Tuesday, 15 March 2016

சிரியாவில் இருந்து வெளியேறும் இரசியப் படைகள்

சிரியாவில் இருக்கும் பிரதான இரசியப்படையினரை அங்கிருந்து வெளியேறும்படி இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் உத்தரவுட்டுள்ளார்.  2011-ம் ஆண்டில் இருந்து நடந்து கொண்டிருக்கும் சிரிய உள்நாட்டுப் போரில் 2015 செப்டம்பர் மாத இறுதியில் இரசியப் படையினர் சிரியாவில் போய் இறங்கியதால் நிலைமை தலைகீழாக மாறியது. சிரியாவில் ஐ எஸ் அமைப்பின் இஸ்லாமியத் தீவிரவாதத்தை அழிக்க எனச் சென்ற இரசியப் போர் விமானங்கள் அமெரிக்க ஆதரவுப் படைக்குழுக்கள் மீதே அதிக தாக்குதகளைச் செய்தனர் என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப் பட்டது. இரசியா துரிதமாக செய்த படை நகர்வுகளும் படையினருக்குச் செய்த ஆதரவு வழங்குதல்களும் பல படைத்துறை நிபுணர்களை வியப்படைய வைத்தன. 

படைத்தளங்கள் தொடரும்
பனிப்போர்க் காலத்தில் இருந்தே சோவியத் ஒன்றியத்துடன் சிரியா சிறந்த உறவைப் பேணி வந்தது. இரசியாவிற்கு வெளியே இருக்கும் அதன் ஒரே ஒரு கடற்படைத் தளம் சிரியாவிலேயே இருக்கின்றது. 2015-ம் ஆண்டு இரசியா சியா முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியான லதக்கியாவில் ஒரு விமானப் படைத் தளத்தையும் நிறுவியது. இந்த விமானப் படைத் தளம் மூடப்படமாட்டாது எனவும் தெரிய வந்துள்ளது. இரசியப் படையினரின் ஒரு பகுதி மட்டும் வெளியேறுவதால் எந்த நேரமும் இரசியப் படைகள் திரும்பி வர வாய்ப்புண்டு. படை வெளியேற்றத்திற்கான கால அட்டவணை ஏதும் வெளிவிடப்படவில்லை. இரசியாவின் பல்வேறுதரப்பட்ட 70 போர் விமானங்களும் நான்காயிரம் படையினரும் நிலை கொண்டிருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.  அமெரிக்க ஆதரவுக் கிளர்ச்சிக் குழுவான Harakat Nour al-Din al-Zenki இரசியப் படையினரின் வெளியேற்றம் தொடர்பாக தனது ஐயத்தை வெளிவிட்டுள்ளது. ஐ எஸ் போராளிகள் தொடர்ந்தும் வலுவான நிலையில் இருப்பதால் இரசியப் படையினர் சிரியா சென்றதன் முதன்மை நோக்கம் ஐ எஸ்ஸை ஒழிப்பதல்ல எனச் சொல்லலாம். சிரியாவில் ஒத்துக் கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டை இரசியப் படையினர் பலதடவை மீறினார்கள் என்ற குற்றச் சாட்டும் பரவலாக முன்வைக்கப்படுகின்றது.

சிரியாவை விட்டுக் கொடுக்கச் செய்யவா?
இரசிய அதிபர் புட்டீன் படை விலக்கல் தொடர்பான தனது முடிவை சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திடம் தெரிவித்தார். அதற்கு அசாத்தின் பதில் எப்படி இருந்தது என்பது தொடர்பான தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை. இரசியப் படைகளின் பங்களிப்பிற்கு அசாத் நன்றி தெரிவித்தார் என்பது மட்டுமே வெளிவந்துள்ளது. இரசியப் படைகளின் வெளியேற்ற அறிவிப்பு ஜெனிவாவில் சிரியா தொடர்பான பேச்சு வார்த்தையின் மீள் ஆரம்பமாகும் நாளில்  வெளிவந்தது. இவ்   வெளியேற்றம் சிரியப் படைகள் தம்மால் நிலமையைக் கட்டுப்படுத்தக் கூடிய நம்பிக்கையை பெற்று விட்ட நிலையில் நடக்கவில்லை. மாறாக ஜெனிவாப் பேச்சு வார்த்தையில் சிரிய அரசதரப்பினரை விட்டுக் கொடுக்கும் மனப்பாங்குடன் ஈடுபடுத்தச் செய்யும் நோக்கத்துடன் இரசியப் படையினரின் வெளியேற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. அது சரியானதாக இருந்தால் புட்டீனின் படை விலக்கல் முடிவு ஒரு அரசுறவியல் திறன்மிகு நகர்வு (diplomatic master stroke) என்றுதான் சொல்ல வேண்டும்.

சிரியாவால் தொடர்ந்து தாக்குப் பிடிக்க முடியுமா?
சிரியப் படையினர் பல கிளர்ச்சிக் குழுக்களுக்களுக்கு எதிராகப் போராடுவதற்கு ஈரானியப் படைத்துறை நிபுணர்களும் ஹிஸ்புல்லாப் போராளிகளுமே உதவி செய்து கொண்டிருக்கின்றனர். சிரியப் படையினர் பின்னடைவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே இரசியா தனது விமானப் படையை அங்கு அனுப்பியது. தற்போது நடந்து கொண்டிருக்கும் பேச்சு வார்த்தையும் நடைமுறையில் இருக்கும் போர் நிறுத்தமும் முறிவடைந்தால் போர் மூர்க்கத்தனமாக மீண்டும் நடக்கும் போது சிரியப் படைகள் பின்னடைவைச் சந்தித்தால் மீண்டும் இரசிய விமானப் படைகள் சிரியா சென்று தாக்குதல் நடத்தக் கூடிய வகையிலேயே இரசியா ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

புட்டீனின் எண்ணம் நிறைவேறியதா?
புட்டீன் சிரியாவிற்கு இரசியப் படையினரை அனுப்பியதன் முதல் நோக்கம் அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சியை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றுவதே.  இரசிய விமானப் படையினதும் ஈரானியப் படை நிபுணர்களினதும் ஹிஸ்புல்லாப் போராளிகளினதும் ஆதரவுடன் சிரியப் படைகள் 2015 செப்டம்பர் மாதத்தில் இருந்து சில கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களைக் கைப்பற்றினர். உயரமான நிலப்பரப்புகளைச் சிரியப் படைகள் கைப்பற்றியதால் பஷார் அல் அசாத்தின் அரசுக்கு எதிரான கிளர்ச்சிக்கார்கள் தாழ் நிலத்தில் இருந்து தாக்குதல் நடாத்தி அவற்றைக் கைப்பற்றுவது சிரமம். இரசியாவின் ஆதரவுடன் லதக்கியா, அலெப்பே ஆகிய மாகாணங்களில் சில பிரதேசங்கள் அரச படையினரால் கைப்பற்றப்பட்டன. தலைநகர் டமஸ்கஸைச் சூழ உள்ள பிரதேசங்களில் இருந்த பல ஐ எஸ் போராளிகளின் நிலைகள் அழிக்கப்பட்டன. இரசியா அறிவித்த இலக்கு ஐ எஸ் போராளிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதே. இரசியப் படையினர் அப்பாவிகள் வாழும் பகுதிகளில் குண்டுகள் வீசினர் என்ற குற்றச் சாட்டு பரவலாக முன் வைக்கப் பட்டன. சிரியாவில் போரைத் தீவிரமாக்கி அங்கிருந்து அதிக அளவு மக்களை மேற்கு ஐரோப்பிய நாடுகளிற்க்கு தஞ்சக் கோரிக்கைக்கு அனுப்புவது புட்டீனின் கபட நோக்கம் என்றும் கருதப்பட்டது.

விமானத்தை இழந்த இரசியா
ஒரு நாட்டில் விமானத் தாக்குதல்கள் செய்யப்படும் போது ஒலியிலும் வேகமாகச் செல்லக் கூடிய விமானங்கள் எல்லைகளைத் தாண்டி அயல்நாட்டு வான் பிரதேசத்துக்குள் செல்வது நடக்கக் கூடிய ஒன்றே. ஈராக்கில் அமெரிக்கப் படையினர் போர் புரியும் போது ஈரான் வான்பரப்புக்குள் அவ்வப் போது அமெரிக்க விமானங்கள் செல்வதற்கான   அனுமதியை ஈரானிடமிருந்து இரகசியமாக அமெரிக்கா பெற்றிருந்தது. சிரியாவில் படை நடவடிக்கையில் ஈடுபட்ட இரசிய விமானங்கள் இஸ்ரேல் வான்பரப்பினுள்ளும் துருக்கி வான் பரப்பினுள்ளும் பறந்தன. இஸ்ரேலியப்  படையினர் இரசிய விமானத்துடன் தொடர்புகொண்டு எல்லை தாண்டியதை அறிவிக்க இரசிய விமானம் விலகிச் செல்லும். இது ஓர் எழுதாத உடன்பாடாகியது. ஆனால் துருக்கி இரசிய விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியது.

பொருளாதாரப் பிரச்சனை காரணமா?
இரசியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சனை அதன் படைகள் வெளிநாடு ஒன்றில் நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக இல்ல்லை. சிரியாவிற்குப் பெருமவவு இரசியப் படையினரை அனுப்பி அங்கு எல்லாக் கிளர்ச்சிக்காரர்களையும் அழித்து அசாத்தின் ஆட்சியை  நாடு முழுக்க நிறும் நிலையில் இரசியா இல்லை என்பதை சிரியாவில் இரசியாவின் படை நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.

புட்டீனுக்கு இரண்டு வெற்றிகள்
சிரியாவிற்குப் படை அனுப்பியதன் மூலம் இரசியா இன்னும் உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கத்துடன் இருக்கின்றது என்ற செய்தி தெரிவிக்கப் பட்டுள்ளது. சிரியாவில் வேதியியல்(இரசாயன) படைக்கலன்கள் பாவிக்கப்பட்டால் அது செங்கோட்டைத் தாண்டியது போலாகும்; உடனே அமெரிக்கா படை நடவடிக்கைகளில் இறங்கும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சூளுரைத்திருந்தார். அப்படி ஒரு படை நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொள்ளாமல் புட்டீன் தடுத்து விட்டார். இதுவரை காலமும் சிரியாவில் ஒரு கடற்படை வசதியகத்தை மட்டும் வைத்திருந்த இரசியா தற்போது ஒரு விமானப் படைத் தளத்தையும் அங்கு அமைத்துள்ளது.அத்துடன் இரசியாவின் விமான எதிர்ப்பு ஏவுகணை முறைமையான எஸ்-400 சிரியாவில் தொடர்ந்தும் இருக்கும்.

Monday, 14 March 2016

சீன விரிவாக்கத்தை அமெரிக்காவின் ஆசியச் சுழற்ச்சி மையம் தடுக்குமா?

ஒரு புறம் ஐக்கிய அமெரிக்காவும் சீனாவும் இணைந்து வடகொரியாவிற்கு எதிராகக் கடும் பொருளாதாரத் தடை கொண்டு வரும் தீரமானத்தை ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்ற மறுபுறம் அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பலான ஜோன் சீ ஸ்ரென்னிஸ், இரு நாசகாரிக் கப்பல்கள், இரு ஏவுகணை தாங்கிக் கப்பல்கள் ஆகியவை உட்பட ஒரு கட்டளைக் கப்பலையும் தென் சீனக் கடலுக்கு அனுப்பியுள்ளது. இவை ஏற்கனவே தென் சீனக் கடலில் உள்ள அண்டீரம் பே, மொபைல் பே ஆகிய ஏவுகணை தாங்கிக் கப்பல்களுடனும், சுங் ஹுன், ஸ்ரொக்டேல் ஆகிய நாசகாரிக் கப்பல்களுடனும், ஏழாவது கடற்படைப்பிரிவின் மிதக்கும் தலைமையகக் கப்பலுடனும் இணைந்து கொண்டன. இதே வேளை அமெரிக்காவின் படையின் பசுபிக் பிராந்தியத்திற்கான கட்டளைத் தளபதி அட்மிரல் ஹரி ஹரிசன் அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவையின் படைத்துறை உப குழுவின் முன்னர் பேசும் போது கிழக்கு ஆசியாவில் சீனா தனது ஆதிக்கத்தையும் கட்டுப்பாட்டையும் அதிகரிக்க முனைகின்றது என்றார்.

கியூப ஏவுகணை நெருக்கடி போல் ஒரு நெருக்கடி
தென் சீனக் கடலில் நடக்கும் நகர்வுகளைப் பார்க்கும் போது 1962-ம் ஆண்டு இரசியாவும் அமெரிக்காவும் கியூபா ஏவுகணைகள் நெருக்கடியின் போது ஒரு அணுப்படைக்கலப் போரின் விளிம்புவரை சென்றது போல அமெரிக்காவும் சீனாவும் ஒரு போர் மூளும் ஆபத்தை உருவாக்குவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும் போல் இருக்கின்றது. சோவியத் ஒன்றியம் விட்ட தவறைத் தான் விடக்கூடாது என்பதில் சீனா இதுவரை கவனமாக இருந்தது. அமைதியான எழுச்சி என்னும் பெயரில் எந்த ஒரு போரும் தொடுக்காத நாடாக கடந்த ஐம்பது ஆண்டுகளாக இருக்கின்றது. இதனால் சீனா தனது பொருளாதாரத்தை வேகமாக முன்னேற்றியது. ஆனால் எந்த வித களமுனை அனுபவமும் இல்லாத படையினரைக் கொண்ட ஒரு வல்லரசாக இருக்கின்றது.

21-ம் நூற்றாண்டு ஆசியாவினுடையது.
ஆசியாவில் உள்ள பல நாடுகள் 21-ம் நூற்றாண்டின் உலகப் பொருளாதார உற்பத்திக்குப் பெரும் பங்கு ஆற்றப் போகின்றன. அமெரிக்காவிற்கு 21-ம் நூற்றாண்டில்  ஆசியா ஒரு பொருளாதார வாய்ப்பு மிகுந்ததும்  அதே வேளை படைத்துறைச் சவால் மிக்க ஒரு பிராந்தியமாகவும் இருக்கப் போகின்றது.  இதற்கு முக்கிய காரணம் சீனாவின் வளர்ச்சியில் ஐக்கிய அமெரிக்கா தனது வர்த்தக மேம்பாட்டையும் பிராந்திய ஆதிக்கச் சவால்களையும் படைத்துறை அச்சுறுத்தல்களையும் காண்கின்றது. சீனாவுடனான வர்த்தகப் பங்காண்மையை அமெரிக்கா எப்போதும் விரும்புகின்றது. சீனாவின் பொருளாதார வளர்ச்சியும் அதன் படைவலுப் பெருக்கமும் ஆசியப்பிராந்தியத்தில் அமெரிக்காவை ஓரம் கட்டிவிடும் என்ற அச்சத்தில் அமெரிக்காவின் ஆசியச் சுழற்ச்சித் திட்டம் உருவாக்கப்பட்டது.  2000-ம் ஆண்டு அமெரிக்கப் பாதுகாப்புத் துறை வரைந்த இணை நோக்கு-2020 என்னும் திட்டத்தில் சீனாவின் எழுச்சியும் அதன் மூலம் உருவாகவிருக்கும் சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் பற்றி மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் விபரிக்கப் பட்டிருந்தது. முக்கியமாக அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தைத் தக்க வைக்க அமெரிக்கப் படையினரின் முழுக்கவனமும் ஐரோப்பாவில் இருந்து ஆசியாவை நோக்கி நகர்த்தப் படவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 2008-ம் ஆண்டு பதவிக்கு வந்ததில் இருந்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆசியாவின் முக்கியத்துவத்தை அடிக்கடி வலியுறுத்தி வந்தார். அவரது  முதலாம பதவிக்காலத்தில் வெளியுறவுத் துறைச் செயலராக இருந்த ஹிலரி அதிகப் பயணங்களை ஆசிய நாடுகளுக்கே மேற்கொண்டிருந்தார்.  ஆசியான் நாடுகளும் அமெரிக்காவும் 2016 பெப்ரவரி மாதம் கலிபோர்ணியோவில் ஒழுங்கு செய்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

அமெரிக்காவின் மகுடம்
2011-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் 21-ம் நூற்றாண்டிற்கான ஆசியச் சுழற்ச்சி மையத் திட்டத்தை அறிவித்த போது அது அமெரிக்க வெளியுறவுத் துறையின் மகுடமாகத் திகழ்கின்ற போது எனக் கருதப்பட்டது. பின்னர் ஒஸ்ரேலியப் பாராளமன்றத்தில் உரையாற்றும் போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆசியச் சுழற்ச்சி மையத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். அமெரிக்கா பசுபிக் பிராந்தியத்தில் ஒரு வல்லரசாகத் தொடர்ந்து இருக்கும் எனச் சூழுரைத்தும் இருந்தார். அதைத் தொடர்ந்து அமெரிக்கப் படைகள் ஒஸ்ரேலியாவில் தளம் அமைத்தன. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கப் படையினரை வலுவுடன் நிலை கொள்ளச் செய்வது தனது உச்சத் தெரிவு எனவும் அமெரிக்கா கருத்து வெளிவிட்டது.

உலகெங்கும் அமெரிக்கப் படையினர்

உலகெங்கும் 150 நாடுகளில் ஐக்கிய அமெரிக்கப் படையினர் 150,0000 பேர் தளங்கள் அமைத்துத் தங்கியுள்ளனர். ஜப்பானில் 52,000படையினரும், தென் கொரியாவில் 25,000படையினரும் உட்பட கிழக்கு ஆசியாவில் 78,000 அமெரிக்கப் படையினர் நிலை கொண்டுள்ளனர்.  இத்துடன் அமெரிக்கா வியட்னாமுடனும் பிலிப்பைன்ஸுடனும் தனது படைத்துறை ஒத்துழைப்பை மிக வேகமாக அதிகரித்து வருகின்றது. உலகிலேயே அமெரிக்காவை அதிக அளவு நம்பும் மக்களாக தென் கொரியர்களும், பிலிப்பைன்ஸியரும் வியட்னாமியரும் இருக்கின்றார்கள்

படைவலுவை அதிகரிக்கும் ஒஸ்ரேலியா
சீனாவுடன் தன் வர்த்தகத்தில் பெரும்பகுதியைச் செய்யும் ஒஸ்ரேலீயா சீனா விரிவாக்கம் தனக்கு அச்சுறுத்தல் எனக் கருதி  தனது படைவலுவை அதிகரிக்கவிருக்கின்றது. 2016 பெப்ரவரி மாத இறுதியில் ஒஸ்ரேலிய அரசு தயாரித்த பாதுகாப்பு வெள்ளை அறிக்கையில் தனது பாதுகாப்புச் செலவை அடுத்த பத்து ஆண்டுகளில் 42பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதாகத் தெரிவித்துள்ளது. 2020-ம் ஆண்டு ஒஸ்ரேலியப் பாதுகப்புச் செலவு அதன் மொத்தத் தேசிய உற்பத்தியின் இரண்டு விழுக்காடாக அதிகர்ப்பதாகவும் அவ்வறிக்கை ட்தெரிவிக்கின்றது. புதிய போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், கவசவாகனங்கள் போன்றவற்றையும் ஒஸ்ரேலியா வாங்கவிருக்கின்றது. சீன விரிவாக்க அச்சுறுத்தல் ஒரு படைக்கலப் போட்டியை ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உருவாக்கியுள்ளது. அதில் இலாபமடையப் போகின்றவர்கள் அமெரிக்காவின் படைக்கல விற்பனையாளர்களே.

சீனாவின் அயலுறவுகள்
வட கொரியா, இரசியா, மொங்கோலிய, கிரிகிஸ்த்தான், தஜிகிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தான், பாக்கிஸ்த்தான், இந்தியா, நேப்பாளம், பூட்டான். மியன்மார், லாவோஸ், வியட்னாம் ஆகிய நாடுகளுடன் சீனா எல்லைகளைக் கொண்டுள்ளது. சீனாவுடன் இந்தியா நீண்ட காலமாக எல்லைப் பிரச்சனையைக் கொண்டுள்ளது.  இதனால் 1962-ம் ஆண்டு இரு நாடுகளும் போர் புரிந்து கொண்டன. இரு நாடுகளுக்கும் இடையில் மூன்று துண்டுகளாக 4057கிலோ மீட்டர் நீளமான எல்லை உண்டு. முதலாவது துண்டு இந்தியாவின் ஜம்மு கஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை ஒட்டி உள்ளது. இரண்டாவட்து துண்டு சீக்கிம் மாநிலத்தை ஒட்டி உள்ளது. மூன்றாவது துண்டு அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டி உள்ளது. சீனாவிற்கும் ஜப்பானிற்கும் நேரடி எல்லைகள் இல்லாத போதும் சீனாவும் ஜப்பானும் கிழக்குச் சீனக் கடலில் உள்ள தீவுகளின் உடைமை தொடர்பாக கடுமையான முரண்பாடுகின்றன. இதனால் ஜப்பான் அமெரிக்காவுடனான தனது படைத் துறை ஒத்துழைப்பை மேம்படுத்திக் கொண்டே இருக்கின்றது.

சீனாவும் இரசியாவும்
போல்ரிக் கடலின் கிழக்குக் கரை ஓரத்தில் ஒரு சிறிய ஐரோப்பிய நாடாக இருந்த இரசியா 1581-ம் ஆண்டில் இருந்து கிழக்கு நோக்கிய தவது விரிவாக்கத்தை ஆரம்பித்தது. சைபிரியாவைக் கைப்பற்றிய இரசியா 1894-ம் ஆண்டும் 1895- ஆண்டும் நடந்த சீனாவிற்கும் ஜப்பானிற்கும் இடையிலான போரைப் பயன்படுத்தி மத்திய ஆசியாவைத் தனதாக்கிக் கொண்டது. பிரித்தானியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடந்த அபின் போரின் போது இரசியா சீனாவுடன் செய்த ஐகன் உடன்படிக்கியின் படி ஸ்ரனொவோய் மலைகளுக்கும் அமூர் நதிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தை சீனா இரசியாவிற்கு விட்டுக் கொடுக்க்க வேண்டியதாயிற்கு. தற்போது இரசியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் 4,380 கிலோ மீட்டர் நீள எல்லை உண்டு. மத்திய ஆசியாவில் சீனாவிற்கும் இரசியாவிற்கும் இடையில் ஆதிக்கப் போட்டியுண்டு. சீனாவின் தரைவழிப்பட்டுப் பாதைக்கு மத்திய ஆசியா முக்கியமானதாகும். சீனாவின் எல்லைப் புறம் வரை இரசியா தனது விரிவாக்கத்தைத் தொடர்ந்தது. அமெரிக்காவிற்கு எதிரான ஒரு காத்திரமான படைத்துறைக் கூட்டணியை சீனாவாலும் இரசியாவாலும் இதுவரை உருவாக்க முடியவில்லை.

சீன விரிவாக்கம்
சீன பொருளாதார அபிவிருத்தி என்பதும் சீனாவின் விரிவாக்கம் என்பதும் கைக்கோர்த்துக் கொண்டு செல்ல வேண்டியன, செல்லக் கூடியன. சீனா தனது விரிவாக்கத்தை முன்னெடுக்க ஆசிய உள்கட்டுமான முதலீட்டு வங்கியை ஆரம்பித்தது. இதில் அமெரிக்காவின் மரபு நண்பர்களான பிரித்தானியா போன்ற நாடுகள் இணைய விருப்பம் தெரிவித்தன. இந்த வங்கியின் உருவாக்கத்தை தடுக்க அமெரிக்கா முயன்று தோல்வி கண்டது. உலகிலேயே உள்ளகக் கட்டுமான மன்னர்களாக சீனர்கள் இருக்கின்றார்கள். குறைந்த செலவில் பெருந்தெருக்கள், தொடருந்துப் பாதைகள், அதிவிரைவு தொடருந்து வண்டிகள் ஆகியவற்றை உருவாக்குவதில் சீனர்கள் முன்னணியில் இருக்கின்றார்கள். இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியே தன் நாட்டின் உள்ளகக் கட்டுமானத்தை அபிவிருத்தி செய்யத் தேடிச் சென்ற இடம் சீனா. ஆசிய நாடுகள் பலவற்றில் உள்கட்டுமானத்தின் தேவை அதிகமாக இருக்கின்றது. இதில் சீனாவை அமெரிக்காவால் வெல்ல முடியாது. அமெரிக்கா அதிக அக்கறை காட்டாத பிரதேசமாக மத்திய ஆசியா இருக்கின்றது. அங்கு சீனாவிற்கு சவால் விட இரசியா இருக்கின்றது.

ஆதிக்கம்-ஆசியச்சுழற்ச்சி-TPP
அமெரிக்காவின் உலக ஆதிக்ககத்தின் ஒரு பகுதிதான் ஆசியச் சுழற்ச்சி மையம். ஆசியச்  சுழற்ச்சி மையத்தின் பொருளாதாரக் கரம்தான் பசுபிக் தாண்டிய பங்காண்மை (Trans Pacific Partnership - TPP) . உலக வர்த்தக அமைப்பில் (World Trade Organization - WTO) சீனாவும் இந்தியாவும் பிரேசிலும் இணைந்த பின்னர் அதில் அமெரிக்க ஆதிக்கம் சுருங்கத் தொடங்கியது. அமெரிக்கா விரும்பிய படி உலக வர்த்தக உடன்படிக்கைகள் செய்ய முடியாமல் போனதால் அமெரிக்கா பிராந்திய ரீதியில் பொருளாதார  அமைப்புக்களை அமைத்து தனக்கு ஏற்றமாதிரி வர்த்தக உடன்படிக்கைகளை செய்ய எடுத்த முயற்ச்சிகளின் வெற்றியே பசுபிக் தாண்டிய பங்காண்மை, சேவைகளில் வர்த்தக உடன்படிக்கை (Trade in Services Agreement -TiSA) போன்ற ஒப்பந்தங்கள். இந்த இரண்டு உடன்படிக்கைகளின் மூலமும் அமெரிக்கா உலக மொத்தத் தேசிய உற்பத்தியில் 52 விழுக்காடு உற்பத்தி செய்யும் நாடுகளின் சந்தைகளை தனதாக்கிக் கொண்டது. ஆசிய நாடுகளில் சீனாவை ஓரம் கட்டி தனது  வர்த்தகத்தைப்  பெருக்கும் நோக்குடனே பசுபிக் தாண்டிய பங்காண்மை உடன்படிக்கை ஒஸ்ரேலியா, புருணே, தருசலம், கனடா, சிலி, ஜப்பான், மலேசியா, மெக்சிகோ, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர், வியட்னாம் ஆகிய நாடுகளுடன் செய்யப்பட்டது. 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் தனது அரச நிலை பற்றிய அறிக்கையில் அதிபர் பராக் ஒபாமா பசுபிக் தாண்டிய பங்காண்மை பற்றிக் குறிப்பிடும் போது ஆசியாவில் விதிகளை சீனா எழுதுவதில்லை, நாம் எழுத வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

சீனாவை அடக்குவதா வீழ்த்துவதா
மேற்கு நாடுகளுக்கு சவலாக இருந்த சோவியத் ஒன்றியம் 1991இல் வீழ்ச்சியடைந்தது அல்லது வீழ்த்தப் பட்டது. சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த போது உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்படவில்லை. சோவியத் ஒன்றியத்தின் பகுதியாக இருந்த நாடுகளுடனும் அதன் ஆதிக்க வலயத்தில் இருந்த நாடுகளுடனும் மேற்கு நாடுகள் தமது வர்த்தகத்தைப் பெருக்கிக் கொண்டன. ஆனால் சீனாவை மேற்கு நாடுகளால் விழுத்தவும் முடியாது என்பதையும்  விழுத்தவும் கூடாது என்பதையும் மேற்கு நாடுகள் நன்கறியும். சீனா வீழ்ச்சியடைந்தால் அது உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். சீனா பொருளாதார ரீதியாக வலுவிழந்தும் படைத் துறை ரீதியாக மேலும் வலுப்பெறாமல் செய்வதே ஆசியச் சுழற்ச்சி மையத்தின் நோக்கமாகும்.  நோக்கமாகும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...