Saturday, 26 September 2015

சீனாவில் இருந்து வெளியேறும் மூலதனங்கள்

சீனாவில் இருந்து 2014-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இருந்து 2015-ம் ஆண்டு ஜூலை வரையிலான ஓராண்டு காலத்தில் 610 பில்லியன் டொலர்கள் பெறுமதியான மூலதனங்கள் வெளியேறின. பின்னர் 2015 ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் 141.66 பில்லியன் டொலர்கள் பெறுமதியான மூலதனம் சீனாவில் இருந்து வெளியேறியது. நான்கு ரில்லியன் டொலர்களாக இருந்த சீனாவின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு இப்போது 3.6 ஆகக் குறைந்து விட்டது. நாட்டை விட்டு மூலதனங்கள் வெளியேறுவதால் ஏற்பட்ட நிதிப் பற்றாக் குறையைத் தவிர்க்க சீன மைய வங்கி தனது வட்டி விழுக்காட்டை 2014 நவம்பரில் இருந்து எட்டு மாதங்களில் ஐந்து தடவைகள் குறைத்துள்ளது.

சீனாவின் சொத்துக் கரைகின்றது
சீனாவின் பெரும் சொத்தாக இருக்கும் அதன் வெளிநாட்டுச் செல்வாணிக் கையிருப்பு தொடர்பான தகவல்களும் நம்பகத் தகுந்ததாக இல்லை. அத்துடன் அதில் பெரும் பகுதி திரவத்தன்மை குறைந்த நீண்டகால முதலீடுகளில் முதலிடப்பட்டுளது. இதனால் சீனப் பொருளாதாரக் கப்பலில் ஓட்டை விழும் போது உடனடியாக அதை அடைக்கக் கூடிய நிலையில் சீனா இல்லை. 3.6 ரில்லியன் டொலர்களில் 667 பில்லியன்கள் மட்டுமே தேவை ஏற்படும் போது பாவிக்கக் கூடிய நிலையில் இருக்கின்றது. ஏற்றுமதியை ஒட்டி வளர்ந்து கொண்டிருந்த சீனப் பொருளாதாரம் 2008-ம் ஆண்டின் பின்னர் ஏற்றுமதி பெருமளவு வீழ்ச்சியைக் கண்டது. இதனால் ஏற்பட்ட உள்ளூர் உற்பத்தி வீழ்ச்சியை நிரப்ப சீன அரசு பெருமளவு முதலீடுகளைச் செய்தது. பிக்கிங் பல்கலைக்கழகத்தின் அரசியற்பொருளாதாரப் பேராசிரியர் கிறிஸ்டபர் பொல்டிங்கின் கருத்துப்படி சீனாவின் முதலீட்டுக் கூட்டுறவு வங்கி  தனது மூலதனத்தை சீன மைய வங்கியிடமிருந்து அமெரிக்கக் கடன் முறிகளாகவே கடன் பெற்றது. இதனால் சீனாவின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு இருபது முதல் இருபத்தைந்து வீழ்ச்சியடைந்திருக்கலாம் என்கின்றார் அப்பேராசிரியர். ஆனால் உள்ளூரில் செய்யப்பட்ட பல முதலீடுகள் இலாபத் திறன் குறைந்தவனவாகவே இருந்தன. சீனாவில் வெற்றுக் கட்டிடங்கள் மைல்கணக்கில் நீண்டு இருக்கின்றன. அது போலவே பயன்படுத்தப்படாத பல புதிய விமான நிலையங்கள் பெருந்தெருக்கள் பல இருக்கின்றன.
தனது பெருமளவு ஏற்றுமதியால் கிடைத்த மிகையான அமெரிக்க டொலர்களை அமெரிக்காவின் கடன் முறிகளை வாங்குவதிலும் சீனா ஆபிரிக்க நாடுகளில் விவசாயங்களை வாங்குவதிலும் பாக்கிஸ்த்தானிலும் இலங்கையிலும் துறைமுகங்களைக் கட்டுவதிலும் நியூசிலாந்தில் பாற்பண்ணைகளை வாங்குவதிலும் கனடாவில் எரிபொருள் நிறுவனங்களை வாங்குவதிலும் ஐஸ்லாந்தின் வடதுருவப் பிரதேசத்தில் பனிப்பாறைகளை ஆய்வு செய்வதிலும் செலவழித்தது. அத்துடன் புதிய அபிவிருந்தி வங்கி, ஆசிய உள்கட்டுமான முதலீட்டு வங்கி எனப் பன்னாட்டு வங்கிகளையும் ஆரம்பித்தது. மேலும் பட்டுப்பாதை, புதியபட்டுப்பாதை, பட்டுப்பதையை ஒட்டிய பொருளாதார வலயம் எனவும் பெரும் நிதிகளை முதலீடு செய்தது.

சீனாவால் உலத்தில் காசுத் தட்டுப்பாடு ஏற்படுமா?
சீனாவின் வெளிநாட்டுக் கையிருப்பு குறைந்து கொண்டு போவது உலக அரங்கில் ஒரு நாணயத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தைக் கூட உருவாக்கியுள்ளது. Quantitative Easing எனப்படும் நாணயங்களுக்கான அளவுசார் தளர்ச்சி இனி quantitative tightening என்னும் அளவுசார் இறுக்கம் என ஆகிவிடுமா என எண்ணத் தோன்றுகின்றது.

கடந்த ஓராண்டு காலமாகச் சீனப் பொருளாதரத்தின் நகர்வுகள் இப்படி இருந்தன:

சீனப் பங்குகள் 12 மாதத்தில் 150விழுக்காடு விலை அதிகரிப்படைந்தன. பின்னர் 30 விழுக்காடு வீழ்ச்சியைக்கண்டன. சீனா தனது நாட்டின் 97 விழுக்காடான பங்குகளின் விற்பனையைத் தடை செய்தது. சீனா 1.2 ரில்லியன் டொலர்களை பெரிய பங்குகளின் விலைகள் சரியாமல் இருக்கச் செலவிட்டது. சீனா தனது பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் குறைவதாக அறிவித்தது. சீன நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. சீனா தனது நாணயத்தின் பெறுமதியைத் தக்க வைக்க பெருமளவு செலவு செய்தது. இந்தக் காட்சித் தொடர் சீனாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதைக் காட்டியது. ஏற்கனவே சீனாவின் உள்ளூர் சிறு முதலீட்டாளர்கள் சீனப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து இழப்பைச் சந்தித்துள்ளனர்.

சீனாவில் இருந்து மூலதனம் பெருமளவில் வெளியேறுவதற்கான காரணங்கள்:
1. நம்பிக்கை இழந்த வெளிநாட்டு நிறுவனங்கள்
சீன அரசு அதனது நாணயத்தின் பெறுமதியையும் அதன் பொருளாதார வளர்ச்சியையும் தக்க வைத்துக் கொள்ளும் என்பதில் நம்பிக்கை இழந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தமது முதலீடுகளை விற்று விட்டு சீனாவில் இருந்து வெளியேறுகின்றன. தென் கொரியா உட்படப் பல ஆசிய நாடுகள் தமது பங்குச் சந்தை விலையை நிலைப்படுத்த என நிதியங்களை உருவாக்கியுள்ளன. பங்குச் சந்தை விலைச் சரிவைச் சந்திக்கும் போது அந்த நிதியங்கள் பங்குகளை வாங்கும். விலை ஏறும் போது விற்கும். இப்படி ஒரு நிதியம் சீனாவில் இல்லாதது சீனாவில் முதலீடு செய்பவர்களைத் தயங்க வைக்கின்றது.
2. சீன நாணயம் மேலும் மதிப்பிழக்கலாம் என்ற அச்சம்.
றென்மின்பி என்றும் யூவான் என்றும் அழைக்கப்படும் சீன நாணயத்திண் பெறுமதியை முன்னர் அதன் மைய வங்கி நாள் தோறும் காலை 9.15இற்கு நிர்ணயித்து வந்தது. இதை நடுப்புள்ளி என்பர் பின்னர் நாணயம் சந்தையில் நடுப்புள்ளியில் இருந்து இரண்டு விழுக்காட்டிலும் பார்க்க கூட ஏற்றவோ இறக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. இப்போது இது கைவிடப்பட்டு நாணயச் சந்தைதான் நாணயத்தின் பெறுமதியை நிர்ணயம் செய்யும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி சீனாவின் நடுப்புள்ளியை சீன மையவங்கி தான் விரும்பியபடி தினம் தோறும் தீர்மானிக்காமல் முதல் நாள் சந்தை மூடப்படும்போது என்ன பெறுமதியில் றென்மின்பி இருந்ததோ அதே அடுத்தநாள் நடுப்புள்ளிப் பெறுமதியாக்கப்படும். இது சீன நாணயத்தின் பெறுமதியில் அதன் மையவங்கியின் தலையீட்டைக் குறைக்கின்றது. இந்த முடிவால் சீன நாணயத்தின் பெறுமதி குறையலாம் என்ற அச்சம் பன்னாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் தோன்றியுள்ளது. இதனால் அவர்கள் சீனாவில் தாம் செய்த முதலீடுகளை சீன நாணயத்தின் பெறுமதி மேலும் வீச்சியடையும் முன்னர் அதை விற்றுக் கொண்டு அமெரிக்க டொலர்களாக மாற்ற முயல்கின்றனர். 
3 ஏறு முகமாக நிற்கும் அமெரிக்க டொலர்
அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. அங்கு வேலையற்றோர் தொகை வீழ்ச்சியடையும் அதேவேளை ஊதியம் உயர்வடையாமல் இருக்கின்றது. இது போன்ற காரணிகளால் அமெரிக்க டொலரின் மதிப்பு இனி ஏற்றத்தையே அடைந்து கொண்டிருக்கும் எனப் பன்னாட்டு முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றார்கள் அதனால் அவர்கள் சீனாவில் முதலிடுவதிலும் பார்க்க அமெரிக்காவில் முதலீடு செய்ய விரும்புகின்றார்கள்.
4. வளர்ச்சி வேகம் குறையும் சீனப் பொருளாதாரம்.
சீன 2015-ம் ஆண்டிற்கான தனது பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை 7.5விழுக்காட்டில் இருந்து 7.4 விழுக்காடாகக் குறைத்துள்ளது. 2015 ஓகஸ்ட் மாதத்திற்கான சீனாவின் முதலீட்டு அதிகரிப்பும்(10.9%) தொழிற்சாலைகளின் உற்பத்தியும்(6.4%) ஏதிர்பார்த்ததைவிடக் குறைவாகவே அமைந்திருந்தன. சீனாவின் கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டி (Purchasing Managers’ Index) ஜுலை மாதம் 50ஆக இருந்து ஓகஸ்ட் மாதம் 49.7 ஏழாகக் குறைந்துள்ளது. இந்தப் புள்ளிவிபரங்கள் வெளிவந்த பின்னர் 2015 செப்டம்பர் மாதம் 14-ம் திகதி சீனப் பங்குச் சந்தையும் வீழ்ச்சியைக் கண்டது. சீன உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களின் விலைகளை பெரிய அளவில் குறைக்கின்றார்கள். இதனால் சீனாவில் இலாபத் திறன் குறைகின்றது. பொருளாதாரத்தில் இலாபத் திறன் குறையும் போது முதலீடுகளுக்கான கவர்ச்சி குறைகின்றது. பொருளாதாரப் புள்ளி விபரங்கள் மோசமாக இருப்பதால் சீன அரசு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஊட்ட எடுத்த முயற்ச்சிகள் பின்னடைவைச் சந்தித்தன. ஏற்கனவே சீனாவின் புள்ளி விபரங்கள் மிகைப்படுத்தப் பட்டவை என்ற கருத்துப் பரவலாக நிலவுகின்றது.
5. சீனாவில் இருந்து வெளியேறும் செல்வந்தர்கள்
சீனச் செல்வந்தர்கள் தமது நாட்டில் இருந்து பெருமளவில் வெளியேறுவது கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடந்து கொண்டே இருக்கின்றன. கடந்த 14 ஆண்டுகளில் 91000 செல்வந்தர்கள் சீனாவை விட்டு வெளியேறியுள்ளார்கள். இவர்களில் ஒருவரின் சொத்து ஆகக் குறைந்தது ஒரு மில்லியன் டொலர்களாகும். இவர்கள் தமது சீன முதலீட்டை வெளிநாடுகளுக்கு கடத்துகின்றனர். சீன ஏற்றுமதியாளர்கள் தமது ஏற்றுமதி விலைகளை கூட்டிக் காட்டி அதன் மூலம் கிடைக்கும் வெளிநாட்டு நாணயங்களை இந்த நாட்டை விட்டு வெளியேறும் செல்வந்தர்களுக்கு விற்பனை செய்கின்றனர். சீனச் செல்வந்தர்கள் தமது நாட்டில் இருந்து பெருமளவில் வெளியேறுவது கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடந்து கொண்டே இருக்கின்றன. கடந்த 14 ஆண்டுகளில் 91000 செல்வந்தர்கள் சீனாவை விட்டு வெளியேறியுள்ளார்கள். இவர்களில் ஒருவரின் சொத்து ஆகக் குறைந்தது ஒரு மில்லியன் டொலர்களாகும். இவர்கள் தமது சீன முதலீட்டை வெளிநாடுகளுக்கு கடத்துகின்றனர். சீன ஏற்றுமதியாளர்கள் தமது ஏற்றுமதி விலைகளை கூட்டிக் காட்டி அதன் மூலம் கிடைக்கும் வெளிநாட்டு நாணயங்களை இந்த நாட்டை விட்டு வெளியேறும் செல்வந்தர்களுக்கு விற்பனை செய்கின்றனர்.  சீனாவில் இருந்து ஒருவரி ஐம்பதியானையிரம் டொலர்களை மட்டுமே வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லலாம். 200-ம் ஆண்டிற்கும் 2014-ம் ஆண்டிற்கும் இடையில் சீனாவில் இருந்து 3.7 ரில்லியன் டொலர்கள் வெளிநாட்டிற்குக் கடத்தப்பட்டுள்ளது. 2008-ம் ஆண்டின் உலகப் பொருளாதார வீழ்ச்சி சீனாவைப் பெருமளவு பாதித்த 2011-ம் ஆண்டு மட்டும் 600பில்லியன் டொலர்கள் சீனாவில் இருந்து கடத்தப்பட்டுள்ளன.

ஏற்றுமதியிலும் உள்ளூர் முதலீட்டிலும் தனது பொருளாதாரத்தை வளர்த்து வந்த சீனா இப்போது உள்நாட்டுக் கொள்வனவை அதிகரித்து அதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த முயல்கின்றது. தனிநபர் வருமானம் குறைவாக உள்ளதும் இப்போதும் ஒரு வளர்முக நாடாகவும் இருக்கும் சீனாவில் இது மிகவும் சிரமமான காரியம். ஒரு நாட்டின் நாணயத்தின் பெறுமதி குறையப் போகின்றது என்ற எண்ணத்தில் அங்கிருந்து மூலதனம் வெளியேறும் போது நாணயத்தின் பெறுமதி மேலும் மோசமகக் குறைவடையும்.

Friday, 25 September 2015

புட்டீனின் இரண்டாவது பொறிக்குள்ளும் ஒபாமா அகப்பட்டுக் கொண்டாரா?

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் முதலாவது பொறியை உக்ரேனில் வைத்தார். இப்போது சிரியாவில் அடுத்த பொறியை வைத்துள்ளார். இரண்டிலும் பராக் ஒபாமா ஏதும் செய்ய முடியாதபடியான சிக்கலை அமெரிக்கா எதிர் கொள்கின்றதா? 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பின்னர் மேற்கு நாடுகளுக்குச் சாதகமாக இருந்த உலக "ஒழுங்கை" இரசியா இன்னும் தனக்குச் சாதகமாக்காவிடினும் அது ஒரு குழப்பத்தை உருவாக்கிவிட்டது.

முன்னை வைத்த ஆப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையாமல் இரசியாவின் யூரோ ஏசியன் ஒன்றியத்தில் இணையவிருந்தது உக்ரேன். ஐக்கிய அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் இணைந்து உக்ரேனில் இரசிய சார்பு உக்ரேயின் ஆட்சியாளர் விக்டர் யனுகோவிச் பதவியில் இருந்து உக்ரேனில் உள்ள புதிய நாஜீக்களின் உதவியுடன் விரட்டி உக்ரேனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்க முயன்றன. பதிலடியாக உக்ரேனில் வாழும் இரசியர்களை உக்ரேனின் மேற்கு நாட்டு ஆதரவு ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்யச் செய்தார் விளடிமீர் புட்டீன். விளைவாக உக்ரேனில் இருந்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கிறிமியாவை இரசியா தன்னுடன் இணைத்துக் கொண்டது. உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் பெரும் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கின்றது. உக்ரேனில் தனது காய் நகர்த்தல்களை வல்லமை மிக்க அமெரிக்க உளவுத் துறைக்கு தெரியாமல் புட்டீன் செய்து முடித்தார். தற்போது உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடியாத அளவிற்கு மோசமான பொருளாதார நிலையில் இருக்கின்றது. உக்ரேனை மீட்க முடியாத நிலையில் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் ஐக்கிய அமெரிக்காவும் இருக்கின்றன. சில அமெரிக்க அரசியல் ஆய்வாளர்களும் அரசுறவியலாளர்களும் முழு உக்ரேனையும் இரசியா ஆக்கிரமித்து தனதாக்கினலும் பெலரஸைத் தன்னுடன் இணைத்தாலும் அது அமெரிக்க நலன்களுக்கோ அல்லது பாதுகாப்பிற்கோ பெரிய இடையூறுகளை ஏற்படுத்தப் போவதில்லை  என்கின்றனர். ஆனால் இது இரசிய விரிவாக்கத்தை ஊக்குவிக்கும் என்பது உண்மை அது காலப் போக்கில் இரசியாவை வலுவடையச் செய்து ஐரோப்பாவை மீண்டும் ஒரு பெரிய போர்க்களமாக மாற்றலாம்.

பராக் ஒபாமாவிற்கு விளடிமீர் புட்டீன் வைத்த இரண்டாவது பொறியாக சிரியா அமைந்துள்ளது. சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியதில் இருந்து பராக் ஒபாமாவின் சிரியா தொடர்பான கொள்கைகளில் இரண்டு முக்கிய அம்சங்கள் இருந்தன. முதலாவது சிரிய அதிபர் பஷார் அல் அசாத் வேதியியல் குண்டுகளைப் பாவித்தால் அது சிவப்புக் கோட்டைத் தாண்டியது போலாகும். அதற்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா படை நடவடிக்கை எடுக்கும். இரண்டாவது பஷார் அல் அசாத் பதவியில் இருந்து அகற்றப்பட வேண்டும். போரை முடிவுக்குக் கொண்டுவரும் எந்த ஒரு பேச்சு வார்த்தையிலும் பஷார் அல் அசாத் சேர்த்துக் கொள்ளப் பட மாட்டார். சிரியாவில் வேதியியல் குண்டுகள் பாவிக்கப் பட்ட போது ஐக்கிய அமெரிக்கா எந்த ஒரு படை நடவடிக்கையும் எடுக்காதபடி புட்டீன் தடுத்து விட்டார். அமெரிக்கப் படைகள் சிரிய அரச படைகள் மீது தாக்குதல் நடாத்தினால் இரசியப் படைகள் சவுதி அரேபியாவின் எரிபொருள் உற்பத்தி நிலைகள் மீது தாக்குதல் நடாத்துவதாக மிரட்டியதாகச் சொல்லப் பட்டது. அத்துடன் அரசுறவியல் நகர்வாக இரசியா சிரியாவில் உள்ள வேதியியல் படைக்கலன்களை அழிக்கும் பொறுப்பை தானே ஏற்றுக் கொண்டது. ஒபாமாவின் செங்கோட்டைத் தாண்டிய அசாத்தை ஒபாமாவால் ஏதும் செய்ய முடியாத நிலையை புட்டீன் உருவாக்கினார்.

அமெரிக்காவும் துருக்கியும் இணைந்து இஸ்லாமியப் பயங்கரவாதிகளை ஒழிப்பது என்ற போர்வையில் சிரியாவில் ஆட்சி மாற்றம் செய்வதற்கான படை நடவடிகை முனைந்தமை இரசிய அதிபர் புட்டீனைப் பதில் நடவடிக்கைக்குத் தூண்டியது. உக்ரேனில் செய்தது போல் அமெரிக்க உளவுத் துறைகளுக்குத் தெரியாமல் விமானங்கள் மூலமாகவும் கடற்கப்பல்கள் மூலமாகவும் பெருமளவு படைக்கலன்களையும் பாரப் படைக்கல ஊர்திகளையும் துருப்பிக் காவிகளையும் சிரியாவில் கொண்டு போய் புட்டீன் இறக்கினார். இவையாவும் சிரியப் படைகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு அனுப்பப்படும் படைத்துறை நிபுணர்களை அனுப்புதல் என்னும் போர்வையில் செய்யப்பட்டது.  எல்லாவற்றிலும் மேலாக விமானத்தில் இருந்து விமானங்களைத் தாக்கும் விமானங்களும் படைக்கலன்களும் தரையில் இருந்து  விமானங்களைத் தாக்கக் கூடிய ஏவுகணைகளும் சிரியாவில் இரசியாவால் கொண்டு போய் இறக்கப் பட்டுள்ளன. இது இனி எந்த ஒரு கட்டத்திலும் அமெரிக்கப் படைகள் சிரிய அரச படைகளுக்கு எதிராகத் விமானத்த் தாக்குதல் செய்ய முடியாத நிலையை உருவாக்கியுள்ளது.

சிரிய அதிபர் பஷார் அல் அசத்தின் இன்க்குழுமத்தினர் பெரும்பான்மையாக வாழும் பிராந்தியத்தில் உள்ள லதக்கியா விமானத்தளத்தில் இரசியப் படையினருக்கு என தற்காலிக முகாம்கள் அமைக்கப் படுகின்றன. 2015 செப்டம்பர் 17-ம் திகதியில் இருந்து ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக முன்பு எப்போதும் இல்லாத அளவும் தீவிரமான விமானத் தாக்குதல்களும் உலங்கு வானூர்தித் தாக்குதல்களும் செய்யப்படுகின்றன.

இரசியா தான் இஸ்லாமியப் போராளிகளுக்கு எதிராகத் தாக்குதல் செய்யப் போவதாகச் சொல்கின்றது. அமெரிக்காவும் துருக்கியும் அதையே செய்யப் போவதாகச் சொல்கின்றன. இதனால் எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் அமெரிக்கப் படைகள் தனது படையினருடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றார் விளடிமீர் புட்டீன். ஈராக்கிலும் ஆப்கானிஸ்த்தானிலும் நேட்டோப் படைகள் போர் புரியும் போது ஒரு நாட்டுப் படைகள் தவறுதலாக மற்ற நட்பு நாட்டுப் படையினர் மீது தாக்குதல் நடாத்திய சம்பவங்கள் பல உண்டு. ஒரே கட்டளைப் பணியகத்தின் கீழ் செயற்பட்ட படைகளின் நடவடிக்கைகளே அப்படி இருக்கும் போது. சிரியாவில் நிலைமை மிக மோசமாக அமையலாம் என அமெரிக்காவும் உணர்ந்து கொண்டது. இதனால் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்ட்டர் இரசியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் சேர்கீ ஷொய்குவுடன பேச்சு வார்த்தை நடாத்தினார்.

புட்டீனின் நகர்வால் அமெரிக்கா பின்னோக்கி அடி எடுத்து வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்கின்றது இலண்டனில் இருந்து வெளிவரும் ஃபைனாச்ஷியல் ரைம்ஸ். இரசியா தற்போது சிரியாவை நோக்கிச் செய்துள்ள படை நகர்வு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கும் பின்னர் செய்த பெரிய படைநகர்வாகக் கருதப்படுகின்றது. சில கணிப்பீடுகள் 24 இரசியப் போர் விமானங்கள் சிரியாவில் இறக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன.

சிரியாவில் ஐ எஸ் அமைப்பினரும் ஜபத் அல் நஸ்ரா அமைப்பினரும் சிரிய அரச படைகளுக்கு பெரும் சவாலாக இருக்கின்றார்கள். இவர்களை இரசியா ஒழித்துக் கட்டிவிட்டால் அசாத்தின் ஆட்சியை அசைக்க முடியாத நிலை உருவாகும். இதை சவுதி அரேபியா, காட்டார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய சுனி முஸ்லிம் நாடுகள் விரும்பாது. அமெரிக்கா சிரிய அதிபர் அசாத்திற்கு எதிராக படை நடவடிக்கை எடுக்காமல் இதுவரை இருந்தது இந்த நாடுகளுக்கு கடும் அதிருப்தியைக் கொடுத்துள்ளது. சிரியாவில் பசாத்தின் ஆட்சியை அசைக்க முடியாத ஒரு நிலையை இரசியா ஏற்படுத்த முயல்கின்றது.
அமெரிக்கா ஆதரவு கொடுக்கும் சுதந்திர சிரியப் படையும் அதன் இணை அமைப்பினரும் தீரமாகப் போராட முடியாதவர்களாகவே இருக்கினறர். அமெரிக்கா ஐநூறு மில்லியன் டொலர்கள் செலவழித்துச் செய்த பயிற்ச்சியும் படைக்கலனும் திட்டம் இதுவரை எதிர்பார்த்த அளவு பயனைக் கொடுக்கவில்லை. சிரியாவின் அரச படைகள் நன்கு பயிற்றப் பட்டவையும் அசாத்திற்கு விசுவாசம் மிக்கவையுமாகும். இதனால் தற்போது சிரியாவில் இரசியாவின் கைகளே ஓங்கியுள்ளன. பஷார் அல் அசாத்தைப் பதவியில் இருந்து அகற்றும் பராக் ஒபாமாவின் இரண்டாவது நோக்கத்திற்கும் புட்டீன் ஆப்பு வைத்து விட்டார்.

இலண்டனில் பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சரைச் சந்தித்த பின்னர் கருத்து வெளியிட்ட அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஜோன் கெரி குறுகிய கால அடிப்படையில் பஷார் அல அசாத்தையும் இணைத்துக் கொண்ட ஒரு பேச்சு வார்த்தையைச் செய்யலாம் என்றும் நீண்ட கால அடிப்படையில் அசாத் இல்லாத ஒரு பேச்சு வார்த்தை மட்டுமே நடை பெறும் என்றார். ஆனால் அசாத் தன் பதவி விலகுவது என்பது பேச்சு வார்த்தை மேசையில் முன்வைக்கப்பட முடியாத ஒன்று என்கின்றார்.

ஏற்கனவே மேற்கு நாடுகள் இரகசியமாக ஐ எஸ் அமைப்பின்ருக்கு அசாத்திற்கு எதிராகப் போர் புரிய உதவுவதாகக் குற்றச் சாட்டு முன்வைக்கப் பட்டுள்ளது. இனி அந்த உதவிகள் இரசியாவிற்குப் பிரச்சனை கொடுக்கும் வகையில் மேலும் அதிகரிக்கப் படலாம்.

ஈரானை அமெரிக்காவினதும் மேற்கு ஐரோப்பிய நாடுகளினதும் பொருளாதாரத் தடையை அவற்றுடன் சேர்ந்து செயற்பட்டு புட்டீன் தந்திரமாக நீக்கிவிட்டார். இப்போது ஈரான் இரசியாவுடன் இணைந்து அசாத்தின் ஆட்சியைப் பாதுகாக்கின்றது. சிரியாவில் அசாத்தின் ஆட்சியும் ஈரானும் லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா ஆகியவை இரசியாவுடன் இணையும்  போது மத்திய கிழக்கில் இரசியாவின் ஆதிக்கம் மீள் நிலை நிறுத்தப்படும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...