இலங்கையின் வெளியுறவுக் கொள்கை பற்றிய ராஜ்பக்சே குடும்பத்தினரின் நிலைப்பாடுகளை தகர்ப்பதற்கு அவர்களின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றின் தலைவரான விமல் வீரவன்ச களமிறங்கியுள்ளார். மஹிந்த ராஜபக்ச அதிபராக இருந்த போது உலக அரங்கில் இலங்கையின் நிலை பற்றி அதிக அக்கறை காட்டியதுடன் தானும் உலக அரங்கில் மதிக்கப்பட வேண்டும் எனவும் நினைத்தார். உலக நிகழ்வுகளில் தான் உரையாற்ற வேண்டும் என்பதற்காக கடுமையான முயற்ச்சிகளையும் மேற்கொண்டிருந்தார். அவரது ஆட்சியின் போது அவரது ஒரு சகோதரரான பசில் ராஜ்பக்சே இந்திய சார்பானவராகவும் இந்தியாவுடன் நெருக்கமான உறவைப் பேணுபவராகவும் இருக்க மற்ற சகோதரரான கோத்தபாய ராஜபக்ச சீன சார்புடையவராக இருந்தார். மஹிந்த ராஜபக்சா எல்லா நாடுகளையும் அனுசரித்து நடப்பவர் போல் தன்னைக் காட்டிக் கொண்டார். இந்த சகோதரர்களிடையேயான வெளியுறவுப் பங்கீடு 2009-ம் ஆண்டு கோத்தபாய ராஜபக்ச அதிபராக வந்த பின்னரும் பேணப்படுகின்றது.
போட்டிக்களமான இலங்கை
மஹிந்தவின் ஆட்சிக்காலத்திலும் பார்க்க தற்போது வல்லரசு நாடுகளிடையேயான போட்டி இலங்கையில் அதிகமாக உள்ளதுடன் நாளுக்கு நாள் அது அதிகரித்துக் கொண்டே போகின்றது. அந்த போட்டி கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய முகாமையை இந்தியாவிற்கும் ஜப்பானிற்கும் கையளிக்கும் முயற்ச்சி முறியடிக்கப்பட்ட போது வெளிப்பட்டது. கோத்தபாயாவின் ஆட்சிக்காலம் இலங்கையில் சீனா தனது பிடியை இறுக்க உகந்ததாக உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இலங்கைக்கு சார்பாக சீனா தனது இரத்து அதிகாரத்தை தேவை ஏற்படும்போது பாவிப்பது தற்போது இலங்கைக்கு மிக அவசியமான ஒன்றாகும். அத்துடன் ஜெனீவா மனித உரிமைக்கழகம் போன்ற பிற அமைப்புக்களிலும் சீனாவின் ஆதரவு இலங்கைக்கு தேவைப்படுகின்றது. இலங்கையில் கடன்படு தரம் குறைக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு தேவைப்படும் கடன்களையும் நிதி உதவிகளையும் வழங்க சீனாவால் முடியும்.
சீனாவின் முக்கிய கருவியாக விமல் வீரவன்ச
2008-ம் ஆண்டு ஜேவிபி என்னும் மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரிந்து சென்ற விமல் வீரவன்ச மக்கள் சுதந்திர முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்தியா மீது கடும் வெறுப்பு கொண்ட விமல் வீரவன்ச ராஜ்பக்சே குடும்பத்துடன் நெருக்கமான உறவையும் கொண்டிருந்தவர் மக்கள் விடுதலை முன்னணியில் கிளர்ச்சியை இந்தியா இலங்கைக்கு படைகளை அனுப்பி கொடூரமாக முறியடித்தமையால் அந்த அமைப்பினர் இந்தியா மீது கடும் வெறுப்பு கொண்டுள்ளனர். இந்த வகையில் சீனாவின் சிறந்த அரசுறவியல் நெம்புகோலாக விமல் வீரவன்ச செயற்படுகின்றார். ராஜபக்சேக்களின் கட்சியான இலங்கை பொதுமக்கள் முன்னணியில் நிர்வாகச் செயலாளரான ரேணுக்கா பெரேரா விமல் விரவன்சவிற்கு நெருக்கமான இருவர் வெளிநாடு ஒன்றின் கொடுப்பனவு பட்டியலில் உள்ளனர் எனக் குற்றம் சாட்டியிருந்தார். அது சீனாவைத் தவிர வேறு ஒன்றாக இருக்க முடியாது. ராஜபக்சேக்களின் கட்சியான இலங்கை பொதுமக்கள் முன்னணியை 2009இல் அதிபர் தேர்தலிலும் 2020 நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற வைக்க தான் கடுமையாக உழைத்ததாக விமல் சொல்லுகின்றார்.
இந்திய சார்பானவர்களுக்கு எதிராக கிளம்பிய விமல்
ராஜபக்சே குடும்பத்தின் இந்திய சார்பு நிலையாளரான பசிலிற்கும் அரை இந்திய சார்பு நிலையாளரான மஹிந்தவிற்கும் எதிராக விமல் வீரவன்ச பகிரங்கமாக கருத்து வெளிவிட ஆரம்பித்துள்ளார். 2015-ம் ஆண்டு ராஜபக்சேக்களின் ஆட்சி அகற்றப்பட்டமைக்கு பசிலே காரணம் என்பது அவரது முதலாவது தாக்குதல். இரண்டாவது தக்குதலாக ராஜ்பக்சேக்களின் பொது மக்கள் முன்னணிக்கு அதிபரான கோத்தபாயவே தலைவராக இருக்க வேண்டும் அப்போதுதான் ஆளும் கட்சிக் கூட்டணி நாடாளமன்ற உறுப்பினர்கள் அதிபருடன் இணைந்து சிறப்பாக செயற்பட முடியும் என்ற கருத்தை வெளியிட்டார். அதாவது கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து மஹிந்தவை அகற்ற வேண்டும் என்பது அவரது கருத்து. அக்கருத்துக்கு ராஜபக்சே குடும்பத்தினரிடமிருந்தும் அவர்களது கட்சிக்குள் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கைத்தொழில் துறை அமைச்சுப் பதவியில் இருந்து விமலை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் முனவைக்கப்பட்டுள்ளது.
விமலுக்கு ஆதரவாக கிளம்பிய பிக்குகள்
பொதுமக்கள் முன்னணிக் கட்சியின் தலைவராக கோத்தபாய வரவேண்டும் என்ற விமனில் கருத்துக்கு அக்கட்சியில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியபோது நாரஹென்பிட்டிய பௌத்த விகாரையின் பீடாதிபதி முரெத்தெட்டுவ ஆனந்த தேரர் களமிறங்கினார். பொதுமக்கள் முன்னணியை ஆட்சியில் அமர்த்திய விமல் அதன் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டாமல் வேறுயாரால் சுட்டிக்காட்ட முடியுமென்று கேள்வி எழுப்பினார் அந்த பீடாதிபதி. மேலும் அவர் விமலுக்கு எதிராக கருத்து வெளியிட்ட பொதுமக்கள் முன்னணி கட்சியின் செயலாளர் காரியவாசகத்திற்கு எதிராக பௌத்த மதத்தின் உச்ச அமைப்பான மகா சங்கம் கிளர்ந்து எழவேண்டும் என்கின்றார். பவிடி கண்ட என்ற மத குருமார்களின் அமைப்பு இலங்கையின் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யக் கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதன் கருத்தை உதாசீனம் செய்ய வேண்டாம் என்கின்றார் நாரஹென்பிட்டிய பீடாதிபதி. ஆனால் கொழும்பு துறைமுகத்தின் மிகப்பெரிய முனையமான தெற்கு முனையத்தை சீனாவிற்கு விற்பனை செய்யும் போது சிங்கள மக்கள் பெரிய அளவில் எதிர்ப்பு காட்டவில்லை.
மஹிந்த ராஜபக்சேயின் நோக்கங்கள்
மஹிந்த ராஜபக்சேயின் வெளிநாட்டு சொத்து விபரங்களை மேற்கு நாடுகளின் உளவுத்துறை திரட்டி வைத்துள்ளது. அவரின் வெளிநாட்டு முதலீடுகளுக்கு அந்த உளவுத்துறைகளே உதவி செய்தும் இருக்கலாம். முதலில் அப்படி உதவி செய்து விட்டு பின்னர் அதை வைத்தே அந்த முதலீட்டாளரை மிரட்டி தமக்கு வேண்டியதை வெளிநாட்டு உளவுத்துறை சாதித்துக் கொள்வது வழமையான ஒன்று. அந்த சொத்துக்களை பாதுபாப்பது மஹிந்தவின் முதல் திட்டம். கோத்தபாய தனது பத்தாண்டு அதிபர் காலத்தை முடித்த பின்னர் தனது ஒரு மகனை இலங்கையில் அதிபராகவும் மற்ற மகனை தலைமை அமைச்சராகவும் ஆக்க வேண்டும் என்பது மஹிந்தவின் அடுத்த நோக்கம்.
சீனாவின் நெம்புகோல்கள்
சிங்கள மக்களிடையே இலங்கை சீனாவுடனா அல்லது இந்தியாவுடனா நெருக்கமான உறவைப் பேணவேண்டும் என்ற கருத்து கணிப்பு வாக்கெடுப்பு நடத்தினால் சீனா சார்பு நிலை பெரு வெற்றி பெறும். சிங்கள பௌத்தப் பேரினவாதிகள், இடதுசாரிகள் இந்தியாவை வெறுப்பவர்களாக உள்ளனர். சிங்கள கிறிஸ்த்தவர்களிலும் பெரும்பான்மையானோர் இந்தியாவை வெறுக்கின்றனர். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் முகாமையை இந்தியாவிடம் கையளிப்பதை பௌத்த மகா சங்கம், தொழிற்சங்கங்களின் கூட்டணி, ஆளும் கூட்டணியில் உள்ள பதினொரு கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. இதன் பின்னணியில் சீனா இருக்கின்றது என்பது உறுதி. பௌத்த மதவாதிகள், இடதுசாரிகள், தொழிற்சங்கங்கள் ஆகிய முன்றும் சீனா இலங்கையில் தனது ஆதிக்கத்தை செலுத்த சிறந்த நெம்பு கோலாக இருக்கும் என்பது உறுதியாவிட்டது.
சீனாவின்
ஆதிக்கத்தை அம்பலப்படுத்தும் சந்திரிக்கா அம்மையார்
முன்னாள்
குடியரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தனது கணவரின் நினைவு நாளான்று
ஊடகம் ஒன்றிற்கு கருத்துத் தெரிவிக்கையில் இந்தியாவிற்கு கொழும்புத் துறைமுகத்தின்
கிழக்கு முனையத்தைக் கொடுக்கக் கூடாது என்ற அரசியல்வாதிகள், தொழிற்சங்கவாதிகள் ஆகியோரின்
வங்கிக் கணக்குகளில் ஓர் இரவில் பெரும் பணம் வந்து குவிந்தது எப்படி எனக் கேள்வி எழுப்பினார்.
தற்போதைய அரசில் உள்ள சிலருக்கு வெளியுறவுக் கொள்கை பற்றிக் கவலையில்லை எனச் சாடினார்.
இன்று எல்லா நோக்கங்களையும் பார்க்கும் போது இலங்கை சீனாவின் குடியேற்ற ஆட்சி நாடாக
இருக்கின்றது என்றார்..
இந்தியாவை முழுமையாக உதாசீனம் செய்ய முடியாது
இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவை முழுமையாக உதாசீனம் செய்ய முடியாது. கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் ஜெனீவா மனித உரிமைக் கழகத்திற்கு வரும்போது இலங்கைக்கு சார்பாக சீனாவிலும் பார்க்க இந்தியா அதிக நாடுகளைத் திரட்டியது. மஹிந்த ராஜ்பக்சேவை பொதுநலவாய நாடுகளின் தலைவர் பதவியில் அமர்த்துவதற்கும் இந்தியா கடுமையாக உழைத்திருந்தது. மேற்கு நாடுகள் இலங்கையை கையாளும் பொறுப்பை இந்தியாவிடம் கையளித்துள்ளனர். இந்தியாவிற்கு ஆதரவாக அவர்கள் இலங்கை விவகாரத்தில் செயற்படுவார்கள்.
விமல் தன் கட்சியை வலிமைப்படுத்த முனைகிறாரா?
இலங்கையில் சிறிய கட்சிகள் தனித்துப் போடியிடும் போது படு தோல்வியும் பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போடியிடும் போது பெரு வெற்றியும் அடைவது வழமை. இது என் எம் பெரேரா, பீட்டர் கெனமன் போன்றவர்களின் தலைமையில் இருந்த கட்சிகளுக்கும் ஏற்பட்டது. இது விமல் வீரவன்சவிற்கு நன்கு தெரியும். விமல் வீரவன்ச தனது கட்சியை வலிமைப் படுத்தவே ராஜபக்சேக்களின் பொதுமக்கள் முன்னணியில் தலைமை மாற்றத்தை வலியுறுத்துகின்றார் என்பது இலங்கையில் அரசியல் வரலாறு அறியாதவர்கள் சொல்லும் வியாக்கியானமாகும். விமலின் பேச்சு அவரது கட்சியை ஆளும் கூட்டணியில் இருந்து விலக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. மஹிந்த – கோத்தபாய பிளவு அவர்களது ஆட்சிக்கும் குடும்பத்திற்கும் எந்த அளவு ஆபத்தானது என்பதை அவர்கள் இருவரும் நன்கு அறிவர். விமலுக்கு பின்னாள் வலிமை மிக்க யாரோ ஒருவர் இல்லாமல் அவர் இப்படித் துணிந்து ஒரு பெரிய கட்சியின் தலைமைக்கு சினம் கொள்ளச் செய்யும் கருத்தை தெரிவித்திருக்க மாட்டார்.
கட்சிப் பிளவைக் காட்டி ஜெனீவாவில் இருந்து தப்பும் தந்திரமா?
இலங்கை ஆட்சியாளர்கள் தமது ஆளும் கட்சிக்குள் பிளவு இருப்பதால் ஜெனீவா மனித உரிமைக் கழகத்தின் வேண்டுகோள்களை நிறைவேற்ற முடியாமல் இருக்கின்றது என்று சொல்வதற்காக விமல் வீரவன்சவை வைத்து நாடகமாடுகின்றார் என சில போதிய உலக அரசியல் அறிவற்றவர்கள் போதிக்கின்றார்கள். மனித உரிமைக் கழகத்தின் கூட்டத்தில் தமது கட்சிய்ப் பிரச்சனையை முன்வைப்பது முடியாத காரியம் மட்டுமல்ல நகைப்புக்குரியது. மற்ற நாடுகளின் மனித உரிமைக் கழக உறுப்பினர்களிடம் இப்பரப்புரையை வெளியில் செய்யலாம். ஆனால் சீனா பக்கம் சாய்ந்து கொண்டிருக்கும் ஓர் ஆட்சியாளர்களின் கட்சிக்குக்குள் பிளவு என்பது மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாகும். அதனால் கட்சிப் பிளவை வைத்து ஜெனீவானில் இலங்கையால் பிச்சை எடுக்க முடியும் எனச் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
சீனா தனது ஆதிக்கத்தை இலங்கையில் அதிகரிக்கின்றது என்பது மட்டுமல்ல இந்தியாவை இலங்கையில் இருந்து அகற்ற முயல்கின்றது என்பதற்கு ஆதாரமாக திருகோணமலை எரிபொருள் குதங்களை இலங்கை இந்தியாவிடமிருந்து மீளப் பெறுவது எடுத்துக் காட்டுகின்றது. தீவிர சிங்கள் பௌத்த தேசியவாதியான ஆற்றல் துறை அமைச்சர் உதய கம்மன்பிலவும் சீனா சார்பானவரே.