Monday 29 June 2020

நேபாளத்தில் சீனாவின் பூபாளம் இந்தியாவின் முகாரி

இந்தியாவுடன் நேபாளம் எல்லைப் பிரச்சனையில் முறுகல் நிலையில் இருக்கையில் 24-06-2020 புதன்கிழமை நேப்பாளத்தின் 33ஹெக்டேயர் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது. நேபாள அரசின் நில அளவைத் திணைக்களத்தின் தகவலின் படி பத்து இடங்களில் சீனாவின் ஆக்கிரமிப்பு நிகழ்ந்துள்ளது. நேபாளத்தின் மீதான சீன ஆக்கிரமிப்பு படைத்துறையை மட்டும் கொண்டதல்ல. கடந்த பல ஆண்டுகளாக சீன உல்லாசப் பயணிகளும், சீன பௌத்த மதகுருக்களும் நேபாளத்தில் சீன ஆதிக்கத்தை பல்வேறு வழிகளில் அதிகரித்து வருகின்றனர். நேபாளத்தின் வர்த்தகம் போக்குவரத்து போன்றவற்றில் சீனர்கள் முதலீடு செய்து அதன் பொருளாதாரத்தை படிப்படியாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். சீனா கைப்பற்றி வைத்துள்ள தீபெத்தில் இருந்து நேபாளத்தை நோக்கி பல தெருக்களை சீனா நிர்மாணிக்கின்றது. அத்தெருக்கள் எல்லை தாண்டியும் செல்கின்றன. சீனாவின் பாணியில் நேபாளத்தில் ஆட்சி செய்வது, மக்களைக் கட்டுப்படுத்துவது, போன்றவற்றில் நேபாளத்திற்கு சீனா பயிற்ச்சியளித்து வருகின்றது.



இரண்டு யானைகளுக்கிடையில் நேபாளம்
நேபாளத்தின் பூகோள அமைப்பு இந்திய சீன புவிசார் அரசியல் போட்டியில் முக்கிய இடம் வகிக்கின்றது. தீபெத்தை இந்தியாவிடமிருந்து பாதுகாக்கவும் இந்தியாவிற்கு எதிரான கவசப் பிரதேசமாகவும் சீனா நேபாளத்தைக் கருதுகின்றது. இரண்டு யானைகள் சண்டையிட்டாலும் காதல் செய்தாலும் அதன் காலடியில் இருக்கின்ற புற்கள் நசிக்கப்படுவது போல் சீன இந்திய உறவிலும் போட்டியிலும் நேபாளியர்கள் மிதிபடுகின்றார்கள் என ஒரு நேபாளக் குடிமகன் பிரித்தானிய ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்திருந்தார். 1992-ம் ஆண்டு இந்தியாவும் சீனாவும் வர்த்தக உறவை மேம்படுத்திய போது லிபுலேக் கடவையூடாக இரு நாடுகளுக்கும் இடையிலான தரைவழி வர்த்தகப் பரிமாற்றத்தை செய்ய ஒப்புக்கொண்டன. ஆனால் லிபுலாக் கடவை தனது ஆதிக்கத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ளது என நேபாளம் ஆட்சேபித்த போது  இரு நாடுகளும் அதை உதாசீனம் செய்தன. லிபுலேக் கடவையூடாக சீனா இந்தியாமீதும் இந்தியா சீனாமீதும் ஊடுருவலை மேற்கொள்ள முடியும் என இரு நாடுகளும் கருதுகின்றன.இதனால் அது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான போட்டிக்களமாகவும் அது உள்ளது. இது இந்தியாவில் லிபுலேக் கடவை என்றும் சீனாவில் கியங்லா பாதை எனவும் அழைக்கப்படுகின்றது லிபுலேக் கடவையில் இந்தியா தனது படையினரை நிறுத்தியதுடன் அதற்கான பாதைகளையும் மேம்படுத்தியுள்ளது. கைலாசத்தின்ற்கு புனிதப் பயணம் செய்வோரின் வசதிக்காக அந்தப் பாதை செப்பனிடப்பட்டதாக இந்தியா சொன்னது. 2019 நவம்பரில் லிபுலேக் கடவையை உள்ளடக்கிய கல்பானி பிரதேசத்தை தனது வரைபடத்தில் இந்தியா உள்ளடக்கியிருந்தது.


முன்னாள் நண்பன் இன்னாள் பகைவன்
நேபாளத்தின் பொதுவுடமைவாதத் தலைவர் மதன் பண்டாரியின் நினவு நாளில் உரையாற்றிய கே பி சர்மா ஒலி  தன்னைப் பதவியில் இருந்து அகற்ற இந்தியாவில் இருந்தும் நேபாளத்திற்கு உள்ளிருந்தும் சதிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார். முன்பு நேபாளத்தின் வெளியுறவுத் துறை அமைச்சராக சர்மா ஒலி இருந்த போது இந்திய நேபாள உறவை அவர் வளர்தெடுத்தார். 2015-ம் ஆண்டு அவர் நேபாள தலைமை அமைச்சரானார். 2015இல் நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் பின்னர் நேபாளத்தின் மீது இந்தியா பொருளாதாரத் தடை விதித்தது. மூன்று புறம் இந்தியாவையும் நான்காம் புறத்தில் சீனாவையும் எல்லையில் கொண்ட நாடாகிய நேபாளம் தனது தேவைகள் பலவற்றை இந்தியாவிலிருந்து செய்யப்படும் இறக்குமதி மூலமாகப் பெறுகின்றது. நேபாளம் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றியதை இந்தியா வெறுத்ததால் இந்தியா பொருளாதாரத் தடையைக் கொண்டு வந்தது. நேபாளம் நிறைவேற்றிய புதிய அரசிலமைப்பு யாப்பு நேபாள இந்திய எல்லையில் வாழும் மாதேசிய இன மக்களுக்கு என போதுமான நிலப்பரப்பை ஒதுக்கவில்லை என்ற படியால் இந்தியா வெறுப்படைந்திருந்தது. மாதேசிய இனமக்கள் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.



இந்தியாவுடன் முரண்படும் நேபாளம்
உத்தராகண்ட் மாநிலத்தின் பகுஹிகள் என இந்தியா உரிமை கோரும் லிம்பியாதுராகாலாபானிலிபுலேக் ஆகிய பகுதிகளை நேபாளம் தன் நாட்டின் பகுதிகளாகச் சேர்க்கும் வகையில் நேபாள பாராளமன்றம் தனது அரசியலமைப்பை திருத்தியுள்ளது. 335 சதுர கிலோ ழ்மீட்டர்(129 சதுர மைல் கொண்ட இந்தப் பிரதேசம் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள அகலம் குறைந்த ஆனால் நீளமான நிலப்பரப்பாகும். புதிய நேபாள வரைபடத்தை வைத்துக் கொண்டு நேபாள தலைமை அமைச்சர் சீனாவில் இருந்தும் இத்தாலியில் இருந்தும் வரும் கொரொன நச்சுக்கிருமிகளிலும் பார்க்க இந்தியாவில் இருந்து வரும் நச்சுக் கிருமிகள் ஆபத்தனவை என்றார். இந்தியாவும் சீனா கஷ்மீரின் லடாக் பகுதியில் மோதிக் கொண்டிருக்கையில் நேப்பாளம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது இந்தியர்களுக்கு கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தின் வரலாறு
1768-ம் ஆண்டு கூர்க்காக்கள் உருவாக்கிய நேபாளத்தின் விரிவாக்கத்தை முதலில் திபெத்தியர் தடுத்து நிறுத்தினர். 1792-ம் ஆண்டு நேபாளத்தை கைப்பற்ற கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனி எடுத்த முயற்ச்சி இழப்பு மிக்க போராகியது. அதன் பின்னர் நேபாளத்தில் இருந்து சிக்கிம் பிரிக்கப்பட்டது. பிரித்தானியாவும் நேபாளமும் செய்த உடன்படிக்கையின் படி தற்போதிய நேபாளம் ஊருவானது. 1923-ம் ஆண்டு பிரித்தானியாவும் நேபாளமும் செய்த உடன்படிக்கையின் படி நேபாளத்தின் இறையாண்மை ஒரு மன்னராட்சியின் கீழ் பாதுகாக்கப்பட்டது. ஆனால் பிரித்தானியா தனது புவிசார் அரசியல் சதுரங்க ஆட்டத்தில் நேபாளத்தை ஒரு காயாகப் பவித்தது.
நேபாள பொருளாதாரம்
147,181 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நேப்பாளம் கடல் மட்டத்தில் இருந்து 1400 மீட்டர் உயரத்தில் உள்ளது. அத்துடன் 8000மீட்டர் உயரமான மலைத்தொடர்களையும் கொண்டது. உலகின் வறுமை மிக்க நாடுகளில் ஒன்றான நேப்பாளம் வெளிநாட்டு உதவிகளிலும் உல்லாசப் பிரயாணிகளின் வருகையிலும் பெரிதும் தங்கியுள்ளது. காற்பங்கு மக்களை வறுமைக் கோட்டின் கீழ் கொண்டுள்ள நாடாகிய நேபாளத்தின் பொருளாதாரம் கொவிட்-19 தொற்று நோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நேபாள அரசு தனது திறனற்ற ஊழல் நிறைந்த ஆட்சியில் இருந்து மக்களைத் திசை திருப்பவே இந்திய நிலப்பரப்பை நேப்பாளத்தினுடையது என்னும் சட்டம் நிறைவேற்றப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தரையால் சூழப்பட்ட நேபாளத்தின் வர்த்தகத்தின் மூன்றில் இரண்டு பங்கு இந்தியாவுடன் செய்யப்படுகின்றது. நேபாளத்தின் வெளிநாட்டு முதலீடுகளில் அரைப்பங்கு இந்தியாவில் இருந்து செய்யப்படுகின்றது. நேபாளத்தின் நாணயம் இந்திய நாணயத்தின் பெறுமதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் நெடுஞ்சாலைகள், இணையவெளி தொடர்புகள், மருத்துவக் கல்லூரிகள், தொழில்நுட்பக் கறகை நிலையங்கள், நலன்புரி நிலையங்கள், பாலங்கள் போன்றவற்றை கடந்த பல ஆண்டுகளாக இந்தியா நிர்மாணித்து வருகின்றது. பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இந்தியாவும் நேபாளமும் சிறந்த உறவைப் பேணி பல துறைகளில் ஒத்துழைப்புக்கள் செய்தன. 1950-ம் ஆண்டு இரு நாடுகளும் செய்த உடன்படிக்கையின் படி ஒரு நாட்டுக் குடிமகன் மற்ற நாட்டுக்கு கடவுட் சீட்டின்றி சென்று பணி புரியலாம், தொழில்கள் ஆரம்பிக்கலாம், சொத்துக்கள் வாங்கலாம். இந்த உடன்படைக்கையால் இந்தியாவிற்ல்கும் நேபாளத்திற்கும் இடையில் உள்ள 1800கிமீ(1118மைல்) நீளமான எல்லை ஒரு கட்டுப்பாடற்ற எல்லையாக இருக்கின்றது. அந்த உடன்படிக்கையில் நேபாளம் தனது பாதுகாப்புத் தேவைகளுக்கு இந்தியாவில் தங்கியிருக்கும் ஏற்பாடு இருப்பதை நேபாளியர்கள் வெறுக்கின்றார்கள். இந்தியாவில் பணிபுரியும் நேபாளியர்களிலும் பார்க்க அதிக அளவு இந்தியர்கள் நேபாளத்தில் பணிபுரிகின்றார்கள். அத்துடன் இந்தியாவில் பணிபுரியும் நேபாளியர்கள் காவலாளிகள் போன்ற குறைந்த ஊதிய தொழிலைச் செய்ய நேபாளத்தில் பணி புரியும் இந்தியர்கள் அதிக வருமானமுள்ள பணிகளைச் செய்கின்றார்கள். நேபாளத்தை உருவாக்கிய தேசத் தந்தை பிரித்வி நாராயண ஷா அவர்களின் திவ்வியபோதனையின் படி நேபாளம் அதன் தென் திசை அயல்நாடான இந்தியாவை விரும்பவில்லை.
புத்தமத வியாபாரம்
கௌதம புத்தர் பிறந்த நேபாளத்தில் தியானம், யோகா போன்றவற்றை உள்ளடக்கிய உல்லாசப்பயணத்துறை பெரும் இலாபகரமான ஒன்றாக இருக்கின்றது. இதில் சீனர்கள் தமது ஆதிக்கத்தை செலுத்த விரும்புகின்றார்கள். நேபாளத்தில் 80 விழுக்காடு இந்துக்களும் பத்து விழுக்காடு இந்துக்களும் இருக்கின்றனர். நேபாளத்தின் இனக் கட்டமைப்பைப் பார்க்கும் போது 82விழுக்காட்டினர் இந்திய-ஐரோப்பியர்களாகவும் 17விழுக்காட்டினர் சீன-திபெத்தியர்களாகவும் இருக்கின்றனர். ஒரே ஒரு இந்து நாடாக இருந்த நேபாளம் தற்போது மதசார்பற்ற நாடாக இருக்கின்றது. இருந்தும் இந்திய நேபாளிய நட்பு மோசமாக இருப்பதற்கு நேபாளத்தின் அரசியல்வாதிகள் இந்தியாவை வெறுப்பதாகச் சொல்லப்படுகின்றது.
சீனா நேபாளத்திற்கு பூ-பாலம் அமைத்திசைக்கும் பூபாளம் இந்தியாவின் முகாரியாகும்.
நேபாளத்தை தன் கவசமாக மாற்ற முயல்வது இந்தியாவிற்கு நேபாளம் கேந்திர முக்கியத்துவம் மிக்க சவாலாகும். நேபாளம் சீனாவின் கைக்குப் போனால் அதைத் தொடர்ந்து ஒரு டொமினோ தொடர் சரிவாக பூட்டானும் சீனா வசமாகலாம். அது இந்தியாவின் இந்தியாவின் சிலிகுரி இணைப்பாதைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம்அசாம்மணிப்புரிமிஸ்ரோம் மேகாலயாநாகலாந்து. திரிபுரா ஏழும் சீனாபூட்டான்மியன்மார் பங்களாதேசம் ஆகியவற்றால் நாற்புறமும் சூழ்ந்திருக்கின்றது. 17 கிலோமீட்டர் அகலமுள்ள சில்குரி இணைப்பாதை இந்தியாவின் பிரதான பகுதியுடன் இந்த ஏழு மாநிலங்களையும் இணைக்கின்றது. இந்தப் பாதையை சீனா துண்டித்தால் அது கோழியின் கழுத்தைத் துண்டித்த நிலைதான் என்கின்றனர் இந்தியப் படைத் துறை நிபுணர்கள். சீனாவின் பட்டியும் பாதையும் முன்னெடுப்பு (BELT & ROAD INITIATIVE - BRI) என்னும் புதிய பட்டுப்பாதைத் திட்டத்தில் 2017-ம் ஆண்டு நேபாளம் இணைந்து கொண்டது. ஆனால் ஒத்துக் கொள்ளப்பட்ட பல திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படாமலே இருக்கின்றது. புதிய பட்டுப்பாதைத் திட்டம் சீனா நேபாளத்தில் ஆழமாகவும் அகலமாகவும் கால் பதிக்க வழிவகுக்கும்.
இந்தியாவைச் சூழவுள்ள நாடுகளில் சீனா ஆதிக்கம் அதிகரிப்பதை அமெரிக்கா விரும்புவதில்லை. இந்தியாவுடன் இணைந்து அந்த ஆதிக்கத்தை வலுவிழக்கச் செய்யும் நடவடிக்கைகளை அமெரிக்க செய்யும். இலங்கை, மியன்மார், பங்களாதேசம், மால தீவு போன்ற நாடுகளில் அமெரிக்கா அப்படிச் செய்தது. அதை நேபாளத்திலும் செய்யும் என நம்பும் வகையில நேபாளத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் குமார் கியவாலியுடன் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மைக் பொம்பியோவுடன் 24-06-2020 புதன்கிழமை தொலைபேசியில் உரையாடினார்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...