Monday 25 January 2021

தணியாத இந்திய சீன முறுகல்

 


சீனா தென் சீனக் கடலை ஒரு துப்பாக்கி வேட்டுக் கூட வெடிக்காமல் ஆக்கிரமித்து அங்கு பல செயற்கை தீவுகளை உருவாக்கியது. அவற்றில் தனது பாரிய படை நிலைகளையும் உருவாக்கியுள்ளது. சீனா தனது சிறிது சிறிதான அணுகுமுறை (Piecemeal approach) நகர்வுகளாலேயே இதைச் சாதித்தது. சீனாவின் நகர்வுகள் சிறியனவாகவும் மிகமிகத் துரிதமாகவும் இருக்கும். இதே நகர்வுகளை இந்திய எல்லையிலும் சீனா செய்து கொண்டிருக்கின்றது.

சிவராத்திரியா வைகுண்ட ஏகாதசியா

இந்திய சீனப் படையினர் 2021 ஜனவர் 24 ஞாயிற்றுக் கிழமை தொடங்கிய தமது பேச்சு வார்த்தையை இரவு துயிலாமால் திங்கள் காலை இரண்டு மணி வரை தொடர்ந்த 16 மணித்தியால மரதன் பேச்சு வார்த்தையை நடத்தினர். சீனா இந்திய எல்லையைத் தாண்டி வருவது; இரு படையினருக்கும் இடையில் முறுகல்கள் கைகலப்புக்கள் கல்லெறிகள் ஏற்படுவது; பின்னர் பேச்சு வார்த்தை, தொடர்ந்து படை விலக்கல்; மீண்டும் சீனப் படைகள் அத்துமீறல். இந்தச் சங்கிலிஹ்ட் தொடர் அடிக்கடி நடக்கும்.

இந்தியாவை சீனா மென்று தின்னும்

2018 பெப்ரவரி மாதம் இந்திய சீன உறவைப் பற்றிய கருத்தறி அவையம் நடத்தி உரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்திய முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன்: 1. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வேறுபாடு அதிகரிக்கும். 2. டொக்லம் முறுகல் போல் பல முறுகல்கள் தொடரும் 3. முறுகல் நிலை அதிகரித்தாலும் போர் நடக்கும் அபாயம் இல்லை. 4. சீன தொடர்ந்து இந்தியாவை சீண்டிக் கொண்டே இருக்கு. 5. இந்திய நிலப்பரப்புகளை சீனா நன்னுதல் தொடரும் ஆகிய கருத்துக்களை முன்வைத்தார். இந்திய நிலப்பரப்புகளை சீனா நன்னும் என்பதை சீனா தொடர்ந்து உண்மையாக்கிக் கொண்டிருக்கின்றது.

அருணாச்சலப் பிரதேசத்தில் பெரிய மென்னுதல்

அருணாச்சல பிரதேசத்தின் நாடாளமன்ற உறுப்பினரும் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியைச் சார்ந்தவருமான தபீர் கௌ சீனா அருணாச்சலப் பிரதேசத்தில் ஐம்பது கிலோ மீட்டர் நீளமான இரட்டை வழிச் சாலையை அமைத்துள்ளது என்றார். இதைத் தொடர்ந்து இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் சீனா ஊடுருவி நூற்றுக்கு மேற்பட்ட வீடுகளைக் கொண்ட ஒரு கிராமத்தை அமைத்துள்ளது என்ற செய்தியும் வெளிவந்தது. அந்த கிராமத்திற்கு வேண்டிய நீர் வழங்கல், மின் வழங்கல் போன்றவையும் செய்யப்பட்டுள்ளன. சீனாவின் இந்த நிர்மாணம் மிகத்துரிதமாக நடந்த படியால் அதை இந்தியாவால் அவதானிக்க முடியவில்லை. ஒரு வாரத்தில் 25,000 சது மீட்டர் மருத்துவமனையை ஒரு வாரத்தில் கட்டி முடித்த சீனாவால் இந்தக் கிராமத்தை ஓரிரு நாட்களில் கட்டி முடிக்க முடியும். 2020 நவம்பரில் பூட்டானிலும் சீனா எல்லையை தாண்டிச் சென்று ஒரு கிராமத்தை நிர்மாணம் செய்திருப்பது செய்மதி மூலம அறியப்பட்டது. சீனா தனது நாட்டு எல்லைக்குள் தனது வறுமை ஒழிப்புத் திட்டத் தின் கிழ் கட்டப்பட்ட வீடுகள் என்கின்றது.



59 ஆண்டுகளாக தொடரும் முறுகல்களும் மோதல்களும்

1962இல் இந்தியாவும் சீனாவும் போர் புரிந்தன. பெரிய நிலப்பரப்பை சீனா கைப்பற்றினாலும் இந்தியாவின் லடாக் பிராந்தியத்தின் வட மேற்கில் உள்ள 38,850 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பைக் கொண்ட அக்சாய் சின் பகுதியை சீனா தனதாக்கிக் கொண்டது. சீனா கைப்பற்றி வைத்திருக்கும் திபெத் பீட பூமிக்கும் சீனாவின் சர்ச்சைக்குரிய மாகாணமான உய்குருக்கும் இடையில் அக்சாய் சின் இருக்கின்றது. இரண்டு மாகாண மக்களும் சீன அரசுக்கு எதிராக இணைந்து கிளர்ச்சி செய்யாமல் இருக்க அக்சாய் சின் சீனாவிற்கு அவசியமானதாகும். 1962இல் இந்தியப் படையினரை சீனா கலங்கடித்த போதும் 1967-ம் ஆண்டு நடந்த மோதலில் சீனா பின்னடைவைச் சந்தித்தது, அப்போது இந்தியாவின் பாதுகாப்பில் இருந்த சிக்கிமின் நாது லா என்னும் இடத்திலும் சோ லா என்னும் இடத்திலும் இந்திய சீனப் படைகள் மோதிக் கொண்டன. இந்த மோதல்களில் சீனா நானூறுக்கு மேர்பட்ட படையினரைப் பலிகொடுத்துப் பின்வாங்கியது. இந்தியாவின் மேஜர் ஹர்பஜான் சிங் இந்த முறியடிப்புப் போரில் முக்கிய பங்கு வகித்து வீரச்சாவடைந்தார். 1987-ம் ஆண்டு சீனா இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்துடனான எல்லையில் சும்தோரோங் சூ பள்ளத்தாக்கில் ஒரு படை நகர்வைச் செய்தது. அப்போதைய இந்தியப் படைத்தளபதி அந்த இடத்தை ஒரு பாரிய படை நகர்வை மிகத் துரிதமாக மேற்கொண்டார். வல்லூறு என்ற குறியீட்டுப் பெயருடைய அந்த நடவடிக்கை சீனா அதிர்ச்சியைக் கொடுத்தது. சும்தோரோங் சூ பள்ளத்தாக்கின் பல உயரமான இடங்களில் இந்தியப் படைகளும் போர்த்தளபாடங்களும் இறக்கப்பட்டு அவை போருக்கு சாதகமான நிலையை எடுத்துக் கொண்டன. இதனால் சீனாவின் முன்னேற்ற முயற்ச்சி கைவிடப்பட்டது. 2013-ம் ஆண்டு கஷ்மீரின் லடாக் பிராந்தியத்தின் டெப்சாங் என்னும் இடத்தில் சீனா படை முகாம் அமைத்த போது ஒரு முறுகல் இரு நாடுகளுக்கும் இடையில் தோன்றி மோதல் தவிர்க்கப்பட்டது. 2017-ம் ஆண்டு இந்தியாவும் சீனாவும் பூட்டானின் டொக்லம் பகுதியில் போரின் விளிம்பு வரை சென்றன. இரு நாட்டுப் படையினரும் கற்களால் எறிந்து கொண்டனர். 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் லடாக் பிரதேசத்தில் இரு நாடுகளும் படைக்கலன்களின்றி மோதிக் கொண்டன. சீனப் படையினர் முட்கம்பி சுற்றிய பொல்லுகளால் இந்தியப் படையினரத் தாக்கினர். இந்தியப் படையினர் சீனப் படையினரை பள்ளத்தாக்குகளில் தள்ளி விழுத்தினர். இதில் இருபது இந்தியப் படையினரும் எண்ணிக்கை அறியப்படாத சீனப் படையினரும் கொல்லப்பட்ட்னர். பின்னர் இந்தியாவில் இருக்கும் திபெத்தியப் போராளிகள் சீனர்கள் மீது தாக்குதல் நடத்தினர். 2021-ம் ஆண்டு அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா நூற்றுக்கு மேற்பட்ட விடுகளைக் கொண்ட கிராமம் ஒன்றை அமைத்த செய்தியுடன் ஆரம்பமானது.

படைவிலக்கலும் தாங்கிச் சீண்டலும்.                                      12-01-2021 சீனா பத்தாயிரம் படையினரை எல்லையில் இருந்து விலக்கி முகாம்களில் தங்க வைத்ததாக செய்திகள் வெளிவந்தன. 15-01-2021 வெள்ளிக் கிழமை நாற்பத்தி ஐந்துக்கும் மேற்பட்ட சீனப் போர்த் தாங்கிகள் இந்தியாவுடனான லடாக் எல்லையை நோக்கி நகர்த்தப் பட்டுள்ளன. இந்தியாவும் தனது தாங்கிப்படையை எல்லையை நோக்கி நகர்த்தியது. இந்தனால் இரு நாட்டு போர்த் தாங்கிகளும் நூறு மீட்டர் இடைவெளியில் நிலை கொண்டது ஓர் ஆபத்தான சூழலை உருவாக்கியது. இரு நாடுகளும் ஐம்பதினாயிரம் படையினரை எல்லையில் வைத்திருப்பது வழக்கம். சீனப் படைவிலக்கல் குளிர்கால நிலைகளைக் கருத்தில் கொண்டு செய்திருக்கலாம். சீனா நிறுத்திய படையினரில் பெரும் பகுதியினர் அந்த சூழலுக்கு புதிதானவர்கள். குளிரான உயர் மலைப்பகுதி. பல சீனப் படையினருக்கு மலை நோய் ஏற்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது. நிலத்தில் இருந்து 4200 மீட்டர் (13780 அடி) உயரத்தில் இந்திய சீன எல்லையில் ஒரு பகுதி உள்ளது. மலைநோயால் திசை தெரியாமல் நகர்ந்த சீனப் படை வீரர் ஒருவர் இந்திய எல்லைக்குள் சென்றபோது அவரை இந்தியப் படையினர் கைது செய்திருந்தனர். பின்னர் அவர் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மலை நோய் (Mountain sickness) கடல் மட்டத் தில் இருந்து 2400மீட்டரிலும் உயரமான இடங்களில் ஏற்பட வாய்ப்புண்டு. தலைசுற்றல், தலையிடி, காய்ச்சல் போன்றவை இதன் அறிகுறிகளாகும். இந்தியாவின் ஓய்வு பெற்ற படைத்தளபது தீபக் சிங்ஹா: சீனப் படைகள் டெம்ஷாங் போன்ற சீன எல்லைப் பகுதிகளில் போதிய அளவு நிலைகொண்டுள்ளன என்கின்றார். இந்தியப் படையினர் நீண்ட கால போட்டி நிலையெடுப்பிற்கு (standoff) தயாராக உள்ளனர் என்றார் இந்தியப் படைத்தளபதி. 2020 டிசம்பரில் சீனா லடாக் எல்லையில் 100 போர் விமானங்களை நிறுத்த அதற்குப் பதிலடியாக இந்தியா 250 விமானங்களை நிறுத்தியது.

தொல்லைகள் எல்லையில் மட்டுமல்ல

கடந்த சில ஆண்டுகளாக சீனாவிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையிலான படைத்துறை ஒத்துழைப்பு இந்தியாவைக் கலவரமடையச் செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இதற்குப் பதிலடியாக இந்தியா சீனாவுடன் சர்ச்சைக்குரிய கடல் மற்றும் தரை எல்லைகளைக் கொண்ட வியட்னாமுடன் தனது படைத்துறை ஒத்துழைப்பை அதிகரிக்கின்றது. டிசம்பர் 2020இல் இந்திய வியட்னாமியப் படைகளுடன் இணைந்து இந்தியக் கடற்படை தென் சீனக் கடலில் PASSAGE EXERCISE என்னும் குறியீட்டுப் பெயருடன் போர் ஒத்திகை செய்தது. சீனா இந்தியாவை குழம்பிய குட்டையின் மீன் பிடிக்க வேண்டாம் என எச்சரித்தது. இந்தியாவின் நீர்மூழ்கி எதிர்ப்பு கோர்வெட் கப்பல் ஐ.என்.எஸ் கில்டான் இந்த பயிற்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான நீர்மூழ்கிக் கப்பலைக் கொண்ட சீனாவிற்கு எதிராக தனது படை வலிமையை அதிகரிக்கும் நிலை இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது. 2021 ஜனவரியில் பாக்கிஸ்த்தானும் சீனாவும் இணைந்து நடத்திய போர்ப்பயிற்ச்சியில் இந்தியாவிடமுள்ள ரஃபேல், எஸ்யூ-30 போன்ற போர்விமானங்களைப் போல் தோற்றமுள்ள போர் விமானங்கள் பாவிக்கப்பட்டன. பாக்கிஸ்த்தானிற்கு பல சீனா போர்த்தாங்கிகளை அனுப்பியுள்ளதுடன் 2020 டிசம்பரில் சீனா முப்பது தாக்குதல் ஆளில்லாவிமானங்களை பாக்கிஸ்த்தானுக்கு விற்பனை செய்தது.



ஏவுகணைப் போட்டி

இதற்கிடையில் இந்தியா இரசியாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை வாங்கினால் துருக்கிக்கு செய்வது போல் பொருளாதாரத் தடை செய்யப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 5.5 பில்லியன் விற்பனை. ஆனால் இந்தியப் படையினர் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை இயக்குவதில் பயிற்ச்சி பெற இரசியா சென்றுள்ளனர். சீனாவின் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை சமாளிக்க இந்தியாவிற்கு எஸ்-400 அவசியம். எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை பாக்கிஸ்த்தானுக்கு எதிராக சிறப்பாகப் பாவிக்கலாம். ஆனால் சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளிடமிருந்து இந்தியாவை எஸ்-400 பாதுகாக்க மாட்டாது. இந்தியாவும் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை விரைவில் பாவனைக்கு கொண்டு வரும்.

இந்தியாவின் கேந்திரோபாய நோக்கங்கள் தெளிவில்லை

இந்தியாவின் காவற் துறை அதிகாரியான என் சி அஸ்த்தானா என்பவர் அணமையில் வெளியிட்ட நூல் ஒன்றில் இந்தியாவிடம் சீனாவையோ பாக்கிஸ்த்தானையோ போரில் வெற்றி கொள்ளக் கூடிய வகையில் தெளிவான கேந்திரோபாய நோக்கங்கள் இல்லை என்றார். நாற்பத்தியெட்டு நூலகளை எழுதிய அஸ்த்தானா சிறந்த படைத்துறை அவதானிப்பாளராகக் கருதப்படுபவர். அவர் இந்திய ஊடகங்கள் பறைசாற்றும் இந்தியப் படைவலிமைக்கும் உண்மை நிலைக்கும் நிறைய வேறுபாடு உண்டு என்கின்றார்.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் வளர்ந்து வரும் தேச வெறி இந்தியாவின் போட்டி நாடுகள் மீதான வன்மத்தை மிகவும் அதிகரித்துள்ளது. ஆனால் இந்தியாவால் பாக்கிஸ்த்தானையும் சீனாவையும் ஒரேயடியாக சமாளிப்பதற்கு வேற்று நாடுகளின் படை உதவி மிக அவசியம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...