அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்னும் போர்வையில் செய்யும்
அட்டூழியங்களால் மோசமான உள்நாட்டுப் போருக்குள் அகப்பட்டிருக்கும் ஈராக்,
சிரியா, யேமன், லிபியா ஆகிய நாடுகளால் அமைதி குலைந்து போன மேற்காசிய
மற்றும் வட ஆபிரிக்க நாடுகள் ஒருபுறம், புட்டீன் தலைமையில் மீள்
எழுச்சியுற்று உக்ரேனின் ஒரு பகுதியாக இருந்த கிறிமியாவைத் தன்னுடன் இணைத்த
இரசியா மீண்டும் தம்மை ஆக்கிரமிக்குமா என அச்ச முற்றிருக்கும் கிழக்கு
ஐரோப்பிய நாடுகள் மறுபுறம் பிராந்திய ஆதிக்கத்தையும் விரிவாக்கத்தையும்
கருத்தில் கொண்டு செயற்படும் சீனாவால் அச்சமுற்றிருக்கும் ஆசியநாடுகள்
இன்னொரு புறம் என உலகம் ஒரு சீரற்ற அரசியல் மற்றும் பொருளாதாரச்
சிக்கல்களில் மாட்டியிருக்கின்றது. இது போதாது என வெள்ளைத் தேசியவாதம்
ஐக்கிய அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தலைதூக்கியுள்ளது. 2008-ம் ஆண்டில்
உருவான உலகப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வழிதெரியாமல் பல நாடுகள்
தடுமாறிக்கொண்டே இருக்கின்றன.
பொருளாதாரத் தாராண்மை வாதமும் அரசியற் தாராண்மை வாதமும்
பொருளாதாரத்
தாராண்மை வாதம் என்பது பொருளாதார நடவடிக்கைகளை பொதுமக்களே தீர்மானிப்பது.
அவர்களின் தேவைக்கும் வலிமைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப நாட்டின்
பொருளாதாரம் செயற்படும். இது கோட்பாடு மட்டுமே. நடைமுறையில் இப்படி
முழுமையாக நடப்பதில்லை. அரசியற் தாராண்மைவாதம் என்பது தனிநபரின்
உரிமைகளுக்கும் பாதுகாப்பிற்கும் அரசு உத்தரவாதமளிக்க வேண்டும் என்ற
கொள்கையுடையது. அது மதசார்ப்பற்றது. 2008-ம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதார
நெருக்கடியின் பின்னர் அரசியற் தாராண்மைவாதம் மேற்கு நாடுகள் என
அழைக்கப்படும் வட அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் செல்வாக்கிழக்கத்
தொடங்கியுள்ளது. இதன் முதல் அறிகுறி குடிவரவுகளுக்கு எதிரான
ஆர்ப்பாட்டங்களாக வெளிப்பட்டது. பின்னர் பிரித்தானியா ஐரோப்பிய
ஒன்றியத்தில் இருந்து வெளியமையும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட்
டிரம்பின் வெற்றி பெற்றமையும் அரசியற் தாராண்மைவாதம்
நெருக்கடிக்குள்ளாகியிருப்பதை உறுதி செய்தது. ஏற்கனவே
பழமைவாதிகளான நரேந்திர மோடியும் சின்சே அபேயும் இந்தியாவிலும்
ஜப்பானிலும் ஆட்சிக்கு வந்திருந்தனர். 2017-ம் ஆண்டில் பிரான்சிலும்
ஜேர்மனியிலும் நடக்கவிருக்கும் தேர்தலை அரசியற் தாராண்மைவாதிகள்
அச்சத்துடன் எதிர் கொண்டுள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற
டொனால்ட் டிரம்ப் பொருளியற் பாதுகாப்புக் கொள்கையை தனது தேர்தல்
பரப்புரையின் போது முன்வைத்ததுடன் சீனாவுடனான வர்த்தகத்தை மீள் பரிசீலனை
செய்வேன் எனவும் அமெரிக்கா செய்த மற்றும் செய்ய முயலும் வர்த்தக
உடன்படிக்கைகளை இரத்துச் செய்வேன் எனவும் சூளுரைத்திருந்தார். இது
பொருளாதாரத் தாராண்மைவாதத்திற்கு பேரிடியாக விழுந்தது. உலகமயமாதல்
அமெரிக்கப் பெருமுதலாளிக்கு மட்டுமே நன்மையளித்தது அமெரிக்காவின் சாதாரணக்
குடிமக்களுக்கு அல்ல என்ற எண்ணம் அமெரிக்காவில் மட்டுமல்ல மற்ற
வளர்ச்சியடைந்த நாடுகளிலும் வலுப்பெறுவது பொருளாதாரத் தாராண்மைவாதிகளைச்
சிந்திக்க வைத்துள்ளது. நாடுகளிடையேயான வர்த்தகம் இன்றி பொருளாதார செழிப்பு
சாத்தியமாக மாட்டாது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக
வேண்டும் என்ற முடிவு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் முடிவு செய்த
பின்னர் பிரித்தானியத் தலைமை அமைச்சர் எந்த எந்த நாடுகளுடன் வர்த்தகத்தை
மேம்படுத்தலாம் என்பதிலேயே அதிக கவனம் செலுத்தினார். அவரது இந்தியப்
பயணமும் அந்த நோக்கத்துடனேயே மேற்கொள்ளப்பட்டது.
விலக விரும்பும் மேற்குலக மக்கள்
சிரியாவில்
படைத்துறை ரீதியான தலையீட்டை பிரித்தானியாவினதும் ஐக்கிய அமெரிக்காவினதும்
பாராளமன்றங்கள் நிராகரித்த போதே மேற்கு நாட்டு மக்கள் தமது நாட்டு அரசும்
படைகளும் மற்ற நாட்டு விவகாரங்களில் தலையிட்டு பணத்தையும் உயிர்களையும்
வீணடிக்கக் கூடாது என்ற எண்ணம் அவர்களிடையே அதிகரிக்கத் தொடங்கியது.
அதைத்தான் டொனால்ட் டிரம்ப் தேர்தலில் தனது கொள்கையாக முன்வைத்தார்.
கிறிமியாவை இரசியா ஆக்கிரமித்த போது அதற்கு எதிராக தாக்குதல் தொடுக்க
உக்ரேன் ஆதரவு வேண்டியபோது நேட்டோ நாடுகள் அதற்கு ஆதரவு கொடுக்காமல்
இரசியாவுடன் மோத வேண்டாம் என உக்ரேனுக்கு அறிவுறுத்தலும் விடுத்தது. பல
படைத்துறை நிபுணர்கள் உலக அரங்கில் அமெரிக்காவின் ஆதிக்கம் குறைந்து விட்டதா என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டிருக்கையில் இரசியா அதிரடியாக சிரியாவில் தலையிட்டு அங்கு அதிபர் அல் அசாத்தின்
ஆட்சியை அசைக்க முடியாமல் செய்துவிட்டது. யேமனில் உள்நாட்டுப் போர்
மோசமடைந்த போது உனது பிராந்தியம் உனது பொறுப்பு உனது படையினரே பார்த்துக்
கொள்ளட்டும் என சவுதி அரேபியாவிடம் ஐக்கிய அமெரிக்கா சொல்லிவிட்டு தான்
தொழில்நுட்ப உதவிகளையும் நிபுணத்துவ ஆலோசனையையும் வழங்கியது. இரண்டாம்
உலகப் போரின் பின்னர் அமெரிக்கா தனக்குத் தானே வழங்கிக் கொண்ட உலகத்
தலைமைப் பதவி உலகிற்கும் நன்மையைக் கொண்டு வரவில்லை என்பது உறுதி.
அமெரிக்காவிற்கும் நன்மையைக் கொண்டு வரவில்லை என அமெரிக்க மக்களும் கருதத்
தொடங்கிவிட்டனர்.
மேற்காசியாவும் வட ஆபிரிக்காவும்
சவுதி
அரேபிய அரசின் ஆதரவுடன் அமெரிக்கா சென்று படித்த இலட்சக் கணக்கான இளையோர்
இப்போது சவுதி அரேபியாவில் வேலை இன்றி இருக்கின்றார்கள். பொறியியல்
படித்தவர் வாடகைக் கார் ஓட்டுனராக வேலை செய்ய வேண்டிய நிலை தோன்றியுள்ளது.
பல சவுதி செல்வந்தர்கள் தமது பெரு நிதிகளை வெளிநாடுகளுக்கு
மாற்றுகின்றார்கள். எரிபொருள் உற்பத்தியில் மட்டுமல்ல மற்றப் பல
துறைகளிலும் உற்பத்தி விழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட மோசமான
பொருளாதார நிலையில் சவுதி அரேபியா இருக்கின்றது. அதனால் மேற்காசியாவில் ஒரு
பிராந்தியத்திற்குத் தலைமை தாங்கிச் செல்லும் ஆற்றல் இல்லை. டொனால்ட்
டிரம்ப்பிற்கு முன்னரே அமெரிக்கா மேற்காசியாவில் தனது எரிபொருள் தேவைக்குத்
தங்கியிருக்காத நிலையில் அங்கு அதிக அக்கறை செலுத்துவதைக் குறைக்க
வேண்டும் என்ற எண்ணம் அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில்
உருவாகிவிட்டது. சிரியாவிலும் ஈராக்கிலும் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் போர்கள்
முடிவுக்கு வந்தாலும் அவற்றால் பல்வேறு இனங்களுக்குள் ஏற்பட்டுள்ள பகைமை
இன்னும் பல ஆண்டுகளுக்கு அங்கு குழப்ப நிலையை அடிக்கடி உருவக்கிக்
கொண்டிருக்கும். ஈரானுக்கும் சவுதி அரேபிய ஆட்சியாளர்களுக்கும் இடையிலான
ஆதிக்கப் போட்டி மேற்காசியாவில் மேலும் பல இரத்தக் களரிகளை ஏற்படுத்தலாம்.
இடைவெளியால் குழப்பம்
2016-ம் ஆண்டு உலகப் பொருளாதார உற்பத்தியில் சீனாவின் பங்கு 15
விழுக்காடு. மொத்த ஆசிய நாடுகளின் பங்கு 31விழுக்காடு. அமெரிக்காவினதும்
ஐரோப்பிய ஒன்றியத்தினதும் பங்கு 47 விழுக்காடு. இறக்குமதி என்று
பார்ப்போமானால் உலக இறக்குமதியில் சீனாவின் பங்கு 12 விழுக்காடாகவும் மொத்த
ஆசியாவின் பங்கு 36 விழுக்காடாகவும் அமெரிக்காவினதும் ஐரோப்பிய
ஒன்றியத்தினதும் பங்கு (ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையேயான வர்த்தகத்தை
விட்டுப் பார்த்தால்) 31 விழுக்காடாகவும் இருக்கின்றன. இந்தத் தரவுகள்
இன்னும் உலகப் பொருளாதாரத்தில் மேற்கு நாடுகளின் ஆதிக்கம் அதிக்மாக
இருப்பதைக் காட்டுகின்றது. இந்தப் பின்னணியில் உலகமயமாதல் பின்னடைவைச்
சந்தித்து தாராண்மை அரசியல்வாதமும் தாராண்மை பொருளாதாரவாதமும் உலக அரங்கில்
தோல்வியடையும் போது ஏற்படும் ஒரு இடைவெளி உலக அரங்கில் ஒரு குழப்ப நிலையை
ஏற்படுத்த வாய்ப்புண்டு. அமெரிக்கா உலக விவகாரங்களில் இருந்தும்
நாடுகளிடையேயான சுதந்திர வர்த்தகத்தில் இருந்தும் பின்வாங்கும் போது
ஏற்படும் இடைவெளி உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் இடைவெளியை மற்ற நாடுகள்
எப்படி நிரப்பப் போகின்றன?
வரப்போகின்றன தீவிர மாற்றங்கள்
இரசியா
2020இல் தனது படைத்துறையை நவீனமயப்படுத்தி முடித்துவிடும் என்கின்றது.
சீனா 2030இல் படைத்துறை வலுவில் அமெரிக்காவை மிஞ்சும் திட்டத்துடன்
இருக்கின்றது. 2070இல் உலகில் இஸ்லாமியர்களின் மொத்த மக்கள் தொகை
கிறிஸ்த்தவர்களின் தொகையை மிஞ்சி விடும் என எதிர் பார்க்கப் படுகின்றது.
இந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகம் வேறு விதமாக இருக்கப் போகின்றது.
உலக சூழல் பாதுகாப்பு, உலக நீர்த் தட்டுப்பாடு, மத சகிப்புத் தன்மையின்மை,
பெண்ணடிமை, விடுதலைக்கு ஏங்கும் பல இனங்கள், ஆகியவற்றிற்கு மத்தியில் உலக
நாடுகளை வழிநடத்த பொருளாதார ரீதியிலும் தத்துவார்த்த ரீதியிலும் சிறந்து
விளங்கும் ஒரு நாடு அல்லது நாடுகளின் கூட்டமைப்பு இப்போது அவசியம்
தேவையாகின்றது.
இரசியா உலகை வழி நடத்துமா?
குறைந்து செல்லும் மக்கள் தொகையும் சரிந்து போய் இருக்கும் எரிபொருள் விலையும் ஊழல் நிறைந்த ஆட்சியும் அளவிற்கு மிஞ்சிய
அதிகாரம் கொண்ட தலைமையும் இரசியாவிற்கு உகந்தவை அல்ல.
சோவியத் ஒன்றியம் எப்படி மிதமிஞ்சிய படைத்துறைச் செலவால் சீரழிந்ததோ
அதேபோல் தனது பொருளாதார வலுவிற்கு மிஞ்சிய நடவடிக்கைகளில் இரசியா தற்போது
ஈடுபட்டுள்ளது. வெறும் அமெரிக்கப் பூச்சாண்டியை தனது மக்களுக்குப் போதித்து
அதை தான் அடக்குவது போலவும் காட்டிக் கொண்டு இரசிய மக்களிடம் செல்வாக்குப்
பெற்றிருக்கும் விளடிமீர் புட்டீனிடம் இரசிய மக்கள் அமெரிக்காவை
விட்டுத்தள்ளு எங்களுக்கான செழுமையான வாழ்க்கை எங்கே எனக் கேட்கும் காலம்
புட்டீனின் வாழ்நாளில் ஏற்படும். ஏற்கனவே உலகை பொதுவுடமைத் தத்துவ
அடிப்படையில் நடத்த முற்பட்டு பொதுவுடமைத் தத்துவத்திற்கே களங்கம்
ஏற்படுத்தியது இரசியா. நிலப்பரப்பு ரீதியிலும் தொழில்நுட்ப ரீதியிலும்
உலகில் முன்னணி நாடாக இருக்கும் இரசியா மற்ற நாடுகளை வழிநடத்துவதில்
சிறந்து விளங்கியதில்லை. விளங்கப் போவதுமில்லை.
உலகை இந்தியா வழிநடத்துமா?
இளையோரை
அதிகம் கொண்ட சிறந்த மக்கள் தொகைக் கட்டமைப்பு, வேகமாக வளரும்
தொழில்நுட்பம் ஏழு விழுக்காடு வளரும் பொருளாதாரம், மேம்பட்டுவரும்
கல்வியறிவு ஆகியவை இருந்தும் உலக மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய
தத்துவார்த்த தலைமை இந்தியாவிடம் இல்லை. பெண்ணடிமையும் சாதிவாதமும்
இந்தியாவின் கேவலமான அம்சங்களாகும். பிராந்தியங்களுக்கு இடையிலான
ஒற்றுமையின்மையும் மோசமாகிவரும் மதங்களுக்கு இடையிலான உறவும் மோசமாகிக்
கொண்டு வரும் நீர்த்தட்டுப்பாடும் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிதும்
பாதகமாக இருக்கின்றன. நேர்மையும் திறமையும் ஒன்றிணைந்த தலைமை இல்லாமையும்
குடும்பநலவாதமும் இந்தியாவின் உலகத் தலைமைப் பண்பிற்கு உகந்ததல்ல.
சீனா சிறக்குமா?
உறுதியான
ஆட்சி திடமான பொருளாதாரம் ஆளுமை மிக்க தலைமை ஆகியவை இருந்தும் சீனா
உலகிற்குத் தலைமை தாங்கத் தயாரான நிலையில் இல்லை. சீனாவின் உட்கட்டுமான
அரசுறவியல் சில நாடுகளின் அயோக்கிய ஆட்சியாளர்களுக்கே முண்டு
கொடுக்கின்றது. சீனக் கலாச்சாரத்திலும் பெண்ணடிமை பின்னிப் பிணைந்துள்ளது.
அயல் நாடுகளுடனான மிரட்டல் அணுகு முறை சீனாவிற்கு ஒரு பிராந்தியத் தலைமைக்கு உரிய தகமையையயே இல்லாமற் செய்துவிட்டது.
தற்போதைய உலகச் சூழ்நிலைக்கு ஏற்ப தாடிக் கிழவனின் தத்துவத்திற்கு மீள் வடிவம் கொடுக்கும் நிலை வருமா?
Thursday, 1 December 2016
Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...