Monday, 11 December 2017

டிரம்பை பல முனைகளில் சுற்றி வளைக்கும் முல்லரின் சிறப்பு விசாரணை

2016-ம் ஆண்டு நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலின் போது டிரம்பின் பரப்புரைக் குழுவைச் சேர்ந்த பலர் இரசிய உளவுத் துறையுடன் தொடர்பில் இருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற முன்னரே முன் வைக்கப்பட்டது. டிரம்ப் அதிபராகப் பதவி ஏற்ற போது சட்டமா அதிபராக இருந்த சலி கேற் டிரம்பின் தேர்தல் பரப்புரைக் குழுவில் இருந்த மைக்கேல் ஃபிளைனை அமெரிக்கப் படைத் தளபதியாக நியமிக்க வேண்டாம் எனத் தெரிவித்திருந்தார். மைக்கேல் ஃபிளைன் இரசிய உளவுத்துறையுடன் தொடர்பில் இருந்த படியால் இரசியா அவரை பயமுறுத்தி அமெரிக்கப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கலாம் என்பது சலி கேற்றின் கருத்து. பின்னர் சலி கேற்றை தனது குடிவரவுக் கொள்கைக்கு நீதிமன்றத்தில் ஆதரவு வழங்க மறுத்ததால் டிரம்ப் பதவி நீக்கம் செய்தார். அதிபர் பதவிக் கையளிப்பின் போது மைக்கேல் ஃபிளைன் இரசியாவுடன் தொடர்பு வைத்திருந்தது மட்டுமல்ல துருக்கியிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு துருக்கிக்காக அமெரிக்க பாராளமன்றத்தில் பரப்புரையாளராகச் செயற்பட்டார் என்பதையும் ஒபாமா டிரம்ப்பிடம் தெரிவித்திருதார். 2017 ஜனவரி 6-ம் திகதி அமெரிக்க அதிபர் தேர்தலில் இரசியா தலையிட்டதாக அமெரிக்க உளவுத்துறை கூறியது. அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கான உளவுத்துறை FBI என அழைக்கப்படும். இது அமெரிக்க நீதித்துறையின் கீழ் செயற்படுகின்றது.
குற்றப்பத்திரிகை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தேர்தல் பரப்புரைக் குழுவில் இருந்தவரும் அவர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அவரது அரசில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகக் கடமையாற்றியவருமான மைக்கேல் ஃபிளைன் மீது சுமத்தப் பட்ட குற்றச் சாட்டை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் இரசியா தலையிட்டு தேர்தல் முடிவுகளை மாற்றியமைத்ததா என்பதைப் பற்றி விசாரணை செய்து கொண்டிருக்கும் சிறப்பு விசாரணையாளர் ரொபேர்ட் முல்லர் தான் குற்றப் பத்திரிகையைல் மைக்கேல் ஃபிளனுக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ளார். இவை டிரம்பின் தேர்தலில் பரப்புரை செய்தமை பற்றியும் அவரது தேர்தல் வெற்றி பற்றியும் தேர்தலில் வென்ற பின்னர் அவரது செயலர்களும் (அமைச்சர்களும்) அதிகாரிகளும் நடந்து கொண்ட விதங்கள் பற்றி பல விசாரணைகள் நடக்கின்றன. ரொபேர்ட் முல்லர் டிரம்பின் மீது நம்பிக்கை வைத்துள்ளதும் அவருக்குப் பல கடன்களை வழங்கியதுமான டொயிற்ச் வங்கி தனக்கு தகவல்கள் வழங்கும் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளார். இது டிரம்பிற்கும் அவருடன் இணைந்து செயற்பட்டவர்களுக்கும் ஒரு பேரிடியாக அமைந்துள்ளது. ஏற்கனவே பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராகவும் நீதிமன்ற ஆணையை முல்லர் பெற்றுள்ளார். முல்லர் பல திசைகளிலும் பல முனைகளிலும் தனது விசாரணையைக் கவனமாகவும் ஓர் இறுதித் திட்டத்துடனும் காய்களை நகர்த்துகின்றார் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது. தொடர்ந்து பல வெடிகள் முல்லரால் வெடிக்கப்படவிருகின்றது.
குற்றவாளிகளும் சுற்றவாளிகளும்
ரொபேர்ட் முல்லர் ஏற்கனவே(2017-10-30) டிரம்பினுடைய தேர்தல் பரப்புரைக்குழுவின் தலைவர் போல் மனஃபோர்ட்டிற்கும் தேர்தல் பரப்புரைக் குழுவின் உறுப்பினர் ரிக் கேட்ஸ், அதே குழுவில் வெளியுறவுத் துறை ஆலோசகராக இருந்த ஜோர்ஜ் பப்படொபௌலஸ் (George Papadopoulos) ஆகியோர் மீது குற்றப் பத்திரிகைக்கள் தாக்கல் செய்திருந்தார். அதில் முதல் இருவரும் தாம் சுற்றவாளி எனத் தெரிவிக்க ஜோர்ஜ் பப்படொபௌலஸ் தான் குற்றவாளி என்பதை ஏற்றுக் கொண்டிருந்தார். அந்த வகையில் 2017 டிசம்பர் 6-ம் திகதிவரை ரொபேர்ட் முல்லர் டிரம்ப்பின் தேர்தல் பரப்புரைக் குழுவில் இருந்தவர்களில் நான்கு பேர் மீது குற்றம் சுமத்தி உள்ளர். அதில் இருவர் தாம் சுற்றவாளிகள் எனவும் இருவர் தாம் குற்றவாளிகள் எனவும் தெரிவித்துள்ளனர். இதில் மைக்கே ல் ஃபிளைன் டிரம்பின் அரசில் முக்கிய பதவியான தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பதவி வகித்தவர்.
நிலைமாற்று காலம் என்னும் திருகுதாளக் காலம்
2016 ஜூன் மாதம் டொனால்ட் டிரம்ப் தன்னை அமெரிக்க அதிபர் வேட்பாளராக முறைப்படி அறிவித்தார். 2016 நவம்பர் 8-ம் திகதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தது, டிரம்ப் வெற்றி பெற்ற டிரம்ப் 2016 ஜனவரி 20-ம் திகதி பதவி ஏற்றுக் கொண்டார். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட திகதியில் இருந்து பதவி ஏற்கும் வரையிலான காலம் நிலைமாற்று காலம் என அழைக்கப்படும். அக்காலத்தில் நியமிக்கப்படும் அமைச்சர்களும்( செயலர்கள்) அதிகாரிகளும் நிலைமாற்றுகால அதிகாரிகள் எனப்படும். டிரம்பின் நிலைமாற்றுகாலப் பகுதிக்குப் பொறுப்பாக துணை அதிபர் மைக்கே பென்ஸ் நியமிக்கப்பட்டிருந்தார். அக்காலத்தில் பல நடவடிக்கைக்களை டொனால்ட் டிரம்பின் மகளின் கணவரான ஜரெட் குஷ்ணர் முன்னின்று நடத்தினார். டிரம்பின் மகன் டிரம்ப் ஜூனியரும் தேர்தல் பரப்புரையின் போதும் நிலைமாற்றுக் காலத்தின் போதும் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். பல இரசியர்களுடனும் விக்கிலீக்ஸ் ஜூலியான் அசாஞ்சேயுடனும் அவர் செய்த தொடர்பாடல்கள் பற்றிய விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
மாட்டுப்பட்ட மருமகன்
தேர்தலில் வென்ற பின்னர் 2016 டிசெம்பரில் டிரம்ப் அவர் தனது அரசில் இடம் பெறப் போகின்றவர்களை அறிவித்தார், அந்த நிலைமாற்றுகால நிர்வாகத்தில் மைக்கேல் ஃபிளைன் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக உள்ளடக்கபட்டிருந்தார். மைக்கேல் ஃபிளைன் 2016 டிசம்பரில் அமெரிக்காவிற்கான இரசியத் தூதுவருடன் இரசியாவிற்கு எதிராக உக்ரேன் விவகாரம் தொடர்பாக விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை நீக்குவது பற்றி உரையாடியிருந்தார். அது ஒரு பாரிய சட்ட விரோதமாகும். அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரிகள் தவிர வேறு எந்த அமெரிக்கக் குடிமகனும் அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பாக வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடனோ அல்லது அதிகாரிகளுடனோ கலந்துரையாட முடியாது. 2016 நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் இரசியத் தலையீடு தொடர்பான விசாரணையில் மைக்கேல் ஃபிளைனின் ஏற்படுத்திய திருப்பத்தால் பெரிதும் பாதிக்கப்படப் போபவராக டொனால்ட் டிரம்பில் மருமகன் ஜரெட் குஷ்ணரே கருதப்படுகின்றார். நிலைமாற்றுகால அதிகாரிகளில் அவரே முக்கியமானவராவார். அமெரிக்க அதிபர் தேர்தலில் பின்னர் டிரம்பின் மருமகன் Jared Kushner வாஷிங்டனுக்கான இரசியத்தூதுவரிடம் மொஸ்க்கோவிற்கும் தமக்கும் இடையில் ஒரு தனிப்பட்ட இரகசியமான தொடர்பாடல் முறைமையை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தத் தகவலை அந்தத் தூதுவர் மொஸ்க்கோவில் உள்ள வெளியுறவுத்துறைக்கு தெரிவித்தார். அந்தத் தொடர்பாடல் அமெரிக்க உளவுத்துறையால் ஒற்றுக் கேட்கப்பட்டுள்ளது. மைக்கேல் ஃபிளைனை இரசியாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தும் படி பணித்தவர் மருமகன் குஷ்ணர் எனச் சொல்லப்படுகின்றது. மைக்கேல் ஃபிளைன் அதை தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தா, அது டிர்ம்பிற்கு பெரும் சிக்கலை உருவாக்கலாம். சிறப்பு விசாரணையாளர் ரொபேர்ட் முல்லர் மைக்கே ஃபிளைன் மீது சுமத்த ஒரு நீண்ட குற்றப்படியலை வைத்துள்ளார். அதில் பணச்சலவை, வரி ஏய்ப்பு, பொய்யான வாக்குமூலம் என்பவை அடங்கும். இவை அமெரிக்க அதிபர் தேர்தலில் இரசியத் தலையீட்டுடன் நேரடித் தொடர்புடையவை அல்ல. அமெரிக்க நீதித்துறையில் ஒரு குற்றவாளி இன்னொரு குற்றவாளி செய்த குற்றங்கள் தொடர்பான தகவல்களையும் சாட்சியங்களையும் சமர்ப்பித்தால் அக்குற்றவாளிக்கு எதிரான தண்டனை குறைக்கப்படும். அந்த வகையில் இனி மைக்கேல் ஃபிளைன் ரொபேர்ட் முல்லருக்கு வழங்கவிருக்கும் சாட்சியங்கள் இரசியாவின் தலையீடு தொடர்பாக டிரம்பையும் அவரது மகன் மருமகன் ஆகியோரையும் குற்றவாளிகளாக சட்டத்தின் முன் நிறுத்த வழி வகுக்கலாம்.

ஜேம்ஸ் கொமிஎஃப்பிஐ இயக்குனர் பதவியிலிருந்து நீக்கம்
டிரம்ப் பதவிக்கு வந்த நாளில் இருந்து அமெரிக்க நீதித் துறையையும் அதன் உளவுத் துறையான எஃப்பிஐயையும் நாளொரு அறிக்கையாலும் பொழுதொரு டுவிட்டாலும் தாக்கி வருகின்றார். முன்னால் எஃப்பிஐ இயக்குனர்களான ஜேம்ஸ் கொமியும் ரொபேர்ட் முல்லரும் டிரம்பால் கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கப்படுகின்றனர். அதன் தலைமை இயக்குனரான ஜேம்ஸ் கொமி டிரம்ப் பதவி ஏற்க முன்னரே டிரம்பினது பரப்புரைக்குழுவிற்கும் இரசிய உளவுத் துறைக்கும் தொடர்புகள் இருந்ததா என்பதைப் பற்றி ஆராயத் தொடங்கினார் . மைக்கேல் ஃபிளைன் மீதான குற்றச்சாட்டுக்கள் பல ஊடகங்களில் அடிபட டிரம்ப் மைக்கேல் ஃபிளைனை பதவியில் இருந்து நீக்க வேண்டியதாயிற்று. பின்னர் டிரம்ப் ஜேம்ஸ் கொமியுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு மைக்கேல் ஃபிளைன் நல்லவரென்று சொல்லி அவர் மீதான விசார்னையை  விடும்படி கேட்டுக் கொண்டார்டிரம்பின் அணுகு முறை சரியல்ல எனச் சுட்டிக்காட்டிய ஜேம்ஸ் கொமி நீதித் துறையூடாக தன்னை அணுக வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் ஜேம்ஸ் கொமியை விருந்து அழைத்த டிரம்ப் தன்க்கு எதிராக கொமி எந்த விசாரணையும் செய்யவில்லை என ஒரு பகிரங்க அறிக்கை விடும்படி வேண்டியதுடன் தனக்கு ஆதரவாக செயற்படுவதாக ஒரு உறுதி மொழி வழங்கும் படியும் கேட்டுக் கொண்டார். இவற்றுக்கெல்லாம் ஜேம்ஸ் கொமி மறுத்த நிலையில் டிரம்ப் அவரைப் பதையில் இருந்து நீக்கினார். இது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியது. அதன் விளைவாகவே அமெரிக்க சட்டமா அதிபர் திணைக்களம் சிறப்பு விசாரணையாலராக ரெபேர்ட் முல்லரை நியமிக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. 2001-ம் ஆண்டில் இருந்து 2013 வரை எஃப்பிஐ இயக்குனராக இருந்தவர் ரொபேர்ட் முல்லர். அவரைத் தொடர்ந்து அந்தப் பதவியில் ஜேம்ஸ் கொமி அப்பதவியை வகித்தார். 2017 மே மாதம் நீக்கப்படும் வரை டிரம்பால் பதவி நீக்கம் செய்யப்படும் வரை அவர் அப்பதவியில் இருந்தார். முல்லரும் கொமியும் இடதுசாரித் தன்மை கொண்ட தாராண்மைவாதிகள் எனவும் எஃப்பிஐ அரசியல் மயமாக்கப்பட்டு விட்டது எனவும் அமெரிக்காவின் பழமைவாதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

பதிவி நீக்கமும் மறு தேர்தலும்.
அமெரிக்க அரசியலமைப்பின் படி அதிபரைப் பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணை உரிமை பாராளமன்றத்தின் மூதவைக்கும் பதவி நீக்கும் உரிமை மக்களவைக்கும் உள்ளது. முதலில் பதவி நீக்கம் செய்யும் முன்மொழிவு மக்களவையில் நிறைவேற்றப்பட வேண்டும். பின்னர் மூதவையில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் முன்னர் மக்களவை வழக்காளியாகவும் அதிபர் குற்றம் சுமத்தப்பட்டவராகவும் விசாரணை செய்யப்படும். அதைத் தொடர்ந்து மூதவை வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிபரைக் குற்றவாளியாகக் காணும் போது அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார். துணை அதிபர் பதவி ஏற்பார். ஆனால் டிரம்ப் விவகாரத்தில் தேர்தலின் போது டிரம்பின் பரப்புரையாளர்கள் இரசியாவுடன் இணைந்து தேர்தல் முடிவை தமக்கு சாதகமாக மாற்றினார்கள் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்டால். தேர்தலை செல்லுபடியற்றதாக்கலாம். தேர்தலைச் செல்லுபடையற்றதாக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திடம் இருக்கின்றது. மைக்கேல் ஃபிளைன் தான் குற்றவாளி எனத் தெரிவித்தவுடன் அமெரிக்காவின் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தது. டிரம்ப் பதவி நீக்கம் செய்யபப்பட்டு தேர்தல் செல்லுபடியற்றதாக்கப்பட்டு இடையில் ஒரு தேர்தல் வரலாம் என்ற எதிர்பார்ப்பாலே பங்கு விலைகள் வீழ்ச்சியடைந்தன என்றார்கள் நிதித்துறை ஆய்வாளர்கள். ஆனால் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கு மூதவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்குமா என்பது ஐயத்திற்கு இடமானது. மோசமான பல முறைகேடுகளில் டிரம்ப் ஈடுபட்டார் என்பது அம்பலமானால் மட்டுமே சில குடியரசுக் கட்சி மூதவை உறுப்பினர்கள் மனம் மாறி வாக்களிக்கலாம். குடிவரவிற்கு எதிரான டிரம்பினது நிலைப்பாடும் அவர் பாராளமன்றத்தில் நிறைவேற்றிய வருமான வரிச் சட்டமும் அவரது குடியரசுக் கட்சியினர் மத்தியில் அவரது செல்வாக்கை உயர்த்தியுள்ளன. 

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...