Monday, 15 January 2018

தலிபானின் வரலாறும் எதிர்காலமும்

தலிபான் பல இக்கட்டான, சோதனை மிகுந்த, ஆபத்து நிறைந்த, சதிகள் சூழ்ந்த நிலைகளில் தப்பித்துக் கொள்ளும் ஆற்றல் மிகுந்த ஒரு அமைப்பு என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. அது பாக்கிஸ்த்தானை மிகவும் தந்திரமாகக் கையாள்கின்றது. தலிபான் அமைப்பின் பல தளபதிகள் தமது அமைப்பால் காபுலைக் கைப்பற்றி ஆப்கானிஸ்த்தான் முழுவதையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அங்கு ஒரு இஸ்லாமியச் சட்டப்படி நடக்கும் ஓர் அமீரக ஆட்சியை நிறுவ முடியும் என உறுதியாக நம்புகின்றனர். தற்போது ஆட்சியில் இருக்கும் அமெரிக்க சார்பு அரசு அமெரிக்கப் படைகளின் ஆதரவு இல்லாமல் ஒரு சில மாதங்கள் கூட நிலைக்காது.

தலிபானின் தோற்றம்
1994-ம் ஆண்டு ஆப்கானிஸ்த்தானின் கந்தஹார் நகரில் முல்லா மொஹம்மட் உமர் குரானின் மாணவர்கள் என்னும் பொருள் கொண்ட தலிபான் அமைப்பை ஆரம்பித்தார், அதன் கொள்கை இஸ்லாமிய அடிப்படைவாதமாக இருந்தது. இஸ்லாமிய அடிப்படைவாதம் 1979-ம் ஆண்டு பெரும் புரட்சியை ஏற்படுத்தி அமெரிக்க சார்பு ஆட்சியை ஈரானில் இருந்து அகற்றி இஸ்லாமிய மத அடிப்படையில் மக்களாட்சியையும் கலந்த ஒரு அரசை ஈரானில் உருவாக்கியது. ஆனால் தலிபான் சுனி இஸ்லாமிய அமைப்பாகும். அதன் பெரும்பான்மையான உறுப்பினர்கள் பஷ்ருன் இனத்தைச் சேர்ந்தவர்களாகும். அதன் நோக்கம் குரான் வழிப்படி இயங்கும் ஓர் அரசை ஆப்கானிஸ்த்தானில் உருவாக்கி அங்கு அந்நியத் தலையீட்டை ஒழித்துக் கட்டுவதாகும். சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்காவினதும் பாக்கிஸ்த்தானினதும் தூண்டுதல்களாலும் உதவியுடனும் போராடிய முஜாஹிதீன் அமைப்பின் பல போராளிகள் தலிபானில் இணைந்து கொண்டனர்.

தலிபானின் கொள்கைகள்
நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாகக் கடைப் பிடிக்கப்பட வேண்டும், தொலைக்காட்சி, இசை, போன்றவை தடை செய்யப்பட வேண்டும், வேற்று மதங்களுக்கான விடுமுறைகள் நிறுத்தப்பட வேண்டும், பெண்கள் தலையில் இருந்து கால் வரை மூடும் ஆடைகளை அணிய வேண்டும், பெண்கள் பாடசாலைக்குப் போகக் கூடாது. அவர்கள் வீட்டில் மட்டும் பணி புரிய வேண்டும், அவர்கள் வெளியில் ஆண் துணையின்றிச் செல்லக் கூடாது என்பன தலிபானின் கொள்கையாகும். 1997-ம் ஆண்டு தலிபான் ஆப்கானிஸ்த்தானின் பெயரை இஸ்லாமிய அமீரகம் ஆப்கானிஸ்த்தான் என மாற்றியது. அவர்களது ஆட்சியை பாக்கிஸ்த்தான், ஐக்கிய அமீரகம், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் அங்கிகரித்திருந்தன. 1997-ம் ஆண்டு முல்லா உமர் ஒசாமா பின் லாடனுடன் உறவை ஏற்படுத்த அவரது அல் கெய்தா அமைப்பு ஆப்கானிஸ்த்தானிற்கு நகர்த்தப்பட்டது.

தலிபானின் வளர்ச்சி
1996-ம் ஆண்டு ஆப்கான தலைநகர் காபுலைத் தலிபான் கைப்பற்றியது. அத்துடன் சோவியத் ஒன்றிய்த்தின் கைப்பொம்மையாகக் கருதப்பட்ட முன்னாள் அதிபர் நஜிபுல்லாவைத் தூக்கிலிட்டுக் கொன்றது. பின்னர் 1997-ம் ஆண்டு பல சியா முஸ்லிம்களையும் கொலை செய்தது. 2001-ம் ஆண்டு அமெரிக்க நகர் நியூயோர்க்கில் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்காவும் பிரித்தானியாவும் தலிபானுக்கும் அல் கெய்தாவிற்கும் எதிராக ஆப்கானிஸ்த்தானில் படையெடுத்தது. பர்ஸிய மொழி பேசும் தஜிக் இனத்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வட கூட்டமைப்பு என்னும் அமைப்பின் படையணியினர் 2001-ம் ஆண்டு தலிபானை காபுலில் இருந்தும் கந்தஹாரில் இருந்தும் பின்வாங்கச் செய்தனர். 2002-ம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான நேட்டோப் படையினர் தலிபான்களைப் பல முனைகளில் பின்வாங்கச் செய்தனர்.

தலைவரின் மறைவு
2012-ம் ஆண்டு ஆப்கானிஸ்த்தானில் உள்ள அமெரிக்கபடைத்தளத்தில் எரிந்த நிலையில் குரான் இருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பழிவாங்கும் முகமாக தலிபான் அமைப்பினர் ஜலலாபாத் விமான நிலையத்தில் ஒரு தற்கொடைத் தாக்குதலைச் செய்து பல அமெரிக்கப் படையினரைக் கொன்றனர். முல்லா மொஹம்மட் உமர் தலிபான் அமைப்பின் உச்ச அவையின் தலைவராகவும் 1996இல் இருந்து 2001-ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்த்தான் ஆட்சியாளராகவும் இருந்தார். 2003-ம் ஆண்டு அவர் இயற்கையாக இறந்து போனார்.

சமாதான முயற்ச்சிகள்
2012-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தலிபானுடன் சமாதனப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டார். கியூபத் தீவில் உள்ள குவாண்டமானோ சிறைக்கூடத்தில் இருந்தும் பாக்கிஸ்த்தானில் இருந்தும் பல தலிபான் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
2017-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அமெரிக்க மூதவை உறுப்பினர் ஜோன் மக்கெயின் நாம் தலிபானிடம் தோல்வியடைந்து கொண்டிருக்கின்றோம்; தலிபான் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றது; ஆப்கான் அரச படைகள் பின்வாங்குகின்றன; அரச கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை தலிபான்கள் நாளுக்கு நாள் கைப்பற்றுகின்றன என்றார்.

தலிபானின் பின்னடைவுகள்
தலிபானின் தீவிரவாதத்திற்கும் அடிப்படைவாத இஸ்லாத்திற்கும் ஆப்கான் மக்களிடையே பரவலான ஆதரவு இல்லை. இது நகர்ப்புற மக்களுக்கும் கிராமப்புற மக்களுக்கும் பொதுவானதாகும். பெண்கள் மீதான அடக்கு முறையை அவர்கள் விரும்பவில்லை. ஆப்க்கானிஸ்த்தானில் தற்போது உள்ள பாராளமன்றத்தின் கீழவைக்கான மொத்தம் 249 தொகுதிகளில் 69 பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது. ஆப்கான் பாடசாலைகளில் 39 விழுக்காடு பெண்கள் கல்வி கற்கின்றனர். இவை தலிபான் ஆட்சியில் இருக்கும் போது சாத்தியமற்றதாக இருந்தது. சில மேற்கத்தைய சார்பு நிறுவனங்களின் கணிப்பின்படி தற்போது ஆட்சியில் இருக்கும் அமெரிக்க சார்பு ஆட்சியாளருக்கு 92 விழுக்காடு மக்கள் ஆதரவு இருக்கின்றது என்றும் தலிபான் ஆட்சிக்கு வருவதை 4 விழுக்காடு மக்களே விரும்புகின்றனர். இது மிகைப்படுத்தப்பட்ட கணிப்பாக இருந்தாலும் தலிபானுக்கு போதிய அளவு மக்கள் ஆதரவு இருக்கின்றதா என்பதை அவர்கள் தான் நிரூப்பிக்க வேண்டும். தலிபானுக்கான ஆதரவுத் தளம் பஷ்ருன் இன மக்களிடைதான் காணப்படுகின்றது. தலிபான் அமைப்பின் உயர் மட்டத்தினரில் ஐம்பது விழுக்காட்டினர் கந்தஹார் மாகாணத்தில் வாழும் பஷ்ருன் இனத்தைச் சேர்ந்தவர்களாவர். ஹஜாரா, தஜிக், உஷ்பெக் ஆகிய இனக்குழுமங்களைச் சேர்ந்தவர்கள் தலிபானை வெறுக்கின்றார்கள்.

விலக முயன்ற ஒபாமா சீறும் டிரம்ப்
பராக் ஒபாமா ஆப்கானிஸ்த்தானில் இருந்து படைகளை விலக்க முயன்றார் ஆனால் டொனால்ட் டிரம்ப் அதிகரித்துக் கொண்டிருக்கின்றார். 2017 ஓகஸ்ட்டில் ஏற்கனவே ஆப்கானிஸ்த்தானில் இருந்த பத்தாயிரம் படையினர் எண்ணிக்கை மேலும் நான்காயிரத்தால் அதிகரிக்கப்பட்டது.
ஆபாகானில் தலிபான்களின் நிதி மூலங்களை அழிக்கும் திட்டத்தை 2017 இறுதியில் அமெரிக்கா முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது. ஆப்கான அரசு அமெரிக்காவை ஆப்கானிஸ்த்தானுக்கு A-10 Thunderbolt போர்விமானங்களைக் கொண்டு வரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது. தரையில் உள்ள இலக்குகளை துல்லியமாகத் தாக்குவதற்கு உகந்த விமானமான A-10 Thunderbolt ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ எஸ் போராளிகளுக்கு எதிராக சிறப்பாகச் செயற்பட்டவையாகும். 2017-ம் ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்க விமானப் படைகள் தமது நடவடிக்கைகளை அதிகரித்தன. ஏற்கனவே ஆப்கானிஸ்த்தானில் இருந்த பன்னிரண்டு F-16 போர் விமானங்களுடன் மேலும் ஆறு போர்விமானங்கள் இணைக்கப்பட்டன. 2017 ஓகஸ்ட்டில் அமெரிக்க விமானங்கள் 503 குண்டுகளையும், செப்டம்பரில் 751 குண்டுகளையும் வீசின. சிரியாவிலும் ஈராக்கிலும் ஐ எஸ் படையினருக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்காவின் படைத்துறை வல்லுனர்கள் ஆயிரக்கணக்கில் ஆலோசகர்களாகச் செயற்பட்டார்கள். அத்துடன் பல ஆளில்லாப் போர்விமானங்களும் பாவிக்கபட்டன. அதே உத்திகல் ஆப்கானிஸ்த்தானிலும் பாவிக்கப்படவிருக்கின்றன. ஆளில்லாப் போர்விமானங்களில் குண்டுகளைத் தாங்கிச் சென்று வீசக்கூடியவையும் அடங்கும்மேலும் அமெரிக்காவின் F/A-18 Super Hornet jet fighters இலிருந்து சிறிய ஆறரை அங்குல நீளமும் பதினொரு அங்குல அகல இறக்கைகளும் கொண்ட சிறு ஆளில்லாவிமானங்களை (autonomous micro-drones) நூற்றுக் கணக்கில் களத்தில் இறக்க முடியும். அவை ஒன்றுடன் ஒன்று தாமாகவே தொடர்பாடல்களை ஏற்படுத்தி கண்காணிப்பு, வேவு, உளவு போன்ற தகவல்களைத் திரட்டும். அவை தாமாகவே தீர்மானங்களை எடுக்கும். தேவை ஏற்படின் தம்மைத் தாமே அழித்துக் கொள்ளும்.

டிரம்பின் அதிரடி
பாக்கிஸ்த்தானின் மனித உரிமைப் பிரச்சனையைக் காரணம் காட்டி பாக்கிஸ்த்தானுக்கான தனது உதவிகளை அமெரிக்கா பெருமளவு குறைத்திருந்தது. பின்னர் 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் அல் கெய்தாவையும் தலிபானையும் ஒழித்துக் கட்டுவதற்கு பாக்கிஸ்த்தான் அவசியம் தேவை என்பதால் மீண்டும் பாக்கிஸ்த்தானுக்கான அமெரிக்காவின் படைத்துறை உதவி அதிகரிக்கப்பட்டது. 2017-ம் ஆண்டின் இறுதியில் அமெரிக்காவின் கேந்திராபாயக் கொள்கைகளை மீளாய்வு செய்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா கொடுக்கும் உதவிகளுக்கு பதிலாக அமெரிக்கவிற்கு நன்மைகள் கிடைக்கின்றனவா என்பதில் அதிக கவனம் செலுத்தினார்; அவரது முதல் நகர்வாக 2018 ஜனவரி நாலாம் திகதி பாக்கிஸ்த்தானுக்கு எதிரான இரண்டு அறிவிப்புகள் வெளிவந்தன. முதலாவது பாக்கிஸ்த்தானில் மத சுதந்திரம் இல்லை எனக் குற்றம் சாட்டி அதை சிறப்புக் கண்கானிப்புப் பட்டியலில் இட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்தது. அந்த அறிக்கை வெளிவந்த சில மணித்தியாலங்களுக்குள் பாக்கிஸ்த்தானுக்கான படைத்துறை உதவிகள் இடை நிறுத்தப்படும் என அமெரிக்கா அறிவித்தது. 2018-ஆண்டுப் பிறப்பின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுவரை காலமும் இருந்த அமெரிக்க அதிபர்கள் முட்டாள்த்தனமாக பாக்கிஸ்த்தானுக்கு உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றனர் எனவும் பாக்கிஸ்த்தானுக்கு கடந்த 15 ஆண்டுகளாகக் கொடுத்த 33பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உதவிக்குப் பதிலாக பாக்கிஸ்த்தான் தீவிரவாதிகள்க்கு புகலிடம் வழங்கிக் கொண்டு அமெரிக்காவிற்கு பொய்களையும் ஏமாற்று வேலைகளையும் மட்டும் கொடுத்துக் கொண்டிருக்கின்றன என்றும் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். அதற்குப் பாக்கிஸ்த்தான் ஊடகங்கள் அமெரிக்க அதிபர் ஆப்கானிஸ்த்தானில் அடையும் தோல்விகளுக்கான காரணங்களை பாக்கிஸ்த்தான் மீது சுமத்தப் பார்க்கின்றார் எனக் கருத்து வெளியிட்டிருந்தன. பாக்கிஸ்த்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் Khawaja Muhammad Asif டிரம்பின் கருத்து ஒரு நட்பு நாட்டுத் தலைவரின் கருத்துப் போல் இல்லை எனவும் பாக்கிஸ்த்தான் அரசுறவியல் அடிப்படையில் தனிமைப் படுத்தப்பட்ட நாடல்ல அதன் ஆப்கான் கொள்கையை இரசியா, சீனா, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகள் ஆதரிக்கின்றன என்றும் கருத்து வெளியிட்டிருந்தார். பாக்கிஸ்த்தானில் இருந்து அமெரிக்க வான் படையினர் 57800 தாக்குதல்களை பாக்கிஸ்த்தானில் இருந்து மேற்கொண்டதையும் அவர் சுட்டிக் காட்டினார். மேலும் அவர் அமெரிக்காவை நம்ப முடியாது என்பதே சரித்திரம் எமக்குக் கற்றுத்தரும் பாடம் என்றார். அமெரிக்க உதவியின்றி பாக்கிஸ்த்தானால் இருக்க முடியும் எனவும் பாக்கிஸ்த்தானை மிரட்ட முடியாது எனவும் பாக்கிஸ்த்தான் தரப்பில் இருந்து கருத்து வெளியிடப்பட்டது. அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரால் பாக்கிஸ்த்தானியப் பொருளாதாரத்திற்கு இதுவரை நூறு பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது என்கின்றது பாக்கிஸ்தானிய அரசு. பாக்கிஸ்த்தானியப் படையின் ஜெனரல் அசிஃப் கபூர் நாம் பணத்திற்காக போர் புரிவதில்லை. எம்மால் முடியுமானவற்றைச் செய்கின்றோம். இதிலும் அதிகமாகச் செய்ய முடியாது என்றார்.
பாக்கிஸ்த்தானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இந்த ஆண்டு வர போகின்ற அரசுறவியல் இழுபறி இரு நாடுகளுகும் இடையிலான உறவு முறிவடைந்து இரு நாடுகளும் பகைமை பாராட்டினால் பாக்கிஸ்த்தானிடம் இருந்து தலிபானுக்கு உதவிகள் கிடைக்கலாம். ஆனால் அமெரிக்க-பாக் உறவு முறிவடையாது. இரு நாடுகளும் தொடர்ந்து உறவில் இருந்தால் பாக்கிஸ்த்தான் உளவுத்துறையும் படைத்துறையும் மதவாத அடிப்படையில் இரகசிய உதவி தொடர்ந்தும் தலிபானுக்குக் கிடைக்கும்.

ஆப்கான் மக்களின் தீராத துயர்

அமெரிக்கப் படைகளை ஆப்கானில் இருந்து விரட்டி தலிபானால் ஆப்கானிஸ்த்தானைக் கைப்பற்றி ஆட்சி செய்ய முடியாது. ஆப்கானிஸ்த்தானில் இருந்து முற்றாக தலிபானை ஒழிக்க அமெரிக்காவால் முடியாது. அது அதற்குத் தேவையும் இல்லை. ஆப்கானில் போர் நடக்கும் வரை அங்கிருக்கும் கனிம வளங்களை மலிவு விலையில் அமெரிக்காவால் பெற முடியும். அமெரிக்கப் படைகளின் உதவியின்றி இயங்க முடியாத ஆப்கான் அரசு, அமெரிக்கப் படைகளை விரட்ட முடியாத தலிபான், தலிபானை ஒழிக்க முடியாத அமெரிக்கா ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது தலிபானின் திக்குமுக்கு நிலை இன்னும் பல ஆண்டுகள் தொடரும். ஆப்கான் மக்களின் திண்டாட்டம் மட்டும் மாறாமல் இருக்க கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் மட்டும் மாறிக் கொண்டிருக்கும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...