Showing posts with label எரிபொருள். Show all posts
Showing posts with label எரிபொருள். Show all posts

Monday, 19 October 2020

பல பிரச்சனைகளுக்கு நடுவில் ஒளிரும் இரசியா

  


இரசிய நடுவண் வங்கி ஒரு மோசமான பொருளாதார சூழ்நிலையின்கீழ் 2021இன் ஆரம்பத்தில் இருந்து 2023இறுதி வரையிலான மூன்றாண்டு காலப்பகுதியில் மசகு ஒரு பீப்பா மசகு எண்ணெய்யின் விலை இருபத்தைந்து டொலர்களாக இருக்கும் என எதிர்வு கூறியுள்ளது. கொவிட்-19 தொற்று நோயின் மோசமான இரண்டாவது அலைத்தாக்குதல், புவிசார் அரசியல் குழப்பங்கள், முன்னணி நாடுகளிடையேயான வர்த்தகப் போர், நாடுகளின் கடன் பிரச்சனை ஆகியவற்றை கருத்தில் கொண்டே இரசிய நடுவண் வங்கி தனது எதிர்வு கூறலைச் செய்துள்ளது. 

பொருளாதார வளரச்சி

மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடைகளாலும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்த எரிபொருள் விலையாலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக பல சவால்களை இரசியப் பொருளாதாரம் எதிர் கொண்ட போதும் பல மேற்கத்தைய பொருளியல் வல்லுனர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக இரசியப் பொருளாதாரம் உறுதியாக இருக்கின்றது. 2013 முதல் 2019வரை இரசியப் பொருளாதாரம் சராசரியாக ஒரு விழுக்காட்டால் வளர்ச்சியடைந்தது. இரசிய நிதியமைச்சர் இரசியாவின் மொத்தப் பொருளாதார உற்பத்தி 2020இல் 4விழுக்காட்டால் வீழ்ச்சியடையும் எனத் தெரித்தார். பன்னாட்டு நாணய நிதியமும் இரசியப் பொருளாதாரம் 2020இல் 4.1விழுக்காட்டால் சுருங்கும் என எதிர்வு கூறியுள்ளது. அதேவேளை 2021இல் 2.8விழுக்காட்டால் வளர்ச்சியடையும் எனவும் அந்த நிதியம் எதிர்வு கூறியுள்ளது. மேலும் அது 2019இல் 4.5 விழுக்காடாக இருந்த இரசியாவின் பணவீக்கம் 2020இல் 3.7 விழுக்காடாகத் தணியும் எனவும் கருதுகின்றது. 2020 ஜூலையில் உலக வங்கி இரசியாவின் பொருளாதாரம் 6விழுக்காட்டால் வீழ்ச்சியடையும் என எதிர்வு கூறிய போது இரசிய நடுவண் வங்கி தனது வட்டி வீதத்தை 4.25 விழுக்காடாகக் குறைந்தது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இது மிகக்குறைந்த வட்டி விழுக்காடாகும். அதன் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களால் இரசியப் பொருளாதர வளர்ச்சி எதிர்பார்ப்பு அதிகரிக்கப்பட்டது.

 

 

மசகு எண்ணெயின் விலை பீப்பா ஒன்றிற்கு முப்பது டொலராகக் குறைந்தாலும் இரசியாவின் பொருளாதாரம் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு தாக்குப் பிடிக்கக் கூடிய அளவிற்கு இரசிய அரச நிதியத்திடம் நிதி இருக்கின்றது அதற்கு முன்னர் இரசிய அரசு அறிவித்திருந்தது. 2020 ஒக்டோபர் 14-ம் திகதி உலகச் சந்தையில் எரிபொருள் விலை 42 டொலராக இருந்தது.

அரச நிதி

2020 ஜனவரியில் இரசிய அதிபர் புட்டீன் இரசிய உட்கட்டுமானங்களிலும் சமூகத் திட்டங்களிலும் நான்கு ரில்லியன் ரூபிள்களைச் செலவு செய்வதாக உறுதியளித்திருந்தார். இரசியப் பொருளாதாரத்தை தூண்டுவதற்கு அது ஏதுவாக அமையும் எனவும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார். ஆனால் அரச நிதியை சமாளிக்க அடிப்படை வருமான வரியை 2021இல் 13விழுக்காட்டில் இருந்து 15 விழுக்காடாக அதிகரிக்க இரசிய அரசு உத்தேசித்துள்ளது. இந்த வரி அதிகரிப்பின் மூலம் இரசிய அரச வருமானம் அறுபது பில்லியன் ரூபிளால் அதிகரிக்கும். இரசியாவின் வருமானவரி விதிப்பு நடுத்தர வர்க்கத்தினரிடமிருந்து பிடுங்கி வறிய மக்களுக்கு உதவிகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. இரசிய அரசின் நிதிப்பற்றாககுறை 2020இல் அதன் மொத்த தேசிய உற்பத்தியின் 4.1விழுக்காடாகவும் 2021இல் 2.4 விழுக்காடாகவும் 2022இல் ஒரு விழுக்காடாகவும் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இரசியாவில் முதலீடுகள்

ஐநாவின் அங்ராட்டின் அறிக்கையின் படி 2019-ம் ஆண்டு இரசியாவில் வெளிநாட்டு முதலிடு 31.7பில்லியன் டொலர்களாகும். இது 2018இன் 13பில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் சிறந்த வளர்ச்சியாகும். ஐக்கிய இராச்சியம், சைப்பிரஸ், லக்சம்பேர்க், நெதர்லாந்து, பஹாமாஸ், அயர்லாந்து, பெர்மூடா ஆகிய நாடுகள் இரசியாவில் முதலீடு செய்வதில் அதிக அக்கறை காட்டுகின்றன. இரசியாவின் கனிம வளம் மற்றும் இணையவெளி போன்றவற்றில் அதிக வெளிநாட்டு முதலீடுகள் செய்யப்படுகின்றன. இரசியாவின் ஆர்க்டிக் எரிபொருள் ஆய்வு மற்றும் உற்பத்தியில் முதலீடு செய்வதற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை மேற்கு நாடுகள் விதித்துள்ளன. இரசிய அரச நிதியமும், இரசிய நேரடி முதலீட்டு நிதியமும் ஐக்கிய அமீரகத்தின் நிதியம் ஒன்றுடன் இணைந்து முகங்களை இனம் காணும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளன. சீன இந்தத்த் துறையில் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளது.

பிராந்தியப் பிரச்சனைகள்

இரசிய அரசு பொருளாதாரத்தில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கையில் இரசியாவிற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பெலரஸில் தேர்தலை எதிர்த்து மக்கள் பெருமளவில் கிளர்ச்சி செய்கின்றனர்; அஜர்பைஜானும் ஆர்மேனியாவும் மோதிக் கொள்கின்றன, கஜகஸ்த்தானில் அரசுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இரசியா முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான பெலரஸ், கஜ்கஸ்த்தான், ஆர்மேனியா, அஜர்பைஜான், கிரிகிஸ்த்தான் ஆகிய நாடுகளை இணைத்து யூரோ ஏசியன் பொருளாதார ஒன்றியம் என்னும் பொருளாதரக் கூட்டமைப்பு ஒன்றை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு போட்டியாக உருவாக்கியுள்ளது. 180மில்லியன் மக்களைக் கொண்ட அந்த பொருளாதாரக் கூட்டமைப்பு மிகப் பெரிய நாடாகிய இரசியாவுடன் பல மிகச் சிறிய நாடுகளை இணைக்க முயல்கின்றது. இவை முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள் என்பது மட்டுமல்ல முதலாம் உலகப் போரிற்கு முன்னர் துருக்கியால் ஆளப்பட்ட நாடுகள். இந்த நாடுகளில் துருக்கியும் தன் ஆதிக்கத்தை செலுத்த முயல்கின்றது. துருக்கியினதும் இரசியாவினதும் போட்டிக்களமாக ஆர்மேனியாவும் அஜர்பைஜானும் தற்போது மாறியுள்ளன.

இரசியாவின் படைக்கல ஏற்றுமதி

அமெரிக்காவிற்கு அடுத்த படியாக அதிக அளவு படைக்கலன்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இரசியா இருக்கின்றது. 2019-ம் ஆண்டு இரசியா 13பில்லியன் டொலர் பெறுமதியான படைக்கலன்களை ஏற்றுமதி செய்திருந்தது. இது 2018இலும் பார்க்க இரண்டு பில்லியன் டொலர் அதிகமாகும். இரசியாவின் படைக்கல ஏற்றுமதி பல சவால்களைச் சந்திக்கின்றது. சீனா தனது உள்நாட்டு படைக்கல உற்பத்தியை அதிகரிக்கின்றது. இந்தியாவும் அதையே செய்வதுடன் அமெரிக்காவிடமிருந்து அதிக படைக்கலன்களை வாங்குகின்றது. கொவிட்-19 தொற்று நோய்த் தாக்கத்தின் பின்னர் உலகில் பல நாடுகள் சிக்கன் நடவடிக்களை 2021-ம் ஆண்டு மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்படும். சிக்கன நடவடிக்கை என வரும் போது பல நாடுகள் தமது படைக்கலன் கொள்வனவை குறைக்கும். இது இரசிய படைக்கலன் ஏற்றுமதியையும் பாதிக்கும்.

இரசியாவின் அரச நிதியம் 2020இன் ஆரம்பத்தில் 124பில்லியன் டொலர்களாக இருந்தது. கொவிட்-19 தொற்று நோயல் ஏற்பட்ட பாதிப்பைச் சமாளிக்க செய்த செலவால் 2020இன் இறுதியில் அது 95பில்லியன்களாகக் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த ஆண்டில் இருந்து அது அதிகரிக்கத் தொடங்கலாம். ஆகையால் இரசியா தனது எதிரிகளால் உருவாக்கப்பட்ட சவால்களை துணிவுடன் எதிர் கொள்ளும்.

Tuesday, 16 June 2020

புவிசார் குழாயடிச் சண்டை




மசகு எண்ணெயும் எரிவாயுவும் குழாய்களூடாக பல நாடுகளுக்கு விநியோகிக்கப்படுகின்றது. பூமிக்கடியில் 3.5மில்லியன் கிலோ மீட்டர் நீளமான குழாய்கள் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அது மேலும் அதிகரித்துக் கொண்டே போகின்றது. குழாய்கள் நிலத்திற்கு அடியில், நிலத்திற்கு மேலே, கடலுக்கு அடியில் என பதிக்கப்பட்டுள்ளன. இதில் அதிக முனைப்புக் காட்டுவது தன்னை ஒரு எரிபொருள் பெருவல்லரசாக்க முயலும் இரசியாவாகும். இரசிய எரிபொருள் நிறுவனங்களான காஸ்புரோமின் பெறுமதி 60 பில்லியன் டொலர்களாகவும் ரொஸ்நெஃப்ட்டின் பெறுமதி 70பில்லியன் டொலர்களாகவும் இருக்கின்றன. இவை இரண்டும் இரசியப் பொருளாதாரத்தின் உயிர்நாடிகளாகும்.


எரிபொருள் அரசியல்
உலகின் மிக நீளமான எண்ணெய்க் குழாய் துருஜ்பா இரசியாவில் ஆரம்பித்து பெலரஸ் நாட்டுக்கு சென்று அங்கு அது இரண்டாகப் பிரிந்து ஒன்று போலாந்து ஜேர்மனி போன்ற நாடுகளுக்கும் மற்றது உக்ரேன், ஹங்கேரி, சுலோவேக்கிய செக் குடியரசு ஆகிய நாடுகளுக்குச் செல்கின்றது. மற்ற ஐரோப்பிய நாடுகளின் எரிவாயுத் தேவையில் 37% இரசியாவில் இருந்து செல்லும் குழாய்கள் மூலமாகவே பெறப்படுகின்றன. இரசியா மீது மற்ற ஐரோப்பிய நாடுகள் எரிபொருளுக்கு தங்கியிருக்கக் கூடாது என்பதற்காக சிரியாவினூடாக வளைகுடா நாடுகளில் இருந்து குழாய்கள் மூலமான எரிபொருள் விநியோகம் செய்வதற்கு பஷார் அல் அசாத் உடன்படாமையால் அவரது ஆட்சியை அகற்ற சதி செய்யப்பட்டது. இரசியா தலையிட்டு அவரது ஆட்சியைக் காப்பாற்றியுள்ளார். உக்ரேனுடாகச் இரசியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயுவை எடுத்துச் செல்லும் குழாய்கள் உக்ரேனை ஒட்டிய புவிசார் அரசியலில் முக்கிய பங்கு வகிக்கித்துக் கொண்டிருக்கின்றது. உக்ரேன் இரசியாவின் எதிரிகளுக்கு சார்பான நாடாக மாறக் கூடாது என்பதில் இரசியா உறுதியாக இருந்தது.


இரசியாவைத்தாக்கும் எரிபொருள் விலைவீழ்ச்சி
கொவிட்-19 தொற்று நோயின் தாக்கத்தின் பின்னர் எரிபொருள் பெருமளவில் வீழ்ச்சியடைந்திருப்பதால் இரசியாவின் ஏற்றுமதி வருமானத்தில் 60% விழுக்காடும் பாதீட்டு வருமானத்தில் 30% விழுக்காடும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனால் இரசியப் பொருளாதாரத்தின் மொத்த உற்பத்தி எட்டு முதல் பன்னிரண்டு விழுக்காடு அடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. உலக எரிபொருள் சந்தையில் இரசியா ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க அமெரிக்கா பெரும் முயற்ச்சி எடுக்கின்றது.


இரசிய எரிபொருளுக்கு மாற்றீடாக மத்திய ஆசிய நாடான தேர்க்மெனிஸ்த்தானில் இருந்து துருக்கிக்கும் மத்திய ஐரோப்பிய நாடுகளுக்கும் குழாய் மூலம் எரிபொருள் விநியோக்கிக்கும் திட்டமும் செயற்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றது. கஸ்பியன் கடலுட்டாகச் செல்லும் இந்தக் குழாயகள் Trans-Caspian Gas Pipeline என அழைக்கப்படுகின்றது.

Nord Stream - 2 திட்டம் ஜேர்மனியில் இருந்து இரசியாவிற்கு இயற்கை வாயுவை போல்ரிக் கடலினடியில் போடப்படும் குழாய்களூடாக வழங்கும் திட்டமாகும்.  இந்தக் குழாய்த் திட்டம் Nord Stream 2 AG என்ற இரசிய நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் இரசியாவின் மிகப்பெரும் எரிபொருள் நிறுவனமான காஸ்புரோம் ஆகும். இது உலகின் மிகப்பெரிய எரிபொருள் நிறுவனமாகும். முதலில் Nord Stream-2 குழாய் பின்லாந்துக்கும் எஸ்தோனியாவிற்கும் இடையிலுள்ள கடலின் நடுவிலும் பின்னர் சுவீடனுக்கும் லத்வியா, லித்துவேனியா ஆகிய வற்றின் நடுவிலும் பின்னர் போலாந்துக்கும் சுவீடனுக்கும் இடையில் உள்ள கடற்பரப்பினூடாகவும் செல்கின்றது. இரசியாவின் NORD STREAM – 2 என்னும் குழாய் மூலமான எரிபொருள் விநியோகத்திற்கு எதிராக அமெரிக்காவின் இரு கட்சிகளையும் சேர்ந்த இரண்டு மூதவை உறுப்பினர்கள் முதவையில் புதிய சட்ட முன்மொழிவை 2020 ஜுன் மாதம் முன்வைத்துள்ளனர். ஏற்கனவே அமெரிக்கா இரசியாவின் இந்த் திட்டத்தில் பங்கு கொள்ளும் நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை அறிமுகம் செய்துள்ளது. அது மேலும் இறுக்கமாக்கப்படவுள்ளது.

முறியடிப்பு முயற்ச்சி
NORD STREAM – 2 குழாய்த் திட்டத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்க விதித்த பொருளாதாரத் தடையால் 2019 டிசம்பரில் இன்னும் நூறு மைல்கள் நீளமான குழாய்களே கடலடியில் இடப்பட வேண்டியிருக்கும் நிலையில் அது நிறுத்தப்பட்டுள்ளது. திட்டத்தின் 94% நிறைவேற்றப்பட்டு விட்டது. ஐரோப்பிய ஒன்றியம் தனது உள்ளக எரிவாயுச் சந்தையில் இரசியாவின் காஸ்புறோம் நிறுவனம் செயற்படுவதைக் கடுமையாக்கும் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. NORD STREAM – 2 திட்டத்தை முழுமையாக முறியடிக்கும் திட்டத்தை அமெரிக்கா இப்போது முடுக்கி விட்டுள்ளது. Allseas என்ற சுவிஸ்-டச் நிறுவனம் தனது இரண்டு கப்பல்கள் மூலம் NORD STREAM – 2இற்கான கடலுக்கு அடியில் குழாய்களை பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. அமெரிக்கப் பொருளாதாரத்தடையால் அது தனது குழாய் பதிக்கும் கப்பலை காஸ்புறோமிற்கு விற்பனை செய்யலாம். அமெரிக்க மூதவை உறுப்பினர்களின் சட்ட மூலம் பின்னோக்கிச் வகையில் செயற்படக் கூடிய வரையப்பட்டுள்ளது. இரசிய காஸ்புறோம் நிறுவனத்திற்கு காப்புறுதிச் சேவை, உபகரணங்கள், தொழில்நுட்பம், துறைமுக வசதி, இணைப்புப்பணி, அளவைப்பணி, கல்லுப்போடும்பணி ஆகியவற்றை வழங்கிய நிறுவனங்களுக்கும் வழங்கவிருக்கும் நிறுவனங்களுக்கும் எதிராக பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதிக்கவிருக்கின்றது. இந்தப் பொருளாதாரத் தடை இரசியாவில் இருந்து துருக்கிக்கு கருங்கடலூடாக எரிவாயு விநியோகிக்கும் TurkStream pipeline திட்டத்திற்கு எதிராகவும் நடைமுறைப்படுத்தப்படும். இரசியாவின் NORD STREAM – 2  திட்டத்திற்கு போலாந்து, உக்ரேன், லித்துவேனியா, லத்வியா, எஸ்த்தோனியா ஆகிய நாடுகளும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் தனது எரிபொருள் உறுதிப்பாட்டில் இரசிய ஆதிக்கத்தையிட்டு கரிசனை கொண்டுள்ளது. இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் NORD STREAM – 2  திட்டம் வெளிநாடுகளின் செயற்பாடுகள் இல்லாமல் இரசியாவாலேயே நிறவேற்றி வைக்கபடும் என சூழுரைத்துள்ளார்.

பல நாடுகள் சம்பந்தப்பட்ட Nord Stream 2
ஜேர்மனி Nord Stream 2 திட்டத்தால் நன்மையடையவிருக்கின்றது. அதனால் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாதது பாவனை செய்கின்றது. இது முழுக்க முழுக்க ஒரு வர்த்தகத் திட்டம் என்கின்றது ஜேர்மனி. ஒஸ்ரியா, ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த எரிபொருள் நிறுவனங்கள் Nord Stream 2  திட்டத்தில் ஒரு பில்லியன் யூரோ முதலீடு செய்யவிருந்தன. Nord Stream 2 AG என்ற நிறுவனத்தின் தகவலின் படி 25 நாடுகளைச் சேர்ந்த ஆயிரம் நிறுவனங்கள் இதில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்கா தனது நாட்டுக்கு வெளியில் நடக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டம் இயற்றுவதையும் அதை நிறைவேற்றுவதையும் பன்னாட்டு சட்டங்களுக்கு விரோதமானவையாகப் பார்க்க வேண்டும் என்றார் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு துறைகளுக்கான உறுப்பினர் ஒருவர். ஐரோப்பிய ஒன்றியம் சூழல் பாதுகாப்பிற்காக கரியற்ற சூழலை 2050 உருவாக்க திட்டமிட்டுள்ளது. அதனால் எரிவாயுப் பாவனை முற்றாக இல்லாமல் போகலாம். அது இரசிய எரிபொருள் விநியோகத்தை பெருமளவு குறைக்கலாம். ஆனால் சீனாவில் எரிவாயுப்பாவனை பெருமளவில் அதிகரித்துக் கொண்டே போகின்றது. 2014-ம் ஆண்டு மேற்கு நாடுகள் இரசியாவிற்கு எதிராக விதித்த பொருளாதாரத் தடையைத் தொடர்ந்து இரசியாவிலிருந்து சீனாவிற்கு குழாய் மூலம் எரிபொருள் விநியோகம் செய்யும் திட்டத்தை இரு நாடுகளும் ஆரம்பித்தன.

இரசியாவுடன் மென்போக்கை கடைப்பிடித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உலக எரிபொருள் ஆதிக்கம் என வரும்போது அவர் இரசியாவிற்கு எதிராக உறுதியாக நிற்கின்றார். ஜேர்மனி இரசியாவில் இருந்து எரிபொருள் வாங்குவதற்குப் பதலாகா அமெரிக்காவிடமிருந்து கப்பல் மூலம் விநியோகிக்கும் எரிபொருளை அது வாங்க வேண்டும் என அவர் நினைக்கின்றார். இந்த அடிப்படையில் இரசிய ஆக்கிரமிப்பில் இருந்து ஜேர்மனியைக் காப்பாற்றுவது எனச் சொல்லிக் கொண்டு ஜேர்மனியில் இருக்கும் அமெரிக்கப் படைகளைக் குறைக்கப் போவதாக அவர் சொல்லியுள்ளார். ஜேர்மனியில் தற்போது 34,500 அமெரிக்க படையினர் உள்ளனர். அவர்களில் 9,500ஐ வெளியேற்றி 25000 ஆக குறைக்க டிரம்ப் ஆலோசித்து வருகின்றார். இதற்கு அமெரிக்காவில் பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 2020-06-14: Nord Strem 2 குழாய்த் திட்டத்திற்கு எதிராக அமெரிக்கா அதிகரித்துள்ள பொருளாதாரத் தடையையிட்டு ஜேர்மனி தனது கவலையை வெளியிட்டதுடன் ஐரோப்பாவின் எரிபொருள் பாதுகாப்பில் அமெரிக்க தலையீடாக அமெரிக்காவின் பொருளாதாரத்தடை கருதப்பட வேண்டியுள்ளது என்றது ஜேர்மனி.

Monday, 17 September 2018

மீண்டும் தீவிரமடையும் மத்திய தரைக்கடலாதிக்கப் போட்டி


2018 ஆகஸ்ட் மாதம் இரசியா தனது பெரிய கடற்படையணி ஒன்றை சிரியாவிற்கு அனுப்பியமை மத்தியதரைக்கடலில் ஓர் ஆதிக்கப்போட்டிக்கு வித்திட்டது போல் தோன்றுகின்றது. உலக எரிபொருள் விநியோகத்தில் பெரும் பங்கு வகிக்கும் மத்தியதரைக்கடல் வரலாற்றி ரீதியாக பேரரசுகளின் உலக ஆதிக்கத்திற்கு முக்கியமான ஒன்றாக இருந்தது. ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்களையும் ஒட்டி இருக்கின்ற மத்தியதரைக் கடல் புரதான காலத்தில் இருந்தே முக்கியத்துவம் வாய்ந்த கடலாக மத்தியதரைக் கடல் இருந்து வருகின்றது. இது மேற்குப் புறத்தில் ஜிப்ரோல்டர் நீரிணை மூலம் அட்லாண்டிக் மாக்கலுடன் தொடுக்கப்பட்டுள்ளது. மத்திய தரைக்கடலின் இருபுறமும் பெருந்தொகையான நதிகள் வந்து அதில் கலக்கின்றன. அவற்றுள் உலகின் பெரிய பத்து நதிகளாகிய Rhone, Po, Drin-Bojana, Nile, Neretva, Ebro, Tiber, Adige, Seyhan, and Ceyhan ஆகியவையும் அடக்கம். தொன்று தொட்டே உலகின் பெரிய அரசுகளிற்கு இடையிலான கலாச்சாரப் பரிவர்த்தனைகளும் பண்டமாற்ற்றுக்களூ மத்திய தரைக்கடலூடாக நடை பெற்றது.

பழம்பெருமை வாய்ந்த மத்தியதரைக்கடல்
பதினெட்டாம் நூற்றாண்டில் ஜேர்மனியில் வாழ்ந்த தத்துவ ஞானி பிரெட்றிச் ஹெஜல் பூமிப்பந்தின் மூக்காற்பங்கிற்கு மத்திய தரைக்கடல் ஒன்றுபடுத்தும் மூலம் என்றார். புராதான கிரேக்கர்களும் ரோமர்களும் இந்தியாவுடனும் சீனாவுடனும் மத்திய தரைக்கடலினூடாகவே வர்த்தகம் செய்தனர். கிறிஸ்த்துவிற்கு முன்னர் 16-ம் நூற்றாண்டில் இருந்து பல நூற்றாண்டுகளாக இருந்த எகிதியப் பேரரசு மத்திய தரைக்கடலை ஒட்டியே இருந்தது. கிறிஸ்த்துவிற்கு 1792 ஆண்டுகளுக்கு முன்னர் பபிலோனியர்கள் மத்திய தரைக்கடலில் ஆதிக்கம் செலுத்தினர். தற்போதைய ஈராக், சிரியா போன்றவற்றை உள்ளடக்கிய மெசப்பட்டோமியா அவர்களது பிரதேசமாக இருந்தது. மத்திய தரைக்கடல் அவர்களது வெளியுலகத் தொடர்பில் பெரும் பங்கு வகித்தது. இது போலவே கிறிஸ்த்துவிற்கு 800 ஆண்டுகளிற்கு முன்னர் கிரேக்கப் பேரரசு, கிறிஸ்த்துவிற்கு 27 ஆண்டுகளிற்கு முன்னர் ரோமப் பேரரசு ஆகியவை மத்தியதரைக்கடலை ஒட்டியே இருந்தன.உலக வரலாற்றில் நீண்டகாலமாக இருந்த துருக்கியரின் உதுமானியப் பேரரசிற்கும் மத்திய தரைக்கடலே முக்கிய போக்குவரத்துப் பாதையாக இருந்தது. பிரித்தானியப் பேரரசும் மத்திய தரைக்கடலில் அதிக அக்கறை காட்டியது. பிரித்தானிய குடியேற்ற ஆட்சி பல நாடுகளில் முடிந்த பின்னரும் பிரித்தானியா மத்தியதரைக்கடலில் ஜிப்ரோல்டா, சைப்பிரஸ் ஆகியவற்றில் தனது படைகளை வைத்திருக்கின்றது. மேலும் மத்திய தரைக்கடல் பிராந்தியத்தின் முக்கியத்துவத்தால் ஓமான், கட்டார், பாஹ்ரேன் ஆகிய நாடுகளில் பிரித்தானியப் படைகள் நிலைகொண்டுள்ளன.  

தற்போதைய அரசுகள்
மத்திய தரைக்கடலை ஒட்டி இப்போது 21 நாடுகள் இருக்கின்றன. ஐரோப்பாவில் ஸ்பெயின், பிரான்ஸ், மொனொக்கோ, இத்தாலி, மால்டா, சுலோவேனிய, குரோசிய, பொஸ்னியா, ஹெர்ஜிக்கோவீனா. மொண்டினீக்ரொ, அல்பேனியா, கிரேக்கம் ஆகிய ஐரோப்பிய நாடுகளும் துருக்கி, சைப்பிரஸ், சிரியா, லெபனான், இஸ்ரேல் ஆகிய ஆசிய நாடுகளும் எகிப்து. லிபியா, துனீசியா அல்ஜீரியா, மொரொக்கே ஆகிய ஆபிரிக்க நாடுகளும் மத்திய தரைக்கடலை ஒட்டியுள்ளன.


ஒரு துருவத்தை விரும்பாத புட்டீன்
சோவியத் ஒன்றியம் வலுவடைந்திருந்த போது மத்தியதரைக்கடலில் அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும் இடையில் கடும் போட்டி உருவானது. 1991-ம் ஆண்டு நடந்த சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அமெரிக்காவின் ஆதிக்கத்தில் ஒரு துருவ ஆதிக்கம் உலகில் தலை தூக்கத் தொடங்கியது. இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் அமெரிக்காவின் ஒரு துருவ ஆதிக்கத்தை மிகவும் வெறுக்கின்றார். மீண்டும் சோவியத் ஒன்றியம் போல் ஒன்றை இரசியாவின் தலைமையில் உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார். அதன் முதற்படியாக உக்ரேன் நேட்டோவில் இணைவதைத் தடுத்தார். கிறிமியாவை இரசியாவுடன் இணைத்தார். அடுத்தபடியாக சிரியாவில் தனக்கு ஆதரவான ஆட்சி இருக்க வேண்டும் என்பதற்காக அதிபர் பஷார் அல் அசாத்தை அகற்றும் அமெரிக்காவின் திட்டத்தை முறியடித்தார். முழு சிரியாவும் அசாத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக துருக்கியின் வேண்டுகோளைப் புறம் தள்ளி இத்லிப் மாகாணத்தில் பெரும் விமானத்தாக்குதல்களைச் செய்கின்றார்.

சீனாவும் மத்திய தரைக்கடலில்
சீனாவை உலகின் முதற்தர நாடாக்க வேண்டும் என்பதில் அதன் அதிபர் ஜி ஜின்பிங் அதிக முனைப்புடன் செயற்படுகின்றார். இருவரும் வலிமை மிக்க தலைவர்களாக தத்தம் நாடுகளில் திகழ்கின்றனர். இருவரும் முழுமையான ஒத்துழைப்பிற்கு தயாராக இல்லை. சீனாவை புட்டீன் மிகுந்த ஐயத்துடனே நோக்குகின்றார். மத்திய ஆசியாவை நோக்கிய சீனாவின் விரிவாக்கம் இரசியாவிற்கு ஆபத்தானது என புட்டீன் கருதுகின்றார். இரசியாவும் சீனாவும் வலிமையான நாடுகள். ஆனால் வலிமை மிகுந்த நாடுகள் அல்ல. இரசியாவின் பொருளாதாரமும் சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியும் அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தை அசைக்கப் போதியதாக இல்லை. இரு நாடுகளும் மத்தியதரைக்கடலில் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் தற்போது இல்லாவிடிலும் இனி வரும் காலங்களை இரு நாடுகளும் அதற்க்கு நிர்ப்பந்திக்கப்படும். சீனா மத்திய தரைக்கடலின் முக்கியத்துவத்தை உணர்ந்தே ஜிபுக்தியில் தனது முதலாவது வெளிநாட்டுக்கடற்படைத்தளத்தை உருவாக்கியது.
மத்தியதரைக்கடலூடாக வட ஆபிரிக்க மற்றும் மேற்காசிய நாடுகளில் இருந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகம் மேற்கொண்டால் மேற்கு ஐரோப்பிய நாடுகள் தமது எரிவாய்த் தேவைக்கு சிரியாவில் தங்கியிருப்பதைத் தவிர்க்கலாம். அந்த எரிவாயுத்திட்டத்தில் சிரியா காத்திரமான பங்கினை வகிக்கும். அதனால்தான் சிரியாவில் மேற்கு ஐரோப்பாவினதும் ஐக்கிய அமெரிக்காவினதும் எண்ணம் நிறைவேறாமல் இருப்பதற்கு இரசியா பெரும் பாடு படுகின்றது.

போட்டி நகர்வுகள்
2018 ஓகஸ்ட் மாதம் இரசியா தனது பெரும் கடற்படையணி ஒன்றை சிரியாவிற்கு நகர்த்தியது. இதற்கு உடனடியாக அமெரிக்கா எதிர்வினையாற்றியது. அமெரிக்காவின் கிழக்குக் கரைக்கும் அத்லாண்டிக் மாக்கடலுக்கும் பொறுப்பான இரண்டாவது கடற்படைப் பிரிவின் தளபதியும் மத்தியதரைக்கடற்பரப்பிற்குப் பொறுப்பான ஆறாவது கடற்படைப் பிரிவின் தளபதியும் அமெரிக்காவின் ஐரோப்பாவிற்கான கட்டளைத் தலைமையகத்திற்கு வரவழைக்கப்பட்டு இரசியாவின் நகர்வை எப்படி எதிர் கொள்வது  என்பது பற்றிக் கலந்துரையாடப்பட்டது. இதைத் தொடர்ந்து சிரியாவில் வேதியியல் குண்டுகள் பாவிக்கப்பட்டால் அமெரிக்கா முன்பு ஒரு போதும் செய்திராத கடுமையான தாக்குதல் சிரியாவில் செய்யப்படும் என அமெரிக்காவில் இருந்து அறிக்கை வெளியானது. ஆனால் அமெரிக்கா ஏற்கனவே மத்தியதரைக்கடலில் சிரியாமீது தாக்குதல் நடத்த பெரும் படைக்குவிப்பைச் செய்தபடியால் தானும் படைகளை நகர்த்தியதாக இரசியா தெரிவித்தது.

அமெரிக்கா முதன்மையானதுதான்
மத்தியதரைக்கடலாதிக்கப் போட்டி என்று வரும்போது இரசியாவால் அமெரிக்காவின் கடற்படையை அழிக்க முடியாது. அமெரிக்காவின் விமானம் தாங்கிக்கப்பல்கள் எண்ணிக்கையிலும் தரத்திலும் இரசியாவின் ஒரே விமானம் தாங்கிக்கப்பலிலும் பார்க்க உயர்ந்தவை. இரசியாவின் கடற்படைக்கு பெரும் அனுபவமில்லை என்ற கருத்து நிலவிய வேளையில் 2015-ம் ஆண்டு இரசியா கடல்வழியான பெரும் படைநகர்வை சிரியாவிற்கு செய்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

மேற்கு ஐரோப்பா தனித்து இரசியாவை எதிர்கொள்ள முடியுமா?
அமெரிக்கா எரிபொருளில் தன்னிறைவு அடைந்துள்ள வேளையில் அமெரிக்கா முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என்ற டிரம்பின் கொள்கையாலும், ஐரோப்பா தனது பாதுகாப்பை தானே செய்து கொள்ள வேண்டும் என்ற டிரம்பின் நிலைப்பாட்டாலும் இரசியாவை மேற்கு ஐரோப்பிய நாடுகள் எதிர் கொள்ள முடியுமா? கடற்படையைப் பொறுத்தவரை நேட்டோவின் மூன்றாவது பெரிய கடற்படையைக் கொண்ட கிரேக்கத்தின் கடற்படை இரசியாவின் கடற்படையிலும் பார்க்க வலிமையானது. அமெரிக்காவினதும் துருக்கியனதும் உதவி இன்றி ஏனைய நேட்டோ நாடுகள் மத்திய தரைக்கடலில் தமது கடற்படைகளைத் திரட்டும் போது அவற்றின் வலிமை இரசியாவின் வலிமையிலும் பார்க்கப் பத்து மடங்காக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இரசியா மத்தியதரைக்கடலிற்கு தனது கடற்கலன்களை துருக்கிக்கும் கிரேக்கத்திற்கும் இடையில் உள்ள குறுகிய அகலமுள்ள நீரிணையூடாக நகர்த்த வேண்டும். அந்த திருகுப்புள்ளியில் வைத்து கிரேக்கத்தாலும் சைப்பிரஸில் நிலை கொண்டுள்ள பிரித்தானியப் படைகளாலும் இரசியக் கடற்படையின் கப்பல்களை நிலைகுலையச் செய்ய முடியும்.

சிறுதடியைப் பார்த்து மோதலைத் தவிர்க்கும் சண்டியர்கள்
வட கொரியாவிலும் பார்க்க அமெரிக்காவின் படைவலு மிகப் பெரியது. ஆனால் வட கொரியாவின் மீது தாக்குதல் ஆரம்பித்த சில நிமிடங்களுக்குள் தென் கொரியாமீது வட கொரியா கடுமையான தாக்குதலைச் செய்து பெரும் சொத்திழப்பை ஏற்படுத்த முடியும். அதைத் தவிர்ப்பதற்காகவே வட கொரியாவுடன் ஒரு மோதலை அமெரிக்கா தவிர்த்தது. அது போலவே தாய்வானும் சீனாவை இலக்கு வைத்து பல ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்திருப்பதால சீனாவின் கிழக்குக் கரையோராத்தில் உள்ள பல தொழிற்பேட்டைகளை அழிக்க முடியும். ஒரு நாடு தன்னிலும் பார்க்க பல மடங்கு வலிமையுள்ள எதிரிக்கு மூக்குடைக்கக் கூடிய வகையில் தன் வலிமையை வைத்திருந்தால் மோதல் தவிர்ப்பு நிலையைத் தான் அந்த வலிமை மிக்க எதிரி விரும்ப மாட்டான். 1971-ம் ஆண்டு நடந்த பங்களாதேச விடுதலைப் போரின் போது இந்தியாவிற்கு எதிராகப் போர் தொடுக்க தனது நேச நாடுகளுக்கு அமெரிக்கா விடுத்த வேண்டுகோளை ஏற்று பிரித்தானியா தனது விமானம் தாங்கிக் கப்பலை இந்து மாக்கடலை நோக்கி நகர்த்தியபோது இரசிய நீர்மூழ்கிக் கப்பல்கள் அதை இடைமறித்தன. பிரித்தானியக் கடற்படை வலிமை மிக்கதாக இருந்தும் ஒரு மோதலைத் தவிர்ப்பதற்காக அது பின்வாங்கியது.

இத்லிப் தீர்மானிக்கும்
வர்த்தக முக்கியத்துவம், வரலாற்ரு முக்கியத்துவம், படைத்துறை முக்கியத்துவம் போன்றவை மிக்க மத்திய தரைகடலில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்பதைப் பற்றி தீர்மானிப்பது எந்த முக்கியத்துவமும் இல்லாத இத்லிப் என்னும் சிரிய மாகாணமாக இப்போது திகழ்கின்றது. சிரியாவில் தனக்கு என ஒரு பிடி இல்லாத அதாவது அரசுறவியல் நெம்பு கோல் இல்லாத அமெரிக்காவிற்கு கிடைத்துள்ள துரும்பு அல்லது துருப்பு வேதியியல் குண்டுத்தாக்குதல். வேதியியல் தாக்குதல் இல்லாமல் இதிலிப்பை சிரியாவாலும் இரசியாவாலும் கைப்பற்ற முடியாது என்பதை அமெரிக்கா நன்கு உணர்ந்து  கொண்டுள்ளது. அதனால் தன் கால் நகர்வுகளுக்கு அது காத்திருக்கின்றது.

மோதல் தவிர்பிற்காக சில விட்டுக்கொடுபுக்களை வலிமை மிக்க நாடுகள் செய்யும் நிலை இருப்பது இரசியாவிற்கு சாதகமான ஒன்றே. மத்தியதரைக்கடலில் இரசியா ஒரு காத்திரமான படையணியை வைத்திருந்தால் அதனுடன் மோதலை தவிர்க்கவே வலிமை மிக்க நாடுகள் கூட விரும்பும். அப்படிப்பட்ட நிலையில் இரசியாவால் மத்திய தரைக்கடலில் தனக்கு உரிய இடத்தைப் பெற்றுக் கொள்ளலாம். சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்பட்டால் இரசியாவின் சாதக நிலை இரட்டிப்பாகும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...