சோவியத் ஒன்றியம் சீனாவின் மீது படையெடுக்கலாம் என்ற அச்சம் உச்சமடைந்த நிலையில் 1972இல் அமெரிக்க அதிபராக இருந்த ரிச்சர்ட் நிக்சன் சீனாவிற்கு செய்த பயணம் உலகப் படைத்துறைச் சமநிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. 1979இல் சீனா தனது பொருளாதாரக் கொள்கையை அரச முதலாளித்துவத்திற்கு மாற்றியது உலகப் பொருளாதாரச் சமநிலையில் பெரும் மாற்றத்திற்கு வழி வகுத்தது. சீனா உலகின் தொழிச்சாலையானது. தற்போது உலகின் இரண்டாவது பொருளாதாரமாகக் கருதப்படும் சீனா இனி உலகின் முதலாவது பொருளாதாரமாக மாறி இணையில்லாப் படைத்துறை வலிமை மிக்க நாடாக 2030இல் உருவெடுக்கலாம். இவை யாவற்றையும் சீனா நீண்டகால அடிப்படையில் திட்டமிட்டே மாற்றி வருகின்றது.
அடக்க
முடியாத சீனா!
பொருளாதார
அடிப்படையில் சீனா ஒரு வெற்றீகரமான நாடாக உருவெடுத்துக் கொண்டிருப்பது பல வகையில்
மேற்கு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றது. 1. பொருளாதாரத்தில் அபிவிருத்தியடைந்த சீனா தனது
படைத்துறையிலும் தன்னிகரில்லாத நிலையை அடையலாம். 2. உயர் தொழில் நுட்பத்தில் மேற்கு நாடுகளை
மிஞ்சலாம். 3. உலக
ஆதிக்கத்தை அமெரிக்காவிடமிருந்து பறிக்கலாம். 4. சீனா ஒரு கூரிய வல்லரசாக (Sharp Power) உருவெடுக்கலாம் 5. சினா தனது ஆட்சி முறைமை
உலகெங்கும் பரப்பலாம். 2018இன்
ஆரம்பத்தில் சீனாவின் Tsinghua
University இல் நடந்த கலந்துரையாடலில் ஒரு சீன நிபுணர் சீனா அடக்க முடியாத
நாடாகிவிட்டது என்றார். சீனா அமெரிக்காவால் அடக்க முடியாத ஒரு நாடாக மாறிவரும்
நிலையில்தான் அதன் மீது பொருளாதாரப் போர் தொடுக்கப்பட்டது.
மக்களாட்சிக்கு
மாற மறுக்கும் சீனா
முதலாளித்துவமும்
மக்களாட்சியும் தனித்து இயங்க முடியாதவை. மக்களாட்சி இன்றி முதலாளித்துவத்தால்
நின்று பிடிக்க முடியாது என்பது மேற்கு நாடுகளின் அரசறிவியலாளர்களின் கருத்து.
அந்த அடிப்படையிலே மேற்கு நாடுகளின் அரச கொள்கை வகுப்பாளர்களும்
செயற்படுகின்றார்கள். பொதுடமையில் இருந்து அரச முதலாளித்துவத்திற்கு மாறிய
சீனாவின் அரசியல் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டு ஆட்சி முறைமை மாற்றப்படுவது
தவிர்க்க முடியாத ஒன்று என எதிர்பார்த்திருந்த மேற்குலக
நாடுகளுக்கு
2017இல்
அங்கு செய்யப்பட்ட அரசியல் சீரமைப்பு சீனாவை ஒரு தனியொருவராட்சி நாடாக மாற்றியது
பெரும் ஏமாற்றத்தை அளித்தது. சீனாவில் மேற்குலகப் பாணியிலான மக்களாட்சி வருவதற்கு
இனி வாய்ப்பே இல்லை என மேற்கு நாடுகள் எண்ணத் தொடங்கி விட்ட நிலையில் வர்த்தகப்
போர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்போது சீனாவை அடக்க முடியாவிலில் எப்போதும் அடக்க
முடியாது என்ற சூழலில் சீனாமீது வர்த்தகப் போர் தொடுக்கப்பட்டது.
1. பொருளாதார அபிவிருத்தியில்
இருந்து படைத்துறை அபிவிருத்தி
2018 மார்ச் மாதம் நடந்த சீனப் பொதுவுடமைக் கட்சியின்
மாநாட்டில் உரையாற்றிய சீன அதிபர் ஜீ ஜின்பிங் தற்பாதுகாப்பு நிலையில் இருக்கும்
சீனப் படைத்துறை எந்த நாட்டுடனும் போர் செய்து வெல்ல கூடிய உலகத்தரப் படைத்துறையாக
மாற்றப்படும் என்றார். அங்கு உரையாற்றிய சீனத் தலைமை அமைச்சர் லீ கெக்கியாங் சீனப்
படைத்துறை எல்லா வகையிலும் மேம்படுத்தப்படும் என்றார். அமெரிக்காவைப் போல்
பெருமளவு படைத்துறைச் செலவுகளைச் செய்யாமலேயே சீனாவால் உலகின் முதன்மையான
படைத்துறையைக் கட்டி எழுப்ப முடியும் எனவும் அந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
சீனாவின் படைத்துறை வளர்ச்சியை தடுக்க அதன் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்க வேண்டும்
என அதன் எதிரிகள் நம்புவது இயல்பானதே.
2. உயர் தொழில் நுட்பத்தில் சீனா
மேற்கு நாடுகளை மிஞ்சலாம்.
எண்பதுகளில்
சீனாவின் ஏற்றுமதிகளை மேற்கு நாடுகள் தமது நாடுகளுக்கு அனுமதித்த போது சீனா
தொழில்நுட்பத்தில் பின் தங்கியே இருந்தது. மேற்கு நாடுகள் தாம் உயர் தொழில்நுட்பத்தில்
அதிக கவனம் செலுத்தி சீன உற்பத்தித் துறைக்குத் தேவையான உபகரணங்களையும்
தொழில்நுட்ப அறிவையும் தாம் விற்பனை செய்து இலகு வழியில் பெரும் இலாபம் ஈட்டலாம்
என நம்பின. அப்படியே பல பத்தாண்டுகள் கழிந்தன. ஆனால் இப்போது சீனா
உயர்தொழில்நுட்பத்திலும் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றது. அது மற்ற நாடுகளின்
தொழில்நுட்பங்களை உலக நியமங்களுக்கு மாறாக பயன்படுத்த தயங்குவதில்லை.
உதாரணத்திற்கு ஆளில்லாவிமான உற்பத்தியில் சீனா அமெரிக்காவை மிஞ்சக் கூடிய நிலையை
அடைகின்றது. இப்படிப்பட்ட வளச்சிகளால் தொழிற்துறையில் மட்டுமல்ல படைத்துறை
உற்பத்தியிலும் சீனா முதலிடத்தை அடையலாம். அதனால் உலகெங்கும்
உயர்தொழில்நுட்பங்களையும்
உற்பத்தி
உபரகணங்களையும் மட்டுமல்ல படைக்கலன்களையும் ஏற்றுமதி செய்யும் முதன்மை நாடாக சீனா
உருவெடுக்கலாம்.
3. உலக ஆதிக்கத்தை
அமெரிக்காவிடமிருந்து சீனா பறிக்கலாம்.
சீனா
துயிலெழுந்தால் அது உலகை ஆச்சரியப்பட வைக்கும் என்றார் பிரெஞ்சு வீரர் நெப்போலியன்
பொனபார்ட். அது இப்போது நடந்து கொண்டிருக்கின்றது. அமெரிக்கா தனது உலக ஆதிக்கத்தை
விரும்பி ஏற்கவில்லை. இரண்டாம் உலகப் போரின் பின்னர் அமெரிக்காவிடம் திரண்டிருந்த
சொத்தை அதாவது உலகச் செல்வத்தின் மூன்றில் இருபங்கு செல்வத்தை அது பாதுகாக்கவும்
பெருக்கவும் வேண்டிய நிர்ப்பந்தத்தால் அது உலககெங்கும் தனது ஆதிக்கத்தை
விரிவாக்கியது. சீனாவும் தனது செல்வ நிலைக்கு ஏற்ப தனது ஆதிக்கத்தை
விரிவுபடுத்தியே ஆகவேண்டும். சீனாவின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ந்து கொண்டே
போனால் அது உலக ஆதிக்கத்தை அமெரிக்காவிடம் இருந்து பறிப்பது தவிர்க்க முடியாத
ஒன்றாகிவிடும்.
4. கூரிய வல்லரசாக (Sharp Powers) சீனா
படை
நகர்வுகளையும் நடவடிக்கைகளையும் தவிர்த்து ஏனைய வழிகளால் மற்ற நாடுகளில் ஆதிக்கம்
செலுத்தும் நாடுகளை மென்வல்லரசு (soft power) என்பர். படை வலிமை மூலம்
மற்ற நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் நாட்டை வன்வல்லரசு (Hard Power என்பர்.
சீன ஆட்சி முறைமை அதிகாரமிக்க தனியொருவரின் ஆட்சியால் நாட்டுக்கும் மக்களுக்கும்
மக்களாட்சியிலும் பார்க்க அதிக நன்மை கொடுக்கும் என்பதை அண்மைக்காலமாகப் பறை சாற்றி
வருகின்றது. அதே வேளை இரசியாவில் விளடிமீர் புட்டீனும் தனது அதிகாரமிக்க தலைமையால்
இரசியா உலக அரங்கில் மீண்டும் ஒரு பெரு வல்லரசாக உருவெடுப்பதாக வெற்றீகரமாகக்
காட்டிக் கொண்டிருக்கின்றார். அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தனது தான் தோன்றித்
தனமான நடவடிக்கைகளால் அமெரிக்காவை தான் உலக அரங்கில் முதன்மைப்படுத்துவதாகச்
சொல்லிக் கொண்டிருக்கின்றார். இவையாவும் மக்களின் கருத்துச் சுதந்திரத்தைக் குழி
தோண்டிப் புதைக்கின்றன. கருத்துச் சுதந்திரத்தை உள்நாட்டில் மறுத்து தமது நிலையைப்
பெரிது படுத்தி அதன் மூலம் மற்ற நாடுகளில் தமது நாட்டில் உள்ளது போன்ற ஆட்சி
முறைமை ஊக்குவிக்கும் நாடுகளை கூரிய வல்லரசுகள் (Sharp Powers) என அழைக்கப்படுகின்றன. மென்
வல்லரசுகள் தமது ஊடகங்களை மற்ற நாடுகளில்
ஆதிக்கம் செலுத்தும் முகமாக பயன்படுத்தும். அவற்றில் சொல்லப்படுபவை முழுமையான
பொய்களாக இருப்பதில்லை. ஆனால் பயங்கரமான திசை திருப்பல்களும் திரிபுகளும் அவற்றின்
ஊடகங்களில் இருக்கும். கூரிய வல்லரசுகள் பொய்யான தகவல்களை தொடர்ந்து பரப்புரை
செய்து அவைதான் உண்மை என எல்லோரையும் நம்பவைக்கும். சீனா, இரசியா, ஈரான் ஆகிய நாடுகளின்
ஊடகங்களின் வளர்ச்சியையிட்டு மேற்கு நாடுகள் அதிக கரிசனையடைந்துள்ளன. இதுவரை
காலமும் தாம் தகவற்துறையில் செலுத்தி வந்த ஆதிக்கம் ஆட்டம் காண்பதையிட்டு அவை
கவலையடைந்துள்ளன. இவற்றிற்கு காரணம் சீனாவினதும் இரசியாவினதும் ஈரானினதும்
பொருளாதார வளர்ச்சி என்பதை அவை உணர்ந்து அந்த நாடுகளின் பொருளாதாரத்தை சிதைக்க
நடவடிக்கைக்கள் எடுக்கத் தொடங்கி விட்டன.
5. சீனா ஆட்சி முறைமை
சீனாவில்
நடந்த பொதுவுடமைக் கட்சியினரின் கூட்டு ஆட்சி முறைமை ஊழலைப் பெருகச் செய்ததால்
தோல்வியடைந்த நிலையில் அங்கு தனியொருவரின் ஆட்சி 2017இன் பிற்பகுதியில் நடந்த
சீனப் பொதுவுடமைக் கட்சியின் மாநாட்டில் உருவாக்கப்பட்டது. அரச அதிபராகவும், கட்சியின் பொதுச்
செயலாளராகவும், படைத்துறைத்
தளபதியாகவும் ஜி ஜின்பிங் முடி சூட்டப்பட்டார். அதிபர் பதவியை ஒருவர் இரு தடவை
மட்டுமே வகிக்கலாம் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டு ஜி ஜின்பிங் ஆயுள் முழுவது
அதிபராக இருக்க வழி வகுக்கப்பட்டது. இந்த மாற்றம் அமெரிக்கா எதிர்பார்த்துக்
காத்திருந்த அரசியல் சீர்திருத்தம் பின்னோக்கி நகர்ததாக அமெரிக்கக் கொள்கை
வகுப்பாளர்களை நம்ப வைக்கிறது. ஆனால் சீனப் பொதுவுடமைக் கட்சியினர் நிலைமையை
உணர்ந்து தமது நாட்டிற்கு சிறப்பான நன்மை தரக்கூடிய ஆட்சி முறைமையை
மாற்றியுள்ளனர். 1976இல் மாவோ
சே துங்கின் இறப்பிற்குப் பின்னர் சீனப் பொதுவுடமைக் கட்சியினர் தகுதி
அடிப்படையில் தமது தலைமையைத் தெரிவு செய்கின்றனர்.
சீனாவின்
ஆட்சி முறைமையும் மக்களின் உரிமை நிலைமையும் கருத்துச் சுதந்திரமும் அமெரிக்காவின்
வர்த்தகப் போரால் ஏற்படப் போகும் பாதிப்புக்களை பல ஆண்டுகளுக்கு சீனாவால்
சகித்துக் கொள்ளும் தன்மையை சீனாவிற்கு கொடுத்துள்ளது. ஆனால் அமெரிக்காவில் நிலை அப்படியல்ல.
2018 நவம்பரில்
நடக்கவிருக்கும் அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவையின் எல்லா
உறுப்பினர்களுக்கும் மூதவையின் 34
உறுப்பினர்களுக்கும் நடக்கவிருக்கும் தேர்தலின் முடிவுகள் வர்த்தகப்
போரையே இல்லாமற் செய்யலாம். அல்லது 2020 நவம்பரில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தல்
வர்த்தகப் போரை இல்லாமற் செய்யலாம். அதற்குள் வர்த்தகப் போரைத் தீவிரமடையச் செய்ய
வேண்டும் என்பதில் டொனால்ட் டிரம்ப் அதிக அக்கறை காட்டுகின்றார்.
சீரிய
பாதையில் செல்ல யாருமிலர்
சீனா
தனது பாதையில் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்க அமெரிக்கா தனது பாதையை மாற்றிக்
கொண்டே இருக்க வேண்டும். நேரிய பாதையில் செல்லும் சீனா அதிக தூரத்தைக் கடக்கலாம்.
சீரிய பாதையில் செல்ல யாரும் இலர்.