Thursday 3 February 2022

அமெரிக்கத்தாக்குதலில் ஐஎஸ் தலைவர் தற்கொலை

 

அமெரிக்காவின் உலங்கு வானூர்திகளு தாக்குதல் ஆளிலிவிமானங்களும் செய்த தாக்குதலில் ஐ எஸ்  எனப்படும் இஸ்ல்லாமிய அரசு  அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹஷிமி அல்-குரேஷி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 03-02-2022 செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். 


சிரியாவின் வட மேற்குப் பகுதியில் துருக்கியை ஒட்டியுள்ள இத்லிப் மாகாணத்தின் Atmeh என்னும் கிராமத்தில் ஒலிவ் மரங்களால் சூழப்பட்ட ஒரு மூன்று மாடிக்கட்டிடத்தில் ஐ எஸ் தலைவர் அல்-குரேஷி தங்கியிருந்தார். அவரது வீட்டின் மீது அமெரிக்கச் சிறப்புப் படையணியினர் அதிகாலை ஒரு மணியளவில் தாக்குதல் நடத்தியபோது கட்டிடத்தின் உள்ளிருந்து பெரிய குண்டு வெடிப்பு நடந்ததாக அமெரிக்கா தெரிவித்தது. கட்டிடம் முற்றுகையிடப்பட்டுள்ளது சரணடையுங்கள் என்ற உரத்த அறிவிப்பைக் கேட்டதாக உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்தார். அல் குரேஷி செய்த தற்கொலைக் குண்டு வெடிப்பினால் அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர் என அமெரிக்கா தெரிவித்தது.

தாக்குதலுக்கு முன்னர் அல்-குரேஷி இருந்த வீட்டைச் சுற்றவர உள்ள வீடுகளின் முன்னர் உலங்கு வானூர்தியால் இறக்கப்பட்ட அமெரிக்கப் படையினர் அவ்வீடுகளில் உள்ள பெண்களையும் சிறுவர்களையும் வெளியேறும் படி பணித்தார்கள். 

 2019-ம் ஆண்டின் பின்னர் சிரியாவில் அமெரிக்கப் படையினர் செய்த இந்தத் தாக்குதல் இரண்டு மணித்தியாலங்கள் நடந்தது. கட்டிடத்தின் சிதைபாடுகளுக்குள் இருந்து கொல்லப்பட்ட நான்கு பெண்களினதும் ஆறு சிறுவர்களினதும் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மொத்தமாக 13 பேர் அங்கு கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகின்றது. தாக்குதல் செய்த இருபத்தி ஐந்து அமெரிக்கப் படையினரும் பாதுகாப்பாக தளம் திரும்பினர்.


குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வட சிரியாவில் உள்ள கொபானி நகரத்தில் உள்ள வான்படைத்தளத்தில் இருந்தே அமெரிக்க உலங்கு வானூர்திகள் பறந்து சென்று தாக்குதல் நடத்தின.  குர்திஷ் போராளிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிரியக் குடியரசுப் படையினரின்(Syrian Democratic Force) உச்தவியுடன் தாக்குதல் செய்யப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது. 

தமது இருப்பிடங்களை மிக இரகசியமாகவும் அடிக்கடி மாற்றிக் கொண்டும் வாழும் ஐ எஸ் அமைப்பின் தலைவரை ஒரு துல்லியத் தாக்குதல் மூலம் அழித்தமை அமெரிக்க உளவுத்துறைக்கு கிடைத்த ஒரு வெற்றியாகும். 

ஈராக்கிலும் சிரியாவிலும் 2010களில் குர்திஷ் மக்களை ஐ எஸ் அமைப்பினர் கொடூரமாக கொலை செய்தனர். அவர்கள் அமெரிக்காவுடன் இணைந்து ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக கடும் தாக்குதல் செய்து வருகின்றனர். 

2019-ம் ஆண்டு ஐ எஸ் அமைப்பின் தலைவர் அல் பக்தாதி கொல்லப்பட்ட பின்னர் ஈராக்கியரான அபு இப்ராஹிம் அல்-ஹஷிமி அல்-குரேஷியை தமது தலைவராக ஐ எஸ் அமைப்பின் சுரா சபை தெரிவு செய்தது. 

பல்லாயிரக் கணக்கான யதீஷிய பெண்களைப் பாலியல் அடிமைகளாக்கிய ஐ எஸ் அமைப்பின் தலை கொய்யப்பட்டது மகிழ்ச்சிக்குரியதே. அமெரிக்காவின் திமிர் அதிகரிக்கின்றது என்பது தான் கவலைக்குரியது.

Wednesday 2 February 2022

அமெரிக்காவிற்கு தப்பி ஓடிய சீன ஹைப்பர்சோனிக் விஞ்ஞானி

 



ஹொங் கொங்கில் இரகசியமாகச் செயற்பட்டு வந்த பிரித்தானிய உளவுப் பிரிவான எம்.ஐ.16இன் உதவியுடன் சீனாவின் ஹைப்பர்சோனிக் (மீயுயர்-ஒலிவேக) ஏவுகணைத்துறையில் பணிபுரிந்த விஞ்ஞானி ஒருவர் காத்திரமான இரகசியங்களுடன் அமெரிக்காவிற்கு தப்பி ஓடியுள்ளார். Aviation Industry Corporation of China என்ற படைத்துறையைச் சேர்ந்த சீன நிறுவனத்தின் hypersonic glide vehicle உருவாக்கும் திட்டத்தில் இவரும் பணிபுரிந்திருந்தார். சீனாவின் இரண்டாயிரம் மைல்கள் பாயக்கூடிய DF-17 ஹைப்பர்சோனிக் ஏவுகணைத் திட்டத்தில் இவர் முக்கிய பங்காற்றியிருந்தார்.

மேற்கு நாடுகள் 5-ஜீ அலைக்கற்றையை நடை முறைப்படுத்துவதில் திணறிக் கொண்டிருக்கையில் சீனா 6-ஜீ அலைக்கற்றையையும் தாண்டி சென்றுள்ளது. படைத்துறையில் சீனா 6-ஜீ அலைக்கற்றையை அறிமுகப்படுத்துவது அதன் படைவலிமையை பலவகையில் முன்னேற்றிக் கொன்டிருக்கின்றது. செய்மதி, தொழில்நுட்பம், ஏவுகணைத்தொழில்நுட்பம், அலைக்கற்றைத் தொழில்நுட்பம், துளிம இயந்திரவியல் (quantum mechanics), செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) ஆகியவற்றை இணைத்த படைக்கலன்களை உருவாக்குவதில் சீனா முன்னேறிக் கொண்டிருக்கின்றது. சீனாவின் கனவு 2030இல் தன்னை ஒரு ஈடு இணையற்ற வல்லரசாக்க வேண்டும் என்பதே.

உலகிலேயே அதிக அளவு மக்கள் தொகை, மிகப் பெரிய ஏற்றுமதி, மிகப் பெரிய வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு, இரண்டாவது பெரிய பொருளாதாரம், இரண்டாவது அதிக படைத்துறைச் செலவு, இரண்டாவது பெரிய படையினர், பெரிய நீர்மின் உற்பத்தி அணை, இரண்டாவது பெரிய அந்நிய முதலீடு, அதிக அளவு உற்பத்தித்துறை ஆகியவற்றைக் கொண்ட சீனா உலகின் மிகப் பெரிய வல்லரசாக வேண்டும் எனவும் அதனது நாணயம் உலக நாணயமாக வரவேண்டும் எனவும் நினைப்பதில் குறை ஒன்றும் இல்லை. அதை எப்படித்தடுப்பது என சீனாவின் போட்டி நாடுகள் தீவிர முயற்ச்சி செய்வதும் ஆச்சரியப்படத்தக்கதல்ல.

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளின் முக்கிய பகுதியான மிதவை வண்டி (Glide Vehicle) தொழில்நுட்பம், ஏவுகணைகளை (Missiles) ஏவூர்திகளில் (Rockets) இணைக்கும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் சீனாவில் இருந்து வெளியேறிய விஞ்ஞானி அறிவும் தகவல்களும் கொண்டிருந்தார் எனத் தகவல் வெளிவந்துள்ளது. ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கிற்கும் அதிகமான வேகத்தில் பாய்வதால் அவற்றை இடைமறித்து அழிப்பது கடினமானதாகும். அத்துடன் மிதவை வண்டி தொழில்நுட்பம் அந்த ஏவுகணையை எதிர்பாராத பதையில் இட்டுச்செல்வதால் அதை சுட்டு வீழ்த்துவதும் கடினம். இந்த தொழில்நுட்பம் பற்றி அறிந்த சீன விஞ்ஞானிக்கு உரிய பதவி உயர்வை சீனாவின் பொதுவுடமைக் கட்சி வழங்காமையினால் அவர் கடும் விரக்தியடைந்திருந்தாராம்.

ஏவூர்திகளில் மிதவை வண்டிகளையும் ஏவுகணைகளையும் இணைக்கும் தொழில்நுட்பம் பற்றி அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்:

https://www.veltharma.com/2021/10/rockets.html

நாடு தாவிய சீன விஞ்ஞானி ஓர் உயர்தர விஞ்ஞானி அல்லர். அவரு நடுத்தர நிலையில் உள்ள ஒருவரே. ஆனாலும் அவர் கடத்திக் கொண்டு செல்லும் தகவல்கள் அவரிலும் பார்க்க பெறுமதி மிக்கதாக இருக்கும். பிரித்தானியாவில் கல்வி கற்ற அந்த சீன விஞ்ஞானி ஒரு துடுப்பாட்டப் பிரியருமாகும். ஹொங் கொங்கில் பணிபுரிந்து கொண்டிருந்த பிரித்தானிய எம்.ஐ.16இன் உளவாளியுடன் அவர் தொடர்பு கொண்டு தனக்கும் தனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் மேற்கு நாட்டில் தஞ்சம் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தாராம். அத்தக் கோரிக்கை அமெரிக்க உளவுத்துறையான சிஐஏயிடம் தெரிவிக்கப்பட்டதாம். உடனே இரண்டு அமெரிக்க உளவாளிகளும் மூன்று பிரித்தானிய உளவாளிகளும் அந்த விஞ்ஞானியையும் அவரது குடும்பத்தினரையும் சீனாவில் இருந்து வெளியேற்றத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தார்களாம்.

2021 ஓகஸ்ட் மாதம் இரசியாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை விஞ்ஞானி ஒருவர் துரோகச் செயலுக்காக கைது செய்யப்பட்டிருந்தார். எப்படிப்பட்ட துரோகச் செயல் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. ஆனாலும் அவர் தொழில்நுட்பத்தகவல்களை இரசியாவின் போட்டி நாடுகளுக்கு விற்பனை செய்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

சீனா விஞ்ஞானியை கடும் ஆபத்துக்களுக்கு நடுவில் கடத்திச் சென்றமை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவிலும் பார்க்க சீனா முன்னிலையில் இருக்கின்றது என்பதை உறுதி செய்துள்ளது. சீன விஞ்ஞானி கொண்டு வரும் தகவல்கள் அமெரிக்காவினதும் பிரித்தானியாவினதும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை உற்பத்தியைத் துரிதப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Tuesday 1 February 2022

இலங்கையின் கடன் நெருக்கடி தீர ஆலோசனைகள்

 


இலங்கை கடன் நெருக்கடி இப்போது தீர்வதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. அதற்காக சில ஆலோசனைகள்:

இலங்கை நடுவண் வங்கியின் முன்னர் ஓர் இலட்சுமி சிலையை வைத்து அதற்கு ஆறுகாலப் பூசை செய்யவும்.

ஒவ்வொரு நாணயக்குற்றியிலும் தாளிலும் குபேரனின் உருவத்தை சேர்க்கவும்

அட்சய திருதியையிலன்று உலகச் சந்தையில் தங்கத்தை வாங்கி வைக்கவும்.

தீபாவளி நாளில், திருப்பதி பெருமாளுக்கே கடன் அளித்த குபேரனையும் மகாலக்‌ஷ்மியையும் விஷேஷமாக வழிபடுவது மிகவும் பயன் தரும். தீபாவளி அன்று மாலை குபேர பூசை செய்யவும் 16 விளக்குகள் நெய்யினால் ஏற்றிக்கொள்ளவும். மஹாலஷ்மிக்கு அர்ச்சனைக்கு வில்வம் இலை,இல்லையெனில் தாமரை பூ அல்லது வெள்ளி காசு , பூக்கள் குங்குமம், குபேரன் படம் இல்லையென்றால் லஷ்மி படம், அர்ச்சனை செய்ய காசுகளை பயன்படுத்தவும்

சக்கரை பொங்கல், பால் தேன், சிறிது நெய் ஆகியவற்றை நெய்வேத்தியமாகப் படைத்து இந்த மந்திரத்தைச் 108 தடவை உச்சரிக்கவும்:

ராஜாதி ராஜாய IMF ஸாஹிநே

நமோ வயம் வைஸ்ரவணாய WORLD BANK குர்மஹே!

ஸ மே காமாந் காம காமாய ADBANK மஹ்யம்

கர்மேஸ் வர வைஸ் ரவணாய PB of China ததாது!

குபேராய வைஸ்ரவணாய, மஹாராஜாய நம!!


வங்கிகளை வாஸ்துப்படி மாற்றி அமைக்கவும்.

அலரி மாளிகையின் குபேர மூலையில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய், சோம்பு ஆகியவற்றை ஒரு மஞ்சள் துணியில் சிறு மூட்டையாகக் கட்டி வைக்கவும்.

இலங்கையின் சாதகத்தில் கடன் தொல்லைக்குரிய ஆறம் அதிபனாகிய சீனேஸ்வரனுக்கு சாந்தி செய்யவும்.

இலங்கைப் பொருள்களை உலகில் உள்ள அனைவரும் வாங்க உலக கொள்வனவாளர்களை வசியம் செய்யவும்.

இலங்கைக்கு கடன் கொடுத்த சீனாவிற்கு எதிராக பில்லி, சூனியம் செய்யவும்.


Monday 31 January 2022

இரசியாவிற்கு எதிரான பொருளாதார தடை பயன் தருமா?

  



உக்ரேன் எல்லையில் இரசியா மொத்தமாக ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட படையினரைக் கொண்ட 56 முதல் 70 வரையிலான உத்திசார் சமரணிகளை (Battalion Tactical Group) நிறுத்தி வைத்துக் கொண்டு தாம் உக்ரேனை ஆக்கிரமிக்கப் போவதில்லை எனச் சொல்கின்றது. நேட்டோ அமைப்பில் உக்ரேனை இணைக்கக் கூடாது, இரசியாவின் எல்லையில் உள்ள நேட்டோ நாடுகளில் குறுந்தூர மற்றும் நடுத்தர ஏவுகணைகளை நிறுத்தக் கூடாது என்பவை உள்ளிட்ட பல நிபந்தனைகளைக் கொண்ட ஓர் ஒப்பந்த நகலை இரசியா ஒரு தலைப்பட்சமாகத் தயாரித்து அதில் நேட்டோ நாடுகள் கையொப்பமிட வேண்டும் என இரசியா நிர்ப்பந்திக்கின்றது. மொத்தத்தில் உக்ரேனின் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு நேட்டோவை இரசியா மிரட்டுகின்றது.

இரசியா வேண்டுவது

உக்ரேனை மட்டுப்படுத்தப் பட்ட இறைமையுள்ள நாடாகவும் இரசியாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாகவும் இரசியாவிற்கான கவசப் பிரதேசமாக இருக்கக் கூடியதாக மற்றுவதற்காகவே இரசிய அதிபரு புட்டீன் தன் படைநகர்வுகளைச் செய்துள்ளார். 2000-ம் ஆண்டே இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் இரசியப் படைத்துறையை ஈடு இணையற்றதாக மேம்படுத்தும் இருபது ஆண்டு திட்டத்தை வகுத்திருந்தார். அத்திட்டம் 2020இல் நிறைவேற்றப்பட்டு சோவியத் ஒன்றியம் போல் மீளவும் ஒரு வலிமை மிக்க நாடுகளின் ஒன்றியத்தை உருவாக்கும் முகமாக 2021 மார்ச் மாதம் உக்ரேனிய எல்லையில் இரசியப்படைகள் குவிப்பது ஆரம்பமானது. அது 2021இன் இறுதியில் ஒரு இலட்சமாக அதிகரிக்கப்பட்டது. உக்ரேனின் கிழக்குப் பகுதியில் உள்ள இரசியர்கள் பெரும்பான்மையாக வாழும் டொன்பாஸ் பிரந்தியத்தில் 2014-ம் ஆண்டில் இருந்து ஒரு பிரிவினைவாதப் போர் நடக்கின்றது. அதை ஒரு தனிநாடாக இரசியா ஏற்றுக் கொண்டுள்ளது. அதை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொள்லவில்லை. அங்குள்ள அரசுக்கு ஒரு சிறப்பு நிலை உருவாக்குவதும் இரசியாவின் நோக்கமாக இருக்கின்றது. உக்ரேனை இரசியாவில் இருந்து பாதுகாக்க நேட்டோப் படைகள் களமிறங்க மாட்டாது என நேட்டோ தெரிவித்துள்ளது. இரசியா தனது நிலப்பரப்பில் மட்டுமல்ல தனது நட்பு நாடான பெலரஸிலும் தான் ஆக்கிரமித்து வைத்துள்ள கிறிமியாவிலும் கருங்கடலிலும் அஜோவ் கடலிலும் உக்ரேன் மீது தாக்குதல் நடத்த தன் படையினரைக் குவித்து வைத்துள்ளது.

ஏவுகணைப் பிரச்சனை

பாயும் தூரங்களை அடிப்படையாக வைத்து மரபுவழி ஏவுகணைகளும் அணுக்குண்டு தாங்கிச் செல்லும் ஏவுகணைகளும் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

1. நடுத்தரதூர ஏவுகணைகள் 1000-5500 கிமீ (620-3420மைல்)

2. குறுந்தூர ஏவுகணைகள் 500-1000கிமீ (310-620மைல்)

3.  கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் இவை 5500கிமீ (3400) மைல்களுக்கு மேல் பாயக் கூடியவை.

அமெரிக்காவும் இரசியாவும் இந்த அணுக்குண்டு உற்பத்தியை மட்டுப்படுத்த சீனா அவற்றின் உற்பத்தியை அதிகரித்தது. இதை சாட்டாக வைத்துக் கொண்டு அமெரிக்கா நடுத்தர தூர ஒப்பந்த த்தில் இருந்து வெளியேறியது. அமெரிக்கா இரசியாவின் எல்லை நாடுகளில் நடுத்தர தூர அணுக்குண்டு தாங்கிச் செல்லும் ஏவுகணைகளை நிறுத்தக் கூடாது என்பது இரசியாவின் வேண்டுகோள்களில் ஒன்றாக இருக்கின்றது.

பொருளாதாரத் தடைகளுக்கான முன்னேற்பாடுகள்

உக்ரேனை இரசியா ஆக்கிரமித்தால் அதற்கு எதிராக கொண்டு வரப்படவிருக்கும் பொருளாதாரத் தடை எல்லாத் தடைகளிற்கும் தாயாக அமையும் என அமெரிக்கா தெரிவிக்கின்றது. அமெரிக்கப் நாடாளுமன்றத்தின் மூதவை உறுப்பினரகள் இரசியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிப்பதற்கான சட்ட மூலத்தை தயாரித்துக் கொண்டிருக்கின்றனர். சில பொருளாதாரத் தடைகள் உக்ரேன் மீது இரசியா ஆக்கிரமிப்பு நகர்வுகளைச் செய்ய முன்னரே நடைமுறைப்படுத்தப்படும். இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடை கத்தியில் நடப்பதைப் போலாகும். இரசியாவின் எரிபொருள் உற்பத்தியையும் ஏறுமதியையும் பாதிக்க்க கூடிய வகையில் பொருளாதாரத் தடை கொண்டு வந்தால் அது அமெரிக்கா உட்பட உலக பொருளாதாரத்தை பாதிக்கும். இரசியாவில் பணவீக்கம், பங்குச் சந்தைச் சரிவு, போன்றவற்றை ஏற்படுத்தக் கூடிய வகையில் பொருளாதாரத் தடை செய்வது பற்றி தீவிர ஆலோசனகள் அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் செய்யப்படுகின்றன. இரசியாவின் பெரிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீது பொருளாதாரத்தடை கொண்டு வருவதுடன் புட்டீன் உட்பட இரசியாவில் உள்ள பெரும் செல்வந்தர்களின் மீதும் பொருளாதாரத் தடை மற்றும் பயணத்தடை விதிக்கப்படலாம். இரசிய திறைசேரி விற்பனை செய்யும் கடன் முறிகள் மீதான முதலீட்டிற்கும் தடை விதிக்கப்படலாம். பிரித்தானியாவிலும் 2022 பெப்ரவரி முதலாம் திகதி இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத்தடை கொண்டு வருவதற்கான சட்டஙகள் நிறைவேற்றப்படலாம். இரசியப் பொருளாதாரத்தைப் பாதிக்கக் கூடிய வகையில் அதற்கான ஏற்றுமதிகள் மீது தடை விதிக்கப்படலாம். கொவிட்-19 தொற்று நோயினால் உருவான பல பொருளாதாரப் பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியாமல் இருக்கும் மேற்கு நாடுகளுக்கும் இரசியா மீதான பொருளாதாரத் தடை பாதிப்பை ஏற்படுத்தலாம்.

SWIFT கொடுப்பனவு முறைமையில் இருந்து விலக்கல்

உக்ரேனை இரசியா ஆக்கிரமித்தால் பன்னாட்டு கொடுப்பனவு அமைப்பான Society for Worldwide Financial Telecommunication (SWIFT)இல் இருந்து இரசியா வெளியேற்றப்படலாம். 2014-ம் ஆண்டு அமெரிக்கா இரசியாவை SWIFTஇல் இருந்து வெளியேற்ற முற்பட்ட போது அப்படிச் செய்தால் அமெரிக்காவுடனான எல்லா அரசுறவியல் தொடர்புகளையும் துண்டிப்பேன் என்ற பதில் மிரட்டலை புட்டீன் விடுத்தார். இரு அணுக்குண்டு வல்லரசுகள் தொடர்பாடல் அற்ற நிலையில் இருப்பது மிகவும் ஆபத்தான ஒன்று என்ற படியால் அமெரிக்கா தனது நடவடிக்கையை நிறுத்தியது. மீண்டும் அதைச் செய்யும் முயற்ச்சியில் அமெரிக்கா இணங்கலாம். இரசியா மீது ஒரு பொருளாதாரப் போர் தொடுக்க அமெரிக்கா முயன்கின்றது. 2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனின் கிறிமியாவை ஆக்கிரமித்த போதும் அதற்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. இரசிய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் இரசியா விட்டுக்கொடுக்கவில்லை.

தயார் நிலையில் உள்ள இரசியா

2014இன் பின்னர் இரசியா தனது வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பை அதிகரித்துள்ளது. தற்போது அது $639 பில்லியனாக உள்ளது. இரசியாவின் வெளிநாட்டுக்கடன் அதன் மொத்த தேசிய உற்பத்தியின் 20% மட்டுமே. அமெரிக்காவின் கடன் 133% ஆகும். 2014இன் பின்னர் இரசியா தனது உள்நாட்டு உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தியை பெருமளவு அதிகரித்துள்ளது. சீனாவிற்கான இரசிய ஏற்றுமதி ஆண்டுக்கு $100பில்லியனாக உயர்ந்துள்ளது. சீனாவிற்கான எரிபொருள் விநியோகத்தையும் இரசியா அதிகரித்துள்ளது. கணினிகளின் இதயமான குறைகடத்திகள் (Semi-conductors) உற்பத்தியில் அமெரிக்கா, தைவான், தென் கொரியா ஆகிய நாடுகள் முன்னணியில் இருக்கின்றன. அவற்றை இரசியாவிற்கு ஏற்றுமதி செய்வதைத் தடை செய்தால் அதில் இருந்து விடுபட இரசியாவும் சீனாவும் இணைந்து செயற்படலாம்.

இரசியர்கள் பல நெருக்கடிகளை தாங்கி நிற்கும் ஆற்றலும் தேசப்பற்றும் உள்ளவர்கள். மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்படும் இரசியர்கள் இரசிய ஆட்சியாளர்கள் மீது வெறுப்புக் கொள்வார்கள் என அமெரிக்கா நினைக்கின்றது. அதேவேளை இரசியர்களுக்கு மேற்கு நாடுகள் மீது உள்ள வெறுப்பை மேலும் அதிகரிக்கச் செய்யலாம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...