Monday, 18 September 2017

நிலைமைக்கேற்ப படைத்துறையைப் புதுமைப்படுத்தும் அமெரிக்கா

வட கொரியா, ஈரான் ஆகிய நாடுகள் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் மிகவும் துரிதமாக வளர்ந்து வருகின்றன. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் வட கொரியா உலகின் எப்பாகத்தையும் ஏவுகணைகளால் தாக்கக் கூடிய வகையில் தனது தொழில்நுட்பத்தை வேகமாக வளர்த்து வருகின்றது. அது தன் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்யக் கூடிய நிலையும் வரலாம். அது மட்டுமல்ல இரசியா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் ஒலியிலும் பார்க்க பல மடங்கு வேகத்தில் பாயக் கூடிய ஏவுகணைகளை உருவாக்கி விட்டன. போர்க்கப்பல் துறையில் விமானப் படைத்துறையிலும் மற்ற நாடுகளிலும் பார்க்க சற்று மேம்பட்டிருக்கும் அமெரிக்கா மற்ற நாடுகளின் தொடர்ச்சியான ஏவுகணை உற்பத்திகளையும் பரிசோதனைகளையும் இட்டு அதிக கவலை கொண்டுள்ளது.

விழித்தெழுந்த சீனா
1995-ம் ஆண்டின் பிற்பகுதியில் சீனா தைவானை ஆக்கிரமிக்க முயன்றபோது அப்போது அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை தைவானைப் பாதுகாக்க அனுப்பினார். அதனால் சீனாவின் திட்டம் கைவிடப்பட்டது. அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களை எதிர் கொள்ளக் கூடிய வலிமை சீனாவிடம் அப்போது இருக்கவில்லை. அதனால் சீனா விமானம் தாங்கிக் கப்பல்களை அழிக்கக் கூடிய ஏவுகணைகளை உருவாக்கும் திட்டத்தை ஆரம்பித்தது அதன் விளைவுதான் Dong-Feng 21 ஏவுகணைகள் சீனாவின் Dong-Feng 21 ஏவுகணைகள் அனுமதி-எதிர்ப்பு/நில-மறுப்பு (anti-access/area-denial) செய்யக் கூடியவை. சீனா அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்களை அழிப்பதற்கென்றே இவற்றை உருவாக்கியது. இவை ஒலியிலும் பார்க்கப் பத்து மடங்கு வேகத்தில் பாயக் கூடியவை. அதனால் அதை இடை மறித்து அழிப்பது சாத்தியமற்ற ஒன்றாகக் கருதப்படுகின்றது. இவற்றின் உற்பத்தி முடிக்கப்பட்ட போது அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் செல்லாக்காசாகிவிட்டன என பல படைத்துறை விமர்சகர்கள் எழுதினர். ஏவுகணைகளைத் தொடர்ந்து சீனா Dong-Feng-26 ஏவுகணைகளை Dong-Feng-21 உருவாக்கியது. சீனாவின் Dong-Feng-26 ஏவுகணைகள் தரையிலும் கடலிலும் உள்ள பாரிய இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கக் கூடியவை. அவை 2500 மைல்கள் தூரம் பாயக் கூடியவை. இவற்றால் சீனாவின் மேற்குப் பகுதிக் கடற்பரப்பில் அமெரிக்கப் போர்க்கப்பல்களுக்கு அனுமதி-எதிர்ப்பு(Anti-access) செய்ய முடியும். இதனை “carrier-killer” anti-ship ballistic missile (ASBM) என அழைப்பர். அதன் பொருள் விமானதாங்கிக் கப்பலழிப்பு எறியியல் ஏவுகணை.

துடித்தெழுந்த அமெரிக்கா
சீனா Dong-Feng-21 மற்றும் Dong-Feng-26 ஏவுகணைகளை உற்பத்தி செய்ததைத் தொடர்ந்து அமெரிக்கா தனது ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை புதுப்பித்துக் கொண்டது. கடற் பாதுகாப்பிற்கு Aegis Combat System என்னும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளையும் தரைப் பாதுகாப்பிற்கு THAAD எனச் சுருக்கமாக அழைக்கபடும் Terminal High Altitude Area Defense ஏவுகணை எதிர்ப்பு முறைமையையும் உருவாக்கியது. அமெரிக்காவிடம் உருவாக்கிய ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளில் மிகவும் நம்பகத் தன்மை வாய்ந்தது THAAD எனச் சுருக்கமாக அழைக்கபடும் Terminal High Altitude Area Defense ஆகும். THAAD ஏவுகணை எதிர்ப்பு முறைமை என்பது Ballistic Missiles களுக்கு எதிரான பாதுகாப்பு முறைமையாகும். உலகில் முப்பதுக்கு மேற்பட்ட நாடுகள் Ballistic Missiles வைத்திருக்கின்றன. அமெரிக்காவின் புதிய தாட்  ஏவுகணை எதிர்ப்பு முறைமை எல்லாவகையான ஏவுகணைகளையும் இடை மறித்து அழிக்க வல்லது.  அணுக்குண்டுகளைத் தாங்கி வரும் ஏவுகணைகளையும் தாட் இடைமறித்து அழிக்கும். அத்துடன் இது மற்ற ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளுடனும் Aegisஎனச் சுருக்கமாக அழைக்கப்படும் Aegis Combat System என்னும் கடல் சார் பாதுகாப்பு முறைமையுடனும் இணைந்து செயற்பட வல்லது. அத்துடன் செய்மதிகளுடனும் தொடர்பாடல்கள் செய்ய வல்லது. இதுவரை செய்யப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 100 விழுக்காடு நம்பகத்தன்மை வாய்ந்த ஏவுகணை எதிர்ப்பு முறைமையாக தாட்  ஏவுகணை எதிர்ப்பு முறைமை திகழ்கின்றது. எதிரியின் Ballistic Missileகளுக்கு எதிராக தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமை ஒரு தடவையில் 72 எதிர் ஏவுகணைகளை வீசும்.  அத்துடன் இது மூன்று கட்டப் பாதுகாப்பு வலயத்தைக் கொண்டுள்ளது. இந்த மூன்று கட்டப் பாதுகாப்பு வலயத்தால் அதிக உயரத்திலும் தாழ்வாகவும் வரும் Ballistic Missileகளை அழிக்க முடியும். இதனால் இது நூறு விழுக்காடு நம்பகத்தன்மை உடையதாகக் நம்பப்படுகின்றது. தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமைக்கு நான்கு பில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டது.
Kinetic Enerty என்னும் வலுமூலம் இயங்கி இலக்கை அடித்து அழிக்கக்கூடிய திறனுடையவை. மேற்கு பசுபிக் கடலில் உள்ள அமெரிக்காவிற்கு சொந்தமான தீவுகளில் ஒன்றான குவாம் தீவில் உள்ள கடற்படைக் கலன்களை அழிக்கக் கூடிய வகையிலேயே சீனா தனது Dong-Feng-21 மற்றும் Dong-Feng-26 ஏவுகணைகளை உருவாக்கியது. இதனால் குவாம் தீவில்தான் முதலில் தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமை நிறுத்தப்பட்டது.

பரிசோதனைக் களமான கொரியாக்கள்
வடகொரியா தொடர்ந்து பேரழிவு விளைவிக்கக் கூடிய படைக் கலன்களையும் சிறப்பாகச் செயற்படக் கூடிய எறியியல் ஏவுகணைகளைகளையும் (Ballistic Missile) தொடர்ந்து உருவாக்கி வருவதால் தென் கொரியாவைப் பாதுகாக்க அங்கு தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமையை அமெரிக்கா நிறுத்தியது. தாட் முறைமையின் சிறந்த ரடார் எனப்படும் கதுவிகள் மிகவும் உணர்திறன் மிக்கவை. தென் கொரியாவில் நிறுத்தப்பட்ட தாட் முறைமைகளால் சீனாவிற்குள்ளும் இரசியாவிற்குள்ளும் பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள படைக்கலன்களில் நகர்வுகணை உணர முடியும். அது மட்டுமல்ல தென்கொரியாவின் மலையுச்சியில் உள்ள பீடபூமியில் உள்ள கோல்ஃப் விளையாட்டுத் தளமொன்றிலும் அவை நிறுத்தப்பட்டிருப்பதால் அவற்றின் உணர் தொலைவு அதிகரிக்கப் பட்டுள்ளது.  இதனால் சீனாவும் இரசியாவும் இவற்றிற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. வட கொரியாவிற்கு எதிராக தாட் வீசும் ஏவுகணைகள் அந்த இரண்டு நாடுகளிற்குள் சென்று வெடிக்கக் கூடிய வாய்ப்பும் உண்டு. இதனால் இரண்டு நாடுகளும் தென் கொரியாவில் தாட் முறைமை நிறுத்தப்படுவதை கடுமையாக எதிர்க்கின்றன. அமெரிக்கா வட கொரியாவை ஒரு சாட்டாக வைத்துக் கொண்டு தமது நாடுகளை ஆபத்துக்குள்ளாகின்றன என இரசியர்களும் சீனர்களும் கருதுகின்றார்கள்.

கடலிலும் போட்டியோ போட்டி
அமெரிக்காவின் லொக்கீட் மார்டின், ரேத்தேயன் நிறுவனம், போயிங் நிறுவனம், ஆகிய முன்னணிப் படைத்துறை நிறுவங்களும் அமெரிக்கப் படைத்துறையின் பல் வேறு ஆராய்ச்சி நிறுவனங்களும் சில பல்கலைக் கழகங்களும் இணைந்து தயாரித்த கடல் சார் ஏவுகணை எதிர்ப்பு முறைமை Aegis Ballistic Missile Defense System ஆகும். இதன் பரிசோதனை வெற்றீகரமாக அமைந்ததால் கிழக்குச் சீனக் கடலிலும் கொரியத் தீபகற்பத்தை ஒட்டிய ஜப்பன் கடலிலும் மஞ்சள் கடலிலும் செயற்படக் கூடிய வகையில் குவாம் தீவில் உள்ள நாசகாரிக் கப்பல்களில் இவை பொருத்தப்பட்டன. அடுத்து தரையிலும் செயற்படக் கூடிய வகையில் இவை மாற்றியமைக்கப்பட்டன. அவை 2018-ம் ஆண்டு ஹங்கேரியிலும் போலந்திலும் நிறுத்தப்படவுள்ளன. Aegis Ballistic Missile Defense System ஒரு படைக்கலப் போட்டியை உருவாக்கியுள்ளது என இரசியா கருத்து வெளியிட்டது.

மத்திய தரைக்கடல் வரை சென்ற சீனா
ஆபிரிக்கக் கண்டத்தின் கொம்பாகக் கருதப்படும் ஜிபூட்டியில் சீனா அமைத்துள்ள கடற்படைத் தளத்தில் நிலத்துக்கடியில் பாரிய கட்டமைப்பைக் கொண்டது. பல சுரங்கப்பாதைகளையும்  நுழை வாயில்களையும் அது கொண்டிருப்பதாக செய்மதிப் படங்கள் மூலம் அறியப்பட்டுள்ளது. மத்திய தரைக்கடலில் தனது ஆதிக்கத்தையும் சீனா நிலைநாட்டவே கடற்கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கான தளம் என்னும் போர்வையில் இரகசியமாக சீனா ஜிபூட்டியில் பெரிய கடற்படைத் தளத்தை அமைத்துள்ளது. சீனாவின் முதல் வெளிநாட்டுக் கடற்படைத் தளம் ஒரு பரீட்சார்த்த முயற்ச்சியாகும்.

இரசியாவின் Zircon  ஏவுகணைகள்
2017-ம் ஆண்டு மே மாதம் இரசியா தனது ஒலியிலும் பார்க்க ஆறு மடங்கு வேகமாகச் செல்லக் கூடிய Zircon ஏவுகணைகளை வெற்றீகரமாகப் பரிசோதித்தது. அவை மணித்தியாலத்திற்கு 4,600 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து சென்றன. இவை 2018-ம் ஆண்டு இரசியாவின் கடற்படைச் சீர்வேகக் கப்பல்களில் பொருத்தப்படவுள்ளன. ஒரு Zircon ஏவுகணை மூலம் ஒரு விமானம் தாங்கிக் கப்பலை அழிக்க முடியும். நவீன போர் விமானம் போல் தோற்றமளிக்கும் Zircon ஏவுகணைகள் அமெரிக்காவை ஐந்து ஆண்டுகள் பின் தள்ளிவிட்டன என்றனர் சில படைத் துறை நிபுணர்கள். இரசியாவின் Pyotr Velikiy என்ற விமானம் தாங்கிக் கப்பலில் இரசியாவின்  Zircon  ஏவுகணைகள் 2022-ம் ஆண்டு பொருத்தப்படும்.

இனி வரப்போவது
தற்போது உள்ள ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளில் மூன்று தொகுதிகள் உள்ளன.இது ஒரு தானியங்கி முறைமையாகும். இனம் காண் நிலையம் (Radar Unit), கட்டுப்பாட்டகம் (Control Centre ), ஏவுகணை வீசிகள் (Missile Launchers) ஆகிய மூன்று முறைமைகள் ஏவுகணை எதிர்ப்பு முறைமையில் உள்ளன. இனம் காண் நிலையம் வரும் எதிரிகளின் ஏவுகணைகளை ரடார் மூலம் இனம்காணும். அது பற்றிய தகவலகளை அது உடனடியாகக் கட்டுப்பாடகத்திற்கு அனுப்பும். கட்டுபாட்டகம் ஏவுகணை வீசிகளுக்கு உத்தரவுகளை வழங்கும். அந்த உத்தரவின் அடிப்படையில் எதிரி ஏவுகணைகள் மீது இடைமறித்து அழிக்கும் ஏவுகணைகள் வீசப்படும். இனி அமெரிக்கா உருவாக்க விருக்கும் ஏவுகணை எதிர்ப்பு முறைமை பல நாடுகளுக்குக் கலக்கத்தைக் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தரையில் இருந்து செயற்படும் கதுவிகளுக்குப் (ரடார்) பதிலாக விண்வெளியில் இருந்து செய்மதிகள் எதிரிகளின் ஏவுகணைகள் அவதானிக்கப்பட்டு பூமியின் நிலப்பரப்பில் அல்லது கடற்பரப்பில் உள்ள கட்டுபாட்டகத்திற்கு ஏவுகணைகளின் அசைவு தொடர்பான தகவல்களை அனுப்பும். தரையில் லேசர் கதிர்கள் எதிரியின் ஏவுகணைகளை நோக்கிப் பாய்சப்படும். லேசர் கதிர்கள் ஒளியின் வேகத்தில் செல்லக் கூடியவை. அவற்றால் ஒலியிலும் பார்க்க பல மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணைகள லேசர் கதிர்கள் நொடிப் பொழுதில் கருக்கி எரித்துவிடும். 2017-செப்டம்பர் மாதம் 6-ம் திகதி அமெரிக்காவின் படைத்துறை நிபுணர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் எதிரிகளின் ஏவுகணைகளை லேசர் கதிர்கள் மூலம் இடைமறிக்கும் திட்டம் ஆராயப்பட்டது. U.S. Army Rapid Capabilities Officeஇன் தலைமை அதிகாரி லேசர் இடைமறிப்பு படைக்கலன்களை உருவாக்குவதற்கு தாம் நேரத்திற்கு எதிராகப் போராட வேண்டி இருக்கின்றது என்றார். அவர் கூறியதில் இருந்து அமெரிக்கா தன் எதிரி நாடுகள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் ஏவுகணைப் பரிசோதனையை அமெரிக்கா அதிக கரிசனையை கொண்டுள்ளது எனத் தெரிய வருகின்றது. ஆனால் விமானங்களில் லேசர் படைக்கலன்களை பொருத்துவதில் அமெரிக்கா கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது 2020-ம் ஆண்டிற்கு முன்னர் அதில் அமெரிக்கா வெற்றியீட்டலாம்.


அமெரிக்காவின் லேசர் கதிர்கள் மூலமான ஏவுகணை இடைமறிப்புத் திட்டம் வெற்றியளித்தாலும் அந்த வெற்றி சில ஆண்டுகள் மட்டுமே நின்று பிடிக்கும். இரசியாவும் லேசர் படைக்கல உற்பத்தியில் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது. சீனா மட்டும் சும்மா இருக்குமா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...