Monday, 27 June 2016

உலகக் கடலாதிக்கப் போட்டிக்கான புதிய படைக்கலன்கள்

மிகப் புதிய நாசகாரிகளில் மிகப் புதிய ஏவுகணைகளை இணைத்து ஐக்கிய அமெரிக்கா தனது கடலாதிக்கத்தை நிலைநிறுத்த முயல்கின்றது. இதற்காக அமெரிக்கா தனது கடற்படைக்கு புதிய தர Zumwalt வகையைச் சேர்ந்த வழிகாட்டல் ஏவுகணை தாங்கி நாசகாரிக்  கப்பலை (Zumwalt-class guided missile destroyer) இணைத்துள்ளது. இந்த நாசகாரிக் கப்பல்களை உருவாக்குவதற்கு   BWXT நிறுவனத்திற்கு 3.1பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஒப்பந்தம் வழங்கப்பட்ட்ட்டிருந்தது. கடற்கரையிலும் தரையிலும் உள்ள இலக்குகள் மீது அணு வலுவில் இயங்கும் இந்த நாசகாரிக் கப்பல்களால் தாக்குதல் செய்ய முடியும். இந்த வகை நாசகாரிக் கப்பல்கள் இருபத்தி ஓராம் நூற்றாண்டிற்கான நாசகாரிக் கப்பல்கள் என்னும் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப் பட்டவையாகும்.எதிரிகளின் ரடார் போன்ற உணரிகளுக்கு இந்த நாசகாரிக் கப்பல் ஒரு மீன்பிடிப்படகு போன்ற மாயத் தோற்றத்தைக் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல பணிப் போர்க்கப்பல்
அமெரிக்காவின் புதிய  வழிகாட்டல் ஏவுகணை தாங்கி நாசகாரிக்  கப்பல் பல பணிகள் செய்யக் கூடியதும் ரடாருக்குப் புலப்படாமலும் இருக்கக் கூடியதுமாகும் (multi-mission stealth ships). இதில் ஒன்று இப்போது கட்டி முடிக்கப் பட்டுள்ளதும் இன்னும் ஒன்று கட்டப்படுகின்றது. மேலும் 30 கட்டப்படவிருக்கின்றன. இதில் ஒரு SH-60 LAMPS அல்லது MH-60R உலங்கு வானூர்தியும் இருக்கும். இதன் எடை14,564 தொன்கள் நீளம் அறுநூறு அடி அல்லது 180 மீட்டர்ர, நீளம் 80 அடி அல்லது 24 மீட்டராக இருக்கும். இதன் வடிவமைப்பு நீரில் அதிக அலை எழுப்பாத வண்ணம் உருவாக்கப் பட்டுள்ளது. கடலில் இது வரும் போது சாதாரண கண்களுக்குப் புலப்படாது. அமெரிக்கா முப்பதிற்கு மேற்பட்ட Zumwalt வகையைச் சேர்ந்த வழிகாட்டல் ஏவுகணை தாங்கி நாசகாரிக்  கப்பலை உருவாக்குவது அதன் கடலாதிக்கத்திற்கு மேலும் வலுச் சேர்க்கும். இது மற்ற நாடுகளையும் பதில் நடவடிக்கை எடுக்க வைக்கும். இந்த வகை நாசகாரிக் கப்பல்கள் முழுக்க முழுக்க கணனிகளால் இயக்கப்படுவதால் இதை இயக்க மற்ற நாசகாரிக் கப்பல்களுக்கு தேவையான ஆளணிகளிலும் பார்க்க பத்தில் ஒரு பங்கு ஆட்களே தேவைப்படுவர்.

காவலுக்கு வீரன் நாசகாரி
விமானம் தாங்கிக் கப்பல்களுக்கு மேலதிகமாக Destroyer,  Frigate, Littoral, Corvette ஆகிய போர்க்கப்பல்களில் உலநாடுகள்  கவனம் செலுத்துகின்றன. இவற்றில் Destroyer என்ற நாசகாரிக் கப்பல்கள் விரைவாகக் கடலில் பயணிக்கக் கூடியவையாகவும் நீண்டகாலம் கடலில் பயணிக்கக் கூடியவையாகவும் இருக்கும். விமானம் தாங்கிக் கப்பல்களுக்கு அடுத்த படியாக நாசகாரிக் கப்பல்களே அளவில் பெரியவையாகும். இவற்றின் முக்கிய பணி பெரிய கப்பல்களையும் விமானம் தாங்கிக் கப்பல்களையும் பாதுகாப்பதாகும். அத்துடன் விமான எதிர்ப்பு, கப்பல் எதிர்ப்பு, நீர்மூழ்கி எதிர்ப்பு ஆகியவற்றையும் செய்யக் கூடியவை. இவற்றில் பலதரப்பட்ட ஏவுகணைகள் இருக்கும். சில நாசகாரிக் கப்பல்கள் உலங்கு வானூர்திகளையும் கொண்டிருக்கும். எதிரியின் விமானங்கள், கப்பல்கள் நீர்மூழ்கிக் கப்பல்கள் தொலைவில் வைத்தே இனம் காணக்கூடிய  எல்லாவிதமான உணரிகளையும் நாசகாரிகள் கொண்டிருக்கும்.  Frigate வகைப் போர்க்கப்பல்  Destroyerஐப் போல் பல பணிகளில் ஈடுபடுத்தப் படுவதில்லை. விமான எதிர்ப்பு அல்லது நீர் மூழ்கி எதிர்ப்பு என எதாவது ஒரு நோக்கத்திற்காக அவை செயற்படும். Littoral வகைப் போர்க்கப்பல்கள் தரைக்கு அண்மையாகத் தாக்குதல்கள் செய்வதற்கு உருவாக்கப்பட்டவை.  Corvette வகைக் கப்பல்கள் சிறியவை இவை பிராந்திய ரீதியில் சிறு கடற்பரப்புகளில் செயற்படுவதற்கு என உருவாக்கப் பட்டவையாகும்.

நாசகாரிக் கப்பல்களின் எண்ணிக்கை எனப் பார்க்கையில் ஐக்கிய அமெரிக்காவிடம் 62, சீனாவிடம் 43, ஜப்பானிடம் 32, இரசியாவிடம் 15, தென் கொரியாவிடம் 12, பிரான்ஸிடம் 11, இந்தியாவிடம் 10 இருக்கின்றன

வழிகாட்டல் ஏவுகணைகள்
வழிகாட்டல் ஏவுகணைகள் ஓரடியில் போட்டுத்தள்ளும் நோக்கத்துடன் உருவாக்கப் பட்டன. அதை "Single Shot Kill Probability"  என அழைத்தனர். வழிகாட்டல் ஏவுகணைகள் உருவாக்கும் எண்ணம் முதலாம் உலகப் போரில் எழுந்த போதும் இரண்டாம் உலகப் போரிலேயே வழிகாட்டல் ஏவுகணைகள் பாவிக்கப் பட்டன. ஜேர்மனியே அதன் முன்னோடியாகும். வழிகாட்டல் ஏவுகணைகளில் பல வகையுண்டு. லேசர் கதிர் மூலம் வழிகாட்டப்படுபவை, ரடார்கள் மூலம் வழிகாட்டப்படுபவை, செய்மதிகள் மூலம் வழிகாட்டப்படுபவை என்பன அவற்றில் சிலவாகும். லேசர் கதிர் மூலம் வழிகாட்டப்படும் ஏவுகணைகள் முதலில் வியட்னாம் போரின் போது பாவிக்கப்பட்டன. போக்லண்ட் தீவிற்காக ஆர்ஜெண்டீனாவுடன் புரிந்த போரில் பிரித்தானிய அதிக அளவு லேசர் வழிகாட்டல் ஏவுகணைகளைப் பாவித்தது. பின்னர் சதாம் ஹுசேய்ன் ஆக்கிரமித்த குவைத்தை மீட்கும் போரிலும் 1993-ம் ஆண்டு சாதாம் ஹுசேய்னை ஆட்சியில் இருந்து அகற்றும் போரிலும் வழிகாட்டல் ஏவுகணைகள் பாவிக்கப்பட்டன. 1999-ம் ஆண்டு நடந்த கொசோவொ போரிலும் பல வழிகாட்டல் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. ஒசாமா பின்லாடனைக் கொல்ல வீசிய வழிகாட்டல் ஏவுகணை பயன்ற்றதாகப் போனது.

டொமொஹோக் (Tomahawk) வழிகாட்டல் ஏவுகணைகள்
1983-ம் ஆண்டு உருவாக்கப் பட்ட டொமொஹோக் (Tomahawk) வழிகாட்டல் ஏவுகணைகள் இன்றுவரை பல மாற்றங்கள் செய்யப் பட்டு சேவையில் இருக்கின்றன. டொமொஹோக் (Tomahawk)  என்பது அமெரிக்காவின் பூர்விக்க குடி மக்கள் பாவிக்கும் ஒரு கோடாரியின் பெயராகும். இவை தாரை இயந்திரங்களால் ( jet engine) இயக்கப் படுபவை.
ஈராக்கில் சதாம் ஹுசேயினிற்கு எதிரான போரின் போது டொமொஹோக் (Tomahawk) வழிகாட்டல் ஏவுகணைகளின் வலுவின்மைகள் பற்றி அறியப்பட்டது.
1. இது பறக்கும் பாதை முன்கூட்டியே அறியப்படக் கூடியது
2. இதற்கான வழிகாட்டல் முறைமையை இயக்க  அதிக நேரம் எடுக்கும்
3. வன்மையான இலக்குகளுக்கு எதிராக இது போதிய பயனளிக்காது
4. அசையும் இலக்குகளுக்கு எதிராக இவற்றால் துல்லியமாகத் தாக்க முடியாது.

இதன் பின்னர்  டொமொஹோக் ஏவுகணைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. தற்போது அவை கணனித் தொகுகளை மையப் படுத்திய போர்முறையில் (Network Centric Warfare) செயற்படக் கூடிய வகையில் மாற்றப்பட்டுள்ளன. இதன் படி அவை பல கணனிகளில் இருந்து வரும் சமிக்ஞைகளை உணர்ந்து அவற்றிக்கு ஏற்ப எதிரி இலக்குகளைத் தாக்கும். தற்போது டொமொஹோக்கை ஏவிய பின்னர் அவற்றின் பாதையை வீசிய இடத்தில் இருக்கும் கணனிகள் மூலம் மாற்ற முடியும். இதனால் அசையும் இலக்குகள் மீதும் தாக்குதல் நடத்த முடியும்.

இரசியாவின் புதிய ஏவுகணைகள்
இரசியாவின் புதிய தர ஏவுகணைகள் மணிக்கு 6000முதல் 11200 கிலோமீட்டர் கதியில் 5,500 கிலோ மீட்டர் வரை பாயக் கூடியவை. தேவை ஏற்படி தமது பாயும் பாதையையும் மாற்றக் கூடியவை. அத்துடன் அணுக் குண்டுகளையும் தாங்கிச் செல்லக் கூடியவை. இவற்றில் இருந்து தனது கடற்படைக் கப்பல்களைப் பாதுகாக்க வேண்டிய நிலையிலேயே அமெரிக்கா தனது நாசகாரிக் கப்பல்களையும் கரைசார்(Littoral) கப்பல்களையும் உருவாக்கியுள்ளது.
இந்தியாவின் நீர்மூழ்கி எதிர்ப்பு Littoral கப்பல்
நீர்மூழ்கிகளுக்கு தாக்குதல்கள் தொடுக்கக் கூடிய Anti-submarine Warfare (ASW)  கப்பலை இந்தியா தனது கடற்படைக்கு  உருவாக்கியுள்ளது. இது The littoral combat ship (LCS) என்ற வகையைச் சார்ந்த கப்பலாகும். இந்த  littoral வகைக் கப்பல்கள் சிறியனவாகமும் கரைக்கு அண்மையாகவும் செயற்படுபவை. இக்கப்பல் 2017-ம் ஆண்டு முழுமையான சேவைக்கு வரும். இது முழுக்க முழுக்க உள்நாட்டில் உருவாக்கப்பட்ட போர்க்கப்பலாகும். Kamorta எனப் பெயரிடப்பட்ட இக்கப்பலில் இருந்து  கடல் மேற்பரப்புத் தாக்குதலும் விமான எதிர்ப்புத் தாக்குதலும் செய்ய முடியும்.  109.1 மீட்டர் நீளமும் 12.8 மீட்டர் அகலமும் கொண்ட Kamorta ரடார்களுக்கு இல்குவில் புலப்படாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு நிமிடத்தில் 120 குண்டுகளை வீசக் கூடிய  76mm Super Rapid Gun Mount (SRGM) இதில் பொருத்தப்பட்டிருக்கும். கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளுக்கு எதிராக  இரு புறத்திலும் ஒவ்வொரு  AK 630 close-in weapon systems (CIWs) Kamortaவில் பொருத்தப்பட்டிருக்கும்.  வானில் இருந்து வரும் அச்சுறுத்தலுக்கு எதிராக Barak surface-to-air missiles (SAMs) என்னும் ஏவுகணைகள் இருக்கின்றன. முப்பரிமான ராடார் உணரிகளும் உள்ளன. டீசலில் இயங்கும் Kamortaவில் ஒரு உலங்கு வானூர்தி தரையிறங்க முடியும்.  நீர்மூழ்கிக் கப்பல்களில் அதிக கவனம் செலுத்துவதும் உலகிலேயே அதிக அளவு நீர்முழ்கிக் கப்பல்களைக் கொண்டதுமான சீனாவிடமிருந்து இந்தியாவின் 7000கிலோ மீட்டர் நீளமான கடற்கரையைப் பாதுகாக்க இந்தியாவிற்கு Kamorta போன்ற பல Anti-submarine Warfare கப்பல்கள் அவசியம்.

ஐக்கிய அமெரிக்காவின் Littoral  கப்பல்
ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக் கலன்களுக்கு கடும் அச்சுறுத்தல் விளைவிக்கக் கூடிய ஒலியிலும் பார்க்கப் பல மடக்கு கதியில் பாயும் ஏவுகணைகளை இரசியாவும் சீனாவும் உருவாக்கியுள்ள நிலைமையில் அமெரிக்கா 2016-ம் ஆண்டு ஜூன் 14-ம் திகதி மிகவும் வலிமை வாய்ந்த படைக்கலன்களுடன் கூடிய  Littoral  வகைக் கப்பல்களை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. சீனாவுடன் தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும், இரசியாவுடன் போல்ரிக் கடலிலும், கருங்கடலிலும் அமெரிக்காவுக்கு முறுகல் நிலை தோன்றியுள்ள நிலையில் அமெரிக்காவின் கடலாதிக்கம் மிகவும் அவசியமாகும் என உணர்ந்த அமெரிக்கா இந்த  Littoral  வகைக் கப்பல்களை உருவாக்கியுள்ளது. இவற்றில் ஒலியிலும் பார்க்க பல மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணைகளை குறுகிய தூரத்தில் வைத்து தாக்கி அழிக்கும் லேசர் கதிர்கள் வீசும் ஃபேலாங்ஸ் படைக்கலன்கள் பொருத்தப் படும். இவை சீனாவினதும் இரசியாவினதும் எல்லா வகை ஏவுகணைகளில் இருந்தும் அமெரிக்கக் கடறபடை கப்பல்களைப் பாதுகாக்கக் கூடியவை.  சீனா  தனது WU-14 எனப்படும் ஹைப்பர் சோனிக் என்னும் ஒலியிலும் பார்க்கப் பத்து மடங்கு வேகத்தில் பாயக் கூடிய ஏவுகணைகளை 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலில் சோதனை செய்து பார்த்தது.  சீனாவின் WU-14  ஏவுகணைகளையும் லேசர் கதிர்கள் மூலம் தாக்கியழிக்கக் கூடியதாக அமெரிக்கா தனது Phalanx பாதுகாப்பு முறைமையை உருவாக்கியுள்ளது. இந்தப் பாதுகாப்பு முறைமை Close-in weapon systems அதாவது நெருங்கிய நிலைப் படைக்கலன் முறைமை என்று இதைச் சுருக்கமாக CIWS என அழைக்கப் படுகின்றது. உயர் பகுதிறன் (high-resolution) கொண்ட தேடிக் கண்டு பிடிக்கும் infra-red camera , விரைவு சுடுகலன் rapid-fire, கணனியால் இயங்கும் ரடார் , 20மில்லி மீட்டர் துப்பாக்கி முறைமை, லேசர் ஒளி பாய்ச்சி ஆகியவை அமெரிக்கா உருவாக்கியுள்ள Close-in weapon systems அதாவது நெருங்கிய நிலைப் படைக்கலன் முறைமையின் முக்கிய அம்சங்களாகும்.

அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்களை அழிக்க சீனாவும் இரசியாவும் ஒலியிலும் பார்க்க பல மடங்குகள் கதியில் பாயக் கூடிய ஏவுகணைகளை உருவாக்கின.  அவற்றை அழிக்க அமெரிக்கா தனது நாசகாரிக் கப்பல்களிலும் கரைசார் கப்பல்களிலும் நெருங்கிய நிலையில் வைத்து எதிரி ஏவுகணைகளை அழிக்கும் படைக்கலன்களை உருவாக்கின. கடலாதிக்கப் போட்டி விமானம் தாங்கிக் கப்பல்களையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கின்றது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...