Friday, 22 November 2013

மேற்கு ஐரோப்பிய நாடுகள் கூடி உருவாக்கும் ஆளில்லா விமானங்கள்.

இனிவரும் காலங்களில் போர்க்களங்களிலும் உளவுத் துறையிலும் வேவுபார்த்தலிலும் ஆளில்லாப் போர் விமானங்கள் அதிக பங்கு வகிக்க இருப்பதால் பிரான்ஸ் ஜேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகள் ஒன்று கூடி ஆளில்லாப் போர் விமானங்களை உருவாக்குகின்றன. இதற்கென அவை ஒரு ஆளில்லாப் போர்விமானக் கூடலகம் (drone club) ஒன்றை உருவாக்கியுள்ளன.

சில மேற்கு ஐரோப்பிய படைத்துறை வல்லுனர்கள் முக்கியமான ஆளில்லாப் போர்விமான உற்பத்தித் துறையில் ஐரோப்பா பின் தங்கி விட்டதாகக் கருதுகின்றனர். ஆளில்லாப் போர்விமானக் கூடலகத்தில் (drone club) பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, போலாந்து ஆகிய நாடுகள் இதில் இணைந்துள்ளன.

பிரித்தானியா ஏற்கனவே முன்னணியில்
ஆளில்லாப் போர் விமான உற்பத்தியில் பிரித்தானியா ஏற்கனவே முன்னணியில் இருக்கிறது. பிரித்தானிய ஆளில்லாப் போர் விமானங்களில் MQ-9 REAPER விமானங்கள் முக்கியமானவை. இவை உள(intelligence), கடுங்கண்காணிப்பு (surveillance), reconnaissance (புலங்காணல்),  நெருங்கிய ஆதரவு (close air support), தாக்குதல் (combat) தேடுதலும் விடுவித்தலும் ( search and rescue), துல்லியமாகத் தாக்குதல் (precision strike),உடன் லேசர் (buddy-laser) உட்படப் பலவிதமான சேவைகளைப் புரியக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த விமானங்களை கழற்றி மடித்து வேறு விமானங்களில் பொதிகளாக வேறு நாடுகளுக்கு அனுப்பி அங்கு திறந்து பொருத்தித் தாக்குதல் செய்யக் கூடிவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.  பிரித்தானியா பல பில்லியன்களைச் செலவழித்து மேலும் புதிய வகையான ஆளில்லா விமானங்களை அடுத்த பத்து ஆண்டுகளில் உருவாக்கவிருக்கிறது. Drone என்று பொதுவாக அழைக்கப்படும் unmanned aerial vehicle (UAV)களிற்கு பிரித்தானியா "Remotely Piloted Air Systems" (RPAS) என்று பெயர் சூட்ட விரும்புகிறது. பிரித்தானியாவில் பிஸ்கட் என்றால் அமெரிக்காவில் குக்கீஸ் என்பார்கள். பிரித்தானியாவில் சுவீட்ஸ் என்றால் அமெரிக்காவில் கண்டி என்பார்கள். இப்படிப் பல நூற்றுக்கணக்கான சொற்பேதம் அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் இருக்கின்றன. பிரித்தானியாவின் ஒலியிலும் வேகமாகச் செல்லக்கூடிய ரடார்களுக்குள் அகப்படாத (supersonic stealth) ஆளில்லாப் போர்விமானங்களையும் உருவாக்கிவிட்டது. ஒன்பது மாதங்களுக்கு முன்னர் வந்த செய்தி இது:


மாலி நாட்டில் அல் கெய்தாவினருக்கு எதிரான போரில் பிரேஞ்சுப் படையினர் அமெரிக்காவின் ஆளில்லாப் போர்விமானங்களினதும் விண்ணில் வைத்து எரி பொருள் நிரப்பும் விமானங்களிலும்தங்கியிருக்க வேண்டியிருந்தது. ஜேர்மனி தனக்குத் தேவையான வேவு பார்க்கும் ஆளில்லாப் போர் விமானங்களை இஸ்ரேலிடம் இருந்து வாங்குகிறது. இப்படி மற்ற நாடுகளில் தங்கி இருக்காமல் தாமே உற்பத்தி செய்ய வேண்டும் என பிரான்ஸும் ஜேர்மனியும் கருதுகின்றன.

அமெரிக்கா ஆளில்லாப் போர் விமான உற்பத்தியில் முன்னணியில் திகழ்கின்றது. அது கடைசியாக உருவாக்கிய ஆளில்லாப் போர்விமானம் வானில் பறக்கும், கடலில் கப்பல் போல் மிதக்கும், கடலின் அடியில் நீர் மூழ்கிக் கப்பல் போல் செல்லும், தரையில் ஒரு வண்டி போல் ஓடும், தவளை போல் பாயும்:

Monday, 18 November 2013

அமெரிக்க இஸ்ரேல் உறவில் பெரும் விரிசல்.

நவம்பர் மாத முற்பகுதியில் இஸ்ரேலுக்குச் சென்ற அமெரிக்க வெளியுறவுத் துறைக்குப் பொறுப்பான அரசுத் துறைச் செயலர் மீண்டும் ஒரு முறை விரைவில் இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பல முனைகளில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கும் இஸ்ரேலிற்கும் இடையிலான உறவில் என்றும் இல்லாத அளவு விரிசல் ஏற்படக் காரணமாக அமைந்தவை:

ஈரான் விவகாரம்
ஈரானின் யூரேனியம் பதப்படுத்தலுக்கு எதிராக அமெரிக்கா ஈரான் மீது விதித்த பொருளாதாரத் தடையை அமெரிக்கா மேலும் மேலும் இறுக்கியதால் மகிழ்ச்சியடைந்திருந்த இஸ்ரேல் அமெரிக்கா ஈரானுடன் பேச்சுவார்த்தையில் P5+1 எனப்படும் குழுவாக ஈடுபடுவது அதிருப்தியடைந்துள்ளது. அமெரிக்கா தன்னுடன் கலந்து ஆலோசிக்காமல் ஈரானுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது இஸ்ரேலின் முதல் அதிருப்தியாகும். அடுத்து ஈரான் தனது யூரேனியம் பதப்படுத்தலை முழுமையாக நிறுத்தினால் அமெரிக்கா தனது பொருளாதாரத் தடைகளைத் தளர்த்த ஒத்துக் கொண்டது இஸ்ரேலை ஆத்திரப்படுத்தியது. ஈரான் தனது யூரேனியம் பதப்படுத்தலை முற்றாக நிறுத்துவது மட்டுமல்ல தனது பதப்படுத்தப்பட்ட யூரேனியத்தை அழிக்க வேண்டும் என்றும் இஸ்ரேல் எதிர்பார்க்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் ஒன்று ஈரான் எல்லா யூரேனியப் பதப்படுத்தல்களையும் நிறுத்த வேண்டும் என்று கூறுகின்றது. இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பென்ஞமின் நெத்தன்யாஹூ அமெரிக்காவில் உள்ள யூதர்கள் அமெரிக்க-ஈரான் உடன்பாடுகளுக்கு எதிராகச் செயற்படும்படி அறைகூவல் விடுத்துள்ளார். ஐக்கிய அமெரிக்கா, இரசியா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளைக் கொண்ட P5+1 குழு ஜெனிவாவில் ஈரானுடன் நடந்த பேச்சு வார்த்தையின் போது ஈரானுக்கு சமாதான நோக்கத்திற்காக யூரேனியம் பதப்படுத்தும் உரிமை இருப்பதை ஏற்றுக் கொண்டன.

எகிப்தில் படைத்துறையினருக்கு அமெரிக்கா உதவிகளை நிறுத்தியமை.
2011இல் எகிப்தில் நடந்த அரபு வசந்ததில் படைத்துறையினரின் ஆட்சி கலைக்க்ப்பட்டது.  இதைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் மொஹமட் மேர்சி ஆட்சிக்கு வந்தார். அவரது ஆட்சியும் சிறப்பாக அமையாததாலும் அவர் படைத்துறையினரை ஓரம் கட்ட முயன்றதாலும் எகிப்தில் மீண்டும் படைத்துறையினர் ஆட்சிக்கு வந்தனர். இது மக்களாட்சி முறைமைக்கு எதிரானது என்றபடியால் அமெரிக்கா எகிப்தியப் படைத்துறையினருக்கு வழங்கி வந்த நிதி உதவியான இரண்டு பில்லியன்களில் 1.5 பில்லியனகள் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து எகிப்தின் படைத்துறை ஆட்சியினருக்கு அமெரிக்காமீது அதிருப்தி ஏற்பட்டது. 2013 ஒக்டோபர் 16-ம் திகதி எகிப்திய வெளிநாட்டமைச்சர் பத்ர் அப்துல் அர்ரி அமெரிக்காவிற்கும் எகிப்திற்கும் இடையிலான உறவு மோசமடைந்து விட்டது என்றார். 2013 நவம்பர் மாத முற்பகுதியில் எகிப்திற்கு அமெரிக்க அரசுத் துறைச் செயலர் ஜோன் கெரி பயணம் செய்தார்.  அப்பயணம் இரு நாடுகளிற்கும் இடையிலான உறவைச் சீர் செய்ய வில்லை. எகிப்திற்கு அமெரிக்கா செய்து வந்த நிதி உதவியை நிறுத்தியதை இஸ்ரேலும் விரும்பவில்லை. அமெரிக்கா பெரும் கேந்திரோபாயத் தவறைச் செய்வதாக ஒபாமா நிர்வாகத்திடம் இஸ்ரேல் எடுத்துச் சொல்லியது. எகிப்து அமெரிக்காவில் தங்கியிருப்பது குறைந்தால் அது எகிப்தும் இஸ்ரேலும் செய்த காம்ப் டேவிட் சமாதான உடன்படிக்கையை ஆபத்திற்கு உள்ளாக்கும் என இஸ்ரேல் அஞ்சுகிறது.

பாலஸ்த்தீனம்
இஸ்ரேலுக்கும் பாலஸ்த்தீனத்திற்கும் இடையில் ஒரு உடன்பாட்டை எட்ட அமெரிக்கா தீவிரமாக முயன்று வருகின்றது இதன் ஒரு அம்சமாக இஸ்ரேலியச் சிறையில் இருந்து பாலஸ்த்தீனப் போராளிகள் இருபத்தாறுபேரை இஸ்ரேல் விடுவித்தது. இதைப் பெரும் வெற்றியாக பாலஸ்தீனியர்கள் கொண்டாடினர். இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேலில் உள்ள தீவிரப் போக்குடையவர்களைத் திருப்திப்படுத்த இஸ்ரேல் தான் ஆக்கிரமித்த பாலஸ்த்தீனப் பிரதேசத்தில் 1900 தொடர் வீடுகளை அமைக்கப் போவதாக அறிவித்தது அமெரிக்காவை அதிருப்திக்குள்ளாக்கியது. அமெரிக்க அரசுத் துறைச் செயலர் ஜோன் கெரி சமாதானப் பேச்சு வார்த்தைக்கு இஸ்ரேல் காட்டும் அக்கறை ஐயத்திற்கு இடமாக இருக்கிறது என பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்தது இஸ்ரேலை ஆத்திரப்படுத்தியது. இஸ்ரேல் பாலஸ்த்தீனத்துடன் ஒரு சுமூகமான தீர்வுக்கு உடன்படாவிடில் இஸ்ரேல் தனிமைப் படுத்தப்படலாம் என்றும் ஜோன் கெரி எச்சரித்திருந்தார்.

ஒபாமாவின் புதிய மத்திய கிழக்குக் கொள்கை
எரிபொருளில் விரைவில் அமெரிக்கா தன்னிறைவு காணவிருப்பதாலும் அதிக மக்கள் தொகையைக் கொண்ட ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது வர்த்தக பொருளாதார உறவை மேம்படுத்தும் நோக்கத்துடன் இருப்பதாலும் அமெரிக்கா மத்திய கிழக்கிற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் குறைக்க இருக்கிறது. இது இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையலாம்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் தமக்கு இடையில் இருக்கும் நட்பு உறுதியானது என்றும் தற்போது ஏற்பட்ட பிணக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று அடித்துச் சொல்கின்றன.

ஈரானைத் தாக்குவதற்கு சவுதி அரேபியாவும் இஸ்ரேலும் கை கோர்க்கின்றன.

ஈரானின் யூரேனியம் பதப்படுத்தல் தொடர்பாகவும் அதன் மீதான பொருளாதாரத் தடை தொடர்பாகவும் P5+1 நாடுகளுடன் நடக்கும் பேச்சு வார்த்தையில் பிரான்ஸ் அதிபர் பிரான்கொய்ஸ் ஹொலண்டே ஈரானுக்கு நான்கு நிபந்தனைகளை விதித்துள்ளார். ஒரு இடைக்காலத் தீர்விற்கு உடன்படுவதாயின் தனது நான்கு நிபந்தனைகளுக்கும் சம்மதிக்க வேண்டும் என்கிறார் அதிபர் பிரான்கொய்ஸ் ஹொலந்த்.

பிரான்ஸின் நான்கு நிபந்தனைகள்:

1. ஈரானின் எல்லா அணு ஆய்வு நிலையங்களும் பன்னாட்டுக் கட்டுப்பாட்டுக்கின் கீழ் கொண்டு வரப்படவேண்டும்.

2. ஈரானின் எல்லா யூரேனியம் பதப்படுத்தல்களும் 20%இற்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும்.

3. ஈரானின் தற்போதைய பதப்படுத்தப்படுத்த யூரேனிய இருப்புக்கள் குறைக்கப்படவேண்டும்.

4. ஈரானின் ஆரக் நகரில் உருவாக்கப்படுத்தப்பட்டிருக்கும் கன நீர் பதப்படுத்தல் கட்டுமானங்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும்.

தற்போது ஈரானுடன் அதன் யூரேனியம் பதப்படுத்தல் தொடர்பாகவும் ஈரானுக்கு எதிரான பொருளாதாரத்  தடை தொடர்பாகவும் நடக்கும் பேச்சு வார்த்தைகளில் P5+1 என்னும் குழு ஈடுபட்டுள்ளது. இந்தக் குழுவில் ஐநா நிரந்தர உறுப்புரிமை உள்ள ஐந்து நாடுகளும் ( ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இரசியா, பிரான்ஸ், சீனா) ஜேர்மனியும் இருக்கின்றது.

P5+1 நாடுகளிற்கும் ஈரானிற்கும் இடையிலான இரண்டாம் சுற்றுப் பேச்சு வார்த்தை நவம்பர் 20-ம் திகதியில் இருந்து 23-ம் திகதி வரை நடை பெறுகின்றது.

நவம்பர் 7-ம் திகதி முதல் 10-ம் திகதி வரை நடந்த ஈரானுடனான முதற் சுற்றுப் பேச்சு வார்த்தையில் பிரான்ஸ் கடுமையான நிலைப்பாட்டையும் அமெரிக்கா மிதமான நிலைப்பாட்டையும் எடுத்துள்ளதாகக் கருதப்படுகிறத்து. ஈரானுடனான முதலாவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் முன்னர் பிரெஞ்சு அதிபர் இஸ்ரேலுக்கு ஒரு பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

 இஸ்ரேலும் சவுதியும் இணைந்து ஈரானைத் தாக்குமா?
இஸ்ரேல் ஈரானின் எல்லா பதப்படுத்தப்பட்ட யூரேனியம் இருப்பையும் அழிக்க வேண்டும் என்கின்றது. சியா முசுலிம் நாடான ஈரான் அணுக்குண்டு உற்பத்தி செய்வதையிட்டு சுனி முசுலிம் நாடான சவுதி அரேபியா இஸ்ரேலிலும் பார்க்க அதிக கரிசனை கொண்டுள்ளது. இஸ்ரேலும் சவுதியும் P5+1 நாடுகளிற்கும் ஈரானிற்கும் இடையி நடக்கும் பேச்சுவார்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டால் அது தமது நாடுகளுக்கு ஆபத்தாய் அமையும் என அஞ்சுகின்றன. ஈரான் அணுக்குண்டைத் தயாரித்தால் முதலில் செய்வது சவுதியில் இருக்கும் புனித நகர்களான மக்காவையும் மதீனாவையும் கைப்பற்றுவதாகும். இரு நாடுகளும் இரகசியமாக இணைந்து ஈரானின் அணு ஆய்வு நிலைகளைத் தாக்கி அழிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. சவுதி அரேபியாவின் வான் பரப்பினூடாக பறந்து சென்று ஈரான் மீது தாக்குத நடத்துவது இஸ்ரேலுக்கு பெரும் வாய்ப்பாக அமையும். சவுதி அரேபிய விமானத் தளங்களைப் பாவித்தால் இஸ்ரேலுக்கு ஈரானிய யூரேனியப் பதப்படுத்தும் நிலையங்களைத் தாக்குவது மேலும் இலகுவாகும். 1981-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ம் திகதி இஸ்ரேலிய விமானங்கள் சவுதி அரேபிய வான் பரப்பினூடாகப் பறந்து சென்று ஈராக்கின் அணு ஆராய்ச்சி நிலைகளைத் தாக்கி அழித்தன. மலைகளும் பாறைகளும் நிறைந்த ஐந்து இடங்களில் ஈரான் தனது யூரேனியம் பதப்படுத்தும் நிலையங்களை அமைத்துள்ளது. அந்த ஆழத்திற்கு துளைத்துச் செல்லக் கூடிய குண்டுகளை ஏற்கனவே ஈரான் உருவாக்கிவிட்டதா அல்லது அமெரிக்காவிடமிருந்தோ அல்லது பிரான்ஸிடமிருந்தோ அவற்றை வாங்கிவிட்டதா என்பது ஒரு கேள்வியாகும். இஸ்ரேலிய உளவுத் துறையான மொசாட் ஏற்கனவே சவுதித் தலைநகர் ரியாத்தில் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் ஒரு சுமூகமான முடிவு எட்டப்படும் என ஐக்கிய அமெரிக்கா நம்பிக்கை வெளிவிட்டுள்ளது. ஆனால் பராக் ஒபாமாவின் வெளியுறவுத் துறையினர் பலவீனமானவர்கள் என்ற குற்றச்சாட்டு இப்போது பரவலாக முன்வைக்கப்படுகின்றது. இவர்கள் மிதமான நிலைப்பாட்டை எடுக்கலாம் என்பதால் சவுதியும் இஸ்ரேலும் பிரான்ஸைக் கடுமையான நிலைப்பாடு எடுக்கும் படி வற்புறுத்தியுள்ளன. பேச்சு வார்த்தைகள் இழுபடும் ஒவ்வொரு நாளும் ஈரான் அணுக்குண்டு உற்பத்தியை நோக்கி நகரும் நாள் என இஸ்ரேலும் சவுதியும் கருதுகின்றன.ஈரானுடனான பேச்சு வார்த்தையை விரைவில் சுமூகமாக முடிப்பதற்கு அமெரிக்கா விரும்புகிறது. இதில் அமெரிக்காவிற்கு இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று எரிபொருள் விலைகள் குறையும். இரண்டாவது ஈரானுக்கான அமெரிக்காவின் ஏற்றுமதி மீள ஆரம்பிக்கும்.

ஈரானுடனான இரண்டாம் சுற்றுப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடிவடையுமென்ற நம்பிக்கையில் உலகச் சந்தையில் எரிபொருள் விலை இறங்குகின்றது.

இரசிய ஊடகம் ஒன்றிற்கு கருத்துத் தெரிவித்த ஈரானிய அரசிய ஆய்வாளர் செய்யது முகம்மது மராண்டி இஸ்ரேலும் சவுதியும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடாத்தினால் இரு நாடுகளுக்கும் பதிலடி கொடுப்பதுடன் உலகப் பொருளாதாரத்தின் மீதும் பெரும் அடி விழும் என்றார்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...