Sunday 29 August 2021

தலிபான்களின் ஆதரவில் அல் கெய்தா மீண்டும் தலையெடுக்குமா?

  


தலிபான்களின் ஆதரவில் அல் கெய்தா மீண்டும் தலையெடுக்குமா?

ஆப்கானிஸ்த்தானில் பல் வேறு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் பத்தாயிரம் வரையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதில் ஹக்கானி அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆறாயிரமும் ஐ.எஸ்-கே அமைப்பைச் சேர்ந்தவர்கள் இரண்டாயிரமும் அல் கெய்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருநூறும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தலிபான் அமைப்பினர் அல் கெய்தாவுடன் நல்லுறவை வைத்திருக்கின்றனர். ஹக்கானி அமைப்பினர் தலிபான்களுடனும் ஐ.எஸ் கே அமைப்பினருடனும் நல்லுறவை வைத்திருக்கின்றனர். தலிபான்கள்லும் பார்க்க ஹக்கானை அமைப்பினர் காபூல் நகரை கையாள்வதில் வல்லவர்கள். இதனால் தலிபான்கள் தமது நட்பு அமைப்பான ஹக்கானி அமைப்பினரிடம் காபூல் நகரப் பாதுகாப்பை ஒப்படைத்திருந்தனர். இதனால்தான் ஹக்கானி அமைப்புடன் நட்புடைய ஐ.எஸ்-கே அமைப்பினரால் காபூல் விமான நிலையத்தின் மீது தாக்குதல் செய்து 16 அமெரிக்கர்கள் உட்பட பலரைக் கொல்ல முடிந்தது.

அமெரிக்காவின் தெரிவிக்கப்படும் அச்சம்

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கேல் மக்கோல் “நாம் 9/11இற்கு முன்பிருந்த நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றோம் – ஆப்கானிஸ்த்தான் மீண்டும் பயங்கரவாத உற்பத்தி நிலம்” என்றார். அமெரிக்கப் படைத்தளபதி அல் கெய்தாவும் ஐ.எஸ்.ஐ.எஸ் தங்கள் வலையமைப்புக்களை ஆப்கானிஸ்த்தானில் துரிதமாக மீளக் கட்டியெழுப்பலாம் என எச்சரித்துள்ளார். அமெரிக்காவும் தலிபான்களும் கட்டார் தலைநகர் டோஹாவில் நடத்திய பேச்சு வார்த்தையில் அல் கெய்தா போன்ற அமெரிக்கா விரும்பாத திவிரவாத அமைப்புக்களின் வளர்ச்சிக்கோ அல்லது செயற்பாட்டிற்கோ தலிபான்கள் ஆப்கானிஸ்த்தானில் இடம் கொடுக்க மாட்டார்கள் என்ற உறுதி மொழி வழங்கியிருந்தனர்.

பஞ்சீர் தலையிடி

காபூலில் இருந்து வட கிழக்காக 150கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மரகத கல் நிறைய உள்ள பஞ்சீர் பள்ளத்தாக்கில் வட கூட்டமைப்பு என்னும் போராளி அமைப்பு திரண்டுள்ளது. ஆப்கானிஸ்த்தானின் துணை அதிபர் அமருல்லா சாலெ  கூட அங்கு போயிருக்கின்றார். தலிபான் தாக்குதலின் போது தப்பி ஓடிய ஆயிரக் கணக்கன அரச படையினரும் அங்கு தப்பி ஓடியுள்ளனர். இவர்களின் பெரும்பாலானவர்கள் தஜிக் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு தஜிக்கிஸ்த்தான் நாடு ஆதரவு வழங்கலாம். தலிபான்களால் கொல்லப்பட்ட முன்னாள் வட கூட்டமைப்பின் தளபதியின் மகனான அஹமது மசூத்தும் பஞ்சீர் பள்ளத்தாக்கில் இருக்கின்றார். இவர்களுக்கு வெளிநாட்டு உதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தலிபான்களை எதிர்க்கும் குழுக்களுக்கு படைக்கலன்களை அனுப்பவில்லை என்கிறது தஜிக்ஸ்தான் நாடு. அது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போலிருக்கின்றது.

தலிபான்களைப் பாராட்டிய அல் கெய்தா ஆதரவு ஊடகம்

தலிபான்களின் வெற்றி உலகெங்கும் உள்ள பல இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுக்கு பெரும் ஊக்கத்தைக் கொடுத்துள்ளது. இந்தியா வைத்திருக்கும் கஷ்மீர் பிரதேசத்தில் உள்ள திவிரவாத அமைப்புக்கள் அமெரிக்காவிற்கு ஆப்கானிஸ்த்தானில் நடந்தது உங்களுக்கும் நடக்கும் என இந்தியாவைப் பார்த்து சொல்கின்றன. இந்தியா வசம் இருக்கும் கஷ்மீர் பிரதேசதைப் பிரித்து பாக்கிஸ்த்தானுடன் இணைக்க வேண்டும் என்ற கொள்கையுடைய ஹிஸ்புல் முஜாஹிதீன் என்ற அமைப்பு தமக்கு தலிபான்கள் உதவி வழங்க வேண்டும் என பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளது.  தலிபானின் வெற்றிக்கு அல் கெய்தா தனது ஊடகத்தில் பாராட்டு தெரிவித்தது. “ஆப்கான் வெற்றி கொள்ளப்பட்டுவிட்டது, இது இஸ்லாமின் வெற்றி” என்றது அல் கெய்தா.

அல் கெய்தா – தலிபான் வேறுபாடு

அல் கெய்தா அமைப்பு அமெரிக்காவை அழித்த பின்னர்தான் ஓர் இஸ்லாமிய அரசை அமைக்கலாம் என்ற நம்பிக்கை கொண்டது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு இஸ்லாமிய அரசை அமைத்த பின்னர் அமெரிக்காவை அழிக்கலாம் எனக் கருதியது. தலிபான் அமைப்பு ஆப்கானிஸ்த்தானில் இஸ்லாமிய அரசை அமைக்க வேண்டும் என்ற கருத்துடையது. அது வெளிநாடுகளில் தாக்குதல் செய்வதில்லை. தலிபான் அமைப்பு பஸ்ருன் இனத்துக்கு உரியது என்ற கருத்து நிலவுகின்றது. அல் கெய்தா இனங்களுக்கு அப்பாற்பட்ட கொள்கையுடையது. அல் கெய்தா சியா மற்றும் சுனி என்ற பிளவையே விரும்புவதில்லை. ஆப்கானிஸ்த்தானில் 14 ஏற்றுக் கொள்ளப்பட்ட இனக்குழுமங்கள் உள்ளன. ஆப்கானிஸ்த்தானில் நாற்பது முதல் ஐம்பது விழுக்காடு பஸ்ருன் இனத்தவர் வாழ்கின்றனர் என மதிப்பிடப்படுள்ளது. ஆப்கானிஸ்த்தானின் வட பகுதியிலும் தென் மேற்குப் பகுதியிலும் பஸ்ருன் இனக்குழுமத்தினர் இல்லை எனச் சொல்லுமளவிற்கு குறைந்த அளவில் வாழ்கின்றனர். தஜிக் இனக்குழும மக்கள் 25விழுக்காட்டினர் உள்ளனர். உஸ்பெக் இனக்குழுமத்தினர் 9 விழுக்காட்டினர் வாழ்கின்றனர். ஆப்கானிஸ்த்தான் நிலப்பரப்பின் நூறு விழுக்காடும் தலிபான்கள் தற்போது தலிபானக்ளின் கட்டுப்பாட்டில் இல்லை. பல நிலப்பரப்புக்கள் உள்ளூர் போர்ப்பிரப்புக்கள் கட்டுப்பாடிலும் பல நிலப்பரப்புக்கள் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாத நிலையில் உள்ளன. 2001-ம் ஆண்டு நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு முன்பு இருந்ததிலும் பார்க்க அதிக அளவு நிலப்பரப்பு ஆப்கானிஸ்த்தானில் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாத நிலையில் இருக்கின்றது. அல் கெய்த தேவை ஏற்படும் போதெல்லாம் புதிய பெயரில் புதிய அமைப்புக்களை உருவாக்குவதுண்டு. அந்த வகையில் ஆப்கானிஸ்த்தானில் கட்டுப்பாடு இல்லாமல் இருக்கும் பிரதேசங்களில் அல் கெய்தா வேறு புதிய பெயரில் இயக்கத்தை ஆரம்பிக்கலாம். அது அமெரிக்காவிற்கு டோஹா நகரில் தலிபான்கள் வழங்கிய உறுதி மொழிக்கு முரணானதல்ல என தலிபான்கள் வாதிடலாம்.

தலிபான்களின் வலி தனி வலி

தலிபான் தனது பொருளாதாரத்திலும் உலக நாடுகள் தம் அரசை அங்கீகரிப்பதிலும் உடனடிக் கவனம் செலுத்தும். இவற்றை நிறைவேற்றுவது தலிபானகளுக்கு பெரும் தலைவலியாக இருக்கும். அல் கெய்தாவிற்கு ஆதரவு வழங்குவது இந்த இரண்டு முயற்ச்சிகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பஸ்ருன் அல்லாத இனக் குழுமங்களின் எதிர்ப்பை சமாளிக்க வேண்டிய நிலையிலும் தலிபான் இருக்கின்றது. பிரித்தானியா ஆப்கானிஸ்த்தானிற்கு 1919இல் சுதந்திரம் வழங்கிய போது பஸ்ருன் இன மக்கள் பெரும்பான்மையினராக வாழும் நிலப்பரப்பை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை ஆப்கானிஸ்த்தானுடன் இணைத்தது. மற்றப் பகுதியை அப்போது தான் ஆண்டு கொண்டிருந்த தற்போது பாக்கிஸ்த்தானாக இருக்கும் நிலப்பரப்புடன் சேர்த்து வைத்தது. இதே வகையில் தான் குர்திஷ் மக்கள் வாழும் பிரதேசத்தையும் துருக்கி, சிரியா, ஈராக் போன்ற நாடுகளுடன் இணைத்தது. எதிர் காலத்தில் பல்வேறு இனக்குழுமங்கள் தமக்குள் மோதிக் கொள்ளக் கூடிய வகையில் தனது குடியேற்ற ஆட்சிப் பிரதேசங்களை பிரித்தானியா நாடுகளின் எல்லைகளை வகுத்துக் கொண்டது. தலிபான் போராளிகளில் பலர் பாக்கிஸ்த்தானில் பஸ்ருன் இன மக்கள் வாழும் பிரதேசம் ஆப்கானிஸ்த்தானுடன் இணைக்கப்படவேண்டும் என்ற கொள்கையுடையவர்கள். தலிபான் தலைமைக்கு இப்போது பாக்கிஸ்த்தானின் உறவு அவசியம் என்ற நிலையில் பாக்கிஸ்த்தான் ஆப்கானிஸ்த்தான் எல்லையை மாற்றியமைக்க விரும்பும் தலிபான்களை சமாளிப்பது பெரும் பிரச்சனையாக இருக்கும். அந்த நிலையில் இன்னொரு தீவிரவாத அமைப்பை மீள்கட்டி எழுப்புவதில் தலிபான் தலைமை கவனம் செலுத்த முடியாது. அவை மட்டுமல்ல தொழில்நெறிஞர்கள் (Professionals) பலர் ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறியுள்ளனர். இதனால் தமது அரசை முகாமை செய்வதில் தலிபான்கள் நெருக்கடியை எதிர் நோக்கலாம்.

குறைந்த அளவிலான அல் கெய்தா

அல் கெய்தாவிற்கும் தலிபான்களுக்கும் இடையில் இருபது ஆண்டு கால நெருங்கிய உறவு உண்டு. அல் கெய்தா அமைப்பினர் தலிபான் அமைப்புக்குள் ஊடுருவியும் உள்ளனர் என நம்பப்படுகின்றது. அமெரிக்க உளவுத் துறையும் வெளியுறவுத் துறையும் “ஆப்பாக்” கொள்கை என ஒன்றை வகுத்திருந்தன. அது ஆப்கானிஸ்த்தானையும் பாக்கிஸ்த்தானையும் ஒரு பிரதேசமாகக் கருதி வகுக்கப்பட்டவை. தலிபானின் வெற்றி மற்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுக்கு தூண்டுதலாக அமையும். அல் கெய்தாவின் தலைவர்கள் பலர் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்களால் கொல்லப்பட்டுவிட்டனர். இப்போது ஆப்கானிஸ்த்தானில் அல் கெய்தா போராளிகள் இருநூறு பேர் இருக்கலாம என மதிப்பிடப்பட்டுள்ளது. அல் கெய்தாவிற்கு என்று ஓர் உலகளாவிய தலைவர் என்று சொல்லும்படி யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. நாடுகளுக்கு என்றே தலைவர்கள் இருக்கின்றார்கள். ஐ எஸ் ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு அல் கெய்தாவின் எதிரியாகவே செயற்படுகின்றது. ஆபிரிக்காவின் சஹாராவடி நிலப்பரப்பில் செயற்படும் பொக்கோ ஹரம், அல் ஷஹாப் போன்ற அமைப்புக்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளனர். அல் கெய்தாவின் கிளை அமைப்பான அரபுக் குடாநாட்டிற்கான அல் கெய்தா யேமனில் முடங்கிப் போயுள்ளது. மேற்கு நாடுகளினதும் இஸ்ரேலினதும் உளவுத் துறையினர் அல் கெய்தாவை தொடர்ந்து கண்காணிதுக் கொண்டிருக்கும் நிலையில் அக் கெய்தாவால் தலையெடுக்க முடியாது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...