பங்களாதேசத்தை சூழவுள்ள புவிசார் அரசியல் போட்டி பல மாற்றங்களை கடந்த பத்து ஆண்டுகளாக கண்டு கொண்டிருப்பதுடன் அப்போட்டி தற்போது தீவிரமடைகின்றது. அந்த போட்டியில் ஈடுபட்ட நாடுகளிடையே வெளிப்படைத்தன்மை இல்லை. போட்டிக்கான காரணிகளையும் போட்டியாளர்களின் நகர்வுகளையும் சரியாக அறிந்து அதற்கு ஏற்ப தனது நிலையைத் தெரிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் பங்களாதேசம் இருக்கின்றது. உலகின் மூன்றாவது பெரிய இஸ்லாமிய நாடான பங்களாதேசம் மத தீவிரவாதத்தை சமாளிக்கும் அனுபவத்தைப் பெற்றுள்ளது. இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் சீனா தான் மட்டும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற வெளிப்படுத்தாத கொள்கையுடன் செயற்படுவது பங்களாதேசத்தையும் பாதிக்கின்றது. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் சீனா தனது முத்துமாலைத் திட்டத்தை தொடக்கிய போது வெளிப்படாத சீனக் கேந்திரோபாய நோக்கங்களை தற்போது உணரக் கூடியதாக இருக்கின்றது.
தங்மென மின்னத்தொடங்கியுள்ள வங்கப் பொருளாதரம்
2005-ம் ஆண்டில் இருந்து பங்களாதேசத்தின் பொருளாதாரம் காத்திரமான பொருளாதார வளர்ச்சியைக் கண்டு வருகின்றது. பங்களாதேச மக்களில் 43.8 விழுக்காட்டினர் வறுமை கோட்டின் கீழ் இருந்தனர். 2016-ம் ஆண்டு 14.8 விழுக்காட்டாகக் குறைந்துள்ளது. மக்களின் கல்வியறிவு, ஆயுள் எதிர்பார்ப்பு, உணவு கொள்வனவு போன்றவை காத்திரமான மேம்பாட்டைக் கண்டுள்ளது. தெற்காசிய நாடுகளில் வேகமாக வளரும் பொருளாதாரமாக பங்களாதேசமும் மிக மெதுவாக வளரும் பொருளாதரங்களாக பாக்கிஸ்த்தானும் ஆப்கானிஸ்த்தானும் இருக்கின்றன. சீனாவில் தொழிலாளர்களின் ஊதியம் அதிகரித்தமையை வாய்ப்பாக வைத்து பல உலக ஆடை அணிகலன் உற்பத்தி நிறுவனங்கள் பங்களாதேசத்தில் தமது உற்பத்திகளைச் செய்கின்றன. அரிசியும் சணலும் பங்களாதேசத்தின் பாரம்பரிய உற்பத்திப் பொருட்களாகும். ஆரம்பத்தில் பங்களாதேசப் பொருளாதாரம் சணல் ஏற்றுமதியில் பெரிதும் தங்கியிருந்தது.
பெருமை மிக்க வங்கம்
வங்க தேசம் என்பது பங்களாதேசத்தையும் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தையும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களையும் கொண்ட ஒரு நாடாக இருந்தது. 23 கோடி மக்களால் பேசப்படும் வங்காள மொழி இந்தியாவில் இந்திக்கு அடுத்த படியாக அதிக மக்கள் பேசும் மொழியாகும். ஆசியாவில் சிறந்த இலக்கியங்களை கொண்ட மொழிகளுள் வங்க மொழியும் ஒன்றாகும். இந்தியாவினதும் பங்களாதேசத்தினதும் நாட்டுப் பாடல்களை (தேசிய கீதம்) வங்கக் கவிஞர் ரவீந்திர நாத் எழுதியுள்ளார். வங்க மொழி கிழக்குப் பாக்கிஸ்த்தானின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையே பிரிவினையை வளர்த்து பங்களாதேசம் தனிநாடாக பிரிந்து செல்ல வழிவகுத்தது.13-ம் நூற்றாண்டில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பால் பல வங்காளி மக்கள் காளியம்மனை முழுமுதற் கடவுளாக வழிபடும் மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டனர். அதனால் தற்போது பங்களாதேசம் இருக்கும் பிரதேசம் இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகவும் தற்போதைய மேற்கு வங்கம் இந்துக்களைப் பெரும்பான்மையாக கொண்ட பிரதேசமாகவும் உருவாகின. இதனால் பாக்கிஸ்த்தான் இந்தியாவில் இருந்து பிரியும் போது மேற்கு வங்கம் இந்தியாவுடனும் தற்போதைய பங்களாதேசம் பாக்கிஸ்த்தானுடனும் இணைக்கப்பட்டன.
இந்தியாவும் பங்களாதேசமும்
பங்களாதேசம் இந்தியாவுடன் 54 நதிகளை பகிர்ந்து கொள்கின்றது. இந்தியாவில் இருந்து பங்களாதேசத்திற்கு செல்லும் கங்கை, பிரம்மபுத்திரா, ஆகிய நதிகள் பங்களாதேசத்தின் 1.72மில்லியன் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்புடை நீர்ப்பிடி பிரதேசத்திற்கு நீர் வழங்குகின்றது. பங்களாதேசத்தின் உணவு உற்பத்தி பிரம்மபுத்திரா, கங்கை நதிகளின் வடிநிலத்திலேயே பெரிதும் தங்கியுள்ளது. இந்தியாவிற்கும் பங்களாதேசத்திற்கும் நீர்ப்பங்கீடு, எல்லை போன்றவை தொடர்பான பல முரண்பாடுகள் உள்ளன. இந்தியாவுடன் உறவை சீர் செய்ய பல இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்களுக்கு எதிராக பங்களாதேசம் பல நடவடிக்கைக்களை மேற்கொண்டது. மேற்கு வங்கத்தில் இருக்கும் இந்து வங்காளிகளுக்கும் பங்களாதேசத்தில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் நெருங்கிய உறவு உண்டு. வங்காளிகள் மதத்திலும் பார்க்க இன மற்றும் மொழி உணர்வுகளால் அதிகம் பிணைக்கப் பட்டுள்ளார்கள். பங்களாதேசப் பிரிவினைக்கு முன்னர் கிழக்கு பாக்கிஸ்த்தானில் உள்ள வங்காளிகளுக்கு அட்டூழியம் நடந்த போது மேற்கு வங்காளத்தில் உள்ள வங்காளிகள் கிளர்ந்து எழுந்தனர். பங்களாதேசமும் இந்தியாவும் 4000கிலோ மீட்டர் நீளமான எல்லையைக் கொண்டுள்ளன. இது உலகின் ஐந்தாவது நீளமான எல்லையாகும். மியர்மார், வங்கக்கடல் தவிர பங்களாதேசத்தின் மூன்று திசைகளில் இந்திய எல்லைகள் இருக்கின்றன. இந்தியாவின் அசாம், திரிபுரா, மிசொரம், மெகாலாயா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் பங்களாதேசத்துடன் எல்லைகளைக் கொண்டுள்ளன. சீனாவின் வடகிழக்கு மாநிலங்கள் ஏழையும் இந்தியாவின் முதன்மை நிலப்பரப்பையும் இணைக்கும் சில்குரி இணைப்புப் பாதை மிகவும் சிறியது என்றபடியால் அது கோழிக்கழுத்து என அழைக்கப்படுகின்றது. இதை சீனா கைப்பற்றினால் அசாம், திரிபுரா, மிசொரம், மெகாலாயா, நாகலாந்து, மணிப்புரி ஆகிய மாநிலங்கள் இந்தியாவில் இருந்து துண்டிக்கப்படும். அப்படி ஒன்று நடக்கும் போது இந்திய பங்களா தேசத்தின் ஊடாகவே தனது விநியோகங்களை அந்த ஏழு மாநிலங்களுக்கும் செய்ய முடியும். அந்த மாநிலங்களை சீனா முழுமையாக கைப்பற்றாமல் இருக்க பங்களாதேசத்தின் உதவி இந்தியாவிற்கு அவசியமாகும்.
பங்களாதேசத்தின் பொருளாதாரம்
அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பங்களாதேசத்தில் இருந்து தமது நாடுகளுக்கு இறக்குமதி செய்யும் பல பொருள்களுக்கு வரிச்சலுகை வழங்கியுள்ளன. அதற்கு போட்டியாக் சீனாவும் பங்களாதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் பலவற்றிற்கு இறக்குமதி வரிச்சலுகை வழங்கியுள்ளது. அமெரிக்காவிற்கு பங்களாதேசம் ஆறு பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான பெறுமதியுள்ள பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது. பங்களாதேசம் சீனாவில் இருந்து 14பில்லியன் டொலர்கள் பெறுமதியான இறக்குமதியை செய்கின்ற வேளையில் அமெரிக்காவில் இருந்து ஒரு பில்லியன் டொலருக்கும் குறைவான இறக்குமதியையே செய்கின்றது. பங்களாதேசம் அதிக அளவு ஏற்றுமதி செய்யும் நாடாக அமெரிக்காவும் அதிக அளவு இறக்குமதி செய்யும் நாடாக சீனாவும் இருக்கின்றது. சீனாவிற்கு செய்யும் ஏற்றுமதியிலும் பார்க்க பல மடங்கு ஏற்றுமதியை பங்களாதேசம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செய்கின்றது. அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளுக்கு செய்யும் ஏற்றுமதி பங்களாதேசத்தின் மொத்த ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் இருக்கின்றது. பங்களாதேசத்தில் முதலீடு செய்யும் நாடுகளில் தென் கொரியா, சீனா, இந்தியா, எகிப்த்து, பிரித்தானியா ஆகிய நாடுகள் முன்னணியில் இருக்கின்றன. பக்களாதேசம் விடுதலை பெற்றதில் இருந்து சீனா மூன்று பில்லியன் நிதி உதவியை அதற்கு வழங்கியுள்ளது.
பங்களாதேசமும் சீனாவும்
1971-ம் ஆண்டு சீனா ஒரு வல்லரசு நாடாக ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தவுடன் பாதுகாப்புச்சபையில் செய்த முதல் இரத்து (வீட்டோ) அதிகாரம் பங்களாதேச விடுதலைக்கு எதிரானதாகவே இருந்தது. பின்னர் பங்களாதேசம் ஐநா சபையில் உறுப்புரிமை பெறுவதை சீனா தனது இரத்து அதிகாரத்தின் மூலம் தடை செய்தது. சுதந்திரமடைந்த பங்களாதேசம் சீனாவின் எதிரிகளான இந்தியாவுடனும் இரசியாவுடனும் நெருங்கிய உறவை ஏற்படுத்தியது. 1976இல் சீனா பங்களாதேசத்தை ஒரு நாடாக அங்கீகரித்தது. 1980களின் நடுப்பகுதியில் சீனா பல படைக்கலன்களை பங்களாதேசத்திற்கு வழங்கியது. 1986-ம் ஆண்டு பங்களாதேசமும் சீனாவும் தங்களுக்கு இடையிலான உறவை கேந்திரோபாய பங்காண்மையாக மாற்றிக் கொண்டன. 2008-ம் ஆண்டிற்கு முன்னர் பங்களாதேசத்திற்கு வழங்கிய கடன்களை சீனா இரத்து செய்தது. சீனாவிடமிருந்து பெற்ற கடன்கள் மூலம் பங்களாதேசம் தனது உட்கட்டுமான அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றது. சீனாவின் முத்து மாலைத் திட்டத்தில் பங்களாதேசத்தின் சிட்டகொங் துறைமுகமும் சீனாவால் அபிவிருத்தி செய்யப்பட்டதுடன் அங்கிருந்து சீனாவிற்கு மியன்மாரூடாக ஒரு நெடுஞ்சாலையும் நிர்மாணித்தது.
சீன-மியன்மார்-பங்காள-இந்திய பொருளாதாரப் பாதை
சீனா, மியன்மார், பங்களாதேசம், இந்தியாவை உள்ளடக்கிய பொருளாதாரப் பாதை ஒன்று இது சீனாவின் பட்டி – பாதை முன்னெடுப்பு என்னும் புதிய பட்டுப்பாதை திட்டத்தில் ஒன்றாக இல்லாமல் தனியாக திட்டமிடப்படுகின்றது. சீனாவின் புதிய பட்டுப்ப்பாதை திட்டத்தை இந்தியா புறக்கணிப்பதால் இந்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. நாடுகளுக்கு இடையிலான அரசுறவு நீயா நானா போட்டியாகவோ அல்லது உனக்கு அவன் வேண்டுமா என்பதாகவோ பார்க்கப்படுவதில்லை. தேவை ஏற்படின் நாம் எதிரிகள் என நினைப்பவர்கள் தங்களுக்குள் ஒத்துழத்துக் கொள்வாரகள்.
சீனாவிற்கு பங்களாதேசம் அச்சப்பட தேவையில்லை
பங்களாதேசம் உருவாகும் போது கடுமையாக எதிர்த்த அமெரிக்காவிலும் சீனாவிலும் பங்களாதேசம் தங்கி இருக்க வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்று. பங்களாதேசம் உருவாக ஒத்துழைத்த இந்தியாவுடன் மட்டும் தான் அது உறவை வைத்திருக்க வேண்டும் என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த நிலையில் சீனா அபிவிருத்தி செய்யவிருந்த பங்களாதேசத்தின் மதர்பாரி துறைமுகத்தின் அபிவிருத்தி ஜப்பானிடம் வழங்கப்பட்டமை பங்களாதேசம் வெளி அழுத்தங்களுக்கு பணிந்து செய்ததாக கருதப்படுகின்றது. சீனாவிடமிருந்து இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் போல் பங்களாதேசம் கரிசனைக்குரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை. சீனாவின் தென் சீனக் கடலைத் தவிர உலகின் மற்றப் பகுதிகளில் எல்லாம் சீனா செய்யும் நகர்வுகள் புவிசார் பொருளாதார நகர்வுகளாகவே இருக்கின்றன. சீனாவின் உலக நகர்வுகளின் படைத்துறை விரிவாக்கம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் சீனா தனது கடற்போக்கு வரத்துக்கு ஏற்படவிருக்கும் அச்சுறுத்தல் தொடர்பாக அதிக கரிசனை கொண்டு பல நகர்வுகளைச் செய்து வருகின்றது. தனது கடல் மற்றும் தரைப்பிராந்தியத்தில் தனக்கு ஒரு சிறந்த கவசம் இருக்க வேண்டும் எனக்கருதுகின்றது.
பங்களாதேசம் குவாட் கூட்டமைப்பிற்கு பணியத் தேவையில்லை.
பங்களாதேசம் தனது நாட்டில் சீனாவின் படைத்தளம் அமைக்க அனுமதிக்காதவரை சீனாவின் போட்டி நாடுகளுக்கு அது அஞ்சத் தேவையில்லை. அதையே இலங்கையும் செய்கின்றது. இலங்கை சீனாவிற்கு விட்டுக் கொடுப்பதிலும் பார்க்க குறைந்த அளவு விட்டுக் கொடுப்பையே பங்களாதேசம் செய்கின்றது. ஜப்பான், இந்தியா, ஒஸ்ரேலியா, அமெரிக்கா, தென் கொரியா, வியட்னாம் ஆகிய நாடுகளைக் கொண்ட ஒரு படைத்துறைக் கூட்டமைப்பில் இணைய வேண்டிய அவசியம் பங்களாதேசத்திற்கு இல்லை. அமெரிக்கா, ஆனால் இந்த நாடுகள் பங்களாதேசத்தை சீனா பக்கம் சாராமல் இருக்கச் செய்யும் நகர்வுகளுக்கு பங்களாதேசம் இணங்கிச் செயற்படுவது பணிவு அல்ல. போரில் ஈடுபடும் என அஞ்சப்படும் இரண்டு நாடுகளின் கூட்டமைப்பில் ஒன்றில் இணைவது துணிகரமான செயலாகும்.
பின்லாந்து, சுவீடன், சுவிஸ் போன்ற நாடுகள் நான்கு வல்லரசுகளின் போட்டிகளுக்கு இடையில் பக்கம் சாரா நிலையை பேணுவது போல் பங்களாதேசத்தாலும் பேண முடியும்.