Wednesday, 25 November 2020

தைவானைச் சுற்றி ஆசியப்படை வலுப்பெருக்கல் போட்டி

 

இந்திய-சீன மற்றும் இந்திய-பாக்கிஸ்த்தான் படைத்துறைப் போட்டி தீவிரமடைவதற்கான காரணம் அமெரிக்கா தைவானைப் பாதுகாப்பதற்கு செய்யும் நடவடிக்கைகளாகும். அமெரிக்கக் கடற்படையின் Rear Admiral Michael Studeman 21/11/2020 தைவானிற்கு ஒரு பயணத்தை மேற்கொண்டதாக தைவானில் இருந்து செய்திகள் கசியவிடப்பட்டுள்ளன. இவர் அமெரிக்கப் படையின் ஆசிய பசுபிக் கட்டளையகத்தின் உளவுப் பிரிவின் உயர் அதிகாரியாவார்.  இதற்கு முன்னர் அமெரிக்கப் படையினர் தைவானியப் படையினருக்கு பயிற்ச்சி வழங்குவதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன. கடந்த ஓராண்டாக அமெரிக்கா பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான படைக்கலன்களை தைவானிற்கு விற்பனை செய்தது சீனாவைக் கடும் சினத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 

1995-96 தைவான் நெருக்கடி

1994 பில் கிளிண்டன் தைவானிய அதிபர் லீ டெங் கூ அமெரிக்கா செல்ல அனுமதி மறுத்தார். சீனாவுடனான உறவைக் கருத்தில் கொண்டே அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அமெரிக்க நாடாளமன்றம் 1995 மே மாதம் மக்களவையில் 396-1 என்ற பெரும்பான்மையுடனும் மூதவையில் 97-1 என்ற பெரும்பான்மையுடனும் அவருக்கு பயண அனுமதி வழங்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. 1979 ரிச்சர்ட் நிக்சன் அமெரிக்க சீன அரசுறவை நிலை நிறுத்திய போது தைவானும் சீனாவின் ஒரு பகுதி என ஒத்துக் கொள்ளப்பட்டது. 1995 ஜூலை தான் படித்த கோர்ணல் பல்கலைக் கழகத்தில் தைவானின் மக்களாட்சி பற்றி தைவானிய அதிபர் லீ டெங் கூ உரையாற்றினார். இதனால் ஆத்திரமடைந்த சீனா தைவானை இலக்கு வைத்து 1995-ஜூலை முதல் தொடர் ஏவுகணைச் சோதனைகடற்படைப் போர் ஒத்திகை போன்றவற்றைச் செய்தது. சீனப் படைகள் ஃபிஜீயன் மாகாணத்திற்கு பெருமளவில் நகர்த்தப்பட்டனர்அவர்களை வைத்து ஈரூடக தாக்குதல் ஒத்திகை நடத்தப்பட்டது. தைவானை கைப்பற்றும் நகர்வுகளைச் சீனா செய்வதை அறிந்த அதிபர் பில் கிளிண்டன் USS NIMITZ, USS INDEPENDENT என இரு விமானம் தாங்கிக் கப்பல்களின் தலைமையில் இரு பெரும் கடற்படைப்பிரிவுகளை தைவான் நீரிணைக்கு அனுப்புகின்றார். அந்த இரண்டு கடற்படைப் பிரிவுகளையும் தம்மால எதிர் கொள்ள முடியாது என உணர்ந்த சீனா தனது தைவான் ஆக்கிரமிப்பு முயற்ச்சியைக் கைவிட்டதுஇது சீனாவின் மூக்குடைபட்ட ஒரு நிகழ்வாகும். சினம் கொண்ட சீனா அவசரமாக இரசியாவிடமிருந்து பல தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள், எழுபத்தாறு SU-30-MKK, இருபத்தினான்கு SU-30-MK2 ஆகிய போர்விமானங்கள் போன்றவற்றை வாங்குகின்றது. அமெரிக்காவிற்கு இணையாக சீனா தனது படைவலுவை உயர்த்த முடிவு செய்து. அதன் நீண்ட காலத் திட்டத்தால் அது இன்று அமெரிக்காவிற்கு சவால் விடக்கூடிய ஒரு படைத்துறையைக் கொண்டுள்ளது. அமெரிக்கா இன்று சீனாவின் வளர்ச்சியை இட்டு கரிசனை கொண்டுள்ளது. சீனாவின் படைத்துறை வளர்ச்சி அது தென் சீனக் கடலில் உள்ள தீவுகளை தனதாக்கி அங்கு தன் படை நிலைகளை நிறுவ வழிவகுத்தது. அதைத் தடுக்க அமெரிக்காவால் முடியவில்லை. அந்த தீவுகளுக்கு மேலாக அமெரிக்கா தனது போர் விமானங்களைப் பறக்க விடுவதும் அத்திவுகளுக்கு அண்மையில் தனது கடற்படைக் கலன்களை அனுப்புவதும் மட்டுமே அமெரிக்காவால் செய்ய முடிந்தது. இது பிலிப்பைன்ஸ் ஆட்சியாளர்களை அமெரிக்காமீது அதிருப்தி கொள்ள வைத்தது.

சீனாவின் அயல் நாடுகளின் கரிசனை

சீனாவின் கிழக்குப் பக்கம் ஜப்பானும் தென் கொரியாவும் சீன அச்சுறுத்தலைச் சமாளிக்க இரண்டு வழிகளைக் கையாள்கின்றன. ஒன்று தனது படைவலிமையைப் பெருக்குவது இரண்டாவது அமெரிக்காவுடன் படைத்துறை ஒத்துழைப்பை அதிகரிப்பது. மேற்குப் புறம் இந்தியா சீனப் படைத்துறை வளர்ச்சியால் அதிக கரிசனை கொள்கின்றது. சீனா அருணாச்சலப் பிரதேசம் தனது நாட்டின் ஒரு பகுதி எனச் சொல்கின்றது. ஆரம்பத்தில் இந்தியா இரசியாவுடன் படைத்துறை ஒத்துழைப்பையும் இரசியாவிடமிருந்து பெருமளவு படைக்கலன் கொள்வனவையும் செய்கின்றது. சீனா தொடர்ச்சியாக இந்திய எல்லையில் செய்யும் அத்து மீறல்களால் இந்தியா தனது பாதுகாப்பையிட்டு முழுமையான மனநிறைவு அடையவில்லை. அமெரிக்க இந்திய படைத்துறை ஒத்துழைப்பு உருவாக்கி அதிகரிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்தியாவின் படை வலிமை அதிகரிப்பால் பாக்கிஸ்த்தானைச் சிந்திக்க வைக்கின்றது. அதுவும் தன் படைவலிமையை அதிகரிக்கின்றது. இந்தியா தனக்கும் சீனாவிற்கும் இடையில் உள்ள படை வலிமை இடைவெளியை அமெரிக்க உறவால் நிரப்ப முயல பாக்கித்தானும் தனக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள படைவலிமை இடைவெளியை சீன உறவால் நிரப்ப முயல்கின்றது.

குவாட் உரையாடல்

சீனாவின் பொருளாதாரபடைத்துறைதொழில் நுட்ப வளர்ச்சியும் பசுபிக் பிராந்தியத்தில் உள்ள சிறிய நாடுகளுக்கு கடன் கொடுத்து அவற்றின் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதும் ஜப்பானையும் ஒஸ்ரேலியாவையும் கரிசனை கொள்ள வைக்கின்றது. இதனால் ஜப்பான் நான்குமுனை உரையாடல் (Quadilateral Dialogue) என்னும் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளைக் கொண்ட உரையாடலைத் தொடக்குகின்றது. இதன் நோக்கம் இந்து மாக்கடலிலும் பசுபிக் மாக்கடலிலும் சுதந்திரமான கடற்போக்குவரத்தை உறுதி செய்ய நான்கு நாடுகளும் ஒத்துழைத்தல் எனச் சொன்னாலும் அதன் உண்மையான நோக்கம் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் படைவலிமையை எதிர்கொள்வதற்கான ஒத்துழைப்பாகும்.

தைவான் சீனாவின் மணிமுடி

சீனாவின் தொழில்நுட்ப வலுவின்மையான புள்ளிகளில் semiconductors உற்பத்தியும் ஒன்று. தகவல் தொழில்நுட்பத்தின் உயிர்நாடியான அந்தத் துறையில் அமெரிக்கா, தென் கொரியா, தைவான் ஆகியவை உலகில் முன்னணியில் திகழ்கின்றன. தைவானை சீனாவின் ஒரு பகுதியாக்குதல் சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும்.  உலகெங்கும் துறைமுகங்களைத் தேடித் தேடி அபிவிருத்து செய்யும் சீனாவிற்கு 15 துறைமுகங்களைக் கொண்ட தைவான் பெரும் வாய்ப்பாகும். தைவானை சீனா கைப்பற்றினால் பசுபிக் பிராந்தியத்தில் அதன் ஆதிக்க வளர்ச்சிக்கு ஏதுவாக அமையும். 2019 ஜனவரியில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் தைவான் சீனாவினது ஒரு பகுதி என்றும் தேவை ஏற்படின் படைகளைப் பாவித்தாவது அதை சீனாவின் ஒரு பகுதியாக்குவோம் என முழங்கினார். தைவானின் தனித்துவத்தை காப்பாற்றுவோம் என அமெரிக்கா உறுதி பூண்டுள்ளதாக அறிவித்தது. அது தைவானியர்களின் சுதந்திரத்தில் கொண்ட அக்கறையால் அல்ல பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கவே.

சீனாவிற்கு எதிராக இந்தியாவை இழுத்த அமெரிக்கா

தைவானை நோக்கி சீனாவின் படைநகர்வுகளிற்கு பதிலடியாக 2018-ம் ஆண்டு அமெரிக்கா மூன்று தடவை தனது கடற்படையை சீனாவிற்கும் தைவானிற்கும் இடையில் உள்ள தைவான் நீரிணைக்கு அனுப்பவேண்டியிருந்தது. சீனா தைவானைக் கைப்பற்ற முயற்ச்சித்தால் ஒரு அமெரிக்க சீனப் போர் நிச்சயம் ஊருவாகும். இதில் சீனாவிற்கு பாதகமான சூழலை ஏற்படுத்த இந்தியா சீனா எல்லையில் சீனாவிற்கு எதிராக படை நகர்த்தலைச் செய்ய வேண்டும் என்ற திட்டம் இரகசியமாக ஆலோசிக்கப்பட்டது. சீனா தைவான் போரில் ஈடுபடும் வேளையில் பாக்கிஸ்த்தான் வசமுள்ள கஷ்மீரை இந்திய கைப்பற்ற திட்டமிட்டது. அமித் ஷா பாக்கிஸ்த்தானும் சீனாவும் கைப்பற்றி வைத்திருக்கும் கஷ்மீரை எப்படியும் மீட்போம் என இந்தியப் பாராளமன்றத்தில் முழங்கினார். அதை எப்படியோ அறிந்த சீனா தைவான் போரின் போது இந்தியா அப்படி ஒரு படை நகர்வை மேற்கொண்டால் பாக்கிஸ்த்தானும் சீனாவும் இணைந்து இந்தியாவிற்கு எதிராக ஒரு போர் செய்ய முடிவு செய்துள்ளன. பாக்கிஸ்த்தான் வசமுள்ள கஷ்மீரினூடாக சீன அமெரிக்க பொருளாதாரப் பாதை செல்கின்றது.

இரு குழுக்கள்

பாக் + சீனா ஒரு புறம் அமெரிக்கா+ஜப்பான்+இந்தியா+ஒஸ்ரேலியா+ தென் கொரியா + வியட்நாம் இன்னொரு புறம் என்ற போட்டி நிலை ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தீவிரமாகிக் கொண்டிருக்கின்றது. குவாட் பாதுகாப்பான கடற் போக்கு வரத்தை உறுதி செய்தல் என்னும் பெயருடன் ஒரு படைத்துறை ஒத்துழைப்பு. இது நேட்டோ போல் நெருக்க மாக இருக்காது. அமெரிக்கா நேட்டோ நாடுகளைப் பாதுகாக்க எடுத்த பொறுப்பைப் போல் சீனாவின் அயல்நாடுகளை சீனாவிடமிருந்து பாதுகாக்க முழுப்பொறுப்பு எடுக்காது. ஆனால் தனது தீவிர ஒத்துழைப்பை வழங்கும்.

இரசியாவின் நிலைப்பாடு

2014-ம் ஆண்டு கிறிமிய இணைப்பின் பின் நெருங்கி வந்த இரசிய சீன உறவு 2019இல் இருந்து நெருக்கம் குறைந்து கொண்டு போகின்றது. மத்திய ஆசியாவில் சீனா செய்யும் நகர்வுகளை இட்டு இரசியா கரிசனை கொண்டுள்ளது. இரசியா சீனாவிற்கு வழங்க ஒத்துக்கொண்ட எஸ்-400 என்ற வான் பாதுகாப்பு முறைமையை விநியோகிப்பதை தாமதப் படுத்தியுள்ளது. சீனாவின் நட்பு நாடாக வட கொரியாவும் கம்போடியாவும் மட்டும் இருக்கின்றன.

ஜோ பைடனின் தலைமையில் அமெரிக்கா

அமெரிக்க இந்திய படைத்துறை ஒத்துழைப்பில் ஜோன் பைடனும் அதிக அக்கறை காட்டுவார். டிரம்ப் இந்தியாவிற்கு எதிராக வர்த்தகப் போர் செய்ய தயாராக இருந்தார். பைடன் அதில் அக்கறை காட்டமாட்டார். ஆனால் இந்தியாவின் மனித உரிமை மீறல்களிற்கு எதிராக நிற்பார். கமலா ஹரிஸ் இந்தியப் பெண்களுக்கு ஆதரவான நிலைப்பாடு இந்துத்துவாவாதிகளைச் சினமடையச் செய்யலாம். சீனாவுடன் டிரம்பின் வர்த்தகப் போர். பைடனும் தொடர்வார். ஆனால் அமெரிக்காவிற்கு பாதகம் ஏற்படாத வகையில் அவரது நடவடிக்கைகள் இருக்கும். தைவானை அவரும் காப்பாற்றுவார். டிரம்ப் இருந்திருந்தால் தைவானில் இரகசியமாக இருக்கும் அமெரிக்கப் படைகள் அதிகரிக்கப் பட்டிருக்கலாம். ஜோன் பைடன் உலக தாராண்மைவாத்தை கையில் எடுப்பாரானால் ஆதிக்கப் போட்டி மற்றும் படைத்துறைப் போட்டி ஒரு புறம் இருக்க வர்த்தக ஒத்துழைப்பை சுமூகமாகச் செய்யும் முயற்ச்சியில் இறங்குவார்ஆசியான் நாடுகளும் சீனா, ஒஸ்ரேலியா, தென் கொரியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுமாக இணைந்து மொத்தம் பதினைந்து நாடுகள் Regional Comprehensive Partneship (RCEP) என்னும் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை செய்தது. இதுவும் ஆதிக்கப் போட்டி ஒரு புறமிருக்க நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் சுமூகமாக நடக்க வேண்டும் என்ற எண்ணத்துடனே செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் வளர்ச்சி சீனாவின் ஆதிக்க மனப்பான்மையை குறைக்க உதவாது. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை ஊரை அடிச்சு உலையில் போடுவது என்றால் சீனாவின் வெளியுறவுக் கொள்கை “உன் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய், என் விட்டுக்கு வரும்போது என்ன கொண்டு வருவாய் என்பதே”


Tuesday, 24 November 2020

ஈரான் மீது டொனால்ட் டிரம்ப் தாக்குதல் செய்வாரா?

ஈரானை சுற்றி அமெரிக்கப்படைகள்

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் “நொருக்கும் பதிலடி” கொடுப்போம் என ஈரான் 2020-11-17 செவ்வாய்க்கிழமை சூளுரைத்தது. இஸ்ரேலுக்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்யாதது ஒன்று உண்டென்றால் அது ஈரான் மீது தாக்குதல் நடத்தாததுதான். டிரம்ப் பதவியில் இன்னும் இரண்டு மாதங்களே இருக்க முடியும் என்ற நிலையில் அதையும் செய்ய முயல்கின்றார் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. குறைந்தது ஈரானின் நடான்ஸ் நகரத்தில் உள்ள யூரேனியம் பதப்படுத்தும் நிலையிலாவது தாக்குதல் நடத்த வேண்டும் என டிரம்ப் தனது அதிகாரிகளுடன் கலந்தாலோசித்துள்ளார். ஈரான் மீது தாக்குதல் செய்வதை துணை அதிபர் மைக் பென்ஸ், வெளியுறவுத் துறைச் செயலர் மைக் பொம்பியோ, பாதுகாப்புத் துறைப் பதில் செயலர் கிறிஸ்டோபர் மில்லர் உட்பட பலர் ஒத்துக் கொள்ளவில்லை. 2020 நவம்பர் 21-ம் திகதி அமெரிக்காவின் பி-52 (B-52H “Stratofortress) குண்டு வீச்சு விமானங்கள் ஈரானைச் சுற்றவுள்ள அமெரிக்க படைத்தளங்களுக்கு அனுப்பப்பட்டன. 

ஈரான் அசையாது

2020 நவம்பர் 20-ம் திகதி ஈரானிய அரசு தனது நட்பு அமைப்புக்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கையும் விடுத்துள்ளது. ஈரானின் சிறப்புப் படையணியின் தளபதி இஸ்மயில் கானி ஈராக்கில் உள்ள ஈரான் சார்பு தீவிரவாதக் குழுக்களுடன் அமெரிக்கத் தாக்குதல் தொடர்பாக கலந்துரையாட ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளார். இஸ்ரேல் ஒழிக, அமெரிக்கா அழிக என்ற கொள்கையில் உறுதியாக நிற்கும் ஈரானின் மதவாத ஆட்சியாளர்களுக்கு எதிராக பாரிய தாக்குதல் செய்ய வேண்டும் என இஸ்ரேல் கடந்த இருபது ஆண்டுகளாக முயன்று வருகின்றது. ஈரானுடைய மலைகளும் பாறைகளும் நிறைந்த பூகோள அமைப்பு அதை இலகுவில் தாக்கி அழிக்க முடியாத ஒரு நாடாக வைத்திருக்கின்றது.

டொனால்ட் டிரம்பும் இஸ்ரேலும்

டொனால்ட் டிரம்பின் மகளின் கணவர் ஜரார்ட் குஷ்ணர் ஒரு யூதராவார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபரின் உயர் ஆலோசகராக பதவி வகிக்கும் குஷ்ணர் அங்கு செல்வாக்கு மிக்கவராக இருக்கின்றார். அவரும் சவுதி அரேபிய பட்டத்துக்குரிய இளவரசரும் நெருங்கிய நண்பர்கள். அதனால் டிரம்பின் ஆட்சிக்காலத்தில் இஸ்ரேலுக்கு சாதகமான பல நகர்வுகள் மேற்காசியாவில் நடந்தன. பலஸ்த்தீனியர்களும் இஸ்ரேலியர்களும் தமது தலைநகரம் எனக் கொண்டாடிய கிழக்கு ஜெருசேலம் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டது. அத்துடன் ஜெருசேலம் இஸ்ரேலின் தலைநகர் என இஸ்ரேல் அறிவிக்க அதை அமெரிக்கா ஏற்றுக் கொண்டது. சிரியாவிடமிருந்து இஸ்ரேல் 1967-ம் ஆண்டு நடந்த அரபு இஸ்ரேல் போரில் இஸ்ரேல் சிரியாவிடமிருந்த அபகரித்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கோலான் குன்றுகள் இஸ்ரேலின் ஒரு பகுதி என அமெரிக்கா ஏற்றுக் கொண்டது. பலஸ்த்தீனியர்களின் மேற்குக் கரைப் பிரதேசத்தில் இஸ்ரேல் செய்த யூதக் குடியேற்றங்களை அமெரிக்கா சட்ட விரோதமாக கருதமாட்டாது என்றும் டொனால்ட் டிரம்ப் பிரகடனம் செய்தார். ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன், சூடான் ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் அரச உறவுகளை உருவாக்க டிரம்பின் ஆட்சி முன்னின்று உழைத்தது. இஸ்ரேல் மிகவும் வெறுத்த ஈரானின் படைத் தளபதியை கசீம் சுலேமானியை அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் குண்டு வீசி கொலை செய்தது.

பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம்

பாதுகாப்புச் செயலர் எனப்படும் பாதுகாப்பு அமைச்சுப் பதவியில் இருந்த மார்க் எஸ்பரை நவம்பர் 6-ம் திகதி நடந்த தேர்தலில் தான் தோல்வியடைந்த பின்னர் டிரம்ப் பதவி நீக்கம் செய்தார். ஆப்கானிஸ்த்தானில் இருந்தும் ஈராக்கில் இருந்தும் அமெரிக்கப் படையினரை வெளியேற்றாமை போன்ற காரணங்களுக்காக அப்பதவி நீக்கம் நடந்ததாக சொல்லப்பட்டாலும் ஈரான் மீது தாக்குதல் நடத்த மார்க் எஸ்பர் மறுத்தமையும் ஒரு முக்கிய காரணமாகும் எனக் கருதப்படுகின்றது. இதற்கிடையில் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபேர்ட் ஓ பிறையன் தான் பதவியில் இருந்து விலக முன்னர் கட்டார்(கத்தார்) நட்டிற்கு எதிராக ஐக்கிய அமீரகம், சவுதி அரேபியா, எகிப்த்து, பாஹ்ரேன் ஆகிய நாடுகள் இணைந்து மேற்கொண்டுள்ள முற்றுகையை நீக்குவேன் எனத் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டார்(கத்தார்) நாட்டின் மீதான முற்றுகையால் அந்த நாடு ஈரானில் தங்கியிருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஈரானின் இந்த அரசுறவியல் நெம்பு கோலை வலிமையிழக்கச் செய்யவே இந்த நடவடிக்கை.  

இஸ்ரேல் பாஹ்ரேன் உறவு

இஸ்ரேல் சிரிய எல்லையில் ஆட்கொல்லி கண்ணிவெடிகளை புதைக்கப்பட்டதற்கு பதிலடியாக சிரியாவில் உள்ள ஈரானியப் படை நிலைகள் மீது இஸ்ரேல் 2020 நவம்பர் 18-ம் திகதி தாக்குதல் நடத்தியது. அதில் இரு சிரியப் படையினர் கொல்லப்பட்டதாக சிரிய அரசு அறிவித்தது. அந்த தாக்குதலைத் தொடர்ந்து பாஹ்ரெயின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் லத்திஃப் அல் ஜயானியும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பொம்பியோவும் இணைந்து இஸ்ரேலுக்கு பயணம் செய்தனர். அமெரிக்க, இஸ்ரேலிய மற்றும் பாஹ்ரேனிய அதிகாரிகள் சூழ ஒரு பேச்சு வார்த்தை இஸ்ரேலியத் தலைநகரில் நடந்தது. பாஹ்ரேனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவை சுமூகப் படுத்தவே அமெரிக்க மற்றும் பாஹ்ரேனிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பயணம் செய்ததாக சொல்லப்பட்டது. இருவரும் இணைந்து இஸ்ரேலுக்கு பயணித்தமை மிகவும் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று.



யூரேனிய பதப்படுத்தல் ஒப்பந்தம்

2015-ம் ஆண்டு P-5+1 எனப்படும் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சீனா, இரசியா, பிரான்ஸ், சீனா ஆகிய ஐந்து வல்லரசு நாடுகளையும் ஜேர்மனியையும் கொண்ட குழுவுடன் ஈரான் தனது யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பாக ஒரு ஒப்பந்தத்தை செய்தது. அந்த ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் 90 நாட்களுக்கு ஒரு தடவை புதுப்பிக்கும் கையொப்பம் இடவேண்டும். இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேலும் சவுதி அரேபியாவும் கடுமையாக எதிர்த்தன. டொனால்ட் டிரம்ப் 2016 நவம்பரில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று 2017 ஜனவரியில் பதவி ஏற்றார். 2017 ஒக்டோபரில் அந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க மறுத்து கையொப்பமிடவில்லை. அதனால் மற்ற ஆறு நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா செய்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. ஈரான்மீது அமெரிக்கா மேலதிகப் பொருளாதாரத் தடைகளையும் விதித்தது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜொன் பைடன் தான் மீண்டும் அந்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பேன் எனச் சொல்லியுள்ளார். அப்படி அங்கீகரிக்கும் போது ஈரான் அந்த ஒப்பந்தப்படி மட்டுப்படுத்தப்பட்ட யூரேனியப் பதப்படுத்தலைச் செய்யலாம். அதை இஸ்ரேலும் சவுதி அரேபியாவும் விரும்பவில்லை. இஸ்ரேலிய தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாகூவுடனும் சவுதி அரச குடும்பத்துடனும் தனிப்பட்ட அடிப்படையில் அதிக நட்புக் கொண்ட டொனால்ட் டிரம்ப் தான் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற முன்னர் ஈரானின் யூரேனியப் பதப்படுத்தலை தடுக்கும் நடவடிக்கையை செய்ய முயல்கின்றார் என நம்பப்படுகின்றது. டிரம்ப் ஈரானுடனான யூரேனியம் பதப்படுத்தல் ஒப்பந்தத்தை இரத்துச் செய்த பின்னர் ஈரான் தன்னிடமுள்ள பதப்படுத்தப்பட்ட யூரேனிய இருப்பை 12 மடங்காக உயர்த்தியுள்ளது. இப்போது ஈரானிடம் இரண்டு அணுக்குண்டுகளை உருவாக்கக் தேவையான பதப்படுத்தப்பட்ட யூரேனியம் உள்ளது. அத்துடன் ஜோன் பைடனுடன் மீண்டும் ஒப்பந்தம் செய்தால் அதில் தொலை தூர ஏவுகணைகளை மட்டுப்படுத்தும் நிபந்தனை உள்ளடக்கப் படுவதை ஈரான் ஏற்றுக் கொள்ளாது எனவும் அறிவித்துள்ளது. அமெரிக்கா யூரேனியம் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய பின்னர் அந்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் பெருமளவு யூரேனியத்தைப் பதப்படுத்தியதும் ஒப்பந்த மீறலாகும்.

பாஹ்ரேய்னின் முக்கியத்துவம்

ஈரானின் யூரேனியம் பதப்படுத்தும் நிலைகள் பாறைகளுக்கு உள்ளே அறுபது அடிகளுக்கு மேற்பட ஆழத்தில் உள்ளன. அவற்றின் மீது அமெரிக்கா தாக்குதல் செய்வதற்கு பாஹ்ரேனில் நிலைகொண்டுள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைப் பிரிவின் பங்கு மிக முக்கியம். அதற்கு பாஹ்ரேனின் ஒத்துழைப்பு அவசியம். பாஹ்ரேயின் வெளியுறவுத் துறை அமைச்சரும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரும் ஒன்றாக இஸ்ரேலுக்கு பயணித்ததின் நோக்கம் பாஹ்ரேனின் ஒத்துழைப்பைப் பெறுவதாக இருக்கலாம். சியா இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகக்  கொண்ட பாஹ்ரேனில் சுனி இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சி நடக்கின்றது. அங்கிருந்து சியா இஸ்லாமிய நாடான ஈரானின் மீது தாக்குதல் செய்யப்பட்டால் பாஹ்ரேனில் உள்ள சியா இஸ்லாமியர்கள் கிளர்ந்து எழலாம். அதை அடக்குவதற்கான முன்னேற்பாட்டை செய்ய வேண்டும். அதற்கு இஸ்ரேலிய உளவுத்துறையின் பங்களிப்பு அவசியம்.

ஈரானின் மீதான தாக்குதல் சியா இஸ்லாமியர்களைப் பெரும் பான்மையினராக கொண்ட ஈராக்கிலும் பெரும் குழப்பத்தை உருவாக்கலாம். ஈரானின் ஆதரவு பெற்ற சியா இஸ்லாமியப் போராளிகள் அமைப்பான ஹிஸ்புல்லாவும் மற்ற போராளி அமைப்புக்களும் மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடத்தலாம். இதனால் அமெரிக்க படைத்துறை மற்றும் வெளியுறவுத் துறை நிபுணர்கள் ஈரான் மீதான தாக்குதலை எதிர்ப்பார்கள். ஆனால் ஜோன் பைடனின் வெற்றி இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் போரைக் கொண்டு வரும் என இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் எக்காளமிட்டுள்ளார். ஈரான் மூன்று பக்கம் மலைகளையும் நான்காம் புறம் பெரும் கடலையும் எல்லைகளாக கொண்ட ஆக்கிரமிக்க முடியாத கோட்டை. ஈரான் மீது தாக்குதல் நடத்துவது உலக எரிபொருள் உற்பத்தியையும் விநியோகத்தையும் பெருமளவில் பாதிக்கும். ஈரானை ஏவுகணைகளால் தாக்குவது குளவிக் கூட்டில் கல்லெறிவது போன்றது. ஈரானின் ஆதரவு பெற்ற பல போராளி அமைப்புக்கள் வட அமெரிக்காவிலும் மேற்காசியாவிலும் உள்ள அமெரிக்காவின் படைத்துறை, அரசுறவியல், குடிசார் நிலைகள் மீது தாக்குதல் நடத்தலாம்.

டொனால்ட் டிரம்பைப் பொறுத்தவரை தனக்கு அடுத்ததாகப் பதவிக்கு வரவிருக்கும் ஜோன் பைடனுக்கு எப்படி சிக்கல்களை ஏற்படுத்துவதுதான் முக்கியமானதாகும்.


Monday, 23 November 2020

அவியுமா அமித் ஷாவின் பருப்பு?

  


இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், சதிஸ்கர், ஜார்கண்ட், கேரளா மஹாராஸ்ட்ரா, ஒடிசா, தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய முக்கிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) ஆட்சி நடக்கவில்லை. இந்தியப் பொருளாதாரத்தை பாஜகவின் பிடியில் வைத்திருக்க மஹராஸ்ட்ரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அதன் ஆட்சி நடக்க வேண்டும். இந்த மூன்று மாநிலங்களும் இந்தியாவில் பொருளாதார அடிப்படையில் பெரிய மாநிலங்களாகும். மக்கள் தொகை அடிப்படையில் உத்தரப் பிரதேசம் இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமாக இருக்கின்ற போதிலும் மொத்த பொருளாதார உற்பத்தி அடிப்படையில் மஹாரஸ்ட்ரா முதலாம் இடத்திலும் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் உத்தரப் பிரதேசம் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன. இந்தியப் பாராளமன்றத்தின் மாநிலங்களவையில் பெரும்பான்மை வலுவைப் பெற மாநில சட்ட சபைகளிலும் பாஜக வலிமை பெற்றிருக்க வேண்டும். 

தளபதி அமித் ஷா

குஜராத்தில் மூன்று தடவை பாரதிய ஜனதாக் கட்சியை ஆட்சியில் அமரச் செய்து புகழ் பெற்ற நரேந்திர மோடியின் தளபதியாக விளங்கியவர் அமித் ஷா. மோடி இந்தியாவின் தலைமை அமைச்சராகிய போது மாநில அரசியல்வாதியாக இருந்த அமித் ஷா 2014-ம் ஆண்டு பாஜகவின் தேசியத் தலைவரானார். தற்போது மோடியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும் இருக்கின்றார். இந்தியாவின் உள் துறை அமைச்சர் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு, காவல் துறை, மாநில அரசுகள், ஆட்சி மொழி ஆகியவற்றிற்கு பொறுப்பான அமைச்சாகும். மாணவப் பருவத்திலேயே மதவாத ஆர் எஸ் எஸ் அமைப்பில் இணைந்த அமித் ஷா தனது 33வது வயதில் குஜராத் சட்ட சபை உறுப்பினரானார். அதைத் தொடர்ந்து பாஜகவின் தேர்தல் கடமைகளில் முக்கிய பங்கு வகித்தார். அவரது ஆரம்ப கால அரசியல் செயற்பாடே காங்கிரசுக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களைச் சந்தித்து அவர்களை பாஜக பக்கம் இழுத்து பாஜகவின் உறுப்பினராக்குவதே. அதை குஜராத் முழுவதும் வெற்றிகரமாக செயற்படுத்தியதால் குஜராத் மாநிலத்தில் காங்கிரசுக் கட்சி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு 2001-ம் ஆண்டு பாஜக ஆட்சியை கைப்பற்றியது. இன்றுவரை அமித் ஷா குஜராத்தில் காங்கிரசுக் கட்சியை தலையெடுக்க அனுமதிக்கவில்லை. தேர்தலுக்கு முன்னர் எதிர்கட்சியில் இருந்து ஆட்களை தமது கட்சிக்கு இழுப்பதில் மட்டும் அமித் ஷா வல்லவரல்லர். தேர்தலில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சியினரை பெரிய அளவில் கட்சி மாறச் செய்வதிலும் திறன் மிக்கவர். இதற்காக அவர் பஞ்சதத்திரத்தில் கூறப்படும் சாம, பேத, தான, தண்டம் ஆகியவற்றை பயன்படுத்துவார் எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. இந்தியாவில் ஆளும் கட்சியில் இருப்பவர்கள் வருமான வரித்துறை, சிபிஐ என்னும் சட்ட அமூலாக்கத் துறை மற்றும் பல உளவுச் சேவைகளை தமது தேவைகளுக்காக பயன்படுத்துவார்கள் என்ற குற்றச் சாட்டும் பரவலாக உண்டு. ஒரு நடிகர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இல்லாவிடில் அவரது வீட்டில் வருமான வரி திடீர் சோதனை, அவரது திரைப்படத்திற்கான தடை போன்றவை மேற்கொள்ளப்படுவதாகவும் நம்பப்படுகின்றது.

மேற்கு வங்காளம்.

மேற்கு வங்கத்தில் 2016-ம் ஆண்டு நடந்த சட்ட சபைக்கான தேர்தலில் 294 தொகுதிகளில் பாஜகவால் மூன்று தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற முடிந்தது. ஆனால் 2019-ம் ஆண்டு நடந்த இந்தியப் பாராளமன்றத்திற்கான தேர்தலில் மேற்கு வங்கத்தின் 42 தொகுதிகளில் 18 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற திரிணாமுல் காங்கிரசுக் கட்சி 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2014-ம் ஆண்டு பாராளமன்றத் தேர்தலில் பெற்ற இரண்டு தொகுதிகளில் இருந்து 18 தொகுதிகளை 2019இல் பெற்றது பெரிய முன்னேற்றம் என்றாலும் நாடாளவிய அடிப்படையில் பாஜக பெற்ற வெற்றியுடன் பார்க்கையில் அது காத்திரமான வெற்றி அல்ல. மேற்கு வங்கத்தில் மம்தா பனர்ஜீ தலைமையிலான திரிணாமூல் காங்கிரசின் ஆட்சியை முடிவிற்கு கொண்டு வர அமித ஷா மாதம் இரண்டு தடவையும் பாஜகவின் செயற் தலைவர் ஜே பி நட்டா மாதம் மூன்று தடவையும் மேற்கு வங்கத்திற்கு பயணம் செய்வதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் சதிகள் நிறைந்த தலையீட்டின் பின்னர் மேற்கு வங்க அரசியலில் இனவாதமும் மதவாதமும் அங்கு தீவிரமடைந்து வருகின்றது. திரிணாமூல் காங்கிரசில் உள்ள இந்து மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல்வாதிகள் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைகின்றார்கள். அதே வேளை சோனியாவின் காங்கிரசுக் கட்சியில் உள்ள இஸ்லாமியத் தலைவர்கள் அதில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரசில் இணைகின்றார்கள். இந்த இரு வகையான தாவல்களில் 2021 ஏப்ரல் மாதம் நடக்க விருக்கும் மேற்கு வங்க சட்ட சபைக்கான தேர்தல் முடிவுகள் தங்கியிருக்கின்றன.

நடந்து முடிந்த பிஹார் தேர்தல்

பிஹார் சட்ட சபைத் தேர்தலில் வீசிய பாஜக சார்பு அலை மேற்கு வங்கம் வரை பரவும் என பாஜகவினர் நம்புகின்றனர். ஆனால் பிஹாரில் தனிப்பெரும் கட்சியாக பாஜக வெற்றி பெறவில்லை. பிஹாரில் அமித் ஷாவின் தந்திரம் முதற்கட்ட வெற்றியைப் பெற்றுள்ளது. அங்கு நிதிஸ்குமாருடன் அவருக்குத் தான் முதலமைச்சர் பதவி என்ற உறுதி மொழியை வழங்கி அவருடன் கூட்டணி அமைத்த போது பாஜக 110 தொகுதிகளிலும் நிதிஸ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 115 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக முடிவு செய்யப் பட்டது. அதே வேளை பாஜக் இன்னும் ஒரு கூட்டணியை லோக் ஜன் சக்தி கட்சியுடன் செய்து கொண்டது. அதன் படி பாஜக போட்டியிடும் இடங்களில் லோக் ஜன் சக்தி கட்சி போடியிட மாட்டாது. பாஜகவிற்கு அது ஆதரவு வழங்கும் ஆனால் நிதிஸ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை எதிர்த்து எல்லா தொகுதிகளும் பரப்புரை செய்யும். இந்த இரட்டை முக கூட்டணியால் பாஜக 74 தொகுதிகளிலும் ஐக்கிய ஜனதா தளம் 43 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. உறுதி மொழி வழங்கிய படி நிதிஸ்குமார் முதலமைச்சராக்கப்பட்டார். ஆனால் இன்னும் ஓராண்டுக்குள் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டு பாஜக அங்கு ஆட்சியைக் கைப்பற்றும். பாஜகவின் இரட்டை முகக் கூட்டணி அண்ணா திமுகாவிற்கும் காங்கிரசுக் கட்சி தன் வலிமைக்கு அதிக தொகுதிகளில் போட்டியிட்டு கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது திமுகவிற்கும் சிறந்த முன்னுதாரணங்களாக அமைந்துள்ளன. 

கேரளா

கேரளாவின் சட்டசபைக்கான தேர்தல் 2021 ஜூன் மாதம் நடக்கவிருக்கின்றது. 2016-ம் ஆண்டு நடந்த கேரள சட்ட சபைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 14% வாக்குகளைப் பெற்றிருந்த போதும் 140 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டும் அது வெற்றி பெற்றது. 2019-ம் ஆண்டு நடந்த இந்தியப் பாராளமன்றத்திற்கான தேர்தலில் பாஜக கூட்டணி அமைத்து இருபது தொகுதிகளிலும் போட்டியிட்ட போதும் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. அதன் பின்பு பாஜக கேரளாவில் அதிக கவனம் செலுத்தி வருகின்றது என்றாலும் 2021 ஜூனில் நடக்கவிருக்கும் தேர்தலில் சில தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற வாய்ப்புண்டு.

தமிழ்நாடு

2021 மே மாதம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்ட சபைத் தேர்தலில் பாஜக ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்றாலும் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என பாஜக உறுதியாக நிற்கின்றது. அதற்காக பல திரையுலகப் பிரபலங்களை தமது கட்சியில் இணைக்க திட்டமிட்டுள்ளது. அண்ணா திமுகவுடன் கூட்டணி அமைப்பதும் அறுபது தொகுதிகளில் போட்டியிடுவதும் அதன் முதல் இலக்கு. பின்னர் மாற்றுக் கட்சிகளின் சட்ட மன்ற உறுப்பினர்களில் 20விழுக்காட்டுக்கு அதிகமான உறுப்பினர்களை பாஜகவிற்கு தாவச் செய்து தமதி கட்சியைப் வலிமையக்குவதும் ஆட்சியைப் பிடிப்பதும் பாஜகவின் அடுத்த இலக்கு. அதை மனதில் கொண்டு அமித் ஷா 2020 நவம்பர் 21-ம் திகதி தமிழ்நாடு சென்றுள்ளார். அண்ணா திமுக இருபது தொகுதிகளுக்கு அதிகமான தொகுதிகளை பாஜகவிற்கு கொடுக்க தயாரில்லை. அண்ணா திமுகவின் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் தாம் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களுக்கு எதிராக வருமான வரித்துறை பாயாமல் இருக்க சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய தயாராக இருக்கின்றார்கள். ஆனால் அண்ணா திமுகவின் இடைநிலைத் தலைவர்களும் தொண்டர்களும் 2019-ம் ஆண்டு நடந்த பாராளமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டும் தாம் வெற்றி பெற்றதற்கு பாஜகவுடன் அண்ணா திமுக அமைத்த கூட்டணிதான் காரணம் என நம்புகின்றார்கள்.

அமித் ஷாவின் தமிழ்நாட்டு வியூகம்

பாஜகவின் திட்டங்களுள் முதலாவது திமுகவை தேர்தலில் வெற்றியடையாமல் செய்ய வேண்டும். இரண்டாவது அண்ணா திமுகவை அடுத்துக் கெடுக்க வேண்டும். 2021 தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலில் பாஜகவால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது அமித் ஷாவிற்கு தெரியும். திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட கருணாநிதியின் மூத்த மகனான முக அழகிரியை இரண்டாவது மகன் மு க ஸ்டானிற்கு எதிராக திருப்பவும் அமித் ஷா முயல்கின்றார். திமுகவின் தேர்தல் வெற்றிகளுக்கு காரணமாக இருக்கும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேலைகளை இல்லாமற் செய்ய வேண்டும். திமுகவில் இருந்து சிலரை கட்சி தாவச் செய்ய வேண்டும். இவற்றின் மூலம் திமுகவை வெற்றியடையாமல் தடுக்க வேண்டும். 2026-ம் ஆண்டு அல்லது அதற்கு முன்னர் நடக்க விருக்கும் தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலில் கழகங்களில் இருந்து முக்கிய தலைவர்களைப் பிரித்து பாஜகவுடன் இணைத்தும் பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டு தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றுவது அமித் ஷாவின் வியூகத்தில் முக்கிய இடம் பெறும் என்பதில் ஐயமில்லை. தமிழ்நாட்டிற்கு நவம்பர் 21-ம் திகதி சென்ற அமித் ஷா அங்கு நடந்த அரச விழாவில் திமுகவை வாரிசுக் கட்சி எனச் சாடினார். அதற்கு பதிலடி கொடுத்த திமுக அரச செலவில் நடக்கும் அரச நிகழ்வை கட்சி அரசியல் பரப்புரைக் களமாக உள் துறை அமைச்சர் ஷா பயன்படுத்தினார் என்றது; அண்ணா திமுகவில் உள்ள வாரிசு அரசியல் அமித் ஷாவிற்கு தெரியவில்லையா என்றது; உள்நாட்டு விற்பனை வரியில் தமிழ்நாட்டுக்கு சேரவேண்டிய நிதியை ஏன் பாஜக அரசு வழங்கவில்லை எனக் கேள்வி எழுப்பியது; பாஜகவும் அண்ணா திமுகவும் இணைந்து செய்தவை இந்தி திணிப்பு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு என தனது விவாத த்தை முன் வைத்தது. இரு தரப்பு விவாதங்களைப் பார்க்கும் போது திமுக அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. அமித் ஷா தோல்வியடைந்துள்ளார். அமித் ஷாவால் பாஜகவுடனான அண்ணா திமுக கூட்டணி தொடரும் என்பதை மட்டும் உறுதியாக்க முடிந்தது. அவர்கள் கேட்ட 60 தொகுதிகளுக்கு அண்ணா திமுக உடன்படவில்லை. கடந்த முறை தமிழ்நாட்டுக்கு அமித் ஷா பயணம் செய்த போது துக்ளக் குருமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகள் எதையும் அவர் செய்து முடிக்கவில்லை என்ற சினம் அமித் ஷாவிற்கு இருந்ததாம். செய்திகளில் அடிப்பட்டது ரஜனிகாந்தை அமித்ஷா சந்திக்கவில்லை.

குஜராத்தில் கட்சித் தொண்டனாக இருந்து ஊர் ஊராகச் சென்று பாஜக அரசை அமைத்தது போல் தமிழ்நாட்டில் செய்ய உள்துறை அமைச்சர் அமித ஷாவிற்கு நேரமில்லை. இந்தியா முழுவதும் மட்டுமல்ல கஷ்மீர் எல்லைகளிலும் அவரது கவனம் சிதறிக் கிடக்கின்றது. அதனால் தமிழ்நாட்டை அடுத்த பத்து ஆண்டுகளில் பாஜக கைப்பற்றும் வாய்ப்பு இல்லை.

 அமித் ஷாவால் நடிகர் ரஜனிகாந்தையோ கருணாநிதியின் மகன் அழகிரியையோ சந்திக்க முடியவில்லை. ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் பாஜகவில் இணைந்ததாகவும் தெரியவில்லை.  பாஜகவின் வாக்கு வங்கி சிறிதளவு அதிகரித்திருக்கலாம். ஆனால் அண்ணா திமுகவின் வாக்கு வங்கி அமித் ஷா முன் அதன் தலைவர்கள் குனிந்ததால் குறைந்திருக்கும். வ்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...