Monday, 19 February 2018

உறுதியான உலகப் பொருளாதாரத்தில் பங்குச் சந்தையின் தடுமாற்றம்

2008-ம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடி அமெரிக்காவை நிலை குலைய வைத்தது. 2011இல் மேற்கு ஐரோப்பாவில் கடன் நெருக்கடி கலங்கடித்தது. 2015இல் சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவடைந்தமை உலகையே வியக்க வைத்தது. இவற்றால் கடந்த பத்து ஆண்டுகளாக பணவாட்டம் (விலைச்சரிவு) உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்களை ஆட்டிப் படைத்தது. பொருளாதார வளர்ச்சியைத் தூண்ட உலகெங்கும் உள்ள நடுவண் வங்கிகள் அளவுசார் தளர்ச்சி (Quantitative Easing)  அது இது என்று தத்தம் நாடுகளில் பணப்புழக்கத்தை அதிகரித்தன. உலகெங்கும் உள்ள வங்கிகள் பணப்புழக்கத்தை அதிகரிக்க கடன்முறிகள் பங்குகள் உட்பட பாதுகாப்புப்பத்திரங்களை (securities, including debt and stocks) வாங்கி வைத்திருக்கின்றன. அதனால் உலகெங்கும் உள்ள பாதுகாப்புப் பத்திரங்களில் மூன்றில் இரண்டு பகுதி நடுவண் வங்கிகளின் கைகளில் உள்ளன. உலக நாடுகளின் மொத்தக் கடன் பழு 63 ரில்லியன் டொலர். கடன் கொடுத்தவர்கள் அந்த இலுமினாட்டிகள் எனப்படும் பதின்மூவரா?

கடனில் கலக்கும் அமெரிக்கா
அமெரிக்காவில் அரசு 2001-ம் ஆண்டில் இருந்து பாதீட்டுப் பற்றாக்குறை நிலவுகின்றது. 2001-ம் ஆண்டு அமெரிக்காவின் கடன் 6.9ரில்லியன் டொலர்கள். அது அதன் தேசிய உற்பத்தியின் 54விழுக்காடு. 2018இல் கடன்பளு 20ரில்லியன் டொலர்கள் மொத்தத் தேசிய உற்பத்தியின் 107விழுக்காடாக உயர்ந்துள்ளது. டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தில் இது இன்னும் அதிகரிக்கவிருக்கின்றது.  அமெரிக்கப் பாதுகாப்புச் செலவு அதிகரிக்கப்பட விருக்கின்றது.

விற்கத் தொடங்கிய நடுவண் வங்கிகள்
பொருளாதார வளர்ச்சி சீரடைய நடுவண் வங்கிகள் தம் வசமுள்ள பத்திரங்களை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளன. அதனால் அவற்றில் விலைகள் குறையத் தொடங்கிவிட்டன. அதனால் அவற்றின் விளைபயன் (yield) அதிகரிக்கத் தொடங்கியது. தம்மிடம் பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் அவற்றை விற்று நடுவண் வங்கிகள் விற்கும் கடன்முறிகளை வாங்கத் தொடங்கியதும் பங்குகளின் விலைகள் சரியத் தொடங்கின.
.
அமெரிக்கத் தும்மலும் உலகத் தடிமலும்
2018 பெப்ரவரி 2-ம் திகதி அமெரிக்காவில் பங்கு விலைகள் சரியத் தொடங்கின. அது உலகெங்கும் பங்குகளின் விலைகளை விழச் செய்தன. அந்த வீழ்ச்சி 5-ம் திகதிவரை தொடர்ந்தது. இந்த வீழ்ச்சி மீண்டும் பொருளாதார நெருக்கடியை மீண்டும் உலகெங்கும் கொண்டு வருமா என்ற கேள்வியை எழுப்பியது. பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் 5ரில்லியன்களுக்கு மேல் இழந்துள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சியின்மை, பணவாட்டம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் இப்போது பொருளாதார வளர்ச்சி பணவீக்கம் போன்றவற்றால் கரிசனையடைந்துள்ளார்கள்.

சரிவின் ஆரம்பப் புள்ளி
2018 பெப்ரவரி 2-ம் திகதி அமெரிக்காவின் ஊழியர்களின் ஊதியம் தொடர்பான புள்ளிவிபரங்கள் வெளிவந்தன. அமெரிக்க ஊதியம் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு 2.9விழுக்காடு அதிகரித்து இருந்தது. இதனால் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் பல முதலீட்டாளர்கள் தம்மிடமுள்ள அமெரிக்க திறைசேரியின் கடன்முறிகளை விற்பனை செய்யத் தொடங்க அவற்றின் விளைதிறன் 2.85விழுக்காடாக அதிகரித்தது. 14ரில்லியன் டொலர் பெறுமதியான அமெரிக்க திறைசேரிக் கடன் முறிகளின் பெறுமதி சரியத் தொடங்கியது. ஊதியம் அதிகரித்தால் அமெரிக்க நிறுவனங்களின் உற்பத்திச் செலவு அதிகரித்து அவற்றின் இலாபத்தைக் குறைக்கும் என்ற அச்சத்தால் பங்குகளின் விலைகளும் வீழ்ச்சியடையத் தொடங்கின.

பட்ட கடன் அடைக்க விற்பனை  
2008-ம் ஆண்டின் பின்னர் பல நடுவண் வங்கிகள் வட்டி விழுக்காட்டை ஒரு விழுக்காட்டிலும் பார்க்கக் குறைத்தன. சில நாடுகளில் அது எதிர்க்கணியமாகவும் இருந்தது. இதனால் பலர் வங்கிகளில் கடன் வாங்கி பங்குச் சந்தையில் முதலிட்டனர். அதனால் பங்குகளின் விலை அளவிற்கு அதிகமாக உயர்வடைந்ததது. இப்போது வட்டி விழுக்காடு அதிகரிப்பதால் பங்குகளை விற்று வாங்கிய கடனை அடைக்கவேண்டியுள்ளது.

டிரம்பின் வரிச் சலுகைகள்
2018-ம் ஆண்டின் ஆரம்பத்தில் அமெரிக்கக் கூட்டாண்மைகளுக்கான வரியை அதிபர் டொனாண்ட் டிரம்ப் குறைத்தார். இதனால் அவற்றின் இலாபம் அதிகரிக்கும் என்பதால் அமெரிக்காவில் பங்குகளின் விலைகள் உயர்ந்தன. S&P 500 சுட்டியில் உள்ள கூட்டாண்மைகளின் பெறுமதி 2017 ஜனவரியில் இருந்ததிலும் பார்க்க 5ரில்லியன் டொலரால் 2அதிகரித்தது. அதைத் தொடர்ந்து உலகெங்கும் பங்குகளின் விலைகள் 14ரில்லியன் டொலரால் அதிகரித்தன. உலகெங்கும் பங்குச் சந்தைகளில் மேலதிகமாக 350பில்லியன் டொலர் முதலிடப்பட்டது.

நற்செய்தி சொன்ன நாணய நிதியம்
2018 ஜனவரியில் சுவிஸ் நகர் டவோஸில் நடந்த உலகத் தலைவர்களும் பெரும் செல்வந்தர்களும் கலந்து கொண்ட உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்று இயக்குனர் உலகெங்கும் உள்ள பல நாடுகளில் பொருளாதார வளர்ச்சி ஒரேயடியாக நடைபெறுகின்றது என்றார் (a synchronised acceleration in America, Europe and Asia) 2018-ம் ஆண்டிற்கான உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான எதிர்வு கூறலை 3.7 விழுக்காட்டில் இருந்து 3.9 விழுக்காடாக பன்னாட்டு நாணய நிதியம் அறிவித்தது. உலகெங்கும் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால் அது தன் கூடவே பணவீக்கத்தையும் கொண்டு வரும். பணவீக்கம் வந்தால் எல்லா நடுவண் வங்கிகளும் வட்டி விழுக்காட்டை அதிகரிக்கும். வட்டி விழுக்காடு அதிகரித்தால் அரசுகளின் கடன் முறிகளினால் கிடைக்கும் வருமான விகிதம் அதிகரிக்கும். அதனால் உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்கள் தமது பங்குகளை விற்பனை செய்து அரச கடன்முறிகளில் முதலீடு செய்வார்கள். அதனால் பங்கு விலைகள் சரியும் என 2018 பெப்ரவரி முதல் வாரத்தில் முதலீட்டார்கள் எதிர்பார்க்கத் தொடங்கினர்.

வட்டி வட்டி ஏறும் நேரமிது
2018 பெப்ரவரி முதலாம் திகதி அமெரிக்காவின் இணைப்பாட்சி ஒதுக்ககம் (Federal Reserve) என்னும் நடுவண் வங்கி தனது அறிக்கையில் படிப்படியாக இனி வட்டி விழுக்காடு அதிகரிக்கப்படும்  எனத் தெரிவித்துள்ளது. வட்டி விழுக்காட்டு அதிகரிப்பு கடன்முறிகள் மீதான முதலீட்டை அதிகரிக்கும் அதனால் பங்குகளின் விலைகளைக் குறைக்கும்.

வளர்முக நாடுகளின் கீழ்முகம்
2018 ஜனவரி 29-ம் திகதிக்கும் பெப்ரவரி 7-ம் திகதிக்கும் இடையில் வளர்முக நாடுகளின் பங்குச் சுட்டியான Morgan Stanley Capital International (MSCI) 7.5 விழுக்காடு வீழ்ச்சியடைந்தது. அமெரிக்கப் பங்குச் சுட்டியான டௌ ஜோன்ஸ் பெப்ரவரி 5-ம் திகதி வரையிலான மூன்று நாட்களில் 2271 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது அது ஒன்பது விழுக்காடான வீழ்ச்சியாகும். பத்து விழுக்காடு வரையிலான வீழ்ச்சி ஆபத்தானதல்ல அது ஒரு திருத்தம் ஆக இருக்கலாம். 2017-ம் ஆண்டின் இறுதியிலும் 2018 ஜனவரியிலும் பங்குகளின் விலைகள் அதிகரித்தமைக்கான ஒரு திருத்தம்தான் 2018 பெப்ரவரி ஆரம்பத்தில் ஏற்பட்ட விலை வீழ்ச்சி எனவும் பலர் கருதுகின்றனர். இலண்டனில் இருந்து வெளிவரும் பினான்ஸியல் ரைம்ஸ் பத்திரிகையில் இது ஒரு ஆரோக்கியமான திருத்தம் என ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

அரசியல் காரணங்கள்
நாலரை மாதங்களுக்கு முன்னர் தேர்தல் நடந்த ஜேர்மனியில் ஓர் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு பெப்ரவரி 5-ம் திகதிவரை ஒரு நிச்சயமற்ற நிலையில் இருந்தது. ஜேர்மனியில் ஆட்சி உறுதியற்ற நிலையில் இருந்தால் அது ஐரோப்பிய ஒன்றியத்தில் ஓர் உறுதியற்ற நிலையை உருவாக்கும். அந்த உறுதியற்ற நிலை பங்கு விலைகளைச் சரியச் செய்தது. பெப்ரவரி 7-ம் திகதி ஜேர்மனியில் ஆட்சி அமைப்பதற்கான உடன்பாடு ஏற்பட்டதால் பங்கு விலைகள் மீளவும் உயர்வடைந்தன. இதனால் 2017 ஏப்ரலிற்குப் பின்னர் பிரித்தானியாவின் FTSE 100 பங்குச் சுட்டியும் ஐரோப்பாவின் Euro Stoxx 600 சுட்டியும் ஒரு நாளில் மிக அதிக அதிகரிப்பைக் கண்டன.

அமெரிக்கா வேறு ஐரோப்பா வேறு
வேலையற்றோர் தொகை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வரும் அமெரிக்காவில் ஊழியர்களின் ஊதியம் அதிகரித்துக் கொண்டே போகின்றது அதனால் அங்கு விலைவாசி அதிகரிக்கலாம் என்ற அச்சம் பங்குச் சந்தையை ஆட்டிப்படைக்கின்றது. ஆனால் மேற்கு ஐரோப்பாவிலும் ஜப்பானிலும் ஊழியர் ஊதிய அதிகரிப்பு கட்டுபாட்டுக்குள்ளேயே இருக்கின்றது. அமெரிக்காவின் பாதீட்டில் வரவிலும் பார்க்க செலவு அதிகரிக்கப்படவிருக்கின்றது. அடுத்த நிதியாண்டில் அரச கடன் இருமடங்காகி ஒரு ரில்லியல் டொலரை எட்டவுள்ளது. அதனால் அங்கு வட்டி விழுக்காடு அதிகரிக்கும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.


தங்கத்திலே ஒரு குறையிருக்கு
பல பங்குச் சந்தை ஆய்வாளர்களின் கருத்துப்படி உலெகெங்கும் பொருளாதாரங்கள் சீரடைகின்றன, நிறுவனங்களின் இலாபங்கள் அதிகரிக்கின்றன, அதனால் பங்குச் சந்தையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட வாய்ப்பில்லை. உலகப் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலை ஏற்படும் போது தங்கத்தில் பலர் முதலீடு செய்வர். ஆனால் பங்கு விலைகள் சரியும் போது தங்கத்தின் விலையும் குறைந்தது. அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்தது. இதனால் உலகப் பொருளாதாரத்தில் ஒரு நிச்சயமற்ற நிலை இல்லை என்பது நிச்சயமாகின்றது. BlackRock என்னும் உலகின் மிகப்பெரிய சொத்து முகாமை நிறுவனம் பங்கு விலைகளின் சரிவு தற்காலிகமானது என அடித்துச் சொல்கின்றது. அமெரிக்கப் பங்குச் சுட்டியான S&P 500இல் உள்ள நிறுவனங்களின் இலாபம் 2017இன் நான்காம் காலாண்டில் 13 விழுக்காடு அதிரித்துள்ளதுடன் விற்பனை எட்டு விழுக்காடு அதிக்ரித்துள்ளது. 2018இல் வரிக் குறைப்பு மேலும் இலாபத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புயலுக்குப் பின் அமைதி
2018 முதலாம் வாரத்தில் குழம்பிய பங்குச் சந்தை இரண்டாம் வாரத்தில் அமைதியடையத் தொடங்கிய போது அமெரிக்காவின் பணவீக்கம் 1.9விழுக்காடு என்ற தகவல் 2018 பெப்ரவரி 14-ம் திகதி வெளிவந்தது. இது எதிர்பார்த்திருந்த 1.7விழிக்காட்டிலும் அதிகம். பொதுவாக பணவீக்கம் அதிகரிக்கும் செய்தி வந்தவுடன் பங்கு விலைகள் சரிவதுண்டு. ஆனால் அப்படியில்லாமல் அமெரிக்காவில் பங்குகள் விலை அதிகரிப்பைக் கண்டன. டௌ ஜோன்ஸ், S&P 500 ஆகிய இரு பங்குச் சுட்டிகளும் உயர்வடைந்தன. பணவீக்கம் அதிகரித்தால் வட்டி விழுக்காடு அதிகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பால் நாணயத்தின் பெறுமதி அதிகரிப்பதுண்டு. ஆனால் டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. தங்கத்தின் விலை அதிகரித்தது. அமெரிக்காவின் சில்லறை விற்பனை குறைந்தது என்ற புள்ளி விபரமும் வெளிவந்தது. அது பொருளாதார வளர்ச்சி உறுதியற்று இருப்பதைக் காட்டியது. . உடனடியாக வட்டி அதிகரிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. அதனால் தொடர்ந்து நான்கு நாட்களாக பங்கு விலைகள் அதிகரித்தன.

பங்குத் தளும்பல் சுட்டி
Vix என்னும் பங்கு விலைகளின் தளும்பல் நிலையைக் காட்டும் சுட்டி இருக்கின்றது இது உயரும் போது பங்கு விலைகள் சரிவதையும் குறையும் போது பங்குச் சந்தையில் ஒரு நிச்சய நிலை உள்ளது என்றும் விலைகள் உயரும் என்றும் சுட்டிக்காட்டும். 2018-ம் ஆண்டு பெப்ரவரி மாத ஆரம்பத்தில் 14 ஆக இருந்த Vix சுட்டி பெப்ரவரி இரண்டாம் வாரம் 37 ஆக உயர்ந்தது. 14-ம் திகதி 20இலும் குறைந்தது.

பங்குச் சந்தைத் திருத்தங்கள்

பங்குகள் அவற்றின் உண்மையான பெறுமதிக்கு அதிகமான விலையில் இருக்கும் போது 10 விழுக்காடு விலை வீழ்ச்சியடைந்து உண்மையான பெறுமதி நிலையை அடைதலை பங்குச்சந்தைத் திருத்தம் என அழைப்பர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் அமெரிக்காவின் பங்குச் சந்தை 36 திருத்தங்களைச் சந்தித்துள்ளது. அவற்றில் பொருளாதாரம் வளர்ச்சி நிலையில் இருக்கும் போது நடந்தவை 24 பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும் போது நடந்த திருத்தங்கள் 12. பங்குச் சந்தைத் திருத்தம் நடப்பது பொருளாதார வளர்ச்சியின் ஓர் அம்சமாகும். அதையிட்டு அச்சப்படத் தேவையில்லை. கரடிப் பங்குச் சந்தை என்பது பங்கு விலைகள் வீழ்ச்சியடையும் என்ற நம்பிக்கையை உள்ள நிலை. எருதுப் பங்குச் சந்தை என்பது விலைகள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உடைய நிலை. இரண்டாம் உலகப் போரின் பின்னர் பொருளாதாரம் வளர்ச்சி நிலையில் இருந்தபோது நடந்த 24 பங்குவிலைத் திருத்தங்களில் 4 மட்டுமே கரடிச் சந்தை நிலையை உருவாக்கின. 

அமெரிக்காவில் ஷேல் எரிவாயு உற்பத்தி அதிகரிப்பதால் எரிபொருள் விலை பெரும் அதிகரிப்பைச் சந்திக்க வாய்ப்பில்லை. போர்த்துக்கல், ஜேர்மனி போன்றவற்றின் பொருளாதாரங்கள் உறுதியான வளர்ச்சி நிலையை அடைந்துள்ளன. இரசியா எரிபொருள் விலை வீழ்ச்சி பொருளாதாரத் தடை ஆகியவற்றையும் தாண்டி வளரத் தொடங்கி விட்டது. சீனா உள்நாட்டுக் கடன் பிரச்சனைகளுக்கு மத்தியிலும் பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து தக்க வைக்கின்றது. பெப்ரவரி பங்குச் சந்தையில் ஏற்பட்ட குழப்பம் இனி முதலீட்டாளர்களை கவனத்துடன் செயற்பட வைத்துள்ளது.


பங்குச் சந்தைகள் அவ்வப்போது தளம்பல்களைச் சந்திக்கும். 2018இல் ஏற்பட்ட வீழ்ச்சி போல் மேலும் சில தளம்பல்களை பங்குகளில் முதலிட்டோர் சந்திக்க நேரிடும். ஆனால் 2018 உலகம் பொருளாதாரப் பிரச்சனைகளில் இருந்து சற்று விடுபடும். 

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...