Friday, 11 March 2022

உக்ரேனில் கூலிப்படைகள் களமிறங்கியுள்ளனவா?

 

Silent Professionals என்ற நிறுவனம் அமெரிக்க தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றிற்கு உக்ரேனில் போரில் ஈடுபட படைத்துறையில் பணிபுரிந்தவர்கள் தேவை என விளம்பரம் கொடுத்துள்ளது. தனியார் படை என்பது கூலிப்படைக்கு கொடுக்கப்பட்ட “கௌரவப் பெயராகும்”. சிரியா, லிபியா, ஆப்கான் போர்க்களங்களில் பெருமளவு தனியார் படையினர் அமெரிக்காவாலும் இரசியாவாலும் பாவிக்கப்பட்டனர். ஈழப்போரிலும் வெளிநாடுகளின் கூலிப்படைகள் செயற்பட்டன.  

கூலிப்படை வரலாறு

ஆரம்பத்தில் படையினருக்கான பின்புல வழங்கல் செய்தல், படையினருக்கான ஆபத்து பகுப்பாய்வு செய்தல், உளவு, வேவு போன்றவற்றில் தனியார் துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். உலகெங்கும் தற்போது உள்ள தனியார் படை அமைப்புக்களில் 70% அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கூலிப்படைத்துறையை முதன்முதலில் ஆரம்பித்து வைத்தவர் அமெரிக்காவின் சீல் படைப்பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற Erik Prince என்பவர். இவரது தனியார் படை Blackwater என்னும் பெயரில் 1997-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அது ஆப்கானிஸ்த்தானில் செயற்பட்டது. இவரது படைப்பிரிவு பத்து பில்லியன் டொலர் கூலிக்காக உக்ரேனில் உள்ள வலதுசாரி தீவிரவாதிகளுக்கு பயிற்ச்சியளிக்கின்றது என அமெரிக்காவின் Time சஞ்சிகை 2021 ஜூலை 7-ம் திகதி செய்தி வெளியிட்டது. 2020 பெப்ரவரி 23-ம் திகதி Erik Prince உக்ரேன் தலைநகருக்கு சென்று உக்ரேனிய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். உக்ரேனிய படையில் இருந்து ஓய்வு பெற்றவர்களையும் உள்ளடக்கி ஒரு தனியார் படைப்பிரிவை அவர் உருவாக்கும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். 2022 மார்ச் 24-ம் திகதி உக்ரேனில் ஆரம்பித்த போரில் Erik Princeஇன் படையினரின் செயற்பாடுகள் மர்மமாக உள்ளன. இரசியாவின் மிகப்பிரபலமான விமான ங்களில் ஒன்றான Su-24 தாக்குதல் போர்விமானத்தை உக்ரேனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. உக்ரேனியர்களிடமிருக்கும் Stinger போன்ற MANPAD ஏவுகணையால் Su-24ஐ சுட்டு வீழ்த்துவதற்கு போதிய பயிற்ச்சி தேவை. அவ் ஏவுகணைகள் தாழப்பறக்கும் விமானங்களை மட்டும் சுட்டு வீழ்த்த வல்லன. ஒலியிலும் வேகமாக பயணிக்கக்  கூடிய விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கு நீண்ட பயிற்ச்சியும் அனுபவமும் தேவை.

Erik Prince முன் வைத்த கோரிக்கையை பைடன் நிராகரித்தார்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தான் எச்சந்தர்ப்பத்திலும் தமது படையை உக்ரேனுக்கு அனுப்பமாட்டேன் என அடிக்கடி சொல்கின்றார். Erik Prince அமெரிக்கா 2022இல் சேவையில் இருந்து நீக்கவிருக்கும் நாற்பத்தேழு F-16 போர்விமானங்களை வைத்து ஒரு தனியார் படையணியை உருவாக்கும் திட்டத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் முன்வைத்ததாகவும் அதை அவர் நிராகரித்து விட்டார் எனவும் 2022 மார்ச் 4-ம் திகதி பிரித்தானிய நாளிதழான Daily Mailஇற்கு தெரிவித்திருந்தார். F-16ஐ உக்ரேனில் களமிறக்குவது புட்டீனை பெரும் சினப்படுத்தும் என்பதால் நிராகரிக்கப்பட்டிருக்கலாம். சுட்டு விழுத்தப்படாத விமானம் என்னும் பெருமையைக் கொண்டிருந்த F-16 விமானம் 2019 இந்திய பாக் மோதலில் இந்தியாவிடமிருந்த MiG-21 Bison விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது சர்ச்சைக்கு உரியதாக இருக்கின்றது. அதை உக்ரேனில் உறுதி செய்யப்படுவதை F-16 உற்பத்தியாளர்கள் விரும்ப மாட்டர்கள். தான் 2021இன் இறுதியில் முன்வைத்த திட்டத்தை ஜோ பைடன் ஏற்றுக் கொண்டிருந்தால் உக்ரேனில் இன்று இத்தகைய இழப்பு நடந்திருக்காது என்கின்றார் Erik Prince. புட்டீன் உக்ரேனில் உள்ள நாஜிகளை இல்லாமற் செய்யப் படை அனுப்புகின்றேன் எனச் சொன்னது Erik Prince பயிற்றுவித்துக் கொண்டிருந்த திவிர வலதுசாரிப் படைப்பிரிவைத்தான். இவர்கள் உக்ரேனின் கிழக்குப் பகுதியில் இரசியா கைப்பற்றி வைத்துள்ள பிரதேசங்களை மீளக் கைப்பற்றுவதாகும்.

உக்ரேனிய கூலிப்படை

உக்ரேனுக்குள் இரசியப் படையினர் புகுந்தவுடனே உக்ரேனிய அதிபர் வெளிநாட்டில் வாழும் உக்ரேனியர்களும் உக்ரேனை விரும்புபவர்களும் உக்ரேனுக்காக போராட விரும்புகின்றார்கள் என அறிவித்தார். அவர்களை வைத்து “International Legion of Territorial Defence of Ukraine” என்னும் பெயர் கொண்ட படையணியை தான் உருவாக்கப் போவதாகவும் சொன்னார். இது அவர் ஒரு தனியார் படையை (கூலிப்படையை) உருவாக்கப் போகின்றார் என்பதற்கு கட்டியம் கூறுவதாக அமைந்திருந்தது. உலகெங்கும் உள்ள வலதுசாரி வெள்ளை-உயரினவாதிகளும் நாஜிவாதிகளும் உக்ரேனைக் காப்பாற்றுவது என்ற போர்வையில் அங்கு களமிறங்கி உள்ளனர் என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. உக்ரேனில் போரில் ஈடுபட்டிருக்கும் இவர்கள் தமது நாட்டுக்கு திரும்பி ஆபத்தான வகையில் செயற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் ஒரு சதிக் கோட்பாடும் உள்ளது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள தீவிர வலதுசாரி வெள்ளை-உயரினவாதிகளால் அவர்கள் வாழும் நாடுகளுக்கு ஆபத்து என்பதால் அந்த நாடுகள் அவர்களை உக்ரேன் போர்முனைக்கு அனுப்பி கொல்ல முயற்ச்சிக்கின்றார்கள் என்பதே அச்சதிக் கோட்பாடு.

இரசியா சிரியாவில் கூலிப்படை திரட்டியது

சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்தின் படையினர் பாரிய கட்டிடங்களுக்குள் நின்று போர் செய்யும் அனுபவத்தைப் பெற்றுள்ளனர். அவர்களை இரசியா தனியார் படையாக சேவைக்கு அமர்த்தி உக்ரேனில் களமிறக்கப் போவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இச்செய்தியை சிரியாவின் deiresso24.net என்ற இணையத்தளம் வெளியிட்டது. அமெரிக்கப் பாதுகாப்புத்துறையான பெண்டகனும் வெளியிட்டது. 2022 மார்ச் 6-ம் திகதி அமெரிக்க Wall Street Journal இரசியா நகர்சார் போரில் அனுபவமுள்ள சிரியப் படையினரை நாள் ஒன்றிற்கு $200முதல் $300 வரையிலான கூலிக்கு ஆறு மாத ஒப்பந்த அடிப்படையில் உக்ரேன் போரில் ஈடுபடுத்த ஆள் சேர்ப்பதாக செய்தி வெளியிட்டது.  சிரியாவில் இருந்து 16,000 படையினர் இரசியப்படையுனருடன் இணைந்து ச் உக்ரேனியர்களுக்கு "உதவி" செய்ய தயாராக உள்ளதாக இரசிய பாதுகாப்பு அமைச்சர்  2022 மார்ச் 11-ம் திகதி புட்டீனுக்கு தெரிவித்ததாக இலண்டனில் இருந்து வெளிவரும் Financial Times தெரிவித்துள்ளது

புட்டீனின் கூலிப்படை

இரசியாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரும் இரசிய அதிபரின் நெருங்கிய நண்பருமான Yevgeniy Prigozhin  என்பவர் Wagner Group என்ற தனியார் படைப்பிரிவை வைத்திருக்கின்றார். இரசிய தனியார் படையினரின் வருமானம் அரச படையினரின் வருமானத்திலும் பார்க்க 7 மடங்கு அதிகமாகும். Yevgeny Prigozhin இற்குச் சொந்தமான Evro Polis நண்பரின் சிரியாவின் பல பகுதிகளில் உள்ள எண்ணெய்க் கிணறுகளின் 25விழுக்காடு உரிமம் பெற்றுள்ளதுசிரியாவில் தனியார் படையினரைப் பயன்படுத்தியமைக்கு இவருக்கு வழங்கப்பட்ட கூலியா எனவும் கேள்வி எழுப்பப்படுகின்றது. உக்ரேனிய அதிபர் விலோடிமீர் ஜெலென்ஸ்கியை கொல்லும் பணியில் Yevgeniy Prigozhin யின் Wagner Group களமிறக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் GB News தெரிவித்துள்ளது.

இரசியாவின் கை உக்ரேனில் மேலும் ஓங்கும் போது நேட்டோ நாடுகள் அதிக நிதியை உக்ரேனுக்கு வழங்கும். அந்த நிதியைப் பாவித்து உக்ரேன் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் உள்ள தனியார் படையினரை போரில் ஈடுபடுத்தும். 

Thursday, 10 March 2022

தாக்குப் பிடிக்குமா இரசியப் பொருளாதாரம்?

 


உக்ரேன் போரில் ஒரு நாளைக்கு எழு மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவழிக்கும் இரசியாவிற்கு எதிராக சிறிய நாடாகிய சிங்கப்பூர் கூட பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இரசிய அரசுக்கு நன்மையளிக்கக் கூடியவகையில் சிங்கப்பூரில் இனி எந்த நிறுவனமும் நிதி திரட்ட முடியாது. சில இரசிய வங்கிகளுக்கு எதிராக சிங்கப்பூர் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா உட்பட்ட பல மேற்கு நாடுகளுடன் ஜப்பான், தென் கொரியா, ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளும் இரசியா மீது பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்துடனும், கனடாவுடனும் பெரும்பாலும் நடுநிலையைக் கடைப்பிடிக்கின்ற நாடாகிய சுவிஸ்றலாந்தும் இணைந்து உக்ரேனின் கிழக்குப் பகுதி மாகாணங்களான Dontsk, Luthansk ஆகியவற்றை தனிநாடுகளாக அங்கீகரிக்கும் முன்மொழிவை ஆதரித்த 351 இரசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக பயணத்தடை விதித்துள்ளது.

ஒன்று திரண்ட புட்டீனின் எதிரிகள்

இரசியப்படைகளை உக்ரேனுக்கு அனுப்பியமைக்காகவும் உக்ரேனின் Dontsk, Luthansk மாகாணங்களை தனிநாடுகளாக அங்கீகரித்தமைக்காகவும் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனின் சொத்துக்களை ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கா, பிரித்தானியா, சுவிஸ்றலாந்து, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் முடக்கியுள்ளன. அது போலவே இரசிய வெளியுறவுத்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆகியோரது சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. இரசியப் பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்களுக்கு எதிராக சொத்து முடக்கம் மற்றும் பயணத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. புட்டீனுக்கு நெருக்கமான பல இரசியச் செல்வந்தர்களுக்கு எதிராகவும் சொத்து முடக்கம் மற்றும் பயணத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இரசிய ஊடகத்துறையை சேர்ந்த சிலருக்கு எதிராகவும் ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

இரசிய நடுவண் வங்கியையும் விட்டு வைக்கவில்லை

இரசியாவின் நடுவண் வங்கிக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் பல தடைகளை விதித்துள்ளன. பன்னாட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இடையிலான கொடுப்பனவிற்கான தொடர்பாடல்களைச் செய்யும் SWIFT அமைப்பில் இருந்து பல இரசிய வங்கிகள் விலக்கப்பட்டுள்ளன. இரசிய அரசின் வெளிநாட்டு வருவாயைக் கையாளும் நிதி நிறுவனமான VEB.RFஇற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, சுவிஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இரசிய விமானங்கள் ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா ஆகியவற்றின் வான் பரப்பில் பறப்பது தடைச் செய்யப்பட்டுள்ளது.

நுண்மிய நாணயங்கள் (Cryptocurrencies)

இரசிய வங்கிகளுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளால் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்க இரசியா நுண்மியநாணயங்களை பாவிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட போது Coinbase என்னும் நுண்மியநாணயங்களைக்  கையாளும் நிறுவனமும் இரசியாவிற்கு எதிராக செயற்படுகின்றது. அதில் உள்ள இரசியர்களுக்கு சொந்தமான 25,000இற்கு மேற்பட்ட கணக்குகளை அது தடை செய்துள்ளது. நுண்மியநாணயங்களைக் கையாளும் வேறு சில நிறுவனங்கள் இரசியர்களுக்கு எதிராக தடை விதிக்க மறுத்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் தனது தடைப்பட்டியலில் நுண்மியநாணயங்களையும் இணைத்துள்ளது. 

புட்டீனின் பொருளாதாரக் காப்பரண்

1991இல் இரசியா பட்ட கடனை அடைக்க முடியாத default நிலைய அடைந்திருந்தது. அதன் பின்னர் இரசியப் பொருளாதாரத்தை புட்டீன் சிறப்பாகக் கட்டி எழுப்பியமையால் புட்டீன் இரசியர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவராக இன்றும் இருக்கின்றார். ஆனாலும் 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீதான இரசியப் படையெடுப்பிற்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்க முன்னரே இரசியப் பொருளாதாரம் பல வலுவின்மைப் புள்ளிகளைக் கொண்டிருந்தது. 1. எரிபொருள் ஏற்றுமதியில் அதிக தங்கியிருப்பு. 2. வேலை செய்யக்கூடிய இளையோர் தொகை வீழ்ச்சியடைவது. 3. உட்-கட்டுமானக் குறைபாடு. 4. அயல் நாடுகளைத் தவிர வேறு நாடுகளுடன் வர்த்தக் உடன்படிக்கை இல்லாமை. 5. ஊழல். உக்ரேன் ஆக்கிரமிப்பிற்கு பின்னரான பிரச்சனைகளை இரசியா எப்படி சமாளிக்கப் போகின்றது?

இரசியப் பொருளாதாரத்தின் வலிமை

1. பெருமளவு எரிபொருள் இருப்பு: உலகிலேயே அதிக அளவு எரிவாயு இருப்பாக 1,668ரில்லியன் கன அடி இரசியாவில் உள்ளது. சவுதி அரேபியாவிற்கு அடுத்த படியாக உலகிலேயே அதிக அளவு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாகிய இரசியா நாளொன்றிற்கு 9.7மில்லியன் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி செய்கின்றது.

2. எண்மியப் படுத்தப்படுத்தலில் மேம்பட்ட நிலை: இரசியா தகவல் தொழில்நுட்பத்திலும் பாரிய முன்னேற்றம் கண்டுள்ளது. அது தன் பொருளாதார முகாமையில் எண்மியத் தொழில்நுட்பங்களை அறிமுகப் படுத்தியுள்ளது. அதனால் அது உலக வர்த்தகத்தில் Faustian Bargain செய்யக்கூடிய நிலையில் உள்ளது.

3. அதிக தானிய உற்பத்தி: இரசியா ஆண்டுக்கு 116 மில்லியன் மெட்ரிக் தொன் தானியத்தை உற்பத்தி செய்கின்றது. இது உலக மொத்த உற்பத்தியில் 11% ஆகும்;

4. குறைந்த வெளிநாட்டுக் கடன்: இரசியாவின் வெளிநாட்டு சொத்துக்களின் பெறுமதி 2021 செப்டம்பர் நிலவரப்படி $1.62 ரில்லியன். அதன் வெளிநாட்டுக் கடன் $1.18 ரில்லியன். அமெரிக்கவின் கடன் அதன் மொத்த தேசிய உற்பத்தியின் 130%, ஆனால் இரசியாவின் கடன் 20%. 2014-ம் ஆண்டு இரசியாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளின் பின்னர் இரசியா தனது வெளிநாட்டுக் கடனை $200 பில்லியனால் குறைத்தது.

5. வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு: 2022 ஜனவரியில் இரசியாவின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு $640 பில்லியன்கள். உலகின் நான்காவடு பெரிய வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பைக் கொண்ட நாடு இரசியா.

6. படைக்கல ஏற்றுமதி: அமெரிக்காவிற்கு அடுத்த படியாக அதிக அளவு படைக்கலன்களை ஏற்றுமதி செய்யும் நாடு இரசியா. அதன் மூலம் இரசியா ஆண்டுக்கு $14பில்லியன் சம்பாதிக்கின்றது.

இரசியர்கள் வெளியேற்றம்

2022 இரசியாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து இருபத்தையாயிரத்திற்கு மேற்பட்ட இரசியர்கள் ஜோர்ஜியா மூலமாக பல நாடுகளுக்கு சென்றுள்ளதாக ஜோர்ஜியா அறிவித்துள்ளது. அதே போல் நாள் தோறும் ஆறாயிரத்திற்கு அதிகமான இரசியரக்ளும் உக்ரேனியர்களும் தமது நாட்டினூடாக வெளிநாடுகளுக்கு செல்வதாக ஆர்மினியா தெரிவித்துள்ளது. இரசியாவில் இருந்து பின்லாந்துக்குச் செல்பவர்களின் தொகையும் 44,000ஆக உள்ளது. ஏற்கனவே இரசியாவில் இருந்து ஆண்டு தோறும் நான்கு மில்லியன் மக்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயந்து சென்று கொண்டிருந்தனர். அவரகளில் பெரும்பான்மையானவர்கள் படித்த இளையவர்கள். இரசியாவில் இளையோர் தொகை குறைவாகவும் முதியோர் தொகை குறைவாகவும் உள்ளதால் படித்த இளையோர் வெளியேறுவது இரசியாவின் உற்பத்தியைப் பாதிக்கும்.

போரை இரசியாவால் நடத்த முடியும்

இரசியாவின் நடுவண் வங்கிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பொருளாதாரத் தடை அதன் $640பில்லியன் டொலர் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பை பாதித்துள்ளது. $640பில்லியனில் $127 பில்லியனை இரசியா தங்கமாகவும், $70பில்லியனை சீன நாணயமான ரென்மின்பியிலும் உள்ளன. இது போன்று வேறுபல நாடுகளின் இரகசியமாக வைத்திருக்கும் தொகைகளும் சேர்ந்து மொத்தம் $300பில்லியன் இரசியா பாவிக்க கூடிய நிலையில் உள்ளது. உக்ரேன் போருக்கு ஆண்டுக்கு மூன்று பில்லியன் செலவாகலாம். ஆகையால் இரசியாவால் உக்ரேன் போரை தொடர்ந்து நடத்த முடியும்.

பன்னாட்டு நிறுவனங்கள்

Apple, Spotify, Oracle, H&M, Netflix, Honda, Google, Dell, Boeing, Nike, Ford, BMW, Walt Disney, Mc Donald, Coca Cola போன்ற நிறுவனங்கள் இரசியாவில் இருந்து வெளியேறிமை அந்த நிறுவனங்களுக்குத்தான் இழப்பீட்டைக் கொடுக்கும். அதில் பணிபுரிந்த இரசியர்கள் வேலை வாய்ப்பை இழக்கலாம். ஆனால் இந்த நிறுவனங்களின் உருவாக்கிய வெற்றிடத்தை காலப் போக்கில் இரசிய நிறுவனங்கள் நிரப்பி இலாபம் ஈட்டலாம்.

பெரும் பொருளாதார பின்னடைவு நிச்சயம்

கடன்படு திறனைத் தரப்படுத்தும் நிறுவனமான Fitch இரசியா தனது கடனைக் கொடுக்க முடியாத நிலை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது. இரசியாவின் சொத்தை அதற்கு கடன் கொடுத்தோரே முடக்கி வைத்துவிட்டு கடன் கேட்டால் இரசியா கடன் கொடுக்க மறுக்கும். இரசியாவின் கடன் அதன் மொத்த தேசிய உற்பத்தியில் 19%. அமெரிக்காவின் கடன் அதன் மொத்த தேசிய உற்பத்தியின் 134%. உக்ரேன் போராலும் பொருளாதாரத் தடையாலும் இரசியாவின் மொத்த தேசிய உற்பத்தி 2022 ஏப்ரல் முதல் ஜூன் வரை 35%ஆல் சுருங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக 2022இல் மொ.தே.உ 5% சுருங்கும் எனவும் எதிர் பார்க்கப்படுகின்றது. 2022இல் இரசியாவின் ஏற்றுமதி 13%ஆல் குறையும் எனவும் உள்நாட்டு கொளவனவு 10% வீழ்ச்சியடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. 2023-ம் ஆண்டு இரசியப் பொருளாதார வளர்ச்சி சுழியமாக இருக்கும் அதைத் தொடர்ந்து பொருளாதார வளர்ச்சி ஒரு விழுக்காடாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரசிய மக்கள் தொகை வீழ்ச்சியடைவதால் பொருளாதாரப் பின்னடைவு பெரும் மக்கள் கிளர்ச்சியை ஏற்படுதாது. இரசியா தனது சமூக நலக் கொடுப்பனவுகளை அதிகரிப்பதால் மக்களை சமாளிக்க முடியும். அதற்கு தேவையான வருமானத்தை இரசியா எரிபொருள் விலையேற்றத்தின் மூலம் பெற்றுக் கொள்ளும். ஈரானிடமிருந்து பொருளாதார தடைகளையும் தாண்டி சீனாவும் இந்தியாவும் எரிபொருள் வாங்குவது போல் இரசியாவிடமிருந்தும் அவை எரிபொருள் வாங்கும். மலிந்த விலையில் கொடுக்க வேண்டிவரும். அஜர்பையானைத் தவிர்ந்த ஏனை மத்திய ஆசிய நாடுகளும் மொங்கோலியாவும் இரசியாவில் இருந்து எர்பொருள் மட்டுமல்ல மற்ற பொருட்களையும இறக்குமதி செய்யும். இந்த நாடுகள் இரசியா மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்யும் கறுப்புச் சந்தையாக மாறலாம்.  பொருளாதாரத் தடையால் மக்கள் விரக்தியுற்று அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுவார்கள் என மேற்கு நாடுகள் நினைப்பது நடக்காது.

Tuesday, 8 March 2022

உக்ரேனில் இஸ்ரேலின் அமைதி முயற்ச்சி

  


யூதர்கள் வெள்ளிக்கிழமை சூரியன் மறைந்ததில் இருந்துத இருந்து பின்னர் சனிக்கிழமை சூரியன் மறையும் வரை கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும் என்பது அவரகளின் மத மரபு. அதில் முக்கியமாக இயந்திரங்கள் மூலமான பயணம் மேற்கொள்ளக் கூடாது. மரபு ஒழுக்கத்தை வலியுறுத்தும் கட்சியின் தலைவரும் இஸ்ரேலியத் தலைமை அமைச்சருமான நஃப்த்தாலி பென்னட் 2022 மார்ச் ஐந்தாம் திகதி சனிக்கிழமை மரபையும் மீறி விமானம் ஏறி இரசியத்தலைநகருக்கு பயணம் செய்து அதிபர் விளாடிமீர் புட்டீனுடன் பேச்சு வார்த்தை மேற்கொண்டார். 1976-ம் ஆண்டு இப்படி மரபு மீறி ஒரு வெள்ளிக்கிழமை இரவு சில அமைச்சர்கள் செயற்பட்டதால் இஸ்ரேலில் ஆட்சி கவிழ்ந்தது. விளடிமீர் புட்டீன் உக்ரேனுக்கு படை அனுப்ப முன்னரே உக்ரேனிய அதிபர் ஜெலென்ஸ்கி இஸ்ரேல் இரு தரப்புக்குமிடையே பேச்சு வார்த்தை நடக்க உதவி செய்ய வேண்டும் என பகிரங்கமான வேண்டு கோள் ஒன்றை விடுத்திருந்தார்.

இருமுனைப் பிரச்சனை

இஸ்ரேல் முதலில் புட்டீன் உக்ரேனுக்கு படை அனுப்பியதை கண்டிக்காமல் வருத்தம் தெரிவித்திருந்தது. பின்னர் இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் உக்ரேன் மீதான இரசியப் படையெடுப்பைக் கண்டித்திருந்தார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் இஸ்ரேல் அமெரிக்காவுடன் இணைந்து வாக்களித்தது. இஸ்ரேல் நூறு தொன் எடையுள்ள நிவாரணப் பொருட்களையும் உக்ரேனுக்கு அனுப்பியிருந்தது. ஆனால் படைக்கலன்களை அனுப்பும்படி உக்ரேன் விடுத்த வேண்டுகோளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளவில்லை. உக்ரேனில் வாழும் யூதர்களுக்கு உதவ வேண்டும் என்ற இஸ்ரேலியர்களின் விருப்பம் ஒரு புறம் புட்டீனைச் சினத்திற்கு உள்ளாக்க கூடாது என்பது மறுபுறமாக இஸ்ரேல் செயற்படுகின்றது. ஈரானைக் கையாள்வதற்கு இஸ்ரேலுக்கு இரசிய உறவு தேவைப்படுகின்றது. ஈரானும் இரசியாவும் தம் பொது எதிரியான அமெரிக்காவிற்கு எதிராக ஒன்றுபடும் போது இஸ்ரேலிய நலன்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் இஸ்ரேல் கவனமாக இருக்கின்றது. ஈரானுக்கு இரசியா எஸ்-400 போன்ற வான் பாதுகாப்பு முறைமைகளை வழங்கினால் அது இஸ்ரேலுக்கு பாதகமாகும்.

குருவி தலையில் பனங்காய்

இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் நஃப்த்தாலி பென்னட் கிரெம்ளினின் புட்டீனுடன் மூன்று மணித்தியாலங்கள் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் ஜெர்மனி சென்று அதிபர் Olaf Scholzஉடனும் பேச்சு வார்த்தை நடத்தினார். கடந்த சில வாரங்களாக நஃப்த்தாலி பென்னட் பிரெஞ்சு அதிபர் மக்ரோன், உக்ரேனிய அதிபர் ஜெலென்ஸ்கிச்(இவர் ஒரு யூதர்), அமெரிக்க அதிபர் பைடன் ஆகியோருடன் தொடர்ச்சியாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். 2022 மார்ச் 2-ம் திகதி புதன் கிழமை இரசிய அதிபருடன் தொலைபேசியல் செய்த பேச்சு வார்த்தையைத் தொடர்ந்தே இஸ்ரேல் தலைமை அமைச்சர் இரசியா சென்றார். அமெரிக்காவின் விருப்பத்தின் பேரில் இஸ்ரேல் செயற்படுவதாகவும் சொல்லப்படுகின்றது. இரசியாவில் உள்ள மரபுவழி கிருத்தவர்கள் ஜெருசேலம், பெத்தேலேகம் ஆகியவற்றை இஸ்ரேல் தன் முழுமையான ஆட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என விரும்புவர்கள். புட்டீனும் அதை ஆதரிக்கின்றார். அதனால் புட்டீன் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இஸ்ரேல்-இரசிய உறவு சீராக இருக்கின்றது. 2022-03-05 திகதி பேச்சு வார்த்தைக்குப் பின்னர் மறுநாள் தன அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தி தனது முயற்ச்சி வெற்றி தருவதற்கான வாய்ப்பு குறைவு என்பதைச் சுட்டிக்காட்டி உக்ரேனில் நிலைமை மோசமாக இருக்கின்றது நாளடைவில் அது மேலும் மோசமாகலாம் என்பதால் சிறு வாய்ப்பையும் பயன்படுத்த வேண்டியது எமது அறம்சார் கடமை என்றார். இரசியா மீது இஸ்ரேலுக்கென ஒரு அரசுறவியல் நெம்புகோல் இல்லாத போது இஸ்ரேலின் முயற்ச்சி புட்டீனின் மனதை மாற்றுவது கடினம். 

சிரியாவில் ஒத்துழைப்பு

வளைகுடா நாடுகளில் இருந்து சிரியாவூடாக ஐரோப்பிய நாடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு வழங்கினால் ஐரோப்பிய நாடுகள் தமது எரிவாயுத் தேவைக்கு இரசியாவில் தங்கியிருப்பதைக் குறைக்கலாம் என்ற முயற்ச்சியில் அமெரிக்கா ஈடுபட்ட போது இரசியாவின் வேண்டுதலின் பேரில் சிரிய அதிபர் பஷார் அல் அசாத அதை எதிர்த்தார். இதனால் அவரை ஆட்சியில் இருந்து அகற்ற அரபு வசந்தம் என்னும் பெயரில் அமெரிக்கா சதி செய்தது. அவருக்கு எதிரான கிளர்ச்சியை அடக்க 2015இல் சிரியாவிற்கு புட்டீன் தன் படையை அனுப்பினார். அப்போது இரசிய போர்விமானங்கள் அவ்வப்போது எல்லை தாண்டிச் சென்று அயல் நாட்டு வான் பரப்புக்களிற்குள் செல்வதுண்டு. அப்படிச் சென்ற ஒரு இரசியப் போர் விமானத்தை துருக்கு சுட்டு வீழ்த்தியது. இஸ்ரேல் இரசியப் போர்விமானங்கள் தன் நாட்டுக்குள் அறிவித்து விட்டு பறப்பதை அனுமதித்திருந்தது. அதற்குப் பதிலாக ஹிஸ்புல்லா அமைப்பினர் ஈரான் சிரியாவில் வைத்து வழங்கும் படைக்கலன்களை லெபனானுக்கு கொண்டு செல்லும் போதெல்லாம அவற்றை இஸ்ரேலிய விமானங்கள் குண்டு வீசி அழித்தன. அதை இரசியா தடுக்கவில்லை. இஸ்ரேலின் முன்னாள் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ விளடிமீர் புட்டீனுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார்.

இஸ்ரேல் தலைமை அமைச்சரின் இரசியப் பயண நோக்கங்கள்:

1. உக்ரேனில் உள்ள யூதர்களின் பாதுகாப்பு: 44 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட உக்ரேனில் 0.2% விழுக்காடு யூதர்கள் மட்டும் வாழ்கின்றார்கள். இஸ்ரேல் அவர்களது பாதுகாப்பு தொடர்பாக கரிசனை கொண்டுள்ளது. தற்போது உக்ரேனிய அதிபராக இருப்பவரும் ஒரு யூதர்.  தலைமை அமைச்சராகவும் இருந்தார்.

2. ஈரான் பேச்சு வார்த்தை: அமெரிக்காவும் ஈரானும் நடத்திக் கொண்டிருக்கும் பேச்சு வார்த்தையை இரசியா குழப்பலாம என இஸ்ரேல் கருதுகின்றது. அமெரிக்க ஈரானிய பேச்சு வார்த்தை முடிவிற்கு வரும் நிலையில் உள்ள வேளையில் இரசிய வெளியுறவுத் துறை அமைச்சர் அமெரிக்கா ஈரான் மீதான பொருளாதாரத் தடையை நீக்கிய பின்னர் இரசியா சுதந்திரமாம ஈரானுடன் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்படவேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்தார்.

3. இஸ்ரேலியர்களின் மீள் வருகை: உலகெங்கும் வாழும் யூதர்கள் இஸ்ரேலுக்கு வந்து குடியேறி பலஸ்த்தீனியர்களிடமிருந்து இஸ்ரேல் அபகரித்துள்ள நிலங்களில் குடியேறி அங்கு யூதர்களின் மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும் என்பது இஸ்ரேலிய ஆட்சியாளர்களின் திட்டம். உக்ரேன் போர் தொடங்கியதிலிருந்து மூவாயிரத்திற்கு மேற்பட்ட யூதர்கள் இஸ்ரேல் சென்றுள்ளனர்.

உக்ரேனியப் போர் என்பது வெறும் நேட்டோ விரிவாக்கம் சம்பத்தப்பட்டது மட்டுமல்ல, இரசியாவின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, அது உலகின் எதிர்காலத்தை முடிவு செய்யும் போர் ஆக உள்ளது. உலகப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற போராகவும் இருக்கின்றது. பல நாட்டு தலைவர்கள் அப்போர் முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்ச்சியில் ஈடு பட வேண்டும்.

Sunday, 6 March 2022

இரசிய வான்படையும் உக்ரேனிய வான்படையும்

  


இரசியாவின் வான் வலிமைக்கு 26.9 புள்ளிகளைக் கொடுத்த ஒரு வான் வலு தரப்படுத்தும் நிறுவனம் உக்ரேனின் வான் வலிமைக்கு 2.4 புள்ளிகளை மட்டும் கொடுத்திருந்தது. இரசியாவிடம் 3863 போர் விமானங்களும் உக்கிரேனிடம் 210ம் இருக்கின்றன. இருந்தும் உக்ரேன் மீது இரசியா வான்-ஆதிக்கம் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றது. உக்ரேனுக்கு ஆதரவாக நேட்டோப் படைகள் களமிறங்கினால் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் போர்த்துக்கலைத் தவிர்ந்த ஏனைய நாடுகளைத் தரை மட்டமாக்குவதற்காக MiG-31K ஒலியிலும் 2.8 மடங்கு வேகத்தில் பறக்கக் கூடிய போர்விமானங்களை Kinzhal என்னும் அணுக்குண்டு தாங்கக் கூடிய மீயுர்-ஒலி வேக (ஹைப்பர்-சோனிக்)ஏவுகணைகளை இரசியாவிற்கு சொந்தமான போலந்தை அடுத்துள்ள கலினின்கிராட் நிலப்பரப்பில் இரசியா எண்ணிக்கை நிறுத்தியுள்ளது.

பறக்காத விமாங்கள் 300

உக்ரேனுக்கு குறைந்த நேரத்தில் பறந்து செல்லக் கூடிய வகையில் முன்னூறு Su-35 மற்றும் Su-30 போர்விமானங்கள் இரசியா நிறுத்தி வைத்துள்ளது. அவை இதுவரை உக்ரேனுக்கு பறப்புக்களை மேற்கொள்ளவில்லை. Su-34 விமானங்கள் துல்லியமாகத் தாக்கும் வழிகாட்டல் ஏவுகணைகளை வீசக் கூடியவை. இரசியாவிடம் வான் மேலாண்மையை சிறப்பாகச் செய்யக் கூடிய எண்பது 4.5 தலைமுறை Su-35S விமானங்கள் உள்ளன. Su-30-SM (2) என்னும் பற்பணிப் போர்விமானங்கள் எண்பது உள்ளன. இவ்விரண்டு வகையான விமானங்களாலும் தாக்குதற்கான வான் எதிர்ப்பு (Offensive Counter-Air) மற்றும் பாதுகாப்பிற்கான வான் எதிர்ப்பு (Defensive Counter-Air) ஆகிய பணிகளைச் செய்து உக்ரேன் வான்பரப்பில் இரசியாவால் மீயுர்-வான் – வான் மேலாதிக்கத்தை (Air-supremacy) செய்ய முடியும். ஆனால் அப்படி எதுவும் இதுவரை நடக்கவில்லை. உக்ரேன் மீது இரசிய வான்படை நடத்திய பறப்புக்களில் பெரும் பான்மையானவை இரவு நேரத்திலேயே நடந்தன. இரசியத் தரைப்படைக்கு போதிய நெருங்கிய பறப்பு ஆதரவு வழங்க முடியாமல் இரசியப் படைகள் இருக்கின்றன.

ஆயிரம் இருந்தும்

கடந்த பத்து ஆண்டுகளாக இரசியா பல பில்லியன் டொலர்களை புதிய விமானங்களை உருவாக்குவதற்கு செலவழித்து வருகின்றது. 2009இற்கும் 2020இற்கும் இடையில் இரசிய விமானப் படைக்கு 440 புதிய விமானங்களும் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆளிலிவிமானங்களும் (Drones) இணைக்கப்பட்டன. இரசியா போர் ஆரம்பித்த போது உக்ரேனின் விமானங்களையும் ரடார்களையும் அழிக்க பல ஏவுகணைகளை வீசியது. அவற்றால் உக்ரேனிய போர் விமானங்களையோ ரடார்களையோ அழிக்க முடியாத வகையில் உக்ரேனியர்கள் அவற்றை பல இடங்களில் பரப்பி வைத்திருந்தார்கள். இரசிய ஆளிலிவிமானங்கள் தாக்குதலுக்கு வேவுபார்த்தலுக்கோ உக்ரேனில் பாவிக்கவில்லை எனச் செய்திகள் வருகின்றன. பல படைத்துறைச் சஞ்சிகைகள் இரசியாவின் ஆளிலிகள் எங்கே என்ற கேள்வியை எழுப்பியுள்ளன. மாறாக உக்ரேன் பெருமளவு ஆளிலிகளைப் பயன்படுத்துகின்றது. 

உக்ரேனின் ஆளிலிவிமானம்

சோவியத் ஒன்றியத்தின் உறுப்பு நாடாக இருந்தபோது சிறந்த படைக்கலன் உற்பத்தி செய்யும் பிரதேசமாக உக்ரேன் இருந்தது. விமானம் தாங்கிக் கப்பல்கள் சிறந்த தாக்குதல் போர்விமானங்கள் உக்ரேனில் தயாரிக்கப்பட்டன. அணுக்குண்டு தயாரிக்கக் கூடிய தொழில்நுட்ப அறிவு உக்ரேனியர்களிடம் இருக்கின்றது. ஆளில்லாப் போர்விமானங்களை உக்ரேனுக்கு வழங்க அமெரிக்கா மறுத்ததனால் உக்ரேன் தானாகவே ஆளில்லாப் போர்விமானங்களை உருவாக்கிவிட்டது. அவற்றில் மொத்தம் ஐம்பது கிலோ கொண்ட நான்கு குண்டுகளையோ அல்லது இரு வானில் இருந்து நிலத்தை நோக்கி வீசும் ஏவுகணைகளையோ எடுத்துச் செல்லலாம். ஆமைப்புறா என்னும் பொருள்பட உக்ரேன் மொழியில் Gorlytsa எனப் பெயரிடப்பட்டுள்ள உக்ரேனின் ஆளில்லாப் போர் விமானங்கள் ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அதிகமாக ஏழு மணித்தியாலம் பறக்கக் கூடியவை. ஐயாயிரம் மீட்டர்களுக்கு அதிகமான உயரத்தில் பறக்கக் கூடியவை. 

சண்டை ஆனால் சட்டை கிழியவில்லை

இரசியா உக்ரேன் மீது போர் தொடுத்து பத்து நாட்களுக்கு மேலாகியும் பெரும்பாலான உக்ரேனிய விமானங்கள் அழிக்கப்படாமல் இருக்கின்றன. போர் ஆரம்பித்தவுடன் உக்ரேனின் வான்கலன்களையும் வான் பாதுகாப்பு முறைமைகளையும் இரசியா முற்றாக அழித்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. உக்ரேனிடமிருந்த சோவியத் ஒன்றிய கால எஸ்-300 ஏவுகணை எதிர்ப்பு முறைமை ஒன்றை இரசியா அழித்திருந்தது. அது போதிய உதிரிப்பாகங்கள் இல்லாமல் இடம் விட்டு இடம் நகர முடியாமல் இருந்தது. 2022 மார்ச் 6-ம் திகதி மட்டும் இரசியாவின் ஒரு Su-25, இரண்டு Su-30 SM, ஒரு ஆளிலிவிமானம், இரண்டு உலங்கு வானூர்தி ஆகியவற்றிச் சுட்டு விழுத்தியதாகவும் போர் தொடங்கியதிலிருந்து மொத்தம் 44 விமானங்களையும் 44 உலங்கு வானூர்திகளையும் தாம் சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரேனியப் படையினர் தெரிவித்தனர்.

யானையின் சோளப்பொரி

புட்டீனின் படைகள் உக்ரேனை ஆக்கிரமிக்கும் போது அதனிடம் 98 தாக்குதல் விமானங்கள் உட்பட 210 போர் விமானங்கள் இருந்தன. ஐரோப்பாவில் நான்காவது பெரிய விமானப்படை உக்ரேனிடம் இருந்தது. சோவியத் ஒன்றிய காலத்தில் உக்ரேனில் பல விமான உற்பத்தி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. ஆனால் உக்ரேனின் விமானப்படை இரசியாவின் விமானப்படையுடன் ஒப்பிடுகையில் சோளப்பொரியும் யானையும்.

இரசிய வான்படையின் பிரச்சனைகள்:

1. குறைவான ஏவுகணைகள்: சிரியப் போரின் போது இரசியா பெருமளவு வழிகாட்டல்-துல்லியத் தாக்குதல் ஏவுகணைகளைப் பாவித்து விட்ட படியால் இரசியாவின் ஏவுகணைக் கையிருப்பு குறைந்து விட்டது. உக்கிரமமான போர் வரும் போது பாவிப்பதற்கு என இரசிய வான் படை தனது வானிலிருந்து தரைக்கு வீசும் ஏவுகணைகளை பாதுகாத்து வைத்திருக்கின்றது.

2. S-400 ஆப்பு வைக்கலாம்: உக்ரேன் வான் வெளியை இலக்கு வைத்து இரசியா தனது S-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை நிறுத்தி வைத்திருக்கின்றது. அது 400கிலோ மீட்டர் தொலைவு வரை பறக்கும் விமானங்களை உணர்ந்து தானாகவே அவற்றை சுட்டு வீழ்த்த வல்லது. உக்ரேனுக்கு மேல் பறக்கும் இரசிய விமானங்களை இரசியாவின் S-400 சுட்டு வீழ்த்தலாம் என இரசிய வான்படையினர் கரிசனை கொண்டுள்ளனர். இதுவரை ஒரு உக்கிரமான போரில் S-400 பயன்படுத்தப்படவில்லை. சிரியாவில் பாவிக்கப்பட்டது. போதிய அனுபவமில்லாமல் விமானங்களைப் பலியிட இரசிய வான்படை விரும்பவில்லை.

3. அனுபவமற்ற இரசிய விமானிகள்: இரசியப் போர்விமானிகள் ஆண்டு ஒன்றிற்கு நூறு மணித்தியாலங்கள் மட்டுமே விமானம் ஓட்டும் வாய்ப்பைப் பெறுகின்றனர். அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் தமது விமானிகளுக்கு ஆண்டு ஒன்றிற்கு 180 முதல் 240 மணித்தியாலம் விமானம் ஓட்டும் வாய்ப்பை கொடுக்கின்றனர். பெறுமதி மிக்க விமானங்களை அனுபவம் குறைந்த விமானைகளிடம் கொடுத்து பறக்க விட்டு அவை சுட்டு வீழ்த்தப்பட்டால் அல்லது விபத்திற்கு உள்ளானால் அது இரசியாவின் விமான விற்பனையைப் பாதிக்கும்.

4. Targeting Pod தட்டுப்பாடு: போர்விமானங்கள் தாக்குதலுக்கு செல்லும் போது Targeting Pod என்னும் கருவியை அதில் பொருத்தி விடுவர். அவை எதிரியின் தாக்கப்பட வேண்டிய இலக்குகளை இனம் காணும். இரசியாவிடம் போதிய அளவும் Targeting Pod இல்லை எனப்படுகின்றது.

5. அப்பாவிகளைக் கொல்லாமல் இருக்க: இரசிய வான்படையினரின் தாக்குதலில் அப்பாவி உக்ரேனியர்கள் அதிகம் கொல்லப்படுவதை இரசியரகள் விரும்ப மாட்டார்கள் என்பதால் அவர்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்காமல் இருக்க இரசிய வான் படையினர் பற்ப்புக்களைக் குறைத்துள்ளனர்.

6. உக்ரேனின் குழப்பிகள்: உக்ரேன் பல்வேறு இலத்திரனியல் குழப்பிகளை  பாவித்து இரசியாவின் விமானங்கள் மற்றும் வழிகாட்டல் ஏவுகணைகளை குழப்பிவிடுகின்றது. 

ஐரோப்பிய ஒன்றியத்தின் இரட்டை வேடமா உபாயமா?

உக்ரேன் அதிபர் விளாடிமீர் ஜெலன்க்ஸி தமக்கு போர்விமானங்களை தாருங்கள் என வலியுறுத்தி வேண்டினார். ஐரோப்பிய நாடுகளின் Eurofighter Typhoon, Rafael, Gripen ஆகிய சிறந்த விமானங்கள் இருக்கின்றன. உலகின் மிகச் சிறந்த Meteor ஏவுகணைகள் இருக்கின்றன. அவற்றைக் கொடுத்தால் உக்ரேனின் வான்பரப்புக்குள் இரசிய விமானங்களை வராமல் தடுக்கலாம். அவற்றைக் கொடுத்தால் புட்டீன் கடும் சினம் கொள்வார் என்பதால் அவற்றை ஐரோப்பிய நாடுகள் கொடுக்கவில்லை. மாறாக நேட்டோவில் இணைந்துள்ள முன்னாள் சோவியத் ஒன்றிய மற்றும் வார்சோ ஒப்பந்த நாடுகளிடமுள்ள பழைய சோவியத் தயாரிப்பு விமானங்களை உக்ரேனுக்கு  வழங்க ஏற்பாடு நடக்கின்றது. பல்கேரியாவிடம் பதினாறு Mig-29 பதினான்கு Su-25 போர்விமானங்கள் உள்ளன. போலாந்திடம் இருபத்தி மூன்று Mig-29 பதினெட்டு Su-22 விமானங்கள் உள்ளன. சுலோவாக்கியாவிடம் பதினொரு Mig-29 விமானங்கள் உள்ளன. இவற்றை உக்ரேனுக்கு வழங்கும் ஏற்பாடுகள் நடக்கின்றன. சில ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டன. இந்த விமானங்கள் உக்ரேனிய விமானிகளுக்கு பழக்கப்பட்டவை அவற்றை உடனடியாக அவர்களால் செலுத்திக் கொண்டு பறக்க முடியும். ஆனால் Eurofighter Typhoon, Rafael, Gripen போன்றவற்றிற்கு நீண்ட காலப் பயிற்ச்சி தேவைப்படும் என ஐரோப்பிய நாடுகள் சொல்கின்றன. பல்கேரியா, போலாந்து, சுலோவாக்கிய நாடுகள் தம்மிடமுள்ள பழைய விமானங்களை உக்ரேனுக்கு கொடுத்து விட்டு அவற்றிற்கு பதிலாக அமெரிக்காவிடமிருந்தும் ஐரோப்பிய நாடுகளிடமிருந்தும் போர் விமானங்களை வாங்கும். எல்லாமே வியாபாரம்தான். சோவியத் தயாரிப்பு விமானங்களை இரசியாவிற்கு எதிரான போரில் உக்ரேன் பாவிக்கும் போது அதே போன்ற விமானங்களை இரசியாவும் பாவிக்கும் போது இரசியப் படையினரையும் அவர்களின் வான் பாதுகாப்பு முறைமையும் குழப்பத்திற்கு உள்ளாகி நட்புச் சூடு (Friendly Fire) அதிக அளவில் இரசியத் தரப்பில் ஏற்பட வாய்ப்புண்டு. அதுவும் நேட்டோ நாடுகளின் உபாயமாக இருக்கலாம்.

நாள் செல்ல செல்ல உக்ரேனில் கடுமையான வான் சண்டை நடக்கும். பெலரஸில் உள்ள S-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை தேர்வுக்கு உட்படுத்தப்பட அமெரிக்க நிபுணர்கள் இரகசியமாக களமிறங்குவார்கள். இஸ்ரேல் தனது வான்படைக்கு அனுபவம் தேடி அலைகின்றது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...