Saturday 19 March 2022

உக்ரேனுக்கு அமெரிக்கா செய்யும் உதவி ஆபத்தானது

  

தனது எதிரிகளுக்கு எதிராக போராட அமெரிக்கா மூன்றாம் பேர்வழிகளைத் தூண்டி விடுவது உண்டு. அண்மைக் காலத்தில் ஐ எஸ் என்னும் இஸ்லாமிய அமைப்பினருக்கு எதிராக குர்திஷ் போராளிகளைத் தூண்டி விட்ட அமெரிக்கா அவர்களை சிரிய தாங்கிகள் தாக்கும்போது புதிய தர தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளையோ துருக்கிய விமானங்கள் தாக்கும் போது அவர்களுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளையோ வழங்கவில்லை. பழைய தாங்கி எதிர்ப்பு படைக்கலன்களை மட்டுமே அமெரிக்கா வழங்கியது. ஆப்கானிஸ்த்தானில் சோவியத் படையினருக்கு எதிராக போராடிய இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு Stinger missilesகளை வாரி வழங்கியது. இரசியர்களால் அழிக்கப்படும் உக்ரேனியர்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட படைக்கல உதவியையே அமெரிக்கா செய்கின்றது. இது உக்ரேனியர்களுக்கு பெரும் பொருளாதார அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. நாட் செல்ல செல்ல இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனின் தாக்குதல்கள் கொடூரமானவையாகிக் கொண்டு போகின்றன.

64 கிலோ மீட்டர் வண்டித்தொடர்

இரசியாவின் ஆரம்பத்தாக்குதல் திட்டமிட்ட படி நடக்காத நிலையில் போர் தொடங்கிய நான்காம் நாள்  2022-02-28 இரசியா 64கிலோ மீட்டர்(40மைல்) நீளமான வண்டித் தொடரணி ஒன்றை புட்டீன் உக்ரேனுக்கு அனுப்பினார். உக்ரேனுக்கு அமெரிக்கா சேவையில் இருந்து 2022இல் அகற்றவிருக்கும் ஐம்பதிற்கு மேற்பட்ட F-16 போர்விமானங்களில் பாதியை உக்ரேனுக்கு வழங்கியிருந்தால் இவற்றில் பெரும்பகுதியை உக்ரேனியரகளால் எல்லையில் வைத்தே அழித்திருக்க முடியும். 

அமெரிக்கா கொடுக்கும் MANPAD (MAN PORTABLE AIR DEFENCE)

உக்ரேனுக்கு அமெரிக்கா கொடுக்கும் Stinger missiles என்பவை MANPAD (MAN PORTABLE AIR DEFENCE) என்ற வகையைச் சேர்ந்த ஏவுகணைகளாகும். தனி ஒரு படைவீரன் தன் தோளில் வைத்து செலுத்தக் கூடிய அமெரிக்கத் தயாரிப்பு ஏவுகணை இது. 1981-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட Stinger missiles இன்று வரை பல நாடுகளில் சேவையிலுள்ளன. இவை Tactical Weapons என்ற வகையிலும் அடங்குபவையாகும். Tactical Weapons என்பவற்றின் முக்கிய தன்மை அவை குறுகிய தூரம் வரை செயற்படக்கூடியவை. அவற்றின் தாக்கமும் நடுத்தரமானவை. இவற்றின் தாக்குதூரம் 3500 மீட்டர் (11500 அடி). Stinger missilesஇன் பாய்ச்சல் வேகம் மணிக்கு 2,400 கிமீ (1,500) அதாவது ஒலியிலும் இரண்டு மடங்கு வேகம்.

Stinger missilesகளுக்கு எட்டாத இரசிய விமானங்கள்

இரசியா உக்ரேனில் பெரும்பாலும் Su-25, Su-30, Su-34, ஆகிய விமானங்களையே உக்ரேன் மீதான தாக்குதலுக்குப் பயன்படுத்துகின்றது. Su-25 விமான ங்கள் 16,000 அடி உயரத்திலும் Su-30 விமானங்கள் 17,300 மீட்டர் (56,800அடி) உயரத்திலும் Su-34 விமானங்கள்1 7,300 மீட்டர் (56,800அடி) உயரத்திலும் பறக்க வல்லன. இந்த விமானங்கள் உயரப் பறக்கும் போது அவற்றை அமெரிக்காவின் Stinger missilesகளால் சுட்டு வீழ்த்த முடியாது. இரசிய விமான ங்கள் தாழப் பறந்து தாக்குதல் செய்யும் போது மட்டும் Stinger missilesகளால் சுட்டு வீழ்த்த முடியும். அதுவும் மெதுவாகப் பறக்கும் போது மட்டும். இரசிய விமானங்கள் கண்ணுக்கு தெரியும் போது பல Stinger missilesகளை ஏவும் போது மட்டும் ஒன்றாவது இரசிய விமானத்தில் சிறு சேதம் விளைவித்து அதனை தரையிறங்கச் செய்ய முடியும். சில சமயம் விழுத்த முடியும். இரசிய உலங்கு வானூர்திகளை உக்ரேனியர்கள் Stinger missilesகளால் சுட்டு வீழ்த்தியுள்ளனர். உக்ரேனுக்கு சோவியத் ஒன்றிய கால எஸ்-300 வான் பாதுகாப்பு ஏவுகணைகள், Osa, Tunguska ஆகிய பழைய வான் எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்க நேட்டொ நாடுகள் முடிவு செய்தன. இவற்றிற்கு எதிராக இரசியா நாலாம் தலைமுறையிலும் மேம்பட்ட Su-35, ஐந்தாம் தலைமுறை Su-58 போன்ற விமானங்களை களமிறக்கி தன் வானதிக்கத்தை நிலை நாட்டும்.  இதனால் உக்ரேன் Anti-Access, Area Denial (A2/AD) நிலையை தன் வான்பரப்பில் உருவாக்க முடியாது. Anti-Access, Area Denial (A2/AD) என்பதை “இது நம்ம ஏரியா உள்ளே வராதே” என சுலபமாக விளக்கலாம்.

வான் வலிமையே போரை வெல்லும்

புவிசார் அரசியல் கோட்பாடுகளில் முக்கியமான கோட்பாடான வான்வலுக் கோட்பாட்டை முன்வைத்த அலெக்சாண்டர் பி டி செவெர்ஸ்கி 1. வான்வலு தரைப்படைப் போர்களை செல்லுபடியற்றதாக்குகின்றது. 2. வான்வெளியை ஆதிக்கத்தில் வைத்திருப்பவையே உலக வல்லரசாகும். 3. நாடுகளின் வான் ஆதிக்கபரப்புக்கள் சந்திக்கும் இடங்கள் ஆதிக்கத்தை முடிவு செய்யும் இடங்களாகும். அந்த சந்திக்கும் பரப்புக்களைக் கட்டுப்படுத்தும் நாடே ஆதிக்க நாடாகும். அந்த அடிப்படையில் உலகின் முன்னணி வான்படை எனப்படும் 1511 போர்விமானங்களைக் கொண்ட இரசியாவிற்கு 98 பழைய விமானங்களைக் கொண்ட உக்ரேனால் தாக்கு பிடிக்க முடியாது என்பது உண்மை. உக்ரேனியர்கள் உறுதியாப் போராடுகின்றார்கள், தீரத்துடன் போராடுகின்றார்கள் எனக் உசுப்பி விடும் மேற்கு நாடுகள் இரசியா கைப்பற்றிய இடங்களில் இரு அங்குலத்தைத் தன்னும் உக்ரேனியர்கள் இதுவரை கைப்பற்றவில்லை என்பதை பறைசாற்றுவதில்லை. உக்ரேனின் வான்பரப்பில் இரசிய விமான ங்கள் செயற்பட முடியாத வகையில் உக்ரேனியர்களுக்கு படைக்கலன்களை நேட்டோ நாடுகள் வழங்காமல் உக்ரேனியர்களால் இரசியப் படையினரின் முன்னேற்றத்தை தடுக்க முடியாது. உக்ரேனியர்கள் தாம் இரசியாவின் 77 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகச் சொல்கின்றார்கள். ஆனால் 12 விமான ங்கள் மட்டுமே சுட்டு வீழ்த்தப்பட்டதாக சார்பற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரேனியர்களிடமுள்ள ஏவுகணைகளைப் பொறுத்தவரை இது ஒரு சாதனைதான்.

வான்மேன்மை, வானாதிக்கம், வான்மீயுயர் நிலை

வான் போரில் AIR SUPERIORITY, AIR DOMINANCE and AIR SUPREMACY முக்கியமானவையாகும். வான் மேன்மை (AIR SUPERIORITY) எதிரியின் எந்தவித தடையுமின்றி விமானங்கள் ஒரு குறித்த வான் பரப்பில் ஒரு நாட்டின் வான்படை செயற்படுவதாகும். வானதிக்கம் (AIR DOMINANCE) ஒரு நாட்டின் விமானங்கள் எதிரியின் விமானங்களிலும் மேம்பட்டவையாக இருந்து குறித்த வான் பரப்பில் ஆதிக்கம் செலுத்துவதாகும். வான் மீயுயர்நிலை (AIR SUPREMACY) எதிரியின் விமானங்கள் அழிக்கப்பட்டு அல்லது செயற்பட முடியாத நிலையின் ஒரு நாட்டின் விமானங்கள் எந்தவித தடங்கலுமின்றி செயற்படுவது. அமெரிக்காவின் புதிய ஏவுகணைகளால் மட்டும்தான் உக்ரேனிய வான்பரப்பில் இரசியவிமானங்களின் வான்மேன்மை இல்லாமற் செய்ய முடியும். ஐரோப்பிய போர்விமானங்களான Dassault Mirage III, SEPECAT Jaguar, Panavia Tornado, Dassault Mirage 2000, Dassault Rafale, Saab JAS 39 Gripen, Eurofighter Typhoon ஆகிய விமானங்களும். Meteor ஏவுகணைகளும் உக்ரேனுக்கு வழங்கப்பட்டால் மாத்திரம் உக்ரேனால் தனது வான்பரப்பை பாதுகாக்க முடியும். இவற்றை உக்ரேனுக்கு அனுப்பினால் புட்டீன் சினமடைவார் என அஞ்சி நேட்டோ நாடுகள் ஒதுங்கி இருந்து கொண்டு வலிமையற்ற படைக்கலன்களை உக்ரேனுக்கு அனுப்புகின்றன. அவற்றை நம்பி போராடும் உக்ரேனியர்கள் பெரும் இழப்பைச் சந்திக்கின்றனர்.

இரசிய வான்படை தரம் தாழ்ந்ததா?

David Axe என்ற வான் போர் ஆய்வு நிபுணர்:

1. இரசிய வான் படை ஒரு பரந்த வான்பரப்பை கட்டுப்படுத்தக் கூடியவகையில் உருவாக்கப்படவில்லை.

2. இரசியர்களுக்கு வான்கலன்கள் பறக்கும் பீராங்கிகள் மட்டுமே

3. இரசிய வான்படை வான்படை அல்ல

4. 2014-ம் ஆண்டின் பின்னர் இரசியாவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரத் தடையால் இலத்திரனியல் உபகரணங்கள் இறக்குமதி செய்ய முடியாத நிலையில் இரசியாவிடம் துல்லியத் தாக்குதல் வழிகாட்டல் ஏவுகணைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.

5. வானில் இருந்து தரக்கு வீசும் குண்டுகளுக்கு இலத்திரனியல் வழிகாட்டுதல் இல்லாத படியால் இரசிய விமானங்கள் உயரத்தையும் வேகத்தையும் குறைத்து பறக்க வேண்டியுள்ளது. அதனால் அவற்றை எதிரியால் இலகுவாக சுட்டு விழுத்தலாம். போர் விமானங்கள் முகில்களுக்கும் கீழே பறப்பது மிகவும் ஆபத்தானது.

மேற்கு நாட்டு படைத்துறை விமர்சகர்களில் இரண்டு வகையினர் உள்ளனர். ஒரு வகையினர் இரசியா சீனா போன்றவற்றின் படைக்கலன்களை உயர்த்தி மதிப்பிட்டு அவற்றால் அமெரிக்காவிற்கு ஆபத்து எனக் கூச்சலிடுபவர்கள். இவர்கள் படைத்துறை உற்பத்தி நிறுவனங்களால் தூண்டி விடப்படுபவர்கள். இரண்டாம் வகையினர் எதிரியை தாழ்வாக எடை போட்டு தம் வாசகர்களை மகிழ்விப்பவர்கள்

நேட்டோ கொடுத்துக் கொண்டிருக்கும் மட்டுப்படுத்தப் பட்ட உதவி இல்லாவிடில் உக்ரேனியர்கள் இரசியாவுடன் ஓர் உடன்பாட்டுக்கு வரலாம். நேட்டோ நாடுகள் கொடுக்க வேண்டிய உதவியைக் கொடுக்காமல் குறைந்த வலுவுடைய உதவி செய்கின்ற படியால் உக்ரேனியர்கள் போரைத் தொடர்ந்து நடத்தி இழப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

Thursday 17 March 2022

உக்ரேன் போரில் சீனா இரசியாவிற்கு உதவுமா?

  


உக்ரேனில் நடக்கும் போரில் சீனாவிடம் இரசியா படைத்துறை உதவியைக் கோரியுள்ளதாக முதலில் அமெரிக்க நாளிதழான Washington Post அறிவித்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலைவன் சீனாவின் வெளியுறவுத் துறை ஆணையகத்தின் இயக்குனர் ஜாங் ஜீச்சியுடன் ரோம் நகரில் 2022-03-14-ம் திகதி உக்ரேன் போர் தொடர்பாகப் ஏழு மணித்தியாலம் பேச்சு வார்த்தை நடத்தினார். சீனாவின் South China Morning Post ஜேக் சலைவன் சீனா இரசியாவிற்கு படைத்துறை உதவிகளையோ மற்ற உதவிகளையோ செய்தால் குறிப்பிடத்தக்க விளைவுகள் ஏற்படும் என எச்சரித்தார் எனச் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இரசியா தம்மிடம் எந்த உதவியும் கேட்கவில்லை என சீன அதிகாரிகள் சொல்லி வருகின்றனர்.

ஒன்றும் தெரியாத பாப்பாவாம் சீனா

சீனாவிற்கு முன் கூட்டியே உக்ரேன் மீது இரசியா படையெடுக்கும் என்பது தெரியும் என்றும் சீனாவின் வேண்டுதலின் பேரில் சீனாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி முடியும் வரை இரசியா தனது படையெடுப்பை பின் போட்டிருந்தது என்றும் Washington Post செய்திகள் வெளியிட்டிருந்தது. இதை அமெரிக்காவிற்கான சீனத் தூதுவர் கடுமையாக மறுத்ததுடன் சீனாவிற்கு முன் கூட்டியே தெரிந்திருந்தால் போரைத் தவிர்க்க சீனா முயற்ச்சித்திருக்கும் என்றார். 2021 மார்ச் மாதத்தில் இருந்தே இரசியா உக்ரேன் எல்லையில் தனது படையினரைக் குவிக்கத் தொடங்கியது உலகறிந்தது. இரசியா சீனாவிடம் உதவி கேட்கவில்லை என்றால் புட்டீனும் ஜின்பிங்கும் 2022 மார்ச் 15-ம் திகதி ஒரு அவசர இணையவெளி உரையாடலில் என்ன பேசியிருப்பார்கள்?

ரோம் நகரில் மரதன் பேச்சு வார்த்தை

2022 பெப்ரவரி 24-ம் திகதி உக்ரேன் மீது இரசியா படையெடுத்ததில் இருந்து தான் நடுநிலை வகிப்பதாக சீனா அறிவித்துக் கொண்டிருக்கின்றது. 2022 மார்ச் 14-ம் திகதி அமெரிக்க சீன அதிகாரிகளிடையே உக்ரேன் போர் தொடர்பாக ஏழு மணித்தியாலப் பேச்சு வார்த்தை ரோம் நகரில் நடை பெற்றது. இரசியா சீனாவிடம் உதவி கேட்டது உண்மை இல்லாமல் இருக்கலாம் ஆனால் ரோம் நகரப் பேச்சு வார்த்தை சீனா இரசியாவிற்கு உதவி செய்யக் கூடாது என்பதற்காகவே நடை பெற்றது என்பது உண்மை. உக்ரேனில் இருந்து வரும் செய்திகள் இரசியப் படையினர் உண்ண உணவின்றி உக்ரேனியர்களிடம் உணவு கேட்டதாக சொல்கின்றன. இரசியர்கள் இரண்டு நாட்களில் போரை முடிக்கும் திட்டத்துடன் மூன்று நாட்களுக்குத் தேவையான உணவு மற்றும் எரிபொருள் மட்டும் எடுத்துச் சென்றனர். இரசியாவிற்கு தயாரித்த உடன் உணவுகளை (Ready-to-eat meals) அவசரமாக அனுப்பும் படி சீனாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது என்பது உண்மையாக இருக்கலாம்.

எப்போதும் இல்லாத பதட்டம் இரசியாவில்

இரசியாவில் இருந்து பல்லாயிரக் கணக்கானவர்கள் 2022 பெப்ரவரி 24-ம் திகதி போர் தொடங்கிய பின்னர் வெளியேறியபடி உள்ளனர். அவர்களின் கருத்துப் படி இரசியாவில் எப்போதும் இல்லாத பதட்டம் நிலவுகின்றது. பல இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் கண்காணிக்கப்படுகின்றனர். அரச ஊடகங்களில் பணிபுரிபவர்கள் பலர் பதவியில் இருந்து விலகியுள்ளனர். ஒரு தொலைக்காட்டி செய்தி ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் போது செய்தி வாசிப்பவருக்குப் பின்னால் அச்சேவையின் ஆசிரியர் ஒருவர் போர் வேண்டாம் என்ற பதாகையைப் பிடித்தபடி நின்றார். இரசிய உளவுத்துறையைச் சேர்ந்த இரண்டு முன்னணி அதிகாரிகள் வீட்டுக்காவலில் வைத்திருக்கப்பட்டுள்ளனர் எனவும் செய்திகள் வருகின்றன. விளடிமீர் புட்டீன் குழம்பிப் போகாமல் இருக்கச் செய்ய சீன அதிபர் ஜீ ஜின்பிங்கினால் மட்டுமே முடியும்.

இரசியாவின் பிரச்சனைகள்

இரசியா பல உயர் தொழில்நுட்ப படைக்கலன்களை உருவாக்கினாலும் நிதித்தட்டுப்பாட்டால் அவற்றை போதிய எண்ணிக்கையில் உற்பத்தி செய்வதில்லை. அமெரிக்காவிடம் எழுநூறுக்கு மேற்பட்ட F-35 போர் விமானங்கள் உள்ளன. அதற்க்கு ஈடான Su-35 போர் விமானங்கள் இரசியாவிடம் 103 மட்டுமே உள்ளன. இரசியாவின் Su-57 பதின்நான்கு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. இரசியாவின் உலகிற் சிறந்த போர்த்தாங்கியான T-14 Armata போர்த்தாங்கிகள் 2300 உற்பத்தி செய்வதாக திட்டமிடப் பட்டிருந்தும் நூறிலும் குறைவான தாங்கிகளே தற்போது இரசியாவிடம் உள்ளன. இதனால் உக்ரேன் போர்க்களத்தில் இரசியா பல பற்றாக்குறைகளை எதிர் கொள்கின்றது:

1. போதிய அளவு புதிய வழிகாட்டல் ஏவுகணைகள் இல்லை

2. விமானங்கள் இலக்கைத் தெரிவு செய்யும் Targeting Pods தட்டுப்பாடு

3. போதிய அளவு ஆளிலிப் போர் விமானங்கள் இல்லை

இவற்றை சீனாவிடமிருந்து இரசியா பெற முயற்ச்சிக்கலாம். சீனாவின் படைக்கல இறக்குமதியில் 80% இரசியாவில் இருந்தே பெறப்படுகின்றது. இரசியாவில் தங்கியிருக்கும் சீனா இரசியாவின் வேண்டு கோளை அமெரிக்காவின் வற்புறுத்தலுக்கு இணங்கி கொடுக்க மறுக்குமா? சீனா ஆளிலிப் போர் விமானங்களையும் தயாரித்த உடன் உணவுகளையும் (Ready-to-eat meals) வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

பொருளாதாரத் தடையில் இருந்து இரசியாவை சீனா மீட்குமா?

இரசியாவிற்கு சீனாவிடமிருந்து தேவைப்படும் பேருதவி நேட்டோ நாடுகள் இரசியா மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையால் இரசியாவின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பாதிப்பை தணிப்பதே. சீனாவைப் பொறுத்தவரை அதன் வெளியுறவுக் கொள்கையுச்ம் வர்த்தகக் கொள்கையும் உன் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய்? என் வீட்டிற்கு வந்தால் என்ன கொண்டு வருவாய்? என்பது போன்றது. இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையால் ஏற்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பு சீனாவிற்கு மிகவும் பாதகமானதாகும். அதனால் சீனா இரசியாவிடமிருந்து உலகச் சந்தை விலையிலும் குறைவான விலைக்கு எரிபொருளை வாங்கும். அதுவே இரசியாவிற்கு காத்திரமான உதவியாக அமையும். அடுத்த படியாக இரசியாவிற்கு நிதி தேவைப்படும் போது சீனாவிடமிருந்து கடன் வாங்க வேண்டும். இரசியாவின் வெளிநாட்டுச் செலவாணியை சீனாவில் வைப்பிலிட வேண்டும். இரசியாவின் வெளிநாட்டு செலவாணியை சினாவில் வைப்பிலிடும் போது சீன நாணயத்தின் பெறுமதி குறையும். அதனால் சீனாவில் விலைவாசி அதிகரிக்கும். உக்ரேன் போர் துரிதமாக முடிவிற்கு வருவது சீனாவின் பெரும் விருப்பம் என்பது மறுக்கப்பட முடியாது. உக்ரேனில் புட்டீன வெற்றியடையாமல் போரை முடிக்க மாட்டார். ஒரு துரித வெற்றியை புட்டீன் பெறுவதற்கு சீனா உதவி செய்வது உலகப் பொருளாதாரத்திற்கு நல்லது. அது சீனாவிற்கும் நல்லது. 2022 பெப்ரவரியில் சீனாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் சிறப்புப் பார்வையாளராக கலந்து கொள்ளச் சென்ற விளடிமீர் புட்டீன் சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் இருவரும் வெளியிட்ட அறிக்கையில் இரு நாடுகளுக்குமிடையில் வரையறையற்ற பங்காண்மை நிலவும் என தெரிவித்தனர்.

சீனாமீது அமெரிக்கா மேலும் பொருளாதாரத் தடை விதிக்குமா?

இரசியாமீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை தோல்வியில் முடிய வேண்டும் என்பது சீனாவின் பேரவாவாக இருக்கும். இரசியா தோற்கடிக்கப்படுவதும் சீனாவிற்கு உகந்ததல்ல. புட்டீனும் ஜின்பிங்கும் அமெரிக்காவின் வலிமை இறங்குமுகமாக இருக்கின்றது என்பதை உறுதியாக நம்புகின்றனர். உக்ரேன் போரில் இரசியாவிற்கு நேட்டோ நாடுகள் கொடுக்கும் பிரச்சனையில் இரசியாவை மீட்க சீனா உதவி செய்தால் சீனா மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அது பொருளாதாரத் தடையாக இருக்கலாம். ஏற்கனவே இரசியாமீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையால் அமெரிக்கப் பொருளாதாரம் உட்பட உலகப் பொருளாதாரம் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. பொருளாதாரப் போர் என்பது அடி வாங்கினவனிலும் பார்க்க அடித்தவனுக்கு அதிக வலியை ஏற்படுத்தும். சீனாவிற்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவில் கருத்துக்கள் பரவலாக முன் வைக்கப்பட்டுள்ளன.

உக்ரேன் போர் தொடங்க முன்னரே உக்ரேனை இரசியா ஆக்கிரமித்தால் உலக ஒழுங்கைப் பொறுத்தவரை China will be in the driving seat என பல ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். சீனாவின் காட்டில் மழை என்பது உண்மை.

Monday 14 March 2022

புட்டீனின் 22 ஆண்டுத் தயாரிப்பு வீண் போகுமா?

  


2022 பெப்ரவரி 24-ம் திகதி புட்டீன் உக்ரேனுக்கு படைகளை அனுப்பியது கடந்த இருபத்தி இரண்டு ஆண்டுகளாக செய்த தயாரிப்பின் முதற் கட்ட நடவடிக்கையாகும். அதன் காரணத்தை 2021 டிசம்பர் மாதம் 23-ம் திகதி ஊடக மாநாட்டில் விளக்கியிருந்தார்.

·         அவர் கூறியதன் முக்கிய பகுதி: “கிழக்கு நோக்கி ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம் என 90களில் எமக்குச் சொன்னார்கள். ஆனால் என்ன? எம்மை எமாற்றினார்கள். வெளிப்படையாக எம்மை வஞ்சித்தார்கள். ஐந்து அலைகளாக நேட்டோ விரிவாக்கம் நடந்தது. அவர்கள் (நேட்டோ) இப்போது உருமேனியாவிலும் போலாந்திலும் இருக்கின்றார்கள், எங்கள் வாசற்படியில் அமெரிக்கா அணுக்குண்டுகளுடன் நிற்கின்றது”

வரலாற்று நிகழ்விற்கு பிழையான பொருள்விளக்கம்

புட்டீன் உக்ரேன் எல்லையில் இலட்சக்கணக்கான படையினரைக் குவித்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலரும் இரசிய வெளியுறவுத் துறை அமைச்சரும் சந்தித்த பின்னர் அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் அண்டனி பிலின்கன் சொன்னது: “வரலாறு தொடர்பாக நாம் வேறுபட்ட விளக்கங்களைக் கொடுக்கின்றோம்.” மேற்கு நாட்டு ஆய்வாளர்கள் சொல்லும் கருத்துக்கள்:

1. நேட்டோ எந்த அளவு விர்வாக்கம் செய்யப்பட வேண்டும் என்பது தொடர்பாக் எந்த ஓர் உடன்படிக்கையும் செய்யப்படவில்லை.

2. நேட்டோவில் புதிதாக இணைந்து கொள்ளும் நாடுகளை இணைந்து கொள்ளும் படி நிர்ப்பந்திக்கப்படுவதில்லை.

3. நேட்டோ விரிவாக்கம் எந்த ஒரு நாட்டுக்கும் அச்சுறுத்தலாக அமையாது.

2014 ஆக்கிரமிப்பு போல் 2022இல் இல்லை

அரை-மக்களாட்சி பரப்பியவாதியாக (semi-democratic populist) புட்டீன் தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். அவருக்கு எதிரானவர்கள் இருப்பதை விரும்பாத புட்டீன் ஆட்சியில் தனது பிடியை இறுக்குவதற்காக கடுமையான நிலைப்பாட்டை எடுத்தார். அவருக்கு எதிரானவர்கள் ஐயத்திற்கு இடமான முறையில் கொல்லப்பட்டனர். ஊடகங்கள் அவரை எதிர்த்து எழுத தயங்குகின்றன. உக்ரேன் போர் பற்றிய உண்மையான நிலையை இரசியர்கள் அறிய முடியாத நிலையில் இருக்கின்றனர். 2014-ம் ஆண்டு புட்டீன் உக்ரேனின் ஒரு பகுதியா இருந்த கிறிமியாவைக் கைப்பற்றிய போது இரசியர்கள் அதை மிகவும் ஆரவாரத்துடன் வரவேற்றனர். புட்டீனின் செல்வாக்கும் இரசியர்கள் இடையே பெரிதும் அதிகரித்தது. ஆனால் 2022இல் நிலை அப்படியல்ல.

முதற்கனவு

1999 மார்ச் மாதம் 3-ம் திகதி விள்டிமீர் புட்டீன் உக்ரேன் தலைமை அமைச்சராக பதவியேற்ற போதே இரசியா இழந்த கௌரவத்தை மீளக் கட்டி எழுப்புவதாக உறுதி பூண்டார். 1998-ம் ஆண்டு இரசிய பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து பட்ட கடன்களை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டு உலக வங்கியிடமும் பன்னாட்டு நாணய நிதியத்திடமும் கடன் வாங்கி நெருக்கடியைச் சமாளித்த பின்னர் மேற்கு நாடுகள் இரசியாவை ஒரு பொருட்டாக மதிக்காத நிலை ஏற்பட்டது. அதுவும் புட்டீனை பெரிதும் பாதித்திருந்தது. பொருளாதாரப் பிரச்சனையில் இருந்து இரசியாவை மீட்ட பின்னர் புட்டீனின் மதிப்பு இரசியர்களிடையே உயர்ந்தது. அவர் தேர்தல்களில் இலகுவாக வெற்றியீட்டினார். ஆனால் மேற்கு நாட்டு ஊடகங்கள் தேர்தலில் ஊழல், எதிர்க்கட்சிகளை அடக்கினார் என செய்திகள் வெளியிட்டுக் கொண்டே இருந்தன. 2020-ம் ஆண்டு இரசியாவை உலகின் படைத்துறையின் முதல் தர நாடாக்க வேண்டும் என்ற 20 ஆண்டுத் திட்டத்தை 2020- ஆண்டு தீட்டினார். மீயுர்-ஒலி வேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளை உருவாக்குவது அவரது திட்டத்தின் மணிமகுடமாக அமைந்தது. விமானப்படை, செய்மதிகளை படைத்துறைக்கு பாவித்தல், நீமூழ்கிகளை புதுமைப் படுத்துதல், உலகின் எப்பாகத்தையும் தாக்கக் கூடிய ஏவுகணைகளை உருவாக்குதல் ஆகியவையும் அடங்கும்.

2018இல் பெருமைப்ப்ட்ட புட்டீன்

புட்டீனின் இருபதாண்டுத் திட்டம் வெற்றியுடன் நிறைவேறிக் கொண்டிருக்கின்றது என்பதை உலகத்திற்கும் இரசியரகளுக்கும் எடுத்துரைக்கும் வகையில் 2018 மார்ச் முதலாம் திகதி புட்டீன் நாட்டு மக்களுக்கான உரை ஒன்றை ஆற்றினார். இரசியாவின் பொருளாதார வெற்றி படைத்துறை முன்னேற்றம் ஆகியவற்றைப் பற்றி காணொலியுடன் அவர் விளக்கினார். புட்டீனின் உரையும் காணொலியும் புதிய ஐ-போனை அப்பிள் முதலில் அறிமுகம் செய்வது போல இருந்தது எனச் சொல்லப்பட்டது. அவர் அதில் முன்வைத்தவைகளில் முக்கியமானவை:

1. உலகின் எப்பாகத்திலும் அணுக்குண்டை வீசக் கூடிய அணுவலுவில் இயங்கும் ரடார்களுக்குப் புலப்படாத, எதிரிகளால் இடைமறிக்க முடியாத வழிகாட்டல் ஏவுகணை.

2. அமெரிக்கப் பாதுகாப்பை முறியடிக்கக் கூடிய அணுவலுவில் இயங்கும் நீரடி ஏவுகணைகள் (nuclear torpedo that could outsmart all American defences)Status-Nuclear Torpedo என்னும் பெயருடைய இந்த நீரடி ஏவுகணைகளைப்போல் அமெரிக்காவிடம் இல்லை என்றார் புட்டீன்.

3. ஹைப்பர்சோனிக் வழுக்கி வாகனங்கள் (Avengard Hypersonic Glide Vehicles). இவை வழமையான விண்வெளிக்குச் செல்லும் ஏவுகணைகளில் விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிர்ந்து ஏவப்படும் ஏவுகணையாகும். புவியீர்ப்பு விசையாலும் தன் உந்து சக்தியாலும் அது ஒலியிலும் பலமடங்கு வேகத்தில் தன் இலக்கை நோக்கிப் பறந்து செல்லும். அது செல்லும் பாதையில் ஏவுகணை எதிர்ப்பு முறைமை இருந்தால் அவற்றைத் தவிர்த்துக் கொண்டு செல்ல வல்லது.

புட்டீனின் நம்பிக்கை வீணாகவில்லை

இவை மட்டுமல்ல இரசியாவின் S-400, S-500 போன்ற ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள் அமெரிகாவின் ஏவுகணை எதிர்ப்பு முறைமையிலும் சிறந்தவை, புட்டீன் இறுதியாக புட்டீன் 2021 நவம்பரில் இரசியாவின் எதிரிகளின் செய்மதிகளை அழிக்கும் ஏவுகணையைப் பரிசோதித்தார். எதிரிகளின் செய்மதிகளை அழிப்பதன் மூலம் தன்னால் எதிரிகளின் பல படைக்கலன்களை குருடாக்க முடியும் என முழங்கினார் புட்டீன். உக்ரேனை புட்டீன் ஆக்கிரமிக்கும் போது உக்ரேனுக்கு ஆதரவாக இரசியாவின் படைவலிமைக்கு அஞ்சி நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பின் நாடுகள் களமிறங்க மாட்டாது என புட்டீன் உறுதியாக நம்பினார். அவர் நம்பிக்கை வீண் போகாத வகையில் நேட்டோ நாடுகள் உக்ரேனுக்கு ஆதரவாக தாம் இரசியாவிற்கு எதிராகப் போர் புரியப் போவதில்லை என உக்ரேனை ஆக்கிரமித்ததில் இருந்து சொல்லிக் கொண்டிருக்கின்றன.

நேட்டோ போட்ட கணக்கு வேறு

2019 பெப்ரவரி மாதம் உக்ரேன் நாடாளுமன்றம் நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணையும் வகையில் அரசியலமைப்பை மாற்றியதில் இருந்து புட்டீன் உக்ரேனுக்கு பாடம்புகட்ட முடிவு செய்தார். கொவிட் பெருந்தொற்று நோயால் அது தாமதமாகியது. 2021 மார்ச் மாதத்தில் இருந்தே இரசியப் படைகள் உக்ரேன் எல்லையில் குவிக்கப்பட்டன. அப்போது வலிமை மிக்க படைக்கலன்களை நேட்டோ நாடுகள் உக்ரேனுக்கு வழங்காமல் ஒரு கேந்திரோபாயக் காத்திருப்பைச் செய்தன. புட்டீனின் வேண்டுகோள்கள் நிபந்தனைகள் போன்றவற்றிற்கு நேட்டோ நாடுகளும் உக்ரேனும் இணங்காமல் இருந்தன. புட்டீன் 2021 இறுதியில் மேலும் படைகளை உக்ரேன் – இரசிய எல்லைக்கு அனுப்பியதுடன். பெலரஸ் மற்றும் மோல்டோவாவிலும் இரசியப் படைகளைக் குவித்தார். அதற்கும் உக்ரேன் மசியாத நிலையில் 2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியப் படைகள் உக்ரேனை ஆக்கிரமித்தன. அதன் பின்பு உக்ரேனுக்கு நேட்டோ நாடுகள் தமது படைக்கலன்களை பெருமளவில் அனுப்பின. இரசியாவை உக்ரேனுக்குள் செல்ல விட்டு உக்ரேனியர்கள் மூலமாக அவர்கள் மீது கடும் தாக்குதலை மேற்கொள்வது நேட்டோவின் கேந்திரோபாய நோக்கமாக இருந்திருக்க வேண்டும். 2014-ம் ஆண்டு இரசியாவால் கிறிமியாவைக் கைப்பற்றியது போல் 48 மணித்தியாலங்களுக்குள் உக்ரேன் தலைநகரைக் கைப்பற்றி உக்ரேன அரசை வழிக்கு கொண்டு வருவது அல்லது அங்கு ஆட்சி மாற்றத்திற்கு வழிசெய்வது என்ற இரசியாவின் உத்தி பெரும் பின்னடைவைச் சந்தித்தது. ஆனால் இரசியாவிற்கும் கிறிமியாவிற்கும் இடையில் ஒரு நிலத் தொடர்பை ஏற்படுத்துவதைல் இரசியப் படையினர் கணிசமான முன்னேற்றத்தை கண்டுள்ளனர். Mariupol நகரில் 2022 மார்ச் 14-ம் திகதி கடும் சண்டை நடைபெறுகின்றது. அந்த நகரைச் சுற்றி வளைத்த இரசியப் படையினர் அங்கிருந்து மக்கள் தப்பிச் செல்வதற்கும் ஒரு பாதையைத் திறந்துள்ளனர். அந்த நகர் கைப்பற்றியவுடன் கிறிமியாவிற்கும் இரசியாவிற்கும் இடையில் ஒரு தரைவழிப்பாதை உருவாக்கப்படும். அத்துடன் உக்ரேனின் கிழக்குப் பகுதி அஜோவ் கடல், கருங்கடல் ஆகியவற்றுடனான தொடர்பு துண்டிக்கப்படும்.

இரசிய வெற்றி பத்து விழுக்காட்டிலும் குறைவு

உக்ரேனியர்கள் வீரமாகப் போராடுகின்றார்கள் என மேற்கு நாட்டு ஊடகங்கள் பறைசாற்றிக் கொண்டிருந்தாலும் இரசியப் படையினர் முன்னேறிக் கொண்டே இருக்கின்றனர். அவரகள் கைப்பற்றிய நிலப்பரப்பில் ஒரு அங்குலத்தைத் தன்னும் உக்ரேனியர்களால் மீளக் கைப்பற்ற முடியவிலை என்பது தான உண்மை. முழு உக்ரேனையும் கைப்பற்ற இன்னும் ஓராண்டிற்கு மேல் எடுக்கலாம். அதுவும் புட்டீன பேரழிவு விளைவிக்க கூடிய படைக்கலன்களைப் பாவித்தே செய்ய முடியும். போர் நீண்ட காலம் இழுபட்டு இரசியப் பொருளாதாரம் சிதைவடைவதை நேட்டோ நாடுகள் விரும்பலாம். போலாந்தினூடாக உக்ரேனியப் படையினருக்கு தொடர்ந்து நேட்டோ நாடுகள் படைக்கலன்களை வழங்கிக் கொண்டிருக்கலாம்.

போர் நீடிக்கும் ஒவ்வொரு மாதமும் இரசியாவிற்கு தோல்வி என்றே சொல்ல வேண்டும். புட்டீன் 22 ஆண்டுகளாக திட்டமிட்ட சோவியத் ஒன்றியம்-2.0 நிறைவேறாமல் போகுமா?

இரசிய – உக்ரேனிய இணையவெளிப் போர்

  


இணையவெளிப் போர் வல்லரசுகளாக இஸ்ரேல், அமெரிக்கா, இரசியா, சீனா, பிரித்தானியா ஆகிய நாடுகள் கருதப்படுகின்றன. வட கொரியா மற்றும் ஈரானிடம் வலிமை மிக்க இணையவெளிப் படைப்பிரிவுகள் உள்ளன. கணினிகளுக்குள் தீங்குநிரல்(Malware) புகுத்துதல். கணினிச்சேவை நிறுத்தம், தரவு அழித்தல், தரவு திருடுதல், தரவுகளைப் பணயக் கைதிகள் போலாக்கி பணம் பறித்தல், இரு கணினிகள் அல்லது கணினித் தொகுதிகளிடையே இருந்து அவை இரண்டிற்கும் இடையிலான தொடர்பாடலைத் துண்டித்தல், திசைமாற்றல் அல்லது திரிபுபடுத்தல் எனப் பலவகையான இணைய வெளித் தாக்குதல்கள் உள்ளன. பிரித்தானியாவின் Lloyds Insurance நிறுவனம் சராசரியாக ஓர் இணையவெளித் தாக்குதலால $54 மில்லியன் இழப்பீடு ஏற்படுகின்றது என மதிப்பிட்டுள்ளது. 2008-ம் ஆண்டு ஜோர்ஜியாவை இரசியா ஆக்கிரமிக்க முன்னரும் 2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனை ஆக்கிரமிக்க முன்னரும் இரு நாடுகள் மீதும் கடுமையான இணைய்வெளித் தாக்குதல்கள் நடந்தன. ஜோர்ஜியாவில் பல கணினித் தொகுதிகள் செயலிழக்கச் செய்யப்பட்டன. அவற்றில் நாடாளுமன்றம், வெளியுறவுத்துறை அமைச்சு, பல ஊடகங்கள், தனியார் நிறுவனங்களும் அடங்கும். 2014-ம் ஆண்டு இரசியப் படைகள் உக்ரேனிய அரச மற்றும் மின்சார வழங்கல் கணினிகள் மீது இணையவெளித் தாக்குதல் நடத்தப்பட்டன. 2022 ஜனவரி 10,13, 14-ம் திகதிகளில் உக்ரேனிய அரசுக்கு சொந்தமான கணினித் தொகுதிகளில் இணையவெளியூடாக தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 2022 மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து இரசியாவில் பல் வேறுபட்ட கணினித் தொகுதிகளில் தாக்குதல்கள் நடக்கின்றன. உக்ரேனில் இணையச் சேவை வழங்குனர் (Internet Service Producer) Triolan மீது இரு தடவை தாக்குதல் நடத்தப்பட்டது. SpaceXஇன் நிறுவனர் Elon Musk தனது செய்மதி மூலமான Starlink என்னும் இணையச் சேவையை உக்ரேன் மக்களுக்கு இலவசமாக வழங்குகின்றார்.

உக்ரேனின் தொடருந்து சேவை மீது தாக்குதல்

புட்டீனின் ஆக்கிரமிப்புப் போரால் அயல் நாடுகளுக்கு தப்பி ஓடுபவர்களைத் தடுப்பதற்காக உக்ரேனின் தொடருந்து சேவையின் கணினித் தொகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச் சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இஸ்ரேலிய ஊடகம் ஒன்று உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பு போரில் பல இணையவெளித் தாக்குதல் குழுக்களுக்கும் இரசிய ஆட்சியாளர்களுக்கும் உள்ள தொடர்பு அம்பலப்டுத்தப்பட்டுள்ளது என்கின்றது. அது இரசியாவை Cyber Gangland என விபரித்துள்ளது. உக்ரேன் மீது செய்யப்படும் தாக்குதலால் இரசியாவின் இணையவெளித் தாக்குதல்களை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி அமெரிக்கா அறிந்து கொண்டிருக்கின்றது.

இரசிய தொலைக்காட்சிச் சேவைகள் மீது தாக்குதல்

இரசிய கணினித் தொகுதிகள் மீது Distributed Denial of Service (DDoS) பல மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல கணினித் தொகுதிகள் மூலம் எதிரியின் கணினிக்கு அளவிற்கு அதிகமான தரவுகளைச் செலுத்துவது Distri.uted Denial of Service எனப்படும். அவை மட்டுமல்ல பல ஊடுருவல்களும் செய்யப்பட்டன. 2022 மார்ச் இரண்டாம் வாரம் Russia 24, Channel One, Moscow24 ஆகிய தொலைக்காட்சி சேவைகளை ஊடுருவியவர்கள் உக்ரேனில் நடக்கும் கொடுமைகளை இரசிய மக்களுக்கு ஒளிபரப்பினர். உக்ரேனில் நடக்குப் போர் தொடர்பாக இரசிய ஊடகங்கள் செய்திகள் வெளியிடுவதில் கடுமையான கட்டுப்பாடுகளை இரசிய அரசு விதித்துள்ளது. அவற்றில் இரசிய அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்ற வேண்டு கோள்களும் விடுக்கப்பட்டன. இரசியாவின் விண்வெளி முகவரகம் மூடப்படும் அளவிற்கு அதன் மீது இணையவெளித்தாக்குதல் செய்யப்பட்டன. இதனால் இரசியா செய்மதி மூலம் உளவு திரட்டுதல் பாதிக்கப் பட்டுள்ளது. இரசியாவின் வலைத்தளம் ஒன்றில் தாக்குதல் செய்து அதில் உள்ளவற்றை அகற்றி விட்டு அங்கு போரில் கொல்லப்பட்டவரகளின் கல்லறைகளின் படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. இரசியா மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் இணையவெளித் தாக்குதலைச் சமாளிக்க சீனாவின் Huawei நிறுவனத்தின் சேவையை இரசியா அவசரமாகப் பெற்றுள்ளது. இரசியாவின் செய்தி தணிக்கைப் பணிமனை மீது தாக்குதல் செய்யப்பட்டு அங்குள்ள தடுத்து வைக்கப்பட்டுள்ள செய்திகளைக் கொண்ட 340,000 கோப்புக்களை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கோப்புக்கள் இரசியானின் Bashkortostan மாநிலத்துடன் தொடர்புபட்டன.

அமெரிக்காவும் பங்கு பெறுகின்றதா?

இரசியாவிற்கு எதிராக நடக்கும் தாக்குதல்களில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டுள்ளதா என்ற ஐயம் உண்டு. அமெரிக்க ஒரு இணையவெளிக் கட்டளைப் பணியகம் ஒன்றை 2018இல் உருவாக்கியுள்ளது. அதில் 133 பிரிவுகள் இருக்கும். அவற்றில் 27 தாக்குதல் அணிகளாகும். 133 பிரிவுகளிலும் 4300 படையினர் இருப்பர். 27 தாக்குதல் அணியில் 1600 படைவீரர்கள் இருப்பர். இவர்கள் வெறும் படை வீரர்கள் அல்லாமல் கணனித்துறை நிபுணர்களாக இருப்பர். இவர்கள் சீனாவின் இணைய வெளித் தாக்குதல்களை சமாளிப்பதிலும் ஈடுபடுவார்கள். அத்துடன் வட கொரியாவின் இணையவெளிப் படைப்பிரிவான Bureau 121இன் நடவடிக்கைகளுக்குப் பதில் நடவடிக்கை எடுப்பார்கள். அமெரிக்காவின் படைத் துறை இரகசியங்களை இணைய வெளி மூலம் எதிரி நாடுகள் திருடாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் இந்த இணையவெளிப் படைப்பிரிவினர் ஈடுபடுகின்றனர். அமெரிக்கா உருவாக்கும் போர் விமானம் தொடர்பான இரகசியங்களை எதிரி நாடுகள் திருடி அவற்றை அழிப்பதற்கான வழி முறைகளை சில நாட்களிலேயே உருவாக்கி விடலாம். முன்பு அப்படி ஒன்றை உருவாக்கப் பல ஆண்டுகள் எடுக்கும். அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தின் ஒகஸ்டா நகரில் அமெரிக்காவின் இணைய வெளிப் படைப்பிரிவின் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு ஊடுருவிகளின் பல்கலைக் கழகமும் (hacker university) அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடம் Fort Gordon என அழைக்கப்படுகின்றது. அங்கு எதிரியின் கணனித் தொகுதிகளை ஊடுருவும் முறைகள் பற்றிய பயிற்ச்சிஆராய்ச்சி போன்றவை நடக்கின்றன. வெளியுலக இணைய வெளித் தொடர்புகள் ஏதும் இன்றி இந்தப் பல்கலைக் கழகம் செயற்படுகின்றது. அங்கு கைப்பேசிகள் கூட எடுத்துச் செல்ல முடியாது. உள்ளக தொடர்பாடல்கள் மட்டுமே பாவிக்கப் படுகின்றன. புளோரிடா மாநிலத்தில் Pensacola நகரில் உள்ள  Information Dominance என்னும் பயிற்ச்சி நிலையத்தில் ஆறுமாதங்கள் பயிற்ச்சி பெற்றுத் தேர்ச்சியடைந்தவர்கள் Fort Gordonஇல் மேலதிக பயிற்ச்சி ஒன்பது மாதங்களுக்குப் பெறுவார்கள். பின்னர் அமெரிக்காவின் பல்வேறுபட்ட படை நிலையங்களில் Cyber Analysis Course என்னும் கற்கை நெறி போதிக்கப்படும்.  ஐக்கிய அமெரிக்கா தனது படைநடவடிக்கைகளை எதிரியின் படைத்துறை இலக்குகளுக்கு மட்டும் எதிராகச் செய்ய வேண்டும் என்ற தற்கட்டுப்ப்பாட்டுடன் செயற்படுவதாகச் சொல்லிக் கொள்கின்றது.  அமெரிக்கப் படைத்துறை பல வெளிநாடுகளின் கணனிக் கட்டமைப்புக்களிற்குள் வைரசைப் புகுத்தி வைத்திருந்து தேவையான நேரங்களில் அவை அந்தக் கணனிக் கட்டமைப்பைச் செயலிழக்கச் செய்யும் ஒரு முறைமையை உருவாக்கியுள்ளது. இது வழமையான ஊடுருவல்களிலும் வேறுபட்டது. இந்த வைரசின் இருப்பைக் கண்டறிவதும் கடினம். அமெரிக்கப் படைத்துறை அமெரிக்க அதிபரின் ஒப்புதலின் பேரிலேயே இந்த வைரசுகளை செயற்பட வைக்க முடியும்.

எங்காவது போர் நடந்தால் அங்கு தனது படையினரை இஸ்ரேஸ் அனுப்ப முயற்ச்சிக்கும். உதவி என்னும் போர்வையில் நேரடி களமுனை அனுபவத்தை தனது படையினருக்கு வழங்குவதே இஸ்ரேலின் நோக்கம். உக்ரேன் – இரசிய இணைய வெளிப்போரிலும் அது நடக்கலாம்.

எதிர்காலப் போரில் முதலில் களமிறங்கும் அணி இணைவெளிப் படைப்பிரிவாகத்தான் இருக்கும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...