Saturday, 13 December 2008

பரிமாற்றம்.


அன்பினிலே வருகிறது ஒரு கடிதம் இதயம்தான் தபால்காரன்
ஆசையோடு வருகிறது ஒரு கடிதம் கண்கள்தான் தபால்காரன்
நினைவிலே எழுகிறது ஒரு கடிதம் காற்றுத்தான் தபால்காரன்
கனவினிலே கனிகிறது ஒரு கடிதம் யார்தான் தபால்காரன்
.......
அன்பினில் வழிந்தது ஒரு கவிதை உன் இதயம் சேர
உணர்வில் உதித்தது ஒரு கவிதை உன் உடல் நாடி
நினைவில் உதிர்ந்தது ஒரு கவிதை உன் உளம் தேடி
கனவனில் கரைந்தது ஒரு கவிதை என் உயிர் வாடி.

நோயும் நீ மருந்தும் நீ


ஒளி மிளிர் விழி வழி வரு மொழி
என் உயிரழி கொடு வாளி.
.....................
இதழ் கடை வழி அமுதம்
மீள் தரு மொரு வாழ்வு.
..................
நினைவினில் நிதம் நடம் புரியெழில்
துயிலழி ஊழித்தீ.
.................
ஐங்கணை தொடுமவன் தருவலி
போக்கினை என எனையணை.
.......................
நிமலனை நிதம் நினை அடியவர்க்கிணை
யென் மனம் பொடிப்படும் முன்னகையால்.
.................
நின் மலர்க் கரம்பட உரம் பெறும்
என் உடலொடு ஆவி.
.................
மெல்லுடல் பட வரும் கவின்
தரும் ஒரு கவி கோடி
..............
கனவெது நிஜமெது
துயிலெது விழிப்பெது
மயங்குது என் மனம்.

Chat in Facebook

மலேசிய மதுரா மனம் மகிழ உரைப்பாள்
இயல்பான கதைகளால் மனம் கரைப்பாள்
மைலாப்பூர் கணனிக் கன்னி மைதிலி மாமி
மையல் கொடுத்து மறைவாள் ஐயோ சாமி
.........
கொழும்பில் ஓரு குண்டுக் கன்னி நிருபா
கொழுப்போடு என்றும் இங்கு இருப்பா
திமிரோடுதான் தினம் தோறும் கதைப்பா
வாரத்தைகளால் எனைத் தினம் உதைப்பா

..........
வலிய வந்து ஒரு வதனா வம்பளப்பாள்
நெடிய நேரங்கள் கதைகள் அளப்பாள்
படுக்கைக்கு போகிறேன் என்றுரைப்பாள்
உடன் வரவா என்றால் கொதிப்பாள்
......
மாமா என மாலதி எனை அழைப்பாள்
தன் வயதை இப்படித்தான் குறைப்பாள்
கவிதை வரிகளை அள்ளி இறைப்பாள்
அதிலும் அன்பாய்த்தான் கதைப்பாள்
......
அண்ணா என்பாள் அந்தக் கனடியக் கனகா
பண்பாய்த்தான் வார்த்தைகள் மெல்லத் தருவா
காத்திருக்க வேண்டும் அவள் அன்பிற்காக
வாழ்க அவள் என்றும் நன்றாக
........
பத்து நிமிடம் செல்லும் சாந்தி பதிலுக்கு
பலபேரோடு ஒன்றாய் சல்லாபம் அடிப்பாள்
பாலியலை வார்த்தைகளில் அவள் வடிப்பாள்
ஒன்றும் தெரியாத பாப்பா போல் நடிப்பாள்
.......
திருவல்லிக்கேணியில் அழகாய் ஒரு திவ்வியா
திட்டித் தீர்பபாள் செருப்பு பிஞ்சிடும் என்பாள் நிஜமா
ஆனாலும் அவள் சொன்னது ஏதோ சரிதான்
பொட்டச்சியளோ சற்றடிப்பது என் பொழப்பு

நினைக்க நேரமில்லை

நெட்ட நெடுந் தெருவில் வற்றாத ஆறு போலோடும்
வாகனத் தொடரிடை சிக்கித் தவிக்கையில்
கடன் அட்டையில் வளரும் நிலுவைதனை
எண்ணி மனம் ஏங்கித் தவிக்கையில் - ஊரிலிருக்கும்
உறவுகளின் அவலங்களை நினைக்க ஏது நேரம்
.......
பிரிட்னியின் அடுத்து வரும் அல்பம் என்னாகும்
கேர்ல்ஸ் அலவுட் அவுட்டாகித்தான் போயிடுவினமா
தொடர் நாடகங்களின் திருப்பங்கள் என்னாகும்.
இப்படிப் பல பிரச்சனைகள் எமக்கிருக்க ஊரிலிருக்கும்
உறவுகளின் அவலங்களை நினைக்க ஏது நேரம்
..........
தமிழத் திரைப்படங்கள் நாளும் பல பார்க்க வேண்டும்
பிரியமான கோழிப் பிரியாணி பிரியாமணியுடன் உண்பது போல் - யாரும்
தெரியாமல் பகல் கனவு பலவும் கண்டு மனம் மகிழவேண்டும்
இப்படிப் பல பிரச்சனைகள் எமக்கிருக்க ஊரிலிருக்கும்
உறவுகளின் அவலங்களை நினைக்க ஏது நேரம்
.........
பெக்கம் முடிந்தானா மான்யூ அந்தளவும் தானா
ஆசனல் அடிக்குமா நீலச் செல்சி சிதறுமா
லிவப்பூல் இம்முறையாவது கொஞ்சம் தோறுமா
இப்படிப் பல பிரச்சனைகள் எமக்கிருக்க ஊரிலிருக்கும்
உறவுகளின் அவலங்களை நினைக்க ஏது நேரம்

ஓயாத கொலைகள்.




சிறையில் கொன்றனர் வகுப்பறையில் கொன்றனர்
வேலையில் கொன்றனர் நெடுஞ் சாலையில் கொன்றனர்
காலையில் கொன்றனர் அந்தி மாலையில் கொன்றனர்
கொன்றனர் தமிழனை பல்லாயிரம் தடவைகள் கொன்றனர்
.........
கோயிலில் கொன்றனர் வைத்தியசாலையில் நோயினில் கொன்றனர்
பாயினில் கொன்றனர் இளம் சேயினில் கொன்றனர்
வாலிபத்தில் கொன்றனர் வாடும் வயோதிபத்தில் கொன்றனர்
கொன்றனர் தமிழனை பல்லாயிரம் தடவைகள் கொன்றனர்
........
நிலத்தினில் கொன்றனர் நடுக் கடல் நீரில் கொன்றனர்
விண்ணினில் கொன்றனர் கொடுந் தீயினில் கொன்றனர் - கன்னியை
கெடுத்துக் கொன்றனர் கழுத்தை நெரித்துக் கொன்றனர்
கொன்றனர் தமிழனை பல்லாயிரம் தடவைகள் கொன்றனர்
.......
அமெரிக்க ஆலோசனையுடன் கொன்றனர் இந்திய ஆசியுடன் கொன்றனர்
பாக்கிஸ்த்தான் ஆயுதத்தால் கொன்றனர் சீனப் பணத்தால் கொன்றனர்
இஸ்ரேலிய உளவால் கொன்றனர் ஐரோப்பிய ஆதராவல் கொன்றனர்
கொன்றனர் தமிழனை பல்லாயிரம் தடவைகள் கொன்றனர்

அநுமனைத் தேடிய சீதை


பொருத்தமென்றோர் பெருங்கடல்
குடும்பமென்றோர் ஆழ்கடல்
சீதனமென்றோர் கொடுங்கடல்
இக்கடலெல்லாம் தாண்டி
ராமனொடு சேர்த்து வைக்க
அனுமனைத் தேடுகிறாள் சீதை

மேலும் ஒரு பலி

பம்பலப்பிட்டியில் கணக்கியல் கற்கை நெறி வகுப்பில்
என் மேல் மெல்ல விழுந்தது அந்த முதற் பார்வை
என் உடலைத் துளைத்து உயிரை உலுக்கிய பார்வை
என்னுள் ஏதோ ஒன்றைக் கொழுத்தி விட்ட பார்வை
முன்பின் அறியாத புதுமுகம் அதுவானாலும்
முற்பிறப்பிலிருந்து தொடர்ந்து வந்த உறவு போலிருந்தது
தமிழா சிங்களமா அல்லது முஸ்லிமா
எனத் தடுமாற வைக்கும் தோற்றம்
மொழியை மதத்தை இனத்தை நினைக்கவில்லை
எல்லாம் துறந்த நிலை எல்லாம் மறந்த நிலை
பார்வைகளோடு பல வாரங்கள் பறந்து சென்றன
இன்றோடு உலகம் அழியப் போகுது போலோடும்
மனிதரிடைபொறுப்போடு நிதானித்து நின்றது நம் நல் உறவு
முண்டியடித்து பேருந்தில் பாயந்து ஏறும் போது
உனக்கு விட்டுக் கொடுத்ததில் நன்றியாய் வந்த முதற் புன்னகை
புன்னகைகளோடு நாட்கள் பல நகர்ந்து சென்றன
இனப்பகையில் வெடித்திடும் குண்டுகள் சிதறிடும் உடல்கள்
நாள்தோறும் வரும் பல மரணச்செய்திகள்
மீண்டும் வருமா ஒரு இனக் கலவரம் அதுதான் பலர் கேள்வி
இந்த முறை ஒருத்தரையும் உயிரோடு விடாங்களாம்
கப்பல் ஏறிப் போக ஏலாதாம் அகதி முகாமே தேவையில்லையாம்
யார் எது சொன்னாலும் என் காதில் ஏறாது
இந்த உறவைத் தொடர்வதெப்படி வளர்ப்பதெப்படி
அதுவே சிந்தனை அதுவே கனவு அதற்கே வாழ்வு
வகுப்பு அன்றிலை என்றோர் அறிவிப்பு
நான் வெளியே வருகிறேன் நீ உள்ளே வருகிறாய்
நான் உனக்கு கூறிய செய்தியே முதல் வார்த்தைப் பரிமாற்றம்
வார்த்தைப் பரிமாற்றத்தில் வளர்ந்தது நம் உறவு
தாழையடியில் கடற்கரையில் பதுங்கியதுமில்லை
மழைச்சாரலில் ஒரு குடையின் கீழ் நெருங்கியதுமில்லை
சினிமாக் கொட்டகையில் பின்வரிசையில் ஒதுங்கியதுமில்லை
எமக்கு முன்னே எம் நட்பு வட்டத்திற்கு தெரிந்து விட்டது
நாமிருவரும் காதலரென்று கதைகள் பல பரவின
கேட்கும் போதெல்லாம் மகிழ்வை மறைக்கும் கோபம்
நீ உணவு சமைத்து பொட்டலமாகத் தருவாய் நான் உண்ண
என்னை மறந்து நான் வாழ்ந்த அந்த நாட்களில் ஒருநாள்
ஒரு ஐயர் வந்து என் காலில் விழுந்தார்
கண்ணீருடன்நீ தன் மகளென்றார் மானம் காத்திடென்றார்
பிரதமருக்கு ஜாதக தோஷம் நிக்க பூசை செய்பவரென்றார்தான் குடும்பத்தோடு சாவேனென்றார் சாத்திரங்கள் பல சொன்னார்
கால்களில் விழுவதை;த திரைப்படங்களில் மட்டும் பார்த்ததுண்டு
அன்றோடு முடிந்தது நம் உறவு கலைந்தது காதல் கனவு
சாதிய சாத்திரங்களுக்கு இன்னும் ஒரு பலி.

யார் நீ

தமிழ்த் தாய்க்கோர் தரம் கெட்ட பிள்ளை
கலைத் தாய்க்கோர் காணாமற் போன பிள்ளை
கவிதைத் தாய்க்கோர் தறி கெட்ட பிள்ளை
கல்வித் தாய்க்கோர் விவரமில்லாப் பிள்ளை
கற்பனைத் தாய்க்கோர் வாயிலாப் பிள்ளளை
ஞானத் தாய்க்கோர் சர்வ சூனியப் பிள்ளை
பெற்ற தாய்க்கோர் பெருமை தராப் பிள்ளை
ஊர்த் தாய்க்கோர் பெயர் கொடுக்காப் பிள்ளை
விடுதலைத் தாய்க்கோர் உதவாக் கரைப் பிள்ளை

நெஞ்சில் நீ நிதமாடும் பரதம்

அதிகாலை அலாரம் அடித்து தூக்கம் கலைந்து
திடுமென விழித்தெழுந்து இடமெது வருடமெது
திகதி எது நாள் எது என்றுணரு முன்னமாகவே
புஸ்ப்பாஞ்சலியாய் வந்து புன்னகைக்கும் நின் முகம்
.........
காலைக் கடன் தீர்த்து பல் தேய்த்து உடல் குளித்து
உடுப்பெடுத்து மாற்றி தலை சீவி முகம் திருத்தி
உணவெடுத்து மெல்ல உண்ண முனைந்தால்
அல்லாரிப்பில் வந்து புல்லரிக்க வைக்கும் நின் முகம்
........
நேரம் போனது தெரிந்து துடித்தெழுந்தோடி
தெரு பல கடந்தோடி படிகள் பல வேறி
தொடரூந்தில் தட்டுத் தடுமாறி ஏறினால்
ஜதிஸ்வரத்திலோர் சுதி சேர்க்குது நின் முகம்
........
கதியெனும் கதரினுக்கு காலை வணக்கம் சொல்லி
மெல் எனும் மெல்சனுக்கு கிரிக்கெட் கதை சொல்லி
ஆசனத்தில் சென்றமர்ந்தால் மொனிட்டரில் வந்து
காம்போதியில் ஒரு ஸப்தமாக வந்தாடுது நின் முகம்.
.........
பாதீட்டோடும் பேரேட்டோடும் காசுப் பாய்ச்லோடும்
பங்குச் சுட்டேண்ணோடும் வட்டி வீதத்தோடும்
இணங்காக் கணக்கோடும் சுணங்காமல் போராட
இராகமாலிகையில் ஒரு வர்ணம் தீட்டுது நின் முகம்
..........
களைப்போடு வீடுவந்து நாடகம் பார்க்கும் தாயை நச்சரித்து
சூட்டோடு ஒரு பானம் சுகமாகப் பருகி முடித்து
பாட்டோடு விசிலடித்து அப்பாடா என்று சாய்ந்தால்
கதனகுதூகலத் தில்லானாவில் என்னைக் கலங்கடிக்குது நின் முகம்
.........
நாள்தனை முடித்து நாலையும் எண்ணிப் படுக்கையில் விழுந்து
பலதையும் என் வாலிப மனதில் போட்டுக் குழம்பி
களைத்தும் சோர்ந்தும் தவிக்கும் என் வயது வேட்கைக்கு
என்றுதான் வந்து மங்களம் பாடும் உன் இனிய உறவு

How many more killings?

How many more babies you want to kill
How many more children you want to cull
How many more girls you want to rape
How many more bodies you want to bury
Before you accept our right to exist
.........
How many more houses you want to burn
How many more temples you want to flatten
Howe many more schools you want to destroy
How many more hospitals you want to blast
Before we achieve our right to self determination
.........
How many more billions or rupees you want to waste
How many more millions of people you want to displace
How many more thousands of lies you want to tell
How many more generations this is going to last
Before we form our separate nation Tamil Eelam.

மன்னியுங்கள் மாவீரர்களே

கோட்டையைப் பிடிக்கவுமில்லை
கொக்காவிலைச் சரிக்கவுமில்லை
கொக்கட்டிச்சோலையில்
மார்தட்டி நிற்கவுமில்லை
சாஹரவர்த்தனாவை மூழ்கடிக்கவுமில்லை
நெல்லியடியில் தவிடுபொடியாக்கவுமில்லை
பூநகரியை எதிரிக்கு புதைகுழியாக்கவுமில்லை
ஆனையிறவில் ஆணிவேரோடு அறுக்கவுமில்லை
சீக்கியைரை சிதறடிக்கவுமில்லை
கூர்காக்களை கூறு போடவுமில்லை
நீழ்கடலெங்கும் நிமிர்ந்து நிற்கவுமில்லை
அம்பாறையில் மறைந்திருந்து தாக்கவுமில்லை
அம்பாந்தோட்டையில் அவர்களை துணிவோடு தூக்கவுமில்லை
உண்ணாமல் உறங்காமல் ஊருக்கு உழைக்கவுமில்லை
நானோர் தமிழனோ நானோர் மனிதனோ நானோர் ஆணோ
மன்னியுங்கள் மாவீரர்களே

பிரிந்தோம் சந்திக்க வில்லை

அமைதிப் படையின் அளவிலா அட்டூழியத்தால்
அம்மன் கோவிலில் அகதிகளாக இருந்த வேளை
திருமஞ்சக் கிணற்றடியில் எம் முதல் சந்திப்பு
அத்தனை பிரச்சனைகளுக்கும் மத்தியிலும்
தொடர்ந்தது என் தேடல் உன்முகத்தை நாடி
செல்லடியில் சிதைந்த உன் வீட்டின் மதில்கள்
உன் முகத்தை மீண்டும் காட்டித் தந்தது
ஹெலிக்குப் பயந்து ஒடும் போதும்
விமானக் குண்டுக்கு பயந்து ஒதுங்கும் போதும்
நினைவெல்லாம் நீயாக நீங்காத படமாகதேடல் தொடர்ந்தது
அரசடி வீதித் தரிப்பிடத்தில்மீண்டும்
அந்தத் திவ்விய தரிசனம் கிடைக்கும் வரை
கண்களால் பல்லாயிரம் வார்த்தைப் பரிமாற்றம்
மறக்க வொணாத மாதங்கள் கணங்களாக மறைய
அலைகிறான் மகன் அகால வேளைகளில்
இயக்கத்தில் சேர்ந்திட்டானோ சேரப்போகிறானோ
அஞ்சினாள் அம்மா அதிர்ந்தார் அப்பா
அனுப்பினர் வெளிநாட்டிற்கு.
ஊர்களே மாறியது போல் ஊரார்கள் மாறினர்
நீயும் எங்கேயோ சென்று விட்டாய்
பிரிந்தோம் சந்திக்க வில்லை

ஒரு இனம் அழியுது

ராகம்: அகோரம் ---------------------------------- தாளம்: திருகுதாளம்
........
பல்லவி
இனம் அழியுதே தமிழா உன்தன் இனம் அழியுதே – இலங்கை
என்றொரு கொடிய தீவுதன்னிலே இனம் அழியுதே.......
........
அநு பல்லவி
இந்தியா என்றொரு நாடு அருகில் இருக்குதே
நம்ப வைத்து நல்லாய் உன் கழுத்தறுக்குதே
........
சரணம்.
......
கோபாலபுரத்துத் தாத்தாதன் கொள்கை விளங்கவிலையே
கோபாலசாமியின் மகன்தன் கோபத்தால் பயனேதுமிலையே
போயஜஸ் தோட்டத்து மாமியிடம் கருணையேதுமிலையே
மத்திய அரசிடம் கொள்கை மாற்றம் ஏதுமில்லையே ( இனம்....)
.........
சில பார்ப்பனர் தம் நாதாரித் தனத்துக்கொர் அளவில்லையே
பாதுகாப்பு ஆலோசகர்தம் கேப்மாரித்தனம் குறையவில்லையே
வெளியுறவுச் செயலர்தம் மொள்ள மாரித்தனம் மறையவில்லையே – சிலதமிழ் உறவுகள் தான் இன்னும் திருந்தின பாடில்லையே....... ( இனம்....)
.........
துணிந்திடு துயர்விடு களம் புகு களையெடு
கொதித்திடு எழுந்திடு கொடியோரை அழித்திடு
இணைந்திடு இனத்தோடு தோள் கொடு இடர் எடு
புயலெனப் புறப்படு புலியெனச் செயற்படு....... ( இனம்....)

இதயமிலா சிந்தனை

உன் இதயத்தில் என் சிந்தனையில்லை
உன் சிந்தனைக்கு ஏதோ இதயமில்லை
உன் மனதில் என் சுவடுகள் இல்லை
என் மனமெல்லாம் வடுக்கள் நிறைந்தன.
..
உன் நெஞ்சில் ஏனோ ஈரமில்லை
என் நெஞ்செல்லாம் பாரம் நிறைந்தது
உன் கனவில் ஏனோ நான் இல்லை
என் கனவெல்லாம் நீயே என்றானாய்

Temples in Britain













விம்பிள்டன் கோயில் வேழம் - நிதம்
வேண்டி னோர்க் கருள் ஞானம் - அவர்
அன்புக்கொரு தம்பிக்கொரு
நம்பிக்குற மாதைத்தரு
தும்பிக்கை – வை
நம்பிக்கை.

வேல்ஸில் விளையாடும் வேலன் - அவன்
வேண்டிச் செல்வோர்க் கருள் பாலன்
இசையோடும் எழிலோடும் மயிலாடும்
குயில் கூவும்
தோட்டம் - எங்கள்
தேட்டம்.

ஆச்வேயில் ஆடும் அழகன் - எங்கள்
உயர் வாசற் குன்றுக் குமரன் - அவன்
பண்ணொடும் பதத்தொடும்
பெண்ணோடும் நிதமாடும்
ஆட்டம் - பக்தர்
கூட்டம்.

ஈசன் மகனுக் கொரு ஈஸ்ற்ஹாம் - அது
ஈடில்லாப் புகழ் சேர் கொற்றம் - அது
மானொடும் மயிலாடும்
தேரொடும் எழில்கூடும்
தோட்டம் - கந்த
கோட்டம்.

ராஜராஜேஸ்வரி தோற்றம் - அது
ஸ்ரோன்லிக்கொரு ஏற்றம் - அந்த
ஈஸ்வரன் இணைதேவி
ஈடில்லாத் துணைதேடி
வருவார் கோடி – பல
பாடல் பாடி.

ஈலிங்கில் கனக துர்கை – என்றும்
வேண்டுவோரக் கருள் பொற்கை - அந்த
மகுடன் வதை அம்மன் கதை
நம்பியுளம் கொள்வேர்
துயர் தீர்ப்பாள் - அருள்
சேர்ப்பாள்.

ஈசனார்க் கொரு கோயில் - அது
இயைந்தது லுவிசியம் தன்னில் - அந்தப்
பொடி பூசி மதி சூடி
நதி சூடி சதி பாதிச்
சர்வேசன் - எங்கள்
தவநேசன்.

ரூட்டிங்கில் முத்து மாரி – அன்பைத்
தருவாள் அள்ளி வாரி
முதலும் அவள் முடிவும் அவள்
அருளும் அவள் பொருளும் அவள்
சிவ சக்தி – தருவாள்
நன் முத்தி.

மஹாலக்ஷ்மி மனமகிழ் மன்றம் - அது
மட்டில்லா மகிமை சேர் ஈஸ்ற்ஹாம் - அங்கு
சொத்தைத்தரு அத்தைக்கொரு
அன்பின்னுரு அடியார்தரு
காணிக்கை – நிதம்
சேருங்கை.

என்பீல்ட் நகர் எழுந்தருளி - நிதம்
எமக்கருள்வாள் நாகபூசணி – எங்கள்
தாயகத் துயர் துடை தாயவள்
உயர் பத
மென்றும் நாடு - அங்கு
தோன்றும் நாடு.

மிச்சப்பதி அமர் சுந்தரேசர் - எங்கள்
மீனாட்சி மனங்கவர் எழில்நேசர்
கிளி கொண்ட துணை சேர்ந்த
நஞ்சுண்ட நீலகண்ட
நடராசர் - நற்
பக்தநேசர்.

எத்தெய்வமானாலு மென்ன - இங்கு
எத்தலமானாலு மென்ன – எனறும்
அன்பைக் கொடு அருளைப் பெறு
அகந்தை விடு அறிவில்
எடு தூய்மை – வாயில்
வாய்மை.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...