Saturday, 31 October 2009
13 உம் 17 உம் இலங்கையைப் படாத பாடு படுத்துகின்றன
இலங்கைக்கு 13 உம் 17 உம் ஒத்து வராத இலக்கங்களாகக் காணப்படுகின்றன. இந்தியா தனது அமைதிப் படை என்னும் அட்டூழியப் படையை இலங்கைக்கு அனுப்பி இலங்கையின் அரசியல் அமைப்பில் ஒரு திருத்தத்தை ஏற்படுத்தியது. அது இலங்கை அரசியல் அமைப்பில் ஏற்படுத்தப் பட்ட 13வது திருத்தம் ஆகும். இயேசுநாதர் இறுதியாகப் பிரசங்கம் செய்தபோது 13 பேர் அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர் அதில் ஒருவன் அவரை காட்டிக் கொடுத்தான். அதனால் 13 என்பது ஒரு வேண்டப்படாத இலக்கம் என்று பலர் நம்புகின்றனர். இந்தப் 13வது திருத்தத்திற்கு அமையவே பிள்ளையான் கிழக்கு மாகாண முதல் அமைச்சராக்கப் பட்டார். அவருக்கு என்று 13வது திருத்தந்தின் படியான முக்கிய அதிகாரங்கள் எதுவும் இதுவரை வழங்கப் படவில்லை. அரசியல் அறியாத கற்றுக் குட்டி ராஜீவ் காந்தி உருவாக்கிய 13வது திருத்தம் எந்த அளவிற்கு ஒரு உதவாக்கரைத் திருத்தம் என்பதற்கு பிள்ளையான் "அரசு" நல்ல எடுத்துக் காட்டு. இப்போது சிங்களப் பேரினவாதிகள் இது தம்மீது திணிக்கப் பட்ட திருத்தம் இது எமக்குச் சரிவராது என்று சொல்கின்றனர். இலங்கைத் தமிழர்கள் கௌரமாக வாழ வழி செய்வோம் என்று முழங்கி வந்த திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசு இலங்கைக்கு தமிழ்த் தேசிய போராட்டத்தை ஒடுக்க சகல உதவிகளையும் சிங்களவர்களுக்கு வழங்கி தமிழர்கள் வன்னி முகாம்களில் கௌரவமாக வாழ வழிசெய்து விட்டனர். இந்த 13வது திருத்தத்தை நீக்கினால் இந்தியாவின் தமிழின அழிப்பு ஆதரவுக் கொள்கைக் குட்டு அம்பலமாகிவிடும் அதனால் அந்தத் திருத்தத்தை நீக்கவும் முடியாமல் முழுமையாக அமூலாக்கவும் முடியாமல் தவிக்கிறது இலங்கை.
இலங்கை அரசியல் அமைப்பில் செய்து கொள்ளப் பட்ட இன்னொரு திருத்தம் 17வது திருத்தம். இலங்கைக் குடியரசுத் தலைவருக்கு இருக்கும் அதிகாரங்கள் பன்னாட்டு நியமங்களுக்கு முரணானவை. இதைச் சரிசெய்யும் முகமாக 17வது திருத்தம் இலங்கை அரசியல் அமைப்பில் செய்யப் பட்டது. இந்தத் திருத்தத்தின் படி இலங்கையில் அரசியல் அமைப்புச் சபை ஒன்று உருவாக்கப் படவேண்டும். அந்தச் சபையின் அனுமதியுடன் மட்டுமே தேர்தல் ஆணையாளர், காவற்துறை மாஅதிபர், பிரதம் நீதி அரசர் மற்றும் பல மேன் முறையீட்டு நிதியரசர்கள், சட்டமா அதிபர் போன்றோரை நியமிக்க முடியும். இந்த திருத்தம் இதுவரை நடைமுறைப் படுத்தப் படவில்லை.
ஜீஎஸ்பி+ உம் 17-ஆம் திருத்தமும்.
இலங்கைக்கு ஜீஎஸ்பி+ எனும் வர்த்தகச் சலுகை வழங்குவது தொடர்பாக விசாரணை நடாத்திய நிபுணர்கள் குழு 17-ம் திருத்தம் நடைமுறைப் படுத்தப் படாதமையால் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டிய அரச அமைப்புக்களின் நம்பகத் தன்மை பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது என்று அறிவித்ததுடன் அது நடைமுறைப் படுத்தப் படாமல் வர்த்தகச் சலுகை வழங்க முடியாது என்று அறிவித்துவிட்டது. இந்தத் திருத்தத்தி அமூலாக்கினால் இலங்கை மீதான மஹிந்தவின் பிடி பாதிக்க்ப படும். இப்போது இலங்கை அரசின் பிரச்சனை மனித உரிமையா மஹிந்தவின் குடும்ப உரிமையா என்பதுதான்?
Friday, 30 October 2009
மருமகளுக்கு மரியாதை
சென்னையில் பொய் கூறினார் தொண்டமான்
ஆறுமுக தொண்டமான் அளித்த பேட்டி: ""இலங்கை முகாம்களில் 3 லட்சம் தமிழர்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், 1.86 லட்சம் தமிழர்களே உள்ளனர். தமிழகத்தில் இருந்து எம்.பி.க்கள் குழு வருவதற்கு முன்பே, 24 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் அவர்களது இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழக எம்.பி.க்கள் குழு வந்து சென்ற பிறகு, இதுவரை 57 ஆயிரம் தமிழர்கள் அவர்களின் வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எம்.பி.க்கள் குழுவின் வருகைக்குப் பிறகு இலங்கைத் தமிழர்களை வாழ்விடங்களுக்கு அனுப்பும் பணி இருமடங்காக அதிகரித்துள்ளது.
இலங்கையின் இன்னொரு அமைச்சரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண இலண்டனில் வைத்து சொன்ன இடம் பெயர்ந்தோர் பற்றிய விபரம்:
ஆரம்பத்தில் இருந்தோர்: 306,476
October 4, 2009 இல் முகாம்களில் இருந்தோர்: 237,641 .
குடும்பங்களுடன் இணைக்கப் பட்டோர்:19,675
வேறு முகாம்களுக்கு மாற்றப் பட்டோர்: 15,659
புனர்வாழ்வு அளிக்கப் படுவோர்:2,938
காணாமல் போனோர்: 2,111
மருத்துவ மனைகளில்: 5,425
விடுவிக்கப் பட்டோர்: 23,027
Thursday, 29 October 2009
இந்திய முகத்தில் கரி பூசிய திஸ்ஸ விதாரண
பிரித்தானியப் பாராளமன்றின் கூட்டங்களுக்கான அறை ஒன்றில் இலங்கை தொடர்பாக ஒரு கூட்டம் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. மூன்று நாட்களாக நடக்கும் இக்கூட்டத்தில் இலங்கையில் இருந்து வருகை தந்த பேராசிரியர் திஸ்ஸ விததாரணையுகம் பிரித்தானியாவிற்கான இலங்கையின் உதவித் தூதுவர் அம்சாவும் கலந்து கொண்டனர். பேராசிரியர் வித்தாரண இலங்கையின் இனப்பிரச்சனை தீர்வுக்காக அமைக்கப் பட்ட சர்வகட்சிக் குழுவின் தலைவராவார். அத்துடன் இலங்கையில் கணக்கில்லாத அமைச்சர்களில் அவரும் ஒருவர். இந்த சர்வ கட்சி குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனப்படும் பெரும்பாலான தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியை மஹிந்த அரசு புறக்கணித்தமையும் இங்குறிப்பிடத் தக்கது.
திணிக்கப் பட்ட 13வது திருத்தம்.
அரசியல் கற்றுக் குட்டி என வர்ணிக்கப் பட்ட ராஜீவ் காந்தியை ஆசியக் குள்ள நரி என்று வர்ணிக்கப் பட்ட ஜே ஆர் ஜயவர்த்தனே ஏமாற்றிச் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி இலங்கை அரசியலமைப்பில் தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு கொடுப்பதாகக் கூறிக் கொண்டு செய்யப் பட்ட 13வது திருத்தம் இலங்கைமீது இந்தியாவால் திணிக்கப் பட்ட ஒன்று என அங்கு உரையாற்றிய பேராசிரியர் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அது பங்குபற்றும் மக்களாட்சி முறைப்படி செய்யப் பட்டது அல்ல என்றும் கூறினார். அது மட்டுமல்ல இது பெரிய மாநிலங்களைக் கொண்ட இந்தியாவிற்கே பொருந்தும் என்றும் திருவாய் மலர்ந்தருளினார். இது இந்திய முகத்தில் கரிபூசும் உரையாகும்.
உள்ளூரில் தயாரிக்கப் படும் கிராம மட்டத்தில் அதிகாரப் பரவலாக்கம்தான் உகந்ததாக இருக்கும் என்றார் வித்தாரண. அதாவது தமிழ்நாட்டு உதவாக்கரைக் கோமாளி அரசியல்வாதி மணிசங்கர ஐயர் சொன்ன பஞ்சாயத்துத் தீர்வை வித்தாரண அங்கு முன்வைத்தார். ஆலமரமும் செம்பும் தான் இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வாகும்.
விதாரண சொன்ன இடம் பெயர்ந்தோர் பற்றிய விபரம்:
ஆரம்பத்தில் இருந்தோர்: 306,476
October 4, 2009 இல் முகாம்களில் இருந்தோர்: 237,641 .
குடும்பங்களுடன் இணைக்கப் பட்டோர்:19,675
வேறு முகாம்களுக்கு மாற்றப் பட்டோர்: 15,659
புனர்வாழ்வு அளிக்கப் படுவோர்:2,938
காணாமல் போனோர்: 2,111
மருத்துவ மனைகளில்: 5,425
விடுவிக்கப் பட்டோர்: 23,027
பேராசிரியர் இப்போது தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் மீது கரிபூசுகிறார். அவர்கள் 58000 பேர் விடுவிக்கப் பட்டதாக பிதற்றுகிறார்கள்.
Wednesday, 28 October 2009
அமெரிக்காவின் போர் குற்றப் பூச்சாண்டி ஏன்?
இலங்கையில் 1970-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரத் கட்சி இலங்கா சமசமாஜக் கட்சி(ட்ரொக்சிய வாதிகள்)யுடனும் இலங்கைக் கம்யூனிசக் கட்சியுடனும் இணைந்து போட்டியிட்டுப் பெரு வெற்றியீட்டியது. இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஒரு கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றியீட்டியது. இதனால் பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்ற சிறிமாவே பண்டார நாயக்க பல தனியார் தொழில் நிறுவனங்களை அரசுடமையாக்கினார். காணி உச்சவரம்புச் சட்டத்தை நிறைவேற்றி பலரது காணிகளை அரசுடமையாக்கினார். இலங்கை ஒரு சோசலிஸ நாடாகிவிடுமே என்ற பயம் முதலாளித்துவ நாடுகளிடம் ஏற்பட்டது. இலங்கையின் வழியில் மற்ற நாடுகளுக் சென்றுவிடுமா என்ற பயமும் உருவானது.
PUBLIC LOAN ACCOUNT 480(பொதுக் கடன் கணக்கு 480)
அமெரிக்கா இலங்கைக்கு வழங்கிய உணவுப் பொருளிற்கான பெறுமதியாவும் அமெரிக்காவின் பெயரில் பி.எல்480 என்ற பெயரில் உள்ள கணக்கில் இலங்கை மத்திய வங்கியில் வைப்பில் இடப் பட்டிருந்தது. இதில் இருந்து பெருந்தொகைப் பணத்தை இலங்கைக்கான் அமெரிக்கத் தூதுவர் 1975இல் இருந்து எடுக்க முயன்றார். அப்போது இலங்கையின் நிதியமைச்சராக இருந்த இடது சாரி கட்சியான சமசமாஜக் கட்சியின் என் எம் பெரேரா அதன் உள்நோக்கத்தை உணர்ந்து கொண்டு அதற்கான விளக்கத்தை கோரி அதைத் தடுக்க முயன்றார். சிறிமாவே பண்டார நாயக்கவின் மருமகனும் பல அமைச்சுப் பொறுப்புக்களைத் தன்வசம் வைத்திருந்தவருமான பிலிக்ஸ் டயஸ் பண்டார நாயக்க உடனடியாக அமெரிக்காவிற்கு வரவழைக்கப் பட்டார். அவர் அமெரிக்காவில் இருக்கையிலேயே இலங்கையில் அரசிலிருந்து சமசமாஜக் கட்சியும் அரசிலிருந்து வெளியேறியது. பிலிக்ஸ் டயஸ் பண்டார நாயக்க அமெரிக்காவில் இருந்தே நிதியமைச்சராக அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதுவரகத்தில் பதவியேற்றுக் கொண்டார். அதன் பிற்பாடு சிறிமாவோ பண்டாரநாயக்காவின் சுதந்திரக் கட்சி தந்து தனியார் மயமாக்கற் கொள்கையைக் கைவிட்டது. அடுத்த தேர்தலில் அது படுதோல்வியடந்தது. சமசமாஜக் கட்சியும் கம்யூனிசக் கட்சியும் எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. இல்ங்கையின் பெரும் அரசியல் மாற்றம் வாஷிங்டனில் நிகழ்த்தப் பட்டது.
இப்போது அமெரிக்கா இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் தொடர்பாக ஒரு 73 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. இவ்வாண்டின் ஆரம்பத்திலிருந்தே கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுரகம் பலதரப்பிலிருந்தும் முக்கியமாக பன்னாட்டுத் தொண்டர் அமைப்புக்களிடம் இருந்தும் தினசரி போர்முனைத் தகவல்களைத் திரட்டியுள்ளது என்பது அவ்வறிக்கையைப் பார்க்கும் போது புலப்படுகிறது. இத்தகவல்களை வைத்து அப்போது ஏதுச் செய்யாத அமெரிக்கா எல்லாம் முடிந்த பின் அறிக்கை வெளியிடுகிறது. இவ்வறிக்கையைத் தொடர்ந்து சரத் பொன்சேகா அமெரிக்கவிற்கும் எதிர்க் கட்சியான யூஎன்பியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்தோனிசியாவிற்கும் பயணமானார்கள்.
அமெரிக்காவில் இருந்து சரத் பொன்சேகா கூறியவை:
- தாய் நாடு அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனை மாற்றியமைக்கப் போகிறேன்.
- யுத்தம் தற்போது முடிவடைந்துள்ளது. தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வழி செய்யப்பட வேண்டும்.
- மீண்டும் நாம்,ஒரு பிரபாகரன் தோன்றுவதற்கு வழிவகுத்து விடக்கூடாது.
- நாம் நாட்டை,பிழையான வழியில் செல்ல அனுமதிக்கக்கூடாது. எனவே நாட்டை சரியான வழியில் நடத்திச்செல்ல நான் தயாராக இருக்கிறேன்.
சரத் பொன்சேகா அமெரிக்காவில் உள்ள பௌத்த விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே மேல் உள்ளவற்றைத் தெரிவித்தார். அந்த நிகழ்வில் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசிங்க மற்றும் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் சமந்தா சூரியபண்டார ஆகியோர் பங்கேற்கவில்லை. மஹிந்த ராஜபக்சே சரத்தின் அமெரிக்கப் பயணத்தில் மகிழ்ச்சியடையவில்லை அது தனக்கு வைக்கும் ஆப்பு என்பதைஅவர் உணர்ந்துள்ளாரா?
இதைத் தொடர்ந்து நடந்தவை இன்னும் முக்கிய மானவை. முதலில் சரத் பொன்சேகாவும் ரணில் விக்கிரமசிங்கவும் செய்மதித் தொடர்பினூடாக உரையாடினர். அதன் பின் சிங்கப்பூரில் வைத்து சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு, சிங்கப்பூரில் உள்ள,குரொன் பிளாசா ஹோட்டலில் 25 ம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.
அது மட்டுமல்ல அமெரிக்க போர் குற்ற அறிக்கை தொடர்பாக விசாரிக்கப் படும் என்று இலங்கை அரசு அறிவித்தது. இலங்கை அரசின் கடந்த கால செயற்பாடுகளை அறிந்தவர்கள் அனைவரும் இலங்கை அரசின் விசாரணைகள் பற்றி நன்கு அறிவர். இலங்கை அரசின் விசாரணையில் நம்பிக்கை இல்லை என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கண்காணிப்பகம் அறிவித்தது. ஆனால் அமெரிக்காவோ அதை வரவேற்பதாக அறிவித்தது.
PUBLIC LOAN ACCOUNT 480(பொதுக் கடன் கணக்கு 480) இலங்கையில் கட்சிகளின் கூட்டணியை உடைத்து சுதந்திரக் கட்சியின் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. PUBLIC LOAN ACCOUNT 480(பொதுக் கடன் கணக்கு 480)ஐப் போல போர் குற்ற அறிக்கை இலங்கையில் ஒரு அரசியல் மாற்றத்தையும் வெளியுறவுக் கொள்கை மாற்றத்தையும் இலங்கையில் ஏற்படுத்தப் போகிறது. இதனால் தமிழர்களின் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. கொல்லப் பட்ட அப்பாவிகளுக்கு நீதி கிடைக்கப் போவது மில்லை. வன்னி முகாம்களில் மட்டும் சில கண்துடைப்பு மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
போர் குற்றம் என்பது என்ன? இலங்கை போர் குற்றம் புரிந்ததா?
போர்க்குற்றம்
போர் குற்றம் என்பது போரில் கைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளையோ பழக்கங்களையோ மீறும் செயலாக வரையறுக்கப்படுகிறது. அவ்வாறான சில விதிமுறை மீறல்களில் கொலை, வலிந்து கவரப்பட்ட நிலப்பரப்பில் குடியிருக்கும் அப்பாவி குடிமக்களை சரிவர நடத்தாதல் மற்றும் அவர்களை வதை முகாம்களுக்கு குடியேற்றல், போர் பிணையாளர்களை கொலை செய்தல் அல்லது சரிவர நடத்தாதல், பிணையாளர்களை கொல்லுதல், இராணுவ அல்லது குடிசார் தேவை ஏதும் இல்லாத நிலையில் ஏதேனும் அழிவுகள் மற்றும் நகர்ப்புறங்களையோ அல்லது நாட்டுப்புறங்களையோ அழித்தல் என்பனவும் உள்ளடங்கும்.
இலங்கை செய்த போர்க்குற்றங்கள்
போரில் கைப்பிடிக்கவேண்டிய வற்றை இலங்கை மீறியதா?
- வேறுபட்ட மனித உரிமை அமைப்புக்கள் அமெரிக்கத் தூதுவரகத்திற்கு வழங்கிய தகவல்களின்படி இலங்கை அரசு போரில் சிக்குண்ட மக்களுக்கு உணவு மற்றும்மருந்துப் பொருட்கள் கொண்டு செல்லப் படுவதை இலங்கை அரசு தடுத்தது நிரூபணமாகியுள்ளது.
- பாதுகாப்பு வலயம் என்று இலங்கை அரசு அறிவித்த பகுதிகளில் இலங்கை அரச படைகள் குண்டுகள் வீசியதற்கு போதுமான சாட்சியங்கள் உண்டு.
- போரின் இறுதிநாளில் சரணடையச் சென்ற விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவினர் கொன்றொழிக்கப் பட்டமை போர்க்குற்றமாகும். இதற்கு ஐக்கிய நாடுகளின் அதிகாரிகளும் நோர்வேயின் எரிக் சொல்ஹெய்மும் சாட்சியங்களாகும்.
- வன்னி முகாம்களிலிருந்து மக்கள் அடிக்கடி காணமல் போகுதல் போர்க் குற்றமாகும். வன்னி முகாமில் இருந்து தப்பிவந்த இளம் பெண் ஒருவர் ஊடகங்களுக்கு வழங்கிய தகவல்களின் படி காணாமற்போனவர்களைத் தான் சடலமாகக் கண்டதாகவும் சிறுவர்களை உந்துருளியில் வந்து கடத்திச் செல்வதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
கீழே உள்ள காணொளிகளின் இணைப்புகள் இலங்கையின் போர்குற்ற மீறல்களுக்கான ஆதாரங்களை எடுத்துச் சொல்கின்றன. சில விளம்பரங்களுடன் ஆரம்பிக்கின்றன. அங்கு மீண்டும் சொடுக்கினால் உரிய காணொளிகள் ஆரம்பிக்கும்.
இவை போன்ற பல காணொளி ஆதாரங்கள் உண்டு.
காணொளி - 1
காணொளி - 2
காணொளி - 3
காணொளி - 4
இன்னும் பல சாட்சியங்கள் வன்னி முகாம்களில் மறைந்திருக்கின்றன. பல மறைக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன.
Tuesday, 27 October 2009
தலையிடியாகிய கருணா
இலங்கை அரசின் இன ஒழிப்புப் போரில் உறுதுணயாக இருந்த கருணா இப்போது தலையிடியாக மாறியுள்ளார். இலங்கை அரசிற்கு எதிராக வைக்கப் படும் மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்களில் கருணாவும் முக்கிய இடம் வகிக்கிறார். கருணா வயதில் குறைந்த பிள்ளைகளைத் தனது இயக்கத்தின் ஆயுத நடவடிக்கைகளுக்காக இணைத்தார் என்பது இப்போது மறுக்கப் படமுடியாத உண்மை. கருணா யூனிசெவ்வுடன்(UNICEF) கையொப்பமிட்டு செய்து கொண்ட பிள்ளைகளை சேர்ப்பது சம்பந்தமான உடன்பாடு இதற்கு அத்தாட்சியாக இருக்கிறது. கருணா அரசின் அமைச்சர்களில் ஒருவர். ஆளும் கட்சியின் உபதலைவர். இதன்படி இலங்கை அரசிற்கும் பிள்ளைகளைப் படை நடவடிக்கைகளில் இணைப்பதற்கும் பங்குண்டு. அது மட்டுமல்ல கருணாவின் இந்த சட்ட விரோத செயல்களுக்கு எதிராக இலங்கை அரசு எந்த நடவைக்கையும் எடுக்கவில்லை. இது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல மனித உரிமை அமைப்புக்கள் இலங்கைக்கு எதிராக வைக்கும் குற்றச் சாட்டில் உள்ளடக்கப் படுகின்றன.
இலங்கை அரசு தனது படைத்துறையில் இருந்து தப்பி ஓடி குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவைக்கைகள் எடுக்கும் போது பயங்கரவாதி கருணாவிற்கு மந்திரிப் பதவி இவர்களுக்கு எதிராக நடவடிக்கையா என சிங்களத் தேசியவாதிகள் குரல் எழுப்புகின்றனர்.
இலங்கையின் கூட்டுப் படைத் தலைம அதிகாரி சரத் பொன்சேகாவிற்கு விளையாட்டுத் துறை அமச்சு செயலர் பதவி வழங்கப் பட்டபோது எதிர் கட்சியினர் கருணாவிற்கு அமைச்சர் பதவி சரத் பொன்சேகாவிற்கு செயலர் பதவியா என்று குரல் எழுப்பினர்.
அண்மையில் இலங்கைக்கு சென்ற இந்தியப் பாராளமன்றக் குழுவின் கிழக்கு மாகாணப் பயணம் திடீர் என இரத்துச் செய்யப் பட்டமைக்குக் கருணா-பிள்ளையான் மோதல்தான் காரணம்.
ஆக மொத்தத்தில் கருணா இப்போது இலங்கை அரசிற்கு ஒரு தலையிடி.
மொத்தத்தில்
Monday, 26 October 2009
சிரிக்க: பிரபாகரனைக் காணவில்லை!
Sunday, 25 October 2009
பேராசிரியர் செல்லனி: இந்தியாவின் தேயும் வல்லாதிக்கம்.
டில்லி கொள்கை ஆய்வு மையத்தின் தந்திரோபாயக் கற்கைக்கான பேராசிரியர் பிரம்ம செல்லனி அவர்கள் இலங்கை போரில் தமிழர்களை வெற்றியடைந்தது இந்தியாவின் வல்லாதிக்கம் தேய்வதைக் காட்டுவதாகக் குறிபிட்டுள்ளார். ஆயிரக்கணக்கானொரை கொன்று குவித்து தமிழ்ப் புலிகளை வெற்றிகொண்டு ஐந்து மாதங்கள் கடந்த பின்னும் அமைதி என்பது கிடைக்கத ஒன்றாகவே காணப்படுகிறது என்கிறார் அவர். பேராசிரியர் தொடர்ந்து தெரிவிப்பதின் சாராம்சம்:
- இலங்கையில் போரை முடிவிற்கு கொண்டுவருவதை தீர்மானிக்கும் காரணியாக சீனாவே தனது ஆயுத மற்றும் பண உதவிகளால் இருந்தது. அத்துடன் தனது நண்பன் பாக்கிஸ்த்தானையும் ராஜபக்சேயிற்கு உதவச் செய்தது.
- இப்போது ஐநாவின் போர்க்குற்ற விசாரணைகளுக்கும் இலங்கைக்கான சிறப்புப் பிரதிநிதியை ஐநா நியமிப்பதற்க்கும் எதிரான பாதுகாப்பாக சீனாவே இருந்து வருகிறது.
- சீனாவின் உதவியைப் போல் அல்லாது இந்தியாவின் உதவி சர்வதேச அவதானங்களை ஈர்க்கவில்லை. ஆனால் இந்தியாவும் இலங்கையின் இரத்தக் களரிக்கு இராணுவ உதவிமூலம் பங்காற்றியது. இருந்தும் இலங்கைமீதான இந்தியாவின் பிடி விநோதமாக தளர்ந்து போனது.
- மோசாமன விளைவுகளை ஏற்படுத்திய 1987-1990 காலத்தியஅமைதிப் படை நடவடிக்கையின் பின்னும் அதைத் தொடர்ந்து இடம் பெற்ற புலி உறுப்பினர் ஒருவர் செய்த இராஜீவ் காந்தி கொலையின் பின்னும் இந்தியா இலங்கைமீது ஒரு தலையிடாக் கொள்கையை கடைப் பிடித்தது. ஆனால் சீனா இலங்கையைமீது தனது தந்திரோபாயமான பிடியை அதிகரித்துக் கொண்டது.
- பின்னர் இந்தியா தனது கொள்கையை மாற்றிக் கொண்டது. இலங்கையில் மனிதாபிமானப் பிரச்சனைகள் மோசமடைந்து கொண்டே போய்க் கொண்டிருந்த வேளையில் இந்தியா கட்டற்ற இராணுவக் கடன்கள் வழங்குவதில் இருந்து கடற்படை மற்றும் உளவுத் தகவல்கள் வரை இலங்கைக்கு வழங்கி வந்தது. இலங்கைக் கடறபடை அதிகாரி வசந்த கரன்னகொட புலிகளின் கடற்கலன்களை ஒன்றன் பின் ஒன்றாக இந்தியாவின் உதவியுடன் தாம் அழித்ததாகக் கூறினார்.
- ஆனால் இலங்கையோ தனது பணியை தந்திரமாகவும் சாதுரியாமாகவும் மேற்கொண்டது. இந்தியாவிற்குத் தெரியாமல் ஆயுதங்களை வாங்கிக் குவித்தது. அன்றிலிருந்து இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இந்தியாவின் நீண்டகால நலன்களை கருத்தில் கொள்ளாமல் அதிகாரத்தில் உள்ளவர்களின் தனிப்பட்ட விருப்பங்களை கருத்தில் கொண்டது. இந்தியாவின் கொள்கைத் தடுமாற்றம் கிழட்டு நரி ஜே. ஆர் ஜெயவர்த்தனேயால் ராஜீவ்காந்தி மீது திணிக்கப் பட்டது. அதன் படி ஈழம் என்பது இந்தியாவிற்கு ஏற்புடையதல்ல. ஈழம் நாளடைவில் தமிழ்நாட்டையும் இணைந்த பரந்த ஈழமாக மாறும் என்றதை இராஜீவ்காந்தி உள்வாங்கிக்கொண்டார். அன்று பிரிந்த வங்காள தேசம் ஏன் பரந்த வங்காள தேசத்தை உருவாக்கவில்லை? இப்படி இருக்கையில் ஈழம் மட்டும் ஏன் பரந்த ஈழத்தை உருவாக்கும்?
- அடுத்த இந்தியக் கொள்கை மாற்றம் 2004இல் இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சியால் ஏற்படுத்தப் பட்டது. இந்தியாவின் தந்திரோபாய கருத்துக்களில் இராஜீவ் காந்தியின் கொலைக்கான பழிவாங்கலும் உள்ளடக்கப் பட்டது. அது 2005இல் ஆட்சிக்கு வந்த ராஜபக்சேயின் இராணுவத் தீர்வுத் தெரிவுடன் பின்னிப் பிணைக்கப் பட்டது. இந்நிலையில் உதவியளிக்கவேண்டியது இந்தியாவின் கடமை என்றார் ராஜபக்சே.இந்தியாவின் உதவியும் தாராளமாக வந்தது.
- இந்தக் கொள்கை (தடு)மாற்றம் ஐக்கியநாடுகளின் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு எதிராக மனித உரிமைமீறல் குற்றச் சாட்டைக் கொண்டுவந்த இந்திய வம்சா வழியினரான நவநீதம் பிள்ளையைக் கண்டிக்கும் வரை சென்றது.
- இலங்கைக்கான இந்தியாவின் உதவிகளின் விளைவுகள் படு பாதகமானவை. இந்தியா தனது பின்புறத்தில் ஒரு பாரிய தந்திரோபாய இடைவெளியை சீனாவிற்கு ஏற்படுத்தி விட்டது. இலங்கையில் ஓரங்கட்டப் பட்ட பங்களானாக தன்னை மாற்ற தானே வழிவகுத்தது.
- இராஜீவ் காந்தியின் மனதில் ஜே ஆர் ஜெயவர்த்தனே விதைத்த வினை பல தொடர் நிகழ்விகளை ஏற்படுத்தி இன்றும் இந்தியாவிற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது. இலங்கைக் கொலைகளுக்கும் முகாம்களில் அடைப்பதற்கும் இந்தியாவில் வாழ்தமிழர்களின்பதிலடி இன்மையால் இலங்கை இனக்கொலையின் உச்சக் கட்டத்தில் தமிழ்நாட்டில் ஐக்கிய முற்போக்கு அணிக்கு தமிழர்கள் வாக்களித்தனர்.
- இப்போது இலங்கை முன்பிலும் பார்க்க அதிகமாக இந்தியாவிற்கு செவிசாய்க்க மறுக்கும்.
சர்வதேசத்தின் இலங்கைக்கு எதிரான நிலைப்பாடு தமிழர்களுக்கு சார்பானது அல்ல.
இலங்கைக்கு எதிராக சென்ற வாரம் பல அறிக்கைகள் வந்து குவிந்தன. அவற்றில் முக்கியமானவை:
அமெரிக்க அரசத் திணைக்களம் விடுத்த அறிக்கை: இது இலங்கையில் விடுதலைப் புலிகளையும் இலங்கை அரசையும் குற்றம் சாட்டியுள்ளது. சிறார்களைப் போரில் ஈடுபடுத்தியமை, உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் மக்களுக்கு செல்ல விடாமல் தடுத்தமை, பாதுகாப்பு வலயம் என்ற அறிவிக்கப் பட்ட பிரதேசத்தில் ஆயுதங்கள் பாவித்தமை என்று செல்லும் இவ்வறிக்கையின் முக்கிய அம்சம் அறிக்கை எந்தவித சட்டரீதியான முடிவையும் எடுக்கவில்லை. அறிக்கை எந்த சட்டரீதியான முடிவையும் எடுக்கவில்லை என்று அறிக்கையிலேயே குறிப்பிடப் பட்டுள்ளது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் தேவை. அறிக்கையில் இவ்வாண்டு மே மாதத்தில் மட்டும் இலங்கை அரசு170 போர்க்குற்றங்கள் செய்துள்ளதாக குறிப்பிடப் பட்டிருக்கிறது.
ஐரோப்பியப் பாராளமன்றத் தீர்மானம்: இலங்கையைப் பற்றி கடுமயான நிலைப் பாட்டுடன் ஒரு பிரேரணை ஐரோப்பியப் பாராளமன்றில் சமர்பிக்கப்பட்டது.ஆனால் அதில் பலமாற்றங்கள் செய்யப் பட்டன: இலங்கையை முகாம்களில் மக்களைத் தடுத்து வைத்திருப்பதை "கடுமையக கண்டிப்பதாக" இருந்த வாசகம் நீக்கப் பட்டு "ஆழ்ந்த கவலை" தெரிவிப்பதாக மாற்றப் பட்டது. ஜீஎஸ்பி+ வழங்கப் படக் கூடாது என்ற வாசகம் நீக்கப் பட்டது. பிரேரணையில் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் அவர்களின் பெயர் குறிப்பிடப் பட்டிருந்தது ஆனால் தீர்மானத்தில் அது நீக்கப் பட்டிருந்தது. சில இந்திய உளவுத்துறைக்குச் சார்பான தமிழ் ஊடகங்கள் தீர்மானத்தில் இலங்கையின் அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்திற்கு அமையத் தீர்வு காணப்படவேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளதாகப் பொய் கூறின. பிரேரணையிலோ திர்மானத்திலோ அது இடம் பெற்றிருக்கவில்லை.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கண்காணிப்பகம்: இதன் அதிபராக தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்மணியான நவநீதம்பிள்ளை இருக்கிறார். இவரைப் பற்றி ஏற்கனவே இலங்கை அரசு கடுமையாக விமர்சித்திருந்தது. இவரது பேச்சாளர் இலங்கையில் போர் குற்றம் தொடர்பாக மதியகிழக்கு காஸாவில் செய்தது போல் ஒரு விசாரணை நடாத்தப் படவேண்டும் என்று ஜெரிவித்துள்ளார்.
உலக வங்கி: இலங்கையில் தமிழர்களின் பிரச்சனை தீர்க்கப் பட்டாலே இலங்கையில் முதலீடு செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கைகள் திட்டமிட்டு ஒரேகாலத்தில் வெளிவரச் செய்யப் பட்டவையாகும். அமெரிக்க அறிக்கையுடன் ஒரேகாலத்தில் வெளிவரச் செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானத்தை அவசரமாக நிறைவேற்றியது. இந்த அறிக்கைகளின் விளைவு: இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் எந்தப் பாதுகாப்பு உடன்படிக்கையும் இல்லை அப்படி ஒன்று ஏற்படப் போவதில்லை என்று அறிவித்தார். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐநா ஆகியன வன்னிப் போரில் கொடூரமாகக் கொலைகள் நடந்து கொண்டிருந்த வேளையில் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் புகைப்பட ஆதாரங்களுடன் சமர்ப்பித்த வேளை எந்த நடவைக்கைகளும் எடுக்காமல் கைகட்டி நின்றன. இந்தியாவுடனான வர்த்தக நலன்களை கருத்தில் கொண்டு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவின் வற்புறுத்தலால் மக்களின் பேரழிவிற்கும் பேரவலத்திற்கும் எதிராக நடவிக்கை எடுக்காமல் இருந்தன. இப்போது அறிக்கைகள் விடுவதும் தீர்மானங்கள் போடுவதும் தமிழர்களின் நலன்களுக்காக அல்ல. தமது பிராந்திய நலன்களுக்கும் வர்த்தக மேம்பாட்டிற்கும் இலங்கை சீன உறவு நெருக்கம் அடைவது உகந்தது அல்ல என்று கருதுவதாலேயே அவை இப்படிச் செயற்படுகின்றன. இலங்கைமீது போர்குற்றம் சுமத்தப் படப்போவதாக மிரட்டி இலங்கையை தமது வழிக்குக் கொண்டுவருவதே இவர்களின் நோக்கம்.
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...