Saturday, 18 August 2012

நகைச்சுவை: மனைவியிலும் மோட்டர்பைக் மேலானது

மனைவியிலும் பார்க்க மோட்டர் பைக் மேலானது என்பதற்கு பத்துக் காரணங்கள்:
  1. பழைய பைக்கை கொடுத்துவிட்டு எப்போதும் புதிதாக இலகுவாக வாங்கிக் கொள்ளலாம்.
  2. தேவை ஏற்படின் பிரச்சனை ஏதுமில்லாமல் இரண்டு அல்லது அதற்கு மேல் எத்தனை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.
  3. உங்கள் நண்பனின் பைக் சுப்பரா இருக்குது என்று சொன்னால் அவன் அதில் சவாரி செய்து பார்க்கும் படி உங்களிடம் சொல்லுவான்.
  4. தி. நகரில் திவாலாக வேண்டிய நிலை பைக்கால் ஏற்படாது.
  5. மோட்டர் பைக் பிரச்சனை கொடுத்தால் திருத்தினரிடம் விட்டுவிட்டு வேறு பைக் எடுத்துச் சவாரி செய்யலாம்.
  6. மோட்டர் பைக்கை நீங்கள் உதைத்தால் அது விற்றவரிடம் போய்ச் சேராது.
  7. மோட்டர் பைக் நான் எப்படி இருக்கிறேன் என்று அடிக்கடி கேட்டு உங்களை கலாய்க்காது.
  8. மோட்டர் பைக்கில் சவாரி செய்து களைத்தவுடன் நீங்கள் நித்திரையானால் அது உங்களை எழுப்பி புது டிசைன் நகை வாங்க வேண்டும் என்று சொல்லாது.
  9. மோட்டர் பைக்கை மட்டும் பராமரித்தால் போதும். அத்துடன் தயாரிக்கப்பட்டவற்றைக் அடிக்கடி கட்டி அழத்தேவையில்லை.
  10. எல்லாவற்றிலும் மேலாக நீங்கள் நினைத்த நேரம் மோட்டர் பைக்கில் சவாரி செய்யலாம்.

Friday, 17 August 2012

பெரும் இழுபறியில் விக்கிலீக் அசாஞ்சே

விக்கிலீக் என்னும் இணையத்தளத்தின் மூலம் அமெரிக்காவின் உலகெங்கும் உள்ள தூதுவராலயங்கள் படைத்தளங்களுக்கிடையிலான இரகசிய தகவல் பரிமாற்றங்களை அம்பலப்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே. இவர் அம்பலப் படுத்திய தகவல்கள் அமெரிக்காவையும் பல நாடுகளையும் சஞ்சலத்திற்கு உள்ளாக்கியது. ஈராக்கில் அமெரிக்கப்படைகள் செய்த அட்டூழியங்கள், குவாட்டனாமோ சித்திரவதைகள், அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் போது செய்யப்பட்ட மின்னஞ்சல்கள், ஷெல் எரிபொருள் நிறுவனம் நைஜீரிய அரசில் ஊடுருவியமை, சவுதி இளவரசரின் பாலியல் மற்றும் போதைப்பொருள் சாகசங்கள், சவுதி அரேபியா அல்கெய்தாவிற் நிதி உதவி செய்தமை, ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் தொடர்பான தகவல்களை அமெரிக்கா ஒற்றாடியமை, அமெரிக்க இரசியாவை மாபிய அரசு எனக் கருதியமை, ஈரானைத் தாக்கும் படி சவுதி மன்னர் அமெரிக்காவைத் தூண்டியமை எனப்பல தகவல்களை ஜுலியான் அசஞ்சே அம்பலப் படுத்தினார்.

குற்றம் சாட்ட முடியாமல் திணறிய அமெரிக்கா
விக்கிலீக்கினால் வெளிவிடப்படும் தகவல்கள் அமெரிக்கப் படைத்துறையைச் சேர்ந்த பிரட்லி மன்னிங் (Bradley Manning) என்பவரால்தான் பெறப்பட்டு விக்கிலீக்கிற்கு வழங்கப்பட்டது. இதில் பிரட்லி மன்னிங் (Bradley Manning)தான் தகவல் திருடியவராகக் கருதப்படவேண்டியவர். அவற்றை பிரசுரித்த குற்றம் தான் விக்கிலீக்கிற்க்கும் அதன் நிறுவனர் ஜுலியான் அசங்கே புரிந்ததாகக் குற்றம் சாட்டப்படமுடியும். அமெரிக்க அரச அல்லது படைத்துறை இரகசியங்களை திருடியவர்மீது குற்றம் சுமத்தப் பட்டு தண்டிப்பது அமெரிக்காவில் நடந்துள்ளது. அந்த இரகசியங்களை பிரசுரித்தவர் மீது எப்படி குற்றம் சாட்டுவது என்று அமெரிக்க இதுவரை தேடிக்கொண்டிருந்தது. கடைசியில் அமெரிக்க மக்களவை ஆய்வாளர்கள் ஒற்றாடல் சட்டத்தின் கீழ் ஜுலியான் அசங்கேயை மாட்டக்கூடிய ஒரு சட்டப் பிரிவை கண்டு பிடித்துள்ளனர். ஆனால் ஒரு பிரசுரிப்பாளரை அந்தச் சட்டப்பிரிவுகளின் கீழ் இதற்கும் முன் நீதிமன்றில் நிறுத்தப்படவில்லை. இதனால் அமெரிக்க சட்டவாளர்கள் திணறினர்.


வித்தியாசமான சட்டங்களைக் கொண்ட சுவீடன்.
பல தகவல்களை ஜுலியான் அசஞ்சே அம்பலப் படுத்தியதைத் தொடர்ந்து அவர் மீது கற்பழிப்பு வழக்கு ஒன்று சுவீடனில் பதிவு செய்யப்பட்டது. சுவீடன் தேசத்துச் சட்டங்கள் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் வித்தியாசமானவை. சுவீடனில் ஜூலியான் அசங்கே தனது இணையம் விக்கிலீக்கில் அமெரிக்க இரகசியங்களை வெளிவிடுவது குற்றம் ஆகாது. அதனால் அவர் அங்கிருந்து தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள சுவீடன் அரசிடம் விண்ணப்பித்திருந்தார். சுவீடனில் கற்பழிப்புச் சட்டங்களும் விநோதமானவை. ஆகஸ்ட் மாதம் 11-ம் 18-ம் திகதிகளில் ஜூலியான் அசங்கே இரு பெண்களுடன் அவர்களின் சம்மதத்துடன் மேற்கொண்ட உடலுறவு அவருக்கு எமனானது. முதற் பெண்ணுடன் உறவு கொள்ளும் போது பாவித்த ஆணுறை கிழிந்து விட்டது. இரண்டாவது பெண் ஆணுறை அணியச் சொல்லியும் ஜூலியான் அசங்கே ஆணுறை அணியாமல் அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது உடலுறவு கொண்டாராம். இவை இரண்டும் சுவிடன் நாட்டுச் சட்டப்படி குற்றமாகுமாம். ஆனால் இரு பெண்களும் தங்கள் சம்மதத்துடனேயே உடலுறவு கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளனர். இரு பெண்களும் ஜூலியான் அசங்கேஇற்கு அமெரிக்காவால் வைக்கப்பட்ட பொறியா என்ற கேள்வியும் எழுந்தது.

விக்கிலீக் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சேயின் குற்றத்தின் பின்னணி
ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் போரில் ஊடகங்களின் பங்கு பற்றி ஸ்ரொக்ஹொல்மில்(Stockholm) நடந்த மாநாட்டில் உரையாற்ற ஜுலியன் அசாஞ்சே என்னும் அவுஸ்த்திரேலியாவில் பிறந்த முன்னாள் கணனி ஊடுருவி(computer hacker) அழைக்கப்படுகிறார். மாநாட்டை ஏற்பாடு செய்தவர்கள் மத்திய இடதுசாரி சகோதரத்துவ இயக்கம். இந்த இயக்கத்திற்காக பணியாற்றிய அழகி-1 (இவர் பெயர் வெளிவிடப்படவில்லை) ஜுலியன் அசாஞ்சேயுடன் தொடர்புகொள்கிறார். ஸ்ரொக்ஹொல்மில்(Stockholm) தனது தங்குமிடத்தைப்பற்றி அழகி-1 இடம் ஜுலியன் அசங்கே விசாரிக்கிறார். தனது வீட்டில் (Flat) தங்கலாம் மாநாடு நடக்கும் வேளையில் தான் வீட்டில் இருக்கமாட்டேன் நகரத்திற்கு வெளியில்தான் தங்குவேன் என்று அழகி-1 கூறுகிறார்.
மாநாட்டிற்கு சென்ற ஜுலியன் அசாஞ்சே அழகி-1 இன் வீட்டிலேயே தங்குகிறார். ஆனால் அழகி-1 குறிப்பிட்ட தினத்திற்கு ஒரு நாள் முன்கூட்டியே தன் விட்டிற்கு திரும்புகிறார். ஜுலியன் அசாஞ்சேயும் அழகி-1 இரவு ஒரு உணவகத்திற்கு சென்று உணவருந்திவிட்டு மீண்டும் வீடுவந்து இருவரும் அழகி-1 இன் சம்மதத்துடனேயே உடலுறவு கொள்கின்றனர். பாவம் ஜுலியன் அசங்கே அவர்கள் உடலுறவு கொள்ளும்போது அவர்கள் பாவித்த ஆணுறை கிழிந்து விடுகிறது. மறுநாள் அழகி-1 ஜுலியன் அசாஞ்சேயிற்கு ஒரு விருந்தும் வழங்குகிறார்(உணவுதான்).

அழகி-1 ஒரு பெண்ணுரிமைப் போராளி. பல்கலைக்கழகமொன்றில் ஆய்வு உதவியாளராகப் பணியாற்றுகிறார். பெண்ணுரிமை உட்படப் பல முற்போக்கு இயக்கங்களில் பங்கு கொள்பவர். பல நாடுகளுக்கும் சென்று வருபவர்.

ஜுலியன் அசாஞ்சே மாநாட்டில் உரையாற்றும் போது அழகி-2 முன்வரிசையில் இருக்கிறார். அவர் அதிக புகைப்படங்கள் ஜுலியன் அசாஞ்சே உரையாற்றும் போது எடுக்கிறார். மாநாட்டின் பின்அழகி-1 அழகி-2ஐ ஜுலியன் அசாஞ்சேயிற்கு அறிமுகம் செய்கிறார். இருவரும் நகரத்தை சுற்றுகின்றனர். அழகி-2 இல் ஜுலியன் அசாஞ்சே மயங்கிவிடுகிறார். நீ அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறாய் என்று ஜுலியன் அசாஞ்சே பிதற்றவும் செய்கிறார். இங்கும் உடலுறவு நடக்கிறது. அழகி-2 இன் சம்மதத்துடன்தான். ஆனால் அழகி-2 ஆணுறை அணியும்படி வேண்டியதை ஜுலியன் அசாஞ்சே மறுத்துவிடுகிறார். அழகி-1ம் அழகி-2ம் பின்னர் சந்தித்துக் கொள்கின்றனர். ஜுலியன் அசாஞ்சே உடன் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். பெண் உரிமைப் போராளியான அழகி-1 ஆணுறை இன்றி அழகி-2 உடன் உடலுறவு கொண்டதைக் கேள்விப்பட்டு ஆத்திரம் அடைந்தாராம். பின்னர் இருவரும் காவல் துறையில் முறையீடு செய்கின்றனர். உங்களையும் என்னையும் போலவே ஜுலியன் அசாஞ்சே இற்கு சுவீடன் தேசத்து கற்பழிப்புச் சட்டத்தைப் பற்றித் தெரியாமல் இருந்திருக்கலாம். பெண் சம்மதத்துடன் உறவு கொண்டாலும் ஆணுறை கிழிப்பது ஆணுறை அணிய மறுத்து உறவு கொள்வது எல்லாம் அங்கு குற்றமாம். அழகி-2 தான் ஜூலியன் அசாஞ்சேயில் காமம் கொண்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

அழகிகள் ஜுலியன் அசாஞ்சே நடந்த விததைப் பற்றி பத்திரிகைகளிலும் வெளியிருகின்றனர் ( தங்கள் பெயர் வெளிவராமல்தான்). தங்கள் சம்மதத்துடன் தான் ஜுலியன் அசாஞ்சே தம்முடன் உறவு கொண்டதாகவும் பத்திரிகைகளில் ஒத்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

சுவீடனில் விக்கிலீக் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சேயின் சட்டவாளராக செயல்படும் பி ஹன்ரிங் தன்னிடம் ஜூலியன் அசாஞ்சே மீது சுமத்தப்பட்டுள்ள கற்பழிப்புக் குற்றச்சாட்டு தொடர்பாக முக்கிய தகவல் உள்ளதாகவும் அதை வெளியிட சட்டம் தன்னைத் தடுப்பதாகவும் கூறியுள்ளார். சுவீடன் அரச புலன் விசாரணைப் பத்திரங்களின்படி அசங்கே தம்முடன் பாலியல் வல்லுறவு புரிந்ததாகக் குற்றம் சாட்டும் இரு பெண்களும் பொய் சொல்கிறார்கள் என்றும் அவர்கள் ஒரு இரகசிய ஏற்பாட்டின் பேரில் செயற்படுகிறார்கள் என்றும் சொல்கிறார் ஜூலியன் அசாஞ்சேயின் சட்டவாளர் பி. ஹன்ரிங். மேலும் பி. ஹன்ரிங் தெரிவிக்கையில் இருவரும் பொறாமையுள்ளவர்களென்றும் ஒருவர் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் செயற்படுகிறார் என்பதை தன்னால் நிரூபிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். தனக்கு பிரித்தானிய நீதிமன்றில் சாட்சியமளிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் இந்த கற்பழிப்பு குற்றச் சாட்டு ஒரு நாடகம் என்று தன்னால் நிரூபிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். சுவீடனில் உள்ள சட்டம் ஜூலியன் அசாஞ்சேயின் சட்டவாளராக செயல்படும் பி ஹன்ரிங் இத்தகவல்களை வெளியிடத் தடை செய்கிறது. மீறி வெளியிட்டால் அவர் தனது தொழிலை இழக்கவேண்டிவரும்.

பிரித்தானியாவில் நாடுகடத்தும் வழக்கு
சுவிடனில் ஜூலியன் அசாஞ்சேயை நாடுகடத்தும் வழக்கு நீதி மன்றத்திற்கு வந்தது. 2010 டிசம்பர் 8-ம் திகதி மறைந்திருந்த அசாஞ்சே பிரித்தானிய காவல்துறையினரிடம் சரணடைந்தார். 2011 பெப்ரவரி 24-ம் திகதி பிரித்தானிய நீதி மன்றம் அசாஞ்சே சுவீடனுக்கு நாடுகடத்தப்படவேண்டும் என்று தீர்ப்பளித்தது. மேன்முறையீடு செய்த அசாஞ்சே உயர்நீதிமன்றிலும் தோல்விகாண்கிறார். 2012 மே மாதம் 30-ம் திகதி பிரித்தானி உச்ச நீதிமன்றமும் அசாஞ்சே நாடுகடத்தப்பட வேண்டும் என உறுதி செய்கிறது. 2012ஆகஸ்ட் 15-ம் திகதி இலண்டனில் உள்ள எக்குவேடர் நாட்டின் தூதுவரகத்தில் அசாஞ்சே அரசிய்ல் தஞ்சம் கோருகிறார். ஆகஸ்ட் 15-ம் திகதி எக்குவேடர் நாட்டு வெளியுறவுத்துறை தமது நாட்டை பிரித்தானிய மிரட்டியதாகக் குற்றம் சுமத்தியது. அடுத்த நால் எக்குவேடர் அரசி அசாஞ்சேயிற்கு அரசியல் தஞ்சம் வழங்கியது.

எக்குவேடர் ஜூலின் அசாஞ்சேயிற்கு அரசியல் தஞ்சம் கொடுத்தவுடன் பிரித்தானியக் காவல்துறை இலண்டனில் உள்ள எக்குவேடர் தூதுவரகத்தைச் சூழ்ந்து கொண்டது. நாற்பதிற்கும் அதிகமான காவற்துறையினர் இதில் ஈடுபட்டனர். அசாஞ்சே தூதுவரகத்திற்கு வெளியில் காலடி எடுத்து வைக்கும் பட்சத்தில் கைது செய்யப்படுவார் என எச்சரித்தனர். அசஞ்சே பொதிகளுக்குள் மறைத்து வைத்துக் கடத்தப்படலாம் என்ற சந்தேகத்தில் தூதுவரகத்தில் இருந்து வெளிவரும் பொதிகள் பைகள் போன்றவை இலத்திரனியல் கருவிகள் மூலம் சோதனை செய்யப்படுகின்றது. சட்ட நடைமுறைகளில் இருந்து தப்ப அசான்சேயிற்கு அரசியல் தஞ்சம் வழங்கியமை தப்பு என்கிறார் பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லிய ஹேக். தென் அமெரிக்காவில் உள்ள ஒரு சிறிய நாடாகிய எக்குவேடர் இந்த ராஜதந்திர இழுபறியில் எவ்வளவு தூரம் தாக்கும் பிடிக்கும் என்பதே இப்போது உள்ள கேள்வி. 1984இல் லிபியத் தூதுவரகத்தில் இருந்து செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு பிரித்தானியப் பெண்காவற்துறையச் சேர்ந்த பெண் ஒருவரைக் கொன்றததைத் தொடர்ந்து பிரித்தானிய தனது தூதுவராலய நிலச் சட்டத்தை மாற்றிக் கொண்டது.

எக்குவேடர் தூதுவராலயத்தில் இருக்கும் ஜூலியன் அசாஞ்சே அதன் சாளரத்தூடாக அல்லது காணொளி மூலமாக வெளியுலகத்திற்கு ஒரு உரையை ஆற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானிய அரசு ஜூலியன் அசாஞ்சேயைக் கைது செய்ய எக்குவேடருடனான தனது இராஜதந்திர உறவுகளை முறிக்குமா? பின்னிருந்து இயக்கும் அமெரிக்காவுக்தான் பதில் தெரியும்.

Wednesday, 15 August 2012

சிரிய அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றதா?

விமானப்படை வலு போரை வெல்லும் என்பதை அலேப்பே பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் மீளக் கொண்டுவந்ததன் மூலம் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் படைகள் நிரூபித்துள்ளன. ஆனால் சிரியாவில் இருந்து தப்பி ஓடிய சிரிய முன்னாள் பிரதமர் ஹிஜாப் ரியாத் சிரியாவின் 30% நிலப்பரப்பை மட்டுமே பஷார் அல் அசாத்தின் படைகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன  என்கிறார். ஆனால் சில ஊடகவியலாளர்கள் ஹிஜாப் ரியாத் சற்று மிகைப்படுத்திக் கூறுகின்றார் என்கின்றனர். அரபு இஸ்ரேலிய மோதலிலும் பார்க்க சியா முசுலிம்களுக்கும் சுனி முஸ்லிம்களுக்கும் இடையிலான மோதல் வலுத்து வருகிறது. இது அரபு நாடுகளிடை ஒரு பெரும் குழப்பத்தை உருவாக்கலாம். துனிசியப் புரட்சியுடன் தொடங்கிய அரபு வசந்தம் 2011 மார்ச் 15-ம் திகதி சிரியாவிற்கும் பரவியது.

சிறுபான்மை ஆட்சி

சிரியாவில் பெரும்பான்மையான இனக்குழுமம் சுனி முஸ்லிம்கள். ஆனால் அங்கு ஆட்சியைக் கையில் வைத்திருப்பவர்களும் அதிகமான அரச படையில் இருப்பவர்களும் அலவைற் முஸ்லிம்கள் என்ற இனக் குழுமம். அலவைற் இனக்குழுமம் மொத்த மக்கள் தொகையில்20% மட்டுமே.  கிளர்ச்சிக்காரர்களில் பெரும்பானமையானவர்கள் சுனி முஸ்லிம்கள். அலவைற் இனக்க்குழுமம் கிரித்தவர்களும் மோதாமல் அவர்களையும் அணைத்து நடக்கிறது. சிரிய அதிபர் பஷார் அல் அசாத பதிவியில் இருந்து விலக அனுமதிதால் அது அலவைற் இனக்குழுமத்திற்கு பெரும் அழிவை ஏற்படுத்தும். அதனால் அலவைற் இனப் படையினர் கிளர்ச்சிக்காரர்களைக் கொல்லாவிட்டால் கொல்லப்படுவீர்கள் என்ற நிலையில் உறுதியாகப் போராடுகின்றனர். பஷார் அல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களுக்கான ஆதரவு மன்னராட்சி நிலவும் சவுதி அரேபியாவிலிருந்தும்  கட்டாரிலிருந்தும் கிடைக்கின்றன. இதனால் பஷார் அல் அசாத்திற்குப் பிறகு ஒரு நல்ல மக்களாட்சி சிரியாவில் நிறுவப்படுமா என்ற சந்தேகம் எழும்பிஉள்ளது.

பாவியான கோஃபி அனன்
பதினேழாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட பின்னர் சிரியாவில் சமாதானத்தைக் கொண்டுவர என ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட சிறப்புத் தூதுவரான அதன் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அனன் தனது ஆறு அம்சத் திட்டத்தை சிரிய ஆட்சியாளர்களும் கிளர்ச்சிக்காரர்களும் ஏற்றுக் கொள்ளாததால் பதவி விலகினார். அவர் ஈரான் சென்று பேச்சு வார்தை நடாத்தியது வட அமெரிக்காவையும் மேற்கு ஐரோப்பியாவையும் கடும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியது. பல தரப்பில் இருந்தும் கோஃபி அனன் மீது கண்டனக் கணைகள் பாய்ந்தன. ஐநா பாதுகாப்புச் சபைமீது காட்டமாகக் குற்றம் சுமத்திவிட்டு கோஃபி அனன் பதவி விலகினார். பின்னர் ஐநாவின் பொதுச்சபை கூட்டப்பட்டு அதில் பாதுகாப்புச் சபை சிரியப் பிரச்சனையில் எதுவும் செய்யாமையைக் கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.  இது பாதுகாப்புச் சபையில் சிரிய ஆட்சியாளர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட மூன்று தீர்மானங்களையும் தமது இரத்து அதிகாரம்(வீட்டோ) மூலம் தடை செய்த இரசியாவையும் சீனாவையும் ஆத்திரப்படுத்தியது. தற்போது சிரியாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இருபத்தி மூன்றாயிரமாக அதிகரித்துள்ளது. அரபு லீக்கிற்கும் ஐநாவிற்குமான சிரியப் பிரச்சனையை கையாளும் புதிய தூதுவரை நியமிப்பதில் இழுபறி நிலவுகிறது. சிரியா அல்ஜீரிய இராசதந்திரி லக்தர் பிரஹிமியை ஏற்றுக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தயங்கிய மேற்கு தவிக்கிறது

சிரியக் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளிக்கத் தயங்கி மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவை மட்டும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் ஐக்கிய அமெரிக்காவும் வழங்கி வந்தன. பஷார் அல் அசாத்திற்குப் பிறகு ஒரு நிலையான அரசு அமையுமா? சிறுபான்மை கிருத்தவர்களின் பாதுகாப்பு அசாத்திற்கு பிறகு எப்படி இருக்கும்? அசாத்தின் பின்னர் இசுலாமிய அடிப்படைவாதிகள் சிரியாவைக் கைப்பற்றுவார்களா? நாம் வழங்கும் படைக்கலன்கள் புனிதப் போர்வாதிகளின் கையில் போய்ச் சேருமா? இப்படியான சந்தேகங்கள் ஈராக், எகிப்து ஆகியவற்றில் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் ஐக்கிய அமெரிக்காவும் பெற்ற பட்டறிவில் இருந்து எழுந்தமையே அவர்கள் சிரியக் கிளர்ச்சியாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவு வழங்கக் காரணங்களாய் அமைந்தன. ஆனால் இப்போது சிரியக் கிளர்ச்சியாளர்களுக்கு வளைகுடா நாடுகளில் இருந்து கிடைக்கும் நிதி மற்றும் படைக்கல ஆதரவு புனிதப் போர்வாதிகள் கைகளில் போய்ச் சேருகின்றன என்பதை உணர்ந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளும் ஐக்கிய அமெரிக்காவும் பதற்றம் அடைந்துள்ளன. அத்துடன் அலெப்பே பிராந்தியத்தை அசாத்தின் படைகள் மீளக் கைப்பற்றியதும் அவர்களை தமது தந்திரோபாயத்தை மீள் பரிசீலனை செய்ய வைத்துள்ளன.

பிராந்திய ஆதிக்கப் போட்டி

சிரியாவில் பஷார் அல் அசத்தின் ஆட்சி கவிழ்ந்தால் அது ஈரானின் ஆட்சியில் இருப்பவர்களுக்கும் ஆபத்தாக அமையும் அரபு நாடுகளின் படைப்பலச் சமநிலை மேற்கு நாடுகளுக்குப் பெரும் சாதகமான நிலையை உருவாக்கும் என்று சீனாவும் இரசியாவும் அஞ்சுகின்றன.  ஐநா பொதுச் சபைத் தீர்மானத்தை அடுத்து இரசியா சிரியாவிற்கு மூன்று கடற்படைக் கலன்களை அனுப்பியதாகச் செய்திகள் வெளிவந்தன ஆனால் இச்செய்தியை இரசியா மறுத்துள்ளது. சில ஆய்வாளர்கள் சிரிய அதிபர் பஷார் அல் அசாத் தனக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியை சாதுரியமாக சுனி-அலவைற் இனக்குழும மோதலாக மாற்றிவிட்டார் என்கின்றனர். அசாத்தை பதவியில் இருந்து அகற்றுவதில் சிரியக் கிளர்ச்சியாளர்களும் மேற்குலக நாடுகளும் அமெரிக்காவும் இருக்க் அதற்கு ஆதரவாக சவுதி அரேபியா போன்ற நாடுகள் இருக்க அசாத்தை பதவியில் இருந்து அகற்ற விடுவதில்லை என்ற உறுதியில் இரசியாவும் சீனாவும் ஈரானின் துணையுடன் இருக்க சிரியாவில் இரத்தக்களரி மோசமடைவது நிச்சயம். தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடமிருந்து சிரியா தொடர்பான தீர்க்கமான முடிவையோ அல்லது பிரச்சனைக்கு உரிய படை நடவடிக்கைகள் எதையும் இப்போது அமெரிக்கவிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது, மோதலைத் துருக்கிக்கும் பரவவிட்டு பஷார் அல் அசாத்தை தொலைக்கும் தந்திரத்தை அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் கையாளலாம்.

அமெரிக்காவின் இரட்டை வேடம்

மற்றத் தீவிரவாத அமைப்புக்கள் ஆட்கடத்தல் செய்தால் அதை பயங்கரவாத நடவடிக்கை எனக் கண்டிக்கும் ஐக்கிய அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் சிரிய அரசுக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் ஈரானியர்களைக் கடத்தி வைத்திருப்பதை கண்டிக்கவில்லை. இக்கடத்தல்கள் சிரியக் கிளர்ச்சியாளர்களுக்கு ஒரு பிடியைக் கொடுத்துள்ளன என்று சில பத்திரிகைகள் பாராட்டுகின்றன. ஈரானிய செய்தி நிறுவனமான ஃபார்ஸ் சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் சியா முசுலிம்களைக் கண்டபடி வெட்டிக் கொல்கின்றனர் என்கிறது.  மேலும் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் சவுதி அரேபிய மதகுரு முகமட் அல் அரிஃபி சிரியக் கிளர்ச்சிக்காரர்களை அவர்களது கொடுஞ்செயல்கள் அடங்கிய படங்கள் காணொளிப்பதிவுகள் வெளியில் வராமல் பார்த்துக் கொள்ளும் படி அறிவுறுத்தியுள்ளார் என்கிறது. ஈரான் தனது நாட்டிலிருந்து சமய யாத்திரை மேற் கொண்டவர்களை சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் கைது செய்து வைத்திருக்கிறார்கள் என்கிறது. சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் தாம் கைது செய்து வைத்திருக்கும் ஈரானியர்கள் அல் அசாத்தின் படைகளுடன் இணைந்து போர் புரிபவர்கள் என்கின்றனர்.

சிரியக் கிளர்ச்சி துருக்கிக்குப் பரவுமா?

சிரியாவில் பெரும்பான்மையான இனக்குழுமம் சுனி முஸ்லிம்கள். ஆனால் அங்கு ஆட்சியைக் கையில் வைத்திருப்பவர்களும் அதிகமான அரச படையில் இருப்பவர்களும் அலவைற் முஸ்லிம்கள் என்ற இனக் குழுமம். அலவைற் இனக்குழுமம் மொத்த மக்கள் தொகையில்20% மட்டுமே.  கிளர்ச்சிக்காரர்களில் பெரும்பானமையானவர்கள் சுனி முஸ்லிம்கள். சிரியாவில் நடப்பது ஒரு சுனி-அலவைற் இனக்குழுமங்களுக்கு இடையிலான மோதல்களாகவே கருதப்படுகிறது, துருக்கியில் பெரும்பான்மை இனத்தவர் சுனி முஸ்லிம்கள். அண்மைக் காலங்களாக அவர்கள் தமது நாட்டை சுனி முஸ்லிம் இனக்குழுமங்கள் மயப்படுத்தி வருகின்றனர். ஆனால் துருக்கியில் இருபது மில்லியன் அலவைற் முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். சிரிய உள்நாட்டுப் போரினால் சிரியாவில் இருந்து துருக்கிக்குத் தப்பி ஓடிய சுனி முஸ்லிம்கள் அங்குள்ள அலவைற் இனத்தவர்கள் மேல் தமது ஆத்திரத்தைக் காட்டுகிறார்கள். இது சிரிய உள்நாட்டுப் போர் துருக்கிக்கும் பரவுமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. சிரியர்களை ஈரான அரசு கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராகப் போர் புரிவதற்கு பயிற்ச்சி அளித்துத் தயாராக்கி வருகிறது என்பதை அறிந்த ஐக்கிய அமெரிக்க அரசின் பாதுகாப்புத் துறையினர் கலவரமடைந்துள்ளனர்.

விமானப் பறப்பற்ற பிராந்தியம்

லிபியாவில் மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் கைகளை ஓங்க வைத்தது நேட்டோப் படையினர் பொதுமக்களைப் பாதுகாப்பது எனற போர்வையில் லிபியாவை விமானப் பறப்பற்ற பிரதேசமாக பிரகடனம் செய்ததும் அதற்காக கடாஃபியின் படை நிலைகள் மீது நேட்டோ விமானங்கள் தாக்குதல் நடாத்தியமையுமே. அமெரிக்கா ஏற்கனவே தனது நட்பு நாடான துருக்கியுடன் சிரியாவில் ஒரு விமானப் பறப்பற்ற பிராந்தியத்தை உருவாக்குவது தொடர்பாக கலந்து ஆலோசித்து உள்ளது. துருக்கிப் படையினர் சிரிய எல்லையில் பல படை ஒத்திகைக்களை நடாத்தி வருகிறது.  லிபியாவில் செய்தது போல் ஒரு ஐநா பாதுகாப்புச் சபைத் தீர்மானத்தின் மூலம் விமானப்பறப்பற்ற பிரதேசத்தை சிரியாவில் ஏற்படுத்த சீனாவோ இரசியாவோ அனுமதிக்கப் போவதில்லை. துருக்கியிலும் ஜோர்தானிலும் ஏற்பட்டுள்ள சிரிய அகதிப் பிரச்சனையைச் சாட்டாக வைத்து ஒரு ஒரு தலைப்பட்சமான விமானப் பறப்பற்ற பிரதேசதை சிரியாவில் பிரகடனப்படுத்தலாம்.

தப்பி ஓடுவோரும் தருணம் பார்த்துக் காத்திருப்போரும்

சிரிய அதிபர் அல் அசாத்தின் அணியில் இருந்து தப்பி ஓடுவோர் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலர் தப்பி ஓடாமல் உள்ளேயே உளவாளிகளாகவும் sleeper cells தருணம் பார்த்துக் காத்திருக்கும் படையினராகவும் இருக்கின்றனர். இது  அசாத்தின் படைகளுக்கு பெரும் சவாலாக அமையலாம். லிபியத் தலைநகர் திரிப்போலி விரைவாக வீழ்ச்சியடைந்தமைக்கு sleeper cells பெரும் பங்காற்றின.

எண்ணப்படும் அசாத்தின் நாட்கள்
ஐக்கிய அமெரிக்க மூதவை உறுப்பினர்கள் சிலர் சிரியாவில் தமது நாடு நேரடியாகத் தலையிட வேண்டும் என்று குரல் கொடுக்கின்றனர். சிரியக் கிளர்ச்சியாளர்களுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகள் கிடைத்தால் அவர்கள் போரைத் தமக்கு சாதகமாக மாற்றிக் கொள்வர். அமெரிக்க அரசச் செயலர் ஹிலரி கிளிண்டனும் துருக்கிக்கு ஒரு திடீர்ப்பயணத்தை மேற் கொண்டார். பிரான்சின் முன்னாள் அதிபர் பிரான்சு உடனடியாக சிரியாவில் நேரடித் தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என்கிறார். அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கு முன்னர் ஒரு நிகராளிப் போரை(Proxy war) தனது ஆதரவு நாடுகள் மூலம் செய்து அசாத்தைப் பதவியில் இருந்து அகற்றலாம். அல்லது தேர்தலின் பின்னர் ஒரு நேரடித் தலையீட்டை மேற் கொள்ளலாம்.

Tuesday, 14 August 2012

டெசோ: தீர்மானங்கள் பாவங்களைக் கழுவுமா?

மத்தியில் இத்தாலியாளும் மாநிலத்தில் கன்னடத்தியும் பல முட்டுக் கட்டைகள் போட்ட போதும் கல்லக்குடி கொண்ட முத்தமிழ்காவலர் , தெலுங்கு தேசத்தில் இருந்து வந்த செம்மல், கலைஞர் கருணாநிதி, அவரைப் பொறுத்தவரை, வெற்றீகரமான ஒரு டெசோ மாநாட்டை நடாத்திவிட்டார்.

 கலா நிதி விக்கிரமபாகு கருணாரட்ன
டெசோ மாநாட்டில் முக்கியமான அம்சம் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவாளரும் சிறந்த சிங்கள இடதுசாரி அரசியல்வாதியும் சிங்களப் பேரினவாதிகளால் பிரபாகரனின் சித்தப்பா என விமர்சிக்கப்படுபவருமான நவசமாஜக் கட்சித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணரடன கலந்து கொண்டதே.  டெசோ மாநாட்டில் அவரது உரையை இடையில் நிறுத்திவிட்டார்கள். அவர் அங்கு கூறிய முக்கிய கருத்துக்கள்:
  • ஐக்கிய நாடுகள் சபையால் இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. அதனால் எந்தப் பலனும் ஏற்படாது. வெறும் விளம்பரம் மட்டுமே கிடைக்கும்
  • உலகெங்கும் உள்ள தமிழர்களைக் குறிப்பாக தமிழகத்தில் உள்ளவர்களைத் திரட்டி எழுச்சி ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.
  • இலங்கைப் பிரச்சினையில் மத்திய காங்கிரஸ் அரசின் நிலைப்பாடு தவறானதாகும். அதனால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேற வேண்டும்.
  • இலங்கை அரசியல் அமைப்பிற்கான 13 வது திருத்தச் சட்டத்தில் நம்பிக்கை இல்லை.
  • இறுதிப் போர் என்ற போர்வையில் ஒரு இனக்கொலை நடந்தது அதில் இந்திய அரசும் சம்பந்தப்பட்டிருந்தது.
 இவரின் பேச்சு இடை நிறுத்தப்பட்டது ஏன்? இலங்கை இனக்கொலையில் இந்தியாவின் திருகுதாளங்களை இவர் அம்பலப் படுத்தப் போகிறார் என்பதாலா? இலங்கை இனக்கொலையில் இந்தியாவிற்குப் பங்கிருக்கின்றது என்கிறார் கலாநிதி கருணாரட்ன. இந்தியாவின் உதவியுடனேயே போரில் வென்றோம் என அடிக்கடி கூறிகின்றனர் ராஜபக்சே சகோதரர்கள். இலங்கையில் நடந்த போரில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழகத்தில் கொண்டுவரப்பட்டபோது அதை மாற்றி இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாகக் மாற்றியது இந்தியா. இந்தியா ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைத்த அநியாயங்கள் யாவற்றிற்கும் இந்தியா ஆளும் கூட்டணியில் ஒரு கட்சி என்பதால் கருணாநிதிக்கும் பங்குண்டு. இவை நடக்கும் போது அவர் தனது கட்சியினரைன் மந்திரிப் பதவிகளைத் தூக்கி எறிந்து விட்டு மக்களுடன் இணைந்து போராடியிருந்திருக்க வேண்டும் அது செய்யவில்லை.

டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

- இலங்கை போர்க் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
- தமிழர் பகுதிகளில் இருந்து இலங்கை ராணுவத்தை வெளியேற்ற வேண்டும்
- இலங்கையில் நடைபெறும் அநீதிகளை இந்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? ஈழத் தமிழர் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே தீர்மானித்துக் கொள்ள வகை செய்யும் தீர்மானத்தை ஐ.நா. மன்றத்தில் இந்தியா கொண்டுவர வேண்டும்
- இலங்கையில் தமிழ் மொழி அடையாளங்கள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும்
- இன்றைய இலங்கையில் ராணுவத்தின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. ராணுவ முகாமாக காட்சியளிக்கிறது இன்றைய தமிழீழம் தமிழர் பகுதிகளில் வலிந்து குடியமர்த்தப்பட்டுள்ள சிங்களர்களை உடனே வெளியேற்ற வேண்டும்
- தமிழர் பகுதியில் இயல்பு நிலை திரும்ப இலங்கை அரசை ஐ.நா. அவை வலியுறுத்த வேண்டும்
- அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்று சிறைகளில் வாடும் தமிழர்களை விடுதலை செய்வதில் ஐ.நா. அகதிகள் சபை தலையிட வேண்டும்
- இந்தியாவில் உள்ள அனைத்து இலங்கை அகதிகளுக்கும் இந்திய குடியுரிமை அல்லது அவர்கள் இந்தியாவில் நிரந்தரமாக வாழ வழிவகை செய்ய வேண்டும்
- அகதிகள் தொடர்பான ஐ.நா. வின் ஒப்பந்தத்தை இந்தியாவும் பின்பற்ற வேண்டும்
- ஐ.நா. மூலம் தமிழ் மக்களிடத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் .ஈழத் தமிழர் பிரச்சனை தெற்காசிய பிரச்சனையாக அறிவிக்கப்பட வேண்டும்
- தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட வேண்டும்
- தமிழக மீனவர் படுகொலைக்கு முடிவுகட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும்
- தமிழகத்தின் மண்டபம் அல்லது தனுஷ்கோடியில் இந்திய கடற்படை முகாம் அமைக்க வேண்டும்
- தமிழர் பகுதிகளில் மறுவாழ்வு பணிகளை கண்காணிக்க பன்னாட்டுக் குழு ஆமைக்க வெண்டும்.
- இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இலங்கை படையினருக்கு பயிற்சி கொடுக்கக் கூடாது
- டெசோ மாநாட்டில் பங்கேற்போரை கண்காணிப்போம் என்ற இலங்கை அரசின் மிரட்டலுக்கு கண்டனம்
- டெசோ மாநாட்டுக்கு தடை விதித்து இடையூறு செய்த அதிமுக அரசுக்கு கண்டனம்.

இந்திய வெளியுறவுக் கொள்கையை மாற்ற முடியுமா?
இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாயின் இந்திய அரசின் வெற்யுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்படவேண்டும். இந்திய வெறியுறவுத் துறை தனது கொள்கை இந்திய தேசிய நலனை அடிப்படையானதாகவே இருக்கும். இந்தியாவின் ஒரு பிராந்தியத்தின் மக்களின் உணர்ச்சிகளை கருத்தில் கொண்டதாக இருக்க மாட்டாது என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுக்கச் செய்வதில் அங்குள்ள பார்ப்பன சக்திகள் வெற்றி கண்டுள்ளன. இந்த பார்ப்பன சக்திகளை முறியடித்து இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை மாற்ற கருணாநிதியாலும் முடியாது ஏன் ஒட்டு மொத்தத் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளாலும் முடியாது. இலங்கையில் ஒரு தனிநாடு தமிழர்களுக்கு என்று அமைவதோ அல்லது ஒரு சுயாட்சியுடன் கூடிய அதிகார அலகு அமைவதோ இந்தியப் பாதுகாப்பிற்கு எந்த இடையூற்றையும் கொடுக்காது. பங்களாதேசப் போரின்போது இலங்கை பாக்கிஸ்தானுக்க்கு உதவுவது தொடர்ப்பாக இந்தியப் பாராளமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது இந்தியாவால் இலங்கையை ஒன்பது நிமிடங்களில் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றார் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஜெகஜீவன் ராம். மேலும் வளர்ச்சி அடைந்த இந்தியாவால் ஒரு தமிழ் ஈழ தேசம் தனக்கு பாதகமாகப் போகவிடாமல் தடுக்க முடியும். இருந்தும் தமிழர்களுக்கான தனிநாடு இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற பொய்ப்பிரச்சாரத்தை இந்தியா முழுவதும் பரப்பியுள்ளனர் பார்ப்பன சக்திகள். இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றச் செய்வதாயின் இலங்கைத் தமிழர்களுக்கு உதவாவிடில் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு இந்தியாவில் வாழும் தமிழர்களால் ஆபத்து ஏற்படும் என்பதை தமிழ்நாட்டில் வாழும் எல்லாத் தமிழர்களும் இந்திய மத்திய அரசிற்கு உணர்த்த வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நிலையை உருவாக்காமல் மாநாடு கூடுவதும் தீர்மானங்கள் போடுவதும் எந்தப் பயனையும் ஈழத் தமிழர்களுக்குத் தரப்போவதில்லை. மாநாடுகளும் தீர்மானங்களும் கழகக் கண்மணிகளை ஏமாற்ற மட்டுமே பயன்படும்.

தீராத பாவம் சுமக்கின்றோம்
இப்போது உலகம் எங்கும் வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரும்  தாம் வாழ்ந்த காலத்தில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்காத குற்றம் புரிந்துள்ளனர். மன்னன் டங்கனைக் கொன்ற மக்பெத்தின் கைகளில் உள்ள இரத்தத்தைக் கழுவும் படி மக்பெத்தின் மனைவி கூறிய போது பெருங்கடல் நீராலும் என் கையில் உள்ள கறையைப் போக்க முடியாது என்றான் மக்பெத். அது போல நாம் எத்தனை மாநாடு கூடினாலும் எத்தனை தீர்மானங்கள் போட்டாலும் நாம் ஈழத்தில் மூன்று இலட்சம மக்கள் கொல்லப்பட்ட போது கையாலாகதவர்களாக குற்றத்திற்கு மன்னிப்பு இல்லை.

Monday, 13 August 2012

இலண்டன் ஒலிம்பிக் மீதான உலகப் பார்வை.

சிரியக் கிளர்ச்சியையும் உலகப் பொருளாதார நெருக்கடியையும் சூடு பிடிக்கும் அமெரிக்கத் தேர்தலையும் ஒரு புறம் தள்ளிவிட்டு உலகம் இரு வாரங்களாக இலண்டனை அவதானித்துக் கொண்டிருந்தது. அழுகுணி கரு மேகங்கங்கள் சூழ்ந்த நகரம் என்று அமெரிக்கர்கள் இலண்டன் நகரத்தைக் கிண்டலடிப்பார்கள். அவர்களே இலண்டன் புது மணப் பெண்போல் காட்சியளித்தது என்றனர்.

இயற்கை அன்னைக்குத் தங்கப் பதக்கம்.
பாக்கிஸ்த்தான் பத்திரிகையின் மூடத்தனமான கருத்துப்படம்
இலண்டனில் ஒலிம்பிக் என்றவுடன் அதை மழை கண்ட நேரத்தில் பெய்து குழப்பும் என்பதுதான் முதலில் வெளிவந்த கருத்து. ஒலிம்பிக் நடக்கும் வேளையில் இலண்டன் காலநிலை சீராக இருந்தது. இதுதான் இலண்டன் ஒலிம்பிக்கின் பெரும் வெற்றி. இலண்டனில் ஒலிம்பிக் என்றவுடன் அங்கு பெரும் குண்டுத்தாக்குதல் நடந்தது. இலண்டன் ஒலிம்பிக்கில் பாதுகாப்பு பெரும் பிரச்சனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முதன் முதலாக ஒலிம்பிக் திடலில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் பொருத்தப்பட்டன. இலண்டன் ஒலிம்பில் ஒரு படைத்துறை மயமாக்கப்பட்ட ஒலிம்பிக்காக இருக்கும் என்று குற்றம் சாட்டப்பட்டது. போதாக் குறைக்கு காவலாளிகள் பற்றாக் குறையால் படைத்துறையினர் தொண்டர் சேவை அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் தங்கள் பணிவு கலந்த சேவையாலும் சாதாரண உடையில் செயற்பட்டதாலும் அக்குற்றச் சாட்டு தவிடு பொடியானது. இலண்டன் தெருக்களில் வாகன ஓட்டிக்கள் ஒவ்வோரு சதுர அங்குலத்திற்கும் போட்டி போடுவார்கள். அந்த அளவு வாகன நெருக்கடி நிறைந்த நகரம் அது. அங்கு விளையாட்டு வீரர்களின் போக்கு வரத்து சிரம்மானதாக அமையும் என்று கருதப்பட்டது. சரியான திட்டமிடலாலும் கிழக்கு இலண்டன் பகுதியில் பல போக்கு வரத்துப் பாதைகள் அமைக்கப்பட்டதாலும் தொடரூந்துச் சேவைகள் விரிவாக்கப்பட்டதாலும் ஒலிம்பிக்கின் போது போக்குவரத்து சீராக நடைபெற்றது.


உற்று நோக்கிய நாடுகள்
கடந்த ஒலிம்பிக்கை நடாத்திய நாடு என்ற வகையில் சீனாவும் அடுத்த ஒலிம்பிக்கை நடத்தும் நாடு என்ற வகையில் பிரேசிலும் 2012 ஒலிம்பிக் நடத்த பிரித்தானியாவுடன் கடும் போட்டியிட்ட நாடு என்ற வகையில் பிரான்சும் தாம்தான் உலைன் பெரும் சக்தி என்று நினைத்துக் கொண்டிருக்கும் நாடு என்ற வகையில் அமெரிக்காவும் இலண்டன் ஒலிம்பிக்கை உன்னிப்பாகக் கவனித்தன. சீன  பீஜிங் ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் இல்லாத ஒன்று  இலண்டன் ஒலிம்பிக் விழாவில் இருந்தது என்கின்றனர் சீனர்கள். இலண்டன் ஒலிம்பிக் விழாவிற்கு ஓர் ஆத்மா சேர்க்கப்பட்டிருந்தது என்றனர் சீனர்கள். பிரெசில் நாட்டுப் பத்திரிகைகள் இலண்டன் ஒலிம்பிக்கை பூரணத்துவத்தை அண்டியது (near perfect) என்று சொல்லி இலண்டன் தமக்கு பெரும் சவால் விடுத்து விட்டது என்கின்றன. பிரெஞ்சு ஊடகங்கள் இலண்டனில் மக்களின் நட்புத்தன்னமையைப் பாராட்டின. ஒரு ஊடகவியளாளர் தான் தனது வாழ்நாளின் இறுதிக் கட்டத்தின் போது இலண்டனில் வாழ விரும்புகிறேன் என்றார். ஆனாலும் பிரேஞ்சுப் பத்திரிகைகள் சில தமது மிதிவண்டிப் போட்டியாளர்கள் பிரித்தானியப் போட்டியாளர்களிடம் தோற்றதை ஏற்றுக் கொள்கிறார்கள் இல்லை. இலண்டன் தில்லு முல்லு செய்து விட்டது என்கின்றனர். அமெரிக்கப் பத்திரிகைகள் பல இலண்டனைப் புகழோ புகழ் என்று புகழ்கின்றன.

பிரித்தானிய அரச குடும்பம்
ஒஸ்ரேலியர்களுக்கு பிரித்தானிய இளவரசர் வில்லியவும் கேம்பிரிட்ஜ் இளவரசி கேற்றும் பிரித்தானிய வீரர்களை ஊக்கப்படுத்தியதையும் அவர்கள் வெற்றியடைந்த போது ஆராவரித்து மகிழ்ந்ததையும் கண்டிக்கின்றன. இவர்கள் எமது நாட்டுக்கும் சேர்த்துத்தான் இளவரச இளவரசியாகச் செயற்படுகிறாரகள். எமது நாட்டினதும் வருங்கால அரச அரசியர். அவர்கள் ஏன தமது நாட்டு வீரர்களை ஊக்குவிக்கவில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர். பிரித்தானியப் பத்திரிகைகள் அவர்களை மிகச்சிறந்த இரசிகர்கள் என்று புகழ்கின்றன.

செலவீனம்
இலண்டன் ஒலிம்பிக் ஒரு சிக்கனமான ஒலிம்பிக் என்று கூறலாம். பல்லாயிரக்கணக்கானோர் தொண்டர் சேவை அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இலண்டன் ஒலிம்பிக்கிற்கான நிதி பல்வேறு வழிகளில் பெறப்பட்டது. 2006-ம் ஆண்டிலிருந்து நகராட்சிச் சபை வரிகளை இருபது பவுண்களால் அதிகரிக்கச் செய்ததன் மூலம் 625 மில்லியன் பவுண்கள் சேகரிக்கப்பட்டது. இலண்டன் அபிவிருத்தி முகவரகத்திடம் இருந்து இருநூற்றைம்பது மில்லியன் பவுண்கள் பெறப்பட்டது. ஒன்றரை பில்லியன் பவுண்கள் லொத்தர் மூலம் பெறப்பட்டது. மொத்தச் செலவீனம் ஒன்பது பில்லியன்கள். வர்த்தக நிறுவங்களின் விளம்பர்ங்கள் மூலமும் பெருந்தொகைப் பணம் பெறப்படும்.

உன்னதமான முகாமைத்துவம்
பாரிய நிகழ்வுகளைச் சிறப்பாக செய்து முடிக்கும் திறன் பிரித்தானியர்களிடம் உண்டு. அத்துடன் நேரம் தவறாமை அவர்களது அடுத்த சிறப்பு அம்சம். மூன்றாவதாக பாதிட்டுக்குள் செலவை கட்டுப்படுத்தும் திறனும் அவர்களிடம் உண்டு. ஒலிம்பிக் ஏற்பாட்டில் பிரித்தானியர்களின் இந்தத் திறமை நன்கு பயன்படுத்தப்பட்டது. நன்கு வெளிப்படுத்தப்பட்டது. பல விளையாட்டுத் துறை விமர்சகர்களும் ஒலிம்பிக் அவதானிகளும் பிரித்தானியா ஒலிம்பிக் போட்டியை மிகச் சிறப்பாக ஒழுங்கு செய்திருந்ததைப் பாராட்டுகிறார்கள். பன்னாட்டு ஒலிம்பிக் குழுத் தலைவர் இலண்டன் கடந்த இரு வாரங்களாக விளையாட்டை பல அம்சங்களில் புத்துணர்வூட்டியது( refreshed the game in many aspects) இலண்டன் 2012 ஒரு உன்னதமான ஒலிம்பிக் என்றார்.

வெற்றிடமான கதிரைகள்
ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்பத்தில் பல இடங்களில் கதிரைகள் வெற்றிடமாக இருந்ததும் பலர் வெளியில் நுழைவுச் சீட்டுக் கிடைக்காமல் தவித்ததும் பலத்த கண்டனங்களுக்கு உள்ளாகின. ஆனால் பல தனியார் நிறுவங்கள் அந்த கதிரைகளுக்கு உரிய நுழைவுச் சீட்டை வாங்கியிருந்தமை கண்டறியப்பட்டது. அந்த நிறுவனங்களின் ஊழியர்களும் அந்த நிறுவங்களிடமிருந்து பரிசாகப் பெற்றவர்களும் வேறு பல காரணங்களுக்காக அங்கு வராமல் போனதும் கண்டறியப்பட்டது.

தோல்வி வேண்டியதால் வெளியேற்றப்பட்ட வீரர்கள்
எட்டு பெண் பட்மின்ரன் வீராங்கனைகள் தோல்வியடைவதற்காக விளையாடிமைக்காக போட்டியில் இருந்து வெளியேற்றப்படனர். அல்ஜீரிய ஓட்டக்காரர் தான் 1500மீட்டர் ஓட்டப்போட்டியில் வெல்வதற்கு சக்தி வேணும் என்பதற்காக 800மீட்டர் ஓட்டப்போட்டியில் விரைவாக ஓடுவதைத் தவிர்த்தார். இதற்காக அவர் போட்டியில் இருந்து விலக்கப்பட்டார். பின்னர் அவரின் உடல் நிலை அன்று சரி இல்லை என்று மருத்துவர்கள் சான்றிதழ் வழங்கியமையால் மீண்டும் சேர்க்கப்பட்டார். தென் கொரிய வீரரைத் தாக்கு தனது டுவிட்டரில் எழுதியமைக்காக சுவிஸ் கால்பந்து வீரர் மைக்கேல் மொர்கனெல்லவை அவரது நாட்டு ஒலிம்பிக் குழுவே போட்டியில் இருந்து நீக்கியது. கிரேக்க நீளப்பாய்சல் வீராங்கனையும் இனக் குரோத வாசங்கள் டுவிட் செய்ததால் விலக்கப்பட்டார்.

கண்டனத்துக்கு உள்ளான பிபிசி
இலண்டனைப் புகழும் பல ஊடகங்கள் பிபிசி தொலைக்காட்சிச் சேவை பிரித்தானிய வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தமையைக் கண்டித்தன. ஒஸ்ரேலியாவில் ஒரு நாட்டில் ஒலிம்பிக் போட்டி நடக்கும் போது அந்த நாட்டுத் தேசியத் தொலைக்காட்சிகள் உள்நாட்டு வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைத் தடுக்க வேண்டும் என்ற குரல் அமைப்பு ரீதியாக எழுந்துள்ளது. பிபிசியின் இணையத் தளத்தில் ஒலிம்பிக்கில் போட்டியிடும் நாடுகளின் பூகோளப்படங்கள் இணைக்கப்பட்டபோது இஸ்ரேலின் தலைநகர் போடாமல் போனதை இஸ்ரேலியப் பத்திர்கைக்கள் கடுமையாகச் சாடின. பல இசுலாமிய இணையத் தளங்களும் பிபிசியின் பாராபட்சத்தைக் கண்டித்திருந்தன.வெள்ளையர் அல்லாதவர்களைப் பிரித்தானிய வீரர்கள் தோற்கடிக்கும் போது பிபிசி அதிக மகிழ்ச்சியடைந்தது என்கின்றன சில இணையத் தளங்கள். அமெரிக்க ஊடகங்கள் பிபிசி பாராபட்சமாக நடக்கவில்லை என்கின்றன.

பொருளாதாரம்
ஒலிம்பிக் போட்டிகளின் மூலம் பிரித்தானியப் பொருளாதாரத்திற்கு 13பில்லியன் பவுண் பெறுமதியான மதிப்பு உயர்வு ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது. ஒலிம்பிக்கின் போது இலண்டன் நகரத்தில் பெரும் வாகன நெருக்கடி ஏற்படும் என்ற செய்தி பலமாக அடிபட்டதால் பலரும் இலண்டன் செல்வதைத் தவிர்த்தனர். உல்லாசப் பிரயாணிகளும் இலண்டர் செல்வதைத் தவிர்த்தனர். இதனால் இலண்டன் நகர வர்த்தகர்களுக்கு வருமான இழப்பு ஏற்பட்டது. மேற்கு முனை இலண்டன் நகரில் சில நாடக இசை அரங்குகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

களத்திலும் சாதித்த பிரித்தானியர்கள்
ஒரு நாட்டில் ஒலிம்பிக் நடக்கும் போது அந்த நாட்டு வீரர்கள் வழமையிலும் அதிக வெற்றி பெறுவது வழக்கம். பிரித்தானியாவும் அதற்கு விதி விலக்கல்ல. டெனிஸில் பெற்ற வெற்றி போற்றத்தக்கது. பிரித்தானியர்களுக்குப் பிடித்தமான கால்பந்தாட்டப் போட்டியில் தண்ட உதையில் இங்கிலாந்து தோல்வியடையும் வழமை ஒலிம்பிக்கிலும் தொடர்ந்தது. அதுவும் ஒரு ஆசிய நாடான தென் கொரியாவிடம் பிரித்தானிய அணி தோல்வியைக் கண்டது. இரசிய விளையாட்டுத் துறை அமைச்சர் பிரித்தானியர்களும் சீனர்களைப் போலவே மோசமானவர்கள் என்றார். பிரித்தானிய இரசிகர்கள் தங்கள் நாட்டு வீரர்களுக்கு மட்டும் ஆர்பரித்து ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பது அவரது குற்றச் சாட்டு.

பொய்பிக்கப்பட்ட எதிர்பார்ப்புக்கள்
இலண்டன் ஒலிம்பிக் தொடங்க முன்னர் பல முனைகளிலும் இருந்தும் பல எதிர்மறையான எதிர்பார்ப்புக்கள் முகாமை, காலநிலை, பாதுக்காப்பு, போக்குவரத்துத் தொடர்பாக எழுந்தன. அவையாவும் பொய்பிக்கப்பட்டுவிட்டன. பிரித்தானியர்கள் இப்போது தம்மைத் தாமே புகழ்ந்து பெருமைப் பட்டுக் கொள்கின்றனர். தம்மைப் பற்றிய தமது மற்றவர்களினதும் கருத்துக்களுக்கு இலண்டன் ஒலிம்பிக் ஒரு திரும்பு முனையாக அமைந்து விட்டதாக பிரித்தானியர்கள் இப்போது கருதுகின்றனர். இந்த வெற்றி மனப்பானம பரவி மற்றத் துறைகளிலும் பிரித்தானியா வெற்றி பெறுமா?

ஒலிம்பிக் தொடர்பான முந்தைய பதிவு:

இலண்டன் ஒலிம்பிக்கும் அரசியலும்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...