ஆளில்லா விமான தொழில்நுட்ப வளர்ச்சி போர்விமான உற்பத்தியில் பெரும் பங்கை வகிக்கின்றது. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) இயந்திர கற்கை (Machine learning) ஆகியவற்றை விமானப் பறப்பில் பாவிக்கும் போதும் இணையவெளி போர் முறைமையை போர் விமானங்களில் உள்ளடக்கும் போதும் வான் போர் முறைமையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. போர்விமானம் தரையில் இருந்து கிளம்பும் போதும் பின்னர் தரையிறங்கும் போதும் மட்டும் விமானியின் செயற்பாடுகள் விமானத்திற்கு இப்போது தேவைப்படுகின்றது. வானில் கிளம்பிய பின்னர் விமானம் தானாகவே நிலைமையை உணர்ந்து செயற்படுகின்றது. விமானி குண்டு வீச்சுக்களில் அதிக கவனம் இப்போது செலுத்த முடியும்.
ஆறு தலைமுறைகள்
போர்விமானங்கள் இதுவரை ஆறு தலைமுறைகளைக் கண்டுள்ளன. முதலில் விமானங்களின் வேகங்களை அடிப்படையாக வைத்து புதிய தலைமுறைகள் உருவாகின. இரண்டாம் உலகப் போரில் பாவிக்கப்பட்ட முதலாம் தலைமுறைப் போர்விமானங்கள் ஒலியிலும் பார்க்க குறைந்த வேகத்தில் பறப்பவை. 1953-1955 வரை நடந்த கொரியப் போரில் பாவிக்கப்பட்ட இரண்டாம் தலைமுறைப் போர்விமானங்கள் ஒலியின் வேகத்தில் பறக்கக்கூடியவை. அவற்றால் வானில் இருந்து மற்ற போர்விமானங்கள் மீது ஏவுகணைகளை ஏவ முடியும். மூன்றாம் தலைமுறைப் போர்விமானங்கள் ஒலியிலும் பார்க்க வேகமாகப் பறக்கக் கூடியவை. அவற்றில் சிறந்த கதுவிகள் (ரடார்கள்) பொருத்தப்பட்டிருக்கும். தாக்குதல் விமானம், குண்டு விச்சு விமானம், வானாதிக்க விமானம், வேவு பார்க்கும் விமானம், கண்காணிப்பு விமானம் என தனித்தனியாக போர்விமானங்கள் உற்பத்தி செய்யப் பட்டுக் கொண்டிருந்தன. பின்னர் இவை யாவற்றையும் ஒரு விமானம் செய்யக்கூடியவையாக உருவாக்கப் பட்டன. அவை பற்பணி (Multi-role) போர்விமானங்கள் என அழைக்கப்பட்டன அவையே நான்காம் தலைமுறைப் போர்விமாங்கள். சென்ற நூற்றாண்டின் இறுதி முப்பது ஆண்டுகளும் அவற்றில் பல மேம்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. பறப்புத்திறன், திசைதிருப்பும் திறன் போன்றவை தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டன. எதிரியின் கதுவிகளுக்கு (ரடார்களுக்கு) புலப்படாமல் எதிரியின் வான்பறப்பை ஊடறுத்துச் செல்லக் கூடிய F-117 போர்விமானங்கள் 1983-ம் ஆண்டளவில் அமெரிக்காவால் உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து B-2 என்னும் புலப்படா விமானம் உருவாக்கப்பட்டது. சதாம் ஹுசேய்னுக்கு எதிராக அவை 1991இல் குண்டுகளை வீசிய போது அவை எங்கிருந்து வருகின்றன எப்படி வருகின்றன என உணர முடியாமல் இருந்தது. அதையிட்டு இரசியாவும் சீனாவும் அதிகம் கரிசனை கொண்டன. F-22 போர்விமாங்கள் முழுமையான புலப்படாத்தன்மையும் சிறந்த இலத்திரனியல் செயற்பாடும் கொண்டவையாக அமெரிக்காவால் உருவாக்கப்பட்டன அவை ஐந்தாம் தலைமுறைப் போர்விமாங்களாகும். இப்போது பல நாடுகள் ஆறாம் தலைமுறைப் போர்விமாங்களை உருவாக்குகின்றன. அதிலும் அமெரிக்கா ஒரு படி முன்னேறி 2020-ம் ஆண்டு தனது ஆறாம் தலைமுறைப் போர் விமானத்தை உருவாக்கியுள்ளது. இரசியா, சீனா, இந்தியா, பிரித்தானியா, துருக்கி போன்ற நாடுகள் ஆறாம் தலைமுறைப் போர்விமாங்களை உற்பத்தி செய்யும் முயற்ச்சியில் இறங்கியுள்ளன.
அமெரிக்காவ்ன் ஆறாம் தலைமுறை விமானம் |
நாலாம் தலைமுறையையும் கைவிடாத அமெரிக்கா
அமெரிக்காவின் F-15 போர் விமானங்கள் எந்த ஒரு வான் சண்டையில் சுட்டு விழுத்தப்படாதவை எனற சாதனை படைத்தவை. 40 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட இந்த விமானங்கள் இப்போது மேம்படுத்தப்பட்டு F-15EX என்னும் பெயரில் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றால் முப்பதினாயிரம் இறாத்தல் எடியுள்ள குண்டுகளைத் தாங்கிச் செல்ல முடியும். நான்காம் தலைமுறையைச் சார்ந்த F-15EX போர் விமானங்களை இயக்குவது ஐந்தாம் தலைமுறை F-35 போர் விமானங்களை இயக்குவதிலும் பார்க்க மலிவானதாகும்.
பிரித்தானியாவின் ஆறாம் தலைமுறைப் போர்விமானம்
2018-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிரித்தானியாவின் ஆறாம் தலைமுறைப் போர் விமான உற்பத்தி சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது. விமான இயந்திர உற்பத்தியில் நீண்ட அனுபவம் கொண்ட பிரித்தானியா அமெரிக்காவின் F-35 போர் விமானங்களிற்கு தேவையான மென்பொருளை உற்பத்தி செய்வதில் பெரும்பங்கு வகித்தது. அதனால் அடுத்த தலைமுறை விமானங்களுக்கு தேவையான இலத்திரனியல் போர்முறைமைகள உருவாக்குவதில் பிரித்தானியா உலகில் முன்னணியில் உள்ளது. Tempest எனப்படும் பிரித்தானியாவின் ஆறாம் தலைமுறைப் போர்விமான உற்பத்தியில் இத்தாலி, சுவீடன் ஆகிய நாடுகளும் இணைந்துள்ளன. மேலும் சில நட்பு நாடுகளை இந்த உற்பத்தியில் இணைத்தால் உற்பத்திச் செலவு குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உலகின் எப்பாகத்திலும் தாக்கக் கூடிய B-21 Raider
அமெரிக்கா 2022-ம் ஆண்டு களமிறக்கும் B-21 போர்விமானங்கள் அமெரிக்காவில் இருந்து கிளம்பி எந்த எதிரியின் ரடார்களுக்கும் புலப்படாமல் உலகின் எந்தப் பாகத்திலும் குண்டுகளை வீசிவிட்டு மீண்டும் அமெரிக்கா திரும்பக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. திடீர்த்தாக்குதலாளி என்னும் குறியீட்டுப் பெயர் கொண்ட இந்த வகை விமானங்கள் ஆறாம் தலைமுறையை சார்ந்தவை. Northrop Grumman நிறுவனத்தின் சிறந்த வெப்ப முகாமைத் (Thermal management) தொழில் நுட்பம் அதனிடம் B-21 விமான உற்பத்தி ஒப்படைக்கப் பட்டமைக்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றது. சிறந்த வெப்ப முகாமையால் எதிரிகளின் வெப்பம்-தேடி ஏவுகணைகளால் தாக்கப்பட முடியாத தன்மையை B-21 பெறுகின்றது. Northrop நிறுவனத்தின் ஆறாம் தலைமுறைத் தாக்குதல் விமானத் தொழில் நுட்பங்களில் சிறந்த stealth எனப்படும் ரடாருக்குப் புலப்படாத்தன்மை, சிறந்தswept-wing fighter பொறிமுறை, பல் வேறுபட்ட இலக்குகளை தாக்கும் வலிமை மிக்க லேசர் படைக்கலன்கள் போன்றவை உள்ளன. இணைய வெளி ஊடுருவல்கள் மூலம் எதிரி நாடுகள் B-21 இன் இரகசியங்களைத் திருடாமல் இருக்க பெரு முயற்ச்சிகள் எடுக்கப் பட்டுள்ளன.
இரசியாவின் ஐந்தாம்/ஆறாம் தலைமுறைப் போர்விமானங்கள்
இரசியாவின் எஸ்-யூ-35 அதன் முதலாவது ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமாகும். அதைத் தொடர்ந்து எஸ்-யூ-57 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை இரசியா உருவாக்கியது. நிதிப் பற்றாக்குறையால் அதிக அளவு எஸ்-யூ-57 உற்பத்தி செய்யப்படவில்லை என்கின்றனர் மேற்கு நாட்டு ஆய்வாளர்கள். ஆனால் இரசியா தனது ஆறாம் தலைமுறைப் போர்விமானமான மிக்-41 போர்விமான ங்களை உற்பத்தி செய்யும் முயற்ச்சியில் இறங்கிவிட்டது. ஆறாம் தலைமுறைப் போர்விமானங்கள் 1. முழுமையான புலப்படாத் தன்மை. 2. மிகச்சிறந்த இலத்திரனியல் செயற்பாடு. 3. இணையவெளிப் போர் முறைமை, 4. லேசர் படைக்கலன்கள் 5. செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
சீனாவின் ஆறாம் தலைமுறைப் போர்விமானம்
விமான இயந்திர உற்பத்தி துறையில் பிந்தங்கியிருக்கும் சீனா உருவாக்கிய J-20 மற்றும் J-31 போர்விமானங்கள் முறையே அமெரிக்காவின் F-22, F-35 ஆகிய போர்விமானங்களின் தொழிநுட்பங்களை சீனா இணையவெளி வழியே திருடி உருவாக்கப் பட்டவை என அமெரிக்காவில் இருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்க்ப்படுகின்றன. அவற்றை சீன கடுமையாக மறுத்தாலும் அந்த சீனப் போர் விமானங்கள் இன்னும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள் அல்ல என பல போரியல் நிபுணர்கள் சொல்கின்றனர். சீனா இப்போது இரசிய விஞ்ஞானிகளின் உதவியுடன் தனது ஆறம் தலைமுறைப் போர்விமான உற்பத்தியை ஆரம்பித்துள்ளது.
களமிறங்கும் துருக்கி
இதுவரை உள்நாட்டில் பெரியா போர்விமானத்தை உற்பத்தி செய்யாத துருக்கியும் ஆறாம் தலைமுறைப் போர் விமான உற்பத்தியில் இறங்கியுள்ளது. ஆரம்பத்தில் துருக்கியின் ஆறாம் தலைமுறைப் போர் விமானத்திற்கு பிரித்தானியாவின் BAE நிறுவனம் இயந்திரம் வழங்குவதாக இருந்தது. அதன் உற்பத்தியில் தாமதம் ஏற்படும் என BAE அறிவித்ததால் துருக்கி உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டது. துருக்கியின் ஆளில்லாப் போர் விமானங்கள் 2020-ம் ஆண்டு நடந்த ஆர்மீனிய-அஜர்பைஜான் போரில் சிறப்பாக செயற்பட்டு பல இரசிய தயாரிப்பு தாங்கிகளை அழித்தபடியால் துருக்கிக்கு உள்நாட்டு உற்பத்தியில் நம்பிக்கை பிறந்துள்ளது. ஆனால் ஆளில்லா போர்விமான இயந்திர உற்பத்திக்கும் முழுமையான புலப்படாத் தன்மை கொண்டா ஆறாம் தலைமுறை போர்விமான இயந்திர உற்பத்திக்கும் இடையிலான இடைவெளி மிகப் பாரியது.
ஒரு படி மேலே செல்லும் அமெரிக்கா தொடரும் சினா
நாம் இதுவரை பார்த்தவை வான்வெளியில் செயற்படும் விமானங்கள். அமெரிகாவின் X-37B எனப்படுவது விண்வெளியில் பூமியை சுற்றிப்பறக்க வல்லது. அமெரிக்கா உருவாக்கிய இந்த விமானம் இதுவரை இரகசியமான நான்கு மிக நீண்ட தூரப்பறப்புக்களை இனம்தெரியாத படைக்கலன்களுடன் மேற்கொண்டுள்ளது. இரசியப் படைத்துறை நிபுணர்கள் அவை அணுக்குண்டுகளை தாங்கிச் சென்றன என்கின்றார்கள். இரசியாவின் வான்பாதுகாப்பு முறைமையான எஸ்-400ஐ முறியடிக்க இந்த ஆளில்லா விமானம் உருவாக்கப்பட்டிருக்கலாம். 2019இல் அமெரிக்கா தனது தரைப்படை, கடற்படை, கடல்சார்படை, வான்படை என்பவற்றிற்கு மேலாக விண்வெளிப்படை ஒன்றை உருவாக்கியிருந்தது. X-37B விமானம் ஒரு மீளப்பாவிக்கக் கூடிய விண்வெளி ஓடமாகும் (Space Shuttle). இது சூரியவலுவில் இயங்கக் கூடியது. இது உலங்கு வானூர்தி போல ஓடுபாதையில் ஓடாமல் செங்குத்தாக மேல் எழும்பக்கூடியது. தரையிறங்கும் போது மட்டும் அதற்கு ஓடுபாதை தேவை. சீனாவும் அமெரிக்காவின் X-37B விண்வெளி ஓடம் போன்றை ஒன்றை உருவாக்கி பரீட்சித்துள்ளது. அமெரிக்காவின் தொழில்நுட்பத்தை இணையவெளி ஊடுருவல் மூலம் சீனா திருடியதாக அமெரிக்காவில் இருந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எதிர்கால வான் போரில் புலப்படாத்தன்மை, இணையவெளித்தாக்குதல், லேசர் படைக்கலன்கள் முக்கிய பங்கு வகிக்கும்.