எரிபொருள் விநியோகம் தடையின்றி நடப்பதற்கு பலநாடுகளும் தமது
பாதுகாப்புச் செலவில் பெரும் பகுதியை ஒதுக்கியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியமும் ஐக்கிய அமெரிக்காவும்
தமக்கான எரிபொருள் விநியோகம் தடையின்றி நடப்பதை உறுதி செய்துள்ளன. உலகிலேயே எரிபொருள்
விநியோகத் தடையால் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளாக ஆசிய நாடுகள் இருக்கின்றன.
எரிபொருள் பாவனையைப் பொறுத்த வரை சீனா உலகிலேயே இரண்டாவது பெரிய நாடாகும். சீனாவின்
இருப்பிற்கு தடையற்ற எரி பொருள் வழங்கல் முக்கிய மாகும். சீனா தனக்கான எரிபொருள் வழங்கு
பாதையை பல மாற்றீடு வழிகள் மூலம் பூர்த்தி செய்ய முயற்சிக்கிறது. பாக்கிஸ்த்தானின்
முத்துமாலைத் திட்டம், தரைவழிப்பட்டுப்பாதை, கடல்சார் பட்டுப்பாதை
ஆகியவற்றில் பாக்கிஸ்த்தான் முக்கிய பங்கு வகிக்கின்றது.
திருகுப் புள்ளிகள்
மலாக்கா நீரிணை, ஹோமஸ் நீரிணை, செங்கடல் ஆகியவை
சீனாவிற்கான எரிபொருள் விநியோகத்தின் திருக்குப் புள்ளிகளாகும். இக் கடற்பிராந்தியங்களில் வைத்து சீனாவிற்கான எரிபொருள்
விநியோகங்கள் தடை செய்யப் படலாம். இதற்கு மாற்றீடாக சீனா மியன்மார்(பர்மா) ஊடாக ஒரு
தரைவழி எரிபொருள் விநியோகம் செய்யும் வழியைத் திறக்க முயல்கிறது. அடுத்த மாற்றீடாக
பாக்கிஸ்த்தானின் குவாடர் துறைமுகத்தில் இருந்து பாக்கிஸ்த்தானூடாக ஒரு தரைவழி எரிபொருள்
விநியோகத்தை உருவாக்கியுள்ளது. இந்த பாக்கிஸ்தானூடான விநியோகத்தில் இன்னும் ஒரு மாற்றீடாக
ஆப்கானிஸ்தானூடான இன்னும் ஓர் எரிபொருள் விநியோகப் பாதையை சீனா உருவாக்க விரும்புகிறது.
ஆப்கானிஸ்த்தானின் அமு தர்யா பள்ளத்தாக்கில் எரிபொருள் ஆய்வுப் பணியையும் சீனாவின்
China National Petroleum Corp நிறுவனம் செய்கிறது.
ஆசியாவிற்கான எரிபொருள் விநியோகத்தில் 40 விழுக்காடு ஹோமஸ்
நீரிணையூடாக நடைபெறுகின்றது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அமெரிக்கா தனது ஐந்தாவது
கடற்படைப் பிரிவை அங்கு நிலைகொள்ளச் செய்வதுடன் பல நாடுகளுடன் இணைந்து அங்கு அடிக்கடி
படை ஒத்திகையும் செய்யும்.
சீனாவிற்குப் பாதகமான ஆட்சி மாற்றங்கள்
சீனா பெரு முதலீடுகளைச் செய்த மியன்மாரிலும்
இலங்கையிலும் சீனாவிற்கு பாதகமான நிலையை ஏற்படுத்தும் அளவிற்கு ஆட்சி மாற்றங்கள்
ஏற்பட்டுள்ளன. இந்த இரண்டு ஆட்சி மாற்றத்திலும் இந்தியாவும் அமெரிக்காவுடன்
இணைந்து செயற்பட்டன. இது போல இந்தியாவும்
அமெரிக்காவும் பாக்கிஸ்த்தானில் அதிகரிக்கும் சீன ஆதிக்கத்திற்கு எதிராக இணைந்து
செயற்படுவதற்கான சாத்தியங்கள் மிக அதிகம். 2016 செப்டம்பர் மாதம் 17-ம் 18-ம் திகதிகளில் வெனிசுவேலாவில் நடந்த கூட்டுச் சேரா நாடுகளின் உச்சி மாநாட்டில்
இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவில்லை. இதுவரை காலமும்
கூட்டுச் சேரா நாடுகள் அமைப்பில் முக்கிய பங்கு வகித்து வந்தது. இந்திய தலைமை
அமைச்சர்களும் வெளியுறவுத் துறை அமைச்சர்களும் அக்கறையுடன் கலந்து கொள்வார்கள்.
அதன் உருவாக்கத்தில் ஜவகர் லால் நேரு முக்கிய பங்கு வகித்தார். வெனிசுவேலா உச்சி
மாநாட்டில் மோடி கலந்து கொள்ளாமல் விட்டது இந்தியாவின் வெளியுறவுத் துறையின்
கொள்கை மாற்றமா? அமெரிக்காவிற்கும் வெனிசுவேலாவிற்கும்
இடையில் கடுமையான முரண்பாடுகள் நிலவுகின்ற நிலையில் மோடி அமெரிக்காவைத்
திருப்திப்படுத்த அதைப் புறக்கணித்தாரா அல்லது ஆரம்பத்தில் இருந்தே கூட்டுச் சேரா
நாடுகளை வெறுப்புடன் பார்க்கும் அமெரிக்காவை மோடி திருப்திப் படுத்த முயல்கின்றாரா?
சீன பாக்கிஸ்த்தானிய உறவு
பாக்கிஸ்த்தானின் பல உட்கட்டுமானனங்களில் சீனா முதலீடு செய்துவருகின்றது.
பாக்கிஸ்த்தானின் கஷ்கர் நகரத்திற்கும் குவாடர் நகரத்திற்கும் இடையிலான 3500 கிலோ மீட்டர் நீளப்
பாதையை நிர்மாணிக்க சீனா உதவுகின்றது. பாக்கிஸ்த்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தையும்
சீனாவையும் இணைக்கும் கொரக்கோரம் நெடுஞ்சாலையை அகலப்படுத்தவும் சீனா உதவி செய்கின்றது.
தொடர்ச்சியான் மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவற்றால் பாதிக்கப் பட்டுள்ள பாக்கிஸ்த்தானியர்களுக்கு
சீன முதலீடு ஒரு வரப்பிரசாதமாகும். பாக்கிஸ்த்தானியப் பொருளாதாரம் 4 விழுக்காடு தான் வளர்ந்து
கொண்டிருக்கின்றது. ஆண்டு தோறும் புதிதாக வேலை தேடிவரும் முன்று மில்லியன் இளையோருக்கு
வேலை கொடுக்க குறைந்தது 7 விழுக்காடாவது வளரவேண்டும். சீன முதலீட்டில் 25பில்லியன் டொலர்கள்
வலு உற்பத்தி சார்ந்ததாக இருக்கின்றது. வழமையாக பாக்கிஸ்த்தானில் முதலீடு செய்யும்
நாடுகள் தமது முதலீடுகளைக் குறைத்த வேளையில் சீனா பாக்கிஸ்த்தானில் அதிக முதலீடு செய்கின்றது.
பாக்கிஸ்த்தான் தேவையான நேரம் எல்லாம் உதவி செய்யும் நாடாக சீனா இருக்கின்றது.
சீன பாக்கிஸ்த்தானியப் பொருளாதாரப் பாதை
ஐக்கிய அமெரிக்காவையும் இந்தியாவையும் சிந்திக்க வைப்பதும் ஒன்றுபட
வைப்பதும் சீன பாக்கிஸ்த்தானிய உறவின் திருப்பு முனையாக அமைந்த குவாடர் துறைமுகமாகும்.
பாக்கிஸ்த்தானின் பலுச்சிஸ்த்தான் மாகாணத்தில் அமைந்துள்ள அரபிக் கடல் துறைமுகமான குவாடர்
துறைமுகத்தை 2015-ம் ஆண்டு சீனா பாக்கிஸ்த்தானிடமிருந்து 43 ஆண்டுகள் குத்தகைக்கு
எடுத்தது. இது சீனாவின் சீன பாக்கிஸ்த்தானிய பொருளாதாரப் பாதைத் (China
Pakistan Economic Corridor) முக்கிய பகுதியாகும். இத் திட்டத்தில் சீனா 46 பில்லியன் அமெரிக்க
டொலர்களை முதலிட உத்தேசித்துள்ளது. இதில் சீனாவையும் அரபிக் கடலையும் இணைக்கும் உள்கட்டுமானமும்
அடங்கும். அதன் மூலம் சீனாவிற்கான எரிபொருள் விநியோகத்தின் இரு திருகுப் புள்ளிகளான
ஹோமஸ் நீரிணையையும் மலாக்கா நிரிணையையும் சீனாவால் தவிக்க முடியும். மக்கள் குடியிருப்புக்கள்,
பன்னாட்டு விமான நிலையும்,
கைத்தொழிற்பேட்டை,
மசகு எண்ணெய் பதனிடும்
நிலையம், உல்லாசப் பயண நிலைகள் ஆகியவற்றைக் கொண்டது சீனாவின் பொருளாதாரப் பாதை.
குவாடர் படைத்தளமாகுமா?
குவாடர் துறை முகத்தில் காலப் போக்கில் சீனக் கடற்படையின் தளம்
அமைக்கப்படும் என்ற கரிசனை அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் உண்டு. சீனாவும் பாக்கிஸ்த்தானும்
இந்தத் துறைமுக ஒப்பந்தமும் அதன் பாவனையும் படைத்துறை நோக்காங்களைக் கொண்டதல்ல எனத்
தெரிவித்திருந்தாலும் அது நம்பும்படியாக இல்லை. குவாடர் துறைமுகத்தில் சீனா கடற்படைத்
தளம் அமைத்தால் அது பஹ்ரேனில் நிலை கொண்டிருக்கும் அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைப்
பிரிவிற்கும் சவாலாக அமையும். அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைப்பிரிவின் மூலம் அமெரிக்கா
வளைகுடா, செங்கடல், அரபுக்கடல், இந்து மாக்கடலின் மேற்குப் பகுதி ஆகியவற்றில் தனது ஆதிக்கத்தை
வைத்துள்ளது. குவாடரில் சீனக் கடற்படைத் தளம் அமைந்தால் அது இந்தியாவின் மேற்குக் கரைக்கு
ஆபத்தாக முடியும். இந்தியாவின் மேற்கு கரை முழுவதும் ஆபத்திற்கு உள்ளாகும். அதிலும்
முக்கியமாக இந்தியாவின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மும்பாய் நகரமும் அதன் துறைமுகமும்
மட்டுமல்ல குஜாராத் மாநிலத்தில் உள்ள கந்தல், கேரளாவில் உள்ள கொச்சின்
ஆகிய துறைமுகங்களும் சீனாவின் அச்ச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டி வரும். குவாடர் துறைமுகம்
வர்த்தக ரீதியில் உகந்ததல்ல அது படைத்துறை நோக்கங்களை கொண்டுள்ளது என நம்புபவர்கள்
பயணச் செலவை ஆதாரமாகக் காட்டுகின்றார்கள். அரபிக் கடலில் இருந்து கடல் வழியாக பொருட்களை
எடுத்துச் செல்வதிலும் பார்க்க குவாடரில் இருந்து பாக்கிஸ்த்தானுடாகச் சீனாவிற்கு பல
மலைகளைத் தாண்டிச் செல்லும் 1800கிலோ மீட்டர் நீளமான பாதையூடாக எடுத்துச் செல்வது செலவு மிக்கது
என்கின்றார்கள் அவர்கள்.
குவாடருக்கு எதிராக ஈரான் - இந்தியாவின் சபஹார்
சீனாவின் குவாடர் துறைமுகத்திற்கு எதிராக இந்தியாவும்
ஈரானும் ஆப்கானிஸ்த்தானும் இணைந்து ஈரானிய சபஹார் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய
இணங்கியுள்ளன. ஆனால் குவாடர் துறைமுகத்தை சீனா முயல் வேகத்தில் அபிவிருத்தி செய்து
கொண்டிருக்கையில் சபஹார் துறைமுக அபிவிருத்தி ஆமை வேகத்தில் நடக்கின்றது. குவாடர்
துறைமுகத்தின் அபிவிருத்தி ஈரானின் சபஹார் துறை முகத்தை ஓரம் கட்டி விடும் என
ஈரான் கரிசனை கொண்டுள்ளது.
பாக் படைத்தளபதியின் சீனப்பயணம்
2016-ம் ஆண்டு மே மாத 17-ம் திகதி பாக்கிஸ்த்தானியப் படைத்தளபதி ஜெனரல்
ரஹீல் சரீவின் சீனப் பயணம் இரு நாடுகளுகும் படைத்துறை ரீதியில் நெருங்கி வருவதைச் சுட்டிக்
காட்டியது. பாக்கிஸ்த்தானில் இருந்து வீசப்படும் அணுக்குண்டுகளைத் தாங்கிய ஏவுகணைகள
இடைமறித்து அழிக்கக் கூடிய ஏவுகணைகளை இந்தியா பரீட்ச்சித்துப் பார்த்த மறுநாள் இந்தப்
பயணம் மேற்கொள்ளப் பட்டிருந்தது. சீனாவில் சீனத் தலைமை அமைச்சரையும் சீனாவின் மத்திய
படைத்துறைச் சபையின் துணைத் தலைவரையும் அவர் சந்தித்தார். பாக்கிஸ்த்தானிய ஜெனரல் ரஹீல்
சரீவ் பாக்கிஸ்த்தானுக்கு தேவை ஏற்படும் போதெல்லாம் உதவி செய்யும் சீனாவுடன் இந்தியாவின்
புதிய ஏவுகணையால் உருவான இந்தியாவிற்கு சாதகமாக மாற்றப்பட்ட படைத்துறைச் சமநிலை பற்றி
நிச்சயம் கலந்துரையாடி இருப்பார் என்றார் பாக்கிஸ்த்தானின் வெளியுறவுத் துறையின் உயர்
அதிகாரி. இந்தியாவின் ஏவுகணைப் பரிசோதனை மட்டுமல்ல பாக்கிஸ்த்தானுக்கு அமெரிக்கா அமெரிக்கத்
தயாரிப்பான F-16 போர் விமானங்களை விற்பனை செய்வதற்கான நிதி வசதிகளை அமெரிக்கா
செய்வதை அமெரிக்கப் பாராளமன்றம் தடை செய்தததும் பாக்கிஸ்த்தான் படைத்தளபதியின் சீனப்
பயணத்திற்கு முக்கிய காரணமாக அமைந்ததிருக்க வேண்டும். அமெரிக்காவின் F-16இற்குப் பதிலாக சீனாவின்
J-10 போர் விமானங்களை வாங்க பாக்கிஸ்த்தான் முயற்ச்சி செய்கின்றது.
அதிருப்தியடைந்த பலுச் மக்கள்
குவாடர் ஒரு வறிய பிரதேசத்தில் அமைந்துள்ள துறைமுகம் என்பதைக்
காட்டுவதற்கு பிரித்தானியக் கார்டியன் பத்திரிகை ஒரு செய்தியை மேற்கொள் காட்டியது.
அதன்படி குவாடரில் ஒரு வீட்டில் களவெடுக்கச் சென்றவர்களுக்கு அங்கு அகப்பட்டது குடிக்கும்
நீர் கொண்ட குவளைகள் மட்டுமே. கனிம வளங்கள் நிறைந்த பலுச்சிஸ்த்தானை பாக் நடுவண்
அரசு சுரண்டிக் கொண்டு அங்கு எந்த அபிவிருத்திகளையும் செய்ய வில்லை. இந்தியாவும்
பாக்கிஸ்தானும் சுதந்திரமடைந்த போது பாலாத்காரமாக பலுச்சிஸ்த்தான்
பாக்கிஸ்த்தானுடன் இணைக்கப்பட்டது. புறக்கணிக்கப் பட்ட பலுச் மக்கள் பல ஆண்டுகளாக
தனிநாடு கேட்டுப் போராடுகின்றார்கள். பாலுச்சிஸ்த்தான் மக்கள் தமது மண்ணில் செய்யப்படும்
அபிவிருத்தித் திட்டங்கள் எல்லாம் சீனாவிற்காகவே செய்யப்படுகின்றன எமது நலன்களுக்கா
அல்ல என்கின்றனர். பலுச்சிஸ்த்தானில் உருவாக்கப்படும் ஐந்து நட்சத்திர உல்லாச விடுதிகள்
பாக்கிஸ்த்தானிலேயே மிகப் பெரிய விமானத் தளம் போன்றவை உள்ளூர் மக்களுக்கு நலன்களைக்
கொண்டு வரப் போவதில்லை என பலுச் மக்கள் கருதுகின்றனர். சீனாவின் பொருளாதாரப் பாதைத்
திட்டத்தால் பலுச் மக்களுக்குக் கிடைக்கக் கூடிய ஒரே நன்மை சீனப் பார ஊர்திகளின் டயர்களில்
ஓட்டை ஏற்படும் போது அவற்றை ஒட்டவைக்கும் பணியின் மூலம் கிடைக்கும் வருவாய் மட்டுமே
என்கின்றார் ஒரு பலுச் பொருளியலாளர்.
சீனாவின் கேந்திரோபாயத் தவறு
பாக்கிஸ்த்தானில் பிரிவினைவாதம் தீவிரவாதம் ஆகியவற்றின் இதய
பூமியான பலுச்சிஸ்த்தானில் சீனா தனது முதலீட்டைச் செய்வதும் பலுச் மக்களுக்கு தான்
நண்பன் என்று அவர்களை நம்ப வைக்காமல் முதலீடு செய்வது சீனா செய்யும் கேந்திரோபாயத்
தவறாகும். பாக்கிஸ்த்தான் பலுச் மக்களை அடக்குவதற்காக சீன முதலீட்டைப் பாவிக்கின்றதா
என்ற ஐயமும் நியாயமானதே. பலுச்சிஸ்த்தான் மாகாண முதல்வரின் பொருளாதார ஆலோசகர் சீனாவின்
ஒவ்வொரு பார ஊர்தியும் பாக்கிஸ்த்தானியப் படையினர் தாங்கிகளும் கவச ஊர்திகளும் புடை
சூழச் செல்வது செலவு மிக்க ஒன்றாகும் என்கின்றார். 2004-ம் ஆண்டே குவாடரில்
கார் ஒன்றில் வைத்து வெடிக்கச் செய்யப் பட்ட குண்டால் மூன்று சீனப் பொறியியலாளர்கள்
கொல்லப்பட்டனர். குவாடர் துறைமுகத்தைச் சூழவுள்ள பிரதேசத்தில் செய்யப் பட்ட பாதுகாப்பு
ஏற்பாடுகளால் உள்ளூர் மக்கள் தமது மண்ணில் தாமே சிறைவைக்கப் பட்டுள்ளதாக உணருகின்றனர்.
போதிய பாதுகாப்பின்மையால் பலுச்சிஸ்த்தானில் பல சீனத் திட்டங்கள் தொடங்க முடியாமல்
இருக்கின்றன. பாக்கிஸ்த்தானின் சிந்து மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் வாழும் பலுச் இன
மக்கள் பாக்கிஸ்த்தானுடன் ஒன்றிப் போய் உள்ளனர். பலுச்சிஸ்த்தானில் 54 விழுக்காடு பலுச் இனத்தவரும்
30 விழுக்காடு பக்துன் இனத்தவரும் வசிக்கின்றனர். இது பலுச்சிஸ்த்தானை ஒரு
தனிநாடாகப் பிரிப்பதற்கு உகந்ததாக இல்லை. ஆனால் தொடர்ந்து பாக்கிஸ்த்தானால்
புறக்கணிக்கப்பட்டுவரும் பலுச் இன மக்களிடையே மோசமான ஒரு தீவிரவாதத்தை
அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து உருவாக்க முடியும். அது சீனாவின் குவாடர்
துறைமுகத்திற்குப் பெரும் சவாலாக அமையும்.
பாக்கிஸ்த்தானுக்கு எதிராக அண்மைக்காலங்களாக அமெரிக்காவும் இந்தியாவும்
எடுக்கும் நடவடிக்கைக்கள்:
1. அமெரிக்கப் பாராளமன்றத்தில் பாக்கிஸ்த்தானை ஒரு பயங்கரவாதத்திற்கு
ஆதரவு தெரிவிக்கும் நாடாகப் பிரகடனப் படுத்தும் சட்டமூலம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
2. இந்தியாவும் அமெரிக்காவும் படைத்துறை ஒத்துழைப்புக்களை அதிகரித்து
வருகின்றன. ஒரு நாட்டின் படை நிலைகளை மற்ற நாடு தனது பராமரிப்பு மற்றும் எரிபொருள் மீள்
நிரப்புதலுக்குப் பாவிக்கக் கூடியவகையில் இரு நாடுகளும் LEMOA என்னும் ஒப்பந்தம் செய்துள்ளன.
3. நரேந்திர மோடி பலுச்சிஸ்த்தானியப் பிரிவினைவாதிகளுக்கு மகிழ்ச்சியளிக்கக்
கூடிய வகையில் இந்திய சுதந்திர நாளன்று உரையாற்றினார்.
4. கஷ்மீரில் இந்தியப் படைகள் எல்லை தாண்டிச் சென்று தாக்குதல்
செய்பவை பொதுவாக இரகசியமாக வைக்கப்படும். ஆனால் 2016 செப்டம்பர் மாத இறுதியில்
இந்தியா செய்த தாக்குதலுக்கு பெரும் பரப்புரை செய்யப் பட்டது.
5. ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர்
சுஸ்மா சுவராஜ் பாக்கிஸ்த்தான் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு எனச் சொன்னார்.
6. ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்கா செய்யும் பல நகர்வுகள் இஸ்லாமியத்
தீவிரவாதிகளை பலுச்சிஸ்த்தானை நோக்கி நகரச் செயவதாக இருக்கின்றது.
7. இந்தியாவிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையிலான நதிகளின் நீர்ப்
பங்கீடு தொடர்பாக உடன்படிக்கை இரத்துச் செய்யப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
8. இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீர் பகுதியான ஊறியில் நடந்த
தாக்குதலின் பின்னர் பாக்கிஸ்த்தானை தனிமைப் படுத்தும் முயற்ச்சியில் தாம் வெற்றி பெற்றுள்ளதாக
இந்தியா அறிவித்துள்ளது.
9. அமெரிக்காவும் இந்தியாவும் Communications and
Information Security Memorandum Agreement (CISMOA) என்னும் ஒப்பந்தம் செய்யவிருக்கின்றன. இதன் படி அமெரிக்காவின் பல தொடர்பாடல்
தொழில் நுட்பங்களை இந்தியா வாங்க முடியும்.
10. முன்பு அமெரிக்கா இந்தியாவிற்கு விற்பனை
செய்வதில்லை எனத் தடுத்து வைத்திருந்த பல படைக்கலன்களை அமெரிக்கா தற்போது
இந்தியாவிற்கு விற்பனை செய்ய முன் வந்துள்ளது.
11. அமெரிக்காவும் இந்தியாவும் செய்யவிருக்கும் Basic
Exchange and Cooperation Agreement for Geospatial Intelligence (BECA) என்னும் ஒப்பந்தத்தின் படி இந்தியப் படைத்துறைத் தலைமை தனது
போர்விமானங்களுடனும் போர்க்கப்பல்களுடனும் பாதுகாப்பான தொடர்பாடல்களை மேற்கொள்ள
முடியும். அத்துடன் இரு நாடுகளும் தமது உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும்
முடியும்.
இவை யாவும் சீனாவின் ஆதிக்கம் பாக்கிஸ்த்தானில் அதிகரிப்பதைத்
தடுப்பதற்கான நடவடிக்கைகளே. சீனாவிற்கு நிலைமையை மேலும் சிக்கலாக்க ஜப்பானும்
அமெரிக்காவுடனும் இந்தியாவுடனும் சீனாவுக்கு எதிரான ஒரு மூக்கூட்டணியை உருவாக்க
முயல்கின்றது. பாக்கிஸ்த்தானில் பிரச்ச்னைகளைக்
கிளறி அங்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால் ஆட்சி மாற்றம் எற்படுத்தி மட்டும்
அந்த நாட்டை அமெரிக்காவால் தனக்கு சார்பாக மாற்ற முடியாது. தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும்
ஆட்சியாளர்களிலும் பார்க்க பாக்கிஸ்த்தானியப் படைத்துறை அதிக அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
மக்களிடையே படைத்துறைக்கான ஆதரவும் அதிகம். பாக்கிஸ்த்தானியப் படைத்துறைக்கும் அமெரிக்காவிற்கும்
இடையில் நல்ல உறவு இல்லை. பாக்கிஸ்த்தானுடன் நல்லுறவை வளர்த்து வரும் சவுதி அரேபியாவின்
பங்கு எப்படி இருக்கும்? ஆனால் சீனாவால் பாக்கிஸ்த்தானில் செய்யவிருக்கும் முதலீடுகளுக்கு
அமெரிக்காவால் ஈடு கொடுக்க முடியாது.
தமிழர்களின் நிலை
தெற்காசியப் பிராந்தியத்தில் பாக்கிஸ்த்தானை
ஒட்டி எழுந்துள்ள ஆதிக்கப் போட்டி பாக்கு நீரிணையின் இருபுறமும் உள்ள
தமிழர்களையும் பாதிக்கக் கூடிய பிரச்சனை மட்டுமல்ல தமிழர்கள் பயன்படுத்தக் கூடிய
வாய்ப்புமாகும். பாக்கிஸ்த்தானில் நடக்க விருந்த தெற்காசிய நாடுகளின் பிராந்தியக்
கூட்டமைப்பு மாநாட்டில் இலங்கை பங்குபற்ற மறுத்ததற்கு இந்தியாவின் வேண்டுதல்
மட்டும் காரணமாக இருந்திருக்காது. அமெரிக்காவின் வற்புறுத்தலும் காரணமாக
இருந்திருக்க வேண்டும். இதில் புதைந்துள்ள உண்மை பாக்கிஸ்த்தான் தொடர்பாக
அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயற்படுகின்றன என்பதை உறுதி செய்கின்றது.
இலங்கைக்கு கடந்த பல ஆண்டுகளாக பாக்கிஸ்த்தான் பல உதவிகளைச் செய்து வந்தது.
பாக்கிஸ்த்தான் இலங்கையின் செயலை ஒரு முதுகில் குத்திய செயலாக உணரும் என்பது
நிச்சயம். அதைப் போலவே சீனாவும் இதைக் கரிசனையுடன் நோக்க வாய்ப்புண்டு. இந்தப்
புவிசார் அரசியல் போட்டியில் தமிழர்கள் என்ன நிலையை எடுக்கப் போகின்றார்கள்? 2017-ம் ஆண்டின் நடுப்பகுதியில் தமிழர்கள் தாம் ஜெனிவாவில்
முற்றாக ஏமாற்றப் பட்டதை உணர்ந்து கொள்வார்கள். அந்த பட்டறிவு இனி எவ்வளவு உதவப்
போகின்றது?