அமெரிக்கா,
பிரித்தானியா, பிரான்சு ஆகிய மூன்று வல்லரசு நாடுகளுக்கும் தமக்கிடையிலேயிலான
ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் அவற்றிற்கு இடையில் பிளவு ஏற்பட்டால் உள்ள தீமையையும்
நன்கு உணர்ந்துள்ளன. அந்த மூன்று நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் அவ்வப்போது ஏற்ற
இறக்கங்களைச் சந்திப்பதுண்டு. எஞ்சிய வல்லரசுகளான இரசியாவும் சீனாவும் தாம்
ஒன்றுபட வேண்டும் என நினைத்தாலும் எந்த அளவிற்கு ஒன்று பட முடியும் என்பதில்
நிச்சயமற்றிருக்கின்றன. அதற்கு அடுத்த நிலையில் தமது பாதுகாப்பையிட்டு கரிசனை
கொண்ட நாடுகளாக இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, ஒஸ்ரேலியா ஆகிய நாடுகள் இருக்கின்றன. இவற்றில்
இந்தியாவின் கேந்திரோபாயப் பாதுகப்புப் பங்காண்மை மற்ற நாடுகளின் பங்காண்மை
கேள்விக்கு உள்ளாகியுள்ளது.
எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு
முறைமை
எதிரிகள்
வீசும் ஏவுகணைகளை இடைமறிப்புச் செய்து அழிக்கும் எஸ்-400 என்ற ஏவுகணை எதிர்ப்பு முறைமையை
அமெரிக்க எதிர்ப்பையும் மீறி இந்தியா 2018 ஒக்டோபரில் இரசியாவிடமிருந்து வாங்கும் ஒப்பந்தத்தை
இந்தியா செய்தது. இரசியாவின் S-400
Triumf air defence missile systems என்ற ஏவுகணை எதிர்ப்பு முறைமை
உலகிலேயே மிகச் சிறந்த ஏவுகணை எதிர்ப்பு முறைமை என்பதுடன் அமெரிக்காவின்
"தாட்" ஏவுகணை எதிர்ப்பு முறைமையிலும் பார்க்க சிறந்ததும்
மலிவானதுமாகும். இரசியாவினது $500மில்லியன்
விலை என்றும் அமெரிக்காவினது $3பில்லியன்
என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இரசியா எஸ்-400 முறைமையின் இந்தியாவிற்கான
விநியோகத்தை 2020 ஒக்டோபரில் ஆரம்பித்து 2021-ம் ஆண்டு முடிப்பதாக இருந்தது. ஆனால்
2020 பெப்ரவரியில் இரசியா கொவிட்-19 தொற்று நோயைக் காரணம் கட்டி எஸ்-400 விநியோகத்தில்
இரண்டு ஆண்டுகள் தாமதம் ஏற்படும் என அறிவித்தது. இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த
இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரசியாவிற்கு பயணமானார். மூன்றுமாதங்கள்
தடங்கல் ஏற்படுத்திய கொவிட்-19 தொற்று நோய் இரண்டு ஆண்டு கால தாமதம் ஏற்படுத்துகின்றது
என்பது நம்ப முடியாத ஒன்று. அது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த பிரச்சனைக்குரிய நேரத்தில்
பாதுகாப்பு அமைச்சர் இரசியா செல்கின்றார் என்பது இந்த தாமத்தில் வேறு அரசுறவியல் பிரச்சனை
இருக்கலாம் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. எஸ்-400 முறைமையை ஏற்கனவே சீனாவிற்கு
இரசியா வழங்கிவிட்டது. மேற்கு நாடுகள் சீனாவிற்கு எதிராக தொழில்நுட்ப போரை தொடுத்துள்ள
நிலையில் சீனா அதிக படைக்கலன்களை இரசியாவிடமிருந்து இனி வாங்குவதற்கான வாய்ப்புக்கள்
அதிகரித்துச் செல்கின்றது. இந்தியாவிற்கு உயர் தொழில்நுட்பங்களை வழங்குவதற்கு உள்ள
தடைகளை மேற்கு நாடுகள் நீக்குவது அதிகரித்துக் கொண்டே போகின்றது. அதனால் இந்தியா
இரசியாவிடமிருந்து படைக்கலன்களை வாங்குவதை குறைத்து மேற்கு நாடுகளிடமிருந்து அதிக
படைக்கலன்களை வாங்க வாய்ப்புண்டு.
இந்திய இரசிய உறவு
இந்தியாவிற்கும்
இரசியாவிற்கும் இடையிலான கேந்திரோபாயப் பங்காண்மை பாக்கிஸ்த்தானில் இருந்து
பங்களாதேசத்தைப் பிரிக்க 1971 நடந்த இந்திய பாக்கிஸ்த்தான் போரின் போது மிகவும்
சிறப்பாக இருந்தது. இந்தியா மீது போர் தொடுக்க அமெரிக்கா தனது கடற்படையை இந்தியாவை
நோக்கி நகர்த்திய போது இரசியாவும் தனது கடற்படையை இந்தியாவை நோக்கி நகர்த்தியது.
பிரித்தானியாவின் விமானம் தாங்கிக் கப்பல் இந்தியாவை நோக்கி நகர முற்பட்ட போது
மத்திய தரைக் கடலில் அதை இரசியா தனது நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் தடுத்து
நிறுத்தியது. பனிப்போர்க் காலத்தில் இது போல பல சந்தர்ப்பங்களில் இரகசியமாகவும்
பகிரங்கமாகவும் இரசியா இந்தியாவிற்கு ஆதரவாக நடந்து வருகின்றது. இரசிய இந்திய உறவு எந்த சூழலிலும் மாற்ற
முடியாது என்ற நிலை இது வரை காலமும் இருந்து வந்தது. இரசிய தரப்பில் இந்த உறவில்
மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும் இந்தியாவின் பாதுகாப்புச் சூழல் வேறு விதமாக
மாறிக்கொண்டிருக்கின்றது.
இரசியாவிற்கு சீனா
தேவைப்படுகின்றது
விளடிமீர் புட்டீன்
அமெரிக்காவின் ஒரு துருவ ஆதிக்கத்தை மிகவும் வெறுக்கின்றார். மீண்டும் சோவியத்
ஒன்றியம் போன்ற ஒரு பல நாடுகளைக் கொண்ட கூட்டமைப்பை இரசியா தலைமையில் உருவாக்க வேண்டும் என உறுதியாக இருக்கின்றார். இரசியாவிற்கு
எதிராக மேற்கு நாடுகள் விதிக்கும் பொருளாதாரத் தடையில் இருந்து இரசியப்
பொருளாதாரத்தை தக்க வைக்க இரசிய சீன உறவை மேம்படுத்த விரும்புகின்றார். இரசியா உக்ரேன் விவகாரத்தின் பின்னர் சீனாவுடன் கை கோர்க்க முயன்றாலும்
அதற்கு இரண்டு முக்கிய தடைகள் உள்ளன. ஒன்று இரு நாடுகளுக்கும் இடையில் மத்திய
ஆசியாவில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்ற போட்டி உண்டு. இரண்டாவது இரு நாடுகளும்
ஒன்று சேர்ந்தால் இந்தியா அமெரிக்காவுடன் அதிக நட்பையும் படைத்துறை
ஒத்துழைப்பையும் வளர்க்கும் அது இரசியாவின் படைத்துறை வர்த்தகத்திற்கு
பாதிப்பு ஏற்படுத்த்தும். இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும்
தத்தமது நாட்டில் தமது பிடியை உறுதியாக்கியுள்ளனர். அவரிகளின் வெளியுறவுக்
கொள்கைக்கு அவர்களின் மக்களிடையே காத்திரமான ஆதரவு உள்ளது. 2020-ம்
ஆண்டு இரசியா தான் படைத்துறையில் முன்னணி வகிக்க வேண்டும் எனக் கருதுகின்றது.
அதற்கு அவசியமான ஐந்தாம் தரப் போர்விமானங்களையோ பாரிய கடற்படையையோ அதனால் உருவாக்க
முடியவில்லை. இரசியாவின் SU-57 போர் விமான உற்பத்தி
நிறைவடைந்த வேளையில் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமாக அதை மாற்றுவதற்கான
இயந்திரங்களை உருவாக்க இரசியாவால் முடியவில்லை. SU-57 போர்
விமானங்களை பெருமளவில் உற்பத்தி செய்யக் கூட முடியவில்லை. 2017-ம் ஆண்டு இரசியா தனது பாதுகப்புச் செலவை 20விழுக்காட்டால்
குறைத்தது.
இந்தியாவின் இரசியா
தேவைப்படுகின்றது.
இந்தியாவின் தற்போதைய
ஆட்சியாளர்களின் வலதுசாரி-பழமைவாதச் சிந்தனை இந்திய அமெரிக்க நட்புறவிற்கு சாதகமாக
உள்ளது. நேரு இந்திராவின் வெளியுறவுக் கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு
கொள்கையைக் கடைப்பிடித்து இந்தியாவை உலக அரங்கில் முன்னேற்ற அவர்கள்
விரும்புகின்றார்கள். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இலக்குகளில் முக்கியமானது
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெற்று ஒரு வல்லரசாக
வேண்டும்; அதற்கு ஏற்ப்ப தனது பொருளாதாரத்தையும் படைவலிமையையும் பெருக்க வேண்டும்.
ஐநா பாதுகாப்புச் சபையில் இரத்து (வீட்டோ) அதிகாரத்துடன் இருக்கும் சீனாவின்
ஆதரவின்றி இது நடக்காது. அதுவரை இந்தியாவிற்கு
பாதகமாக பாதுகாப்புச் சபை எடுக்கும் முடிவுகளை இரத்துச் செய்ய இரசியாவின் நட்பு
இந்தியாவிற்கு தேவைப்படுகின்றது.
இந்தியாவின்
முக்கியத்துவத்தைப் பெறும் பிரான்ஸ்
இந்திய இரசிய உறவைப்
பற்றி சிந்திக்க வைக்கும் இரு நிகழ்வுகள் 2020 மே மற்றும் ஜூன் மாதங்களில் நடந்தன.
ஒன்று இரசியாவின் தாஸ் செய்தி நிறுவனம் அமெரிக்க சீனா போட்டியில் இருந்து இந்தியா
விலகி நிற்க வேண்டும் என ஒர் அறிவுறுத்தலை ஒரு நிபுணர் மூலமாக இந்தியாவிற்கு
விடுத்திருந்தது. இரண்டாவது பிரெஞ்சு அரசுறவியலாளர் ஒருவர் இந்திய பிரெஞ்சு உறவு
பல முனைகளிலும் வளர்கின்றது என்றார். அவரிடம் இரசியாவின் இடத்தை பிரான்ஸ்
பிடிக்கப் போகின்றாதா என்ற கேள்விக்கு நேரடியாக அவர் பதிலளிக்காமல் புது
டில்லியில் இரசியாவின் இடத்தில் பிரான்ஸ் எனச் சொல்வது பெருமை சேர்ப்பதாகும்
என்றார். கஷ்மீர் மாநிலத்தின் உரிமைகளைப் பறித்த போது பிரான்ஸ் இந்தியாவுடன்
உறுதியாக நின்றது. இந்தியாவிற்கு தேவையான போதெல்லாம் ஐநா பாதுகாப்புச் சபையில் பிரான்ஸ்
இந்தியாவிற்கு முழுமையான ஆதரவுடன் செயற்பட முடியும். அதனால் இந்தியாவிற்கான இரசிய
உறவின் முக்கியத்துவத்தை குறைக்கலாம. அது மட்டுமல்ல இந்தியாவிற்கு தேவையான
படைக்கலன்களை பிரான்ஸால் வழங்க முடியும். இந்தியாவுடன் படைத்துறைத்
தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு இருந்த தடைகளை அமெரிக்கா தொடர்ந்து
தளர்த்தி வருகின்றது. படைத்துறைத் தொழில்நுட்பத்தில் வேகமாக முன்னேறி வரும்
இஸ்ரேலும் இந்தியாவிற்கு தனது தொழில்நுட்பங்களை விற்பனை செய்வதை விரும்புகின்றது. படைத்துறைத்
தொழில்நுட்பத்தில் இரசியாவின் தேவை இந்தியாவிற்கு குறைந்து கொண்டே போகின்றது. சுவீடன்
சிறந்த போர்விமானங்களை குறைந்த விலைக்கு உற்பத்தி செய்கின்றது. அவற்றின்
இலத்திரனியல் திறன் தன்னிகரற்றவையாக இருக்கின்றன. அமெரிக்கா, ஜப்பான், ஒஸ்ரேலியா,
வியட்நாம், தென் கொரியா ஆகிய நாடுகள் சீனாவிற்கு எதிரான கூட்டமைப்பில் இந்தியாவும்
இணைவதை விரும்புகின்றன. அமெரிக்கா ஆப்கானில் இருந்து வெளியேறிய பின்னர் அமெரிக்க
வெளியுறவில் பாக்கிஸ்த்தானின் முக்கியத்துவம் பெரிதும் குறைந்து விடும். அதனால்
இந்திய அமெரிக்க உறவு மேம்படலாம். இந்திய வெளியுறவில் இரசியாவின் முக்கியத்துவம்
குறைந்து செல்லும் வாய்ப்பு அதிகமாகின்றது.
திட்டமிடப்பட்ட
நகர்வுகளா?
இந்தியாவிற்கும் பிரான்ஸிற்கும்
இடையில் உறவை வளர்ப்பது மேற்கு நாடுகளின் திட்டமிட்ட நகர்வாகவும் இருக்கலாம். அதன்
மூலம் இரசியாவிடமிருந்து இந்தியாவைப் விலக்கி இந்தியாவைச் சீன-இரசியாவிற்கு எதிரான
தமது அணியில் இனைப்பது அவர்களின் எண்ணமாகவும் இருக்கலாம். 2020 ஜூன்
நடுப்பகுதியில் நேட்டோவின் பொது செயலாளர் சீனாவிற்கு எதிராக நேட்டோ நாடுகள்
ஒன்றிணைய வேண்டும் என்ற அறைகூவலை விடுத்திருந்தார். இந்தியாவிற்கு எதிராக சீனா
படைக்கலன்களைப் பாவிப்பதிலும் பார்க்க சீனாவில் இருந்து இந்தியாவிற்குப் பாயும் ஆறுகளை
திசை திருப்பி இந்தியாவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம். அதனால் சீனா
எப்போதும் இந்தியாவிற்கு அச்ச மூட்டும் ஒரு நாடகவே இருக்கும். சீனா உலக அரங்கில்
தனது ஆதிக்கத்தை நிதானமாகவும் காத்திரமாகவும் அதிகரித்துக் கொண்டே போகின்றது. சீன
வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க இந்தியாவிற்கு ஒரு வலிமையான நட்புக் கட்டமைபு தேவை.
சீனாவை நெருங்கி நட்பை வளர்க்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் இரசியாவின் நட்பு
இந்தியாவிற்கு எந்த அளவு உதவியாக இருக்கும் என்பதை இந்தியா கவனமாக கருத்தில்
கொள்ளும்.
ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் காப்புவரியை (Tariff)இல்லாமற் செய்தால் நாடுகளிடையேயான வர்த்தகம் அதிகரிக்கும். இந்தக் காப்புவரி ஒழிப்பிற்கான முயற்ச்சி பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கின்றன. உலக வர்த்தக அமைப்பு (THE World Trade Organisation WTO) இதற்கென உருவாக்கப்பட்டது. பொதுவுடமைப் புரட்சியின் பின் இந்த அமைப்பில் இருந்து விலகிய சீனா மீண்டும் அதில் இணைய 1980-ம் ஆண்டு விண்ணபித்து 21ஆண்டுகளின் பின்னர் இணைக்கப்பட்டது. சீனாவும் பிரேசிலும் WTOஇல் உறுப்புரிமை பெற்ற பின்னர் அமெரிக்காவின் அதிகாரம் அதில் குறைந்ததால் அதற்கு வெளியே பசுபிக் தாண்டிய வர்தககப் பங்காண்மை, அட்லாண்டித் தாண்டிய வர்த்தக்ப் பங்காணமை என அமைப்புக்களை உருவாக்கி காப்புவரியில்லாமல் பல நாடுகளுடன் வர்த்தகம் செய்யப் பெரு முயற்ச்சி எடுத்துக் கொண்டிருக்கையில் பிரித்தானியா அதே நோக்கத்திற்காக உருவாக்கப் பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதா இல்லையா என்பது பற்றி பிரித்தானியா ஒரு கருத்துக் கணிப்பை 2016 ஜூன் 23-ம் திகதி எடுக்க விருக்கின்றது. இது சட்ட பூர்வக் கருத்துக் கணிப்பீடு அல்ல ஒரு ஆலோசனை கோரும் கருத்துக் கணிப்பு மட்டுமே.
மரம் பழுக்க வௌவாலாக வந்த பிரித்தானியா.
ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னோடியான ஐரோப்பிய நிலகரி-உருக்கு சமூகம் 195-ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது. பெல்ஜியம், பிரான்ஸ், மேற்கு ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, லக்சம்பேர்க், ஆகிய ஆறு நாடுகளும் இணைந்து பரிஸ் உடன்படிக்கை மூலம் இந்த சமூகத்தை உருவாக்கின. இதை உருவாக்கும் போது இதில் இணைந்து கொள்ளும் படி பிரித்தானியாவிற்கு விடுக்கப்பட்ட அழைப்பை அது நிராகரித்தது. பிரித்தானியாவும் இணைவதை பிரான்ஸ் பெரிதும் விரும்பியது. ஒன்றுபட்ட, போரில்லாத, வர்த்தகத் தடையற்ற, பொதுசந்தையுடைய ஐரோப்பாவை உருவாக்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த சமூகம் உருவாக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து 1957-ம் ஆண்டு ரோம் உடன்படிக்கை மூலம் ஐரோப்பியப் பொருளாதார சமூகம் உருவாக்கப் பட்டது. இந்த நாடுகள் இதன் மூலம் பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சியடைந்தன. இரண்டாம் உலக் போரின் பின்னர் பொருளாதார அடிப்படையில் ஐரோப்பாவின் நோயாளி என விபரிக்கப் பட்ட பிரித்தானியாவும் ஐரோப்பியப் பொருளாதார சமூகத்தின் வளர்ச்சியைக் கண்டு அதில் இணைய விரும்பியது. 1961-ம் ஆண்டு பிரித்தானியா செய்த விண்ணபத்தை பிரான்ஸ் நிராகரித்தது. மீண்டும் ஒரு விண்ணப்பம் செய்யப் பட்டது அதுவும் பிரான்ஸால் நிராகரிக்கப் பட்டது. ஆனால் பிரான்ஸின் எதிர்ப்பால் அது கைகூடவில்லை. பின்னர் 1973-ம் ஆண்டு பிரித்தானியாவும் ஐரோப்பிய பொருளாதார சமூகத்தில் இணைந்து கொண்டது. அப்போதில் இருந்தே பிரித்தானியாவின் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமைக்கு பிரித்தானியாவின் சில பகுதியினரிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியது. ஆனால் 1975-ம் ஆண்டு தலமை அமைச்சராக இருந்த ஹரோல்ட் வில்சன் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை நடத்தி அதில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்கு 67விழுக்காடிற்கும் அதிகமான மக்களின் ஆதரவைப் பெற்றார். அப்போது பிரித்தானிய ஊடகங்கள் எல்லாம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதற்கான ஆதரவை வழங்கின.
அற்ற குளத்தில் அறிநீர்ப் பறவையாக பிரித்தானியா?
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா இருந்ததால் அதன் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி கண்டது. 2008-ம் ஆண்டில் உலகெங்கும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து பிரித்தானியா மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் பார்க்க முதலில் தப்பிக் கொண்டது. பல ஐரோப்பிய நாடுகள் இன்னமும் பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பதாலும் அவை அதிலிருந்து விடுபடும் நாள் அண்மையில் இல்லை என்பதாலும் அதிலிருந்து வெளியேறவேண்டும் என்ற கொள்கை கொண்டவர்களின் ஆதிக்கம் பிரித்தானியாவின் கொன்சர்வேர்டிவ் எனப்படும் பழமைவாதக் கட்சியினரிடையே அதிகரித்தது. 2010-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி பழமைவாதக் கட்சியினரின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தியதாலும் பழமைவாதக் கட்சியினரிடையே ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலக வேண்டும் என்ற கருத்து மேலும் வலுப்பெற்றது. இதனால் 2010-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலுக்கு முன்னர் தலைமை அமைச்சர் டேவிட் கமரூன் பொதுத் தேர்தலின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா இருப்பதா இல்லையா என்பது பற்றி ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற உறுதி மொழியை வழங்கினார். தீவு மனப்பாங்கும் ஏகாதிபத்திய மீத்தங்கலும் (hangover)
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான உறவு பல ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டது. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பிரித்தானிய ஊடகங்களும் நகைச்சுவைக் கலைஞர்களும் மற்ற ஐரோப்பிய நாடுகளை மோசமாகத் தாக்குவதில் பின்னிற்பதில்லை. இதில் பெரும் தாக்குதலுக்கு உள்ளாபவை ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் தான். ஸ்பெயினில் இருந்து பிரித்தானியாவை ஆக்கிரமிக்க வந்த பெரும் கடற்படையை முறியத்தமை, நெப்போலியனைத் தோற்கடித்தமை, இரு பெரும் உலகப் போரில் ஜேர்மனியைத் தோற்கடித்தமை எல்லாம் பிரித்தானியர்களை தாம் மற்ற ஐரோப்பியர்களிலும் பார்க்க மேன்மையானவர்கள் என எண்ண வைக்கின்றது. பனிப்போரில் அமெரிக்காவுடன் இணைந்து சோவியத் ஒன்றியத்தை தோற்கடித்தமையும் பிரித்தானியர்களின் திமிரைக் கூட்டுகின்றது. உலகக் கடலலைகளை ஆண்ட பிரித்தானியா என்ற நினைப்பும் இன்னும் பிரித்தானியரை விட்டு அகலவில்லை. 2014-ம் ஆண்டு பிரித்தானியாவிற்கு ஐரோப்பாவிற்கும் இடையிலான உறவைப் பற்றி எழுதிய சாம் வில்சன் என்ற ஆய்வாளர் Perhaps it is Britain's island mentality, combined with that imperial hangover, that is at play - Britain is used to giving orders, not taking them. எனக் குறிப்பிட்டார். பிரித்தானியாவில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கொள்கையுடையோர் ஐரோப்பிய ஒன்றியம் சட்டங்களை இயற்றி எம்மீது திணிக்கக் கூடாது என்றும் எமது நீதிமன்றங்களின் தீர்ப்புக்களை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றங்கள் மாற்றியமைக்கக் கூடாது என்றும் திமிருடன் கூறுவதற்கான காரணம் இதுவாக இருக்கலாம்.
உள்கட்சி மோதல்களும் கட்சிகளிடை மோதல்களும்
ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான விவாதம் பிரித்தானியக் கட்சிகளிடையே மட்டுமல்ல கட்சிகளுக்குள்ளும் பெரும் விவாதப் பொருளாக ஆரம்பத்தில் இருந்தே இருந்து வருகின்றது. பழமைவாதக் கட்சியின் தீவிர வலது சாரிகளும் தொழிற்கட்சியின் தீவிர இடதுசாரிகளும் ஐரோப்பிய ஒன்றியத்தை விரும்பவில்லை. தேசிய அரசுகள் என்பது முதலாளித்துவச் சிந்தனை மட்டுமே உண்மையான சமூகவுடமைவாதி (சோசலிசவாதி) தேசிய அரசுகளைப்பற்றிக் கவலைப்படமாட்டான். அவன் உலகத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்ற கொள்கையுடன் இருப்ப்பான். பெருமுதலாளிகளுக்குத்தான் தமது சுரண்டல்களிற்கான பிரதான தளமாக ஒரு தேசிய அரசு அதிகம் தேவைப்படும். ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் பெருமுதலாளிகளின் ஆதிக்கம் அதிகம் காணப்படுகின்றது. சமூகவுடமைவாதிகள் தங்களுக்குள் ஒரு கட்டமைப்பை ஏற்படுத்திக் கொளவில்லை. ஆனால் இரண்டாம் போருக்குப் பின்னரான பிரித்தானியாவில் இடதுசாரிகளுக்கும் வலதுசாரிகளுக்கும் இடையில் உள்ள மோதலிலும் பார்க்க ஐரோப்பிய ஒன்றியத்தில் நம்பிக்கையற்றவர்களுக்கும் (Eurosceptic) ஆதரவானவர்களுக்கும் (Europhile) இடையில் உள்ள மோதல்களே பிரித்தானிய அரசியலில் பெரிதாக அடிபட்டது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள இடதுசாரிகள் பிரித்தானிய இடதுசாரிகளுடன் இணைய விரும்பினர். பிரித்தானியாவின் முட்டாள்த்தனமான முடிவும் கீழ்த்தரமான அரசியலும்
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா இல்லையா என்பதைப் பற்றிய கருத்துக் கணிப்பை பற்றிக் கருத்து வெளியிட்ட ஐரிஸ் ரைம்ஸ் என்னும் ஊடகம் பிரித்தானிய வரலாற்றில் ஒரு தலைமை அமைச்சர் எடுத்த முட்டாள்த்தனமான முடிவு எனத் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் என பழமைவாதக் கட்சியினர் கருதினால் அதை கட்சிக்குள் கூடி ஒரு முடிவை முதலில் எடுக்க வேண்டும். வெளியேறவேண்டும் என்ற கொள்கையுடையவர்களின் வாயை அடைக்க தலைமை அமைச்சர் டேவிட் கமரூன் கருத்துக் கணிப்பு என்ற படைக்கலனைக் கையில் எடுத்தார். இருக்க வேண்டும் என்ற கருத்துக்கே அதிக ஆதரவு கிடைக்கும் என அவர் நம்பினார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறினால் ஏற்படவிருக்கும் பொருளாதார விளைவுகளை பெரும் பொருளாதார நிபுணர்களாலேயே தீர்மானிக்க முடியாமல் இருக்கையில் சாதாரண வாக்காளர்களால் எப்படி முடிவு செய்ய முடியும்? பிரித்தானியா வெளியேற வேண்டும் என்ற கருத்து வெற்றி பெற்றால் பழமைவாதக் கட்சியில் பெரும் பிளவு ஏற்படும். ஏற்கனவே கருத்துக் கணிப்பால் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. தலைமை அமைச்சர் பதவி விலகி பாராளமன்றம் கலைக்கப்பட்டு ஒரு திடீர் பொதுத் தேர்தல் நடக்கலாம். பிளவு பட்ட பழமைவாதக் கட்சிக்கு எதிராக தொழிற்கட்சி வெற்றி பெறலாம் என கணக்குப் போட்ட தொழிற்கட்சியின் தலைவர் பிரித்தானியா ஒன்றியத்தில் இருக்க வேண்டும் என்ற கருத்துக்கு காத்திரமான பரப்புரை செய்வதைத் தவிர்த்துக் கொண்டார்.அடுத்த தலமை அமைச்சர் கனவுடன் இருக்கும் முன்னாள் நகரபிதா பொறிஸ் ஜோன்சன் பிரித்தானியா விலவேண்டும் என்ற கருத்துக்கு ஆதரவாக தீவிரப் பரப்புரை செய்யத் தொடங்கினார். பழமைவாதக் கட்சியினரான டேவிட் கமரூனுக்கும் பொறிஸ் ஜோன்சனுக்கும் இடையிலான பதவி போட்டி ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான காத்திரமான விவாதத்தை மக்கள் முன் வைக்காமல் உண்மைக்கு மாறான வியாக்கியானங்களை மக்கள் முன் வைக்கத் தொடங்கினர். விலகவேண்டும் என்ற பிரிவினர் பிரித்தானிய மக்களின் மன நிலையைப் புரிந்து கொண்டு குடிவரவுப் பிரச்சனையை கையில் எடுத்ததால் கருத்துக் கணிப்பு திசை திருப்பப்பட்டு குடிவரவை விரும்புகிறாயா இல்லையா என்பதற்கு மக்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பது போன்ற ஒரு நிலைமை உருவாகிவிட்டது. மறுபுறம் இருக்க வேண்டும் என்ற கருத்துக்கு ஆதரவானவர்கள் விலகினால் பொருளாதாரம் சரிந்து விடும் எனச் சொல்லி பொருளாதாரச் சரிவா இல்லையா என்பதற்கான கருத்துக் கணிப்பு போல் திருப்பிவிட்டார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி இணைந்தவுடன் 77மில்லியன் துருக்கிய இஸ்லாமியர்கள் பிரித்தானியாவிற்கு வந்துவிடுவார்கள் என்ற பரப்புரையும் முன்வைக்கப் பட்டது.
நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க
பன்னாட்டு நாணய நிதியம் சொல்கின்றது பிரித்தானியா வெளியேறினால் அதன் பொருளாதாரம் பாதிக்கப் படும் என்று. பிரித்தானிய நடுவண் வங்கியும் அதையே சொல்கின்றது. பிரித்தானிய உளவுத் துறையின் முன்னாள் அதிபர் சொல்கின்றார் பிரித்தானியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று. பிரித்தானியாவின் வெளியேற்றம் ஐரோப்பிய ஒன்றியத்தைப் பெரிதும் பாதிக்கும். அது உலகப் பொருளாதார மீட்சிக்கான முயற்ச்சியைப் பாதிக்கும். அது பிரித்தானியாவின் பொருளாதாரதையும் பாதிக்கும். இந்த மறுதாக்கம் அளவிடப்பட முடியாத ஒன்றாகும். பிரித்தானிய வெளியேற்றத்தால் உருவாகவிருக்கும் உறுதியற்ற நிலை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை எதிர்வு கூறமுடியாததாக இருக்கும். Nigel Farrage என்னும் பிரித்தானிய சுதந்திரவாதி பிரித்தானியா வெளியேறிய பின்னர் என்ன செய்வது என்று தனக்குத் தெரியாது என்றார்.
பிழையான சூழல் பிழையான நேரம்
சிரியாவில் இருந்தும் ஈராக்கில் இருந்தும் புகலிடத்தஞ்சம் கோருவோர் பெருமளவில் ஐரோப்பாவை நோக்கி நகர்வது ஒறுபுறம், தீவிரவாதத் தாக்குதல்கள் ஐரோப்பாவில் நடப்பது மறுபுறம், இரசியாவின் அச்சுறுத்தல் இன்னொரு புறம் எல்லாவற்றிற்கும் மேலாக உலகப் பொருளாதாரப் பிரச்சனையும் அதனால் பெரிதாகப் பாதிக்கப் பட்ட ஐரோப்பிய நாடுகள் இன்னொரு புறமாக இருக்கும் சூழலில் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான கருத்துக் கணிப்புச் செய்வது மிக முட்டாள்தனமான ஒன்றாகும்.
அந்நியர்களின் ஊடகங்கள்
பல பிரித்தானிய ஊடகங்கள் விலக வேண்டும் என்ற கருத்துக்கு ஆதரவாகப் பரப்புரை செய்கின்றன. பைனான்சியல் ரைம்ஸ், எக்கொனமிஸ்ற் ஆகிய ஊடகங்கள் இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கின்றன. பிபிசி மறைமுகமாக இருக்க வேண்டும் என்ற கருத்துக்கும் ஸ்கை நியூஸ் விலக வேண்டும் என்ற கருத்துக்கும் மறைமுக ஆதரவு வழங்குகின்றன. 1975-ம் ஆண்டு நடந்த கருத்துக் கணிப்பின் போது எல்லா ஊடகங்களும் ஒருமனதாக நின்றன. அப்போது பெரும்பாலான ஊடகங்களின் உரிமையாளர்களாக பிரித்தானியர்களே இருந்தனர். இப்போது நிலைமை அப்படி இல்லை. பிரித்தானியா தன் மென்வல்லரசு நிலையை இழக்கும்
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகினால் ஸ்கொட்லாந்து, வேல்ஸ் வட அயர்லாந்து போன்ற பிரதேசங்கள் பிரித்தானியாவில் இருந்து விலகும் வாய்ப்பு உண்டு. பிரிய பிரித்தானியா சிறிய இங்கிலாந்து ஆகும். தற்போது வல்லரசாக இருக்கும் பிரித்தானிய உலகின் முன்னணி மென்வல்லரசாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் பிரித்தானியாவிற்கு உலக அரங்கில் உறுதுணையாக 27 நாடுகள் இருப்பதால் பிரித்தானிய உலக அரங்கில் அரசுறவியல் பேச்சு வார்த்தை மூலம் பல மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது. இது உலகை முதற்தர மெல் வல்லரசாக்கியது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவும் இந்தப் பாணியைக் கையாண்டது. கியூபாவில் அமெரிக்கா இந்த உபாயத்தைக் கையாண்டு வெற்றி கண்டு கொண்டிருக்கின்றது. வர்த்தக உடன்படிக்கைகளும் நிதிப் பங்களிப்பும்.
ஐரோப்பிய ஒன்றியம் பல நாடுகளுடன் செய்த வர்த்தக உடன்படிக்கைகள் பிரித்தானியாவிற்கு நன்மையளிக்கின்றது. பிரித்தானிய ஒன்றியத்தில் இருந்து விலகும் போது புதிய உடன்படிக்கைகளைச் செய்ய வேண்டியிருக்கும். பிரித்தானியாவிற்கு வெளியில் இருக்கும் நோர்வேயை வெளியேற்றவாதிகள் (பிரித்தானியா விலக வேண்டும் என்ற கொள்கையுடையோர்) உதாரணம் காட்டுகின்றார்கள். ஒன்றியத்திற்கு வெளியில் இருந்து பொது வர்தகப் பிரான்டிய அமைப்பில் இருக்கும் நோர்வேயும் ஒன்றியத்தின் பாதீட்டிற்கு தனது பெரும் நிதிப் பங்களிப்பைச் செய்கின்றது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கும் நிதி தொடர்பாக பல முரண்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. பொதுச் சந்தைக் கட்டமைப்பில் பிரித்தானியா ஈட்டும் இலாபத்தின் ஒரு பகுதியே பங்களிப்பாக வழங்கப்படுகின்றது. ஒன்றியத்தில் இருப்பதால் பிரித்தானியாவிற்கு கிடைக்கும் வருமானம் கணக்கிடுவதற்கு மிகவும் சிரமமானது. அது போலவே விலகினால் வரும் பொருளாதார இழப்புக்களும் கணக்கிட மிக மிகச் சிரமமானது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மொத்தப் பொருளாதாரம் சீனாவினது பொருளாதாரத்திலும் பார்க்கப் பெரியதாகும். 53கோடி மக்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் 7.3 விழுக்காடாகும் ஆனால் அதன் மொத்தப் பொருளாதார உற்பத்தி உலக உற்பத்தியின் 24 விழுக்காடாகும். தேசியவாதிகளைத் தூண்டிய வெளியேற்றவாதிகள்
பிரித்தானியா வெளியேற வேண்டும் என்பதற்கு ஆதரவானவர்கள் உலகப் பொருளாதார நெருக்கடிக்கும் பின்னர் 2010-ம் ஆண்டில் இருந்து ஐரோப்பிய நாடுகள் எங்கும் தேசியவாதிகளும் நாஜிகளும் அதிகரித்துள்ளனர். இதைக் கருத்தில் கொண்ட வெளியேற்றவாதிகள் குடிவரவுப் பிரச்சனையை தமது கையில் எடுத்தனர். அது பிரித்தானியத் தேசியவாதிகளையும் புதிய நாஜிகளையும் ஊக்கப்படுத்தியது. விளைவு இருக்கவேண்டும் தரப்பில் உள்ள ஒரு பெண் பாராளமன்ற உறுப்பினரான ஜோ கொக்ஸ் கொல்லப்பட்டார். குடிவரவாளர்களால் ஐக்கிய அமெரிக்கா கனடா ஆகிய நாடுகள் தம் பொருளாதாரத்தை மேம்படுத்தின. ஒஸ்ரேலியா தொடர்ந்து 25 ஆண்டுகளாகப் பொருளாதார வளர்ச்சியைக் கண்டுகொண்டிருக்கின்றது. அமெரிக்காவிற்குப் புகலிடத் தஞ்சம் கோரிச் செல்பவர்களுக்கு உடனேயே வேலை செய்யும் அனுமதி வழங்கப்படுகின்றது. இதனால் அவர்கள் அமெரிக்க சமூகத்துடன் இணைந்து விடுகின்றார்கள். அது அவர்களை தேசப்பற்றாளர்களாக மாற்றுகின்றது. அவர்களுக்கான சமூகநலக் கொடுப்பனவுகளும் செய்யத் தேவையில்லாமல் போகின்றது. ஆனால் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரி வருபவர்கள் வேலை செய்ய அனுமதிக்கப் பல ஆண்டுகள் எடுக்கின்றன. இதனால் அவர்களுக்கு சமூகநலக் கொடுப்பனவுகள் செய்ய வேண்டி இருக்கின்றது. போதிய பணம் கையில் இல்லாததால் அவர்கள் ஏமாற்று வேலைகள், சமூக விரோதச் செயல்கள் போன்றவற்றைச் செய்யத் தூண்டப்படுகின்றார்கள். கிழக்கு ஐரோப்பாவில் இருந்து பலர் பிரித்தானியாவில் வந்து குடியேற்கின்றார்கள் என்ற விவாதம் வெளியேற்றவாதிகளால் முன்வைக்கப் படுகின்றது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்க வேண்டும் என்பதில் அதிக முனைப்புடன் செயற்பட்ட நாடு பிரித்தானியாவாகும். இரசியாவை மனதில் வைத்து பிரித்தானியா அப்படிச் செயற்பட்டது. ஆனால் அதன் விளைவுகளைச் சுமக்க அது தயாராக இல்லையா?
மாறிவிட்டது ஐரோப்பா
ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பிக்கப் பட்ட போது அங்கு ஜேர்மனியின் ஆதிக்கம் நிலவும் என்ற கருத்து பிரித்தானியாவில் இருந்தது. ஜேர்மனியிலும் பிரித்தானியாவிற்கு எதிரான நிலைப்பாடு இருந்தது. 1992 செப்டம்பர் 16-ம் திகதி புதன்கிழமை பிரித்தானியாவின் கறுப்புப் புதன்கிழமையாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. ஜேர்மனியின் சதியால் பிரித்தானிய நாணயம் பெரும் பெறுமதித் தேய்விற்கு உள்ளானது பிரித்தானிய நடுவண் வங்கி 3.4பில்லியன் பவுண்கள் இழப்பீட்டைச் சந்தித்தது. ஆனால் இப்போது ஜேர்மனிக்கு இது போன்ற சதி வேலைகள் ஐரோப்பிய ஒற்றுமைக்கு உதவாது என்ற உண்மை புலப்பட்டுவிட்டது. பிரித்தானியா ஐரோப்பாவில் இருந்து விலகக் கூடாது என்ற கருத்து ஐரோப்பிய நாடுகளில் மேலோங்கி இருக்கின்றது. சதாம் ஹுசேயினிற்கு எதிரான போரின் போது பிரித்தானியா மீது மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வெறுப்பு ஏற்பட்டது. ஆனால் புட்டீன் தலைமியிலான இரசிய மீள் எழுச்சி மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வலுவடையச் செய்து விட்டது. புட்டீனிற்கு எதிரான பிரித்தானியாவின் உறுதியான நிலைப்பாடு மேற்கு ஐரோப்பியர்களை பிரித்தானியாமிது விருப்பமடையச் செய்துவிட்டது. ஜப்பானில் இருந்து அமெரிக்காவரை உள்ள பிரித்தானியாவின் நட்பு நாடுகளின் தலைவர்கள் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வதை விரும்புகின்றனர்.
இறைமை பிரச்சனை
ஐரோப்பிய ஒன்றியம் ஓர் அரசாக உருவெடுக்க வேண்டும் என்ற கருத்து முன்பு இருந்தது ஆனால் அது இப்போது மறைந்து அதிகரித்த அரசியல் ஒன்றியமாக மாறவேண்டும் என்ற கருத்துத்தான் உள்ளது. பிரித்தானியா ஒரு இறைமை உள்ள நாடு என்றபடியால்தான் அது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்கப்பட்டது. இறைமையில்லாத நாடுகள் இணைக்கப்பட மாட்டாது. பிரித்தானியா தனது இறைமையை மற்ற நாடுகளின் இறைமையுடன் இணைது மற்றய நாடுகளின் இறைமையையும் பாதிக்கக் கூடிய வகையில் செயற்படுவது இறைமை இழப்பல்ல இணைப்பு மட்டுமே. ஐரோப்பாவிற்கு என ஒரு பொதுவான வெளியுறவுக் கொள்கையும் பொதுவான படையும் பாதுகாப்புக் கொள்கையும் இருக்க வேண்டும் என்ற கருத்து பிரித்தானியாவின் கடுமையான எதிர்ப்பால் கைவிடப்பட்டது. பிரித்தானிய நீதி மன்றங்களின் தீர்ப்புக்களை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் இரத்துச் செய்தமை பிரித்தானிய நீதித் துறையையும் சட்டத் துறையையும் சேர்ந்த சிலரை அதிருப்திக்கு உள்ளாக்கியது. பெரும்பாலான ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள் அதிக மனிதாபிமான அடிப்படியில் அமைந்திருந்தன. பிரித்தானிய நித்துறையில் முதலாளித்துவச் சிந்தனையின் தாக்கம் உள்ளது என்பதை மறுக்க முடியுமா?
முன்னாள் அசிங்கங்களின் எச்சங்கள்
பிரித்தானியாவில் ஏகாதித்தியவாதிகள் இருந்தனர் என்பதையோ நிறவெறியர்கள் இருந்தார்கள் என்பதையோ இனவாதிகள் இருந்தார்கள் என்பதையோ பிரித்தனியாவில் பேரினவாதிகள் இருந்தார்கள் என்பதையோ மறுக்க முடியாது. இவர்களின் எச்சங்கள் அல்லது தொடர்ச்சிகள் பிரித்தானிய சுதந்திரவாதிகள் என்னும் பெயரில் இப்போது ஐரோப்பிய விரோதக் கொள்கையை முன்வைக்கின்றார்கள் உலகின் மிகப்பெரியாநாடும் உலகின் மூன்றாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நாடும் உலகின் முன்னணிப் படைவலுவைக் கொண்ட நாடுமான இரசியாவின் அச்சுறுத்தலை ஓர் ஒன்றுபட்ட மேற்கு ஐரோப்பாவால் தான் சமாளிக்க முடியும்.
சிறுபான்மை இனங்கள்
இரண்டாம உலகப் போரின்போது ஐரோப்பாவில் இருந்து பிரித்தானியாவிற்கு இடம் பெயர்ந்த யூதர்களால் பிரித்தானியப் பொருளாதாரத்திற்கு நன்மை ஏற்பட்டது. இடி அமீனின் ஆட்சியில் ஆபிக்காவில் இருந்து பிரித்தானியாவிற்கு வந்த ஆசியர்களால் பிரித்தானியப் பொருளாதாரத்திற்கு நன்மை ஏற்பட்டது. பிரித்தானியாவில் உள்ள முன்னணி மருத்துவர்கள் ஈரானிலும் ஈராக்கிலும் இருந்து வந்து குடியேறியவர்கள். தமிழர்கள் போல் பிரித்தானியாவில் வாழும் சிறுபான்மை இனங்களின் நலன் ஐரோப்பிய ஒன்றியத்தில் பாதுகாக்கப் படும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிவது பிரித்தானிய இனவாதிகளுக்கு வெற்றியும் ஊக்கமும் கொடுக்கும். இன்றைய ஐரோப்பிய எதிர்ப்பு நாளை வெளிநாட்டவர்களுக்கு எதிரான எதிர்ப்பாக மாறும். ஆசியர்களும் யூதர்களும் இவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
பிரான்ஸின் விமானம் தாங்கிக் கப்பல் Charles de Gaulle சில நாட்களில் மத்திய தரைக்கடலுக்குச் சென்று ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ எஸ் போராளிகளுக்கு எதிராகத் தாக்குதலில் ஈடுபடும் என்ற வேளையில் பரிஸில் ஆறு இடங்களில் நடந்த தாக்குதல்கள் உலகத்தை உலுப்பியுள்ளது. ஐரோப்பாவில் ஐந்து கோடி இஸ்லாமியர்கள் வாழ்கின்றார்கள். இது ஐரோப்பாவில் இஸ்லாமியர்கள் வெற்றி பெறுவதற்கு அல்லா வழிசெய்வார் என்பதைக் காட்டுகின்றது என்முன்னாள் லிபிய அதிபர் மும்மர் கடாஃபி சொன்னது நினைவிற்கு வருகின்றது.
சிரியாவின் வடக்கிலும் கிழக்கிலும் மற்றும் ஈராக்கின் மேற்கிலும் வடக்கிலும் உள்ள நகங்களில் செயற்பட்டு வந்த ஐ எஸ் என்றும் ஐ எஸ் ஐ எஸ் என்றும் ஐ எஸ் ஐ எல் என்றும் அழைக்கப்பட்டு வந்த இஸ்லாமிய அரசு அமைப்பு தனது செயற்பாட்டை உலகெங்கும் விரிவு படுத்தப் போகின்றதா என்ற அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல பாகங்களிலும் இருந்து 30,000 போராளிகளைத் திரட்டிய ஐ எஸ் அமைப்பு சிரியாவிலும் ஈராக்கிலும் பின்னடைவுகளைச் சந்திக்கும் போது தனது போராளிகளை உலகெங்கும் அனுப்பித் தாக்குதல் செய்ய முடியும்.
ஒட்டுக்கேட்பவர்களை ஏமாற்றினார்கள்
பல்வேறு உளவுத் துறையினர் தம்மை ஒட்டுக் கேட்பார்கள் என்பதை உணர்ந்த ஐ எஸ் தாக்குதலாளிகள் தமது தொடர்பாடல்களை சோனியின் PlayStation 4 ஊடாக தமது தாக்குதல் திட்டங்களைப் பரிமாறிக் கொண்டார்கள். தமக்கு எதிரான உளவாளிகளின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கு அவர்கள் புதுப் புது முறைகளைக் கையாள்கின்றார்கள்.
ஐக்கிய அமெரிக்கா இரண்டு ஆண்டுகளாக ஐ எஸ் போராளிகளுக்கு எதிராகத் தாக்குதல்கள் செய்கின்றது இரசியா தாக்குதல் தொடங்கி இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை அதற்குள் இரசிய விமானம் எகிப்தில் விழுத்தப்பட்டது எப்படி? இது அமெரிக்காவின் சதியா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் சி எஸ் போராளிகளுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் செய்யும் பிரான்ஸின் தலைநகர் பரிஸ் நகரத்தில் ஒரு தாக்குதல் நடந்துள்ளது. சிரியாவில் ஐ எஸ் போராளிகளுக்கு எதிரான தாக்குதலை பிரான்ஸ் 2015-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆரம்பித்தது. அம்ஸ்ரேடம் நகரில் இருந்து பரிஸுக்குச் செல்லும் தொடரூந்தில் ஐ எஸ் போராளி என ஐயப் படும் ஒருவர் குண்டு வைத்ததால் அவர்களுக்கு எதிரான தாக்குதலை பிரான்ஸ் ஆரம்பித்தது.
பரிசின் பயங்கர இரவு 9.20 -கால்பந்தாட்ட அரங்கில் தற்கொடைத் தாக்குதல் - ஒருவர் கொலை. 9-25 - உணவகம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு - 15 பேர் கொலை 9-30 - கால் பந்தாட்ட அரங்கில் தற்கொடைத் தாக்குதல் 9 பேர் கொலை. 9-32 - உணவகம் ஒன்றில் துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொலை, 9-36 - உணவகம் ஒன்றில் துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் கொலை 9-40 - உணவகம் ஒன்றில் தற்கொடைத் தாக்குதல். காயம் மட்டும். 9-40 - இசை அரங்கில் துப்பாக்கிச் சூடும் தற்கொடைத் தாக்குதலும் 89பேர் கொலை 9-53 - கால்பந்தட்ட அரங்கில் தற்கொடைத் தாக்குதல் காயம் மட்டுமேஎ
மொத்தமாக இருபது பேர் தாக்குதலில் சம்பத்தப் பட்டுள்ளார்கள் என நம்பப்படுகின்றது. தாக்குதலாளிகள் எவரும் இதுவரை உயிருடன் பிடிபடாதது அவர்களுக்கு வெற்றியே.தாக்குதலில் மூன்று சகோதரர்கள் சம்பந்தப்பட்டிருந்தனர் அவர்களில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார் என நம்பப்படுகின்றது.
பிரெஞ்சு அதிபரை இலக்கு வைத்தனர்.
1988-ம் ஆண்டு ஸ்கொட்லாந்து நகர் Lockerbieஇல் அமெரிக்க விமானம் 258 பயணிகளுடன் குண்டு வெடிப்பால் தகர்க்கப்பட்டது. 2001-ம் ஆண்டு அமெரிக்க நகர் நியூயோர்க்கில் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலில் 3000 பேர் கொல்லப்பட்டனர். 2004-ம் ஆண்டு ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் நான்கு தொடரூந்துக்களில் ஒரே நேரட்தில் நடந்த குண்டு வெடிப்புக்களில் 191 பேர் கொல்லப்பட்டு 1841பேர் காயப்பட்டனர். 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் இலண்டனில் நான்கு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 42 பேர் கொல்லப்பட்டனர். 2013-ம் ஆண்டு அமெரிக்காவில் பொஸ்டன் மரதன் ஓட்டப் போட்டியில் மூவர் கொல்லப்பட்டனர். இவை எல்லாவற்றிலும் பார்க்க பரிஸில் நடந்த தாக்குதல் மக்களை அதிக அச்சமடைய வைத்துள்ளது. பிரெஞ்சு அதிபர் இருந்த உதைபந்தாட்ட மைதானத்தினுள் தாக்குதல் செய்ய எடுத்த முயற்ச்சி தீவிரவாதிகள் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர் என எண்ணத் தோன்றுகின்றது. மூன்று தடவைகள் மைதானத்திற்குள் நுழைய முயன்ற தற்கொடையாளர்கள் தடுக்கப்பட்டதால் வாசலில் வைத்தே அவர்கள் தமது பட்டிக் குண்டுகளை வெடிக்க வைத்தனர். மைதானத்தினில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுவாக இருந்த படியால் குண்டு வைப்பவர்களால் உள்ளே செல்ல முடியாமல் போனது. அதனால் அவர்கள் வெளியில் குண்டை வெடிக்க வைத்தனர். இலண்டனில் இருந்து வெளிவரும் Financial Times பத்திரிகையில் 2007-ம் இலண்டலில் செய்யப் பட்ட குண்டுவெடிப்பின் போது இலண்டன் மக்கள் கலவரவடையாமல் இருந்ததாகவும் ஆனால் பரிஸ் மக்கள் கலவரமடைந்துள்ளனர் என்றும் எழுதப்பட்டுள்ளது. அத்துடன் பரிஸில் இருந்து எழுதிய கட்டுரையாளர் பரிஸ் ஒரு உன்னதமான நகர் என்றும் தானும் தனது பிள்ளைகளும் அங்கு வாழ்வதை விரும்பியதாகவும் ஆனால் பரிஸ் ஒரு பாதுகாப்பான இடமாக இல்லை எனக் குற்றம் சாட்டுகின்றார். ஆனால் பிரித்தானிய ஊடகங்கள் பிரெஞ்சு மக்கள் மீது சேறு வீசக் கிடைக்கும் சந்தர்ப்பங்களை எப்போதும் நன்கு பயன்படுத்திக் கொள்ளும். 1999-செஸ்னியப் போராளிகள் மொஸ்கோவில் செய்த குண்டுத் தாக்குதலை தொடர்ந்து அவர்களைத் தொலைத்துக் கட்டுவேன் என விளடிமீர் புட்டீன் வெகுண்டு எழுந்தார். இரசியர்கள் கலக்கமடையவில்லை. பிரான்ஸின் உளவுத்துறையின் வலுவின்மையா? பல ஊடகங்கள் பிரான்ஸின் உளவுத் துறையின் மீது குற்றம் சாட்டுகின்றன. ஆனால் ஐரோப்பாவிலேயே அதிக அளவு இஸ்லாமியர்கள் பிரான்ஸில் வாழ்கின்றார்கள். பிரித்தானியா ஒரு தீவாக இருப்பதாலும் அமெரிக்கா மேற்காசியாவில் இருந்து தொலைவில் இருப்பதாலும் தீவிரவாதிகளுக்கு அங்கு நுழைவது சிரமம். பிரான்ஸில் தனிநபர்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு. இருந்தும் இரசியாவில் இருந்து ஏகே-47 துப்பாக்கிகள் பரிஸிற்குக் கடத்தி வரப்பட்டுள்ளன. ஐரோப்பாவிலேயே அதிக அளவு இஸ்லாமியர்களைக் கொண்ட பிரான்ஸில் இருந்துதான் அதிக அளவு போராளிகள் ஐ எஸ்ஸில் இணைந்து கொண்டனர். பிரான்ஸின் படை முகாம்களில் இருந்து ஐ எஸ் போராளிகள் பல வெடிபொருட்களைத் திருடியுள்ளனர். இதில் 200 வெடிக்கவைக்கும் கருவிகள்(detonators) உள்ளடங்கும்.
சதிக் கோட்பாடு அமெரிக்க உளவுத்துறை சிஐஏயின் முன்னாள் இயக்குனர் John Brennan, பிரெஞ்சு உளவுத்துறை DGSE இயக்குனர் Bernard Bajolet, பிரித்தானிய உளவுத்துறை MI6 இன் உயரதிகாரி John Sawers , இஸ்ரேலிய உளவுத்துறை DMIஇன் முன்னாள் இயக்குனரும் இஸ்ரேலின் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான, Yaacov Amidror ஆகியோர் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் 2015 ஒக்டோபர் 27-ம் திகதி மேற்காசியாவின்(மத்திய கிழக்கின்) எதிர்காலம் தொடர்பாக ஒரு மாநாட்டை நடாத்தினர். இந்த இரகசியக் கூட்டம் அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடனின் வதிவிடத்தில் நடந்தது. இந்த இரகசியக் கூட்டத்திற்கும் பரிஸ் தாக்குதலுக்கும் தொடர்பிருக்கலாம் என சில சதிக்கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. இனி மேற்காசியாவில் நடக்க விருக்கும் படை நடவடிக்கைகளுக்கும் இந்தக் கூட்டத்திற்கும் பரிஸ் தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கின்றது என நம்பப்படுகின்றது.பரிஸ் நகரம் பாதுகாக்கப்படுவதாயின் ஐ எஸ் ஒழித்துக் கட்டப்படவேண்டும் என்ற தலைப்பில் நியூயோர்க் ரைம்ஸ்ஸில் வந்த கட்டுரை நடக்கப் போவதற்குக் கட்டியம் கூறுகின்றது.
குடிகெடுத்த குடியேற்ற ஆட்சியாளர்கள் முதலாம்
உலகப் போரின் பின்னர் பிரான்ஸும் பிரித்தானியாவும் The Sykes–Picot
Agreement இன்படி வட ஆபிரிக்க, மேற்காசிய நாடுகளின் எல்லைகளை வகுத்துக்
கொண்டன. அதன் முலாவது நோக்கம் உதுமானையப் பேரரசு போல் இனி ஓர் இஸ்லாமியப் பேரரசு உருவாகக் கூடாது.
கிறிஸ்த்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட
லெபனான் என்ற ஒரு நாடு திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. எகிப்து, லிபி்யா
போன்ற நாடுகளின் எல்லைகள் நேர் கோடுகளாக இருப்பதற்கு இதுதான் காரணம். இனப்
பரம்பலைக் கருத்தில் கொள்ளாமல் தேச எல்லை களை அடிமட்டமும் பென்சிலும்
வைத்து பூகோளப்படத்தில் வரைந்தனர். இது அங்கு பல பிரச்சனைகளை உருவாக்கியது. ஐ எஸ் அமைப்பு அந்த எல்லைகளை மீளமைக்க முயல்கின்றது. ஈழத் தமிழர்கள் தமது ஆட்சிய் உரிமையை இழந்தமைக்கு ஐரோப்பியக் குடியேற்ற ஆட்சியாளர்களைக் குற்றம் சுமத்துகின்றோமோ அத்தனைக்கும் மேலாக பிரான்ஸின் மீது குற்றம் சுமத்த பல இஸ்லாமிய இனக் குழுமங்களுக்கு உரிமை உண்டு. சில இஸ்லாமியர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்த கருத்துக்கள்:-
"God is great and thank God for these lone wolf attacks. At least 100 hostages and countless wounded."
"Oh God, burn Paris as you burned the Muslims in Mali, Africa, Iraq, Syria, and Palestine."
பல ஐ எஸ் ஆதரவாளர்கள் அடுத்தது பிரித்தானியா என்றுக் கருத்து வெளியிட்டுள்ளனர். பின் விளைவுகள் பரிஸில் நவமபர் 30-ம் திகதி முதல் நடக்கவிருக்கும் உலகத்தலைவர்கள் பங்கு கொள்ளும் உலகச் சூழல் தொடர்பான மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும். 2016-ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளிடையிலான கால்பந்தாட்டப் போட்டி பிரான்சில் நடக்கவிருக்கின்றது. பரிஸ் தாக்குதலால் முதலில் பாதிக்கப்படுவது ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிவரவுக் கொள்கையே. தாக்குதலாளிகளுள் ஒருவர் சிரியாவில் இருந்து புகலிடத் தஞ்சம் கோருபவராக வந்தவர் என நம்பப்படுகின்றது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள தேசியவாதக் கட்சிகளிற்கான ஆதரவு அதிகரிக்கும். நேட்டோவின் உறுப்பு நாடான பிரான்ஸின் மீது நடந்த தாக்குதலை மற்ற 27 நேட்டொ நாடுகளும் தம்மீது நடந்த தாக்குதல் போல் கருதிச் செயற்பட வேண்டும். பிரான்ஸிற்கு அவை இனி முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இது நேட்டோ உடன்படிக்கையின் முக்கிய அம்சம். நேட்டோவின் உறுப்பு நாடான துருக்கி இதுவரை காலமும் ஐ எஸ் போராளிகளுக்கு மறை முகமாக உதவி வந்தது. அதில் இணைவதற்கு போராளிகள் உலகெங்கிலும் இருந்து துருக்கி ஊடாகவே செல்கின்றனர். சிரியாவில் உள்ள ஐ எஸ் போராளிகள் மீது தாக்குதல் செய்ய துருக்கி ஒத்துழைக்கத் தயக்கம் காட்டி வந்தது. இனி அது முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். சிரியாவில் உள்ள ஐ எஸ் போராளிகளின் மீது தாக்குதல் நடத்த பிரித்தானியா தயக்கம் காட்டியது. அதற்கான அனுமதி பிரித்தானியப் பாராளமன்றத்தில் கிடைக்காது என பிரித்தானிய வெளியுறவுத் துறை கணிப்பிட்டது. அதனால் அந்த முன்மொழிவு பாராளமன்றத்தில் சமர்ப்பிக்கப் படவில்லை. ஏற்கனவே நேட்டோ உடன்படைக்கையைப் பிரித்தானியப் பாராளமன்றம் ஏற்றுக் கொண்டபடியால் பிரித்தனியப் பாராளமன்றத்தின் சம்மதம் பெறாமல் பிரித்தானியாவால் சிரியாவில் உள்ள ஐ எஸ் போராளிகள் மீது தாக்குதல் செய்ய முடியும்.மேற்கு ஐரோப்பிய நாடுகள் தமது பாதுகாப்புக்கான செலவுகளையும் உளவுச் செலவுகளையும் அதிகாரிக்க வேண்டியிருக்கும். இத்துடன் போர் மூளக்கூடய அபாயமும் அதிகரித்திருப்பதால் உலகப் பொருளாதாரம் பாதிப்படையும். பங்கு விலை வீழ்ச்சி, நாணயங்கள் மதிப்பிழத்தல், தங்கம் விலை ஏறுவது போன்றவை நடக்கலாம். ஐ எஸ்ஸின் முடிவின் ஆரம்பமா? சிரிய அரசு, அமெரிக்கா உட்பட்ட 28 நேட்டோ நாடுகள், இரசியா, ஈரான், ஹிஸ்புல்லா அமைப்பு, குர்திஷ் போராளிகள், யதீஷியர்கள் இப்படி பலதரப்பட்ட எதிரிகள் மத்தியில் ஐ எஸ் போராளிகளால் எத்தனை நாட்கள் தாக்குப் பிடிக்க முடியும்?