Monday 8 December 2014

அகலக் கால்களை வைத்த ஹிஸ்புல்லா அமைப்பு

சிரியத் தலைநகரை அண்டியுள்ள டிமாஸ் என்னும் இடத்தில் இஸ்ரேலிய விமானங்கள் பத்துக்கு மேற்பட்ட குண்டுகளை வீசியுள்ளன. இவை ஹிஸ்புல்லாவிற்கான படைக்கல விநியோகங்களைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட தாக்குதல் நடப்பது இது முதற் தடவையும் அல்ல. நிச்சயமாகக் கடைசித் தடவையும் அல்ல. சிரியாவில் அதன் அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிராகப் போராடும் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராகவும் அசாத்திற்கு ஆதரவாகவும் ஹிஸ்புல்லா அமைப்பு தனது போராளிகளில் ஐயாயிரத்திற்கு மேலானவர்களைக் களமிறக்கியுள்ளது. இந்தப் போராளிகளின் தொகை ஹிஸ்புல்லா அமைப்பின் மொத்தப் போராளிகளின் தொகையில் மூன்றில் ஒரு பங்கு எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. சிரிய உள்நாட்டுப் போர் தொடங்கியதில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு ஆயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளை இழந்துள்ளது.

ஒரு புறம் இரசியாவின் பிரதி வெளிநாட்டமைச்சர் மிகையில் பொக்டனவ் ஹிஸ்புல்லாத் தலைவர்  ஹசன் நஸ்ரல்லாவைச் சந்தித்த வேளையில் இஸ்ரேல் சிரியாவில் ஹிஸ்புல்லா நிலைகள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளது.

வலுமிக்க ஹிஸ்புல்லா
ஹிஸ்புல்லாவிடம் நிதிவலு, படைக்கலவலு ஆகியவை நிறைய உண்டு. கட்டமைக்கப்படாத போராளி இயக்கமான (Asymmetric movement) ஹிஸ்புல்லாவிடம் விமான எதிர்ப்பு ஏவுகணைகள், போர்க்கப்பல்களை அழிக்கும் ஏவுகணைகள், தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், வேவுபார்க்கவும் தாக்கவும் கூடிய ஆளில்லாப் போர்விமானங்கள் ஆகியவை இருப்பதாக இஸ்ரேலியப் பாதுகாப்புத் துறை கருதுகின்றது.  ஹிஸ்புல்லா இயக்கம் ஹமாஸ் அமைப்பைப் போலவே பல நிலக் கீழ் சுரங்கப் பாதைகளைக் கொண்ட வலையமைப்பையும் பதுங்கு குழிகளையும் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் அமைத்துள்ளது. இஸ்ரேலியக் கடற்படையை செய்லிழக்கச் செய்யும் அளவிற்கு ஹிஸ்புல்லாவிடம் படைக்கலன்கள் இருக்கின்றது எனச் சொல்லப்படுகின்றது

கிருஸ்த்தவ நாடாக லெபனான்
மத்திய கிழக்கிலே கிருஸ்த்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாடாக லெபனான் திட்டமிட்டு முதலாம் உலகப் போரின் பின்னர் உருவாக்கப்பட்டது.  பிரான்சின் குடியேற்ற ஆட்சி நாடாக இருந்த லெபனான்1942-ம் ஆண்டு நவம்பர் 22-ம் திகதி சுதந்திர நாடாகியது. பின்னர் கிரிஸ்த்தவர்களும் இசுலாமியர்களும் தேசிய உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொண்டனர். அந்த உடன்படிக்கையின் படி குடியரசுத் தலைவர் ஒரு மரோனைற் கிருத்தவராகவும் தலைமை அமைச்சர் ஒரு சுனி முசுலிமாகவும் பாராளமன்ற அவைத் தலைவர் சியா முசுலிமாகவும் இருப்பதாக ஒத்துக் கொள்ளப்பட்டது. பாராளமன்ற உறுப்பினர்களாக கிருத்தவர்களுக்கு ஆறு முசுலிம்களுக்கு ஐந்து என்ற விகிதாசாரப்படி இருக்க வேண்டும் எனவும் ஒத்துக் கொள்ளப்பட்டது.

மத மோதல்கள் நிறைந்த லெபனான்

1943-ம் ஆண்டிலிருந்து 1956-ம் ஆண்டு வரை மக்களாட்சிப்படி லெபனான் ஆளப்பட்டது. பின்னர் 1957-ம் ஆண்டு லெபனானில் வலதுசாரிக் கிரிஸ்த்தவர்கள் தொடர்ந்து ஆட்சி புரியக் கூடிய வகையில் லெபனானிய அரசமைப்பை அமெரிக்க உளவுத் துறையான சி.ஐ.ஏ இரகசியமாகத் தலையிட்டு மாற்றியது. அரசமைப்பை மாற்றுவதற்க்கு தேவையான பெரும்பான்மையை 1957 மே-ஜூன் மாதங்களில் நடந்த பாராளமன்றத் தேர்தலில் வலதுசாரிகள் வெற்றி பெறச் செய்ய வாக்குப் பெட்டிகளுக்குள் கள்ள வாக்குகள் திணிக்கப்பட்டன. இதனால் அரபு நாடுகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கிருத்தவ வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவினர்.  அரபு நாடுகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள் பொதுவுடமைவாதிகள் (கம்யூனிஸ்ட்டுகள்) என சி.ஐ.ஏ அமெரிக்க அதிபரிடமே பொய் சொன்னது. இந்த முறைகேடான தேர்தலைத் தொடந்து லெபனானில் பெரும் உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டது. மரோனைற் கிருத்தவர்களும் இசுலாமியர்களும் மோதிக் கொண்டனர். 1956-ம் ஆண்டு எகிப்து சூயஸ் கால்வாய்காக மேற்கு நாடுகள் முரண்பட்ட போது லெபனானிய கிருத்தவர்கள் எகிப்திய ஆட்சியாளர் கமால் நாசர் பக்கம் நிற்காமல் மேற்கு நாடுகளுக்கு சார்பாக நின்றது எகிப்த்திற்கும் லெபனானிற்கும் இடையில் முறுகலை உருவாக்கியது. எகிப்த்தியர்களும் சிரியர்களும் தமது நாடுகளை இணைத்து 1958-ம் ஆண்டு ஐக்கிய அரபுக் குடியரசை உருவாக்கினார்கள். லெபனானில் இருக்கும் இசுலாமியர்கள் லெபனானும் இந்த அரசில் இணைய வேண்டும் எனவும் கிருத்தவர்கள் லெபனான் தொடர்ந்து தனிநாடாக இருக்க வேண்டும் எனவும் விரும்பினர். புதிய ஐக்கிய அரபுக் குடியரசு லெபனானிய இசுலாமியர்களுக்கு உதவியது. இதனால் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்தது. லெபனானில் அமெரிக்கா தலையிட்டால் தான் அணுக் குண்டைப் பாவிப்பேன் என சோவியத் அதிபர் குருசேவ் மிரட்டினார். 1958-ம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்கா 14000 படையினரைக் கொண்டு நீல வௌவால் என்னும் பெயரில் ஒரு படைநடவடிக்கையை லெபனானில் மேற் கொண்டது.

மாறிய இனவிகிதாசாரம்

மத்தியதர வர்க்கத்தினரை அதிகமாகக் கொண்ட லெபனானிய கிருத்தவர்களின் மக்கள் தொகைப் பெருக்கத்துடன் ஒப்பிடுகையில் வறியவர்களை அதிகம் கொண்ட இசுலாமியர்களின் மக்கள் தொகை அதிகமாகக் கூடியதாலும் 1948-ம் ஆண்டு நடந்த அரபு-இஸ்ரேலியப் போரைத் தொடர்ந்து பலஸ்தீனத்தில் இருந்து இஸ்ரேலியர்கள் லெபனானிற்கு தப்பி ஓடியதாலும் 20-ம் நூற்றண்டின் நடுப்பகுதில் இருந்து லெபனானின் இனவிகிதாசாரம் தலைகீழாக மாறியது. பலஸ்த்தீனிய விடுதலை இயக்கம் லெபானானில் வலுமிக்க ஒரு அமைப்பாக உருவானது. மாரோனைற் கிருத்தவர்களுக்கும் பாலஸ்த்தீனிய விடுதலை இயக்கத்திற்கும் இடையில் போர் மூண்டது. அமெரிக்காவும் இஸ்ரேலும் தந்திரமாக பாலஸ்த்தீன விடுதலை இயக்கம் லெபனானைக் கைப்பற்றினால் அது சிரியாவிற்கு ஆபத்தாக முடியும் என சிரிய ஆட்சியாளர்களை நம்ப வைத்தனர். இதனால் அப்போதைய சிரிய அதிபர் ஹஃபீஸ் அல் அசாத் 1976இல் லெபனானிற்கு நாற்பதினாயிரம் படையினரை அனுப்பினார். பல பாலஸ்த்தீனிய விடுதலைப் போராளிகள் கொன்று குவிக்கப்பட்டனர். லெபனானிய துரூஸ் இனக் குழுமத்தினரின் தலைவர் கமால் ஜம்பிளட் கொல்லப்பட்டார். லெபனானில் பாலஸ்த்தீனிய விடுதலை அமைப்பு ஒழித்துக் கட்டப்பட்டது. எஞ்சிய பாலஸ்த்தீனியர்கள் அபு நிதால் என்னும் பெயரில் உள்ள அமைப்பின் கீழ் இயங்கினர். அவர்களை 1982இல் இஸ்ரேல் லெபனானில் படை எடுத்துக் கொன்று குவித்தது. லெபனானின் தென் பகுதியையும் கைப்பற்றிக் கொண்டது. பின்னர் தெற்கு லெபனானில் உள்ள பெரும்பானமை சியா முசுலிம்கள் மத்தியில் ஹிஸ்புல்லா அமைப்பு உருவானது. இன்றுவரை இஸ்ரேலுக்கு பெரும் சவாலாக கடவுளின் படை என்னும் பொருள் கொண்ட ஹிஸ்புல்லா திகழ்கின்றது. ஹிஸ்புல்லாவின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் சியா முசுலிம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட ஈரானிற்குப் பெரும் பங்கு உண்டு. ஹிஸ்புல்லா அமைப்பினர் பல மருத்துவ மனைகள் கல்விக்கூடங்கள் போன்றவற்றை லெபனானில் நடாத்தி வருகின்றனர். தொலைக்காட்சி சேவை உட்படப் பல ஊடகங்களையும் ஹிஸ்புல்லா நடாத்தி வருகின்றது.

ஈரானின் ஹிஸ்புல்லா
பல ஆண்டுகளாக இஸ்ரேலியப் படைகளுக்கு எதிரான கரந்தடிப் போரில் பாலஸ்த்தீனியர்கள் ஈடுபட்டனர். 1978இல் ஐக்கிய நாடுகளின் சமாதானப் படை லெபனானிற்கு அனுப்பப்பட்டது. 1983-ம் ஆண்டு லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் இருந்த அமெரிக்கக் கடற்படையினர் மீது ஹிஸ்புல்லா தற்கொடைத் தாக்குதல் நடாத்தி 241 படையினரைக் கொன்றது. இது அமெரிக்கப் படையைப் பொறுத்தவரை ஒரு நாளில் ஏற்பட்ட பேரிழப்பாகும். இதில் இருந்து ஹிஸ்புல்லா உலகப் புகழ் பெற்றதுடன் அமெரிக்கப் படைகளையும் 1984இல் லெபனானில் இருந்து வெளியேற்றியது. 1982-ம் ஆண்டு லெபனானில் அமைதியை ஏற்படுத்த எனச் சென்ற பன்னாட்டுப் படைகளில் அமெரிக்கப் படையினரும் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.  1992-ம் ஆண்டு ஹிஸ்புல்லாவை உருவாக்கியவரிகளில் ஒருவரும் அதன் தலைவருமான அப்பால் அல் முசாவியை இஸ்ரேல் கொன்றது. அதைத் தொடர்ந்து ஹசன் நஸ்ரல்லா ஹிஸ்புல்லாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இஸ்ரேலுக்கு எதிராக உறுதியாகப் போராடும் சியா முசுலிம்களின் அமைப்பான ஹிஸ்புல்லாவிற்கு சிரியாவும் ஈரானும் உற்ற நட்பு  நாடுகளாகின. ஹிஸ்புல்லாவின் கல்வி மேம்பாடு உட்பட்ட பல சமூக அபிவிருத்தி வேலைகள் பலரது கவனத்தை ஈர்த்ததுடன் பல நிதி உதவியாளர்களையும் கவர்ந்தது. லெபனானில் உள்ள சுனி முசுலிம்கள் பல பிரிவுகளாகப் பிளவு பட்டு இருக்கும் போது ஹிஸ்புல்லா லெபனானில் உள்ள சியா முஸ்லிம்களை தனது பிடிக்குள் வைத்திருக்கிறது. ஈரான் இஸ்ரேலுக்கு எதிரான தனது நகர்வுகளுக்கு ஹிஸ்புல்லாவைப் பாவிக்கிறது.

ஹிஸ்புல்லாவின் அரண் ஆட்டம் காணத் தொடங்கியது

ஹிஸ்புல்லாவின் இருப்பிற்கு சிரிய ஆட்சியாளர்களும் ஈரானும் முக்கியமானவையாகும். சிரிய அதிபர் பஷார் அல் அசாத் சியா முசுலிம்களின் ஒரு பிரிவினரான அலவைற் இனக் குழுமத்தைச் சேர்ந்தவர். இவர் சுனி முசுலிம்களைப் பெரும்பான்மையினராகக் கொன்ட சிரியாவின் ஆட்சியைத் தனது தந்தையாரிடம் இருந்து பெற்றுக் கொண்டார். ஹிஸ்புல்லாவிற்குத் தேவையான படைக்கலன்களும் நிதியும் ஈரானிடமிருந்தும் சிரியாவிடமிருந்தும் கிடைக்கின்றன. ஹிஸ்புல்லாவிற்கு ஸ்கட் ஏவுகணைகளைக் கூட சிரியா வழங்கியிருந்தது. 2011ம் ஆன்டு சிரியாவில் ஆரம்பமான அரபு வசந்தம் பஷார் அசாத்தின் ஆட்சிக்குப் பெரும் சவாலாக அமைந்தது. ஹிஸ்புல்லா அமைப்பினர் லெபனானில் இருந்து சிரியா சென்று அசாத்தின் படைகளுடன் இணைந்து கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராகப் போராடத் தொடங்கினர். சிரியா அமெரிக்க ஆதரவு ஆட்சியாளர்களின் கைகளிற்கோ அல்லது சவுதி ஆதரவு பெற்ற சுனி முசுலிம்களின் கைக்களிற்கோ சென்றால் அது ஹிஸ்புல்லாவிற்குப் பெரும் சவாலாக அமையும். அத்துடன் ஈரான் மத்திய கிழக்கில் தனிமைப்படுத்தப்படும். இதனால் ஈரானும் ஹிஸ்புல்லா அமைப்பினரை அசாத்தின் படைகளுடன் இணைந்து போராடும்படி வேண்டிக் கொண்டது.


ஹிஸ்புல்லாவை அழிக்க முயலும் அமெரிக்கா
ஹிஸ்புல்லாவை அமெரிக்கா இரு முனைகளில் இப்போது அழித்து வருகின்றது. லெபனானிய அரச படைகளுக்கு பயிற்ச்சியும் படைக்கல உதவியும் அமெரிக்கா வழங்குகின்றது. அதே வேளை சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிராகப் போராடும் அமைப்புகளில் சிலவற்றிற்கு அமெரிக்கா படைப் பயிற்ச்சியும் படைக்கலன்களும் வழங்குகின்றது. இவை ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தாக்குதல் நடாத்துகின்றன. ஈரானின் வேண்டு கோளிற்கு ஏற்ப ஹிஸ்புல்லா ஈராக்கிற்கு சென்று அங்கு சுனி முசுலிம் போராளி அமைப்பான ஐ.எஸ் எனப்படும் இசுலாமிய அரசு அமைப்பிற்கு எதிராகவும் போராடுகின்றது.

போராளிகள் தலைகளில் அதிக சுமை
சிரியாவில் போராடும் ஹிஸ்புல்லாப் போராளிகள் பலர் தமது போரைக் கைவிட்டு தலைமையின் கட்டளைக்குப் பணிய மறுத்து லெபனான் திரும்புவதாகச் செய்திகள் சொல்கின்றன. சிரியப் போரில் இறந்த போராளிகளின் குடும்பங்களுக்கு போதிய உதவிகள் செய்யப்படாமையும் போராடும் போராளிகளுக்கு உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படாமையும் போராளிகளைப் பெரிதும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. சிரியா ஈராக் ஆகிய நாடுகளில் போராடுவது ஹிஸ்புல்லாப் போராளிகளுக்குப் பெரும் சுமையாகவும் அமைந்துள்ளது.

இஸ்ரேல் ஹிஸ்புல்லா மீது பாயுமா?
சிரியாவில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் களமுனை அனுபவம் இஸ்ரேலைச் சிந்திக்க வைத்துள்ளது. அத்துடன் சிரிய அரசிடமிருந்து புதிய தரப் படைக்கலன்களை ஹிஸ்புல்லா பெறுவதாக இஸ்ரேல் சந்தேகிக்கின்றது. பல தடவைகள் சிரியாவில் இருந்து லெபனானிற்கு படைக்கலன்களை எடுத்துச் சென்ற வண்டிகளின் தொடரணிகள் மீது இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல்கள் நடாத்தியுள்ளன. லெபனான், சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் ஹிஸ்புல்லா பரந்திருக்கும் வேளையில் லெபனானியப் படைகளும் சிரியக் கிளர்ச்சிக்காரர்களும் ஹிஸ்புல்லா மீது தாக்குதல்கள் நடாத்துகின்றனர். ஹிஸ்புல்லாவின் முன்னணிப் படையணிகள் சிரியாவிற்கு சென்று விட்டன. இஸ்ரேலின் எல்லையை ஒட்டிய லெபனானின் மேற்குப் பிரதேசத்தில் தற்போது சாதாரண படையணிகள்தான் எல்லைப் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளன. சரியான தருணம் பார்த்து இஸ்ரேலியப் படைகள் ஏற்கனவே பல தடவைகள் செய்தது போல லெபனானிற்குள் புகுந்து ஹிஸ்புல்லாவின் படையினரையும் படைக்கலன்களையும் அழிக்கலாம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...