Monday, 25 July 2016

எதிர் காலத்தில் இந்தியப் படைத்துறையின் வலிமை

அமெரிக்காவின் National Interest என்னும் ஊடகம் 2030-ம் ஆண்டு உலகின் தலை சிறந்த தரைப்படையை இந்தியா கொண்டிருக்கும் என எதிர்வு கூறியுள்ளது. இரண்டாம் இடத்தில் பிரான்ஸ், மூன்றாம் இடத்தில் இரசியா, நான்காம் இடத்தில் ஐக்கிய அமெரிக்கா, ஐந்தாம் இடத்தில் சீனா என்பவை இருக்கும் என்கின்றது National Interest. ஒரு பிரதேசத்தை கைப்பற்றுதல் அல்லது விடுவித்தல் தரைப்படையின் முக்கிய பணியாகும். ஆனால் தீவிரவாதிகளுக்கு எதிரான படை நடவடிக்கைகள் எதிர்காலத்தில் தரைப்படைகளின் பணிகளில் முன்னிலை வகிக்கப்போகின்றது. இந்தியா உலகப் பெரு வல்லரசாகும் என்பது சர்ச்சைக்குரியதாயினும் சாத்தியமற்ற ஒன்றல்ல. பாக்கிஸ்த்தானிடமிருந்தும் சீனாவிடமிருந்தும் வரும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துக் கொண்டு போகையில் இந்தியா தனது படை வலுவை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

கட்டுக்கோப்பான இந்தியப் படைத்துறை
இந்தியத் தரைப்படையின் வலிமைக்கு இந்தியக் கலாச்சாரமும் ஒத்துப் போகின்றது. உலகிலேயே மிகக் கட்டுக்கோப்பான படைத்துறை இந்தியப் படைத்துறை எனவும் கருதப்படுகின்றது. மேலதிகாரியின் கட்டளைகளை அடிபணிந்து ஏற்றுக் கொள்வது இந்தியாவின் சமூகக் கட்டமைப்பில் ஊறிப்போயுள்ளமை இந்தியப் படைத்துறைக்கு மிகவும் வாய்ப்பாக அமைகின்றது. அதிலும் உயர் சாதிக்காரர்களின் கட்டளைகளை கீழ்ச் சாதிக்காரர்கள் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும் எனப் பல்லாண்டுகாலமாக இருக்கும் நடை முறையும் இந்தியப் படைத்துறைக்கு ஏற்புடையதாகவே இருக்கின்றது. 

சாதகமான மக்கள் தொகைக் கட்டமைப்பு
உலகில் படைத்துறையின் முன்னணியில் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு மட்டுமே சாதகமான மக்கள் தொகைக் கட்டமைப்பு உண்டு. இந்தியாவுடன் ஒப்பிடுகையில் மற்ற நாடுகளில் வயோதிபர்களின் தொகை அதிகமாகவும் இளையோரின் தொகை குறைவாகவும் உள்ளது. இந்த நிலைமை சீனாவில் மிக மோசமாக உள்ளது. அத்துடன் சீனா தனது படைத்துறையில் ஆளணியினரைக் குறைக்கும் திட்டத்தைச் செயற்படுத்தத் தொடங்கி விட்டது. இந்தியா தனது படையினரை அதிகரிக்கும் திட்டத்துடனேயே இருக்கின்றது. இதனால் எதிர்காலத்தில் இந்தியா உலகிலேயே அதிக அளவு படையினரைக் கொண்ட நாடாக மாறும் வாய்ப்பு உள்ளது. 

புதியவை புகுத்தும் இந்தியப் படைத்துறை
1987-ம் ஆண்டு அமைதிப் படை என்னும் பெயரில் இலங்கை சென்ற இந்தியப் படையினரின் சிறு பிரிவுகள் தமது தொலை தொடர்புக் கருவிகளைத் தோளில் சுமந்து சென்றதாகவும் விடுதலைப் புலிகள் சட்டைப்பைகளில் வைத்திருக்கக் கூடிய புதிய தர தொலை தொடர்புச் சாதனங்களை வைத்திருந்ததனர்.  இந்தியப் படையினர் தொழில்நுட்பத்தில் பிந்தங்கி இருந்ததாக அப்போது படைத் துறை விமர்சகர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர். பாக்கிஸ்த்தானுடனான கார்கில் போரின் போது செய்மதியூடான சிறந்த தொடர்பாடல்களையோ நிலையறியும் தொழில்நுட்பமோ இந்தியப் படைகளிடம் இருக்கவில்லை என்றும் இஸ்ரேலியப் பாதுகாப்புத் துறையினர் நேரடியாக வந்து இந்தியப் படைகளுக்கு உதவி செய்தனர் என்றும் செய்திகள் அப்போது வெளிவந்திருந்தன. இவற்றின் பின்னர் இந்தியப் படை தனது தொழில்நுட்பத்தை கவனமாக முன்னேற்றிக் கொண்டிருக்கின்றது.

தொழில்நுட்ப மேம்பாடு
தற்போது இந்தியா இஸ்ரேல், இரசியா, பல மேற்கு ஐரோப்பிய நாடுகள் இந்தியாவிற்கு தமது படைத்துறைத் தொழில்நுட்பத்தை வழங்கத் தயார் நிலையில் உள்ளன. ஐக்கிய அமெரிக்காவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனது படைத்துறை ஏற்றுமதியை இந்தியாவிற்குச் செய்து கொண்டிருக்கின்றது. சவுதி அரேபியாவிற்கு அடுத்த படியாக அதிக அளவு அமெரிக்கப் படைக்கலன்களை வாங்கும் நாடாக இந்தியா தற்போது உள்ளது. உலகப் படைகலச் சந்தையில் அதிக அளவு கொள்முதல் செய்யும் நாடாக இந்தியா இருக்கின்றது. இது இந்தியாவின் படைத்துறையின் தொழில்நுட்பத்தை மேம்படுத்த பேருதவியாக இருக்கின்றது. இனிவரும் காலங்களில் இந்தியா பல புதிய படைத்துறைத் தொழில்நுட்பங்களை மற்ற நாடுகளிடமிருந்து வாங்குவதோடு மட்டுமல்லாமல் உள்நாட்டிலும் அதன் உற்பத்தியை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. 

புதிய இந்தியப் படை வீரர்
எதிர் காலத்தில் இந்தியப் படைவீரன் ஒருவன் எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு திட்டத்தை இந்தியா வகுத்து அதை நிறைவேற்றி வருகின்றது. எதிர் காலத்தில் இந்தியத் தரைப்படையின் வீரனிடம் குண்டு துளைக்காத தலைக்கவசம்இரவில் பார்க்கக் கூடிய கண்ணாடிதீப்பிடிகாததும் குண்டு துளைக்காததுமான பாரம் குறைந்த சீருடைஇருக்கும் இடம் போகவேண்டிய இடம் பற்றிய தகவல்கள் வழங்கும் GPSகருவிகள்சிறு கணனிகள் பொருத்தப்பட்டட துப்பாக்கிஅதில் இலக்கை நோக்கித் துல்லியமாகச் சுடக்கூடியவகையில் லேசர் கருவிகள்சூழ்நிலை எதிரிகள் போன்ற தகவல் அறியும் வெப்ப  உணரிகள், GPS உணரிகள் மூலம் எதிரியின் இலக்குகளை நோக்கி துல்லியமாக வீசக் கூடிய கைக்குண்டுகள்எதிரியின் கணினிகளைக் குழப்பக்கூடியதும் சக படைவீரனால் இனம் காணக்கூடியதாகவும் மிகச்சிறு உள்ளங்கைக் கணினி (palmtops) செய்மதிக் கைப்பேசிகள், infrared sensors, thermal sensors, electro optical sensors, spectroscopic sensors, electromagnetic and radio frequency sensors எனப் பலவிதமான உணரிகள் எனப் பலதரப்பட்ட புதிய கருவிகள் இருக்கும்.

படைக்கலன்கள்
இந்தியாவின் தரைப்படை தனது படைக்கலன்களை புதியனவாக்கிக் கொண்டே இருக்கின்றது. உள்ளூர் உற்பத்தியும் சிறப்பாக்கப் பட்டுக் கொண்டே இருக்கின்றது. இந்தியாவின் பினாக்கா பல்குழல் ஏவுகணைச் செலுத்தி  120 கிலோ மீட்டர் தூரத்திற்கு  ஏவுகணைகளை வீசக் கூடியவை. ஒரு பினாக்காவில் 288 ஏவுகணைகள் இருக்கும். இவை தரைப்படையின் செயற்பாட்டிற்கு மிகவும் உதவியாக இருக்கும். தரைப்படைக்கு அடுத்து அத்தியாவசியமான படைக்கலன் தாங்கிகளாகும். இரசியாவின் T-90 தாங்கிளை இந்திய மயப்படுத்தி அவற்றிற்கும் பிஷ்மா என்ற மகாபாராதப் பாத்திரத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவை இரசியாவின் மூன்றாம் தலைமுறைத் தாங்கிகளாகும்.   இவற்றில் 1250 தாங்கிகள் இந்தியாவிடம் இருக்கின்றன.  முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படுபவை அர்ஜுண் தாங்கிகள். இவை பீஷ்மாவிலும் பெரியவை. பல சிக்கல்களுக்குப் பின்னர் அவை மேம்படுத்தப்பட்டு தற்போது இந்தியத் தரைப்பட்டையின் அச்சாணியாக அவை விளங்குகின்றன. இவற்றின் தொழில்நுட்பம் இஸ்ரேலிடமிருந்து பெறப்பட்டவையாகும். இவற்றின் 120மில்லி மீட்டர் ரைபிள் துப்பாக்கிகள் பொருத்தப் பட்டுள்ளன. மணித்தியாலத்திற்கு 70 கிலோ மீட்டர் கதியில் நகரக் கூடியவை.
 
வேவுபார்க்கும் திறன்
இந்தியாவின் தரைப்படைக்கு அவசியமான வேவுபார்த்தல் திறன் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிடம் தற்போது உள்ள Airborne Early Warning and Control System (AWACS) என்னும் வான் சார் முன்னதான எச்சரிக்கை முறைமை கொண்டவிமானங்கள் அதன் தரைப்படைக்கு பேருதவியாக உள்ளது. இரசியாவிடமிருந்து வாங்கிய விமானங்களில் இஸ்ரேலிய ரடார்களையும் வேறு உணரிகளையும் பொருத்தி இந்தியா இந்த AWACSஐ உருவாக்கியுள்ளது. இந்த ரடாரால் 360 பாகியில் பெரும் நிலப்பரப்பை வருடி உணர முடியும். இந்தியா இஸ்ரேலிடமிருந்து பல புதிய தர ஆளில்லாப் போர் விமானங்களை வாங்கியதுடன் உள்நாட்டிலும் அவற்றை உற்பத்தி செய்து வருகின்றது. இந்தியா தனக்கென ஒரு GPSசெய்மதியையும் விண்வெளியில் மிதக்க விட்டுள்ளது. 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடைசியானதும் ஏழாவதுமான GPS செய்மதி விண்வெளிக்கு ஏவப்பட்டது. உலக நிலைப்புள்ளியறி முறைமை எனப்படும் GPS  மூலம் படையினர் தமது நிலைகளையும் எதிரியின் நிலைகளையும் அறிவதோடு   உளவாளிகளும் வேவு பார்ப்போரும் எதிரியின் நிலைகள் நகர்வுகள் பற்றிய தகவல்களை இலகுவாகவும் துல்லியமாகவும் பரிமாறிக் கொள்ளலாம். ஐக்கிய அமெரிக்கா, இரசியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் இந்தியாவும் நான்காவதாக தனக்கென ஒரு GPS செய்மதி முறைமையை உருவாக்கியுள்ளது. சீனா 2020-ம் ஆண்டுதான் இந்த வசதியைப் பெறும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

உளவுத் திறன்
விடுதலைப் புலிகள் நகர்சார் போரில் மட்டுமே திறனுடையவர்கள் அவர்கள் கண்ணி வெடிகளை வைத்து விட்டு கட்டிடங்களின் பின்னால் நின்று போர் புரிவதில் மட்டும் திறன் மட்டுமே உடையவர்கள் என்ற பிழையான உளவுத் தகவல் இந்தியப் படையினரின் செயற்பாட்டிற்கு குந்தகமாக அமைந்தது. 2015-ம் ஆண்டு இந்தியாவிற் செயற்பட்ட பக்கிஸ்த்தானிய உளவுத் துறையான ஐ.எஸ்.ஐஇன் உறுப்பினர்கள் பலரைக் கைது செய்து பக்கிஸ்தானிய உள்வுத் துறையை வேரோடு அறுத்ததன் மூலம் இந்திய உளவுத் துறை தனது திறமையை வெளிக்காட்டியது. அமெரிக்காவின் சிஐஏயும் இஸ்ரேலின் மொசாட்டும் தமது ஆசிய நாட்டு உளவு நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் உதவியைப் பெறுகின்றன. பாக்கிஸ்த்தான், பங்களாதேசம், மியன்மார், இலங்கை, மாலைதீவு ஆகிய நாடுகளில் இந்திய உளவுத்துறை வலுமிக்கதாக இருப்பதால் அதன் உதவி அந்த இரு உளவுத் துறைக்கும் தேவைப் படுகின்றது. இதற்குப் பதிலாக இந்தியாவிற்கு தமது உளவுத் தகவல்களை அவை பரிமாறிக் கொள்கின்றன. இலங்கையிலும் மியன்மாரிலும் நடந்த ஆட்சி மாற்றங்களில் மூன்று உளவுத் துறைகளும் இணைந்து செயற்பட்டதாகவும் நம்பப்படுகின்றது. 


இணையவெளிப் போர் முறைமை
மென்பொருள் துறையில் சிறந்து விளங்கும் இந்தியா இணைய வெளிப் போர் முறையில் முன்னணியில் இருக்க வேண்டும். மற்றப் போர் முறைமைகளுடன் ஒப்பிடுகையில் இணையவெளிப் போர் முறைமைக்கு குறைந்த அளவு நிதி ஒதுக்கீடே தேவைப்படும் ஆனால் அதிக ஆளணி தேவைப்படும்.  இதனால் இணையவெளிப் ோர் முறையில் சீனா முன்னணியில் இருக்கின்றது. சீன இணைய ஊடுருவிகள் பலதடவை இந்தியப் படைத்துறைக்குத் தெரியாமல் அவர்களின் கணனிகளை ஊடுருவி பல தகவல்களைப் பெற்றுள்ளார்கள் என நம்பப்ப்டுகிறது. இதில் எந்த அளவு தகவல்கள் பாக்கிஸ்தானுக்குப் பரிமாறப்பட்டது என்பது பெரும் கேள்வி. மும்பையைச் சேர்ந்த ஒரு இணையவெளி ஊடுருவி தான் அரச அதிகாரிகளுக்கு தனது வைரஸை இணைப்பாகக் கொண்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பினால் அதில் 75% மானவர்கள் அதைத் திறந்து பார்ப்பார்கள் என்றும் அதன் மூலம் தன்னால் பல அரச செயற்பாடுகளை மறு நாள் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றார். இந்தியா இந்த நிலைமையை மாற்றி வரும் காலங்களில் இணைய வெளிப் போர் முறைமையில் முன்னணியில் திகழும் வாய்ப்பு நிறைய உண்டு. 


களம் பல கண்ட இந்தியத் தரைப்படை
பாக்கிஸ்த்தானுடன் செய்த போர்கள் இந்தியப் படையினருக்கு நிறைய அனுபவங்களைக் கொடுத்துள்ளது. இலங்கைக்கு அமைதிப் படையை கடல் கடந்து நகர்த்தியமை இந்தியாவிற்கு ஒரு சிறந்த படை தைக் கொடுத்துள்ளது. உலகிலேயே அதிக அளவு விழிப்புடன் இருக்க வேண்டிய ஒரு படையாக இந்தியத் தரைப்படை இருக்கின்றது. எந்த நேரமும் எந்தத் திசையிலும் பாக்கிஸ்த்தானில் இருந்து படையினர் அல்லது தீவிரவாதிகள் ஊடுருவும் அச்சத்தை இந்தியா தொடர்ந்து எதிர் கொண்டு வருகின்றது. உள் நாட்டில் பல பிரிவினைவாத அமைப்புக்களுக்கும் தீவிரவாத அமைப்புக்களுக்கும் எதிராக இந்தியப் படையினர் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கின்றார்கள். 

வல்லரசாவதிலும் பார்க்க வலிமை மிக்க அரசாக வேண்டும்.
ஜப்பான் தனது அரசியிலமைப்பு யாப்பை மாற்றி ஒரு தாக்குதல் படைத்துறையாக மாற்றும் சாத்தியங்கள் தற்போது அதிகரித்துள்ளன. ஜப்பானியத் தலைமை அமைச்சர் சின்சோ அபே இந்தியாவுடன் படைத் துறை ஒத்துழைப்பைப் பெரிதும் விரும்புகின்றார். ஜப்பான், இந்தியா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து சீனாவிற்கு எதிரான ஒரு படைத் துறைக் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பது அபேயின் பெரும் விருப்பம்.   அதற்க்கு இந்தியாவிற்கு இரு தடைகள் உண்டு. முதலாவது இரசியாவின் நட்பு இந்தியாவிற்கு அவசியம். இரசிய நட்பு மிகவும் நம்பகரமானது என்பதை பங்களாதேசப் போரின் போது நிரூபிக்கப் பட்டுள்ளது. இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் இரு நிரந்தர உறுப்புரிமை பெறும் வரை இந்தியாவிற்குத் தேவைப்படும் போதெல்லாம் அதற்கு சாதகமாக தனது வீட்டோ என்னும் இரத்து அதிகாரத்தை இரசியாவைத் தயார் நிலையின் வைத்திருத்தல் இந்தியாவிற்கு அவசியம். இரண்டாவது  பாதுகாப்புச்  சபையில் இந்தியா நிரந்தர உறுப்புரிமை பெறும்வரை சீனாவைப் பகைக்கக் கூடாது. ஆனால் இந்தியா வலிமை மிக்க அரசாவதற்கு சீனாவை மிஞ்சி சில காரியங்கள் பார்க்க வேண்டிய அவசியம் உண்டு. ஜப்பானுடன் இணைவதால் இந்தியாவால் உலகத் தரம் மிக்க படைக்கலன்களை உற்பத்தி செய்ய முடியும். அதன் மூலம் எல்லா நாடுகளையும் விஞ்சிய ஒரு வலிமை மிக்க அரசாக இந்தியாவால் மாற முடியும்.  பின்பு நிரந்தர உறுப்புரிமை இந்தியாவைத் தேடி வரும். சீனாவின் பொருளாதார வளர்ச்சி விழுக்காடு குன்றுகையில் இந்தியாவின் வளர்ச்சி உறுதியாக இருக்கின்றது என்பதையும் கவனிக்க வேண்டும். 


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...