Showing posts with label சோதிடம். Show all posts
Showing posts with label சோதிடம். Show all posts

Tuesday, 8 March 2011

அடுத்த வாரம் பூமிக்கு மிக நெருக்கமாக வரும் சந்திரன்-ஆபத்தானதா?


அடுத்த வாரம்(மார்ச் 19) சந்திரன் பூகிக்கு மிக அண்மையாக வருகிறது. சந்திரன் அப்போது பூமியில் இருந்து 354,507கி. மீ அல்லது 221,567மைல்கள் தொலைவில் இருக்கும். இதனால் பூமியில் சில அனர்த்தங்கள் ஏற்படலாம் என சில விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இப்படி பூமிக்கு அண்மையாக சந்திரன் 1955, 1974, 1992, 2005 ஆகிய ஆண்டுகளில் வந்தது. 1974-ம் ஆண்டு பூமிக்கு மிக அண்மையில் சந்திரன் வந்தபோது டார்வின் எனப்பெயரிடப்பட்ட சூறாவளி அவுஸ்திரேலியாவைத் தாக்கியது. 2005இல் வந்தபோது சுனாமி ஏற்பட்டுப் பேரழிவு நிகழ்ந்தது என்று கூறி சில சோதிடர்கள் அபாயச் சங்கொலி ஊதுகின்றனர்.

சில விஞ்ஞானிகள் மேற்படி நிகழ்வுகள் சந்திரனுடன் தொடர்பற்றவை என்று சொல்கின்றனர். பூமியில் நடக்கும் எந்த ஒவ்வொரு நிகழ்வையும் வானில் உள்ள உடுக்கள், கிரகங்கள், உபகிரகங்களின் நிலைகளுடன் சம்பந்தப்படுத்தலாம் ஆனால் அவற்றிற்கிடையில் எந்த விஞ்ஞான பூர்வ தொடர்பும் கிடையாது என்கின்றனர். பூமிக்கு மிக அண்மையில் சந்திரன் வரும்போது வழமைக்கு மாறானசில கடற்பெருக்கு ஏற்படலாம் என்கின்றனர் அவர்கள். மற்றும் படி அழிவு ஏற்படும் என்பதை அந்த விஞ்ஞானிகள் மறுக்கின்றனர்.

நம்ம சோதிடர்கள் நடந்ததின் பின்னர் தங்கள் வசதிக்கு ஏற்ப அதற்கான விளக்கம் தருவார்கள் எதையாவது சம்பந்தப்படுத்தி.

Sunday, 5 December 2010

விஞ்ஞானிகள்: கையின் அமைப்புக்கும் குணங்களுக்கும் தொடர்பு


2D - 2nd digit
4D - 4th digit

எமது குண இயல்புகளுக்கும் எமது கையின் அமைப்பிற்கும் தொடர்பு உண்டு என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

எமது மோதிர விரலின் நீளத்திற்கும் ஆள்காட்டி விரலின் நீளத்திற்கும் இடையிலான விகிதம் எமது இயல்புகளை காட்டுகின்றன என்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஆள்காட்டி விரலில் மோதிர விரலிலும் பார்க்க நீளமாக இருப்பவர்கள் நோய்வாய்ப்படுவது குறைவு முக்கியமாக புற்று நோய் வாய்ப்படுவது குறைவு.

ஆய்வுகள் இப்படிக் கூறுகின்றன: A long index finger also correlates strongly with a lower risk of early heart disease and, in women, a higher risk of breast cancer and greater fertility.
People with relatively long index fingers are also more likely to suffer from schizophrenia, allergies, eczema and hay feve

ஆள்காட்டி விரல் மோதிர விரலிலும் பார்க்க குட்டையானதாக இருப்பவர்கள் சதுரங்கம், குறுக்கெழுத்து, இயந்திரவியல், படைத்துறை, எதிர்வுகூறுதல் ஆகியவற்றில் சிறந்து விளங்குகின்றனர்.

ஆள்காட்டி விரல் மோதிர விரலிலும் பார்க்க குட்டையானதாக இருப்பவர்கள் ஆண்மை மிக்கவர்களாகவும் தன்னினச் சேர்க்கையில் ஈடுபடாதவர்களாகவும் இருப்பார்கள். இந்த அமைப்புடைய பெண்கள் ஆண்தன்மை உடையவர்களாகவும் தன்னினச் சேர்கையை விரும்புவர்களாகவும் இருக்கலாம். ஆனால் வேலையில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

1700 ஆண்டளவில் எடுத்த ஆய்வின்படி அநேக ஆண்களின் ஆள்காட்டி விரல் மோதிர விரலிலும் பார்க்க குட்டையானதாக காணப்பட்டதாம்.

ஆள்காட்டி விரல் மோதிர விரலிலும் பார்க்க அதிகம் குட்டையானதாக இருப்பவர்கள் வறியவர்களாகவும் தொழிலில் மோசமானவர்களாகவும் இருப்பார்கள்.

நீண்ட மோதிர விரல் உள்ளவர்கள் இலக்குப் பார்த்து எறிவதில் வல்லவர்களாம்.

உங்கள் நகத்தின் அமைப்ப்பும் அதில் ஏற்படும் மாறுதல்களும் உங்கள் ஆரோக்கியம் பற்றி பல தகவல்கள் அறிய உதவும்.

Sunday, 21 November 2010

பிரித்தானியா வாழ் தமிழர்களுக்கான குரு மாற்றப் பலன்கள்


பொதுப் பலன்கள்

எந்திரம் போல் உழைப்பதே வாழ்க்கையின் மந்திரமாக இருக்க வேண்டும் என்று தவத்திரு குண்டாந்தடி அடிகள் சுவாமிகள் கூறியுள்ளார். இந்தக் கூற்றை உணர்ந்த நீங்கள் என்றும் எந்திரம் போல் உழைத்துக் கொண்டே இருக்கும் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களே உங்களுக்கு இந்தக் குரு மாற்றம் நற்பலன்களையும் தீய பலன்களையும் கலந்தே கொண்டுவரும். உங்களில் பலர் இன்னும் வருடத்தில் இன்னும் எத்தனை நாட்களை பாராளமன்றத்தின் முன் செவழிக்க வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருகிறீர்கள். அது மட்டுமா அந்தத் தேர்தலுக்கு வந்து வாக்களியுங்கள் இந்தத் தேர்தலுக்கு வந்து வாக்களியுங்கள் என்று உங்களை எத்தனை விதமாக அலைக்கழித்தனர். அத்துடன்உங்கள் வாழ்வில் உங்களை அறியாமல் பல மாற்றங்கள் நிகழப் போகிறது. இந்த இடியப்பம் பிழியக் கஷ்டமாக இருகிறது கொஞ்சம் பிழிஞ்சு தாருங்கோ, நான் இந்த புட்டு மாவைக் கொத்துறன் நீங்கள் கொஞ்சம் தேங்காயைத் துருவித்தாங்கோ இந்த இட்லிமா புளிச்சிருக்கோ என்று ஒருக்கால் பார்த்துச் சொல்லுங்கோ என்பது போன்ற வார்த்தைகள் உங்கள் வீடுகளில் அடிக்கடி கேட்க முடியாது. Sampal express kaveri express, saampar express, pongal express என்று பல Tamil Fast food கடைகள் இனி உங்கள் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தப் போகின்றன.


மேட ராசித் தோழர்களே

இதுவரை கும்பத்தில் அமர்ந்திருந்து ஜம்பம் அடித்து வந்த குருபகவான் இனி மீனத்திற்கு மாறி உங்கள் குடும்பத்தையே நாறடிக்கப் போகிறார். கும்பத்திலிருந்து U-Turn அடித்து வக்கிரமாக மீனத்திற்குப் பாய்வதால் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படும். உங்கள் ஏழு வயது மகள் நாலு வயதாக இருக்கும் போது மூன்று தடவை தும்மியதற்காக ஆறுபடை வீட்டிற்கும் மகளை அழைத்து வந்து தரிசிப்பதாக நேர்த்திக் கடன் வைத்ததாகவும் அதனால் உடனடியாக இந்தியாவிற்குச் செல்ல வேண்டும் என்றும் உங்கள் மனைவி நச்சரிப்பார். நீங்களும் அழைத்துச் செல்வீர்கள். அங்கு போன பின்னர் தான் தெரியும். குமரன்ஸ், பிரின்ஸ் ஜுவல்லேர்ஸ், போத்தீஸ், நல்லீஸ், ராசி சில்க், சென்னை சில்க்ஸ் ஆகிய ஆறு கடைவீடுகள் தான் உங்கள் மனைவியின் திட்டம் என்று. இதே சாக்காக நீங்களும் கோடம்பாக்கம் திருத்தலம் சென்று ஸ்ரீ தமனாம்பாளைத்தரிசித்து வரலாம். அதனால் உங்கள் மன உளைச்சல் நீங்கி வாழ்வில் நிம்மதி ஏற்படும்.


இடப ராசி இனிய அன்பர்களே

அடிக்கடி இடம் மாறுவதை விரும்பும் இடப ராசி அன்பர்களே, இந்த ஆண்டு உங்களுக்கு இனிதே அமையும். இந்த மந்தமான பொருளாதாரச் சூழலிலும் இன்னும் ஒரு பெரிய வீடு வாங்குவீர்கள். உங்கள் மகளுக்கு திருமணம் நடக்கவில்லை. அவள்அடிக்கடி கணனி முன்னிருந்து நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறாள் என்று கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் மகள் ஒரு நல்ல மணமகனை facebookஇல் நீங்களே வியந்து போகும்படி தெரிந்தெடுத்துக் கொள்வார். அதுவும் உங்களுக்குத் தெரிந்தவர்களின் குடும்பத்தில் இருந்து என்பது இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமையும். கலைஞர்கள் கிசு கிசுத் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். மாணவர்களுக்கு சுபப்பலன் உண்டாகும்.

இடபராசிப் பெண்களே உங்கள் ஏழாம் வீட்டை சனிபகவான் சைட் அடிப்பதால் உங்கள் கணவன் தன்னுடன் வேலை செய்யும் ஒரு கரிபியப் பெண்ணிற்காக பணத்தைக் கரியாக்குவார் கவனமாக இருங்கள். அண்மையில் உள்ள அம்மன் கோவிலுக்குச் சென்று துளசி இலை வில்வம் இலை, இலந்தம் இலை, வேப்பம் இலை, பூவரசம் இலை வாதநிவாரணி இலை முள் முருக்கம் இலை சாத்தி வழிபட்டால் நற்பலன் உண்டாகும்.

மிதுன ராசியினரே

காரில்லார்க்கு இந்த நாடில்லை. வீடில்லார்க்கு இவ்வுலகில்லை என்று அருள்மிகி மார்கிரட் தச்சர் அம்மையார் கூறியுள்ளார். இந்தக் கூற்றை உணர்ந்து கொண்ட மிதுனராசி அன்பர்களே! பத்திலே குரு பரமனைப் பிச்சா பாத்திரம் ஏந்த வைத்தது. உங்களை மட்டும் சும்மா விட்டு வைக்குமா. படாத பாடு படுத்தும் முதலில் உங்கள் மனைவியிடம் உள்ள கடன் அட்டைகள் யாவற்றையும் எடுத்து ஒரு பலமான கத்திரிக்கோலால் இரண்டாகக் கத்தரித்து அவற்றை ஒரு அமாவாசை இரவில் ஹமர்சிமித் பாலத்திற்கு சென்று உங்கள் தலை மூன்று முறை அவற்றால் சுற்றிவிட்டுவீசா நாசமாய் போவாய் நமஹ.. மாஸ்டர் கா(ர்)ட் மண்ணாகிப் போவாய் நமஹ என்ற மதிரத்தை மூன்று முறை உச்சாடனம் செய்து அப்படியே புண்ணிய தேம்ஸ் நதியில் யார் கண்ணிலும் படாமல் வீசவும். பின்னர் இடது பக்கம் திரும்பி மூன்று முறை துப்பவும். உங்கள் பணக் கஷ்டங்கள் யாவும் தீரும். அல்லாவிடில் உங்கள் வீட்டை வங்கி சுவீகரிக்கும் நிலை ஏற்படலாம். கன்னிப் பெண்கள் வாரத்தில் இரண்டு முறை எந்தக் கோவிலிற்காவது சென்று வந்தால் அங்கு யார் கண்ணிலாவது பட்டு திருமணப் பலன் கிடைக்கும்.


கடகராசி கண்ணிய அன்பர்களே

வீட்டுச் செல்வம் பெருஞ்செல்வம் அச்செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலை என்று மஹரிஷி ரொனி பிளேயர் அவர்கள் கூறியுள்ளார். இக்கூற்றின் படி நடக்கும் கடக இராசி அன்பர்களே, நாலு பேர் சொற்படி நடப்பது உங்களுக்கு எப்போது நற்பலனைத் தரும். ஒன்பதிலே வரும் குரு உங்களுக்கு பலவற்றையும் அள்ளித் தரும். அது உங்கள் மனைவியின் வாக்குஸ்தானத்தைப் பார்பதால் இதுவரை உங்கள் மீது வள்ளென்று பாய்ந்து வந்த உங்கள் மனைவி இனி பெட்டிப் பாம்பாக அடங்கிப்போவார். இனி வீட்டில் உங்கள் ஆணைப்படி யாவும் நடந்தாலும் உங்கள் மகள் வீட்டில் அமர்ந்திருக்கும் சனிபகவான் பிள்ளைகள் வழியில் பல தொல்லைகளைத் தரப்பார்ப்பார். அவற்றை உங்கள் இயல்பான மதிநுட்பத்தால் சமாளித்து விடுவீர்கள்.


சிம்மராசித் சிங்காரத் தோழர்களே

உள்ளார் இல்லார் என்ப்பது அவரவர் Mortgage Loanஆல் துணியப்படும் என்று அலிஸ்டர் டார்லிங் சுவாமிகள் கூறியுள்ளார். இந்த உண்மையை உணர்ந்து கொண்ட சிம்மராசி அன்பர்களே! இது வரை உங்கள் மனைவியின் வீடான ஏழாம் வீட்டில் இருந்து குரு பகவான் மனைவி வழியில் நற்பலன்களைச் செய்து வந்தார். மனைவியின் தாய் கனடாவில் சுகவீன முற்றிருக்கிறார் என்று உங்கள் மனைவி ஆறு மாதம் கனாடாவில் இருந்ததால் வீட்டில் எவ்வளவு நிம்மதியக இருந்தீர்கள். குருபகவான் அவர் இப்போது தன் வீடு வந்து விட்டார். இனி வீட்டுக்குள் சிகரட் பிடிக்க முடியாது. குடிச்சு முடிச்ச பீர் குவளையக் கண்ட இடத்தில் வைக்க முடியாது குரு எட்டாம் வீட்டில் இருப்பது வீண் சச்சரவுகளைத் தோற்றுவிக்கும். Freshy என்றும் சோறு என்றும் பாடசாலையில் விமர்சிக்கப் பட்ட உங்கள் மகன் ஜீசிஎஸ்சியில் நல்ல பெறுபெறுகள் எடுப்பார். பிறந்த நாள் விழாக் கொண்டாட்டங்களில் அறிமுகமாகும் முன் பின் தெரியாதவகளிற்கு மூன்று பிள்ளைகள் என்பதற்காக அவர்களை ஜேர்மனியில் இருந்து வந்தீர்களா என்று கேட்டு வீண் சண்டையில் மாட்ட வேண்டாம்.


கன்னி ராசி அன்பர்களே

ஓடு ஓடு உலகெலாம் ஓடு தேடு தேடு பணம் தேடு என்று தவத்திரு கோர்டன் பிரவுன் அவர்களின் கூற்றுப்படி நடக்கும் கன்ன்னிராசி அன்பர்களே! ஏழாம் வீட்டிற்கு வரும் குருபகவான் இதற்கு முன் உங்களை வேண்டாம் என்று போன மாப்பிள்ளை இப்போது உங்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை கிடைத்தபடியால் உங்கள் வீட்டு வாசலில் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும் படி தவம் கிடக்கச் செய்வார். பல சுபச் செலவுகள் ஏற்படும். இருக்கும் நகைகளை கொடுத்து புது நகை வாங்கும் பாக்கியம் கிடைக்கும். facebookஇல் இருக்கும் கன்னிராசிப் பெண்கள் தங்கள் சொந்தப்படத்தை profile picture ஆகப் போடாமல் cinesouth.com website இல் உள்ள ஒரு தெலுங்கு நடிகையின் படத்தை போடவும் அல்லது அடுத்த அம்மன் கோவில் தேருக்குப் பின்னால் செல்லும் போது கண்டவர்களும் உங்கள் பெயரை சொல்லிக் கூப்பிடும் நிலை ஏற்படலாம்.


துலா ராசித் தோழர்களே

எப்போதும் சமநிலையாக இருக்க விரும்பும் நீங்கள், ஓடி ஓடி உழைத்தும் ஒரு குண்டு மணி கூட வாங்க முடியவில்லையே என்று தவித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பிரித்தானியா வந்து மூன்று வருடம் ஏழு மாதத்திற்குப் பிறகு வந்த உங்கள் மைத்துனர் உங்களிலும் பார்க்க நல்ல கார் வாங்கி விட்டார் என்று பொருமிக் கொண்டிருக்கிறீர்கள். வாடகை வீட்டிலிருந்து சொந்தமாக வீடு வாங்க எந்தனை முயற்சி எடுத்தீர்கள். உங்களுக்கு வீட்டு ஈட்டுக் கடன் வாங்கி வருதாகச் சொல்லி உங்களை இதுவரை மூன்று பேர் ஏமாற்றினார்கள். இந்த நிலை இன்னும் ஒரு வருடம் தொடரும். அதன் பின்னர் உங்களுக்கு யாவரும் பார்த்து வயிற்றெரிச்சல் படும் படி நல்ல சிறந்த வீடு அமையும். அது வரை டெஸ்ஸாவில் தொடர்ந்து சேமிக்கவும். துலா இராசிப் பெற்றோர்களே! ஐரி படித்த பெண் உங்கள் வீட்டிற்கு மருமகளாக வந்தால் உங்கள் மகனுக்கு நல்லபடியாகச் சம்பாதிப்பாள் என்று எண்ணியிருந்தீர்கள். ஆனால் மருமகள் இப்போது வேலையில்லாமல் இருக்கிறார். சரி உணவு சமைத்தாவது உதவி செய்கிறார் என்று பார்த்தால் அதுவும் பிரச்சனை. சொதிக்கு எவ்வளவு உப்புப் போட வேண்டும் என்பதை அறிய சமையலரைக்கு லப்டொப்பைக் கொண்டு போய் கூகிளில் தேடிப்பார்க்கிறார். மருமகளுடன் ஒன்றும் கதைக்க முடியாமல் சிவனே என்று தலையில் அடித்துக் கொள்கிறீர்கள். இப்படிப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபட்


விருச்சிக ராசியினரே

உள்ளார் இல்லார் என்பது அவரவர் mortgageஆல் துணியப்படும் என்றார் டெவிட் கமரோன் சுவாமிகள். அப் பெருந்தகை கூற்றுப்படி செயற்படும் விருச்சிக இராசிகாரர்களே. ஐந்தாம் வீட்டில் ஆட்சி பெற்று அமரும் குருபகவான் இனி அள்ளி அள்ளிக் கொடுக்கப் போகிறார். நவக் கிரகங்களின் வங்கியாளரான குருபகவான் இனி உங்கள் வங்கிக் கணக்கை நிறைக்கப் போகிறார். பட்டேல் அன் கோ வை விட்டு விலகி இனி நல்ல இடத்தில் நீங்கள் நினைத்தது போல் வேலை கிடைக்கும். ஜீசிஎஸ்சீ தேர்வில் உங்கள் உறவினர்களினதும் நண்பர்களினதும் பிள்ளைகளிலும் பார்க்க உங்கள் மகன் மோசமான பெறு பெறு பெற்றதால் அவமானத்தால் வெளியில் தலைகாட்ட முடியாமல் இருந்தீர்கள். இனி அதே மகன் யாவரும் வியக்கும் வண்ணம் சகல பாடங்களிலும் உயர்தரப் பரீட்சையில் ஏ தரத்தில் சித்தி பெற்று அசத்துவார்.. வதிவிட அனுமதியின்றிக் கரைச்சல் படுபவர்கள் அண்மையில் உள்ள அம்மன் கோவிலிற்கு சென்று செவ்வாய்க் கிழமை தோறும் பட்டு சாத்தி (பக்கத்து வீட்டு பட்டு அல்ல) வழிபடவும்.


தனு ராசியினரே

தயாள குணம் படைத்த தனு இராசி அன்பர்களே,

பாரப்பா நாலிலே குரு இருந்தால்

காரப்ப கடுங்குளிரில் breakdown ஆகும்

காலையில் startஆக மறுக்கும்

ஏதப்பா இதைவிடத் தொல்லை என்று எலிப்பாணி சோதிடர் சொல்லியுள்ளார்.

உங்களுக்கு வகனம் மூலமான பல பிரச்சனைகள் ஏற்படும். மாணவர்கள் Facebookஇல் மிகக் கவனமாக இருக்கவும். உங்களுடன் நடிகை திரிஷாவின் profile picture உடன் 19years old Dhiviya Menon from Triplicane என்று சொல்லி தினசரி மூன்று வேளை சாப்பட்டிற்கு முன் chat பண்ணிகொண்டிருக்கும் பெண் உண்மையில் ஒரு ஐ ரி படித்துவிட்டு வேலையின்றி இருக்கும் இலங்கை வத்தளையைச் சேர்ந்த ஒரு 41 வயதுப் பெண் என்று அறிந்து ஏமாற்றம் அடைவீர்கள்.

மகரம்

இந்த ஆண்டு உங்களுக்கு விரயச் செலவு அதிகமாகும். உங்கள் மகளின் திருமணம் இனிதே நடக்கும். ஆனால் நகைகளும் சேலைகளும் இலண்டனில் வாங்குவதிலும் பார்க்கச் சென்னையில் வாங்கினால் சிக்கனமாக முடிக்கலாம் என்று உங்கள் மனைவி சொல்வார். நீங்களும் குடும்ப சமேதராய் சென்று பெரும் தொகைப் பணத்தை செலவு செய்து யாவற்றையும் வாங்கி வருவீர்கள். பின்னர் உங்கள் மனைவியின் அண்ணனின் மனைவி வந்து வாங்கி வந்த நகைகளையும் சேலைகளையும் பார்த்து விட்டு இவை எல்லாம் இப்போது பழைய பfஷன் நகைகள் சேலைகள் என்று உங்கள் மனைவியை உசுப்பேத்தும் படி நக்கலடித்து விட்டுப் போவார். பின்னர் உங்கள் மனைவி கண்ணீர் வடித்து மீண்டும் சகலவற்றையும் வெம்பிளிக்குப் போய் வாங்கி விடுவார். இதனால் உங்களுக்கு இரட்டிப்புச் செலவு உண்டாகும்.

ஓம் நமீதா துவஜாஜ வித்மகி

கால்கள் தூண்கள் போன்ற தீமஹி

தன்னோ தமிழ்ச் சினிமா பிரச்சோதாயா

என்ற காயத்திரி மந்திரத்தை தினமும் 108 தடவை பாராயணம் செய்யவும். சிரமங்கள் தணியும்


கும்பம்

கும்பராசியினரே

உங்கள் இராசியில் இருந்து பல தொல்லைகள் கொடுத்து வந்த குருபகவான் இரண்டாம் இடத்திற்கு மாறுவதால் சிண்டிகேட் மூலமாக லாட்டரி சீட்டு வெற்றி பெறும் யோகம் உண்டு. உங்கள் சொல்லை பிள்ளைகள் கேட்டு நடப்பர். புதுக் கார் வாங்கி பக்கத்து வீட்டுக் காரர்களையும் நண்பர்களை பெரும் வயிற்றெரிச்சலுக்கு உள்ளாக்குவீர்கள். உங்கள் செல்வாக்கு நிலைகண்டு உங்கள் மைத்துனருக்கு blood pressure அதிகமாகும். கும்பராசிப் தாய்மார்களே உங்களுக்கு ஒரு அடக்கமான பெண் தான மருமகளாக வரவேண்டும் என்று அடாவடியாக நிற்கிறீர்கள். அடக்கமான பெண் எங்கும் இல்லை சுடலைக்குள் தான இருக்கிறாள் கிளறித்தான் எடுக்க வேண்டும் என்ற உண்மையை இனி உணர்ந்து கொள்வீர்கள் உங்கள் மகனுக்கு இனித் திருமணம நடக்கும்.


மீனம்

மீன இராசி அன்பர்களே. உங்கள் ஜென்ம இராசியில் வரும் குரு வன்மம் வைத்துச் செயற்படும். கோயிலுக்குப் போனமா கும்பிட்டமா என்று இருக்கவும் அங்கு நடக்கும் அறங்காவலர் சபைத் தேர்தலில் எல்லாம் சம்பந்தப் படவேண்டாம். அங்கு நடக்கும் அடிபிடிகளால் அவலப் படுவீர்கள். சீட்டுக் கட்டுவதை தவிர்க்கவும். அப்படிக் கட்டினாலும் முன்கூட்டியே எடுக்கவும். சூர்யாவைப் போல் ஒருவனைத்தான் கல்யாணம் செய்வேன் என்று உங்கள் மகள் அடம்பிடிப்பாள். டெபனம் புளு குறொஸ் சேலில் உங்கள் மனைவி வாங்குவதில் முக்கால் வாசியை திருப்பிக் கொடுத்து refund எடுப்பதிலேயே உங்கள் வாழ்நாள் போய்விடும். உங்கள் 17 வயது மகனின் அறையில் சில ஆண்டுகளுக்கு முன் லயன் கிங்கின் படம் இருந்தது பின்னர் மைக்கேல் ஜக்சனின் படம் இருந்தது இப்போது கேற்றி பெரியின் முக்கால் நிர்வாணப் படம் இருக்கிறதே என்று ஆத்திரப் பட வேண்டாம். கண்டுகொள்ளாத மாதிரி இருக்கவும்.



12இராசிகளின் மீதும் 9 கிரகங்கள் மீதும் சத்தியமாக சொல்கிறேன் இதற்கும் சோதிடத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...