Saturday 13 December 2008

நெஞ்சில் நீ நிதமாடும் பரதம்

அதிகாலை அலாரம் அடித்து தூக்கம் கலைந்து
திடுமென விழித்தெழுந்து இடமெது வருடமெது
திகதி எது நாள் எது என்றுணரு முன்னமாகவே
புஸ்ப்பாஞ்சலியாய் வந்து புன்னகைக்கும் நின் முகம்
.........
காலைக் கடன் தீர்த்து பல் தேய்த்து உடல் குளித்து
உடுப்பெடுத்து மாற்றி தலை சீவி முகம் திருத்தி
உணவெடுத்து மெல்ல உண்ண முனைந்தால்
அல்லாரிப்பில் வந்து புல்லரிக்க வைக்கும் நின் முகம்
........
நேரம் போனது தெரிந்து துடித்தெழுந்தோடி
தெரு பல கடந்தோடி படிகள் பல வேறி
தொடரூந்தில் தட்டுத் தடுமாறி ஏறினால்
ஜதிஸ்வரத்திலோர் சுதி சேர்க்குது நின் முகம்
........
கதியெனும் கதரினுக்கு காலை வணக்கம் சொல்லி
மெல் எனும் மெல்சனுக்கு கிரிக்கெட் கதை சொல்லி
ஆசனத்தில் சென்றமர்ந்தால் மொனிட்டரில் வந்து
காம்போதியில் ஒரு ஸப்தமாக வந்தாடுது நின் முகம்.
.........
பாதீட்டோடும் பேரேட்டோடும் காசுப் பாய்ச்லோடும்
பங்குச் சுட்டேண்ணோடும் வட்டி வீதத்தோடும்
இணங்காக் கணக்கோடும் சுணங்காமல் போராட
இராகமாலிகையில் ஒரு வர்ணம் தீட்டுது நின் முகம்
..........
களைப்போடு வீடுவந்து நாடகம் பார்க்கும் தாயை நச்சரித்து
சூட்டோடு ஒரு பானம் சுகமாகப் பருகி முடித்து
பாட்டோடு விசிலடித்து அப்பாடா என்று சாய்ந்தால்
கதனகுதூகலத் தில்லானாவில் என்னைக் கலங்கடிக்குது நின் முகம்
.........
நாள்தனை முடித்து நாலையும் எண்ணிப் படுக்கையில் விழுந்து
பலதையும் என் வாலிப மனதில் போட்டுக் குழம்பி
களைத்தும் சோர்ந்தும் தவிக்கும் என் வயது வேட்கைக்கு
என்றுதான் வந்து மங்களம் பாடும் உன் இனிய உறவு

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...