வட கொரியாவின் ஏவுகணைப் பரிசோதனைகளைத் தடுக்க அமெரிக்காவில் புதிதாகத் தயாரிக்கப்பட்ட நுண்ணலை ஏவுகணைகள் (Microwave Missiles) பாவிக்கப்படுமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. நுண்ணலைகள் படும் பொருட்களின் மூலக்கூறுகள் விரைவாக ஒன்றன் மீது ஒன்று உரசப்படும். அப்போது அதில் வெப்பம் பிறக்கும். எமது வீடுகளில் இதனால் உணவுகளைச் சூடாக்குகின்றோம். இது பாரிய அளவில் செயற்படுத்தும் போது எதிரி இலக்குகளை பொரித்துக் கருக்கிவிடும்.
வட கொரியா ஏவுகணைகளை வீசுத் தயாராகும் போது அந்த இடங்கள் செய்மதி மூலம் அவதானிக்கப்படும். அத்தகவல்களை விமானப் படைத்தளங்களுக்கு அனுப்படும். விமானத் தளங்களில் இருந்து B-52 போர் விமானங்கள் அந்த இடத்துக்கு மேலாகச் சென்று Boeing AGM-86B என்னும் சீர்வேக (Cruise) நுண்ணலை ஏவுகணைகளை வீசும். அது உருவாக்கும் நுண்ணலைகள் இலக்கில் உள்ள கணினிகளையும் செயலிழக்கச் செய்யும். ஆனால் அங்குள்ள மக்களுக்கோ அல்லது கட்டிடத்திற்கோ எந்த சேதமும் ஏற்படாது. இதனால் இது அழிவில்லாத படைக்கலன் என அழைக்கப்படுகின்றது.
வட கொரியா இன்னும் அசையும் பார ஊர்திகளில் இருந்து ஏவுகணைகளை ஏவத் தொடங்கவில்லை. பார ஊர்திகளில் இருந்து ஏவுகணைகளை வட கொரியா ஏவ விரைவில் தொடங்கலாம். உருமாற்றம் செய்யப்பட்ட பார ஊர்திகளில் இருந்து வட கொரியா ஏவுகணைகளை ஏவுவதை அமெரிக்க செய்மதிகளால் கண்டு பிடிக்க முடியாமல் போகும். அத்துடன் துரிதமாகச் செயற்பட்டு பார ஊர்திகளில் இருந்து ஏவும் போது அமெரிகாவின் B-52 அங்கு செல்வதற்கான கால அவகாசம் கிடைக்காமல் போகலாம்.
வட கொரியாவில் பூகோள அமைப்பு பல சிறியதும் பெரியதுமான மலைத் தொடர்கள் நிறைந்தது. குறுகிய பள்ளத்தாக்குகள் நிறைய உண்டு. அவற்றுக்குள் தனது ஏவுகணை வீசு நிலையங்களை மறைத்து வைத்திருக்கலாம். அமெரிக்கா நுண்ணலை ஏவுகணைகளைப் வட கொரியாவிற்கு எதிராகப் பாவிக்கத் தொடங்கிய பின்னரும் ஏவுகணைப் பரிசோதனை தொடர்ந்தால் அது அமெரிக்கவிற்கு பெரும் அவமானகரமானதாக அமையும்.
தனது ஏவுகணைப் பரிசோதனைக்கு எதிரான நுண்ணலைத் தாக்குதலை வட கொரியா ஒரு போர் நடவடிக்கையாகப் பிரகடனப் படுத்தலாம். பதிலடியாக தென் கொரியத் தலைநகரைத் துவம்சம் செய்யும் எறிகணை வீச்சுக்களைச் செய்யலாம்.
Friday, 8 December 2017
Monday, 4 December 2017
சிக்கல் என்றால் அது மேற்காசியா
அரபுக்கள், ஈரானியர்கள், துருக்கியினர், யூதர்கள், குர்திஷ்கள்
எனப் பலதரப்பட்ட இனங்கள் ஆயிரக்கணக்கான இனக் குழுமங்கள் போன்றவற்றை கொண்ட இயற்கை
வளம் மிக்க மேற்காசியாவில் மன்னராட்சி, மக்களாட்சி, மதவாத ஆட்சி, தன்னதிகாரிகளின் ஆட்சி எனப் பலவிதமான
ஆட்சிகள் இருப்பதால் அங்கு சிக்கல்களுக்கு குறைவில்லை. பிராந்திய வல்லரசுகளுக்கு
இடையிலும் உலக வல்லரசுகளுக்கும் இடையிலான போட்டி அந்த சிக்கல்களை மேலும்
மோசமாக்குகின்றது.
அகலக் கால் வைக்கும் இரசியா
சிரியா, ஈராக்,
யேமன் ஆகிய நாடுகளின் உள்நாட்டுப் போரும் கட்டாருக்கும் மற்றைய வளைகுடா
நாடுகளுக்கும் ஏற்பட்ட முறுகல் நிலையும் இரசியாவின் மேற்காசிய ஆதிக்கத்திற்கு
வாய்ப்பாக அமைந்தன. எரிபொருளில் தன்னிறைவடைவதும் இஸ்ரேலின் பாதுகாப்பு அசைக்க
முடியாத நிலையில் இருப்பதாலும் ஐக்கிய அமெரிக்கா மேற்காசியாவிலும் வட
ஆபிரிக்காவிலும் தனது கவனத்தை குறைக்க முடிவெடுத்து. அது இரசியா
அப்பிராந்தியத்தில் தனது பிடியை இறுக்க ஏதுவாக அமைந்துள்ளன. சிரியாவில் போர் நிறுத்தத்தைக் கொண்டு வருவதற்காக
கஜகஸ்த்தான் தலைநகர் அஸ்டானாவில் 2015 மே மாதத்தில் இருந்து ஒரு பேச்சுவார்த்தை இரசியாவின்
ஏற்பாட்டின் பேரில் நடக்கத் தொடங்கியது. அமெரிக்கா ஏற்பாடு செய்த ஜெனீவாப் பேச்சு
வார்த்தைக்கு மாற்றாக இது ஏற்பாடு செய்யப்பட்டது. 2016 டிசம்பரில் சிரியாவில்
இரசியா தன்னை ஒரு பிரச்சனை தீர்க்கும் நடுவராக முன்னிறுத்தியது.
இரசியா கைவிட முடியாத
சிரியா
சிரிய உள்நாட்டுப் போரின்
இறுதிக் கட்டத்தில் அங்கு ஒரு ஆட்சி உருவாக்குபவராக (King Maker) திகழ இரசியா பெரிதும்
விரும்புகின்றது. சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சியைக் காப்பாற்ற
ஹிஸ்புல்லா அமைப்பை போராட வைத்ததுடன் பல நாடுகளில் இருந்து போராளிகளைத் திரட்டி
சிரியாவிற்கு அனுப்பியது ஈரான். போர் முடிந்த சிரியாவிலும் தனது ஆதரவுப் படைகள்
தொடர்ந்து நிலை கொண்டிருக்க வேண்டும் என ஈரான் விரும்புகின்றது. அதாவது லெபனானில்
ஹிஸ்புல்லா அமைப்பின் மூலம் தனது பிடியை ஈரான் இறுக்கி வைத்திருப்பது போல
சிரியாவிலும் செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளது.
சிரியாவைக் கைப்பற்றத்
துடிக்கும் ஈரான்
இரசிய நகர் சொச்சியில்
நடந்த சிரிய சமாதானப் பேச்சு வார்த்தையில் ஈரானும், இரசியாவும் துருக்கியும் சிரியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பேணுவதாக ஒத்துக் கொண்டன. சிரியா
தொடர்பான இந்த மூன்று நாடுகளிடையேயான ஒற்றுமையை ஈரான் சந்தேகக் கண்களுடனேயே
பார்க்கின்றது. இரசியா சிரியா தொடர்பாக அரபு நாடுகள், இஸ்ரேல், ஐக்கிய அமெரிக்கா, சிரியா எனப் பல தரப்புக்களுடன் பேச்சு வார்த்தை நடத்திக்
கொண்டிருக்கின்றது. சிரியா தொடர்பான இரசியாவின் இறுதி நோக்கம் என்பதையிட்டு ஈரான்
கரிசனை கொண்டுள்ளது. சொச்சி நகரில் நடந்த பேச்சு வார்த்தைக்கு முன்னர் சிரிய
அதிபர் பஷார் அல் அசாத் மொஸ்கோ சென்றது ஈரானுக்கு முன்கூட்டியே
அறிவிக்கப்படவில்லை. ஆனால் அப்பயணம் தொடர்பாக முன் கூட்டியே இரசிய அதிபர்
விளடிமீர் புட்டீன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அறிவுறுத்தியதுடன்
தொலைபேசியூடாக ஒரு கலந்துரையாடலையும் செய்திருந்தார். இது இயல்பாகவே ஈரானை
எரிச்சலூட்டக் கூடிய ஒன்றுதான்.
கட்டவிழ்த்த கட்டார்
இரசிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லவ்ரோவ்
காட்டாருக்கு மேற்கொண்ட பயணத்தின் போது வளைகுடாப் பிராந்தியத்தில் உள்ள உறுதியற்ற
நிலைபற்றி தனது கரிசனையை வெளியிட்டார். அமெரிக்காவை நம்பிப் பயனில்லை என்ற
நிலையில் கட்டார் தனக்கான ஆதரவுத்தளத்தை ஈரான், துருக்கி,
இரசியா என விரிவு படுத்துகின்றது. கட்டாரின் வான் பாதுகாப்புப்
பணியை இரசியா ஏற்க முன் வந்துள்ளது.
ஈராக்கும் இரசியாவும்: நானா குர்திஷ்த்தானா?
ஈராக்கிய சியா இஸ்லாமிய ஆட்சியாளர்கள் தமது
நாட்டில் ஐஎஸ் அமைப்பை ஒழிப்பதற்கு ஈரானைப் பெரிதும் நம்பினார்கள். அமெரிக்காவின்
உதவியை இரு கைகளும் நீட்டி வரவேற்றனர். ஆனால் இரசியாவை தமது நாட்டுக்குள்
அனுமதிக்க வில்லை. ஆனால் ஐஎஸ் தொடர்பான உளவுத் தகவல்களை இரு நாடுகளும் பகிர்ந்து
கொண்டன. ஈராக் எழுபத்தி மூன்று T-90S மற்றும் T-90SK போர்த் தாங்கிகளை இரசியாவிடமிருந்து வாங்கவுள்ளது. அதே வேளை
ஈராக்கில் உள்ள குர்திஷ் பிராந்திய அரசிடமிருந்து இரசியா எரிபொருள் வாங்க முடிவு
செய்ததையும் அப்பிராந்தியத்தில் எரிபொருள் விநியோகக் குழாய்களில் இரசியா முதலீடு
செய்ய முடிவு செய்ததையும் ஈராக்கிய அரசு கடுமையாக ஆட்சேபித்தது.
யேமன்
ஒரு சாதாரண படைக்குழுவாக இருந்த ஹூதிகள் தற்போது சவுதி அரேபியா
வரை பாயக் கூடிய ஏவுகணைகளைக் கொண்ட வலிமை மிக்க படையாக மாறியுள்ளது. அரபு நாட்டின்
வறுமை மிக்க நாடாகிய யேமன் உள் நாட்டுப் போராலும் சவுதி அரேபியா தலைமையிலான படையினரின்
தாக்குதல்களாலும் சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கின்றது. 2017 டிசம்பர் 4-ம் திகதி
யேமனின் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே சவுதி அரேபியாவிற்குத் தப்பி ஓடுகையில்
கொல்லப்பட்டார் என ஹூதி போராளிகள் அறிவித்தனர். 2017 டிசம்பர் 2-ம் திகதி யேமனில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அணு உலை மீது யேமலில் இருந்து ஏவுகணை வீசியதாக ஹூதி போராளிகள் தெரிவித்தனர்.
ஈராக்கும் ஈரானும்
அண்மைக் கால வரலாற்றிலே மேற்காசியாவில் மிக
நீண்ட காலம் போர் புரிந்த நாடுகள் ஈரானும் ஈராக்கும் ஆகும். வளைகுடாவை தனது
ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற ஈராக்கின் நீண்டகாலக் கனவை தடுத்து
நிறுத்தியவர் முன்னாள் ஈராக்கிய அதிபர் சதாம் ஹுசேய்ன். ஈராக்கின் ஐ எஸ்
அமைப்புக்கு எதிரான போரின் போதும் குர்திஷ் தனிநாட்டுப் பிரகடனத்தின் போதும்
ஈரானுக்கு ஈராக் படைத்துறை ரீதியாகவும் அரசுறவியல் நடவடிக்கை ரீதியாகவும் பேருதவி
புரிந்தது. நீண்ட காலம் சுனி முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் இருந்த ஈராக்கை சியா
முஸ்லிம்களின் ஆட்சியை உருவாக்கி அதைத் தக்க வைப்பதில் ஈரானின் பங்களிப்பு
காத்திரமானது. ஐ எஸ் அமைப்பினரிடமிருந்து பஸ்ரா நகரை மீட்பதில் ஈரானின் படையினர்
பெரும் பங்கு வகித்தனர். இப்போது ஈராக்கிலும் ஈரானிய ஆதரவுப் படையினர் பெருமளவில்
இருக்கின்றனர்.
ஆப்பிழுத்த அமெரிக்கா
சிரியாவில் பஷார் அல் அசாத்தின் ஆட்சி அகற்றப்பட
வேண்டும், இஸ்லாமியத் தீவிரவாதம் ஒழிக்கப் படவேண்டும்
இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வேண்டும் என்ற கொள்கையுடன் சிரியாவில்
தலையிட்டது அமெரிக்கா. சிரியாவின் உள்நாட்டுப் போர் தொடங்கும் போது இரசியா உலக
விவகாரங்களில் இருந்து விலகி இருந்தது. உக்ரேன் தனது எதிரிகளின் கைகளுக்குப்
போவதைத் தடுக்க அது உலக விவகாரங்களில் தலையிட வேண்டிய சூழல் உருவானது. சிரியாவில்
அதிபர் பஷார் அல் அசாத்திற்கு ஆதரவாக அங்கு களமிறங்கியது அமெரிக்காவில்
அமெரிக்காவிற்கு பெரும் சிக்கலானது. ஐ எஸ் அமைப்பு போராளிகளிடமிருந்து நிலங்களைக்
கைப்பற்றுவதில் வெற்றி காண அமெரிக்காவிற்கு உதவிய போராளிக் குழுக்கள் இரண்டு
வகைப்படும். ஒன்று குர்திஷ் போராளிக் குழு மற்றது அரபுக்களைக் கொண்ட பல்வேறுபட்ட
போராளி அமைப்புக்கள். அசாத் அரசு முழு சிரியாவையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர
வேண்டும் என்கின்றார். அது அவரால் முடியும். ஆனால் அமெரிக்காவிற்காகப் போராடிய
குழுக்களின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி அமெரிக்காவின் நம்பகத்தைதன்மைக்கு சவால்
விடுக்கின்றது. ஏற்கனவே பல தடவைகள் அமெரிக்காவால் முதுகில் குத்தப்பட்ட குர்திஷ்
போராளிகள் அமெரிக்காவிற்கு எதிராகத் திரும்பலாம். அமெரிக்கா பயிற்ச்சியும்
படைக்கலன்களும் வழங்க்கிய பல போராளிகள் அல் கெய்தாவின் கிளை அமைப்பான ஜபத் அல்
நஸ்ரா அமைப்புடன் இணைகின்றார்கள். அது அமெரிக்காவிற்கு ஆபத்து விளைவிக்கக்
கூடியது.
கால் விட்டுத் தவிக்கும் சவுதி
2011-ம் ஆண்டு யேமனிலும் அரபு வசந்தம் எனப்படும் மக்கள் எழுச்சி உருவானது. அதுவும்
சிரியாவைப் போலவே ஒரு பெரும் உள்நாட்டுப் போராக மாறியது. அதை ஹூதி இனத்தவர் தமக்குச்
சாதகமாகப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற முயன்றனர். அவர்களுக்கு ஈரானும் லெபனானில்
இருந்து செயற்படும் சியா அமைப்பான ஹிஸ்புல்லாவும் ஆதரவு வழங்கின. பூகோள ரீதியில் யேமன்
ஈரான் சார்பு ஆட்சியாளர்களின் கைகளில் இருப்பது சவுதி அரேபியாவிற்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம்.
செங்கடலுக்கும் ஏடன் வளை குடாவிற்கும் இடையிலான குறுகிய மண்டெப் நீரிணை (Mandeb Strait) யேமனை ஒட்டியே இருக்கின்றது.
அதன் ஒரு புறத்தில் யேமனும் மறு புறத்தில் சோமாலியாவும் எதியோப்பியாவும் இருக்கின்றன.
இந்த சிக்கலான நிலையில் யேமனில் சவுதியின் எதிரிகள் ஆட்சியில் அமர்வது ஆபத்தானதாகும்.
இதனால் 2015 மார்ச் மாதம் 26-ம் திகதி சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படையினர்
யேமனில் ஹூதி இனத்தினர் மீது தாக்குதல் தொடுக்கத் தொடங்கினர். ஆனால் சவுதி அரேபியா
அப்பாவிகளைக் கொன்று குவிப்பதாக உலகெங்கும் இருந்து குற்றச் சாட்டுக்கள்
முன்வைக்கபட்டு வருகின்றது. அங்கு ஒரு வெல்ல முடியாத போரை சவுதி அரேபியா
செய்வதாகப் படைத்துறை நிபுணர்கள் கருத்து வெளியிடுகின்றனர். யேமனில் அகப்பட்டுள்ள தனது கால்களை சவுதி அரேபியா கௌரவமாக வெளியே எடுக்க
விரும்புகின்றது என்பதை இரசியா அறியும். சவுதி ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில்
அங்கு இரசியா தலையிடுவதை சவுதி அரேபியா விரும்பும் என்பதையும் இரசியா அறியும்.
இந்த நிலையில் அங்கு தலையிட இரசியா காய்களை நகர்த்துகின்றது. 2017 ஒக்டோபரில்
இரசியாவிற்குப் பயணம் மேற்கொண்ட சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஆல் அல்
ஜுபீர் இரு நாடுகளுக்கும் இடையில் பல முனைகளில் ஒத்துழைப்பு வளர்க்கப்படும்
என்றார். யேமனில் சவுதி ஆதரவு அமைப்புக்களில் ஒன்றான இஸ்லாமிய சகோதரத்துவ
அமைப்பின் அல் இஸ்லா படைக்குழுவின் மீது ஐக்கிய அரபு அமீரகத்தின் வான்படையினர்
தாக்குதல் செய்யத் தொடங்கியதில் இருந்து யேமனில் சவுதி அரேபியாவின் நிலை மேலும்
சிக்கலானது. இந்த நிலையில் சவுதிக்கு சாதகமாக இரசியா யேமனில் காய்களை நகர்த்துவது
அங்கு அமெரிக்காவை ஓரம் கட்டும் என இரசியக் கொள்கை வகுப்பாளர்கள்
கருதுகின்றார்கள். யேமனில் பல சமாதான முயற்ச்சிகளை மேற்கொண்ட குவைத்தும் ஓமானும்
பயன் ஏதும் கிடைக்காததனால் களைப்பும் சலிப்பும் அடைந்துவிட்டன.
லெபனான்
லெபனானில் உருவாக்கப் பட்ட ஹிஸ்புல்லா அமைப்பு
சிரியாவிலும் யேமனிலும் சவுதி அரேபியாவின் கேந்திரோபாய நலன்களுக்கு எதிராகச்
செயற்பட்டுக் கொண்டிருப்பதால் அதை அடக்க சவுதி அரேபியா விரும்புகின்றது.
ஹிஸ்புல்லா லெபனானில் மட்டும் செயற்படவேண்டும்; இஸ்ரேலுக்கு
எதிராக மட்டும் செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சவுதி அரேபியா இருக்கின்றது.
ஈரானின் மதவாத ஆட்சியாளர்கள் ஈராக், சிரியா, லெபனான் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சியா பிறைத்திட்டத்தை நிறைவேற்ற
முனைப்புக் காட்டுகின்றது. அதையிட்டு அரபு நாடுகள் மட்டுமல்ல இஸ்ரேலும் அதிக
கரிசனை கொண்டுள்ளது. மேற்காசியாவின் அடுத்த சிக்கலான போர்க்களமாக லெபனான்
உருவெடுக்கும் ஆபத்து உருவாகியுள்ளது.
தன்னிலை இழக்க விரும்பாத இஸ்ரேல்
அரபு வசந்தத்தின் பின்னர் இஸ்லாமிய சகோதரத்துவ
அமைப்பு ஆட்சிக்கு வந்ததால் கரிசனை கொண்ட இஸ்ரேல் அது ஆட்சியில் இருந்து
அகற்றப்பட்டு முன்பு இருந்ததிலும் பார்க்க மோசமான நிலையை அடைந்ததால்
நிம்மதியடைந்தது. சிரியா இனி தன்னுடைய எதிரி நாடாக இருக்கும் என இப்போது இஸ்ரேல் நினைக்கின்றது.
தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உருவாகுவதைக் கொஞ்சம் கூட இஸ்ரேல்
அனுமதிப்பதில்லை. முன்கூட்டியே நடவடிக்கைகள் எடுத்துவிடும்.
சிரியாவில் ஈரானிய ஆதரவு படைக்குழுக்கள்
நிலைகொள்வதற்கு அமெரிக்காவும் இரசியாவும் உடன்பட்டுள்ளன. அது லெபனானூடாக இஸ்ரேலுக்கு
அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதால் இஸ்ரேல் கலவரமடைந்துள்ளது. சிரிய விவகாரத்தில்
இரசியாவுடன் பல அம்சங்களில் இஸ்ரேல் ஒத்துழைத்தது. சிரியாவில் நிலைகொண்டுள்ள
ஈரானிய சார்புப் படைக்குழுக்களால் இஸ்ரேலுக்கு ஆபத்து ஏற்படாது என இரசிய
வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்கி லவ்ரோவ் இஸ்ரேலுக்கு உறுதியளித்துள்ளார்.
ஈரானின் விரிவாக்கக் கனவும் அதையிட்ட சவுதி
அரேபியாவின் கரிசனையும் அரபு இஸ்ரேல் மோதலிலும் பார்க்க ஆபத்தானது. அது பேரழிவைக்
கொண்டு வரக் கூடியது என்பது சிரியாவிலும் யேமனிலும் நிரூபிக்கப் பட்டுள்ளது. இதில்
எல்லோரும் பலஸ்த்தீனியர்களை மறந்து விட்டனர்
Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...