Monday 20 January 2020

சுலேமானீக்குப் பின்னர் ஈரானும் ஈராக்கும்


ஏழாயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாறுடைய ஈரானியர்கள் மதிநுட்பம் மிக்கவர்கள், பண்பாடு நிறைந்தவரக்ள், அவர்களது விருந்தோம்பல் உலகமறிந்தது. அத்தகைய பெருமை மிக்க ஈரானின் சிறப்புப்படையணியான குட்ஸின் தளபதி காசெம் சுலேமானீயைக் கொன்றதை அமெரிக்கா பலமுனை வெற்றியாகப் பார்க்கின்றது. லிபியாவின் பென்காசியில் அமெரிக்கத் தூதுவர் கொல்லப்பட்டமைக்கு சுலேமானீ பொறுப்பு என நம்பிய அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் மூதவை உறுப்பினர் மைக் பொம்பியோ பல மாதங்களாக சுலேமானியைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தார். 2019 ஜூலையில் அதிபர் டொனால்ட் டிரம்பினது சம்மதத்தையும் பெற்றுக் கொண்டு தருணம் பார்த்துக் காத்திருந்தார். சுலேமானியைக் கொன்றதன் மூலம் இனி ஒரு அமெரிக்கத் தூதுவர் கொல்வது தடுக்கப்பட்டது மட்டுமல்ல 1. எதிர் காலத்தில் ஈரானின் அதிபராக சுலேமானீ வரமுடியாமல் போனமை, 2. ஈராக்கில் ஈரானின் ஆதிக்கத்தை தடுத்தமை, 3. தீவிர அமெரிக்க விரோதக் கொள்கையுடைய ஹிஸ்புல்லா அமைப்பின் உச்ச நட்பை அழித்தமை போன்றவையும் அமெரிக்காவிற்கு கிடைத்த வெற்றிகளாகக் கருதலாம். 


John Avery on Iran: Iran has an ancient and beautiful civilization, which dates back to 5,000 BC, when the city of Susa was founded. Some of the earliest writing that we know of, dating from approximately 3,000 BC, was used by the Elamite civilization near to Susa. Today’s Iranians are highly intelligent and cultured, and famous for their hospitality, generosity, and kindness to strangers. Over the centuries, Iranians have made many contributions to science, art and literature, and for hundreds of years they have not attacked any of their neighbors. Nevertheless, for the last 90 years, they have been the victims of foreign attacks and interventions, most of which have been closely related to Iran’s oil and gas resources. The first of these took place in the period 1921-1925, when a British-sponsored coup overthrew the Qajar dynasty and replaced it by Reza Shah.

நிறைவேறாத கனவுகள்
ஈரானின் கடற்படையை அழிப்பது, ஈரானின் அணுக்குண்டு உற்பத்தி நிலைகளை அழிப்பது போன்றவை கூட சுலேமானீயைக் கொல்வதற்கு ஈடாகாது என மைக்கேல் பிரெஜென்ற் என்னும் ஈராக்கில் பணியாற்றிய அமெரிக்கப்படையின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி அமெரிக்க பாராளமன்றத்தின் முன் சாட்சியமளித்திருந்தார். அந்த அளவிற்கு அமெரிக்காவின் பிராந்திய நலன்களுக்கு அச்சுறுத்தலளிப்பவராக சுலேமானீ திகழ்ந்தார். 2003இல் இருந்தே அமெரிக்காவிற்கு எதிராக ஈராக்கில் ஈரான் செயற்படுகின்றது. யேமன் முதல் ஈராக்வரை அமெரிக்க நகர்வுகளைச் சிக்கலாக்குவதில் சுலேமானீ வெற்றி கண்டார். ஆனால் அமெரிக்காவை மேனா (MENA) என்று அழைக்கப்படும் மேற்காசியா மற்றும் வட ஆபிரிக்கப் பிரதேசத்தில் இருந்து விலக்க முன்னர் சுலேமானி கொல்லப்பட்டார். அல்ஜீரியா, எகிப்த்து, லிபியா, லெபனான், சிரியா, யேமன் ஆகியவற்றை உள்ளடக்கிய ஈரானிய பேரரசை உருவாக்கும் ஈரானிய மதவாதிகளின் கனவு கரு நிலையில் இருக்கும் போதே சுலேமானீ கொல்லப்பட்டார்.


மைக் பொம்பியோ காத்திருந்த தருணம்
2018 மே மாதம் அமெரிக்கா ஈரானுடன் செய்து கொண்ட யூரேனியம் பதப்படுத்தல் தொடர்பான ஒப்பந்த்தில் இருந்து ஒருதலைப்பட்சமாக வெளியேறி ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஓராண்டு பொறுத்திருந்த ஈரான் 2019 மே மாதம் ஹோமஸ் நீரிணையூடாகச் செல்லும் எரிபொருள் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் செய்யத் தொடங்கியது. அடுத்த மாதம் அமெரிக்காவின் ஆளில்லா கண்காணிப்பு விமானம் ஒன்றையும் சுட்டு வீழ்த்தியது. அதற்கு அடுத்த மாதம் பிரித்தானியக் கொடியுடன் சென்ற ஒரு எரிபொருள் தாங்கிக் கப்பலைக் கைப்பற்றியது. பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து சவுதி அரேபியாவின் எரிபொருள் உற்பத்தி நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதலைச் செய்து. பின்னர் 2019 டிசம்பரில் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படை நிலைகள் மீது எறிகணைத் தாக்குதல்கள் செய்யப்பட்டதில் ஒரு அமெரிக்கர் கொல்லப்பட்டார். அதை ஈரானின் ஆதரவு பெற்ற படைக்குழுக்களே செய்தன என அமெரிக்கா குற்றாம் சாட்டியது ஆனால் இந்த தாக்குதல்களுக்கும் தனக்கும் தொடர்பில்லை என ஈரான் மறுத்தது. ஈரானின் சேட்டைகளுக்கு அமெரிக்கா பதிலடி கொடுக்காது என ஈரான் கருதுவதாக அமெரிக்கா நம்பியது. அதனால் காத்திரமான பதிலடி கொடுக்கும் முடிவை அமெரிக்கா எடுத்தது. ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவுக்குழுக்களின் நிலைகளில் தாக்குதல் செய்து ஐம்பது போராளிகளைக் கொன்றது. அதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டின் இறுதி நாளில் ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தூதுவரகத்தை போராளி அமைப்பினர் முற்றுக்கையிட்டு முன்னரங்க காவல் நிலைகளை அழித்தனர்.  இந்தச் செயல் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் மைக் பொம்பியோ காத்திருந்த தருணத்தை அவர் காலடியில் போட்டது. சுலேமானீ இலகுவாகக் கொல்லப்பட்டார்.  ஜனவரி 3-ம் திகதி சுலேமானீ கொல்லப்பட்டவுடன் சவுதி இளவரசர் தனது உடன்பிறப்பான துணைப் பாதுகாப்பு அமைச்சரை அவசரமாக அமெரிக்கா அனுப்பினார். அவரது பயணத்தின் நோக்கம் ஒரு அமெரிக்க-ஈரான் மோதலை தவிர்க்கும் நோக்கத்தைக் கொண்டதாக இருந்தது.

ஈராக் மீது ஈரானின் பிடியை அமெரிக்கா தகர்க்குமா?
ஈராக்கில் ஈரானின் ஆதிக்கத்தை அமெரிக்கா ஒழிப்பதற்கான முதற்படியாக சுலேமானீயின் கொலை அமைந்துள்ளது.  ஈராக்கில் ஈரானின் ஆதிக்கத்திற்கு எதிராக இனி அமெரிக்கா காய்களை நகர்த்தும். அதனால் ஈரான்-அமெரிக்க மோதல் களமாக ஈராக் மாறும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. ஈராக்கியப் பாராளமன்றம் அமெரிக்கப் படைகள் ஈராக்கில் இருந்து வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்தாலும் அது தலைமை அமைச்சரின் ஒப்புதல் இன்றி நடைமுறைக்கு வராது. தற்காலிக தலைமை அமைச்சராக இருக்கும் அதில் அப்துல் மஹ்தி ஈரானின் ஆதிக்கம் ஈராக்கில் அதிகரிக்கும் போது தனக்கு ஆபத்து எனக் கருதுவதால் அவர் ஒப்புதல் அளிக்க வாய்ப்பில்லை. அத்துடன் அவர் ஒப்புதல் அளித்தால் அமெரிக்க நடுவண்வங்கியில் உள்ள ஈராக்கிய அரசின் கணக்கு முடக்கப்படும் என்ற எச்சரிக்கையை அமெரிக்கா ஈராக்கிற்கு விடுத்துள்ளது. சுலேமானீயுடன் கொல்லப்பட்ட ஈராக்கிய பொது நகர்வு அலகின் தளபதியின் இழப்பு பல படைக்குழுக்களைக் கொண்ட அந்த அலகை நிலை குலையச் செய்துள்ளது. 

பழிவாங்குமா ஹிஸ்புல்லா? 
சுலேமானீயின் படுகொலை உலகெங்கும் உள்ள சியா இஸ்லாமியர்களுக்கு அமெரிக்கா மீது உள்ள வெறுப்பை பன்மடங்காக அதிகரித்துள்ளது. அமெரிக்கா ஈரானியத் தளபதி காசெம் சுலேமானியையும் ஈராக்கிய போராளிக் கூட்டமைப்பான பொது நகர்வுக் குழுவின் தளபதி அபு மஹ்டி அல் முஹண்டிஸையும் கொன்றமைக்கு ஈடான பழிவாங்கல் செய்யப்பட வேண்டும் என ஹிஸ்புல்லா அமப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா 2020 ஜனவரி 5-ம் திகதி சூழுரைத்திருந்தார். மேலும் அவர் அமெரிக்க மக்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்றும் தமது பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப்படையினரை அகற்றும் வகையில் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார். எந்த ஒரு நாட்டினதும் உதவியின்றி அமெரிக்கப்படையினருடன் ஒரு நேரடி மோதலை ஹிஸ்புல்லாவால் செய்வது கடினம். இஸ்ரேலின் அச்சுறுத்தல் லெபனானில் பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றையும் சமாளிக்க வேண்டிய நிலையில் ஹிஸ்புல்லா உள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளாக சிரிய உள்நாட்டுப் போரில் பெரும் ஆளணி இழப்பை ஹிஸ்புல்லா சந்தித்துள்ளது. லெபனானின் அரச படைகளுக்கு அமெரிக்கப்படையினர் பயிற்ச்சியளித்து வருகின்றனர். அவர்களின் மீது சிறிய அளவிலான அதிக தாக்குதலை ஹிஸ்புல்லா மேற்கொள்ளலாம். சுலேமானீயின் கொலையால் அவரால் உருவாக்கப்பட்டு வளர்க்கப் படும் ஹிஸ்புல்லா உட்பட்ட படைக்குழுக்கள் கிளர்ந்து எழு வேண்டும் என்பது அமெரிக்காவின் விருப்பமாக இருக்கலாம். அந்த கிளர்ச்சியை அடக்கும் போர்வையில் அந்தப் படைக்குழுக்களை முற்றாக அழிப்பதற்கு அமெரிக்க முற்படலாம் என்பதையும் ஹிஸ்புல்லா உணரும். ஹிஸ்புல்லா வெறும் படைக்கலத் தாக்குதல் மட்டுமல்ல இணையவெளித்தாக்குதல்களையும் செய்யக் கூடியது. 

ஈரான் குழம்புமா?
சுலேமானீ கொல்லப்பட்டவுடன் ஈரானிய மக்கள் ஆட்சியாளர்களின் பின்னால் திரண்டது உண்மை. ஈரானின் கலாச்சார நிலையங்கல் உட்பட 52 நிலகள்மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கை ஈரானியர்களை ஆத்திரப்படுத்தியது மட்டுமல்ல பொருளாதாரச் சிக்கல்களால் அதிருப்தி கொண்டிருந்தவர்களையும் அரசு சார்பானவர்களாக்கியது. ஆனால் ஈரான் கொடுத்த பதிலடி போதாது என்பதை அவர்கள் உணரும் போது அவர்கள் அரசுக்கு எதிராகத் திரும்பலாம். அமெரிக்காவின் உளவிற்கான எதிர்ப்பு நடவடிக்கையை ஈரான் சரியாகச் செய்யவில்லை. ஈரானின் பெரும் சொத்தான தளபதியை அமெரிக்க உளவாளிகள் நிறைந்த லெபனான், சிரியா, ஈராக் ஆகிய நாடுகளுக்கு காசெம் சுலேமானீயை போதிய பாதுகாப்பின்றி அனுப்பியது தவறானது என ஈரானியர்கள் கருதினால் அது ஈரானிய ஆட்சியாளர்களுக்கு பெரும் தலையிடியைக் கொடுக்கலாம். உக்ரேனிய பயணிகள் விமானத்தை தவறுதலாகச் சுட்டு வீழ்த்தி பல ஈரானியர்களை ஈரானியப் படையினர் கொன்றதும் ஈரானிய மக்களை சினம் கொள்ள வைத்துள்ளது. அந்த சினத்துடன் ஈரானியப் பொருளாதார தேய்வால் ஏற்படும் விரக்தி இணையும் போது ஈரானிய ஆட்சியாளர்கள் பெரும் உள்நாட்டுக் குழப்பத்தை சந்திக்க வேண்டியிருக்கும். இது எவ்வளவு தூரம் சரியானது என்பதை 2020 பெப்ரவரியில் நடக்கும் ஈரானியப் பாராளமன்றத் தேர்தலில் எதிர்பார்க்கலாம். 2019 மே மாதம் ஈரானுக்கு எஸ்-400 என்ற ஏவுகணை எதிர்ப்பு முறைமையை விற்பனை செய்ய இரசியா மறுத்திருந்தது. ஆனால் ஈராக்கிற்கு விற்பனை செய்ய இரசியா தற்போது முன்வந்துள்ளது. மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் ஈரானின் ஆதிக்கம் வளர்வதை இரசியா விரும்பவில்லை. அதனால் இரசியாவிடமிருந்து பெரும் உதவியை ஈரான் எதிர்பார்க்க முடியாது. 

சுலேமானீயின் திறன் தீவிரவாத அமைப்புக்களை உருவாக்கி, வளர்த்து அவற்றை புவிசார் நலன்களுக்குப் பாவிப்பதில் முதன்மையானதாக அமைந்திருந்தது. அமெரிக்க அரசுறவியலாளர்கள் அந்த அமைப்புக்களை கையாளும் வழிகள் தெரியாமல் கடந்த 40 ஆண்டுகளாக திணறுகின்றார்கள். அவற்றில் கையாளவதற்கு மிகவும் கடினமானது ஹிஸ்புல்லா அமைப்பு. அதனால் அமெரிக்காவிற்கும் ஹிஸ்புல்லாவிற்கும் இடையில் சிறிய தாக்குதல்களில் தொடங்கி ஒரு பெரிய போராக மாறக்கூடிய வாய்ப்பு தற்போது அதிகமாகக் காணப்படுகின்றது. 

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...