Thursday, 31 December 2015

2015இல் உலகம் ஒரு மீள் பார்வை

தொடரும் பொருளாதாரப் பிரச்சனை, சிரியா, ஈராக், லிபியா ஆகிய நாடுகளில் உள்நாட்டுப் போர், காசா இரத்தக் களரி, அடங்க மறுக்கும் பலஸ்த்தீனம், ஆதிக்க வெறி கொண்ட இஸ்ரேல், உக்ரேனில் வல்லரசுகளின் முறுகல் நிலை, தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக்கடலிலும் மோதல் நிலை, தொடரும் படைக்கலன்கள் பெருக்கும் போட்டி ஆகியவற்றுடன் 2015-ம் ஆண்டு ஆரம்பமானது. இப் பிரச்சனைகள் யாவும் தீர்க்கப்படாமல் மோசாமாகிக் கொண்டே போகின்றது. உலகப் பொருளாதாரம் தொடர்ந்தும் தீவிர கவனிப்புப் பிரிவிலேயே இருக்கின்றது.

 புட்டீனின் ஆண்டு
2015-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, சீன அதிபர் ஜி ஜின்பிங், ஜேர்மனிய அதிபர் அஞ்சேலா மெர்கெல் ஆகியோரின் பெயர்கள் உலகச் செய்திகளில் அதிகம்  அடிபட்டாலும் கதாநாயகனாகவும் வில்லனாகவும் அதிகம் பார்க்கப் பட்டவர் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன்தான். உள்நாட்டில் எதிர்க்க ஆளில்லாத விளடிமீர் புட்டீனின் செல்வாக்கு பல பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு மத்தியிலும் உச்சத்தில் இருக்கின்றது. நான்கு ஆண்டுகளுக்கு மேல் தொடரும் சிரியப் பிரச்சனையில் அதிபர் அல் அசாத்தின் படைகள் ஆட்டம் காணும் நிலையில் புட்டீன் அதிரடியாக இரசியப் படைகளை அங்கு களமிறக்கி நிலைமையை தலைகீழாக்கினார். இரசியாவின் செய்மதிகளில் பத்துக்கு மேற்பட்டவை தற்போது சிரியாவைக் குறிவைத்துச் செயற்படுகின்றன. செய்மதிகளின் உதவியுடன் துல்லியமாகத் தாக்கும் வழிகாட்டல் குண்டுகள் சகிதம் எப்படி புதிய போர் முறைகளைக் கையாள்வது என்பதில் இரசியப் படைகள் நேரடிப் பயிற்ச்சியில் சிரியாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இரசியாவின் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையும் சிரியாவில் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எல்லாம் உலக அரங்கில் இரசியா இழந்த நிலையை மீளப் பெறுவதற்கே என்கின்றார் புட்டீன்.

படைத்துறைப் போட்டி ஆண்டு
2008-ம் ஆண்டில் இருந்து உலகின் முன்னணி நாடுகள் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த போதிலும் அவை பேரழிவு விளைவிக்கக் கூடிய படைக்கலன்களை உற்பத்தி செய்வதை நிறுத்தவில்லை. ஐக்கிய அமெரிக்காவின் விமானம் தாங்கிகளிற்குச் சவால் விடக் கூடியவகையில் சீனா தனது நீர் மூழ்கிக் கப்பல்களை மேம்படுதியது. பதிலாக அமெரிக்கா நீர் மூழ்கிகளை வேட்டையாடக் கூடிய விமானங்களையும் உழங்கு வானூர்திகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. சீனா ஒலியி்லும் பார்க்க பன்மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணைகளை உருவாக்க அவற்றை அழிக்கக்கூடிய லேசர் படைக்கலன்களை உருவாக்குகின்றது.

எரிபொருளின் ஆண்டு

உலகப் பொருளாதாரத்தில் மட்டுமல்ல உலகெங்கும் புவிசார் அரசியலிலும் 2015-ம் ஆண்டில் பெரும் மாற்றத்தை எரிபொருள் விலையே ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியா உலக எரிபொருள் வீழ்ச்சியை இரு முனைக் கத்தியாகப் பயன்படுத்துகின்றது. ஒரு முனையால் அது பல எரிபொருள் உற்பத்தி நிலையங்களை முக்கியமாக ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளின் ஷெல் எரியாவு உற்பத்தி நிலையங்களை மூட வைக்கப் பார்க்கின்றது. மறுமுனையால் சியா முஸ்லிம்களுடன் கை கோர்த்த இரசியாவைப் பழிவாங்கப் பார்க்கின்றது. இரசியாவுடன் ஒப்பிடுகையில் சவுதி அரேபியாவின் எரிபொருள் உற்பத்திச் செலவு மிகவும் குறைந்ததாகும். இதனால் சவுதி அரேபியா தனது எரிபொருள்  உற்பத்தியைக் குறைக்க மறுக்கின்றது.  சவுதி அரேபியாவிடம் இருக்கும் 750பில்லியன் டொலர் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு அதை இன்னும் சில ஆண்டுகள் அதை எரிபொருள் விலை வீழ்ச்சியில் இருந்து பாதுகாக்கும். இரசிய அரசு தனது பாதீட்டை மசகு எண்ணெய் விலை நூறு டொலர்கள் என்ற எதிர் பார்ப்புடன் 2014இல் திட்டமிட்டது. 2015இல் அது ஐம்பது டொலர்களாகக் குறைக்கப் பட்ட வேளையில் மசகு எண்ணெய் விலை நாற்பதிலும் குறைந்தது. குறைந்த எரிபொருள் விலை உலகப் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டவில்லை. மாறாக எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளின் பொருளாதாரத்தைப் பாதித்துக் கொண்டிருக்கின்றது. அவற்றுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதிக்கின்றது.

குடிவரவுப் பிரச்சனையின் ஆண்டு - சிறுவன் அயிலன் குர்தி
2015-ம் ஆண்டில் பல நாடுகளில் குடிவரவுப் பிரச்சனை மோசமாக இருந்தது. ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தும்  சிக்கன நடவடிக்கைகள் 2015-ம் ஆண்டு ஒரு குழப்பத்தை உருவாக்கி அதை சின்னா பின்னப் படுத்தும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அரசியல் தஞ்சம் கோரி சிரியாவில் இருந்து வருபவர்களை அனுமதிப்பது தொடர்பான ஒரு பொதுவான குடிவரகுக் கொள்கையை வகுப்பதால் தற்போது அதிக பிளவை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தினுள் இப்போது ஏற்படுத்தியுள்ளது. 40இலட்சம் சிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள். . 1800 பேர் சிரியாவை விட்டு வெளியேறும் முயற்ச்சியில் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அவர்களின் அவலம் துருக்கிக் கடலோரம் ஒதுங்கிய இரண்டு வயதுச் சிறுவன் அயிலன் மூலம் உலகின் பார்வைக்கு உட்படுத்தப் பட்டது. மேற்காசியாவில் நடக்கும் உள்நாட்டுக் குழப்பங்களின் மூலம் 19-நூற்றாண்டில் ஏற்படுத்தப் பட்ட ஐரோப்பிய அரசுகளின் குடியேற்ற ஆட்சிகளேயாகும். அவர்கள் உருவாக்கிய பிரச்சனை தஞ்சம் கோருவோர் என்றும் தீவிரவாதத் தாக்குதல்கள் செய்வோர் என்றும்  அவர்களை நோக்கி 2015-ம் ஆண்டு சென்றன. 2015-ம் ஆண்டு பிரான்ஸில் இரு தடவை தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்தன. டென்மார்க்கிலும் ஒரு தாக்குதல் பெப்ரவரி மாதம் நடந்தது.

ஐ எஸ் அமைப்பின் ஆண்டு
பெய்ரூ லெபனானிலும் பிரான்ஸிலும் குண்டுத் தாக்குதல்கள்,  எகிப்தில் இரசிய விமானம் குண்டு வைத்துத் தகர்ப்பு, டென்மார்கிலும், கலிபோர்ணியாவிலும் துப்பாகிச் சூட்டுத் தாக்குதல், எகிப்தில் இரசிய விமானத்தைக் குண்டு வைத்துத் தகர்த்தமை என பல செய்திகள் மூலம் உலக அரங்கில் அதிகம் பேசப்பட்ட அமைப்பு ஐ எஸ் அமைப்பே. நைஜீரிவில் செயற்படும் பொக்கோ கரம் அமைப்பும்  சோமாலியாவில் செயற்படும் அல் ஷபாப் அமைப்பும் அல் கெய்தாவிடம் இருந்து விலகி ஐ எஸ் அமைப்பினருடன் தமது உறவுகளை அதிகரித்துக் கொண்டன. அமெரிக்கா 19 மாதங்களாகவும் இரசியா 3 மாதங்களாகவும் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக நடத்தும் விமானத் தாக்குதல்கள் அவர்களை இன்னும் அடக்கவில்லை.

சீனா பொருளாதாரத்தின் ஆண்டு
2015இல் சீனா பல பொருளாதாரப் பிரச்சனைகளைகளை எதிர் கொண்டது. அதன் வளர்ச்சி வேகம் குறைந்தது. அதன் பங்கு சந்தையும் நாணய மதிப்பும் வீழ்ச்சி கண்டன. இரண்டையும் சீனா சமாளித்துக் கொண்டது. சீன நாணயம் பன்னாட்டு நாணய நிதியத்தின் Special Drawing Rights இன் பெறுமதியைத் தீர்மானிக்கும் நாணயங்களில் ஒன்றாக 2016-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இணைத்துக் கொள்ள ஒத்துக் கொள்ளப் பட்டது.

கோடுகள் அழிக்கப் பட்ட ஆண்டு
முதலாம் உலகப் போரின் பின்னர் இனி ஒரு இசுலாமியப் பேரரசு உருவாகக் கூடாது என்ற நோக்கத்துடன் பிரான்ஸும் ஐக்கிய இராச்சியமும் ஒன்றிணைந்து மத்திய கிழக்கில் சிரியா, ஈராக், லிபியா, லெபனான் போன்ற நாடுகளின் எல்லைகளை வகுத்துக் கொண்டன. Sykes-Picot எல்லைகள் எனப்படும் கோடுகளை ஏற்கனவே 2014-ம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் எனப்படும் இசுலாமிய அரசு என்னும் அமைப்பும் குர்திஷ் மக்களின் பெஷ்மேர்கா அமைப்பும் அழித்து விட்டன. இப்போது சிரியாவின் மூன்றில் இரண்டு பகுதியையும் ஈராக்கின் மூன்றில் ஒரு பகுதியையும் இணைத்து ஐ எஸ் அமைப்பு ஒரு நாட்டை உருவாக்கியுள்ளது. நூறாண்டுகளாகப் போராடிவரும் குர்திஷ் மக்கள் ஈராக்கிலும் சிரியாவிலும் தமக்கென ஒரு கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை வைத்துள்ளார்கள்.

இந்தியா பயன்படுத்தத் தவறிய ஆண்டு
உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை,மூன்றாவது பெரிய பொருளாதாரம், உலகிலேயே வேகமாக வளரப் போகும் பொருளாதாரம், உலகிலேயே அதிக அளவு மத்திய தர வர்க்கம், உலகிலேயே அதிக அளவு படைக்கலன் கொள்வனவு, 2020-ம் ஆண்டு  உலகிலேயே மிக இளமையான சராசரி மக்கள் தொகைக்கட்டமைப்பு ஆகியன உலக அரங்கில் இந்தியாவின் கவர்ச்சிகரமான அம்சங்களாகும். இந்தியாவிற்கு ஜப்பானியத் தலைமை அமைச்சர் சினே அபே, சீன அதிபர் ஜீ சின்பிங் ஆகியோர் மேற்கொண்ட பயணங்களைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் இந்தியா சென்றார். மற்ற இருவர்களின் பயணத்துடன் ஒப்பிடுகையில் ஒபாமாவின் பயணம் அதிக முக்கியத்துவம் பெற்றதாகும். இந்தியாவின் குடியரசு தின விழாவில் ஒபாமாவும் பங்கேற்றது மிக முக்கியமானது என உலகெங்கும் உள்ள ஊடகங்கள் தெரிவித்தன.  ஒபாமாவின் இந்தியப் பயணம் இரு நாட்டுகளிடையான உறவில் ஒரு திருப்பு முனை என்றனர் அரசியல் விமர்சகர்கள். உலகின் பல வளர்ச்சியடைந்த நாடுகளும் சீனாவும் மக்கள் தொகையில் இளையோர் குறைவாகவும் முதியோர் அதிகமாக இருக்கின்றது. ஆனால் இந்தியாவில் இளையோர் தொகை அதிகமாக இருக்கின்றது. இந்தியாவில் உள்ள இளையோர் தொகையைச் சரியான முறையில் பயன்படுதப் படவில்லை. இந்தியத் தொழிலாளர்களில் 5 விழுக்காட்டினர் மட்டுமே முறையான தொழிற்பயிற்ச்சி பெற்றவர்களாக இருக்கின்றார்கள்..

ஆட்சி மாற்ற ஆண்டு

இலங்கையிலும் பர்மாவிலும் ஆட்சிமாற்றங்களைப் புவிசார் அரசியல் காரணிகளும் பிராந்திய ஆதிக்கப் போட்டிகளும் தீர்மானித்தன. ஆட்சிகள் மாறின ஆனால் காட்சிகள் மாறவில்லை. துருக்கியில் தேர்தல் ஏற்கனவே இருந்த ஆட்சியை உறுதி செய்தது. வெனிசுவேலாவிலும் ஒரு தேர்தல் நடந்தது. ஆட்சியாளர்களுக்கு எதிராகப் பாராளமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்தன. நைஜீரியாவில் தீவிரவாதத்தில் இருந்து மக்களைப் பாதுக்க வேண்டி மக்கள் வாக்களித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுதினர்.

பலஸ்த்தீனியர்கள் போராட்ட முறையை மாற்றிய ஆண்டு
பலஸ்த்தீனிய மக்கள் தமது போராட்டத்தை கத்திக் குத்து, துப்பாக்கிச் சூடு, கார்களாள் யூதர்களை மோதுதல் என தமது போராட்டத்தை மாற்றிக் கொண்டனர். அதேவேளை பலஸ்த்தீனிய அதிகார சபை பன்னாட்டு நீதிமன்றத்திலும் இணைந்து கொண்டது. 

volkswagen மகிழூர்த்தி உற்பத்தி நிறுவனத்தின் களவு அம்பலமான ஆண்டு. தமிழ்நாட்டில் பெரும் வெள்ளம் ஏற்படுத்திய ஆண்டு. நேப்பாளம் தன்னை ஒரு இந்துக் குடியரசு அல்ல எனப் பிரகடனப் படுதிய ஆண்டு. உலக நாடுகள் சூழல் பாதுகாப்புத் தொடர்பாக ஓர் உடன்பாட்டிற்கு வந்த ஆண்டு.
சீனாவும் தாய்வானும் ஈர் அரசுகள் ஒரு நாடு என உணர்ந்து கொண்ட ஆண்டு. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இலங்கைக்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா ஜெனிவா மனித உரிமைக்கழகத்தில் கடைசித் தீர்மானம் கொண்டு வந்த ஆண்டு என்பதை நாம் மறக்கக் கூடாது.

Wednesday, 30 December 2015

இந்தியா பரீட்சித்த ஏவுகணையும் ஏவுகணை எதிர்ப்பு முறைமையும்.

இந்தியா இஸ்ரேலுடன் இணைந்து தயாரித்த  தொலைதூர ஏவுகணையை 29/12/2015 செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக அரபுக்கடலில் பரீட்சித்துள்ளது. 1.4பில்லியன் டொலர்கள் செலவில் செய்யப்பட்ட திட்டத்தில் உருவான இந்த ஏவுகணைக்கு ஹீப்ரு மொழியில் மின்னல் என்னும் பொருள்பட Barak எனப் பெயரிடப்பட்டுள்ளது. நிலத்தில் இருந்து விண்ணிற்கு ஏவக்கூடிய SAM வகையைச் சேர்ந்த இந்த ஏவுகணைகளிற்கு கடலில் இருந்தும் ஏவும் வகையிலும் இன்னொரு வடிவமும் கொடுக்கப் பட்டுள்ளது.

INS Kolkata என்னும் இந்தியக் கடற்படைக்கப்பலில் இருந்து ஏவிப் பரிசோதிக்கப் பட்ட Barak-8 ஏவுகணைகள் வான்வளியாகவும் கடல் மேற்பரப்பில் இருந்து கடலுக்குள் இருந்தும் வரும் எதிரி ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கிய அழிக்கக் கூடியவை. சீனா மற்றும் பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளிடமுள்ள கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளிற்கு சவால் விடக் கூடிய வகையில் Barak-8 ஏவுகணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. எதிரியின் போர்விமானங்கள், ஆளில்லாப் போர் விமானங்கள், உழங்கு வானுர்திகளையும் மட்டுமல்ல ஒலியிலும் வேகமாகப் பாயக் கூடிய ஏவுகணைகளையும் இடைமறித்து Barak-8 ஏவுகணைகள் தாக்கி அழிக்கக் கூடியவை. இவை ஏற்கனவே இரண்டு தடவைகள் இஸ்ரேலியக் கடற்படைக் கப்பல்களில் இருந்து சோதனை செய்யப்பட்டவையாகும். இந்தியக் கப்பலில் இப்போது முதற்தடவையாக சோதிக்கப்பட்டுள்ளன. முதலில் 32 Barak-8 ஏவுகணைகள் INS Kolkataவில் இணைக்கப் படும். பின்னர் எல்லா இந்திய கடற்படைக் கப்பல்களிலும் இவை இணைக்கப்படும். 

இஸ்ரேலும் இந்தியாவுக் இணைந்து உருவாக்கும் விமான எதிர்ப்பு முறைமையில் ஒரு பகுதியாகவும் Barak-8 ஏவுகணைகள் செயற்படும். ஏவுகணை எதிர்ப்பு முறைமையில் digital radar, command and control, vertical launchers and missiles carrying an advanced seeker ஆகியவை இருக்கும். இந்தியா போன்ற பெரு நிலப்பரப்பைக் கொண்ட நாட்டை ஏவுகணை எதிர்ப்பு முற்றைமை மூலம் பாதுகாக்க பெரும் செலவு செய்ய வேண்டியிருக்கும்.



சீனா தனது உலக ஆதிக்கத்தை அதிகரிக்கக் கூடியவகையில் தனது படைவலுவை அதிகரித்துக் கொண்டு போகையில் அதற்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் இந்தியாவும் தனது படைவலுவை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றது. உலகச் சந்தையில் அதிக அளவு படைக்கலன்களைக் கொள்வனவு செய்யும் நாடாக இருக்கும் இந்தியா அடுத்த பத்து ஆண்டுகளில் 250பில்லியன் டொலர்களைச் தனது படைத்துறைக்குச் செலவு செய்யவிருக்கின்றது.
 

Tuesday, 29 December 2015

ரமாடி நகரின் வீழ்ச்சி ஐ எஸ் அமைப்பின் வீழ்ச்சியின் ஆரம்பமா?

மத்திய ஈராக்கில் உள்ள அன்பர் மாகாணத்தின் தலைநகரான ரமாடி மீண்டும் உலக அரங்கில் பெரிதாக அடிபடுகின்றது. 2015-ம் ஆண்டு மே மாதம் ஒரு நாளில் அதிரடியாக ரமாடி நகரை ஐ எஸ் போராளிகள் கைப்பற்றினர். 2015 டிசம்பர் 28-ம் திகதி ஐக்கிய அமெரிக்காவினதும் மற்ற நட்பு நாடுகளினதும்  விமானத் தாக்குதல்களின் உதவியுடன் ஐந்து மாதப் போரின் பின்னர் ஈராக்கிய அரச படைகள் ரமாடி நகரின் நடுப்பகுதியைக் கைப்பற்றியுள்ளனர்.

சியா முஸ்லிம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட ஈராகில் ரமாடி சுனி முஸ்லிம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட ஒரு நகராகும். இது தலைநகர் பாக்தாத்தில் இருந்து 60மைல்கள் தொலைவில் இருக்கின்றது. சுனி முஸ்லிம் அமைப்பான ஐ எஸ் அமைப்பினர் அங்கு பல நிலக்கண்ணி வெடிகளை விதைத்துள்ளனர். ராமாடியில் ஆங்காங்கு சில சிறு நிலப்பரப்புக்கள் ஐ எஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.  முப்பதினாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளைக் கொண்ட ஐ எஸ் அமைப்பின் 400 போராளிகள் மட்டும் ராமாடி நகரில் நிலைகொண்டிருந்தனர். ரமாடி வாழ் சுனி முஸ்லிம்களை ஈராக்கின் சியா படையினர் எப்படி இனி நடத்தப் போகின்றார்கள் என்பதில்தான் ஈராக்கியப் படையினரின் வெற்றி தங்கியுள்ளது. ஐ எஸ் அமைப்பினர் தமது கட்டுப்ப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள மக்களைச் சரியாக நடத்தவில்லை என்பதும் ரமாடி நகரின் வீழ்ச்சிக்குக் காரணமாகக் கருதப்படுகின்றது.

சிரியாவின் மூன்றில் இரு பகுதி நிலப்பரப்பையும் ஈராக்கின் அரைப்பங்கு நிலப்பரப்பையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பினர் தற்போது பின்வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சிரியாவில் அமெரிக்காவின் பெண்டகன் ஐநூறு மில்லியன் டொலர்கள் செலவில் செய்த பயிற்ச்சி வீணாகிப் போன வேளையில் ஈராக்கில் அமெரிக்கப் படையினர் ஈராக்கியப் படையினருக்கு வழங்கிய பயிற்ச்சிகள் பயனளிக்க ஆரம்பித்துள்ளனவா? ஈராக்கியப் படையின் பொறியியல் பிரிவிற்கு அமெரிக்கா அளித்த கண்ணிவெடிகளுக்கு எதிரான பயிற்ச்சி வெற்றியளித்துள்ளனவா?

அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் தமது தரைப் படையினரை எமக்கு எதிராகக் களமிறக்க அஞ்சுகின்றார்கள் என ஐ எஸ் அமைப்பினர் மார் தட்டி நின்றார்கள்.  அவர்கள் வந்தால் அத்தனை பேரையும் கொல்வோம் எனவும் சூளுரைத்திருந்தனர்.

2015 மே மாதம் 15-ம் திகதி வெள்ளிக் கிழமை ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பினர் அதிரடியாக ரமாடி நகரத்தின் கிழக்குப் பக்கமாக இருந்த ஈராக்கிய அரச படையினரின் காவல் நிலைகளைத் தாக்கி அழித்துக் கொண்டு முன்னேறினர். ரமாடி நகரின் கிழக்குப் பக்கமாக பத்துக் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஹுசைபா பகுதியில் ஐ எஸ் அமைப்பினரின் தாக்குதல் ஆரம்பித்தது. ஐ எஸ் அமைப்பினர் ஈராக்கில் வீசிய மணற்புயலைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். மணற்புயல் வீசியதால் அமெரிக்க விமானப் படையினர் ஐ எஸ் அமைப்பினரின் முன்னேற்றத்தைத் தடுக்க தாக்குதல் செய்ய முடியவில்லை. ரமாடி நகரில் ஐ எஸ் அமைப்பின் பல போராளிகள் தூக்கநிலைப் தாக்குதலாளிகளாக இருந்தனர். மணற் புயலைப் பாவித்து அவர்கள் 10 மகிழூர்தி குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதைத் தொடர்ந்து தரை நகர்வை மேற்கொண்ட ஐ எஸ் போராளிகளின் தாக்குதலுக்கு ஈராக்கியப் படையினரை நிலை குலையச் செய்தது.  அவர்கள் தம் படைக்கலன்களைக் கைவிட்டுத் தலை தெறிக்க ஒடினர். பல்மைராவுடன் ஈராக் சிரியா எல்லை நகரமான அல் வலீட் நகரையும் ஐ எஸ் அமைப்பினர் கைப்பற்றினர். இது இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பில் அவர்களுக்கு ஒரு சாதகமான நிலையைத் தோற்றுவித்திருந்தது.

சிரியாவில் பெரு நிலப்பரப்பைக் கைப்பற்றிய அபூபக்கலர் அல் பக்தாடி தலைமையிலான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் ஈராக்கில் மிகக் கடுமையான தாக்குதலைத் தொடுத்தது.  2014-ம் ஆண்டு ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் ஈராக்கிலும் சிரியாவிலும் பத்துக்கு மேற்பட்ட நகரங்களைக்கொண்ட பெரு நிலப்பரப்பைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.  ஈராக்கியப் படையினருக்கு அமெரிக்கா வழங்கியிருந்த பல படைக்கலன்களையும் பார ஊர்திகளையும் ஐ எஸ் அமைப்பினர் கைப்பற்றியதுடன் சதாம் ஹசேயினின் முன்னாள் படைத்துறை வீரர்களையும் நிபுணர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டது.

ஐ எஸ் அமைப்பு ஒரு வலுமிக்க நிலையிலும் சிரிய ஆட்சியாளர்களுக்கு எதிரான அமெரிக்க சார்புப் போராளிகள் ஒன்றிணைந்த வேளையிலும் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் படையினர் ஆட்டம் காணும் வேளையில் 2015 செப்டம்பர் 30-ம் திகதி இரசியப் படையினர் சிரியாவில் இறங்கின. இதுவரை கணிசமான நிலப்பரப்பு எதையும் கைப்பற்றவில்லை. 18 மாதங்களுக்கு மேலாக அமெரிக்கா தலைமியிலான நாற்பது நாடுகளின் கூட்டுப்படையினர் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதல்கள் அவர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுத்தாத நிலையில் அமெரிக்காவின் ஐ எஸ் தொடர்பான கேந்திரோபாயக் கொள்கை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது. அமெரிக்கப் படைகள் தரையிறக்கப்படாமல் ஐ எஸ் அமப்பினரை அழிக்க முடியாது எனப் பல படைத்துறை ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்தனர். இச்சூழலில் ஈராக்கியப் படையினர் ரமாடி நகரில் ஐ எஸ் போராளிகளைப் பின்வாங்கச் செய்துள்ளனர்.

அன்சாரி டைன் இயக்கம் அல் கெய்தாவுடன் இணைந்து மாலியில் பிரான்ஸ் நாட்டின் நிலப்பரப்பிலும் மூன்று மடங்கு நிலப்பரப்பை கைப்பற்றிய போது பிரெஞ்சுப் படையினர் அங்கு சென்று ஒரு மாதத்தில் அந்த நிலப்பரப்பை மீட்டனர். ஈராக்கிலும் சிரியாவிலும் பெல்ஜியம் நாட்டின் நிலப்பரப்பை ஒத்த நிலப்பரப்பை ஐ எஸ் அமைப்பினர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க்கின்றார்கள். 

ரமாடியில் ஐ எஸ் அமைப்பினர் பெருமளவில் கொல்லப்பட்டதாகவோ அவர்களிடமிருந்து படைக்கலங்கள் பறிக்கப் பட்டதாகவோ அல்லது அவை அழிக்கப் பட்டதாகவோ செய்திகள் வெளிவரவில்லை. ரமாடியில் ஈராக்கியப் படையினரின் வெற்றி சிரியப் படைகளுக்கும் இரசியப் படைத்துறை ஆலோசகர்களுக்கும் ஒரு பெரும் சவாலாக அமைந்துள்ளன. இது போன்ற ஒரு வெற்றியை அவர்களும் ஈட்ட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அடுத்த இலக்கு மொசுல்
ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரான மொசுல் நகரைக் கைப்பற்றுவது தமது இலக்கு என ஈராக்கியப் படையினர் தெரிவித்துள்ளனர். ஐ எஸ் அமைப்பினரின் தலைமைச் செயலகம் அங்குதான் அமைந்துள்ளது. 400 போராளிகளைக் கொண்ட ரமாடியைக் கைப்பற்ற ஐந்து மாதங்கள் எடுத்தன. மொசுலில் மிகவும் அதிகமான போராளிகளின் கடுமையானதும் தற்கொடைகள் நிறைந்த மோசமான எதிர்ப்புக்களை ஈராக்கியப் படையினர் எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.

ரமாடி ஐ எஸ்ஸின் வீழ்ச்சியின் ஆரம்பமா?
பிரித்தானிய விமானப் படையினர் தாழப்பறந்து ரமாடியில் ஐ எஸ் நிலைகளின் மீது செய்த தாக்குதல்கள் அவர்களை நிலைகுலையச் செய்தது. ஏற்கனவே ஐ எஸ் அமைப்பினர் குர்திஷ் மற்றும் யதீஷியப் போராளிகளிடம் சின்ஜோர் நகரை இழந்துள்ள வேளையிலும் ஐ எஸ் அமைப்பினர் நாற்புறமும் சூழப்பட்டும் அவர்களது பொருளாதார வருமானங்கள் தடுக்கப்பட முயற்ச்சிகள் எடுக்கப்படும் வேளையிலும் ரமாடி நகரை அவர்கள் இழந்துள்ளனர். அடுத்து மொசுல் நகரையும் கைப்பற்றுவோம் என ஈராக்கியப் படையினர் சூழுரைத்துள்ளனர். இது ஐ எஸ் அமைப்பினரின் வீழ்ச்சியின் ஆரம்பமா? ஐ எஸ் அமைப்பினர் ஏற்கனவே ஆப்கானிஸ்த்தான், லிபியா, யேமன், நைஜீரியா ஆகிய நாடுகளில் தமது கால்களைப் பதித்துள்ளனர். ஐ எஸ் அமைப்பினர் அடுத்து சோமாலியாவில் கால் பதிக்க முயல்கின்றனர். சோமாலியாவில் ஏற்கனவே அல் கெய்தாவின் கிளை அமைப்பான அல் ஷபாப் இயங்கிவருகின்றது. தமது போராளிகள் ஐ எஸ் அமைப்பில் இணைவதை அவர்கள் தடை செய்துள்ள போதிலும் அல் ஷபாப் அமைப்பினர் ஐ எஸ் அமைப்பினருடன் அண்மைக்காலங்களாக மேம்படுத்தி வருகின்றனர். இதற்குக் காரணம் ஐ எஸ் அமைப்பினரிடம் இருக்கும் பெரும் பணம்தான். நைஜீரியாவில் செயற்படும் பொக்கோ ஹரம் அமைப்பும் இதே நிலையில்தான் உள்ளது. ஐ எஸ் அமப்பினர் ஈராக்கிலும் சிரியாவிலும் முழுதாக ஒழிக்கப்பட்டாலும் வளைகுடா நாடுகளிலும் துருக்கியிலும் அவர்களுக்கு இருக்கும் ஆதரவு வேறு நாடுகளில் அவர்கள் நிலைகொள்ள பெரிதும் உதவும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...