கஜக்ஸ்த்தானில் உருவாகியுள்ள மக்கள் எழுச்சியை அடக்க இரசியா, ஆர்மீனியா, பெலரஸ், கிர்கிஸ்த்தான் ஆகிய நாடுகளில் இருந்து படையினர் அங்கு 2021 ஜனவரி 6-ம் திகதி சென்றுள்ளனர். எரிபொருள் மற்றும் கனிம வளங்கள் நிறைந்த கஜக்ஸ்த்தானில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையால் உலகச் சந்தையில் யுரேனியத்தின் விலை எட்டு விழுக்காட்டால் அதிகரித்துள்ளது. எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளது. உலக யுரேனிய உற்பத்தியில் 40% கஜக்ஸ்த்தானில் செய்யப்படுகின்றது. உலக எரிபொருள் உற்பத்தியில் சவுதி அரேபியா செய்யும் ஆதிக்கத்திலும் பார்க்க நான்கு மடங்கு ஆதிக்கத்தை கஜக்ஸ்த்தான் செய்கின்றது. 140 நாடுகளைக் கொண்ட படைவலிமைப் பட்டியலில் கஜக்ஸ்த்தான் 61-ம் இடத்தில் இருக்கின்றது. தொழில்நுட்ப வளர்ச்சியில் பின் தங்கியுள்ள கஜக்ஸ்த்தான் அதை முன்னேற்ற பெரும் முயற்ச்சி எடுக்கின்றது.
பூகோள
அமைப்பும் வரலாறும்
உலகிலேயெ
தரையால் சூழப்பட்ட நாடுகளில் கஜக்ஸ்த்தான் நிலப்பரப்பில் மிகப் பெரிய நாடாகும். இந்த
மத்திய ஆசிய நாடு கிழக்கில் ஆசிய நாடாகிய சீனாவையும் மேற்கில் கிழக்கு ஐரோப்பாவின்
கஸ்பியன் கடலையும் இரசியாவையும் வடக்கில் இரசியாவையும் தெற்கில் தேர்க்மெனிஸ்த்தான்,
உஸ்பெக்கிஸ்த்தான், கிரிகிஸ்த்தான் ஆகியவற்றையும் தன் எல்லைகளாகக் கொண்டுள்ளது. பத்தொன்பது
மில்லியன் மக்களைக் கொண்ட கஜக்ஸ்த்தானில் 3.5மில்லியன் இரசியர்கள் வாழ்கின்றனர். எட்டாம்
நூற்றாண்டில் பக்தாத் கலிஃபாவின் படையெடுப்பின் பின்னர் அது ஓர் இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையினராகக்
கொண்ட நாடாக மாற்றப்பட்டது. 13-ம் நூற்றாண்டில் நடந்த மங்கோலியப் படையெடுப்பின் பின்னர்
தேர்கிக் இனக்குழுமம் அங்கு குடியேறியது. அது பின்னர் கஜக் என்னும் இனக்குழுமமாக மாற்றம்
பெற்றது.
இரசிய
ஆக்கிரமிப்பு
19-ம்
நூற்றாண்டில் இரசியர்கள் மொங்கோலிய ஆட்சியை அகற்றி கஜக்ஸ்த்தானை ஆக்கிரமித்துக்
கொண்டனர். பின்பு அங்கு பல இரசியர்களும் உக்ரேனியர்களும் குடியேறினர். ஏனைய நடுவண்
ஆசிய நாடுகளில் 90%இற்கும் மேற்பட்டவரகள் இஸ்லாமியர்களாக இருக்கின்ற வேளையில் கஜக்ஸ்த்தானில்
70% இஸ்லாமியர்கள் மட்டுமே வாழ்கின்றனர். 23.1% கிருத்தவர்கள் அங்கு வாழ்கின்றனர்.
1920இல் கஜக்ஸ்த்தான் சோவியத் ஒன்றியத்தில் இணைக்கப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் நூற்றுக்
கணக்கான அணுக்குண்டு பரிசோதனை கஜக்ஸ்த்தானில் செய்யப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின்
ஏவூர்தி (ராக்கெட்) தளமும் அங்கு அமைக்கப்பட்டது. விண்வெளிக்கு முதலில் சோவியத் ஒன்றியம்
மனிதனை அனுப்பிய ஏவூர்தி கஜக்ஸ்த்தானில் இருந்து ஏவப்பட்டது. 1986இல் சோவியத் அதிபர்
மிக்காயில் கோர்பச்சேவ் கஜக்ஸ்த்தானின் பொதுவுடமைக் கட்சியின் தலைவராக இருந்த கஜக்ஸ்த்தானியரை
பதவி நீக்கம் செய்துவிட்டு அந்த ஓர் இரசியரை பதவிக்கு அமர்த்திய போது அங்கு மக்கள்
சோவியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சோவியத்
வீழ்ச்சியும் தனி நாடாகிய கஜக்ஸ்த்தான்
1991இல்
சோவியத் ஒன்றியம் உடைந்த போது கஜக்ஸ்த்தான் ஒரு தனி நாடாகியது. இரசியாவின்
படைத்தளம், ஏவூர்தித் தளம் போன்றவை அங்கு இன்றுவரை உள்ளன. கஜக்ஸ்த்தானின் முதலாவது அதிபராக நர்சுல்த்தான்
நாசர்பாயேவ் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரசியா தலைமையிலான சுதந்திர
நாடுகளின் பொதுநலவாயத்தில் கஜக்ஸ்த்தானும் இணைந்து கொண்டது. 2004-ம் ஆண்டு உருவான இரசியா
தலைமையிலான கூட்டு பாதுகப்பு ஒப்பந்த அமைப்பிலும் கஜக்ஸ்த்தான் இணைந்து கொண்டது. 2001-ம்
ஆண்டு ஷங்காய் ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பிலும் அது இணைந்து கொண்டது. கஜக்ஸ்த்தானின்
மசகு எண்ணெய் இருப்பு உலகில் 11வது இடத்தில் இருக்கின்றது. 80ரில்லியன் கன அடி அளவு
கொண்ட எரிவாயுவும் அங்கு இருக்கின்றது. அத்துடன் குரோமைட், செப்பு, வொல்ஃப்ராம் (Wolfram),
ஈயம், துத்த நாகம், யுரேனியம் ஆகியவை உட்பட பல கனிம வளங்களும் நிறைய உள்ளன. அதனால்
அங்கு தன் ஆதிக்கத்தை செலுத்த சீனா இரகசியமாக பல நகர்வுகளைச் செய்துவருகின்றது. சீனாவின்
தரைவழிப் பட்டுப்பாதைத் திட்டத்தில் கஜக்ஸ்த்தானிற்கு முக்கிய இடமுண்டு. சீனாவின் இஸ்லாமியர்கள்
வாழும் மாகாணமான சிஞ்சியாங்கில் உள்ள பிரச்சனையால் கஜக்ஸ்த்தான் சீனாவிற்கு முக்கியத்துவம்
பெறுகின்றது.
இரசிய
எதிர்ப்பு
சோவியத்
ஒன்றியத்தில் இருந்து பிரிந்த பின்னர் கஜக்ஸ்த்தான் இரசியாவுடன் நல்ல நட்புறவைப் பேணுகின்ற
வேளையில் தமது நாட்டில் இரசிய ஆதிக்கத்தை அகற்றிக் கொண்டிருக்கின்றது. கஜக்ஸ்த்தானில்
இருக்கும் இரசிய ஏவூர்தி தளத்தினால் அங்கு சூழல் மாசுபடுவதாக எதிர்ப்புக் காட்டப்படுகின்றது.
துருக்கி, ஈரான், இரசியா ஆகிய நாடுகள் கலந்து கொள்ளும் சிரிய அமைதிப் பேச்சு வார்த்தை
கஜக்ஸ்த்தான் தலைநகர் நுர் சுல்த்தானில் (அஸ்டானா) நடக்கின்றது. கஜக்ஸ்த்தான் ஒர் இஸ்லாமிய
அரசைக் கொண்ட நாடாக இருக்க வேண்டும் என Hizb ut Tahrir என்னும் ஒரு மதவாத அமைப்பு போராட்டம் நடத்துகின்றது.
எரிபொருள்
விலை ஏற்றம்
கஜக்ஸ்த்தான்
மக்களின் தனிநபர் வருமானம் $24,380 ஆக இருக்கின்றது. இதை இந்தியாவின் தனிநபர் வருமானமான
$6,390 உடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறப்பாக இருக்கின்ற போதிலும் வருமான சமபக்கீட்டின்மை
கஜக்ஸ்த்தானிலும் மோசமாகவே இருக்கின்றது. எரிபொருள் வளம் நிறைந்த கஜக்ஸ்த்தானில் 2022
ஜனவரி 2-ம் திகதி எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக தீவிரமான போராட்டத்தை மக்கள்
ஆரம்பித்தனர். பல அரச சொத்துக்கள் தீயிடப்பட்டன. காவற்றுறயினருக்கு சொந்தமான பல வண்டிகள்
தீக்கிரையாகின. ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகரிலுள்ள விமானநிலையத்தைக் கைப்பற்றினர்.
ஆர்ப்பாட்டம் வெறும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிரானதாக மட்டுமாக அமையாமல் நாட்டின்
எதிர்காலம், சிறந்த மக்களாட்சி ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக இருக்கின்றது. பிராந்திய
தலைவர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பதை விடுத்து தேர்தல் மூலம் மக்களே தேர்ந்தெடுக்க
வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகின்றது.
இரசியாவிற்கு கஜக்ஸ்த்தான் முக்கியம்
நர்சுல்த்தான் நாசர்பாயேவ் தொடரிந்து 28 ஆண்டுகள் கஜக்ஸ்த்தான் அதிபராக இருந்து 2009இல் பதவி விலகிய போதும் நாட்டின் பாதுகாப்புச் சபையின் தலைவராக இருந்து ஆட்சியில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து செலுத்தி வந்தார். 2022 ஜனவரி 5-ம் திகதி நாட்டில் மக்கள் எழுச்சி நடந்து கொண்டிருக்கும் போது அவரை அப்பதவியில் இருந்து அகற்றிய பின்னர் தற்போதைய அதிபர் காசிம் ஜொமாட் தொக்கயேவ் பாதுகாப்புச் சபைத் தலைவரானார். முழு அமைச்சரவையையும் அவர் பதவி நீக்கம் செய்தார். பாதுகாப்புச் சபைத் தலைவராக அவர் செய்த முதல் நகர்வு மக்கள் எழுச்சியை அகற்ற இரசியப் படையினரை நாட்டுக்கு அழைத்தமையே. அழைப்பை மிகத்துரிதமாக ஏற்றுக் கொண்டு புட்டீன் செய்த நகர்வைப் பார்க்கும் போது அது ஏற்கனவே திட்டமிட்டுச் செய்தது போல் இருக்கின்றது. கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த நாடுகள் அமைப்பு படையினர் என்ற முகமூடியுடன் ஆர்மேனியா, பெலரஸ், கிரிகிஸ்த்தான், தஜிகிஸ்த்தான் ஆகிய நாட்டுப் படைகளுடன் இரசியப் படையினர் கஜிக்ஸ்த்தான் கிளர்ச்சியை அடக்கச் சென்றுள்ளனர். கஜக்ஸ்த்தானில் உள்ள பைக்கொனூரில் உள்ள ஏவூர்தித் தளத்தையும் பல்வேறு படைத்தளஙக்ளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இரசியாவிற்கு உண்டு. இரசியத் தேசியவாதிகள் கஜக்ஸ்த்தானின் வட பகுதியை இரசியாவுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். கஜக்ஸ்த்தானின் எரிபொருள் வளத்தில் 40% அதன் வட பிராந்தியத்தில் இருக்கின்றது. கஜக்ஸ்த்தான் ஆட்சியாளர்கள் இரசிய ஆதரவு உள்ளவர்களாக இருப்பதால் அதற்கான அவசியம் ஏற்படவில்லை என்பதால் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் அதைச் செய்யவில்லை. இரசியாவிற்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் உக்ரேனையும் ஜோர்ஜியாவையும் அடக்கும் முயற்ச்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
நிறப்புரட்சியா?
மேற்கு நாடுகளுக்கு எதிரான ஆட்சியாளர்கள் இருக்கும் நாடுகளில் மேற்கு நாடுகளின் ஆதரவுடன் நடக்கும் புரட்சியை நிறப்புரட்சி என இரசியா, சீனா போன்ற நாடுகள் அழைப்பதுண்டு. ஜோர்ஜியாவில் நடந்ததை ரோஸ் புரட்சி எனவும், உக்ரேனில் நடந்ததை ஒரேஞ் (ஆரேஞ்) புரட்சி எனவும் அழைக்கப்பட்டது. தற்போது கஜக்ஸ்த்தானில் நடப்பதையும் ஒரு நிறப்புரட்சி என்கின்றனர். பெலரஸ்ஸில் 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் இரசிய ஆதரவு ஆட்சியாளர் முறைகேடாக வெற்றி பெற்றார் எனச் செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக மேற்கு நாடுகள் செயற்பட்டன. இரசியாவில் இருந்து சென்ற தனியார் படை (கூலிப்படைக்கான கௌரவர் பெயர்) பெலரஸ் சென்று கிளர்ச்சியை அடக்கியதாக குற்றம் சாட்டப்படுகின்றது. கஜக்ஸ்த்தானில் நடக்கும் எழுச்சியும் அடக்கப்படலாம். ஆனால் இலகுவனதாக இருக்காது. தீவிரவான அடக்குமுறை பாவிக்கப்படும் போது கஜக்ஸ்த்தானியர்கள் நடுவே இரசியாமீதான வெறுப்பு அதிகமாகும்.
பனிப்போர்-2?
பனிப்போரில் கிடைத்த வெற்றியை உறுதி செய்ய நேட்டோ நாடுகள் தொடர்ந்து முயற்ச்சி
செய்து கொண்டிருக்கின்றன. பனிப்போரில் ஏற்பட்ட தோல்வியை ஈடு செய்து இரண்டாம் சோவியத்
ஒன்றியத்தை உருவாக்கும் புட்டீனின் முயற்ச்சிக்கு கஜக்ஸ்த்தானில் ஆப்பு வைக்கப்படுவதை
அவர் அனுமதிக்க மாட்டார். கஜக்ஸ்த்தான் மக்கள் எழுச்சி எப்படி தீவிரமடைகின்றது எப்படித்
திசை திருப்பப்படப் போகின்றது, எப்படி அடக்கப்படப் போகின்றது என்பதில் கஜக்ஸ்த்தானின்
எதிர்காலமும் அதை ஒட்டி நிகழும் புவிசார் அரசியல் போட்டியும் அமையப்போகின்றது. பனிப்போர்-2
இரண்டின் ஆரம்பப் புள்ளிகளாக உக்ரேனும் கஜக்ஸ்த்தானும் அமையலாம். கஜக்ஸ்த்தானின் எதிர்க்கட்சிகள் இரசியாவின் ஆதிக்கத்தில் இருந்து தமது நாட்டை மீட்க மேற்கு நாடுகள் உதவ வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
துருக்கி தற்போது கஜக்ஸ்த்தான் ஆட்சியாளர்களுக்கு எதிரான கருத்து எதையும் வெளிவிடவில்லை.
துருக்கி இரசியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால் கஜக்ஸ்த்தான் ஒரு புவிசார் போட்டிக்
களமாக மாறும். உக்ரேனை இரசியா ஆக்கிரமித்தால் கஜக்ஸ்த்தானை இரசியாவிற்கு எதிராக மாற்றும்
முயற்ச்சியில் துருக்கியுடன் மேற்கு நாடுகள் இணையலாம்.
மத்திய ஆசிய நாடுகள் பற்றிய முன்னைய பதிவு: