Friday, 18 September 2015

அமெரிக்கா ஏன் வட்டி விழுக்காட்டைக் கூட்டவில்லை?

அமெரிக்காவின் மைய வங்கியான Federal Reserve இரண்டு நாட்கள் நடந்த கூட்டத்தின் பின்னர் வட்டி விழுக்காட்டை உயர்த்துவதில்லை என 2015 செப்டம்பர் 17-ம் திகதி முடிவெடுத்துள்ளது. மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப் பட்ட இந்த முடிவு உலகெங்கும் உள்ள நிதி நிறுவனங்களையும் பல வளர்முக நாடுகளின் மைய வங்கிகளையும் நிம்மதிப் பெருமூச்சு விட வைத்துள்ளது. அமெரிக்காவின் செயற்படு வட்டி விழுக்காடு (effective interest rate) சுழியத்திற்கும் 0.25 இற்கும் இடையில் தொடர்ந்து பேணப்படும்.

சீன நிலைமைகள்
2009-ம் ஆண்டில் இருந்து அமெரிக்கா தனது வட்டி விழுக்காட்டை அதிகரிக்காமல் இருக்கின்றது. அமெரிக்காவின் அடுத்த நகர்வு வட்டி விழுக்காடு அதிகரிப்பே என எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் பலர். வட்டி விழுக்காடு அதிகரிப்பு எப்போது என்ற எதிர்பார்ப்பே இருந்தது. சீனாவில் 2015-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பங்குச் சந்தையில் பெரு வீழ்ச்சி ஏற்பட்டதுடன்  சீனாவின் நாணயும் தனது மதிப்பை இழந்தது. அதற்கு முன்னர் அமெரிக்கா 2015 செப்டம்பரில் தனது வட்டி விழுக்காட்டை அதிகரிக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் ஓகஸ்ட்டில் சீனாவில் ஏற்பட்ட நிகழ்வுகளின் பின்னர் செப்டம்பர் மாதம் அமெரிக்கா வட்டி விழுக்காட்டை அதிகரிக்கும் என்பதில் ஐயம் ஏற்பட்டது.

அமெரிக்க மைய வங்கியின் முடிவு சீன உட்படப் பல உலக நாடுகளின் பொருளாதாரம் இன்னும் ஆபத்தான நிலையில் இருக்கின்றது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது.

அமெரிக்கா செய்த அள்வுசார் தளர்ச்சியால் (QE) அமெரிக்க வங்களிடம் பெருமளவு நிதிக் கையிருப்பு உள்ளது. அவற்றைக்கடனாக நிறுவனங்களுக்கும் தனியாருக்கும் வழங்குவதன் மூலம் பொருளாதார  வளர்ச்சி தூண்டப்படும். அதற்கு குறைந்த நிலையில் இருக்கும் வட்டி விழுக்காடு ஓர் உந்து வலுவாக அமையும். வட்டி விழுக்காடு குறையும் போது மக்களினதும் நிறுவனங்களினதும் கடன் வாங்கும் திறன் அதிகரிக்கும். இதனால் அவர்கள் கைக்களில் அதிக பணம் புழக்கம் ஏற்படும். இதனால் நாட்டில் கொள்வனவும் முதலீடும் அதிகரிக்கும். அது பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும். 2015-ம் ஆண்டு அமெரிக்காவின் பொருதாளர வளர்ச்சி எதிர்பார்ப்பை அமெரிக்காவின் மைய வங்கியான Federal Reserve 1.9%இல் இருந்து 2.1%ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்றாலும் அது ஒரு சீரான வளர்ச்சிப்பாதையாக இல்லை.



வட்டி விழுக்காடு குறைக்கப் பட்டு மிகையான பொருளாதார வளர்ச்சி ஏற்படும் போது சில பாதகமன விளைவுகள் ஏற்படும் அதில் ஒன்று விலைவாசி அதிகரிப்பு அல்லது பணவீக்கம். அதை தவிர்க்க வட்டி விழுக்காடு அதிகரிக்கப்படும்.  அமெரிக்காவின் பணவிக்கம் பிரச்சனைக்கு உரிவ வகையில் குறைவானதாக இருக்கின்றது. இது முதலீட்டுக்கு உகந்தது அல்ல.

2008-ம் ஆண்டு உருவான உலகப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஏற்றுமதி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அமெரிக்க வட்டி விழுக்காடு அதிகரிக்கப்படும் போது அதன் டொலரின் பெறுமதி அதிகரிக்கும். இது உலகச் சந்தையில் அமெரிக்கப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கும். இது அமெரிக்காவின் ஏற்றுமதிக்கு  உகந்தது அல்ல.

வட்டி விழுக்காட்டைக் கூட்டினால் வளர்ச்சிப் பாதையில் இயங்கிக் கொண்டிருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு ஒரு வேகத் தடை போட்டது போலாகும்.

பங்குச் சந்தை பெரும் சரிவைச் சந்திக்கும் போது மைய வங்கிகள் வட்டி விழுக்காட்டைக் குறைப்பதுண்டு.  அமெரிக்காவின் பங்குச் சந்தைச் சுட்டி
 2012-ம் ஆண்டில் இருந்து ஒரு சீரான வளர்ச்சியைக் கண்டு கொண்டிருக்கின்றது. ஆனாலும் 2015 ஓகஸ்ட் மாதம் சீனாவில் ஏற்பட்ட பங்குச் சந்தை விலை வீழ்ச்சி அமெரிக்க மைய வங்கியை வட்டி விழுக்காடு அதிகரிப்பை தாமதிக்க வைத்துள்ளது. வட்டி விழுக்காடு குறைக்கப் பட்டவுடன் உலகப் பொருளாதாரம் பற்றிய அச்சம் எல்லா முதலீட்டாளர்களின் மனதையும் ஆட்டிப் படைக்கத் தொடங்கி விட்டது. அதனால் உலகெங்கும் பங்கு விலைகள் சரிவடைந்தன


அமெரிக்காவின் வேலையற்றோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகின்றது.
US Unemployment
ஆனால் இந்த வேலை செய்வோர் தொகை அதிகரிப்பு அமெரிக்காவில் சம்பள உயர்வைக் கொண்டு வரவில்லை. அமெரிக்காவில் இன்னும் வேலையில்லாதவர்களின் தொகையை குறைக்க வேண்டும் என அமெரிக்க மைய வங்கி நினைக்கின்றது.

அமெரிக்காவின் வட்டி விழுக்காடு அதிகரிக்கப்படமாட்டாது என்ற முடிவால் டொலாரின் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டது. சேமிப்புக்களின் நிதிவைப்பு செய்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

2015-ம் ஆண்டின் இறுதியில் ஐக்கிய அமெரிக்காவின் மைய வங்கியான Federal Reserve வட்டி விழுக்காட்டை அதிகரிக்கலாம் என  ஒரு புறம் எதிர்பார்க்கப் படுகின்றது மறுபுறம் அது 2017வரை நடக்காது எனவும் எதிர்வு கூறப்படுகின்றது.

Monday, 14 September 2015

சிரியாவின் இரசியப் படைகள் அமெரிக்காவுடன் முறுகல் நிலையா?

மூன்று இலட்சம் பேர்கள் கொல்லப்பட்ட மனிதப் பேரவலம் ஒரு புறம், கலாச்சாரச் சின்னங்களின் அழிவு மறுபுறம் பிராந்திய அமைதியின்மை இன்னொரு புறம் என நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சிரிய உள்நாட்டுப் போர் இழுபடுகின்றது. 2011இன் ஆரம்பத்தில் தோன்றிய அரபு வசந்தம் துனிசியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது.  லிபியாவில் ஆட்சியாளர் இருக்கின்றார்களா என்ற கேள்வியை உருவாக்கியது. எகிப்தில் முன்பிருந்த நிலையிலும் மோசமான நிலையை உருவாக்கியது. அரபு வசந்த எழுச்சி உருவான போது மேற்கு நாடுகள் 1979இல் கிழக்கு ஐரோப்பாவில் பொதுவுடமை அரசுகள் கவிழ்ந்தது போல் மத்திய கிழக்கிலும் வட ஆபிரிக்காவிலும் தனியாள் ஆட்சிகள் கவிழ்ந்து தமக்கு உகந்த "மக்களாட்சிகள்" உருவாகும் எனக் காத்திருந்தன.

பேர்லின் சுவர் விழுந்த பின்னர் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஒரு திசையில் இயங்கின. இரசிய ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு மேற்கு ஐரோப்பிய பாணியில் அரசுகளை உருவாக்கின. ஆனால் வட ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இப்போது வேறு வேறு திசைகளிலும் ஒன்றிற்கு ஒன்று முரண்பட்ட திசைகளிலும் நகர்ந்து கொண்டிருக்கின்றன. துனிசியாவில் எல்லாம் கெடப் போகின்றது என நினைத்திருந்தவர்கள் ஏமாறினர். எகிப்தில் எல்லாம் கெடப்போகின்றது என எண்ணியவர்களும் எல்லாம் நல்லபடி நடக்கும் என நம்பினவர்களும் ஏமாற்றப்பட்டனர். லிபியாவில் இன்றும் என்ன நடக்கப்போகின்றது எனப் பலரும் அஞ்சுகின்றனர். மும்மர் கடாபியைக் கொன்ற பின்னர் ஒரு பன்னாட்டுப் படையை சிரியாவில் நிறுத்தியிருந்திருக்க வேண்டும் என பல அரசியல் மற்றும் படைத்துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.

சியா முஸ்லிம்களின் ஒரு பிரிவான அலவைற் இனக்குழுமத்தினர் சிரியாவில் ஆட்சியில் இருக்கின்றனர். 74 விழுக்காடு சுனி முஸ்லிம்களைக் கொண்ட சிரியாவில் பஷார் அல் அசாத்தின் ஆட்சி ஒரு சில மாதங்களில் கவிழ்ந்து விடும் என 2011-ம் ஆண்டு எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அசாத்துக்கு விசுவாசமிக்க படையினரும் மதவாதப் போராளிகள் மதசார்பற்ற போராளிகள் எனப் பல்வேறு தரப்பட்ட குழுக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராகப்ப் போராடுவதிலும் பார்க்க தமக்குள் அதிகம் மோதிக் கொண்டனர். இதனால் இன்றுவரை அசாத்தின் ஆட்சி தொடர்கின்றது. அசாத்தின் ஆட்சிக்கு ஈரானும் அதன் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பும் பக்கவலுவாக இருக்கின்றன. அசாத்தின் ஆட்சிக்கு பொருளாதாரரீதியிலும், படைத்துறை ரீதியிலும் அரசுறவியல் ரீதியிலும்  இரசியா ஆதரவு வழங்குகின்றது.

ஈராக்கையும் சிரியாவையும் இணைத்த ஐ எஸ் அமைப்பினர்
ஈராக்கிலும் சிரியாவிலும் பெரு நிலப்பரப்பைக் கைப்பற்றி தமது இஸ்லாமிய அரசை நிறுவிய ஐ எஸ் போராளி அமைப்பினர் இரு நாடுகளிலும் பிரச்சனைகளைச் சிக்கலாக்கியுள்ளனர். சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சியை ஒழிப்பதிலும் பார்க்கவும் ஈராக்கில் மக்களாட்சியை ஏற்படுத்துவதிலும் பார்க்கவும் அதிக கவனம் ஐ எஸ் மதவாதிகளை ஒழித்துக் கட்டுவதில் செலுத்தப் படுகின்றது. மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்த விரும்பும் நாடுகள் ஐ எஸ் அமைப்பை ஒழித்துக் கட்டுவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். இரு நாடுகளிலும் மக்களின் பேரவலங்களை அவர்கள் கருத்தில் கொள்ள வில்லை. குளிர்காலம் தொடங்க முன்னர் ஏதிலி முகாம்களில் இருந்த் வெளியேறிவிட வேண்டும் என்ற விருப்பில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஈராக், சிரியா, ஜோர்தான், லெபனான், துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள ஏதிலி முகாம்களில் இருந்து வெளியேறி மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு நகர்ந்தனர். இவர்களின் பாதைகள் பல வழிகளிலும் அடைக்கப் பட்டதால் ஆபத்து நிறைந்த கடற்பயணத்தை சிறு படகுகள் மூலம் இவர்கள் மேற்கொண்டர். பலர் கடலில் படகுகள் கவிழ்ந்து உயிரிழந்தனர். அதில் அயிலன் குர்தி என்னும் இரண்டு வயதுச் சிறுவனின் இறந்த உடல் கடற்கரையில் ஒதுங்கிய படம் உலகை உலுப்பியது. மேற்கத்தைய ஊடகங்கள் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தன. இது மேற்கு நாடுகள் சிரியாவில் தேவை ஏற்படின் எடுக்கப் போகும் படை நடவடிக்கைகளுக்கு தமது நாட்டு மக்களிடம் ஆதரவு தேடும் தந்திரமாகும்.

காட்டிக் கொடுத்த ஷெல்பிகள்
கடந்த இரண்டு மாதங்களாக பல இரசியப் படையினர் சிரியாவிற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர். இதை இரசியா மறுத்த போதிலும் இரசியப் படையினர் தம்மைத் தாமே எடுத்த படங்களையும் (Selfies) காணொளித் துண்டுகளையும் அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியமை அது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இரசியாவில் தயாரித்த BTR-82A  கவச வண்டிகள் சிரியாவில் நடமாடுவதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் இரசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்கி லவ்ரோவ் இரசியப் படைத்துறை நிபுணர்கள் சிரியப் படையினருக்கு ஆலோசனைகள் வழங்க அனுப்பப்பட்டுள்ளன என்றார். ஏற்கனவே இரசியாவில் இருந்து இஸ்லாமியத் தீவிரவாதிகள் சிரியாவிற்குச் சென்று ஐ எஸ் போராளிகளுடன் இணைவதற்கு  இரசிய உளவுத் துறையானFSB உதவி செய்தாகச் குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டதுண்டு.

இரசியா சிரியாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்திற்கான காரணங்கள்:

1. Tartus துறைமுகத்தில் படைத்தளம்
இரசியா சோவியத் ஒன்றியம் என்றிருக்கும் போது எகிப்தில் இரு கடற்படைத் தளங்களையும் சிரியாவில் ஒரு கடற்படைத்தளத்தையும் அமைத்தது. பின்னர் எகிப்தில் இருந்த தளங்கள் மூடப்பட்டு அங்கிருந்தவை சிரியாவிற்கு நகர்த்தப்பட்டன. மத்திர தரைக்கடலில் இரசியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடு சிரியா. இரசியாவிற்கு வெளியே உள்ள ஒரே ஒரு இரசியக் கடற்படைத்தளம் சிரியாவின் Tartus துறைமுகத்தில் இருக்கிறது. நவீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இருக்கக் கூடிய ஆழ்கடல் துறைமுகமான டார்டஸை இரசியா இழக்க விரும்பாது. தற்போது உள்ள சிரிய மக்களின் பெரும்பான்மையானவர்களின் மனப்பாங்கின்படி சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டால் டார்ட்டஸ் துறைமுகத்தில் இருந்து இரசியா வெளியேற்றப்படும். சிரிய உள்நாட்டுப் போர் 2011-ம் ஆண்டு தொடங்கிய பின்னர் பல இரசியப் படைகளும் படைக்கலன்களும் சிரியாவில் இருந்து வெளியேற்றப்பட்டன. பின்னர் இப்போது மீண்டும் அங்கு நகர்த்தப்படுகின்றன.

2. படைக்கலன்கள் விற்பனை
லிபியாவிலும் ஈராக்கிலும் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றங்கள் இரசியாவின் படைக்கலன்களின் விற்பனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 2010இல் சிரியாவிற்கு 1.1 பில்லியன் டாலர்கள் பெறுமதியான ஏற்றுமதியை இரசியா செய்திருந்தது. இரசியாவின் 7வது பெரிய படைக்கலன் கொள்வனவாளராக சிரியா இருக்கிறது. சிரியாவிற்கான விற்பனையை இரசியா இழக்க விரும்பவில்லை.

3. பெரும் முதலீடு
சிரியாவை நட்பு நாடாக வைத்திருக்க இரசியா தனது சிரியாவிற்கன கடனில் 9.4பில்லியன் டாலர்கள் கடனை விட்டுக் கொடுத்தது. 2009இல் சிரியாவில் இரசியா 19.4பில்லியன்கள் டாலர்கள் முதலிட்டிருந்தது.

4. நீண்ட கால நட்பு
மத்திய கிழக்கில் மிக நீண்டகால நட்பை சிரியாவும் இரசியாவும் கொண்டிருக்கின்றன. இந்த நட்பு பஷார் அல் அசாத்தின் தகப்பனார் காலத்தில் இருந்த சோவியத்-சிரிய நட்பில் இருந்து தொடர்கின்றது.

5. சிரியாவை இழந்தால் ஈரானையும் இரசிய இழக்க வேண்டிவரும்.
சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அதன் நெருங்கிய நட்பு நாடான ஈரானில் இருக்கும் ஆட்சியாளர்களும் பெரும் சவாலை எதிர் கொள்ள வேண்டி வரும். தனது அடுத்த நட்பு நாடும் படைக்கலன் கொள்வனவு நாடுமான ஈரானையும் இரசியா இழக்க விரும்பவில்லை.

இரசியா சிரிய ஆட்சி மாற்றத்திற்கு செய்யும் தடைகள்
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் மேற்கு நாடுகள் சிரியாவிற்கு எதிராகக் கொண்டு வந்த இரு தீர்மானங்களை இரசியா தனது வீட்டோ அதிகாரத்தைப் பாவித்து இரத்துச் செய்தது. லிபியாவில் செய்தது போல் விமானங்களில் இருந்தும் கடற்கப்பல்களில் இருந்தும் குண்டுகளை வீச மேற்கு நாடுகள் திட்டமிட்டிருந்தன. துருக்கி மீது சிரியப்படைகள் குண்டுகள் வீசியதாக ஒரு நாடகமாடி சிரியாமீதான குண்டுத் தாக்குதலுக்கு அவை வழிவகுக்கலாம் என உணர்ந்த இரசியா சிரியாவிற்கு தனது விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் அதை இயக்கும் நிபுணர்களையும் அனுப்பியது. இதனால் மேற்கு நாடுகளால் ஒரு நேரடித் தலையீட்டை சிரியாவில் செய்ய முடியவில்லை. இதனால் லிபியாவில் செய்தது போன்ற ஒரு விமானப் பறப்பற்ற பிரதேசத்தை சிரியாவில் உருவாக்க முடியவில்லை. துருக்கி ஒரு விமானப் பறப்பற்ற பாதுகாப்புப் பிராந்தியம் சிரியாவில் உருவாக்கப் பட்டு அங்கு அப்பாவிகள் தஞ்சமடைய வைக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றது.

சிரியாவின் சியா முஸ்லிம்கள் அதிகம் வாழும் பிராந்தியத்தில் உள்ள லதக்கியா விமானப்படைத் தளத்திற்கு இரசியாவில் இருந்து விமானங்கள் மூலம் பல படைக்கலன்கள் பல்கேரியாவூடாக ஏடுத்துச் செல்லப்பட்டன. இதை உணர்ந்த அமெரிக்கா இரசிய சரக்கு விமானங்களை பல்கேரியாவூடாகப் பறப்பதைத் தடுக்கும் படி விடுத்த வேண்டு கோளை பல்கேரியா ஏற்றுக் கொண்டது. இதே வேண்டு கோள் கிரேக்கத்திற்கும் விடுக்கப் பட்டது. இன்னும் கிரேக்கத்திடம் இருந்து பதில் அமெரிக்காவிற்குக் கிடைக்கவில்லை. தற்போது தெற்கு இரசியாவில் இருந்து ஈரான், ஈராக் ஊடாக படைக்கலன்கள் சிரியாவிற்கு கொண்டு செல்லப்படுகின்றன. லதக்கியா விமனத் தளத்தில் இரசியா ஒரு தற்காலிக விமானக் கட்டுப்பாட்டு நிலையத்தையும் திறந்துள்ளது.

உக்ரேனில் ஒரு அசைய முடியாத நிலையில் உள்ள புட்டீன் சிரியாவில் மேற்கு நாடுகளுக்கு எதிராகக் காய்களை நகர்த்துகின்றாரா என்றும் எண்ணத் தோன்றுகின்றதுஅதே வேளை உக்ரேனில் மேற்கு நாடுகளுக்கு போதிய பிரச்சனை கொடுத்த புட்டீன் சிரியாவிலும் பிரச்சனை கொடுக்க முனைகின்றாரா எனவும் எண்ணத் தோன்றுகின்றது. 
சிரியாவில் ஐ எஸ் என்றும் ஐ எஸ் ஐ எஸ் என்றும் அழைக்கப் படும் இஸ்லாமிய அரசு அமைப்பை ஒழித்துக் கட்டுவதில் அமெரிக்காவும் இரசியாவும் உடன்பட்டாலும் சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சியை அகற்றுவது தொடர்பாக கடுமையாக முரண்படுகின்றன.

சிரயாவில் அதிபர் அல் அசாத்திற்கு எதிராகப் போர் புரியும் குழுக்களில் அல் கெய்தாவின் துணை அமைப்பான அல் நஸ்ரா தலைமையில் பல போராளிக் குழுக்கள் ஒன்றிணைந்து சிரியாவின் வட மேற்குப் பிராந்தியத்தில் உள்ள விமானப் படைத்தளத்தை இரண்டு ஆண்டுகள் செய்த தொடர் தாக்குதலின் பின்னர் 2015 செப்டம்பர் 9-ம் திகதி கைப்பற்றின. 2015 மே மாதத்தில் இருந்து சிரியாவின் வட மேற்குப் பிராந்தியத்தில் இத்லிப் மாகாணம் உட்படப் பல பகுதிகளை அல் நஸ்ரா அமைப்பினார்  கைப்பற்றுகின்றனர்.

அமெரிக்காவின் வேண்டுதலின் பேரில் ஒஸ்ரேலியா சிரியாவிலும் ஈராக்கிலும் தனது விமானத் தாக்குதல்களை அதிகரிப்பதுடன் ஏதிலிகளுக்கான தனது உதவியையும் அதிகரிக்கவிருக்கின்றது. லெபனானிலும் ஜோர்தானிலும் துருக்கியிலும் இருக்கும் 24,000 ஏதிலிகளைப் பராமரிக்க ஒஸ்ரேலியா மேலதிகமாக 31 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஒத்துக் கொண்டுள்ளது. ஒஸ்ரேலிய விமானப் படையின் F/A-18 Super Horne போர் விமானங்கள் துபாயில் நிலை கொண்டு ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராகத் தாக்குதல்கள் நடத்துகின்றன.

ஈரானும் ஐக்கிய அமெரிக்காவும் யூரேனியப் பதப் படுத்தல் தொடர்பாக உடன்பாட்டிற்கு வந்த பின்னர் சிரியா தொடர்பாகவும் அப்படி ஒரு உடன்பாடு ஏற்படலாம் அது அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சிக்கு அச்சுறுத்தலாக அமையலம் என்ற அச்சத்திலேயே இரசியா  முன்கூட்டியே  அங்கு தனது படையினரை அனுப்பியுள்ளது. ஆனால் ஈரானுக்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பிற்கான வழங்கற்பாதைக்கு சிரியாவில் அதற்க்கு ஆதரவானவர்கள் ஆட்சியில் இருப்பது அவசியம். சவுதி அரேபியா, கட்டார், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் மட்டுமல்ல இஸ்ரேல் கூட சிரியாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயல்கின்றது. ஆச்சரியமளிக்கக் கூடிய செய்தி என்ன வென்றால் 2011-ம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானதில் இருந்து சிரியாவிற்கு இரசியா மூன்று பில்லியன் டொலர்கள் பெறுமதியான படைக்கலன்களையும் அமெரிக்கா 7.7 பில்லியன் டொலர்கள் பெறுமதியான படைக்கலன்களையும் விற்றுள்ளது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...