Saturday, 9 March 2013

உலக வங்கியை மிஞ்சிய சீன வங்கியும் அதன் திருகுதாளங்களும்

2011-ம் ஆண்டு சீன வங்கி உலக வங்கிகளுக்கு வழங்கிய கடன் தொகை உலக வங்கியை மிஞ்சி விட்டது. உலக வங்கி 2009-2010இல் உலக நாடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் வழங்கிய கடன் 100.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள். சீன வங்கி வழங்கிய கடன் 110 பில்லியன்கள். சீன வங்கியான சீன அபிவிருத்தி வங்கி உலகிலேயே பெரிய வங்கியாகும்.

ஐக்கிய அமெரிக்காவிற்கு சீனாவின் கடன்
சீனாவின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு 2012இன் இறுதிய்யில் 3.31ரில்லியன் அமெரிக்க டாலர்கள். ஒரு ரில்லியன் என்பது 1,000,000,000,000. இவற்றை சீனா எங்காவது முதலிட வேண்டும் அல்லது யாருக்காவது கடன்கொடுத்து வட்டி வாங்க வேண்டும். ஐக்கிய அமெரிக்காவிற்கு அதிக கடன் கொடுக்கும் நாடாக சீன திகழ்கிறது. சீனா தனது அப்பாவி மக்களைச் சுரண்டி குறைந்த ஊதியத்திற்கு வேலை வாங்கி குறைந்த உற்பத்திச் செலவுடன் பொருள்களை உற்பத்தி செய்து அதை உலகெங்கும் ஏற்றுமதி செய்து 3.2ரில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நியச் செலவாணி உபரியாக வைத்துள்ளது. அதன் பெரும்பகுதியான 1.14ரில்லியன் டொலர்களை அமெரிக்காவிற்கு கடனாகக் கொடுத்துள்ளது. இதன் வட்டிகளை செலுத்துவதனால் அமெரிக்க பெரும் நிதி நெருக்கடியை எதிர் கொள்கிறது. சீனா தனது 3.2ரில்லியன் டொலர்கள் சொத்தை வைத்துக் கொண்டு உலக அரங்கில் தனது செல்வாக்கை உயர்த்த முயல்கிறது. தனக்கு எதிரான மனித உரிமைக் குரல்களைத் திசை திருப்பவும் முயல்கிறது.

ஆபிரிக்காவில் சீனா
1950களில் இருந்தே ஆபிர்க்காவின் சோசலிசக் கொள்கையுடைய ஆட்சியாளர்களுக்கு சீனா கடன் வழங்கி வருகிறது. இக்கடன்கள் இராசதந்திர நோக்கங்களுடனும் வர்த்தக நோக்கங்களுடனும் வழங்கப்பட்டன. கடன் வாங்கிய நாடுகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்தல், சீன அரச நிறுவனங்களுக்கு கடன் வாங்கிய நாடுகளில் முதலீடு செய்ய அனுமதியும் அரச திட்டங்களை நிறைவேற்றும் பணிகளில் ஈடுபடுத்துதலும் கடன் வழங்கும் ஒப்பந்தங்களின் முக்கிய அம்சமாக இருக்கும். இதனால் சீனா ஆபிரிக்காவிற்கான தனது ஏற்றுமதியில் ஐக்கிய அமெரிக்கா, பிரிட்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளைப் பின் தள்ளியது. மனித உரிமை மீறல்கள் போன்ற காரணங்களுக்காக உலக வங்கி மற்றும் சில மேற்கு நாடுகள் கடன் கொடுக்க மறுக்கும் நாடுகளுக்கு சீன அதிக வட்டியுடன் கடன் வழங்குகிறது. ஆபிரிக்க நாடுகளை சுரண்டுவதற்கென்று சீன அபிவிருத்தி வங்கி China-Africa Development Fund என்னும் நிதியத்தை உருவாக்கியுள்ளது.

பிரிக்ஸ் நாடுகளுக்கு சீனாவின் கடன்
2012இல் சீன வங்கி அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 1.1 பில்லிபன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்கியதும் இந்திய மத்திய வங்கியான ரிசேர்வ் வங்கி அதை அங்கீகரித்ததும் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. BRICS எனப்படும் பிரேசில், இரசியா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பில் சீனா மற்ற நாடுகளுக்கு கடன் வழங்கி வருகிறது. பிரேசிலும் இரசியாவும் சீனாவிடமிருந்து கடன் வாங்கியுள்ளன. இரசியாவின் எரிபொருள் நிறுவனமொன்று 2009இல் சீனாவிடமிருந்து 25பில்லியன் அமெரிக்க டாலர்களை வாங்கியது. கடனில் ஒரு நிபந்தனை சினாவிற்கு இரசியாவில் இருந்து நாளொன்றிற்கு மூன்று இலட்சம் பீப்பாய் எண்ணெய் 20 ஆண்டுகளுக்கு விநியோகிக்க வேண்டும். இரசிய நிறுவனம் அதிக வட்டி கொடுப்பதுடன் எரிபொருளின் விலை நிர்ணயம் தொடர்பாக சீனாவுடன் முரண்படுகிறது. பிரேசிலின் இரும்புத் தாது நிறுவனமான வேல் சீனாவிடம் கடனுக்கு கப்பல் வாங்கியது. கடன் ஒப்பந்தத்தின் படி அக்கப்பல்களில் சீனாவிற்கு இரும்புத் தாது ஏற்றுமதி செய்வதாக இருந்தது. ஆனால் இரும்புத் தாதுகளுடன் சென்ற பிரேசில் நிறுவனம் வேலின் கப்பல்களை சீனக் கப்பல் நிறுவனங்கள் சீனத் துறை முகத்தில் நங்கூர மிட அனுமதிக்க மறுத்தன. இந்தப் பிரச்சனை தீராமல் சில காலங்கள் இழுபட்டது.

லத்தின் அமெரிக்க நாடுகள்
லத்தின் அமெரிக்க நாடுகளுக்கும் சீனா கடன் வழங்கி அதன் மூலம் அந்த நாடுகளின் நிர்மானம் பணிகளில் சீன நிறுவனங்களை ஈடுபடுத்தியும் அங்குள்ள எரி பொருள் மற்றும் பல மூலப் பொருள்களை சீனாவிற்கு விநியோகிக்கவும் ஏற்பாடு செய்துள்ளது. பல நிர்மானப் பணிகளிற்கு உள்ளூரில் இருந்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தாமல் சீனாவில் இருந்து சீனர்கள் சென்று வேலை செய்கிறார்கள்.

Friday, 8 March 2013

மகளிர்தானே அன்பின் விளைநிலம்

கருவாக்கி உருவாக்கி
உணவாக்கி குணமாக்கி
வளமாக்கி
வளர் தருவாக்கி
அன்னை உருவாக
வரும் மகளிர்தானே
உலகின் விளைநிலம்

காலுறை தேடியெடுத்துக் கொடுத்து
மேலாடை அழுத்திக் கொடுத்து
முடிதிருத்தி அழகாக்கி
பணிவிடை செய்யும் அக்காக்கள்
அகிலத்தில் இருப்பதால்
மகளிர்தானே பாசத்தின் விளைநிலம்

என்பொருள் திருடும் மென்பொருளாகி
தோளில் சாய்ந்திருந்து அலைவரிசை மாற்றி
அடிக்கடி சண்டை போடும் தங்கைகளுடன்
வாழாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா
தங்கைகளின் அன்பில் எல்லாம் உருகும்
அதனால் மகளிர்தானே அன்பின் விளைநிலம்

எல்லாவற்றையும் பொறுத்து
எல்லாக் குளப்படிகளுக்கும் அர்த்தம் கொடுத்து
பாராட்டி மகிழும் பாட்டியின் அன்பிற்கு
எதுதான் இந்த உலகத்தில் இணையாகும்
அதனால் மகளிர்தானே பரிவின் விளைநிலம்

மாமியாகி மைத்துனியாகி
சித்தியாகி பெரியம்மாவாகி
பக்கத்து வீட்டு ஆன்ரியாகி
மருத்துவ மனையில் தாதியாகி
பள்ளித் தோழியாகி பணிமனை நண்பியாகி
எத்தனை வடிவில் வந்து
எம்மில் அன்பு காட்டுவதால்
மகளிர்தானே நட்பின் விளைநிலம்

இதயச் சிறையிலடைத்துப் - பின்
முத்தத்தால் பிணை எடுத்து
ஓரப்பார்வையால் உயிரெடுத்து

தளர்ந்தால் தூக்கி நிறுத்தி
இளமையை இனிக்க வைப்பதால்
மகளிர்தானே காதலின் விளைநிலம்

கட்டிலில் கதாநாயகியாகி
கடைத்தெருவில் வில்லியாகி
சமையலறையில் தாயாகி
கவலைப்படுகையில் நட்பாகி
நெஞ்சின் உள்ளும் வெளியும்
எம்மைச் சுமக்கும் மனைவியர்
எம்மில் பாதியாக வாழ்வதால்
மகளிர்தானே வாழ்கையின் விளைநிலம்

எவரைப் புகழ்ந்தாலும்
எத்தனை சொன்னாலும்
கழுத்தில் நஞ்சணிந்து
களமாடிய பெண்புலிகள்தானே
வீரத்தின் தாய்களானார்
அதனால் மகளிர்தானே 

வீரத்தின் விளைநிலம்

Thursday, 7 March 2013

வெனிசூலா அதிபர் சாவேஸ் கொல்லப்பட்டாரா?

வெனிசூலா அதிபர் ஹியூகோ சாவேஸ் இறந்ததின் பின்னர் அவருக்கு வந்த புற்று நோய் அமெரிக்க உளவுத் துறையான சிஐஏயின் சதியா என்ற விவாதம் மீண்டும் எழுந்துள்ளது. 2011இல் அவருக்கு புற்றுநோய்க் கட்டி உருவாகியது என்றவுடன் அது சிஐஏயின் சதியா என்ற கேள்வி எழுந்தது. சாவேஸும் அந்த ஐயத்தைப் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.

பிரேசெஇல், ஆர்ஜெண்டீனா ஆகிய நாடுகளில் அமெரிக்காவிற்குப் பிடிக்காதவர்கள் ஒன்பது பேருக்கு ஒரே கால கட்டத்தில் புற்று நோய் வந்தது எப்படி என்று
ஹியூகோ சாவேஸ் கேள்வி எழுப்பியிருந்தார். ஆர்ஜெண்டீனிய அதிபர் Cristina Fernández de Kirchnerஇற்கு தொண்டையில் புற்று நோய். பராகுவே நாட்டின் அதிபர் ஃபெர்னாண்டஸ் லூகோவிற்குப் புற்று நோய் வந்திருந்தது. அவர் பிரேசிலில் சிகிச்சை பெற்று 2012இல் குணமானார். பிரேசிலின் அதிபர் டில்மா ருஸ்ஸெஃப் 2009இல் புற்று நோய் வந்து குணமானார். பிரேசிலின் முன்னாள் அதிபர் லூலா த சில்வாவையும் புற்று நோய் விட்டு வைக்கவில்லை.

ஒரு ஆண்டுக்கு முன்னர் இப்படிக் கூறியிருந்தார்:
“I don’t know but… it is very odd that we have seen Lugo affected by cancer, Dilma when she was a candidate, me, going into an election year, not long ago Lula and now Cristina… It is very hard to explain, even with the law of probabilities, what has been happening to some leaders in Latin America. It’s at the very least strange, very strange.”

அமெரிக்காவின் உளவுத் துறையான சிஐஏ பலதடவை கியூபாவின் பிடல் காஸ்ரோவைக் கொல்ல சதி செய்தது பகிரங்க உண்மை.  நச்சு மாத்திரை, நஞ்சு தடவிய ஆடை, பேனாவில் நஞ்சு ஊசி, நஞ்சு தடவிய சுருட்டு, சங்குக்குள் வெடிகுண்டு, தாடியை உதிரவைக்கும் சதி, உரையாற்ற இருந்த வானொலி நிலையத்தில் நச்சுப் புகை, நச்சுக் கிருமிகளுடனான கைக்குட்டை, நஞ்சு கலந்த பால் எனப் பல வழிகளில் பிடல் காஸ்ரோவைக் கொல்ல சிஐஏ சதி செய்தது.

அமெரிக்க அரசு அல்லது அதன் உளவுத் துறை மட்டுமல்ல அதன் முதலாளிகளே

வெனிசூலா அதிபர் ஹியூகோ சாவேஸ் அவர்களைக் கொல்லச் சதி செய்திருக்கலாம் என்கிறார் கெவில் பரற் என்னும் பத்தி எழுத்தாளர்.

Confessions of an Economic Hit Man என்னும் நூலில் 
John Perkins என்பவர் அமெரிக்க தனியார் வியாபார நிறுவனங்கள் உலகத் தலைவர்களைக் கொலை செய்யக் கூலிக் கொலையாளிகளை பயன்படுத்துகின்றன என்பதற்கு பல ஆதாரங்களை முன்வைத்துள்ளார்.  அமெரிக்க பெரு வங்கிகள் ஒரு நாட்டிற்கு தன் கையாளை அனுப்பும். அவர் அந்த நாடுத் தலைவரைச் சந்தித்து உனது நாடு குறிந்த வங்கியில் இருந்து கடன் பெற வேண்டும் அல்லது உன்னை போட்டுத் தள்ளுவேன் என்பார். கடன் பெற்றால் அவரது நாடு அமெரிக்க வங்கியின் கடனடிமையாகும். கடன் வாங்க மறுத்தால் வங்கி தனது asteroid என்ற குறியீட்டுப் பெயருடன் அழைக்கப்படும் கூலிக் கொலையாளியை அனுப்பி அவரைக் கொல்லும். இப்படி அடுக்குகிறார் அமெரிக்க வங்கிகளுக்காக வேலை செய்த John Perkins என்பவர்.

1992-ம் ஆண்டு ஊழல் மிக்க ஆட்சியாளரான Carlos Andrés Pérez எதிரான படைத்துறைப் புரட்சியை மேற்கொண்ட 
ஹியூகோ சாவேஸ் கைது செய்யப்பட்டார். பின்னர் 1994இல் மன்னிக்கப்பட்டு வெளியில்  வந்து 1998இல் தேர்தலில் போட்டியிட்டு வென்று வெனிசூலாவின் அதிபரானார். தான் இடது சாரியுமல்ல வலது சாரியுமல்ல என்று சொல்லி ஆட்சியைக் கைப்பற்றிய ஹியூகோ சாவேஸ் பின்னர் தனது நாட்டை சோசலிசப் பாதையில் இட்டுச் சென்று பல வறிய மக்களை வறுவையில் இருந்து விடுவித்தார். எண்ணெய் நிறுவங்கள் உட்படப் பல அமெரிக்க நிறுவனங்களை நாட்டுடமையாக்கினார். பிடல் காஸ்ரோவின் நெருங்கிய நண்பரானார்.

ஹியூகோ சாவேஸ் அவர்களின் ஆட்சியில் வெனிசூலா நாடின் தேசிய வருமானம் 50%ஆல் அதிகரித்தது.  குழந்தைகளின் இறப்பு  அரைவாசியாகக் குறைந்தது. வேலையில்லாதவர்களின் தொகையும் அரைவாசியாகக் குறைந்தது. கல்லூரிகளின் படிப்பவர்களின் தொகை இரட்டிப்பானது. 23 நாடுகளைக் கொண்ட லத்தின் அமெரிக்காவில் வறியவர்கள் குறைந்த நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தை வெனிசூலா பிடித்தது. பொருளாதாரத்தில் வருமான மீள் விநியோகத்தில் அதிக கவனம் செலுத்தினார். லத்தின் அமெரிக்க நாடுகளில் வெனிசூலாவின் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளி மிகக் குறைவானது. The Bolivarian Republic of Venezuela has the lowest rate of income inequality – the smallest gap between the rich and the poor – of all countries in Latin America and the Caribbean, according to a report published Tuesday by UN-HABITAT, the United Nations Human Settlements Program. இதனால் அவர் ஏழை மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட தலைவரானார்.
FARC  எனப்படும் (
The Revolutionary Armed Forces of Colombia ) கொலம்பிய போராளிக் குழுக்களுக்கு சாவோஸ் பெரிதும் உதவி புரிந்தார். அமெரிக்காவின் எதிரிகளான ஈரான், சிரியா, முன்னாள் லிபியா போன்ற நாடுகளுடன் நெருங்கிய நட்பைப் பேணினார்.  2006-இம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஸ் உரையாற்றிய மறுநாள் உரையாற்றிய சாவோஸ் நேற்று இங்கு ஒரு பிசாசி உரையாற்றியது அதனால் இப்போதும் இங்கு கந்தகம் மணக்கிறது என்றார். இவரை அமெரிக்கா வெறுப்பதற்கு போதிய ஆதாரங்கள் இருக்கின்றன.

Wednesday, 6 March 2013

இரா சம்பந்தன் பேசாத பொருள்கள்

இலங்கைத் தமிழர்களின் பிரச்சனையைப் பற்றிப் பேசும் போது அதில் இந்தியாவின் சதியைப் பற்றிப் பேசாமல் விடுவது முக்கைப்பற்றி மூச்சைப் பிடித்துக் கொண்டு மூன்று மணித்தியாலம் பேசுகையில் சளியைப் பற்றிப் பேசாமல் விடுவது போலாகும்.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திரு இரா சம்பந்தன் அவர்கள் 03/03/2013 இரவு இலண்டன் தமிழ்த் தொலைக் காட்சி ஒன்றிற்கு போசாப் பொருள் என்ற நிகழ்ச்சியில் பேட்டியளிக்கும் போது ஈழத் தமிழர்களுக்கு இந்தியா செய்த துரோகங்கள் எதையும் பேசாமல் விட்டார்.

முப்பது குழுக்களாக தமிழ் இளைஞர்கள் பிரிந்து நின்று படைக்கலன் ஏந்திப் போராடியதைப் பற்றிக் கேட்ட போது திரு சம்பந்தன் அவர்கள் அந்தக் குழுக்களைப்  பிரித்து வைத்தது இந்தியா என்பதைப் பேசாமல் விட்டார். இந்தியா பிரித்து வைத்தது மட்டுமல்ல டெலோ இயக்கத்துடன் இணைந்து விடுதலைப் புலிகளை அழிக்கத் திட்டமிட்டதையும் பேசாமல் விட்டார்.

பிரித்தானியக் குடியேற்ற ஆட்சியின் டொனமூர் ஆணைக்குழுவின் முன்னர் கண்டியச் சிங்களவர்கள் இலங்கையை கண்டித் தமிழர்களுக்கு என்று ஒரு பிரதேசம், கீழ்நாட்டுச் சிங்களவர்களுக்கு என்று ஒரு பிரதேசம், தமிழர்களுக்கு என்று ஒரு பிரதேசம் என்றும் பிரித்து சமஷ்டி ஆட்சி கோரிக்கையை முன்வைத்ததையும் அதற்குத் தமிழர்கள் ஆதரவு தெரிவிக்காததையும் கூறிய திரு சம்பந்தன் திருவாளர்கள் சௌமியமூர்த்து தொண்டமானையும் ஜீ ஜீ பொன்னம்பலத்தையும் சேரவிடாமல் அப்போதைய பாரதப் பிரதமர் ஜவகர்லால் நேரு பிரித்து வைத்ததைப் பேசாமல் விட்டார். அதனால் ஏற்பட்ட பிளவு மலையகத் தமிழர்களின் வாக்குரிமையைப் பிரித்ததை திரு சம்பந்தன் பேசாமல் விட்டார். தொண்டமான் நேருவிடம் முறையிட்டபோது இது உள்நாட்டுப் பிரச்சனை இதில் என்னால் தலையிட முடியாது என்று கைவிரித்து விட்டதை திரு சம்பந்தன் பேசவில்லை.

ஈழப் போராளிகளைப் பற்றிக் கேட்ட போது திரு சம்பந்தன் "அவர்களது போராட்டத்தை நாம் மதிக்க வேண்டும் . அதை எவரும் மறுக்க முடியாது. அவர்களை அரசாங்கம் பயங்கரவாதிகள் எனக் கூறலாம். ஆனால் ஆரம்பத்தில் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய  போதிய நியாயம் இருந்தது. இதை நான் பாராளமன்றத்தில் எடுத்துக் கூறியுள்ளேன். இதற்கு முன்னரும் கூறியுள்ளேன். ஆனால் அவர்களிடம் ஜனநாயகம் இருக்கவில்லை. அவர்கள் மனித உரிமைகளை மதிக்கவில்லை. " எனக் கூறிய சம்பந்தன் அவர்கள் தான் தென் ஆபிரிக்கத் தேசியக் காங்கிரசைச் சேர்ந்தவர்களைச் சந்தித்த போது தமிழர்கள் போராட்டத்தில் அரசியிலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் படைக்கலப் போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்றார். தம்மிலும் பார்க்க 12 மடங்கு பலத்தைக் கொண்டவர்களுடன் போராடும் ஓர் இயக்கம்; மிக மோசமான துரோகிகள் சூழ்ந்த ஓர் இயக்கம்; ஜனநாயகத்தைப் பற்றி தமது படைக்கலப் போராட்டத்தில் வெற்றி பெறும் மட்டும் சிந்திக்க முடியாத சூழல் இருந்தது என்பதை திரு சம்பந்தன் பேசாமல் விட்டார். ஆபிரிக்க தேசிய காங்கிரசு தமது நாட்டில் பெரும்பான்மையான மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடியது. அவர்களுக்கு அணிசேராநாடுகளினதும் இரண்டாம் அகில நாடுகளினதும் பல மேற்கு ஐரோப்பிய நாடுகளினதும் ஆதரவு இருந்தது. அவர்கள் உள்நாட்டிலும் பன்னாட்டு அரங்கிலும் தமது அரசிலை முன்வைக்க முடியும். ஆனால் தமிழர்களின் அரசியலை சிங்களவர்கள் முன் வைக்கும் போது எந்தக் கட்டத்திலும் அதை சிங்களவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை திரு சம்பந்தன் பேசவில்லை. இலங்கையைத் தாண்டி தமிழர்கள் தமது அரசியலை பன்னாட்டரங்கில் முன்வைக்கும் போது இது "நம்ம ஏரியா உள்ளே வராதே" என்ற மனப்பாங்குடன் செயற்பட்டு இது தனது பிரச்சனை தானே தீர்த்து வைப்பேன் என்ற மனப் பாங்குடன் திருமதி இந்திரா காந்தி செயற்பட்டதை திரு சம்பந்தன் பேசவில்லை. தமிழர்களின் அரசியல் 26 ஆண்டுகளாக எந்த அதிகாரமும் இல்லாத 13-ம் திருத்தத்திற்குள் முடக்கி வைக்கப்பட்டிருப்பதை திரு சம்பந்தன் பேசவில்லை.  2009-ம் ஆண்டு ஐநா மனித உரிமைக் கழகத்தில் இலங்கையைக் கண்டிக்கும் தீர்மானம் முன் வைக்கப்பட்டபோது அதை இந்தியா இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீரமானமாக மாற்றிய போது தென் ஆபிரிக்காவும் அதற்கு இந்தியாவின் நிர்ப்பந்தத்தின் பேரில் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானத்திற்கு வாக்களித்ததை திரு சம்பந்தன் பேசவில்லை. படைக்கலப் புரட்சியைப் பற்றிய விற்பன்னர்கள் புரட்ச்சிக்கும் ஜனநாயகத்திற்கும் சரிவராது எனச் சொல்லியவற்றை திரு சம்பந்தன் பேசவில்லை.  பி. கு: ஆரம்பத்தில் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நியாயம் இருந்தது என்றார் திரு சம்பந்தன். இப்போது அது இல்லாமல் போய்விட்டதா?

மறைந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் திரு அ அமிர்தலிங்கத்தைப் பற்றிக் கேட்டபோது திரு சம்பந்தன் அவர் இறந்த போது தான் கதறி அழுதேன் என்றார். அவர் தமிழர்களிற்குப் பாரிய பங்களிப்புச் செய்த பெரும் திறமைசாலி என்றார்.  அவர் இருந்திருந்தால் பல நன்மைகள் ஏற்பட்டிருக்கும் என்றார். 1965இல் தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைத்த போது அதனால் தமிழர்களுக்கு ஒரு நன்மையும் ஏற்படாது என்பதை உணர முடியாத திறமைசாலி அமிர்தலிங்கம் என்பதை திரு சம்பந்தன் பேசவில்லை. 1970-ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அமிர்தலிங்கம் இம்முறை எந்த ஒரு சிங்களக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறாது. தமிழர்களின் ஆதரவுடன்தான் சிங்களக் கட்சிகள் ஆட்சி அமைக்க முடியும். அதனால் எல்லாத் தொகுதிகளிலும் தமிழரசுக் கட்சியை வெற்றி பெற வையுங்கள் என்றார். அவரது உரை சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு துண்டுப் பிரசுரமாக சிங்கள மக்கள் மத்தியில் பெரும் பரப்புரை செய்யப்பட்டது. சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான கூட்டணி இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பானமையுடன் வெற்றியீட்டியது. தமிழர்களுக்கு பாதுகாப்பாக இருந்த சோல்பரி அரசியல் யாப்பின் 29 வது பிரிவுடன் சேர்த்து தமிழர்களின் உரிமைகள் முற்றாகப் பறித்தெடுக்கப்பட்டது. தனது ஊருக்கு தண்ணீர் வசதி செய்து தரும்படி கேட்ட மக்களுக்கு உங்க மனுசிமார் பெரிய தாலிக்கொடி போட்டிருக்கிறார்கள் அதை விற்று உங்கள் ஊருக்கு தண்ணீர் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பியவர் அமிர்தலிங்கம். அடையாள அட்டைச் சட்டம் தமிழர்களுக்கு நன்மை செய்யும் என்று ஊர்காவற்துறை நவரத்தினத்துடன் வாதாடி "வென்றவர்" அமிர்தலிங்கம். பின்னர் சிங்களப் படையினர் அடையாள அட்டைகளை வைத்து தமிழர்களை இனம் கண்டு தாக்குதவற்கு அவை பேருதவி செய்தது. இதையெல்லாம் பேசாமல் விட்டார் திரு சம்பந்தன்.

திரு சம்பந்தன் நீலன் திருச்செல்வத்தின் இறப்பும் பெரும் இழப்பு என்றார். அவர் இருந்திருந்தால் பெரும் நன்மைகள் கிடைத்திருக்கும் என்றார். நீலன் திருச்செல்வமும் பேராசிரியர் ஏ ஜே விலசனும் இணைந்து தற்போது நடைமுறையில் இருக்கும் அரசமைப்பு யாப்பை ஜே ஆர் ஜயவர்த்தனவிற்காக உருவாக்க ஆலோசனை கூறியவர்கள் என்பதையோ அது இலங்கையின் மனித உரிமைகளைக் குழி தோண்டிப் புதைக்க வழி செய்தது என்பதையோ திரு சம்பந்தன் பேசவில்லை.

Tuesday, 5 March 2013

ஜெனிவாவில் ஜெயலலிதாவின் படம் தாங்கிய பதாகை

தமிழர்கள் உலகெங்கும் பல நகர்களில் ஆர்ப்பாட்டங்கள் செய்வதுண்டு அதில் பலவிதமான பதாகைகள் தாங்கிச் செல்லப்படும். அதில் 04-3-213-ம் திகதி ஜெனிவா நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் பணிமனைக்கு முன்னர் நடந்த பேரணியில் ஜெயலலிதாவின் படம் தாங்கிய பதாகையும் காணப்பட்டது. 

இதற்கு முன்னர் ஒரு போதும் அண்ணா திரவிட முன்னேற்றக் கழக நாயகி ஜெயலலிதாவின் படம் இடம்பெற்றதில்லை. ஒரு மாவீரர் தின உரையில் அண்டன் பாலசிங்கம் ஜெயலலிதாவை குண்டம்மா என குறிப்பிட்டிருந்தார். தமிழிழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனக்குப் பிடித்த ஊடகவியலாளரான அப்துல் ஜபார் அவர்களுக்கு அளித்த விருந்தில் ஜெயலலிதாவைப் பற்றிச் சொல்லும் போது "அந்த மனுசிக்கு நாங்கள் என்ன பிழை விட்டனாங்கள். அவ ஏன் எங்களுக்கு எதிராகக் கதைக்கிறா?" என்று குறிப்பிட்டிருந்தார்.

2013 பெப்ரவரி மாத இறுதியில் இலண்டன் ஹரோவில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய இலங்கப் பாராளமன்ற உறுப்பினர் அண்மையில் நடந்த முக்கிய மான நிகழ்வுகள் பற்றி அடுக்கிக் கொண்டு போகையில் அன்னை ஜெயலலிதா தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம் என்றார்.

ஈழத் தமிழர்கள் பெரிதும் விரும்பும் வை கோபாலசுவாமி அவர்களை ஜெயலலிதா சென்று சந்தித்தார். எமது மிக விருப்பத்திற்குரிய சீமான அவர்கள் ஜெயலலிதாவிற்கு சாதகமாக பேசுவதுண்டு. மாநிலங்களவை உறுப்பினர் மைத்திரேயன்  ஆற்றிய உரை பல தமிழின உணர்வாளர்களை மகிழ்ச்சிப் படுத்தியுள்ளது. 

ஆனால் செல்வி ஜெயலலிதா ஆலோசகர் சோ!!!!!!!!!!!!!

04-03-2013 ஜெனிவா பேரணியில் காணப்பட்ட இன்னொரு மாற்றம் அங்கு அமெரிக்கக் தேசியக் கொடிகளும் தாங்கிச் செல்லப்பட்டதாகும். இதற்கு முன்னர் பிரித்தானிய, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா போன்ற நாடுகளின் தேசியக் கொடிகள் தாங்கிச் செல்வதுண்டு. இந்த முறைதான் முதல் தடவையாக அமெரிக்கத் தேசியக் கொடி தாங்கிச் செல்லப்பட்டது. முன்பு ஐக்கிய நாடுகள் சபையின் தேசியக் கொடி பறக்கும். இம்முறை அது இல்லை. 
அமெரிக்க இரட்டக் கோபுரத் தாக்குதல்களுக்குப் பின்னர் அமெரிக்கா பன்னாட்டு ஒழுங்கை மாற்றியதும் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவதில் முன்னின்று செயல்பட்டதும் அறிந்ததே.

யார் குத்தியும் அரிசியாகட்டும் என
யார் யாரையோ எல்லாம் நம்பி
நண்பர்களாகி கைகொடுத்தோம்
கடைசியில் குத்து விழுந்தது
எம் முதுகில்
என்றோ ஒரு நாள்
எங்கிருந்தோ
வருவான் ஒருவன்
எமக்காக அரிசி குத்த
என இன்றும் நம்பியிருக்கிறோம்

Sunday, 3 March 2013

சனல் - 4 ஆவணம் படம் ஜெனிவாவின் ஏற்படுத்தப் போகும் தாக்கம் என்ன?

  • ஜெனிவாவில் இந்த முறையும் சனல் - 4 தொலைக் காட்சியின் ஆவணப்படம் பல நாட்டுப் பிரதிநிதிகளையும் உலுக்கியுள்ளது. ஆனால் இது அவர்களின் வாக்களிக்கும் தீர்மானத்தில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. சனல் - 4 இன் No Fire Zone ஆவணப்படத்தைப் பற்றி யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் நாளேடு இப்படிச் சொல்கிறது:
  • குறித்த ஆவணப்படத்தைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த பன்னாட்டு இராஜதந்திரிகள் நெஞ்சை நெகிழவைக்கும் காட்சிகளால் கண்கலங்கினர். இதனால் ஐ.நா. சபை கண்ணீர்க் குளமானது.அதேவேளை, மோதல் தவிர்ப்பு வலயத்துக்குள் மக்கள் படும் அவலங்களை ஆவணப்படத்தின் ஊடாகப் பார்வையிட்ட இராஜதந்திரிகள் சிலர், சோகம் தாங்க முடியாததால் அறையிலிருந்து வெளியே சென்றனர்.

போர்க் குற்றங்களுக்கான ஆதாரம் என தயாரிப்பாளர் கலம் மக்ரே சொல்லித் திரையிட்ட சனல் - 4 இன் ஆவணப்படத்தைப் பார்த்து கண்கலங்கியவர்கள, பார்க்க முடியாமல் எழுந்து வெளியேறிவர்கள் என திரையிடப்பட்ட இடம் கலங்கியது.

நாடுகளின் வாக்களிக்கும் தீர்மானத்தை சனல் - 4 இன் ஆவணப்படம் பாதிக்குமா? உதாரணத்திற்கு பொய்லாந்து என்ற ஒரு நாடு இருக்கிறது என்று எடுத்துக் கொள்வோம். அதன் பிரதிநிதி சனல் - 4 இன் ஆவணப்படத்தைப் பார்த்து அழுகிறார். அதற்காக அவர் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை எதிர்க்க முடியாது. ஏனெனினில் அவரது நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்கனவே நல்ல உறவு உண்டு. ஐக்கிய நாடுகள் சபையின் பல உறுப்புகளில் பொய்லாந்து போட்டியிடும் போது இலங்கை அவர்களுக்காக வாக்களித்துண்டு. இனியும் அப்படி இலங்கை வாக்களிப்பதற்கு இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றே பொய்லாந்தின் வெள்யுறவுத் துறை அமைச்சு தீர்மானித்து விட்டது. இத் தீர்மானத்தை பொய்லாந்தின் ஐநா மனித உரிமைக் கழகத்திற்கான பிரதிநிதியால் சனல் - 4 இன் தீர்மானத்தைப் பார்த்து மாற்ற முடியாது.

இன்னும் ஒரு உதாரணத்திற்கு கொலைலாந்து என்ற நாட்டைப் பார்ப்போம். அந்த நாட்டின் ஐநா மனித உரிமைக்கழகத்தின் பிரதிநிதி சனல் - 4 இன் ஆவணப்படத்தைப் பார்க்க முடியாமல் இடையில் எழுந்து ஓடிவிட்டார். ஆனால் அவரது நாட்டில் இதிலும் மோசமான கொலைகள் மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றங்கள் நடக்கின்றன. அவற்றை அவர் நன்கு அறிவார். .அவற்றை எல்லாம் அவர் காணொளியில் பார்ப்பதுமில்லை. அந்த கொலைலாந்து அரசின் ஊழியர் அவர். அவரது நாட்டிற்கு எதிரான தீர்மானம் மனித உரிமைக்கழக்தில் வரும்போது இலங்கை பொய்லாந்திற்குச் சாதகமாக வாக்களிப்பதாகவும் பொய்லாந்து இலங்கைக்குச் சாதகமாக வாக்களிப்பதாகவும் ஏற்கனவே உடன்பாடு ஏற்பட்டுவிட்டது. பொய்லாந்துப் பிரதிநிதி சனல் - 4 இன் ஆவணப்படத்தைப் பார்த்து தனது வாக்களிக்கும் தீர்மானத்தை மாற்ற முடியாது.

இன்னும் ஒரு உதாரணமாக பனிசுலேவியா என்ற நாட்டைப் பார்த்துக்கொள்வோம். பனிசுலேவியாவின் ஐநா மனித உரிமைக் கழகத்திற்கான பிரதிநிதி ஒரு இளகிய மனம் படைத்த பெண்மணி. அவர் சனல் - 4 இன ஆவணப்படத்தைப் பார்த்து அழுத படி ஓடிவிட்டார். அவரைக் கருத்துக் கூற ஊடகவியலாளர்கள் கேட்ட போது எதுவும் சொல்லாமல் நழுவிக்கொண்டார். பனிசுலேவியப் பிரதிநிதி இரசியாவில் படிக்கும் போது ஒரு தமிழரும் அவருடன் படித்தார். அவருக்கு இலங்கைப் பிரச்சனை பற்றி நல்ல அழிவு உண்டு தமிழர்கள் மேல் நல்ல மதிப்புள்ளவர். தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை வேண்டும் என்ற கருத்து உள்ளவர். ஆனால் அவரது பனிசுலேவியா நாட்டு அரசு அமெரிக்காவை தனது எதிரியாகக் கருதுகிறது. அவர்களது ஆட்சியாளர்கள் பன்னாட்டு அரங்குகளில் அமெரிக்காவைக் கடுமையாக விமர்சிப்பவர்கள். எந்த ஒரு பன்னாட்டு அமைப்பிலும் அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டு வந்தால் அதற்கு எதிராக பனிசுலேவையப் பிரதி நிதி கடுமையாக எதிர்த்துப் பேசுவார். எதிர்த்து வாக்களிப்பார். இதனால ஐநா மனித உரிமைக் கழகத்திலும் பனிசுலேவியப் பிரதிநிதி அமெரிக்கா இலங்கைக்கு கொண்டு வரும் தீர்மான முன்மொழிவை எதிர்த்துப் பேச வேண்டும். இலங்கையில் போருக்குப் பின்னரான அபிவிருத்தியைப் பாராட்டிப் பேச வேண்டும். அமெரிக்கா இலங்கை மீது தனது ஏகாதிபத்திய வெறியைக் காட்டுகிறது என்று பேச வேண்டும். அமெரிக்காவின் தீர்மானத்திற்கு எதிராகவும் இலங்கைகு ஆதரவாகவும் வெனிசுலேவியப் பிரதிநிதி வாக்களிப்பார்.

ஒஸ்ரியா, ஜேர்மனி, அயர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு தற்போது ஐநா மனித உரிமைக்கழகத்தில் வாக்களிக்கும் உரிமை உண்டு. இவர்கள் சனல் - 4 இன் படத்தைப் பார்த்தார்கள் இவர்களில் ஒருவர் இடையில் கலங்கிப் போய் தண்ணியடிக்கவும் இன்னொருவர் தம்மடிக்கவும் போய் விட்டனர். சென்ற மாதமே ஐரோப்பிய ஒன்றியம் தாம் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிப்பதாக முடிவு செய்து விட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்களான ஒஸ்ரியா, ஜேர்மனி, அயர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி ஆகியவை அத்தீர்மானத்திற்கு ஏற்ப இலங்கைக்குப் பாதகமாகவும் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாகவும் வாக்களிப்பார்கள். இவர்களின் முடிவு சனல் - 4 இன் ஆவணப்படைத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல.

இலங்கைக்கு ஆதரவு அதிகரிக்கலாம்.
ஐநா மனித உரிமைக் கழகத்தின் 19வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு ஆதரவாக 15 வாக்களித்தன. இம்முறை இலங்கைக்கு ஆதரவாக 17 நாடுகள் வாக்களிக்கும் சாத்தியம் உண்டு. இலங்கைக்கு எதிராகவும் அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவாகவும் 27 நாடுகள் வாக்களிக்கலாம். இது பற்றிப் பார்க்க இந்த இணைப்பிற்குச் செல்லவும்: ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவு கூடுகிறது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...