அதிகாரமில்லா அதிகாரப் பரவலாக்கம்.
இலங்கையின் மாகாண சபையின் அதிகாரங்கள் பற்றி அன்று நடேசன் சத்தியேந்திராவும் இன்று குமாரவடிவேல் குருபரனும் போதிய அளவு சொல்லிவிட்டார்கள். இது பற்றிக் காண கீழுள்ள இணைப்பில் சொடுக்கவும்:
1. சந்தியேந்திரா
2. குருபரன்
இந்த இணைப்பில் இருப்பவை சட்டம் பற்றியவை என்றாலும் அவற்றை ஒவ்வொரு தமிழ் மகனும் திருப்பி திருப்பி வாசித்தும் திருப்பித் திருப்பிக் கேட்டும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இனி வரும் நாட்களில் அது பெரிதும் உதவியாக இருக்கும்.
ஒரு சட்டத்தில் மூன்று அம்சங்கள் இருக்கின்றன: 1. சட்டவாக்கம், 2. சட்ட அமூலாக்கம், 3. சட்ட வியாக்கியானம்.
இலங்கையில் சட்டவாக்க அதிகாரம் இலங்கைப் பாராளமன்றத்திடமும், சட்ட அமூலாக்கம் குடியரசுத் தலைவரிடமும், சட்ட வியாக்கியானம் நீதித் துறையிடமும் இருக்கின்றன.
மாகாணசபைச் சட்டவாக்கம் எப்படி நடந்தது?
1977இல் ஜே. ஆர் ஜயவர்த்தன தலைமையில் வந்த ஐக்கிய தேசியக் கட்சி சிங்கப்பூர் போல இலங்கையை சிறந்த நாடாக முன்னேற்றுகிறேன் பேர்வழி என்று தீவிர அமெரிக்க ஆதரவாளராக உருவெடுத்தார். திருகோணமலைத் துறைமுகத்தையும் சிலாபத்தையும் அமெரிக்காவிற்குத் தாரைவார்க்கத் தயாரானார். இதனால் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி கடும் ஆத்திரம் அடைந்தார். அவர் தமிழர்களின் இலங்கை அரசுக்கு எதிரான படைக்கலப் போராட்டத்தை தீவிரப்படுத்தி இலங்கை அரசின் மீது கடும் அழுத்தத்தைப் பிரயோகித்தார். எண்பதுகளில் இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடுவதாக இருபதிற்கு மேற்பட்ட இயக்கங்கள் செய்ற்பட்டன. அவற்றில் சில தமிழ்த்திரைப் படங்களின் பெயரால் அழைக்கப்பட்டதுண்டு. விடுதலை புலிகள் இயக்கத்தை அலைகள் ஓய்வதில்லை என்ற பெயரால் அழைப்பார்கள். ஒயாமல் இலங்கை இராணுவத்தின்மீது தாக்குதல் நடாத்துவதால் இப்பெயர். புளொட் இயக்கத்தை விடியும் வரை காத்திரு என்று அழைப்பர். இலங்கை இராணுவத்தின் மீது வெறுமனே அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தாக்குதல் நடாத்தாமல் தக்க தருணம் வரும்போது தாக்கவேண்டும் என்று கூறுயதால் இந்தப் பெயர். ரெலொ இயக்கத்தை தூறல் நின்று போச்சு என்று அழைப்பர். சில தாக்குதல்களை இலங்கை இராணுவத்தின் மீது நடாத்திவிட்டு பின்னர் எதுவும் செய்யாததால் இப்பெயர். இவைதவிர தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம், ஈரோஸ், தமிழீழ விடுதலைப் படை போன்றவை இராணுவத்தின் மீது தாக்குதல்கள் நடாத்துவதுண்டு. ஈரோஸ் இலங்கையின் பொருளாதரத்தின் மீது பாதிப்பு ஏற்படுத்துவதில் அதிக அக்கறை காட்டியது. ஆக மொத்தத்தில் இவைஎல்லாம் இலங்கை அரசிற்குப் பாரிய தலையிடியாகவே இருந்தன. இந்த இயக்கங்களால் இலங்கையின் எப்பாகத்திலும் தாக்குதல் நடாத்தமுடியும். விடுதலைப் புலிகள் விக்டர் தலைமையில் அநுராதபுரத்தில் நாடாத்திய தாக்குதல் முழு இலங்கையையும் படு அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இப்படியான ஒரு சூழ்நிலையில்தான் 13வது அரசியல் திருத்த சட்டமும் மாகாணசபைச் சட்டமும் இலங்கைப் பாராளமன்றில் நிறை வேற்றப் பட்டது. இதற்குச் சிங்களமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த போது இலங்கை அரசு உழங்கு வானூர்தியில் இருந்து சிங்களவர்கள் மீது தாக்குதல் நடாத்தியது. ஆளும் கட்சி பாராளமன்ற உறுப்பினர்களின் திகதி இடப்படாத பதவி விலகல் கடிதம் அப்போது அதிபர் ஜே ஆர் ஜெயவர்தனேயின் கையில் இருந்தது. சிங்கள மக்களின் விருப்பத்திற்கு மாறாகவே இந்த இரு சட்டங்களும் இயற்றப்பட்டன. இந்த இரு சட்டங்களையும் தமிழர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழர்களை இந்தியா கடுமையாக மிரட்டி சம்மதிக்க வைத்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கொல்லப் போவதாகவும் இந்தியா மிரட்டியது.
சட்ட அமூலாக்கம்
13வது திருத்தத்தையும் மாகாண சபைச் சட்டத்தையும் 26 ஆண்டுகள் நிறைவேற்றாமல் இழுத்தடித்தது. மாகாண சபை என்பது ஒரு மாடு என்றால் அதன் மூக்கணாங்கயிறாக மாகாண ஆளுனரும் அந்த மூக்கணாங் கயிற்றைப் பிடிப்பவராக இலங்கைக் குடியரசுத் தலைவர் இருப்பார். மாடு எவ்வளவு தூரம் மேயலாம் என்பதையும் எதை மேயலாம் என்பதையும் குடியரசுத் தலைவர் தீர்மானிப்பார். தேவை ஏற்படின் மாட்டை கட்டியும் போடலாம். அது மட்டுமல்ல தேவை ஏற்படின் மாட்டை இறைச்சிக்கு விற்று விடவும் முடியும். அதாவது 13வது திருத்தம், மாகாண சபைச் சட்டத்தையும் இலங்கை பாராளமன்றம் இரத்துச் செய்யலாம்.
சட்ட வியாக்கியானம்
உச்ச நீதிமன்ற நீதியரசர் சரத் என் சில்வா 13வது திருத்தத்தின் படி வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைத்தது பிழையானது என்ற வியாக்கியானத்தை வழங்கினார். இது தமிழர்களின் தாயகக் கோட்பாட்டிற்கு விழுந்த முதலாவது அடி. 2013-09-26-ம் திகதியான தியாகி திலீபனின் நினைவு நாளில் மகாண சபைக்கு அரச காணிகளுக்கான அதிகாரம் இல்லை என்ற வியாக்கியானத்தை இலங்கை உச்ச நீதி மன்ற நீதியரசர் வழங்கினார். இலங்கை அரசமைப்பின் 18வது திருத்தத்தின் பின்னர் நீதித் துறை இலங்கை குடியரசுத் தலைவரின் அதிகார வரம்புக்குள் வந்து விட்டது எனப்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 18வது திருத்தத்தின் படி:
- The President can seek re-election any number of times;
- The ten-member Constitutional Council has been replaced with a five-member Parliamentary Council;
- Independent commissions are brought under the authority of the President; and,
- It enables the President to attend Parliament once in three months and entitles him to all the privileges, immunities and powers of a Member of Parliament other than the entitlement to vote. In short, it is all about arming the President with absolute power.
இப்போது வட மாகாண சபைக்கு என்று ஒரு பணிமனை கூடக் கிடையாது. அது இனி எங்கே கூடப் போகிறது? அது நிறை வேற்றப் போகும் நடவடிக்கைகளை சிங்கள ஆட்சியாளர்கள் எப்படி அனுமதிக்கப் போகிறார்கள் என்பதைப் பற்றி இனி நாங்கள் பார்க்கலாம். இனி நிறைய முரண்பாடுகள் இழுபறிகள் முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையில் வரப் போகிறது. அதில் யாருக்கு வெற்றி கிடைக்கப்ப் போகிறது என்பதை நாம் பார்க்கலாம். இந்த முரண்பாடுகள் தொடர்பாக நீதித் துறையிடம் முதலமைச்சர் செல்லும் போது நீதித் துறை எப்படியான வியாக்கியானங்களைச் செய்யும் என்பதையும் இனி நாம் பார்க்கலாம். சத்தியேந்திராவும் குருபரனும் சொன்னவற்றின் உண்மைத் தன்மையை இனி நாம் நடை முறையில் காண நிறைய சந்தர்ப்பங்கள் வரும்.