Friday, 20 December 2013

தேவ்யானி விவகாரமும் தேவையான இந்திய அமெரிக்க உறவும்


சீன விரிவாக்கம் பெரும் முன்னெடுப்புடன் ஆரம்பித்திருக்கும் இந்த நூற்றாண்டில் இந்திய அமெரிக்க  நல்லுறவு மிகவும் தேவையான ஒன்றாக இருக்கிறது. ஆனால் தேவ்யானி விவகாரம் இந்திய அமெரிக்க உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்துமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

தேவ்யானி விவாகரத்தில் இந்திய மண்ணில் பிறந்த மூன்று பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். ஒருவர் தேவ்யானி கொப்ரகடெ என்ற இந்திய வெளியுறவுச் சேவை அதிகாரி, இரண்டாமவர் அவரது பணிப்பெண்ணான சங்கீதா ரிச்சர்ட், மூன்றாமவர் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் படித்து அங்கு குடியுரிமை பெற்று மான்ஹட்டன் வழக்குத் தொடுனராகப் பணிபுரியும் பிரீட் பராரா. இதில் சங்கீதா ரிச்சட் தென் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது இங்கு முக்கியமான விடயமாகும்.

பட்டம் பெற்ற மருத்துவரான தேவ்யானி மருத்துவத் தொழிலை விட்டு தனது மாமனாரின் பாதையில் இந்திய வெளியுறவுச் சேவையில் இணைந்தார்.

2013 ஜூன் மாதம் 23-ம் திகதி தேவ்யானி தனது பணிப்பெண் சங்கீதா ரிச்சர்ட்டைக் காணவில்லை என அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டுத் தூதுவரகங்களுக்குப் பொறுப்பான அதிகாரியிடம் முறையிட்டார். நியூயோர்க் நகரக் காவற்துறையினரிடம் முறையிடும்படி அவரிடம் சொல்லப்பட்டது. காவற்துறையினரிடம் முறையிட தேவ்யானி சென்றபோது காணமற் போனவரின் குடும்பத்தவர் மட்டுமே முறையிடலாம் என அவரிடம் கூறப்பட்டது. ஜூலை முதலாம் திகதி பெயர் கூறாத பெண் ஒருத்தி தேவ்யானிக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து உரிய இழப்பீடு வழங்கினால் தேவ்யானிக்கு எதிராக வழக்குத் தொடரப்படமாட்டாது எனத் தெரிவித்தார். இதுபற்றி அமெரிக்க அரசுக்கும் காவற்துறைக்கும் தேவ்யானி முறையிட்டார். பின்னர் மீண்டும் ஜூலை 5-ம் திகதி தனக்கு தொலைபேசி மிரட்டல்கள் வருவதாக தேவ்யானி முறையிட்டார். தொடர்ந்து ஜூலை 8-ம் திகதி பணிப்பெண் சங்கீதாமீது திருட்டுக் குற்றச்சாட்டை காவற்துறையில் பதிவு செய்த தேவ்யானி, சங்கீதா தனது கடவுச் சீட்டு தொடர்பாக பேரம் பேசியதாகவும் குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து சங்கீதாவின் கடவுச்சீட்டை இந்திய அரசு இராசதந்திரிகளுக்கு உரிய நிலையை நீக்கி சாதாரண கடவுச்சீட்டாக்கியது. இதனால் சங்கீதா அமெரிக்காவில் ஒரு வதிவிட உரிமையற்றவராகினார். ஜூலை 30-ம் திகதி சங்கீதா நியூயோர்க் நகரக் காவற்துறையினரின் பாதுகாப்பில் இருப்பதாக புது டில்லியில் சங்கீதாவின் கணவன் முறையிட்டுள்ளதாக இந்தியத் தூதுவரக அதிகாரிகள் அமெரிக்க வெளியுறவுத் துறையிடம் முறையிட்டனர். இது அமெரிக்க அரசிற்குப் பாரதூரமான விடயம் என பதில் கூறப்பட்டது. அதற்குப் பதில் கூறிய இந்தியத் தூதுவரகம் அப்பெண் தனது குடியுரிமைக்கும் இழப்பீட்டுக்கும் அலைகிறார் இது அமெரிக்க அரசுக்குத் தேவையற்ற விடயம் என்றது. செப்டம்பர் 20-ம் திகதி டில்லி உயர் நீதிமன்றம் சங்கீதா தேவ்யானிக்கு எதிராக எந்த நாட்டிலும் எந்த வழக்கும் தொடர்க் கூடாது என்று தடையுத்தரவு வழங்கியது. பின்னர் டில்லி நீதிமன்றம் சங்கீதாவிற்கு எதிராக பிணையற்ற பிடியாணை பிறப்பித்தது. இது அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு சங்கீதாவை நாடு கடத்தும்படி கோரப்பட்டது. டிசம்பர் 10-ம் திகதி சங்கீதாவின் கணவரும் இரு பிள்ளைகளும் அமெரிக்கா சென்றனர். டிசம்பர் 12-ம் திகதி தேவ்யானி தனது பிள்ளைகளைப் பாடசாலையில் கொண்டு போய் விடும் வேளையில் கைது செய்யப்பட்டார்

பணிப்பெண் சங்கீதா தரப்பு நியாயம் சொல்ல எவரும் இல்லை
இந்திய அரசும் முக்கிய ஊடகங்களும் சங்கீதாவை ஒரு இந்தியக் குடிமகள் போல நடாத்துவதாகத் தெரியவில்லை. அவரது தரப்பு நியாயங்களை யாரும் வெளிக்கொணரவில்லை. இந்தியாவில் வீட்டுப் பணியாளர்கள் மோசமாக நடாத்தப்படுவதை இந்திய அரசு செய்த ஆய்வுகளே சுட்டிக் காட்டி இருக்கின்றன.

பிரீட் பராரா: புகழ்வேட்டையா குற்ற வேட்டையா

நியூயோர்க் தென்பிராந்திய வழக்குத் தொடுனரான பிரீட் பராரா அமெரிக்க நிதிச் சந்தையைக் கலங்கடித்தவர் அங்கு ஊழல் புரிபவர்களை தேடித் தேடி நீதி முன் நிறுத்தித் தண்டித்தவர். ஈழத்துச் செல்வந்தரான ராஜ் ராஜரத்தினத்தைச் சிறைக்கு அனுப்பினவரும் இவரே. பல இரசியர்களையும் இவர் சிறைக்கு அனுப்பியுள்ளார். இந்தியாவில் நடிகர்கள் இலகுவாக அரசியலுக்குள் நுழைவது போல் அமெரிக்காவில் சிறநநத வழக்குத் தொடுனர்கள் அரசியலுக்கு நுழைவதுண்டு. அப்படி ஒரு நோக்கத்துடன்  பீரீட் பராரா செயற்படுகின்றார் என இந்திய ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன.

Diplomatic immunity எனப்படும் இராசதந்திரக் காப்பு
பன்னாட்டு இராசதந்திரிகளுக்கு என ஒரு வியன்னா உடன்படிக்கை உண்டு. அதன்படி ஒரு நாட்டு இராசதந்திரி இன்னொரு நாட்டில் செயற்படும்போது செய்யும் குற்றங்களுக்கு அந்த இராசதந்திரியின் சொந்த நாட்டிலேயே விசாரிக்கப்படவேண்டும். இதைத்தான் diplomatic immunity எனப்படும் இராசதந்திரக் காப்பு என்பர். அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு ராசதந்திரிகளின் பணியாளர்களைப் பாதுகாக்க என்று தனியான சட்டம் உண்டு. இந்தச் சட்டம் பொதுவான diplomatic immunity எனப்படும் இராசதந்திரக் காப்பிற்கு அப்பாற்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழேயே தேவ்யானி கைது செய்யப்பட்டார்.

முரண்பட்ட தகவல்கள்
தேவ்யானியின் கைது தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் இந்திய ஊட்கங்களில் இருந்து மான்ஹட்டன் சட்டப்ப்பிரிவிடம் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. தேவ்யானி அவரது பிள்ளைகளின் முன் கைவிலங்கிட்டுக் கைது செய்யப்பட்டார். மோசமாக நடத்தப்பட்டார் என்கின்றன இந்திய ஊடகங்கள். இவற்றை மான்ஹட்டன் சட்டப்பிரிவு மறுக்கின்றது. அவர் பிள்ளைகளின் முன் கைது செய்யப்படவுமில்லை, கைவிலங்கிடப்படவுமில்லை, அவருக்கு தொலைபேசி அழைப்புக்கள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது, காப்பி வழங்கப்பட்டது, சிறந்த உணவு வழங்கப்பட்டது என்கின்றது மான்ஹட்டன் சட்டப்பிரிவு. தேவ்யானி ஆடைகள் களையப்பட்டு சோதிக்கப்பட்டதை அவரகள் மறுக்கவில்லை. தேவ்யானி தனது பணிப்பெண் சங்கீதாவிற்கு அமெரிக்காவில் விசா எனப்படும் நுழைவு அனுமதி பெற பொய்யான தகவல்களைக் கொடுத்தார், தனது பணிப்பெண்ணுக்கு அமெரிக்கச் சட்டத்திற்கு விரோதமான முறையில் குறைந்த ஊதியம் கொடுத்தார். அதாவது ம்ணித்தியாலத்திற்கு 3.30 டொலர்கள். அதாவது இரண்டு பிரித்தானியப் பவுண்களிலும் குறைவான தொகை. நீண்ட நேரம் வேலை செய்யச் செய்தார் போன்ற குற்றச்சாட்டுக்கள் தேவ்யானிமீது சுமத்தப்பட்டுள்ளது. சங்கீதாவின் வழக்கறிஞரின் தகவலின்படி அவர் வாரம் ஒன்றிற்கு 90 மணித்தியாலங்கள் வேலைவாங்கப்பட்டார். அவருக்கு விடுமுறையோ காப்புறுதியோ வழங்கப்படவில்லை. தமது ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் கொடுத்ததாக அமெரிக்காவில் குற்றம் சாட்டப்படும் மூன்றாவது இராசதந்திரி தேவ்யானியாகும்.

பாஞ்சாலியான தேவ்யானி
தேவ்யானியை ஆடைகளைந்து சோதனை செய்தது இந்தியர்களை மிகவும் ஆத்திரப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கைதிகளை தடுப்புக்காவலில் வைக்க முன்னர் அவரை முழுமையாகச் சோதனை செய்வார்கள். அவர்களிடம் இருக்கும் ஏதாவது பொருளை வைத்து அவர்கள் தற்கொலை செய்வதைத் தடுக்க இந்த ஏற்பாடாம். ஆனால் இந்தியர்கள் பாஞ்சாலியின் துகிலுரிந்ததால் பாரதப் போர் நடந்தது போல் தேவ்யானியைத் துகிலுரிந்ததிற்கும் போர் வேண்டும் என முழங்குகின்றனர். இந்தியாவில் உள்ள இடதுசாரிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள். இந்தியாவில் உள்ள அமெரிக்க பிட்சா நிறுவனமான டொமினோ பிட்சா தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்க ஊடகங்கள் இந்தியர்கள் இதைத் தேவையில்லாமல் பெரிது படுத்துகிறார்கள் என்கின்றன.

பாக்கிஸ்த்தானிய ஊடகங்களின் ஆதங்கம்
பாக்கிஸ்த்தானிய இராசதந்திரிகளும் அமெரிக்காவில் கடுமையாக நடாத்தப்பட்டதுண்டு. ஆனால் பாக்கிஸ்த்தான் அரசு அமெரிக்காவிற்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. பாக்கிஸ்த்தானிய ஆட்சியாளர்கள் இந்திய அரசின் கடுமையான நிலைப்பாட்டை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என பாக்கிஸ்த்தானியப் பத்திரிகைகள் கூறுகின்றன.

மிரட்டப்படும் சங்கீதா குடும்பம்
தேவ்யானியின் பணிப்பெண் சங்கீதாவின் கணவர் தனது பிள்ளையுடன் இந்தியாவில் ஒரு மிதிவண்டியில் போய்க் கொண்டிருக்கும் போது ஒரு மர்ம நபர் அவரை வழிமறித்து துப்பாக்கியைக் காட்டி உனது மனைவியை உடனடியாக இந்தியா வரச்சொல்லு என்று மிரட்டினார். இது போன்ற பல மிரட்டல்கள் பணிப்பெண் சங்கிதாவின் குடும்பத்தினருக்கு எதிராக இந்தியாவில் நடந்து கொண்டிருக்கின்றது என்கிறது நியூயோர்க் ரைம்ஸ். இதைத் தடுக்கும் முகமாக அமெரிக்க அரசத் துறை பணிப்பெண் சங்கீதாவின் குடும்பத்தினரை அமெரிக்காவிற்கு கொண்டு சென்றுள்ளனர்.  தேவ்யானியின் தந்தை பலமுறை சங்கீதாவின் கணவருடன் தொடர்பு கொண்டு உடனடியாக சங்கீதாவை இந்தியாவிற்கு அழைக்கும்படி மிரட்டினார் என்றும் சொல்கிறது நியூயோர்க் ரைம்ஸ். சங்கீதா குடும்பத்தினரை அமெரிக்கா அழைத்தது குடியகல்வு ஊழல் என்கிறது இந்திய அரசு.

இராசதந்திர முறுகல்
தேவ்யானி விவகாரம் தொடர்பாக அமெரிக்க அரசுத் துறைச் செயலர் ஜோன் கெரியுடன் தொடர்பு கொண்ட இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் சிவ் சங்கர் மேனன் தனது கண்டனத்தைத் தெரிவித்தார் அத்துடன் தேவ்யானியின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். ஜோன் கெரி நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார். சிவ் சங்கர் மேனன் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் அத்துடன் தேவ்யானியின் மீதான வழக்கு எந்தவித நிபந்தனையுமின்றி திரும்பப்பெறப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மன்னிப்புப் கேட்கப்போவதுமில்லை வழக்கைத் திரும்பப் பெறப்போவதுமில்லை என்கிறது அமெரிக்க அரசு. தேவ்யானிக்கு அதிக இராசதந்திரக் காப்பு வழங்கும் முகமாக அவரை ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதுவரகத்திற்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். தேவ்யானியின் கைதைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதுவரகங்களின் முன் இருந்த காப்பரண்கள் இந்திய அரசால் விலக்கப்பட்டன. இந்தியாவில் உள்ள அமெரிக்கத் இராசதந்திரிகளிற்கு வழங்கப்பட்ட பல முன்னுரிமைகள் இரத்துச் செய்யப்பட்டன. சங்கீதாவின் வேலையமர்வு இந்திய அரசுடன் சம்பந்தப்பட்டது தனிப்பட்ட ரீதியில் தேவ்யானியின் உடையது அல்ல என்கிறது இந்திய அரசு. ஐநா இராசதந்திரிகளுக்கு முழுமையான இராசதந்திரப் பாதுகாப்பு உண்டு. ஆனால் இதை பின்னோக்கி அமூலாக்க வேண்டும். அதாவது retroactive immunity. இதற்கு முன்னர் சவுதி இளவரசர் ஒருவர்மீது ஒரு பெண்ணை வீட்டிற்குள் பூட்டி வைத்திருந்த குற்றம் சுமத்தப்பட்டது. பின்னர் அவர் ஒரு இராசதந்திரியாக்கப்பட்டர். அந்த இராசதந்திரிக்கு உரிய இராசதந்திர காப்பு retroactive immunity ஆக்கப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார். தேவ்யானி விவகாரத்திலும் திரைக்குப் பின்னால் இப்படியான முயற்ச்சிகள் நடக்கின்றன.

தேவ்யானியின் ஊழல்

இந்தியாவில் வீடு ஒதுக்கிட்டில் ஊழல் செய்ததாக தேவ்யானியின் மீதும் அவரது தந்தை மீதும் குற்றச் சாட்டுக்கள் உள்ளன. இந்தியாவில் வீட்டுப்பணியாளர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் மிக மோசமாக வேலைவாங்கப்பட்டும் மிக மோசமாக நடத்தப்படுகின்றனர் என்பது இந்திய அரசின் ஆய்விலேயே வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழர்க்கு வேறு நீதி
இலங்கியில் தமிழர்களைக் கொல்ல இந்தியா உதவி செய்தமையை சீனப் பூச்சாண்டி மூலம் நியாயப் படுத்தும் இந்தியா அமெரிக்காவுட்னான உறவைப் பற்றிக் கவலைப்படாமல் தேவ்யானியைப் பாதுகாக்க இந்தியா முயல்கிறது

இந்திய அரசின் கேவலமான் பாராபட்சம்
தேவ்யானி, சங்கீதா ஆகிய இருவருமே இந்தியக் குடிமக்கள். ஆனால் தேவ்யானியைப் பாதுகாக்க எல்லா வகையிலும் முயற்ச்சி செய்யும் இந்திய அரசு சங்கீதாவைக் கேவலப்படுத்துகிறது. இதுதான் இந்தியாவின் மனுதர்ம நீதியா?

Wednesday, 18 December 2013

பிரித்தானியாவில் கதிரையில் சாய்ந்து இருந்து கொண்டு ஆப்கானில் தலிபான்கள் மீது தாக்குதல்

பிரித்தானியாவில் கணனித் திரைகளுக்கு முன்னர் "கூலாக" இருந்து கொண்டு எண்ணாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஆப்கானிஸ்த்தானில் செயற்படும் தலிபான் உறுப்பினர்கள் மீது பிரித்தானியப் படையினர் தாக்குதல் நடத்துகிறார்கள்.

பிரித்தானியாவில் இருந்து ஆளில்லாப் போர் விமானங்களை அனுப்புவதும் உண்டு. அதே வேலை ஆப்கானில் கந்தகாரில் உள்ள விமானப் படைத்தளத்தில் இருக்கும் ஆளில்லா விமானங்களை பிரிந்தானியாவில் இருந்து செயற்படச் செய்து தாக்குதல்கல் நடத்துவதும் உண்டு.

பிரித்தானிய் விமானப்படையான RAFஇன் XIII Squadron என்னும் படைப்பிரிவினர் ஆளில்லாப் போர் விமானங்கள் மூலம் இந்தத் தாக்குதல்களை நடாத்துகின்றனர். இதனால் பல முக்கிய தலிபான் மற்றும் அல் கெய்தாப் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

பிரித்தானிய் விமானப்படையான RAFஇன் XIII Squadron படைப்பிரிவினர் செயற்பாடுகள் பற்றிய தகவல்களை டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவின் வரிங்டன் நகரில் பிரித்தானிய் விமானப்படையான RAFஇன் ஆளில்லா விமானப்படைத் தளம் அமைந்துள்ளது. பிரித்தானியா தாக்குதல் ஆளில்லாப் போர் விமானத்தை பாவிப்பதற்கு எதிரான ஆர்ப்பாட்டம் 27-04-2013-ம் திகதி வரிங்டனில் இடம்பெற்றது. அமெரிக்கா கண்டனத்துக்குரிய ஆளில்லாப் போர் விமானத் தாக்குதலகளை ஆப்கானிஸ்த்தானிலும் யேமனிலும் மேற் கொண்டது. இதில் அப்பாவிகளும் கொல்லப்பட்டனர். முக்கிய இசுலாமியப் போராளித் தலைவர்களை அமெரிக்கா பெருமிதம் கொள்கிறது. ஆப்கானிஸ்த்தானில் அல் கெய்தாவிற்கும் தலிபானுக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தியதுடன் அவர்களின் நடமாட்டத்தை அமெரிக்கா தனது ஆளில்லாப் போர் விமானங்களினூடாக தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு பெருமளவு கட்டுப்படுத்தியது. Drone என்று பொதுவாக அழைக்கப்படும் unmanned aerial vehicle (UAV)களிற்கு பிரித்தானியா "Remotely Piloted Air Systems" (RPAS) என்று பெயர் சூட்டியுள்ளது.





பிரித்தானிய ஆளில்லாப் போர் விமானங்களில் MQ-9 REAPER விமானங்கள் முக்கியமானவை. இவை உள(intelligence), கடுங்கண்காணிப்பு (surveillance), reconnaissance (புலங்காணல்),  நெருங்கிய ஆதரவு (close air support), தாக்குதல் (combat) தேடுதலும் விடுவித்தலும் ( search and rescue), துல்லியமாகத் தாக்குதல் (precision strike),உடன் லேசர் (buddy-laser) உட்படப் பலவிதமான சேவைகளைப் புரியக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த விமானங்களை கழற்றி மடித்து வேறு விமானங்களில் பொதிகளாக வேறு நாடுகளுக்கு அனுப்பி அங்கு திறந்து பொருத்தித் தாக்குதல் செய்யக் கூடிவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.  பிரித்தானியா பல பில்லியன்களைச் செலவழித்து மேலும் புதிய வகையான ஆளில்லா விமானங்களை அடுத்த பத்து ஆண்டுகளில் உருவாக்கவிருக்கிறது. 


Tuesday, 17 December 2013

யஸ்வந்த் சின்ஹா: ஈழம் தொலைவில் இல்லையா அல்லது தேர்தல் தொலைவில் இல்லையா?

தமிழ் ஈழம் தொலைவில் இல்லை என இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் யஸ்வந்த் சின்ஹா தனது பாரதிய ஜனதாக் கட்சியின்  சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் புதனன்று தெரிவித்துள்ளார். இப்படி ஒரு செய்தி 14/12/2013இல் இருந்து அடிபடுகின்றது. இதைப் பார்த்தவுடன் ஈழ விடிவிற்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.

மேற்படி செய்தி டிசம்பர் 14-ம் திகதி ஒரு ஆங்கில இணையத் தளத்தில் வெளிவந்திருந்தது. இதைத் தொடர்ந்து பல இணையத் தளங்களில் அது வந்தது. பின்னர் அதன் தமிழாக்கம் ஒரு தமிழ் இணையத் தளங்களில் வந்தது. வழமை போல பல இணையத் தளங்கள் அதை பிரதி பண்ணி விட்டன. வாழ்க கொப்பி அண்ட் பேஸ்ட். பல சமூக வலைத்தளங்களில் இந்தச் செய்து பகிரப்பட்டது. பல தமிழர்கள் இந்தச் செய்தியைப் பார்த்து தமிழீழப் போராட்டத்திற்கு இது ஒரு பெரு வெற்றி என்றும் கூறினார்கள்.

இந்தச் செய்தியின் மூலத்தைத் தேடிப் போவது நதி மூலத்தைத் தேடிப்போவது போல இருந்தது. ஒரு இணையத்தளம் செய்தி மூலம் டெக்கான் ஹேரால்ட் எனச் செய்தியின் அடியில் போட்டிருந்தது. பொதுவாக பல இணையத் தளங்கள் இப்படிச் செய்வதில்லை. ஏதோ தாமே நேரில் நின்று பார்த்து அறிக்கை கொடுப்பது போல எழுதுவார்கள்.

ஜஸ்வந்த் சிங் புதன்கிழமை இப்படித் தெரிவித்திருந்தார் என்று இணையத் தளங்கள் செய்தி போட்டிருந்தன. அச்சு ஊடகங்கள் செய்தி வெளியிடும் போது செய்தித் தலைப்பின் கீழ் திகதியையும் செய்தி கிடைத்த இடத்தையும் முதல் போடுவார்கள். செய்திக்குள் நேற்று சொன்னார் என்று இருந்தால் நீங்கள் வாசிக்கும் திகதிக்கு முதல் நாள் என்று நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. செய்தித் தலைப்பின் கீழ் உள்ள திகதிக்கு முதல் நாள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இது அச்சு ஊடகங்களில் ஒரு அடிப்படை விதி. ஜஸ்வந்த் சிங் சொன்ன செய்தியை மொழி பெயர்த்து வெளிவிட்ட ஊடகங்கள் செய்தி மூலத்தின் திகதியை வெளிவிடவில்லை. சில இணையத் தளங்கள் ஜஸ்வந்த் சிங் என்றும் குறிப்பிட்டிருந்தன. சில ஜஸ்வந்த் சின்ஹா என்றன.

டெக்கான் ஹெரால்டில் தேடிப்போனால் யஸ்வந்த் சின்ஹா சென்னையில் ஒரு திருமண மண்டபத்தில் 2013 ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாம் திகதி புதன்கிழமை நடந்த கூட்டத்தில் இப்படிப் பேசியிருந்தார் யஸ்வந்த் சின்ஹா. அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசில் டிசம்பர் 1998இல் இருந்து ஜூன் 2002 வரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் ஜஸ்வந்த் சிங்.  இவரைத் தொடர்ந்து 2002-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து 2004-ம் ஆண்டு மே மாதம் வரை  அடல் பிஹாரி வாஜ்பாயின் அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் யஸ்வந்த் சின்ஹா. தமிழ் ஈழம் தொலைவில் இல்லை எனக் கூறியவர் இரண்டாமவரான யஸ்வந்த் சின்ஹா.

பல பழைய தமிழ்ப்பாடல்களை மீள்கலவை(ரீமிக்ஸ்) என்று சொல்லி திரும்பவும் தமிழ்த் திரைப்படங்களில் இப்போது வெளிவிடுகின்றார்கள். அரசியலிலும் பழைய செய்திகளை மீள்பதிவு செய்து விடுகின்றார்களா? ஏப்ரில் மாதம் யஸ்வந்த் சின்ஹா ஆற்றிய உரை மீண்டும் இப்போது வெளிவிடுவது ஏன்? அதுவும் ஏதோ நேற்றுக் கூறிய மாதிரி செய்திகள் விடுவது ஏன்?

யஸ்வந்த் சின்ஹா இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போதுதான் விடுதலைப் புலிகளிடம் ரணில் விக்கிரமசிங்க இடைக்காலத் தன்னாட்சி சபையை வழங்கப் போகிறார் என்று கொழும்பிற்கு அப்போது இந்தியத் தூதுவராக இருந்த நிருபாமா ராவ் துரிதமாகச் செயற்பட்டு ரணிலின் அமைச்சரவையைக் கலைத்தார். சந்திரிகாவையும் ஜேவிபியையும் இணைத்து கூட்டணி அமைக்கப்பட்டது. இதற்கு முன்னின்று உழைத்தவர் நிருபாமா என்று சொல்லப்பட்டது. 2004இல் ஒரு இடைக்கால தன்னாட்சி அதிகார சபையையே தமிழர்களுக்கு கொடுக்கக் கூடாது என வரிந்து கட்டிக் கொண்டு நின்றவர்கள் இப்போது தமிழீழம் பற்றிக் கதைத்ததை மீண்டும் செய்திப்படுத்துவது ஏன்?

தேர்தல்தான் வெகு தொலைவில் இல்லை
இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தல் வெகு தொலைவில் இல்லை என்பதால்தான் இப்படிப் பட்ட செய்திகள் மீளப் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. இது ஒரு முன்னோட்டம் மட்டுமே. இன்னும் பல இணைய வெளித் தாக்குதல்கள் தமிழர்களைத் திசை திருப்பும் நோக்கத்துடன் நடத்தப்படலாம். இந்தியாவின் அடுத்த பொதுத் தேர்தலில் பாரத ஜனதாக் கட்சியினரின் தலைமை அமைச்சர் வேட்பாளரான நரேந்திர மோடி தனக்கு ஆதரவான பிரச்சாரத்திற்கு என ஓர் இணைய வெளிப் படையை உருவாக்கியுள்ளார். இருபதிற்கும் முப்பதிற்கும் இடைப்பட்ட வயதைக் கொண்ட தகவற் தொழில் நுட்ப்பம் படித்த இளைஞர்கள் பல்லாயிரக் கணக்கானவர்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளனர். இணையவெளி இந்துக்கள் அதாவது சைபர் ஹிண்டூஸ் என்றழைக்கப்படும் இவர்கள் சமூக வலைத்தளங்களான டுவிட்டர் பேஸ்புக் மூலம் திரட்டப்படுகின்றனர். இவர்கள் மாதம் ஒரு முறை ஒன்று கூடி அடுத்த தேர்தலில் செய்ய வேண்டியவை இந்துத்துவக் கொள்கையை எப்படி நிலை நிறுத்துதல், இந்தியாவின் தற்போதைய நிலைமை, இந்தியாவின் எதிர்காலம், போன்றவற்றைப்பற்றி கலந்து உரையாடுகின்றார்கள். உள்ளூரிலும் இவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள்.

இணைய வெளி இந்துக்கள் பாரதிய ஜனதாக் கட்சி சார்பாகச் செய்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் குஜராத்தில் மோடியின் ஆட்சியைப் பற்றி மிகைப்படுத்தப் பட்ட தகவல்களைப்பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.  மோடியின் பொதுமக்கள் தொடர்புக் கட்டமைப்பு என்றும் உறங்குவதில்லை அது தேர்தல் நெருங்க நெருங்க மிகவும் அதிகமாகச் செயற்படுகின்றது என்பதை காங்கிரசுக் கட்சியினரும் உணர்ந்துள்ளனர். இமயமலையை ஒட்டிய உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி இருந்த பதினையாயிரம் குஜராத்திரியர்களை மோடி போய் மீட்டுக் கொண்டு வந்தார் என்ற பொய்ச் செய்தி கூட திட்டமிடப்பட்டுப் பரவ விடப்பட்டது. ஆனால் இந்தியத் தேர்தலில் பொய்யான செய்திகள் பெரும் தாக்கத்தை விளைவிக்கும் என்பதை 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கருணாநிதியின் உண்ணாவிரத நாடகத்தின் மூலம் நாம் நன்கு அறிந்து கொண்டோம்.  பாரதிய ஜனதாக் கட்சியினரும் தமிழர்களை நோக்கி பல உணர்ச்சி மிக்க பொய்ச் செய்திகளை பரப்பலாம்.

2013 ஏப்ரல் மாதம் சென்னையில் உரையாற்றிய யஸ்வந்த் சின்ஹா தனிய ஈழத்துடன் மட்டும் நின்று விடவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காங்கிரசுக் கட்சியின் மேலும் இரு பலவீன மையங்களான கச்சதிவையும் மீனவர் பிரச்சனையையும் பற்றியும் கருத்துத் தெரிவித்திருந்தார். கச்சதீவை இந்தியா மீடக வேணும் என்றார். "கச்­ச­தீவை நாம் மீளப்­பெற்றால் எமது மீன­வர்கள் பாதிக்­கப்­பட மாட்­டார்கள். இதன்­மூலம் இந்­தியக் கடற்­ப­ரப்பை நாங்கள் கட்­டுப்­ப­டுத்த முடியும்".

இப்படிப்பட்ட வாசகங்களை இவர்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் கூறுவார்கள். ஆனால் இந்துத்துவாக் கொள்கைப்படி சிங்களமும் தமிழும் சமஸ்கிருதத்தில் இருந்து பிறந்த மொழிகள். இரண்டையும் நாம் எம் பிள்ளைகள் போல் பார்க்க வேண்டும். தமிழர்கள் இராவணனின் வழித் தோன்றல்கள். சிங்களவர் இராமருக்கு உதவிய வானரங்களின் வழித் தோன்றல்கள்.

சென்னைக்கு 2013 ஏப்ரலில் பயணம் மேற்கொண்ட யஸ்வந்த் சின்ஹா தனி ஈழத்துடன் நிற்கவில்லை. இலங்கை தொடர்பாக பாரதிய ஜனதாக் கட்சி தனது கொள்கையை மாற்றும் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால் கட்சியின் உயர் பீடம் கூடி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஈழம் தொலைவில் இல்லை என்று சொல்வதில் இருந்து தெரிவது தேர்தல் தொலைவில் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. நெடு மாறன் ஐயா போல் ஒருவர் இந்தியாவின் உள்த்துறை அமைச்சராகவும் வைக்கோ ஐயா போன்ற ஒருவர் இந்திய வெளிநாட்டுத் துறை அமைச்சராகவும் தோழர் சீமான் அல்லது தோழர் திருமுருகன் காந்தி போன்ற ஒருவர் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் வந்து மூன்று ஆண்டுகளின் பின்னர் தான் தமிழர்களுக்கு சார்ப்பாக் இந்தியா செயற்படும். அதுவரை இந்திய அள்ளி வைப்புக்கள் தொடரும். 2014இல் பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்து அதில் சுப்பிர மணிய சுவாமி என்னும் தமிழின விரோதி வெளிநாட்டமைச்சில் ஏதாவது பதவி பெற்றால் ஈழத்தில் தமிழர்களை இந்தியா முற்றாக அழித்துவிடும்.
http://www.deccanchronicle.com/130404/news-politics/article/tamil-eelam-not-far-away-yashwant-sinha

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...