Saturday, 25 September 2021

BITCOIN: சீனத் தலையிடி நுண்மிய நாணயங்களுக்கு பேரிடி

 


சீனா 2021 செப்டம்பர் 24-ம் திகதி தனது நாட்டில் பிட்கொயின் (Bitcoin) என பரவலாக அறியப்படும் நுண்மிய நாணயங்களை (Cryptocurrencies) உருவாக்குதலையும் (Mining) அதன் மூலம் கொடுப்பனவுகள் செய்வதையும் தடை செய்துள்ளது. உலகிலேயே அதிக அளவு நுண்மியநாணயங்கள் சீனாவில் உருவாக்கப்பட்டு புழக்கத்தில் இருந்தன. இதனால் சீனா விதித்த தடையின் பின்னர் நுண்மிய நாணயங்களின் பெறுமதி விழ்ச்சியடைந்துள்ளது. சீனாவின் முன்னணி மெய்ப்பேட்டை (Real Estate) நிறுவனமான Evergrande நிதி நெருக்கடியைச் சந்தித்த தலையிடிக்கு நடுவில் சீன அரசு நுண்மிய நணயங்களுக்கு தடை விதித்தது அவற்றிற்கு பேரிடியாக அமைந்துள்ளது. Evergrandeஇன் நிதி நெருக்கடியால் உலகெங்கும் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்தன. பொதுவாக பங்குச் சந்தைகள் வீழ்ச்சியைக் காணும் போது பிட்கொயின் உட்பட எல்லா நுண்மிய நாணயங்களும் பெறுமானச் சரிவைச் சந்தித்துள்ளன.

நுண்மிய நாணயங்களின் வரலாறு

2008-ம் ஆண்டு Satoshi Nakamoto என்ற புனைபெயரின் பின்னால் இருக்கும் ஒரு நபர் அல்லது பல நபர்கள் நுண்மிய நாணயத்திற்கான(Cryptocurrency) தமது வெள்ளை அறிக்கையைச் சமர்பித்தனர். தமது நாணயத்தின் மூலம் செய்யப்படும் கொடுப்பனவுகளுக்கு நடுத்தரகர், இடையில் கட்டணம் அறவிடுவோர் என யாரும் இருக்க மாட்டார்கள். அதனால் கட்டணமின்றி கொடுப்பனவுகளைச் செய்ய முடியும் என அவர்கள் தமது அறிக்கையில் குறிப்பிட்டனர். அவர்களே 2009இல் பிட்கொயின் (Bitcoin) எனப்படும் முதலாவது நுண்மிய நாணயத்தை அறிமுகப்படுத்தினர். அதைத் தொடர்ந்து பல நுண்மிய நாணயங்கள் உருவாக்கப்பட்டாலும் நுண்மியநாணயம் என்றால் பிட்கொயின் என்பது போன்றும் பிட்கொயின் என்றால் நுண்மிய நாணயம் என்பது போன்றும் தோற்றப்பாடு உள்ளது. நுண்மிய நாணயம் என்பது நடுவண் வங்கியில்லா நாணயமாகும். 2008-ம் ஆண்டு ஏற்பட்ட உலக நிதி நெருக்கடியின் போது டொலருக்கு ஏற்பட்ட சோதனை எல்லா உலக நாணயங்களையும் பாதித்தது. இந்த நெருக்கடியின் விளைவாகவே நுண்மியநாணயங்கள் உருவாகின.

விழுந்த டொலரும் எழுந்த நுண்மிய நாணயங்களும்

அமெரிக்க டொலரின் பெறுமதி கேள்விக்குறியான நிலையில் நுண்மியமிய நாணயங்களில் (Cryptocurrency) பெருமளவு முதலீடு செய்யப்படுகின்றது. உலகெங்கும் பல நுண்மியமிய நாணயங்கள் இருக்கின்றன. அவற்றில் முதன்மையானதும் அதிகம் பேசப்படுவதும் பிட்கொயின்(Bitcoin) ஆகும். 2020-ம் ஆண்டு பின்கொயினின் பெறுமதி 13%இற்கு மேல் அதிகரித்துள்ளது. அதேவேளை அமெரிக்க டொலர் சுட்டியின் மதிப்பு 9% வீழ்ச்சியடைந்துள்ளது.

BLOCKCHAIN என்னும் தொடர்பதிவேடுகள்


நுண்மிய நாணயங்கள் என்பது வெறும் எண்மியக் குறியீடுகள்(Digital Codes) மட்டுமே. அவை பெறுமதியுள்ள சொத்துக்கள் போல் விற்கப்படுவதும் வாங்கப்படுவதும் நடைமுறையில் உள்ளன. மற்ற சொத்துக்கள் போல் அவற்றின் பெறுமதியும் ஏறுவதும் உண்டு இறங்குவதும் உண்டு. Blockchain எனப்படும் தொடர்பதிவேட்டு தொழில்நுட்பம் மூலம் அவற்றின் கணக்குகள் பேணப்படுகின்றன. தொடர்பதிவேட்டு தொழில்நுட்பம் பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் அதன் பாவனையாளர்களுக்கு வழங்குகின்றது என்கின்றனர் அதை உருவாக்கியவர்கள். அந்த பதிவேடுகளைப் பராமரிக்கும் கணினித் தொகுதிகள் பெருமளவு மின்சாரத்தை பயன்படுத்துவதால் அது சூழலை மாசுபடுத்துகின்றது எனக் குற்றம் சாட்டப்படுகின்றது.

நம்பிக்கையே நாணயம்

ஊழல் செய்வோர், போதைப்பொருள் விற்பனை செய்வோர், வரிஏய்ப்புச் செய்வோர், பயங்கரவாதிகள், கப்பம் கேட்போர் போன்றவர்களுக்கு நுண்மிய நாணயம் சிறந்த புகலிடமாக அமையும் என உலகின் பல அரசுகள் அச்சம் தெரிவித்தன. நாம் அன்றாடம் பாவிக்கும் காசு எனப்படும் நாணயங்கள் நடுவண் வங்கிகளால் வெளியிடப்படுபவை. நடுவண் வங்கிகள் மீதும் அவற்றின் பின்னால் உள்ள அரசுகள் மீதும் வைத்துள்ள நம்பிக்கையே நாணயங்கள் உலகெங்கும் புழக்கத்தில் இருப்பதற்கு காரணமா அமைகின்றது. அந்த நம்பிக்கை கடந்த சில நூற்றாண்டுகளாக கட்டியெழுப்பப்பட்டவை. நுண்மிய நாணயங்கள் (Cryptocurrencies) தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களை அகற்றி அவற்றின் இடத்தை தாம் பிடிப்பதற்கு இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும் என்பதுதான். ஏற்கனவே இணையவெளியில் நடக்கும் ஊடுருவல்கள், ஊழல்கள், திருட்டுக்கள் போன்றவற்றால் மக்களுக்கு அதன் மீது பெரும் அவநம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருக்கின்றது. அதே போல் தற்போது புழக்கத்தில் உள்ள நாணயத்தாள்களைப் போலியாக அச்சிடுவதும் உண்டு. கடன் அட்டை, வங்கி அட்டை, கைப்பேசிச் செயலிகள் மூலமாகச் செய்யப்படும் கொடுப்பனவுகளுக்கு அந்த அட்டைகளையும் செயலிகளையும் வழங்கும் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வர்த்தக நிறுவங்களிடமிருந்து கட்டணங்களை அறவிடும்.

பரிசோதனியில் ஈடுபட்ட JP MORGAN

JP MORGAN என்னும் நிதி நிறுவனம் Etherumஎன்னும் நுண்மிய நாணயம் பாவிக்கும் etherum technologyயை 2016-ம் ஆண்டில் இருந்து பரிசோதனைக்காக பவித்து வருகின்றது. இதற்காக அது டென்மார்க்கைச் சேர்ந்த தனியாருக்கு சொந்தமான செய்மதியையும் பாவித்துள்ளது. பாதுகாப்பன கொடுப்பனவுகளுக்காக இணையவெளிப் பதிவேடுகளையும் அது உருவாக்கியது. அந்த இணையவெளி தொடர்பதிவேடுகள் blockchain என அழைக்கப்ப்டுகின்றன. JP MORGAN அந்த தொடர்பதிவேட்டு தொழில்நுட்பத்தை Consensys என்ற நிறுவனத்திற்கு விற்பனை செய்தது.

Teslaவின் ஏற்பும் மறுப்பும் பிட்கொயினின் ஏற்றமும் இறக்கமும்

Tesla என்னும் தானியங்கி கார் உற்பத்தி நிறுவனம் ஒன்றரை பில்லியன் டொலர்களுக்கு பிட்கொயின் (Bitcoin) என்னும் நுண்மிய நாணத்தை 2021 பெப்ரவரியில் வாங்கிய பின்னர் அதன் பெறுமதி பெருமளவில் அதிகரித்தது. ஒரு அலகு பிட்கொயின் $64,000களுக்கு இணயானது. தனது கார்களை வாங்க பிட்கொயின் மூலம் கொடுப்பனவைச் செய்யலாம் எனவும் Tesla அறிவித்தது. மூன்று மாதங்கள் கழித்து Tesla தனது நிலைப்பாட்டில் இருந்து பின் வாங்கியது. Teslaஇன் பின்வாங்கலால் மற்ற நுண்மிய நாணயங்களான Ethereum, Binance Coin, Dogecoin, XRP, Litecoin ஆகிய நுண்மிய நாணயங்களின் பெறுமதியும் பெருமளவில் வீழ்ச்சியடைந்தன. Tesla உரிமையாளரின் ஒரு டுவிட்டர் பதிவு பல மில்லியன் இழப்பீட்டை ஏற்படுத்தியது.

பொய்ச்செய்தியால் எழுந்த விழுந்த Litecoin

2021-09-13 திங்கட் கிழமை Global Newswire என்ற ஓர் ஊடகம் Walmart என்ற அமெரிக்க நிறுவனம் Litecoin என்ற நுண்நாணயத்தின் மூலம் தங்கள் வாடிக்கையாளர்கள் கொடுப்பனவைச் செய்யலாம் என்ற செய்தியைத் தவறுதலாக வெளியிட்டிருந்தது. அதனால் Litecoinஇன் பெறுமதி அதிகரித்தது. பின்னர் அரை மணித்தியாலத்தில் பெறுமதி வீழ்ச்சியடைந்தது.

எல் சல்வடோரின் பரிசோதனை

அமெரிக்காவின் டொலரையே தனது நாணயமாக கடந்த இருபது ஆண்டுகளாக வைத்திருக்கும் எல் சல்வடோர் நாடு அமெரிக்க டொலருடன் பிட்கொயின் என்னும் நுண்மிய நாணயத்தையும் ஏற்றுக்கொள்ளும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. அத்துடன் அதைப் பாவிப்பவர்களுக்கு $30 ஊக்கத்தொகையையும் வழங்கியது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பிட்கொயினை வாங்கி விற்பனை செய்யும் போது ஈட்டும் இலாபத்திற்கு எல் சல்வடோரில் வருமான வரி விதிவிலக்கும் வழங்கப்பட்டுள்ளது. எல் சல்வடோரின் தேசிய வருமானத்தில் இருபது விழுக்காடு வெளிநாடுகள்ல் வாழும் எல் சல்வடோரியர்கள் அனுப்பும் பணத்தில் இருந்து பெறப்படுகின்றது. அப்படி அனுப்ப்ப்படும் பணத்திற்கு வங்கிகள் கட்டணம் அறவிடும். அவர்கள் பிட்கொயின் மூலம் அனுப்பும் போது பெருமளவு கட்டணங்களைச் சேமிக்கலாம். ஆனால் பிட்கொயினை அறிமுகப் படுத்துவதில் பல சிக்கல்கள் தோன்றின. ATM Machines மூலம் பிட்கொயின் கணக்கில் உள்ள நிதியில் இருந்து டொலர்களை பெற முடியாமல் அவை செயற்படாமல் இருந்தன. கைப்பேசிகளில் உள்ள Wallets செயலிகளுக்கு நிதி மாற்றம் செய்வதிலும் பல் சிக்கல்கள் இருந்தன. இதனால் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். எல் சல்வடோர் அரசு 280மில்லியன் அமெரிக்க டொலரக்ளை பிட்கொயினில் முதலீடு செய்திருந்தது.  அதை நடைமுறைப்படுத்துவதில் இருந்த சிக்கலால் பிட்கொயினின் பெறுமதி குறைந்து அரசுக்கு மூன்று மில்லியன் டொலர் இழப்பீடு ஏற்பட்டது. எல் சல்வடோரின் மக்கள் தொகையில் அரைப்பங்கிற்கும் குறைவானவர்களே இணையவெளியைப் பாவிக்கும் வசதி கொண்டவர்கள். அங்கு எடுத்த கணக்கெடுப்பின் படி 70விழுக்காடு மக்கள் பிட்கொயின் என்னும் நுண்மிய நாணயத்தின் அறிமுகத்தை எதிர்க்கின்றார்கள். எல் சல்வடோரில் முப்பது விழுக்காட்டினர் மட்டுமே வங்கிக் கணக்கு வைத்திருக்கின்றனர்.

Telsa தூக்கிப் போட்ட, எல் சல்வடோர் தூக்கி நிறுத்திய நுண்மிய நாணயத்தை சீனா மீண்டும் வீழ்த்தியுள்ளது.

Huawei Ms Meng: அசிங்கப்பட்ட நாடுகள்

 


அணுக்குண்டுகளை வைத்திருக்கும் அமெரிக்கா ஈரான் அணுக்குண்டு உற்பத்தி செய்யக் கூடாது என்று உறுதியாக நிற்கின்றது. அமெரிக்காவை அழிப்போம் இஸ்ரேலை ஒழிப்போம் என்ற கோட்பாடுடன் ஈரானிய மதவாத ஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள். இஸ்ரேலின் அரசுறவியல் கைக்கூலி போல அமெரிக்கா செயற்படுகின்றது. 

ஈரான் அணுக்குண்டு உற்பத்திக்கு தேவையான யுரேனியத்தைப் பதப்படுத்துவதாக இரகசியமாக அணுக்குண்டை வைத்திருக்கும் இஸ்ரேல் குற்றம் சாட்டுகின்றது. ஈரான் தனது யுரேனியப் பதப்படுத்தல் அமைதியை இலக்காகக் கொண்டது என்பதுடன் தமக்கு அணுக்குண்டு உற்பத்தி செய்யும் நோக்கம் இல்லை என்கின்றது. ஈரானின் யுரேனியம் பதப்படுத்தும் நிலையங்கள் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணையவெளியூடாக ஊடுருவி தாக்குதல் செய்ததாக குற்றம் சாட்டப்படுகின்றது. அது மட்டுமல்ல ஈரானின் யுரேனியப் பதப்படுத்தலில் சம்பத்தப்பட்டுள்ள விஞானிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அக் கொலகளைச் செய்தது இஸ்ரேலிய உளவுத்துறை என ஈரான் குற்றம் சாட்டுகின்றது.

ஈரானுடன் Huawei கள்ளத் தொடர்பு

ஈரானுக்கு எதிராக பல வர்த்தகத் தடைகளை அமெரிக்கா தன் நட்பு நாடுகளுடன் இணைந்தும் ஐக்கிய நாடுகள் சபையினூடாகவும் தனித்தும் மேற்கொண்டுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் செய்யும் பன்னாட்டு கொடுப்பனவு முறைமையில் இருந்து ஈரான் தடை செய்யப்பட்டுள்ளது. ஈரான் மீதான தடைகளை மீறி சீனாவின் திறன்பேசி, கணினி மற்றும் பல இலத்திரனியல் துறையில் சிறந்து விளங்கும் Huawei நிறுவனம் செயற்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. அமெரிக்காவுடன் குற்றவாளிகளை மாற்றிக் கொள்ளும் உடன்பாடு உள்ள நாடாகிய கனடாவிற்கு Huawei  நிறுவனத்தின் நிதித்துறைக்கு பொறுப்பான Ms Meng Wanzhou சென்றபோது அவரைக் கைது செய்யும் வேண்டுதலை அமெரிக்கா கனடிய நீதித்துறையிடம் 2018-ம் ஆண்டு விடுத்தது. அதன் பேரில் அவர் கனடாவில் கைது செய்யப்பட்டார். அவரை அமெரிக்காவிற்கு கடத்தும் வழக்கு கனடாவில் மூன்று ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கின்றது. மூன்று ஆண்டுகளாக Ms Meng Wanzhou கனடாவில் சிறைக் கைதி போல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கனடாவின் செயலைக் கடுமையாகக் கண்டித்த சீனா தனது நாட்டில் உள்ள இரண்டு கனடியக் குடிமகன்களை உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி கைது செய்து தடுத்து வைத்தது. சீனா பணயக் கைதிகளாக அவர்களை பிடித்து வைத்துள்ளது என அமெரிக்காவும் கனடாவும் குற்றம் சாட்டின. 

முந்திய சீனா சீறிய அமெரிக்கா

இலத்திரனியல் தொடர்பாடலை பல மடங்கு துரித்தப்படுத்தும் 5ஜீ அலைக்கற்றை தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் போட்டி போட்டுக் கொண்டு பல நாடுகளும் ஈடுபட்ட வேளையில் சீனாவின் Huawei அதில் முந்திக் கொண்டது. பல நாடுகளிற்கு அவற்றை விநியோகிக்க தொடங்கியது. சீனாவின் 5ஜீ அலைக்கற்றை உலகெங்கும் பாவிக்கப் பட்டால் உலக ஒழுங்கு குலைக்கப்படும், சீனா உலகெங்கும் உளவு பார்க்கும், சீனா உலகெங்கும் உள்ள விஞ்ஞான தொழில்நுட்ப தகவல்களையும் தொழிற்றுறை இரகசியங்களையும் திருடும், சீனா உலகில் ஆதிக்கம் செலுத்தும் என்ற குற்றச்சாட்டு அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த பல்வேறு பிரிவுகளாலும் அதிகாரிகளாலும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ஆண்டு தோறும் அரை ரில்லியன் டொலர் பெறுமதியான தொழில்நுட்பத் தகவல் திருட்டுக்களை அமெரிக்காவில் இருந்து சீனா செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது. அலைக்கற்றைச் செயற்பாட்டின் மூலம் 4.7மில்லியன் வேலைவாய்ப்பும் 47பில்லியன் வருமானமும் அமெரிக்காவிற்கு கிடைக்கின்றது. சீனாவின் ஹுவாவே (ஹுவாய்) நிறுவனம் தமது தொழில்நுட்பங்களைத் திருடியதாக அமெரிக்காவின் கூகிள், கோல்கொம் ஆகிய நிறுவனங்கள் பகிரங்கக் குற்றச் சாட்டுக்களை முன்வைத்தன.

5ஜீ சீனாவை பொருளாதாரத்தில் உலகின் முதன்மை நாடாக்கும்

தற்போது பல நாடுகளிலும் பாவிக்கப்படும் 4ஜீ (நான்காம் தலைமுறை) என்பது Long Term Evolution (LTE) என்பதாகும். அது அது 3ஜீ இலும் பார்க்க பத்து மடங்கு வேகமாக தகவற் பரிமாற்றம் செய்யக் கூடியது. 5ஜீ அலைக்கற்றை 4ஜீ அலைக்கற்றையிலும் நூறு மடங்கு வேகத்தில் செயற்படக் கூடியது. 4ஜீ தொழில்நுட்பமுள்ள கைப்பேசியில் இரண்டு மணித்தியாலத் திரைப்படத்தை தரவிறக்கம் செய்ய ஏழு நிமிடங்கள் எடுக்கும். 5ஜீ தொழில்நுட்பம் உள்ள கைப்பேசிக்கு 6 செக்கன்கள் மட்டுமே எடுக்கும். கைப்பேசிகளில் மட்டுமல்ல தானாக இயங்கு மகிழூந்துகள், ஆளில்லாப் போர்விமானங்கள் போன்றவற்றிலும் 5ஜீ பாவிக்கப்படும். ஒரு நாட்டில் இருக்கும் மருத்துவர்கள் இன்னொரு நாட்டில் உள்ள நோயாளிகளைப் பரிசோதிப்பதையும் சிகிச்சை செய்வதையும் 5ஜீ தொழில்நுட்பம் மேலும் இலகுவானதாகவும் சிறப்பானதாகவும் மாற்றும். போக்குவரத்து, தொழிற்றுறை உற்பத்தி, வர்த்தகம் போர்முறைமை போன்றவற்றை இலத்திரனியல் மயப்படுத்தும் நான்காம் தொழிற்புரட்சியை 5ஜீ தொழில்நுட்பம் இலகுவாகவும் துரிதமாகவும் சாத்தியமானதாக்கும். கணினிகள் தாமகச் சிந்திந்து செயற்படும் செயற்கை நுண்ணறிவுப் பாவனைக்கும் 5ஜீ தொழில்நுட்பம் வழிவகுக்கும்.

தொழில்நுட்பப் போர்

Semi-conductors எனப்படும் குறைகடத்திகள் Huawei நிறுவனத்திற்கு மிகவும் தேவைப்படுகின்றது. அவற்றை அது அமெரிக்காவிடமிருந்தும் தைவானிடமிருந்தும் இறக்குமதி செய்கின்றது. Huawei நிறுவனத்திற்கு முட்டுக்கட்டை போடவும் சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை தாமதப் படுத்தவும் அமெரிக்கா சீனாவிற்கு Semi-conductorsஐ ஏற்றுமதி செய்வதைத் தடை செய்து சீனாமீது ஒரு தொழில்நுட்ப போரைத் தொடுத்துள்ளது, தனது நட்பு நாடுகளையும் அத்தடையை செய்ய வைத்துள்ளது. Semi-conductorsஐ உருவாக்கும் பொறி ஒன்றை நெதர்லாந்திடமிருந்து சீனா வாங்க முயன்றபோது அமெரிக்கா அதை தடுத்தது. 

குற்றத்தை ஒத்துக்கொண்ட Ms Meng Wanzhou

Huawei நிறுவனத்தின் நிதித்துறைப் பொறுப்பாளரான Ms Meng மெய்நிகர் வெளியில் அமெரிக்க நீதிமன்ற விசாரணையில் பங்கு கொண்டு ஈரானுடன் தனது நிறுவனம் தடைகளை மீறி வர்த்தகம் செய்தமையை ஒப்புக் கொண்டதன் பேரில் அவரை கனடிய நீதிமன்றம் விடுதலை செய்தது. அதே வேளையில் சீனாவில் கைது செய்து வைக்கப்பட்டிருக்கும் இரு கனடியக் குடிமக்களையும் சீனா விடுவித்துள்ளது. அதனால் அமெரிக்கா, கனடா, சீனா ஆகியவற்றிற்கிடையிலேயான இழுபறி இப்போது முடிவுக்கு வந்துள்ளது. 

சீனா பணயக் கைதிகளைப் பிடித்தமைக்கு அமெரிக்கா அடிபணிந்து விட்டது என அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியினர் குற்றம் சுமத்துகின்றனர். முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பைப்போல் ஜோ பைடன் சீன விவகாரத்தில் இறுக்கமாக நிற்காமல் விட்டுக் கொடுக்கின்றார் எனவும் சீனா தொடர்ந்து பணயக் கைதிகளாக பிடிப்பதைச் செய்யும் எனவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் Ms Meng Wanzhouஇன் நான்கு பக்க அறிக்கை Huawei நிறுவனத்திற்கு எதிராக பல சட்ட நடவடிக்கைகளை எடுக்க வழிவகுக்கும் என்கின்றனர் ஜோ பைடனின் ஆதரவாளர்கள். சீனாவிற்கும் அமெரிக்காவிற்கு இடையில் உள்ள பல சட்ட அடிப்படையிலான இழுபறிகளைக் கையாண்ட அமெரிக்க சட்ட அறிஞரான Jerome A. Cohen இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பாதித்துள்ள பல சிக்கல்கள் இனித் தீருவதற்கு வழிவகுக்கும் என்கின்றார். 

Tuesday, 21 September 2021

Money Printing: காசு அச்சிடுதல் என்பது என்ன?

  


இலங்கையின் நடுவண் வங்கியின் ஆளுநராக செப்டம்பர் 16-ம் திகதி (மீண்டும்) பொறுப்பேற்ற நிவாட் கப்ரால் முதல் செய்த வேலை 45.95பில்லியன் ரூபாக்களை அச்சிட்டதுதான். இலங்கை அரசின் திறைசேரிக்கு பணம் தேவைப்படும் போது அது தன் கடன்முறிகளை (Bonds) விற்பனை செய்யும். அரசு கடன் வாங்குவதற்கு கொடுக்கப்பட்ட கௌரமான பெயர்தான் கடன்முறி விற்பனை. கடன்முறிக்கு என ஒரு விலையும் வட்டி விழுக்காடும் கால எல்லையும் உள்ளன. அதை வாங்குபவர் அதிக விலை கொடுத்தும் வாங்காலம் அல்லது குறைந்த விலை கொடுத்தும் வாங்கலாம். முதலீட்டாளர்கள் யாரும் வாங்காத நிலையில் அரசின் கடன் முறிகளை நடுவண் வங்கி (Central Bank) வாங்கும். நடுவண் வங்கி வாங்குவதற்கு கொடுக்க வேண்டிய பணத்தை காசு உருவாக்குதல் மூலம் செய்யும். இதை நாணய அச்சிடுதல் என்பர். கொடுக்க வேண்டிய பணம் முழுவதையும் நடுவண் வங்கி காசாக அச்சடிக்காது. ஒரு பகுதி (3% முதல் 8%) மட்டும் நாணயத் தாள்களாக அச்சிடப்படும். எனையவை நடுவண் வங்கியில் கணக்கு ஏடுகளில் செய்யப்படும் பதிவாக இருக்கும். நடுவண் வங்கியைப் பொறுத்தவரை அரசுக்கு கொடுத்த கடன் என்பது அதன் சொத்தாகவும் அது உருவாக்கிய பணம் கடனாகவும் அமையும்.

விற்க முடியாத கடன் முறி

2021 மார்ச் 30-ம் திகதி இலங்கை 45பில்லியன் ரூபா பெறுமதியான அரசின் கடன் முறிகளை விற்பனைக்கு விட்ட போது 10பில்லியன் ரூபா பெறுமதியான கடன் முறிகளை மட்டும் விற்பனை செய்ய முடிந்தது. பொதுவாக இலங்கை அரசின் கடன் முறிகளில் பெரும்பகுதியை பன்னாட்டு முதலீட்டாளர்கள் வாங்குவாரகள் இலங்கை அரசின் வெளிநாட்டுக் கடனில் 47% வெளிநாட்டு முதலீட்டாளர்களே வாங்குவார்கள். இலங்கை அரசின் கடன் மீளளிப்புத் திறனை கடன் மதிபீடு செய்யும் நிறுவனங்கள் தரம் தாழ்த்திய படியால் கடன் முறிகளை விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் காசு அச்சிடும் சூழல் உருவானது.

பணம் உருவாக்கல் கடன்படுதலாகும்

நடுவண் வங்கி அரச முறிகளை வாங்குவதற்கு தனியார் வங்கிகளுக்கு கடன் கொடுப்பதும் உண்டு. தான் வாங்கிய கடன் முறிகளை விற்பனை செய்வதும் உண்டு. ஒரு நடுவண் வங்கி உருவாக்கும் பணம் அது நாட்டு மக்களிடம் படும் கடனாகும். எனது கையில் இலங்கை காசு ஆயிரம் ரூபா இருந்தால் அது நடுவண் வங்கி எனக்குக் கொடுக்க வேண்டிய கடனாகும்.  நடுவண் வங்கியிடம் இருந்து அரச திறைசேரி பெற்ற கடன் பணத்தை அரசு செலவு செய்யும் போது அது பல்வேறுவழிகளில் பொதுமக்களைச் சென்றடையும். பொதுமக்கள் அப்பணத்தைக் கொண்டு பொருட்களை வாங்கும் போது நாட்டில் உற்பத்தி அதிகரிக்கும். அதனால் அரசுக்கு வரி மூலமாக வருமானம் கிடைக்கும். அச்சடிக்கும் நாணயத்திற்கு ஏற்ப நாட்டில் உற்பத்தி அதிகரிக்காவிடில் விலைவாசி ஏறி நாணயத்தில் பெறுமதி குறையும். 


பணம் உருவாக்கல் விலைவாசியை அதிகரிக்கும்

இலங்கையில் நடுவண் வங்கி உருவாக்கும் மேலதிக பணம் நாட்டு மக்களின் கைகளில் மேலதிக வருமானமாகப் போய் இப்போது சேர்வதில்லை. மாறாக ஏற்கனவே அரசு செய்து கொண்டிருக்கும் கொடுப்பனவுகளை தொடர்ந்து செய்வதற்காக இலங்கை அரசு கடன் படுகின்றது. மக்கள் கைகளில் மேலதிக பணம் சேராத படியால் மேலதிக கொள்வனவு இல்லை. நாட்டில் மேலதிக உற்பத்தி இல்லை. இலங்கை நாணயத்தின் பெறுமதி குறைந்திருப்பதால் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. மக்கள் கைகளுக்கு செல்லும் பணத்தை கொண்டு முன்பு வாங்கியவற்றிலும் பார்க்க குறைந்த அளவு பொருட்களையே மக்கள் வாங்குகின்றனர். பெருந்தொற்று காரணமாக மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப் பட்டுள்ள படியாலும் உரம் மற்றும் கிருமி நாசினி தட்டுப்பாட்டாலும் மக்கள் வாங்கும் உணவின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. விலைவாசி தொடர்ச்சியாக ஏறி அவசிய உணவுப் பொருட்களுக்கு இலங்கை மக்கள் மிக அதிக விலை கொடுக்க வேண்டிய அல்லது வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பண உருவாக்கம் விலைவாசியை அதிகரிக்கின்றது. விலைவாசி அதிகரித்தால் நாணயப் பெறுமதி குறையும். அதை சமாளிக்க நடுவண் வங்கி வட்டி விழுக்காட்டை அதிகரிக்க வேண்டி வரும். பணவீக்கம் அளவுக்கு அதிகமாக இருக்கும் போது நடுவண் வங்கி மேலும் பணத்தை உருவாக்குதலை வயிற்றோட்டத்திற்கு பேதிமருந்து கொடுப்பதற்கு ஒப்பிடுவார்கள்.

அளவுசார் தளர்ச்சி(Quantitative Easing)

நடுவண் வங்கி நாணயத் தாள்களை அச்சிடாமல் இலத்திரனியல் மூலமாக நிதி ஒதுக்கத்தைச் செய்து அதை வர்த்தக வங்கிகளுக்கு வழங்கும். அதைக்கொண்டு திறைசேரியின் கடன் முறிகள் வாங்கப்படும். இதை அளவுசார் தளர்ச்சி(Quantitative Easing) என்பார்கள். இதைச் செய்யும் போது நீண்டகால கடன்களுக்கான வட்டிவிழுக்காடு குறைக்கப்படும்.

அரச பொருளாதார நடவடிக்கை

அரசு உற்பத்தித் துறையில் ஈடுபட்டு மக்கள் கொள்வனவு செய்யக் கூடிய பொருட்களை மேலதிகமாக உற்பத்தி செய்வது ஒரு தீர்வாக அமையலாம். அமெரிக்கா உட்கட்டுமானத்திற்கு இரண்டு ரில்லியன் டொலர்களை ஒதுக்குவதும் அதற்காகத்தான். 2008-ம் ஆண்டு பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்ள அமெரிக்கா அளவுசார் தளர்ச்சி என்னும் (Quantitative Easing) பெயரில் பண உருவாக்கத்தில் ஈடுபட்டது. பெருந்தொற்றுக்குப் பின்னர் பொது முடக்கத்தால் உற்பத்தித்துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பணத்தை மேலதிகமாக உருவாக்கியபோது அமெரிக்காவில் விலைகள் அதிகரித்து பணவீக்கம் ஏற்பட்டது. அதனால் வட்டி விழுக்காடு அதிகரித்தல் அவசியமானது.

கண்காணிக்கப்பட வேண்டிய பணப்புழக்கம்

நடுவண் வங்கி நாட்டில் புழக்கத்தில் உள்ள பணத்தை கண்காணிக்க வேண்டும். நடுவண் வங்கியால் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் முடியும் குறைக்கவும் முடியும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி, விலைவாசி, வட்டி விழுக்காடு ஆகியவறைக் கருத்தில் கொண்டு நடுவண் வங்கி பணப்புழக்கத்தை முடிவு செய்ய வேண்டும். அளவிற்கு மிஞ்சிய பணத்தை உருவாக்கி புழக்கத்தில் விட்டால் விலைவாசி ரில்லியன் விழுக்காடு கணக்கில் ஏறி பணம் செல்லாக்காசாகிவிடும் என்பதற்கு ஜிம்பாப்பேயில் 2008-2009இல் நடந்தவை சிறந்த உதாரணமாகும். அதோபோன்று ஆர்ஜெண்டீனா தொடர்ச்சியாக பல மிகைபணவீக்கத்தைக் கண்டது. வெனிசுவேலா கண்டுகொண்டிருக்கின்றது.

தனித்துவத்தையும் சுதந்திரத்தையும் இழந்த நடுவண் வங்கி

ஒரு பாராளமன்ற உறுப்பினர் இலங்கை நடுவண் வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்றமை நட்ப்பொழுங்கிற்கு மாறானதாகும். மேலும் அவரது நியமனத்துடன் நடுவண் வங்கியின் ஆளுநர் அமைச்சரவைத் தகுதியுள்ள அமைச்சர் ஆக்கப்பட்டுள்ளார். தனித்துவமாக இயங்க வேண்டியதாகக் கருதப்படும் நடுவண் வங்கி இப்போது ஓர் அரச திணைக்களம் ஆகிவிட்டது. இவர் முன்பு இலங்கை நடுவண் வங்கியின் ஆளுநராக இருந்த போது தன் கணக்கியல் புலமையால் கணக்கு விட்டு நமல் ராஜ்பக்சே அமெரிக்கா சென்றபோது அவருக்கு தேவையான ஆடம்பரச் செலவுகளை ஏற்பாடு செய்தவர் எனக் குற்றம் சாட்டப்பட்டவர். இவர் முன்பு ஆளுநராக இருந்த போது முறையற்ற முறையில் நடந்து கொண்டதைச் சுட்டிக்காட்டி இவரது நியமனத்திற்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்ற வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. இவற்றால் இவர் ராஜபக்சே குடும்பத்திற்கு மிகவும் வேண்டப்பட்டவராக திகழ்கின்றார். இவரது செயற்பாடு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் பார்க்க மீண்டும் ராஜபக்சேக்கள் தேர்தலில் வெற்றி பெறுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கும்.

சிலர் இலங்கை வங்குரோத்து அடைந்துவிட்டது என்றும் சிலர் அடையப் போகின்றது என்றும் கூறுகின்றார்கள். பன்னாட்டு நாணய நிதியத்தின் (IMF) இணையத் தளத்தில் “நாடுகள் வங்குரோத்தடைவதில்லை” (Countries Don’t Go Bankrupt) என ஒரு கட்டுரையும் உண்டு. அதற்குக் காரணம் நடுவண் வங்கிகளால் பணத்தை உருவாக்க முடியும் என்பதாகும்.

Monday, 20 September 2021

இலங்கையின் பொருளாதாரப் பிரச்சனைக்கு இந்தியாதான் காரணம்

  


இலங்கையில் பொருளாதாரப் பிரச்சனைக்கு சீனாவின் கடன் பெறிதான் காரணம் என “ஜெய் ஹிந்த்” கும்பல்களின் Youtube Channels கூச்சலிடுகின்றன. ஒரு குறிப்பிட்ட பிரச்சனை பற்றிய பொருளாதாரம் ஆய்வுகளை செய்வதாயின் பொருளியல் கோட்பாடுகள் மேற்கோள் காட்டப்பட வேண்டும், அது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப் படவேண்டும் அல்லது செய்யப்பட்ட ஆய்வுகளில் இருந்து மேற்கோள் காட்டப்படவேண்டும், புள்ளிவிபர ஆதாரங்கள் கொடுக்கப்படவேண்டும். இவற்றில் ஒன்று கூட இல்லாமல் இலங்கைப் பொருளாதாரப் பிரச்சனைக்கு சீனாதான் காரணம், சீனக் கடன் பொறிதான் காரணம் என “ஜெய் ஹிந்த்” நிபுணரகள்(?) குற்றம் சாட்டுகின்றனர். போதாக் குறைக்கு செப்டம்பர் -15 ஜூனியர் விகடன்(பெயரிலும் ஆங்கிலக் கலப்பு) சஞ்சிகையில் ஒரு கட்டுரையும் வெளிவந்துள்ளது. 

ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி பற்றி பொருளியல் சொல்வது:

மொத்த உற்பத்தி=கொள்வனவு+முதலீடு+அரச செலவு+(ஏற்றுமதி-இறக்குமதி)

இங்கு கடன் இல்லை. ஆனால் ஒரு அரசு கடன் பட்டு செலவு செய்யும் போது பொருளாதார உற்பத்தி அதிகரிக்கும். ஆனால் இலங்கை அரசு கடன்பட்டு 30 ஆண்டுகள் போர் செய்தது.

கடனால் பிரச்சனை அல்ல கடன் பட முடியாததால் பிரச்சனை

2021 ஏப்ரல் மாத நிலவரப்படி இலங்கை பட்டுள்ள மொத்தக் கடனில் 47% முதலீட்டுச் சந்தைகளிடமிருந்தும், 9% உலக வங்கியிடமிருந்தும், 22% ஆசிய அபிவிருத்தி வங்கியில் இருந்தும், 10% ஜப்பானிடமிருந்தும், 10% சீனாவிடமிருந்தும், 3% இந்தியாவிடமிருந்தும் பெறப்பட்டுள்ளது. இதில் சீனக் கடன் மட்டும் எப்படி இலங்கைப் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக அமைந்தது? இலங்கையில் பொருளாதாரப் பிரச்சனை பற்றி அல் ஜசீரா தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் இலங்கையின் தற்போதைய நடுவண் வங்கி ஆளுநர் நிவாட் கப்ரால், பொருளாதார நிபுணர் நிஷான் டி மெல், எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஹர்ஷா குணவர்த்தன ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மூவரில் எவரும் இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு சீனாதான் காரணம் எனச் சொல்லவில்லை. நிஷான் டி மெல் இலங்கை 2019இன் இறுதியில் (பொருளாதாரத்தை தூண்டுவதற்காக) பாரிய வரிக்குறைப்பைச் செய்தபடியால் இலங்கையின் கடன் படு திறனை பன்னாட்டு அமைப்புக்கள் தரம் தாழ்த்தின என்றும் அப்படித் தரம் தாழ்த்திய படியால் இலங்கை உலக முதலீட்டுச் சந்தையில் கடன் பெற முடியாமல் போனதால் இலங்கையில் வெளிநாட்டுச் செலவாணித் தட்டுப்பாடு ஏற்பட்டது என்றார். அப்படிப் பார்க்கும் போது கடன் பட்டதால் இலங்கையில் பொருளாதாரப் பிரச்சனை ஏற்படவில்லை, கடன் பட முடியாமல் போனதால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 


 

போரால் சீரழிந்த இலங்கைப் பொருளாதாரம்

அரசு கடன் பட்டு 30 ஆண்டுகளாக உள்நாட்டுப் போரில் ஈடுபட்டது. இந்த உள்நாட்டுப் போரால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி ஒஸ்ரேலியாவின் The University of Queenslandஇன் School of Economics ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையில் இலங்கை உள்நாட்டுப் போர் இலங்கைப் பொருளாதாரத்தில் எதிர் மறையான விளைவை ஏற்படுத்தியது என்று முடிவு செய்துள்ளது.

ஓர் அரசின் வரவிலும் பார்க்க செலவுகள் அதிகரிக்கும் போது அது கடன் படும். இலங்கை அரசின் வரவிலும் பார்க்க செலவுகள் அதிகரிக்கத் தொடங்கியது 1980களின் ஆரம்பத்தில் இருந்துதான். 1970களில் பொருளாதார வளர்ச்சியில் உலகம் பார்த்து வியந்த நாடுகளாக ஹொங் கொங், வட கொரியா, சிங்கப்பூர், தைவான் ஆகிய நாடுகள் இருந்தன. அவற்றைப் பார்த்துத்தான் அப்போதைய சீன அதிபர் Deng Xioaping அமெரிக்காவின் நட்பு நாடுகள் திறந்த பொருளாதாரத்தின் மூலம் பொருளாதார வளர்ச்சியடைவதைச் சுட்டிக் காட்டி சீனாவில் பொருளாதார சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தினார். 1977-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜே ஆர் ஜெயவர்த்தன இலங்கையை ஒரு திறந்த பொருளாதாரமாகவும் அமெரிக்க நட்பு நாடாகவும் மாற்றி இலங்கையும் சிங்கப்பூரைப் போல் முன்னேற்ற முயற்ச்சித்தார். அதற்காக திருக்கோணமலையில் எரிபொருள் மீள் நிரப்பும் வசதியையும் சிலாபத்தில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான Ultra low wave தொடர்பாடல் வசதியையும் கொடுக்க இணங்கினார். இதை விரும்பாத இந்திரா காந்தியின் இந்திய அரசு அப்போது கைத்துப்பாக்கிகளுடனும் கைக்குண்டுகளுடனும் இலங்கை அரசுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருந்த தமிழ் போராளிகளை இந்தியாவிற்கு அழைத்து போர்ப்பயிற்ச்சியும் படைக்கலன்களும் வழங்கினார். இதனால் இலங்கையில் ஓர் உள்நாட்டுப் போர் உருவாகியது. அதற்காக இலங்கை அரசு படைத்துறைக்கு பெருமளவு செலவு செய்தது. இலட்சக் கணக்கானோர் இலங்கைப் படையில் சேர்க்கப்பட்டனர். இலங்கையின் செலவு வரவிலும் பார்க்க பெருமளவு அதிகரிக்கத் தொடங்கியது. (கட்டுரையின் ஆரம்பத்தில் உள்ள வரைபடத்தைப் பார்க்கவும்) போதாக் குறைக்கு 1987இல் இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப்படை தமிழர்களின் ஒரு இலட்சம் வீடுகளை அழித்து இலங்கைக்கு பெரும் இழப்பீடு ஏற்படுத்தியது. இலட்சக் கணக்கானோர் இலங்கையில் இருந்து வெளியேறினர். அதனால் இலங்கையின் மொத்தக் கொள்வனவு குறைந்தது. இலங்கைப் பொருளாதாரம் பெரும் இழப்பீட்டைச் சந்தித்தது. இலங்கை உள்நாட்டுப் போரில் தமிழர்களின் கைகள் ஓங்கியிருந்த நிலையில் தலைமை அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்க தமிழர்களுக்கு ஓர் இடைக்கால தன்னாட்சி அரசைக் கொடுக்க முன்வந்தார். தமிழர்களுக்கு அதிகாரம் கிடைப்பதை பொறுக்க முடியாத இந்தியா ரணிலை சந்திரிக்கா பண்டாரநாயக்கா மூலமாக பதவி நீக்கம் செய்து மஹிந்த ராஜபக்சேயை தலைமை அமைச்சராக்கியது. பின்னர் இந்தியாவும் இணைந்து தமிழர்களின் போராட்ட வலுவை 2009இல் அழித்தது. 2009இல் இலங்கை அரசைக் கடனாளியாகவும் தமிழர்கள் ஒரு கையிறு நிலையையும் இந்தியாதான் உருவாக்கியது.

1980களில் இலங்கையில் அமெரிக்க தலையீடு இருக்கக் கூடாது என்பதற்காக இந்தியா செய்த சதியால்தான் இலங்கையின் கடன்பளு அதிகரித்தது. அதனால் இப்போது இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

“சீனக் கடன் பொறி” என்பது சீனாவின் BELT & ROAD INITIATIVEஐ குழப்ப மேற்கு நாடுக்ள் உருவாக்கிய பதமாகும். அது இப்போது “ஜெய் ஹிந்த்” கும்பல் கொறிக்கும் பொரியாக மாறிவிட்டது. தமிழர்களைப் பொறுத்தவரை தமிழர்களை இனக்கொலை செய்ய மறைமுகமாக உதவி செய்த சீனாவும் நேரடியாக உதவி செய்த இந்தியாவும் அயோச்க்கிய நாடுகளே.

செப்டம்பர் -15 ஜூனியர் விகடன் சஞ்சிகையில் வெளிவந்த. ஈழத்தவர் எழுதிய கட்டுரையில் இந்தியச் சதியை மறைத்தமை கவலைக்குரியது. 

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...