Monday, 24 September 2018

இந்தியாவின் தளராத பொருளாதாரமும் தடுமாறும்

2018 செப்டம்பர் 21-ம் திகதி இந்தியப் பங்குச் சந்தைக்கு ஒரு சோதனையான நாளாக அமைந்தது. அன்று பங்கு விலைகள் பெரு வீழ்ச்சிக்குப் பின்னர் சற்று நிமிர்ந்தன. இந்தியாவின் பொருளாதாரம் 2018-இன் இரண்டாம் காலாண்டில் 8.2விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது. இது உலகின் பெரிய நாடுகளில் மிக அதிக அளவிலான வளர்ச்சியாகும். ஒரு நாட்டின் பொருளாதாரம் அதிக அளவில் வளர்ச்சியடையும் போது வட்டி விழுக்காடு அதிகரிக்கப்படும் என எதிர்பார்ப்பில் அந்த நாட்டின் நாணயத்தின் பெறுமதி அதிகரிக்கும். ஆனால் இந்திய ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே இருக்கின்றது. மற்ற வளர்முக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் வீழ்ச்சி குறைவானதாக இருந்தாலும் இந்திய ரூபாயின் வீழ்ச்சி பெரிய அரசியல் பொருளாதாரத் தாக்கத்தை இந்தியாவில் ஏற்படுத்தும். பொருளாதார வளர்ச்சி என்பது மதிப்பீடு மட்டுமே. பெரும்பாலும் சரியான கணிப்பீடாக இருப்பதில்லை.

விவரங்கெட்ட புள்ளி விபரங்கள்
2017-ம் ஆண்டு இந்தியப் பொருளாதாரம் 7.7 விழுக்காடு வளர்ந்ததாக இந்திய புள்ளிவிபரங்கள் தெரிவித்தன. ஆனால் 2017இல் இந்தியாவின் ஏற்றுமதி வளரவே இல்லை, இந்திய வங்கிகள் கடன் வழங்குவது மந்த நிலையிலேயே இருந்தது. இந்தியத் தொழிற்துறை உற்பத்தி வளரவில்லை. இதனால் இந்தியப் பொருளாதாரம் 7.7விழுக்காடு வளர்கின்றது என்பது உண்மைக்கு மாறானதாக இருக்கின்றது என்றார் விஜய் ஆர் ஜோஸி (Emeritus Fellow of Merton College, Oxford and Reader Emeritus in Economics, University of Oxford). இந்தியப் பொருளாதாரம் வளர்ந்தும் அதன் நாணயப் பெறுமதி அதிகரிக்காமல் இருப்பதற்கும் இந்தியா தனது பொருளாதார வளர்ச்சி தொடர்பான பிழையான அல்லது பொய்யான புள்ளிவிபரங்களை வெளியிடுவது காரணமாக இருக்கலாம். சீனா உட்படப் பல வளர்முக நாடுகள் தமது பொருளாதார வளர்ச்சி தொடர்பாக பொய்யன அல்லது தவறான புள்ளிவிபரங்களை வெளியிடுவதாகப் பல பொருளாதார நிபுணர்கள் நம்புகின்றனர். Morgan Stanley Investment Management என்ற முதலீட்டு முகாமை நிறுவனத்தில் பணிபுரியும் இந்தியரான ருச்சிர் ஷர்மா இது பற்றி இண்டியன் எக்ஸ்பிரஸில் 2015இல் ஒரு கட்டுரை வரைந்துள்ளார். 2014-ம் ஆண்டு இந்தியப் பொருளாதாரம் 6.9விழுக்காடு பொருளாதார வளர்ச்சியடைந்தது என்ற மோசமான பகி்டிக்கு உலகமே சிரிக்கிறது என்பது அவரது கட்டுரைத் தலைப்பு. 2018செப்டம்பர் 17-ம் திகதி திங்கட் கிழமை 8.2% வளரும் இந்தியாவின் ரூபாயின் மதிப்பு ஒரு புறம் சரிந்து கொண்டிருக்க மறுபுறம் 6.2% வளர்ச்சியடையும் சீனாவின் பங்குச் சந்தை 2014-ம் ஆண்டின் பின்னர் மோசமான வீழ்ச்சியை கண்டது.

பேரியப் பொருளியல் (Macro-Economic) சிக்கல்
ஒரு நாட்டின் நாணய மதிப்பிற்கு அதன் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையில் உள்ள வித்தியாசம் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். இறக்குமதி அதிகமானால் நடைமுறைக்கணக்குப் பற்றாக்குறை ஏற்படும். இந்திய நடைமுறைக்கணக்குப் பற்றாக்குறை 0.7விழுக்காட்டில் இருந்து 1.விழுக்காடாக அதிகரித்துள்ளமையும், இந்திய ரூபாய் அமெரிக்க டொலருக்கு எதிராக 2018 செப்டம்பர் வரை 14விழுக்காடு வீழ்ச்சியடைந்தமையும் 2018-09-15 இந்தியாவின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு$426பில்லியனிலிருந்து $399பில்லியனாகக் குறைந்தமையும், அரச நிதிப்பற்றாக்குறை 6.5 விழுக்காடாக இருத்தலும் இந்தியா ஒரு பேரியப் பொருளியல் (Macro Economic) சிக்கலில் மாட்டியுள்ளதைச் சுட்டிக்காட்டுகின்றது. ஐக்கிய அமெரிக்காவிற்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் அடுத்தபடியாக இந்தியாதான் உலகிலேயே அதிக அளவு சரக்கு வணிகப் பற்றாக்குறை உள்ள நாடாக இருக்கின்றது.

இந்திய நிதியமைச்சர் 2018 செப்டம்பர் 15-ம் திகதி அறிவித்த நடவடிக்கைகள்:
  1. அத்தியாவசியமற்ற இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துதல்.
உயர்ந்தவிலைக் கார்கள், வீட்டுச் சாதனங்கள் இலத்திரனியற்கருவிகள் போன்றவற்றின் இறக்குமதிகள் மீது கட்டுப்பாடு விதிக்கப்படும்
  1. அந்நிய முதலீட்டை இலகுவாக்குதல்
இந்தியாவில் வெளிநாட்டினரின் முதலீடு செய்வதற்கு உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதுடன் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்று வாழும் இந்தியர்கள் செய்யும் முதலீட்டை இலகுவாக்குதலும் செய்யப்படும்.
  1. வெளிநாட்டு நாணயத்தில் இந்திய நிறுவனங்களைக் கடன் பட அனுமதித்தல்.
இந்த நடவடிக்கைகளின் பின்னரும் 2018-09-17 ரூபா 1% வீழ்ச்சியடைந்தது. 2018-09-15 இந்தியாவின் வெளிநாட்டுச் செல்வாணிக் கையிருப்பு$426பில்லியனிலிருந்து $399பில்லியனாகக் குறைந்தது.

மசாலா கடனீடு (Masala Bonds)
உலகெங்கும் உள்ள பெரிய தனியார் நிறுவனங்கள் தமக்குத் தேவையான நிதியை வங்கிகளிடமிருந்து பெறுவது மட்டுமல்ல கடனீடுகள் (Bonds) மூலமாகவும் நிதி திரட்டுவதுண்டு. வளர்ச்சியடைந்த நாடுகளில் இது சாதாரணம். இந்தியா தனது தனியார் நிறிவனங்களை இந்தியா ரூபாயில் கடனீடுகளை வழங்க 2015இல்அனுமதித்துள்ளது. பொதுவாக நாணய மதிப்பு ஏற்ற இறக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க அமெரிக்க டொலரில் தனியார் நிறுவனங்கள் கடனீடுகளை முதலீட்டாளர்களுக்கு வழங்கும். இந்திய ரூபா மோசமான மதிப்பிழப்பைச் சந்திக்கும் போது வெளிநாட்டு நாணயங்களில் கடன் வாங்கிய இந்திய தனியார் நிறுவனங்கள் கடும் பாதிப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதைத் தவிர்க்கவே இந்திய ரூபாயில் கடனீடுகள் வழங்க இந்திய காப்பொதுக்க வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இந்த கடனீடுகளை உலக நிதி நிறுவனங்கள் மசாலா கடனீடுகள் எனக் கிண்டலாக அழைக்கின்றன. டொலர் கடனீடுகளில் நாணய மதிப்பு ஏற்ற இறக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை கடன் படும் நிறுவனங்களே தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் மசாலா கடனீடுகளில் கடன் கொடுப்பவர்களே நாணய மதிப்பிறக்கத்தால் கலங்க வேண்டியிருக்கும்.

முன்னால் வேறு இன்னாள் வேறு
முன்னாள் இந்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் ரூபாவின் வீழ்ச்சிக்கு எதிராக மோடி அரசு எடுத்த நடவடிக்கைக்கள் காலம் கடந்தவையாக உள்ளன என்றதுடன் அரசு அரை மனதுடனேயே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது என்றார். ஆனால் 2013-ம் ஆண்டு அவர் நிதியமைச்சராக இருந்த போது இந்திய ரூபா பெறுமதி வீழ்ச்சியடைந்த போது அதையிட்டுக் கலவரமடையத் தேவையில்லை என்றவர் ப சிதம்பரம். ஒரு நாட்டின் நாணயத்தின் பெறுமதி குறையும் போது அதன் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்புண்டு என்பது பொதுவான பொருளியல் விதியாகும்.

வளரும் பொருளாதார நாடுகளின் பொதுப்பிரச்சனை
தற்போது எல்லா வளர்முக நாடுகளின் நாணயத்தின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு எதிராக குறைவடைகின்றது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாய் குறைந்த அளவிலேயே வீழ்ச்சியடைந்துள்ளது. அதிகரிக்கும் அமெரிக்க வட்டி விழுக்காடு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள வர்த்தகப் போர், உலகமெங்கும் பரவும் இறக்குமதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் போன்றவற்றால் உலகப் பொருளாதாரத்தில் ஒரு நம்பிக்கையின்மை உருவாகியுள்ளது. அதனா வளர்முக நாடுகளின் நாணயங்களின் பெறுமதிகள் வீழ்ச்சியடைகின்றன.

பெரியண்ணனுடன் பிரச்சனை
படைத்துறை அடிப்படையில் நெருங்கும் இந்தியாவும் அமெரிக்காவும் பொருளாதார அடிப்படையில் விலகியே நிற்கின்றன. அமெரிக்காவின் நீண்டகால நட்பு நாடுகளையே கண்டபடி விமர்சிக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவைக் கேந்திரோபாய பங்காளி என்றே அழைக்கின்றார். ஆனால் இந்தியாவின் பொருளாதாரம் இன்னமும் மூடப்பட்ட நிலையில் இருப்பதாக அவர் கருதுகின்றார். அவரது வர்த்தகப் போர் இலக்குகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியா ஈரானிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதை டொனால்ட் டிரம்ப் விரும்பவில்லை.  இந்திய எரிபொருள் தேவையின் 80% இறக்குமதி செய்யப்படுகின்றது. சவுதி அரேபியாவும் பாக்கிஸ்த்தானும் நெருக்கமான உறவை வைத்திருப்பதைச் சமாளிக்க இந்தியாவிற்கு ஈரானின் நட்பு அவசியம். உலக எரிபொருள் விலை அதிகரிப்பு இந்தியப் பொருளாதாரத்திற்கு மட்டுமல்ல இந்திய ஆளும் கட்சிக்கும் பாதகமாக அமையும். அதைச் சரிசெய்ய பொருளாதாரத் தடைக்கு உள்ளாகியிருக்கும் ஈரானிடமிருந்து எரிபொருள் வாங்குவதை இந்தியா விரும்புகின்றது. ஈரானிடமிருந்து எரிபொருள் வாங்கினால் அதற்கான கொடுப்பனவுகள் ஈரானைப் போய்ச் சேராமல் அமெரிக்க தடைகள் செய்யலாம். அதைத் தவிர்க்க ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்காத ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை இந்தியா நாடியுள்ளது. அதை எந்த வகையில் அமெரிக்கா பார்க்கும் என்பது கேள்விக்குரிய ஒன்றே.

இந்தியா மட்டுமல்ல
கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக ஆர்ஜெண்டீனாவின் நாணயம் 546விழுக்காடும், துருக்கியின் லிரா 221விழுக்காடும், பிரேசிலின் ரியால் 84 விழுக்காடும், தென் ஆபிரிக்காவின் ரண்ட் 51 விழுக்காடும், மெக்சிக்கன் பெசோ 47 விழுக்காடும், மலேசிய ரிங்கிட் 27 விழுக்காடும் வீழ்ச்சியடைந்திருக்கையில் இந்திய ரூபா 16விழுக்காடு மட்டுமே வீழ்ச்சியடைந்துள்ளது. இந்திய ரூபாவின் வீழ்ச்சி சமாளிக்கக் கூடியது என்கின்றனர் இந்திய ஆட்சியாளர்கள்.

பன்னாட்டு நாணய நிதியம்
2018 செப்டம்பர் 18-ம் திகதி பன்னாட்டு நாணய நிதியம் வெளியிட்ட அறிக்கையில்:
  1. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியப் பொருளாதாரம் ஒரு மூடப்பட்ட பொருளாதாரம்.
  2. 2018இன் இரண்டாம காலாண்டில் இந்தியாவின் பொருளாதார உற்பத்தியில் ஏற்றுமதியின் பங்கு அதிகரித்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பிழப்பு இதை மேம்படுத்தும்.
  3. இந்திய நாணயங்களைச் செல்லுபடியற்றதாக்கியமை, ஜீஎஸ்டி வரிவிதிப்பு ஆகிய இரண்டு தடைகளையும் இந்தியப் பொருளாதாரம் தாண்டி விட்டது. இனி வளர்ச்சிப் பாதையில் அது தொடரும்.
  4. இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு மக்களின் கொள்வனவு அதிகரிப்பும் முதலீட்டு அதிகரிப்பும் இனி பங்களிப்புச் செய்யும்.
5- தற்போது நடந்து கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரத்தை எண்மியப் படுத்துதலும் நியமப்படுத்துதலும் அதிக வரி வசூலிப்புச் செய்ய உதவுவதால் இந்திய அரச நிதிப் பற்றாக்குறை சீரடையும்.
பன்னாட்டு நாணய நிதியத்தின் கருத்துக்களை பன்னாட்டு முதலீட்டாளர்கள் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. வளர்முக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாட்டு முதலீடுகள் அவசியமானதாகக் கருதப்படுகின்றது. நரேந்திர மோடியின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு 2017-ம் ஆண்டு 86விழுக்காடு இந்தியர்கள் நம்பிக்கை வைத்திருப்பதாக கருத்து வெளியிட்டனர் 2018-ம் ஆண்டு அது 56 விழுக்காடாகக் குறைந்து விட்டது. இந்தியாவில் நிகர வெளிநாட்டு முதலீடு குறைந்து கொண்டே செல்கின்றது. முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறுவதற்கான காரணங்கள்:
  1. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகியவற்றின் பொருளாதாரங்கள் வளர்ச்சியடையத் தொடங்கியதால் அவற்றின் நடுவண் வங்கிகள் அளவுசார் இறுக்கத்தைச் (QUANTITATIVE TIGHTENING) செய்யத் தொடங்கியுள்ளன. அதாவது தமது நாடுகளின் வங்கிகளிடையேயான நாணயப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தொடங்கிவிட்டன. அதனால் அவற்றின் நாணயங்களின் பெறுமதி தொடர்ந்து அதிகரிக்கும். அந்த நாடுக வட்டியும் அதிகரிக்கும். இந்தியாவில் முதலீடு செய்வதிலும் பார்க்க உறுதியான அரசியல் நிலைப்பாடுடைய நாடுகளில் முதலீடு செய்வதை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விரும்புகின்றார்கள்.
  2. 2019-ம் ஆண்டு நடக்கவிருக்கும் இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலின் முடிவுகள் எப்படியிருக்கும் என்பதை தற்போது உறுதியாகச் சொல்ல முடியாத நிலை இருப்பதால் ஓர் உறுதியற்ற நிலை இந்தியாவில் தோன்றியுள்ளது.
  3. உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் போது இந்தியாவில் பணவீக்கம் ஏற்பட வாய்ப்புண்டு.
ஆனால் இந்தியாவில் கட்டிடங்களில் முதலீடு செய்வதில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அக்கறை காட்டுகின்றார்கள். அதற்கு அவர்கள் பல சிவப்பு நாடாக்களைக் கடக்க வேண்டியுள்ளது.
ரூபாயின் மதிப்பிறக்கம் இந்தியாவின் ஏற்றுமதியை கூட்டுவதற்கு தரமான பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்ய வேண்டும். இந்திய ஏற்றுமதி பெரும்பாலும் மூலப் பொருட்களாகவே இருக்கின்றன. தொழில்துறை உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கான உட்கட்டுமானங்கள் இந்தியாவில் போதிய அளவு இல்லை என்ற குற்றச் சாட்டு இதுவரைகாலமும் முன்வைக்கப்பட்டது. உலக வங்கி இந்திய உட்கட்டுமானத் துறையில் பல பசுந்தளிர்களைக் காணக் கூடியதாக இருக்கின்றது

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...