Tuesday 29 September 2020

மீண்டும் வரும் நோர்வே மாரீசன்

 


இரண்டாயிரமாம் ஆண்டு முதல் நோர்வேயின் இலங்கைக்கான அமைதித் தூதுவர் எனவும் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான அமைதிப் பேச்சு வார்த்தைக்கு அனுசரணையாளர் எனவும் அழைக்கப்படும் எரிக் சொல்ஹெய்ம் மீண்டும் சிங்கள தமிழ் பிரச்சனை தொடர்பாக தொடர்ச்சியாக கருத்துக்களை வெளியிடுகின்றார். கொழும்பில் இருந்து வெளிவரும் டெய்லி மிரர் நாளிதழுக்கு எரிக் சொஹெய்ம் வழங்கிய செவ்வியும் தமிழ் ஆய்வு பயிலகம் நடத்திய வலையரங்கத்தில் அவர் வழங்கிய கருத்துக்களும் நாம் உற்று நோக்கப் பட வேண்டியன.

2001 செப்டம்பர் 11-ம் திகதி நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் உலகில் எந்த ஓர் அரசற்ற அமைப்பும் தமக்கு என படைக்கலன்களையோ படையணிகளையோ வைத்திருக்கக் கூடாது என அமெரிக்கா முடிவெடுத்த பின்னர் இலங்கைக்கான அமைதித் தூதுவராக எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வந்தார். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே ஆகிய நாடுகளைக் கொண்ட இணைத் தலைமை நாடுகள் என ஒரு குழுவும் இலங்கையின் அமைதி முயற்ச்சிக்காக உருவாக்கப் பட்டது.

எரிக் சொல்ஹெய்ம் 2020 செப்டம்பரில் டெய்லி மிரருக்கு வழங்கிய செவ்வியில் தமிழர் தரப்பிலும் சிங்களத்தரப்பிலும் உள்ள தீவிரப்போக்குடையோர் தன்னைக்  கடுமையாக தாக்குவதாக நொந்து கொண்டார். மேலும் அவர் கூறிய முக்கிய கருத்துக்கள்:

·         இரண்டு தரப்பிலும் இருந்த போரை நாடுபவர்களால் தனது சமாதான முயற்ச்சி தோல்வியடைந்தது.

·         விடுதலைப் புலிகள் ஒரு வலிமையான நிலையில் இருந்து கொண்டே அமைதிப் பேச்சு வார்த்தைக்கு உடன்பட்டனர்.

·         அமைதிப் பேச்சு வார்த்தையின் போது விடுதலைப் புலிகள் தம்மை வலிமைப் படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் இலங்கை அரசு தன்னை வலிமைப்படுத்திக் கொண்டது.

·         பாலசிங்கத்தின் ஆலோசனையைக் கேட்கும் வரை பிரபாகரனின் செயற்பாடுகள் ஒழுங்காகவிருந்தன. அவரின் ஆலோசனையைக் கேட்டிருந்தால் தமிழர்களின் தற்போதைய நிலை வேறுவிதமாகவிருக்கும்.

·         சரணடைய வந்தவர்களைக் கொன்றது போர்க்குற்றம்

·         கண்மூடித்தனமான தாக்குதலால் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர்

·         ஆனையிறவை விடுதலைப் புலிகள் கைப்பற்றிய பின்னர் பாக்கிஸ்த்தான் இலங்கைக்கு உதவியது.

·         போரின் இறுதிக் கட்டத்தில் இந்தியா இலங்கைக்கு உதவி செய்தது.

·         இந்தியாவில் இணைப்பாட்சி உள்ளது. அங்கு பல்லின மக்கள் அமைதியாக வன்முறையின்றி வாழ்கின்றார்கள்.

·         இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக பணியாற்றும்படி அழைக்கப்பட்டால் நான் மீண்டும் வருவேன்.

தற்போதைய புவிசார் அரசியல் இயங்கசைவியலில் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் (Future of Eelam Tamils in the current geo-political dynamics) என்னும் தலைப்பில் தமிழ் ஆராய்ச்சி பயிலகம் என்னும் அமைப்பு 2020 செப்டம்பர் 26-ம் திகதி ஒரு வலையரங்க கலந்துரையாடலை நடத்தியது. அதில் பயிலகத்தைச் சார்ந்த அருண்குமார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் அவருடன் எரிக் சொல்ஹெய்ம், வி உருத்திரகுமார், அய்யாநாதன், கிருஷ்ணா ஆகியோரும் கலந்து கொண்டனர். மே-17 இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அருண்குமார் தற்போது அமெரிக்காவில் வசிக்கின்றார். ஈழத்தமிழர்களின் வரலாற்றை சுருக்கமாக விபரித்த அருண்குமார் தற்போதைய புவிசார் அரசியல் நிலை பற்றியோ அல்லது அதன் இயங்கசைவியல் பற்றியோ எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. கலந்துரையாடலில் கலந்து கொண்ட மற்றவர்களும் அதைப்பற்றி விளக்கம் கொடுக்கவில்லை. இலங்கையில் எரிக் சொல்ஹெயம் செய்த அமைதி முயற்ச்சி பற்றியும் அதன் தோல்வி பற்றியும் கலந்துரையாடினார்கள்.

எரிக் சொஹெய்ம் வழமைக்கு மாறாக விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அனடன் பாலசிங்கம் அவர்களை வெகுவாகப் புகழ்ந்து புலிகளின் தலைவர் திரு பிரபாகரன் அவரகள் மீது சேறு பூசுவதில் அதிக நேரம் செலவிட்டார். லக்ஸ்மன் கதிர்காமர் மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரின் கொலை தொடர்பாக கருத்துக்களைத் தெரிவிப்பதில் அதிக கவனம் செலுத்தினார்கள்.

எரிக் சொல்ஹெய்ம் சொல்லிய முக்கிய கருத்துக்கள்:

·         திரு பிரபாகரன் அவர்களுக்கு உலக அரசுறவியல் பற்றிய சரியான அறிவு இல்லை.

·         திரு பாலசிங்கத்தின் ஆலோசனைகளை திரு பிரபாகரன் கேட்காத படியால் அவருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.

·         ராஜீவ் காந்தியை புலிகளே கொன்றதாக திரு பாலசிங்கம் சொல்ஹெய்மிடம் கூறினார்.

·         உலக அரசுகளைப் பற்றி திரு பிரபாகரன் புரிந்து கொள்ளாத படியில் புலிகளின் படைக்கலன் கொள்வனவு தடுக்கப்பட்டது.

·         முழுமையாக வேண்டும் அல்லது ஒன்றுமே வேண்டாம் என்ற திரு பிரபாகரனின் பிழையை தமிழர்கள் விடக்கூடாது.

·         தமிழர்கள் இந்தியாவுடன் இணைந்து செயற்பட வேண்டும்.

·         தமிழர்கள் கூட்டாட்சியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

·         தமிழர்கள் எல்லோர் மீதுக் குற்றம் சுமத்துவதால் எதையும் பெறப்போவதில்லை

·         திரு பிரபாகரன் விட்ட தவறான பன்னாட்டு சமூகத்தின் சொற்களை கேளாமல் விட்டமையை தமிழர்கள் இனிச் செய்யக் கூடாது.

·         தமிழர்கள் ஒற்றுமையாக நின்று காந்திய வழியில் போராட வேண்டும்.

நாடுகடந்த தமிழீழ அரசின் தலைமை அமைச்சர் உருத்திரகுமார் சொன்னவை:

·         ஆரம்பத்தில் விடுதலைப்புலிகள் பல விட்டுக் கொடுப்புக்களைச் செய்தனர்.

·         அமைதிப் பேச்சு வார்த்தைக் காலத்தில் இலங்கை அரசு தனது படைக்கலன்களை அதிகரிக்க அனுமதித்த பன்னாட்டு சமூகம் விடுதலைப் புலிகளின் படைக்கலன் கொள்வனவைத் தடை செய்தது.

·         தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு

·         இலங்கை அரசு தமிழர்களுக்கு எந்த உரிமையையும் கொடுக்க மாட்டாது.

·         அன்னை தெரெசாவே இலங்கை அதிபராக வந்தாலும் தமிழர்களுக்கு இணைப்பாட்சி கொடுக்க மாட்டார்.

·         தமிழர்கள் மத்தியில் பிரிந்து செல்வது பற்றி ஒரு கருத்துக் கணிப்பு எடுக்கப் படவேண்டும்.

அய்யாநாதன் சிங்களவர்களைப் பொறுத்தவரை இணைப்பாட்சி என்பது ஒரு கெட்ட வார்த்தை என்றார். அய்யாநாதன் மிகவும் உணர்ச்சி வசப்பட்டும் கோபம் கொண்டவராகவும் உரையாற்றினார். தமிழர்கள் மற்றவரகள் மீது குற்றம் சாட்டக் கூடாது எனச் சொல்லும் சொல்ஹெய்ம் தொடர்ச்சியாக விடுதலைப் புலிகளையும் தமிழர்களையும் குற்றம் சாட்டுவதை கிருஷ்ணா சுட்டிக் காட்டினார்.

இலங்கையில் அமைதிக்கான நோர்வேயின் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் எந்த ஒரு கட்டத்திலும் இலங்கையில் சிங்களவர்களும் தமிழர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தவில்லை. மாறாக ஈழத் தமிழர்களை இந்தியாவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என அறிவுரை வழங்கினார். அத்துடன் இணைப்பாட்சியை தமிழர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார். . சிங்கள அமைச்சர் ஒருவர் நாம் தமிழர்களுக்கு இணைப்பாட்சி கொடுத்தாலும் அதை இந்தியா அனுமதிக்காது என இலங்கைப் பாராளமன்றத்திலேயே வைத்து திரு சம்பந்தரைப் பார்த்து சொன்னார். தமிழர்கள் காந்தீய வழியில் போராட வேண்டும் என காந்தீய வழியில் போராடிய திலீபனை இந்தியா உதாசீனம் செய்தமையால் இறந்ததை நாம் நினைவு கூர்ந்து கொண்டிருக்கையிலும் அந்த நினைவு கூரலை சிங்களம் தடை செய்யும் வேளையிலும் எரிக் சொல்ஹெய்ம் எமக்கு காந்தீய வழியில் போராடச் சொல்கின்றார். தந்தை செல்வா காந்தீய வழியில் போராடிய போது சிங்களம் தமிழர்கள் மேல் கடைத்தனத்தைக் கட்டவிழ்த்து விட்டதை நாம் மறக்க மாட்டோம். சொல்ஹெய்ம் அமைதியைத் தேடி எம்மிடம் 2000-ம் ஆண்டு வரவில்லை எம்மைத் திசை திருப்பும் மாயமானாகவே வந்தார். 2009 மே மாதம் புலிகள் தமது படைக்கலன்களை மௌனித்த பின்னர் அவர் தன் அமைதி முயற்ச்சியைக் கைவிட்டார். அதன் பின்னர் இணைத் தலைமை நாடுகள் எந்தக் கூட்டத்தையும் நடத்தவில்லை. அவரது MISSION ACCOMPLISHED. ராஜீவ் கொலைபற்றி அழுத்தமாக குறிப்பிட்ட சொல்ஹெய்ம் அவரது அமைதிப்படை செய்த இனக்கொலை பற்றி ஏதும் சொல்லவில்லை. மஹிந்த அரசு ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை மீறி போரை ஆரம்பித்த போது சொல்ஹெய்ம் கண்டனம் ஏதும் தெரிவிக்கவில்லை. அவரும் அதற்கு உடந்தையாக இருந்தாரா? சிங்களைப் படையினரின் ஆனையிறவு முகாமை எதிர்பாராதவிதமாக கைப்பற்றிய விடுதலைப் புலிகள் கட்டுநாயக்கா விமானநிலையத்திலும் தாக்குதல் நடத்தினர். அதனால் இலங்கை படையினரால் புலிகளைத் தோற்கடிக்க முடியாது என உணர்ந்த நாடுகள் சதிமூலம் தோற்கடிக்க அனுப்பிய மாயமான் எரிக் சொல்ஹெய்ம். திரு அண்டன் பாலசிங்கம் அது சொன்னார் இது சொன்னார் என அவர் உயிரோடு இருக்கும் போது சொல்லாதவற்றை இப்போது சொல்கின்றார். நான் சொல்கின்றேன்: என்னிடம் திரு பாலசிங்கம் சொன்னார் எரிக் எனக்கு ஐந்து மில்லியன் டொலர் இலஞ்சம் கொடுத்து தன்னை விடுதலைப்புலிகளுக்கு எதிராக திரும்பும்படி கோரினார் என்று. என்னிடம் தமிழ்ச்செல்வன் சொன்னார் எரிக் சொல்ஹெய்ம் எம்மை அழிக்க வந்திருக்கும் சதிகாரன் என்று.

எரிக் சொல்ஹெய்ம்மின் அமைதி முயற்ச்சி படுதோல்வியடைந்தமைக்கு முக்கிய காரணம்:

1. அவருக்கு தமிழர்கள் தொடர்பான சிங்களவர்களின் மனப்பாங்கு பற்றி ஏதும் அறியாமை

2. இலங்கையைச் சூழவுள்ள புவிசார் அரசியல் நிலைமைகள் பற்றி அவருக்கு புரிதல் இல்லாமை

3. தமிழரகள் மீது இந்தியத் தென்மண்டலத்தில் உள்ள சில பூனூல்கலும் சில மாலியாளிகளும் எந்த அளவிற்கு வஞ்சம் வைத்திருக்கின்றனர் என்பது பற்றி அவருக்கு தெரியாது.

தமிழர்களைச் சூழவுள்ள தற்போதைய புவிசார் அரசியல் இயங்கசைவியல் பற்றி வலையரங்கத்தில் சொல்லாமல் விட்டவை:

·         சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பனிப்போர் உருவாகியுள்ளது

·         சீனா தைவானைக் கைப்பற்ற முயன்றால் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஒரு போர் உருவாகும்.

·         இந்தியா தனது எனச் சொல்லும் நிலப்பரப்புக்களை சீனா கைப்பற்ற முயல்கின்றது.

·         இலங்கையை தனது கேந்திரோபாய நலன்களுக்கு உகந்ததாக மாற்ற அமெரிக்காவும் இந்தியாவும் முயல்கின்றன.

·         தற்போதைய இலங்கை ஆட்சியாளர்கள் அமெரிக்காவிற்கோ இந்தியாவிற்கோ உகந்தவர்களாக இருப்பார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

·         இலங்கை தமது நலன்களுக்கு எதிராக சீனாவுடன் உறவை வளர்த்துக் கொள்ளக் கூடாது என அமெரிக்காவும் இந்தியாவும் கருதுகின்றன.

·         இந்தியப் பேரினவாதம் தனது பிடியை மற்ற மாநில மொழிகளைப் பேசுபவர்கள் மீது இறுக்க தீவிரமாக முயல்கின்றது.

·         ஈழத்தமிழர்கள் முழுமையாக தமது நிகழ்ச்சி நிரலின் கீழ் இருக்க வேண்டும் என அமெரிக்காவும் இந்தியாவும் எதிர்பார்க்கின்றன. அதற்கான முயற்ச்சிகளைத் தீவிரமாக முடுக்கி விட்டுள்ளன என்பதன் அடையாளமே நோர்வேயின் மாயமான் ஆகிய எரிக் சொஹெய்ம் மீளவும் வந்துள்ளார்.

 

மிகவும் சிக்கலான நிலையில் இருக்கும் இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடியில் இருக்கின்றது.  அதை மேம்படுத்துவதற்கான அனுசரணை என்னும் பெயரில் எரிக் சொல்ஹ்ய்ம் இலங்கையில் நுழைய திட்டமிட்டுள்ளார். இலங்கையின் மீன்வளத்தின் மீது நோர்வேயிற்கு எப்போதும் ஒரு கண் உள்ளது. அதற்காக சிங்களவர்களுக்கு நோர்வே மீது இருக்கும் வெறுப்பை இல்லாமல் செய்ய சொல்ஹெய்ம் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் மீது தொடர்ந்து சேறு பூசிக்கொண்டே இருப்பார்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...