Tuesday 23 August 2022

மகளைப் பறி கொடுத்த புட்டீனின் தத்துவஞானி அலெக்சாண்டர்

 


அலெக்சாண்டர் டுகின் ஒரு தத்துவ ஞானி போல் தாடியுடன் தோற்றமளிப்பவர். இவருக்கு சொந்தமான காரில் பயணித்த இரவது மகள் இரசியாவின் மொஸ்கோ நகரில் 2022 ஓகஸ்ட் மாதம் 20-ம் திகதி கொல்லப்பட்டார். டுகின் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் புலமை மிக்கவர். இவர் புட்டீனின் ராஸ்புட்டீன் எனவும் அழைக்கப்படுபவர். ராஸ்புட்டீன் (1869-1916) இரசிய மன்னருக்கு ஆலோசகராக இருந்த பிரபலமான ஒருவர். அலெக்சாண்டர் டுகின் அவர்களின் அமெரிக்காவிற்கு எதிரான கருத்துக்கள் சீனாவிலும் ஈரானிலும் துருக்கியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. உலகமயமாதலுக்கு எதிரான கருத்துக்களை உலகளாவிய அடிப்படையில் ஒருங்கிணைப்பதில் முன்னின்றவர் அலெக்சாண்டர் டுகின். புட்டீனை எதிர்ப்பவர்கள் யாரும் இரசியாவில் இல்லை, அப்படி யாராவது இருந்தால் அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும் என்பது டக்கினின் கருத்து. அது மட்டுமல்ல புட்டீன் நிலையானவர், அகற்றப்பட முடியாதவர், எங்கும் நிறைந்தவர், எல்லாம் அவரே என எழுதியவர் டுகின்.

உக்ரேன் தனிநாடாக இருக்க கூடாது

உக்ரேன் இரசியாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருப்பவர். இரசிய வலதுசாரி தேசியவாதத்தின் முதன்மை அடையாளமாக கருதப்படுபவர். இரசியாவின் உலகம் யூரேசிய(ஐரோப்பா-ஆசியா) பெருநிலப்பரப்பை ஒன்றாக ஆளவேண்டும் எனக் கருதுபவர். புதிய இரசியா (Novorossia) என்ற எண்ணக்கருவிற்கு புத்துயிர் கொடுத்தவர். இவர் 1997இல் எழுதிய புவிசார் அரசியலின் அடிப்படை என்னும் நூலில் உக்ரேன் ஒரு தனிநாடாக இருப்பது என்பது புவிசார் அரசியலில் அடிப்படை அற்றது என வாதிட்டிருந்தார். அந்த நூல் தான் 2014இல் புட்டீன் கிறிமியாவையும் உக்ரேனின் கிழக்குப்பகுதியையும் ஆக்கிரமிக்க வழிவகுத்தது எனக் கருதப்படுகின்றது. அப்போது பேச்சு வார்த்தை வேண்டாம், உக்ரேனியர்களைக் கொல்லுங்கள், கொல்லுங்கள், கொல்லுங்கள் எனச் சொன்னவர் டுகின்.

நிலவலிமையும் கடல் வலிமையும்

இரசியாவும் சீனாவும் இணைந்து பல்துருவ ஆதிக்க உலகை உருவாக்க வேண்டும் என ஒரு தொடர் சொற்பொழிவை ஆற்றியவர். இரசிய சீன ஒத்துழைப்பை இவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரசிய சீன வெளியுறவுத் துறை அமைச்சர்களிடையே நடந்த சந்திப்பின் போது இந்த கருத்தை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். அலெக்சாண்டர் டுகின் அவர்களின் கருத்துப்படி ஆசிய-ஐரோப்ப பெரு நிலப்பரப்பில் நடுவில் இருக்கும் இரசியா உலகின் பெரும்பகுதி நிலபரப்பில் ஆதிக்கம் செலுத்தக் கூடியது. உலக கடற்பரப்பின் பெரும்பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் ஐக்கிய அமெரிக்காவுடன் போட்டி போடக் கூடிய நாடாக இரசியாவில் நில-வலிமை உள்ளது என முழங்குபவர் டுகின். ஐரோப்பாவின் மேற்கு எல்லையில் உள்ள ஐரிஸ் தலைநகர் டப்ளின் முதல் இரசியாவின் (ஆசியாவில்) உள்ள விளடிவொஸ்டொக் நகர்வரையிலான பெரும் பிரதேசம் இரசியாவின் ஆட்சிக்கு உட்பட்டது என்ற பேராசை கொண்டவர் டுகின்.  

புத்தியலுக்கு(Modernity) எதிரான போரில் ஈரான் முன்னணி

ஈரானுக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டு அங்கு தன் கருத்துகளைப் பரப்பும் அலெக்சாண்டர் டுகின் ஈரானிய மதவாத தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணுகின்றார். அமெரிக்கா முன்னெடுக்கும் புத்தியலுக்கு(Modernity) எதிராக பல நாடுகள் செய்யும் போரில் ஈரான் முன்னணியில் நிற்கின்றது என டுகின் பாராட்டியுள்ளார். துருக்கியில் AKP என அழைக்கப்படும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் அழைப்பின் பேரில் அங்கு சென்று டுகின் சொற்பொழிவாற்றியுள்ளார். துருக்கியிலும் ஈரானிலும் அமெரிக்காவிற்கு எதிரான கருத்துக்களை அவர் விதைக்கின்றார்.

மேற்கு ஐரோப்பவிலும் அமெரிக்காவிலும் டுகின் பரப்புரை

இரசிய வங்கி உரிமையாளரான Konstantine Malofeev அலெக்சாண்டர் டக்கினின் பரப்புரைகளுக்கு நிதி உதவி வழங்கி வருகின்றார். அந்த நிதி உதவியுடன் இத்தாலியின் லீக், பிரான்சில் ரலி, ஒஸ்ரேஇயாவின் சுதந்திரக் கட்சி ஆகிய வலதுசாரிக் கட்சிகளுடன் டுகின் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளார். டுகின் அமெரிக்க வலதுசாரியான முன்னாள் குடியரசுத் தலைவர் டொனால்ட் டிரம்பை தான் இதயம் நிறைய ஆதரிப்பதாக தெரிவித்திருந்தார். அமெரிக்காவில் ஒரு புவிசார் அரசியல் குழப்ப நிலையை உருவாக்க பிரிவினைவாதிகள், இனவாதிகள், போன்ற பல்வேறு எதிர்ப்பாளர்களை தூண்ட வேண்டியது அவசியம் என டுகின் எழுதியிருந்தார்.

2022இல் பாக்கிஸ்த்தானையும் சீனாவையும் சேர்ந்த அறிஞர்களுக்கு உரையாற்றுகையில் அலெக்சாண்டர் டுகின் உக்ரேனில் தோல்வையைச் சந்திப்பதிலும் பார்க்க அணுக்குண்டை வீசி போரை இரசியா முடிக்கும் எனச் சொல்லியிருந்தார்.

எஸ்த்தோனியாமீது இரசியா நடவடிக்கை எடுக்குமா?

அலெக்சாண்டர் டுகின் அமெரிக்காவினாலும் உக்ரேனினாலும் வெறுக்கப்பட வேண்டிய ஒருவர் என்பது நிச்சயம். டக்கினும் அவரது மகளும் ஒரு நிகழ்வில் கலந்து விட்டு ஒன்றாக வெளியேறுவதாக இருந்தது. அலெக்சாண்டர் டுகின் வேறு இடத்திற்கு போக வேண்டி இருந்ததால் அவரது மகள் மட்டும் அவரது காரில் வீடு திரும்பும் வேளையில் குண்டுத் தாக்குதல் அக்கார் மீது செய்யப்பட்டது. அலெக்சாண்டருக்கு வைக்கப்பட்ட குண்டில் அவர் மகள் பலியானார் என்பதில் ஐயமில்லை. உக்ரேனியப் பெண் ஒருவர் 2022 ஜூலை மாதம் இரசியாவிற்கு தன் மகளுடன் வந்தார் என இரசியா சொல்கின்றது. உக்ரேனின் உளவுத்துறை அவரை அனுப்பியதாகவும் குற்றம் சாட்டும் இரசியா இக்கொலையை செய்துவிட்டு எஸ்த்தோனியாவிற்கு அவர் தப்பிச் சென்று விட்டதாகச் சொல்லுவதுடன் கொலையாளியை கைது செய்து நாடு கடத்தும்படி எஸ்த்தோனியாவை இரசியா மிரட்டுகின்றது. எஸ்த்தோனியா ஒரு நேட்டோ உறுப்பு நாடாக இருப்பதால் அதற்கு எதிரான இரசிய நடவடிக்கை ஒரு இரசிய-நேட்டோ முறுகலை உருவாக்கலாம்.

உக்ரேன் அலெக்சாண்டர் டக்கினின் கொலைக்குப் பின்னால் இருக்கின்றது என்ற குற்றச் சாட்டை உக்ரேனிய அரசு கடுமையாக மறுக்கின்றது.

சில மேற்கு நாட்டு ஊடகங்கள், உக்ரேன் போரில் பெரும் பின்னடைவைச் சந்திக்கும் இரசியா, தனது போரை மேலும் தீவிரப்படுத்த அலெக்சாண்டர் டக்கினை கொலை முயற்ச்சி நாடகமாடி அவரது மகளைப் பலியெடுத்தது எனக் குற்றம் சாட்டுகின்றது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...