிருக்கின்றது.


J-20 இன் அச்சுறுத்தல்கள்
தென் சீனக் கடலில் அல்லது கிழக்குச் சீனக் கடலில் ஒரு போர் உருவாகும் போது எதிரிகளிற்கு பெரும் சவாலாக J-20 விளங்குமா என்பதில் பல வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. அமெரிக்காவின் எரிபொருள் நிரப்பு விமானங்களுக்கும் வேவு விமானங்களுக்கும் மட்டுமே J-20 அச்சுறுத்தலாக அமையும். J-20இன் கணனித் தொகுதிகள் சிறப்பானவை அல்ல என சீனாவில் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சொல்லப்படுகின்றது. J-20இன் கணனிகள் தரமானதாக இல்லாத படியால் அமெரிக்காவின் முன்னணிப் போர் விமானங்களை J-20 இனம் காண முன்பதாக அமெரிக்காவின் போர்விமானங்கள் J-20ஐ இனம் கண்டு தாக்குதல் தொடுத்துவிடும். சீனப் படைத்துறையின் வன்பொருட்களின் (hardware) வளர்ச்சி அபரிமிதமானவை என்பதை ஒத்துக் கொள்ளும் படைத்துறை நிபுணர்கள் சீனாவின் மென்பொருட்களின் (software) வளர்ச்சி ஒரு போர்முனையில் செயற்படும்போது மட்டுமே மதிப்பிட முடியும் என்றும் சீனாவின் மென்பொருள்களின் வளர்ச்சி போதாது என்றும் சொல்கின்றனர்.

அமெரிக்காவின் F-22இன் பிரதியா J-20?
அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகனினதும் அமெரிக்காவின் விமான உற்பத்தி நிறுவனங்களினதும் கணனிகளை ஊடுருவி சீனா திருடிய தொழில்நுட்பத் தகவல்களை அடிப்படையாக வைத்தே அது J-20 போர் விமாங்களை உருவாக்கியதாக அமெரிக்காவில் இருந்து குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அமெரிக்காவின் Lockheed Martin F-22 Raptor போர் விமானங்களின் பிரதியே J-20 எனவும் சொல்லப்படுகின்றது. J-20இன் முற்பகுதியில் மட்டுமே ரடார் தவிர்ப்பு செயற்படும் பிற்புறத்தில் அது இல்லை.  அமெரிக்காவின் F-22 நாய்ச் சண்டை என அழைக்கப்படும் வானில் இரு விமானங்கள் ஒன்றன் மீது ஒன்று தாக்குதல் நடத்தும் திறனில் ஐரோப்பாவின் Eurofighter Typhoonனால் 2013-ம் ஆண்டு நடந்த பயிற்ச்சி ஒன்றில் தோற்கடிக்கப்பட்டது. ஜேர்மனிய போர் விமானிகளின் கருத்துப்படி Eurofighter Typhoon விமானத்திற்கு F-22 மதியச் சிற்றுணவாகும். (Germans said the costly stealth fighter was “salad” for the Eurofighter’s pilots lunch.). விமானங்களின் திசைகளை தேவைக்கேற்ப அவசரமாத் திசைதிருப்பப் பாவிக்கப்படும் thrust vectoring (TV) தொழில்நுட்பத்திற்கு F-22இல் அதிக வலு தேவைப்படுகின்றது.F-22ஐப் பிரதி பண்ணிய J-20 அதிலும் மோசமானதாக இருக்கலாம். J-20 பற்றிய முழுமையான தகவல்கள் யாருக்கும் தெரியாமல் வைக்கப்பட்டுள்ளது.

பற்பணிப்போர் விமானம்
J-20 போர் விமானம் பற்பணி (Multi-role fighter) விமானம் எனவும் வான்மேலாதிக்க விமானம் (air superiority) எனவும் வகைப்படுத்தப் பட்டுள்ளது. வானில் இருந்து தரையில் உள்ள இலக்குகள் மீதும் தாக்குதல், வானில் இருந்து வானில் உள்ள இலக்குகள் மீதும் தாக்குதல் போன்றவற்றைச் செய்யக் கூடிய போர் விமானங்கள் பற்பணிப் போர் விமானங்களாகும். வான்மேலாதிக்க விமானங்கள் எதிரியின் வான்வெளியில் தமது ஆதிக்கத்தைச் செலுத்தி அதை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரக்கூடியவை. சீனாவின் J-20 அமெரிக்காவின் F-22, F-35 ஆகியவற்றிற்கான சீனாவின் பதில் என சீனா சொல்கின்றது. ஆனால் அமெரிக்காவின் F-35 Lightineng-2 உலகின் தலை சிறந்த போர்விமானமாகும். சீனாவின் J-20 அமெரிக்காவிற்கு சவால்விடக்கூடிய முதற்தர விமானம் என்றால் சீனா ஏன் இரசியாவிடமிருந்து தொடர்ந்து போர் விமானங்களை வாங்குகின்றது. சீனா தனது J-20ஐ ஒருபுறம் காட்சிப் பொருளாக வைத்துக் கொண்டிருக்க மறுபுறம் இரசியா சீனாவிற்கு விற்பனை செய்ய  Su-35 எனச் சுருக்கமாக அழைக்கப்படும் Sukhoi Su-35 Flanker-E fighters போர்விமானங்கள் இருபத்தி  நான்கை உற்பத்தி செய்யப் போவதாக அறிவித்துள்ளது. சீனாவின் J-20இல் சீனாவிற்கே நம்பிக்கை இல்லாதபடியாதபடியால்தான் இரசியாவில் இருந்து சீனா தொடர்ந்தும் போர் விமானங்களை வாங்குகின்றதா? சீனா தனது படைவலு உலகில் முன்னணி வகிக்கின்றது என தமது மக்களை நம்ப வைக்க அண்மைக் காலங்களாக பெரு முயற்ச்சி எடுக்கின்றது. தனது படைத்துறை இரகசியங்களைப் பேணுவதற்கும் தனது மக்களை நம்பவைப்பது என்ற இரு முனைக் கொள்ளியிடை சீன எறும்பு தடுமாறுகின்றது. சீனா இரசியாவிடமிருந்து வங்கிய போர்விமானங்களும் வாங்கவிருக்கும் போர் விமானங்களும் சினாவின் அதன் வான்வலுவை அதிகரித்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் வானில் நடந்த விமானங்களுக்கு இடையிலான சண்டையில் இரசியாவின் 126 விமாங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன எமது விமானம் எதுவும் வீழ்த்தப்படவில்லை என அமெரிக்கர்கள் மார் தட்டுகின்றார்கள்.


ஒப்பீட்டு வரலாறு
1990களில் அமெரிக்காவின் F-15, F-16, F/A-18 ஆகிய போர்விமானங்களுடன் ஒப்பிடுகையில் சீனாவின் J-6 போர்விமானம் மிகவும் தரம் குறைந்ததாக இருந்தது. ஆனால் தற்போதைய சீனாவின் J-10, J-11 ஆகிய போர் விமானங்கள் அமெரிக்காவின் அப்போதைய F-15இற்கு ஈடாக இருக்கின்றன. சீனா இரசியாவிடமிருந்து வாங்கிய Su-27s ,  Su-30 ஆகிய போர் விமானங்கள் அமெரிகாவின் போர் விமானங்களுக்குச் சவால் விடக்கூடியவை. இரசியாவின் Su-35 சீனாவிற்கு தென்சீனக் கடல், கிழக்குச் சீனக் கடல், தைவான் நீரிணை ஆகியவற்றில் வான் மேலாதிக்கத்தை கொடுக்கக் கூடியவை என்பதை அமெரிக்கப்பாராளமன்றம் கருத்தில் கொண்டு அதற்கு ஏற்பத தமது பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டைச் செய்துள்ளது. Su-35இன் உயர் தொழில்நுட்பத்தை சீனா reverse engineering முறைமையால் பிரதிசெய்து எதிர்காலத்தில் தனது உள்ளூர் தயாரிப்பு விமானங்களில் பாவிக்க முடியும்.

அமெரிக்க நகர்வுகள்
 பொருளாதாரத் துறையிலும் பாதுகாப்புத் துறையிலும் சீனாவின் வளர்ச்சி அமெரிக்காவை எப்படிப் பாதிக்கும் என்பதைப் பற்றி அறிந்து அதற்கு ஏற்ப தமது நகர்வுகளைச் செய்வதற்காக அமெரிக்கப் பாராளமன்றம் அமெரிக்க சீன பொருளாதார மற்றும் பாதுகாப்பு மீளாய்வுக் ஆணைக்குழு (U.S.-China Economic and Security Review Commission) என்னும் நிபுணர் குழுவை அமைத்துள்ளதுஅதன் அறிக்கையின் படி சீனாவிடம் தற்போது 2200 போர் விமானங்கள் உள்ளன. அதில் 600 மட்டுமே புதிய தரமானவை. கடந்த 15 ஆண்டுகளாக வானில் இருந்து வானிற்கு ஏவக் கூடிய  நடுத்தர மற்றும் குறுந்தூர ஏவுகணைகள், துல்லிய வழிகாட்டிப் படைகலன்கள், கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணைகள், லேசர் வழிகாட்டி குண்டுகள், தொலைதூர சீர்வேக ஏவுகணைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் திறனை சீனா துரித கதியில் பெற்றுள்ளது என்பதை அமெரிக்கப் பாராளமன்றத்தின் ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. சீனாவின் Y-20 சரக்கு விமானம் அமெரிக்க வான்படையின் C-130 விமானங்களிலும் பார்க்க மூன்று மடங்கு பாரம் தாங்கிக்க்கொண்டு பறக்க வல்லவை என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. ஆனால் சீனா வானில் வைத்தே விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பத்தைப் பெறவில்லைவிமான இயந்திர உற்பத்தியில் சீனா பிந்தங்கிய நிலையிலேயே உள்ளது. சீனா இரசியாவிடமிருந்து திருடிய தொழில்நுட்பங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கிய W-10 இயந்திரங்கள் உகந்த தாரைவிமான இயந்திரங்கள் அல்ல. இரசியா தான் விற்பனை செய்யும் Su-35 போர்விமானங்களின் தொழில்நுட்பங்களை சீனா பிரதிபண்ணவோ திருடவோ முடியாதபடி பல நிபந்தனைகளை விதித்துள்ளது. ஆனால் அவற்றை எல்லாம் சீனா மீறும் என்பதே கடந்தகால அனுபவமாகும். U.S.-China Economic and Security Review Commission  என்னும் குழுவின் ஆலோசனைப்படி அமெரிக்கா தனது வான் மேலாதிக்கத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள உருவாவாக்கியவையே F-35, B-21 ஆகிய போர்விமானங்களாகும்.

இந்தியாவின் பதில் நகர்வுகள்
இந்தியாவும் சீனாவைப் போலவே விமான இயந்திர உற்பத்தியில் பின்தங்கியுள்ளது. நீண்டகால முயற்ச்சியின் பின்னர் தேஜஸ் என்னும் ஒற்றை இயந்திர ஒற்றை இருக்கை விமானத்தை இந்தியா உருவாக்கியது. இந்தியக் கணக்காய்வாளர்கள் அதில் இலத்திரனியல் போர்முறைமை இல்லாமை, உள்ளக ரடார்களின் பிரச்சனை, குறைந்த அளவு எரிபொருள் இருப்பு ஆகிய குறைபாடுகளைச் சுட்டிக் காட்டினர். பிரான்சிடமிருந்து இந்தியா வாங்கும் ரஃபேல் போர்விமானங்கள் சீனாவில் இருந்து வரும் உடன் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கக் கூடியவையாக இருக்கும். ஸ்ரெல்த் எனப்படும் ரடார் தவிர்ப்பு ரஃபேல் போர்விமானங்களில் இல்லை என்பது ஒரு பெரும் குறை என்றாலும் அதன் பல சிறந்த செயற்பாடுகள் அதை வாங்கும்படி இந்தியாவைத் தூண்டியது. பிரான்சின் ரஃபேல் விமானங்கள் இடைமறிப்பு, வான்வேவு, வானில் இருந்து தரைக்கான தாக்குதல், தரைப்படைக்கு ஆதரவு வழங்குதல் எதிரியின் பிராந்தியத்தினுள் ஆழச் சென்றூ தாக்குதல் செய்தல், கடற்படைக் கப்பல்களுக்கு எதிரான் தாக்குத்ல், அணுப்படைகலத் தடுப்பு நடவடிக்கைகள் ஆகிய பல பணிகள் செய்யக் கூடியதாகும். அதனால் அது எல்லாப் பணிகளும் (multi-role) செய்யக்கூடிய விமானமாகக் கருதப்படுகின்றது. இரசியாவும் இந்தியாவும் இணைந்து  முழுமையான ஐந்தாம் தலைமுறைப் போர் விமானமாக PAK FA  போர்விமானங்களை உருவாக்குகின்றன. இந்த உற்பத்தியும் இயந்திரச் செயற்பாடு, ஸ்ரெல்த் தொழில்நுட்பம் போன்றவற்றில் பல பிரச்சனனகளை எதிர் கொள்கின்றது. இந்திய விமானப் படையில் ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்த PAK FA இல் 144 விமானங்கள் 2022-ம் ஆண்டு இணைக்கப்படலாம். அது சீனாவின் சவால்களைச் சமாளிக்கக் கூடியதாகவும் பாக்கிஸ்த்தானிற்குப் பெரும் அச்சுறுத்தலாகவும் அமையும். இந்தியா ஜப்பானிடமிருந்து வானிலும் நீரிலும் சஞ்சரிக்கக் கூடிய US-2i என்னும் ஈரூடக  விமாங்கள் பன்னிரண்டை வாங்கவிருக்கின்றது. இவை விடுவிப்பு விமானங்களாகும். மோசமான கால நிலையில் பெரும் அலைகள் அடிக்கும் போது கூட ஜப்பானின் US-2i விமானங்கள் கடலில் படகு போல இறங்கக் கூடியவை. நீரில் படகு போல் 280 மீட்டர்கள் ஓடி வானில் எழுந்து செல்லும். அதே போல் கடலில் இறங்க 310 மீட்டர் மிதந்து சென்ற பின்னர் படகுபோல் செயற்படக் கூடியவை. இந்தியா இந்த விமானங்களை வாங்குவதையிட்டு இரு வகையில் கரிசனை கொண்டுள்ளது. முதலாவது இந்தியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையில் உருவாகியுள்ள படைத்துறை ஒத்துழைப்பு. இரண்டாவது ஜப்பானிடமிருந்து வாங்கிய US-2i விமானங்களை இந்தியா தாக்குதல் விமானங்களாக மாற்ற முடியும். அமெரிக்காவின் லொக்கீட் மார்ட்டீன் இந்தியாவில் தனது F-16 போர்விமானங்களை உற்பத்தி செய்யவிருக்கின்றது. F-16 இருபத்தைந்து நாடுகளில் சேவையில் உள்ள அமெரிக்காவின் முதலாவது பற்பணிப் போர்விமானமாகும். இலத்திரனியல் துறையில் மிகவும் முன்னணி விமானமாக இது கருதப்படுகின்றது.


சீனா பல சிரமங்களுக்கு மத்தியில் போர்விமானங்களை தானே உருவாக்கினாலும் இரசியாவிடமிருந்து வாங்கிக் குவித்தாலும் அவற்றைப் போர் முனையில் பாவிக்கக் கூடிய பயிற்ச்சியும் போர்முனையில் நேரடி அனுபவமும் சீனப் போர்விமானிகளுக்கு அவசியம். அவை இல்லாமல் சீன வான்படை மற்ற நாடுகளுக்கு சவாலாக அமையாது. 

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...