மேற்குலக அரச தந்திரிகளும் ஊடகவியலாளர்களும் இலங்கைத் தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது என்றும் தமிழர் வாக்குகளே தீர்மானிக்கும் காரணிகளாக அமையும் என்றும் எதிர்வு கூறினர் . முடிவுகள் அவர்களின் எதிர்வு கூறல்களுக்கு நேர்மாறாக அமைந்தன.
மேற்குலகப் பத்திரிகைகளில் வெளிவந்த "Tamils are the King Makers", "Defeated Tamils a Force Again" "Tamils to Decide Srilankan Poll Results" போன்ற தலைப்புச் செய்திகள் சிங்களவர்களைச் சிந்திக்க வைத்திருக்கும். மேற்குலக அரச தந்திரிகளும் ஊடகவியலாளர்களும் இலங்கையின் அரசியல் போக்கையும் அதன் பரிமாணங்களையும் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று தேர்தல் முடிவுகள் சுட்டிக் காட்டி நிற்கின்றன. தேர்தலில் முடிவுகளில் இருந்து நாம் அறிந்து கொள்பவை:
ஆதரவு வாக்குக்கள் அல்ல ஆத்திர வாக்குக்கள்.
சரத் பொன்சேக்காவிற்கு தமிழர்கள் அளித்த வாக்குக்கள் அவர்மீது விருப்புக் கொண்டு அளிக்கப் படவில்லை. மஹிந்த ராஜபக்சமீது உள்ள ஆத்திரத்தால் அளிக்கப் பட்ட வாக்குக்கள். இலங்கை முழுக்க வாழும் தமிழர்கள் போர்தொடர்பாக ராஜபக்சவின் மீதுள்ள ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தனிச் சிங்களப் பகுதிகளில் ராஜபக்ச பொன்சேக்கா எடுத்த வாக்குகளிலும் பார்க்க இரு மடங்கு வாக்குக்கள் எடுத்துள்ளார். மொனராகலவில் ராஜபக்ச முப்பத்து நாலாயிரம் வாக்குக்களையும் சரத் பொன்சேக்கா பதினையாயிரம் வாக்குக்களையும் பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணமாவட்டத்தில் பொன்சேக்கா நூற்றி ஏழாயிரம் வாக்குக்களையும் ராஜபக்ச நாற்பத்தி இரண்டாயிரம் வாக்குக்களையும் பெற்றுள்ளார். ஒட்டுக்குழுக்களின் அட்டகாசம் பேரூந்துகளில் கொண்டு சென்று இறக்கப்பட்ட சிங்களவர்கள் இப்படிப்பல அட்டகாசங்களுக்கு மத்தியிலும் வன்னி மாவட்டத்தில் ராஜபக்ச 24 ஆயிரம் வாக்குக்களைமட்டுமே பெற்றார். பொன்சேக்கா 61ஆயிரம் வாக்குகள் பெற்றார்.
தமிழர்களும் கலந்து வாழும் கொழும்பு மாவட்டத்தில் ராஜபக்ச அறுநூற்றி பதினையாயிரம் வாக்குகளும் பொன்சேக்கா ஐநூற்றி முப்பத்தி முன்றாயிரம் வாக்குக்களையும் பெற்றுள்ளார். இம்முடிவை சிங்களவர்கள் அதிகம் வாழும் மஹரகம தொகுதியின் வாக்களிப்புடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். அங்கு ராஜபக்ச 59 ஆயிரம் பொன்சேக்கா 35 ஆயிரம்.
முஸ்லிம்களும் தமிழர்களும் இணைந்து வாழும் கல்முனைத்
தொகுதியில் ராஜபக்சவைவிட பொன்சேக்கா மூன்று மடங்கு வாக்குக்களைப் பெற்றுள்ளார்.
மலையகத் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் தனிச் சிங்களப் பகுதிகளைப்போல் ராஜபக்ச பொன்சேக்காவைவிட இருபங்கு வாக்குக்கள் பெறமுடியவில்லை. மத்தளை மாவட்டத்தில் ராஜபக்ச 157 ஆயிரம் பொன்சேக்கா 100 ஆயிரம். மாத்தளைத் தேர்தல்
தொகுதியில் ராஜபக்ச 27 ஆயிரம் வாக்குக்கள் பொன்சேக்கா 26ஆயிரம் வாக்குக்கள். மலையகப் பகுதியான நுவரெலியாவில் சரத் பொன்சேக்கா பெரு வெற்றி ஈட்டியுள்ளார். பொன்சேக்கா 113ஆயிரம் வாக்குகள், ராஜபக்ச 62ஆயிரம் வாக்குக்கள். மலையகத் தமிழர்களும் போரில் ராஜபக்ச நடந்துகொண்டமைக்கு எதிராக வாக்களித்தனர் என்று துணிந்து கூறலாம்.
சிங்கள மக்களின் மனோபாவம்மஹிந்த ராஜபக்சவின் நான்கு ஆண்டு ஆட்சிக்காலத்தில் முழு இலங்கையையும் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததைவிட பெரிதாக ஒன்றையும் சாதிக்கவில்லை. பொருளாதாரம் முன்னேறவில்லை. ஆட்சியாளர்களின் குடும்பம் சொத்துக் குவித்தமை மனித உரிமை மீறல்கள் பத்திரிகைகள்மீதான அடக்குமுறை அளவிற்கு அதிகமான மந்திரிகள் போன்றவற்றைப் புறந்தள்ளி சிங்களமக்கள் இந்தத் தேர்தலில் தமிழர்கள் மீதான அடக்கு முறையை மட்டுமே கருத்தில் கொண்டு வாக்களித்துள்ளனர். தமிழ் மக்களின் வாக்களித்தமையும் சிங்கள மக்கள் வக்களித்தமையும் நேர் எதிர் எதிரானவையாக அமைந்தன.
சரத் பொன்சேக்காவின் தோல்வியின் காரணிகள்.சரத் பொன்சேக்காவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது அவர் அரசியலுக்குப் புதியவர் என்பதுதான். அவர் தோல்விக்கு மேலும் இரு காரணிகளைச் சொல்லலாம். ஒன்று அவர் தமிழத்தேசியக் கூட்டமைப்புடன் ஓர் உடன்படு நிலைக்குச் சென்றமை. இந்தக் காரணி எந்த அளவிற்கு அவருக்கு தோல்வியைக் கொடுத்தது என்பதை அறிவது கடினம். மற்றக் காரணி அவர் பின்னால் மேற்குலக நாடுகள் நின்கின்றன என்று சிங்கள மக்கள் கருதியமை. இந்த இரண்டு காரணிகளும் இணைந்து சரத் பொன்சேக்காவின் தோல்விக்கு பெரிய பங்காற்றி இருக்கும் என்று சொல்லலாம். சரத் பொன்சேக்கா ஒரு நல்ல மேடைப் பேச்சாளர் அல்ல (மோசமான பேச்சாளர் என்றும் சொல்லலாம்) என்பதும் ஒரு காரணி. சிங்கள மக்கள் பொதுவாக அரசியலில் இராணுவத் தலையீட்டை விரும்புவதில்லை. இலங்கை சுதந்திரம் அடைந்த பின் ஒரு தடவை மட்டும் இராணுவப் புரட்சி சதி ஒன்று இடம் பெற்றது. அது எளிதாக முறியடிக்கப் பட்டது. போரில் வென்றதை சிங்களமக்கள் பெரிதும் விரும்புகிறார்கள். அதில சரத் பொன்சேக்காவிற்கும் பெரும் பங்கு உண்டு என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். அதற்காக அனுபவம் அற்ற ஒருவரிடம் நாட்டை கையாளிக்க அவர்கள் தயாரில்ல்லை.
ஒட்டுக் குழுக்கள்சிங்களப் பேரினவாதிகளுடன் இணைது செயற்படும் முன்னாள் ஆயுததாரிகள் மஹிந்த ராஜபக்சவிற்கு வாக்களிக்கும்படி செய்த பிரச்சாரம் வெற்றியளிக்கவில்லை. அவர்களுக்கு தமிழ்மக்கள் மத்தியில் உள்ளஆதரவுத் தளம் மிகச் சிறியது என்பதைத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. மஹிந்த ராஜபக்சவிற்கு பெரும் வெற்றியை ஈட்டிக் கொடுத்த மாவட்டம் மொனராகல. அவருக்குப் பெரும் தோல்வியை ஈட்டிக் கொடுத்தது அவரது இருபெரும் தமிழ் நண்பர்கள் தோன்றிய மட்டக்களப்பு மாவட்டம். இவர்கள் இருவரினது அடாவடித்தனத்தில் மக்கள் எவ்வளவு தூரம் ஆத்திரம் அடைந்துள்ளனர் என்று இதில் இருந்து தெரிகிறது.
செல்லாக் காசாகிய சந்திரிக்கா பண்டாரநாயக்கஇலங்கையின் இரு முன்னாள் பிரதம மந்திரிகளின் மகளும் இருதடவை இலங்கைக் குடியரசுத் தலைவியாக இருந்தவருமான சந்திரிக்கா பண்டார நாயக்க சரத்தை ஆதரிப்பதாக தெரிவித்திருந்தார். அவரது பரம்பரைச் சொத்தாகக் கருதப் படும் அத்தனகல்ல தொகுதியில் மஹிந்த ராஜபக்ச பெரு வெற்றி ஈட்டியுள்ளார். பெரும் நிலப் பிரபுவான அவரது தந்தையால் பெரும் தொகைப் பணம் செலவழித்து உருவாக்கப் பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அவரது குடும்ப ஆதிக்கத்தில் இருந்து கைநழுவிப்போனதுடன் அவரது வாரிசு தனது அரசியல் எதிர்காலத்தை இழந்துள்ளார்.
சுயநிர்ணய உரிமை அற்ற தமிழர்கள்தமிழர்களுக்கு இலங்கையில் சுய நிர்ணய உரிமை கிடையாது அவர்கள் வாக்களிப்பதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை என்பதை இத்தேர்தல் உணர்த்தி நிற்கிறது. தமிழர்கள் ஏன் எனக்கு வாக்களிக்கவில்லை அதற்கு செய்ய வேண்டியதென்ன என்ற சிந்தனையில் யாரும் இறங்கப்போவதில்லை. மாறாக அவர்களை எப்படிப் பழிவாங்கலாம் என்ற போக்குத்தான் இனிக்காணப்படும். ஜே ஆர் ஜயவர்தனேயும் இதைத்தான் செய்தார். ஆட்கடத்தல்கள், காணாமல் போதல், ஊடகவியாலாளர்கள் கொலைகள் போன்றவற்றிற்கு சிங்களப் பேரினாவாதம் அனுமதி அளித்துள்ளதா என்ற கேள்வியைத் தேர்தல் முடிபுகள் எழுப்புகின்றன. தமிழர்களிடமிருந்து கைப்பற்றப் பட்ட இடங்களில் அவசர அவசரமாகக் கட்டப் பட்ட சிறைச்சாலைகள் விரைவில் நிரப்பப்படுமா? இன்னும் பத்துத் தலைமுறைக்கு தமிழர்கள் போராட்டம் ஆரம்பிக்காமல் இருக்கும்படி செய்ய வேண்டும் என்ற ராஜபக்சக்களின் வேலைத் திட்ட்ம தொடராமல் இருக்க தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.
தமிழர்கள் தமக்கு வாக்களிக்காமல் மாற்றுக் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்று எந்த ஒரு சிங்களக் கட்சியாவது கருதும் பட்சத்தில் அவர்கள் மீது பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படும் என்பதை தேர்தலன்று யாழ்ப்பாணத்தில் வெடித்த 13 குண்டுகள் எடுத்துக் கூறுகின்றன.
பொருளாதார நிலைஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி. எஸ். பி வர்தகச் சலுகை இரத்தும் சவுதி அரேபியா இலங்கை பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்துவதில்லை என்ற முடிவும் இலங்கைப் பொருளாதாரத்தில் குறுங்காலப் பிரச்சனையை ஏற்படுத்தும். அரச ஊழியரகளின் சம்பள அதிகரிப்பும் விவசாயக் கடன் இரத்தும் இலங்கையின் நிதிநிலையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். சர்வதேச நாணய நிதியம் இன்னும் என்ன என்ன கெடுபிடிகளை கொண்டு வரவிருக்கிறது என்பதும் தொடர்ந்தும் சர்வ தேச நாணய நிதியத்தின் கடனுதவிகள் கிடைக்குமா என்பதும் இப்பொது கேள்விக் குறிகளே.
போர்குற்றம் - மேற்குலகம் எதிர் ராஜபக்சக்கள்ராஜபக்ச மேற்குலக விரோதிகளான சினா, ஈரான், மியன்மார், சூடான் ஆகிய நாடுகளுடன இணைந்து செயற்பட்டமை மேற்குலகை ஆத்திரமூட்டச் செய்து அவருக்கு மிக இலகுவாகக் கிடைக்க வேண்டிய தேர்தல் வெற்றியை சற்று சிரமப்பட்டு கிடைக்கச் செய்தது மேற்குலகம். இனி போர்குற்றம் என்ற ஆயுதத்தை பயன் படுத்தி அவரை அடி பணிய வைக்க மேற்குலகம் முனைப்புக்காட்டும். அவர் மேற்குலகுடன் இணங்கிப் போவாரா அல்லது முரண்படுவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். போர்குற்றத்திற்கான முதல் தர சாட்சி சரத் பொன்சேக்கா. அவரை மஹிந்த அரசு கைது செய்து ஆயுத ஊழல் போன்ற குற்றச் சாட்டுக்களில் சிறையிலிட்டு ராஜபக்சக்கள் செய்த போர்குற்றங்களை வெளிவராமல் செய்யலாம்.
தன்வினையால் சுடப் படும் பொன்சேக்கா.தேர்தல் முடிவுகளை அவதானிக்கும் பொருட்டு ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி. மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் ஒன்றாக ட்ரான்ஸ் ஏசியா ஹோட்டலில் தங்கியிருப்பதாகவும் தன்னுடன் கட்சி அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உட்பட 400 பேர்வரை அங்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ள சரத் பொன்சேகா.
எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அனைவருடனும் இராணுவத்திலிருந்து தப்பியோடிய 400 பேருடனும் கொழும்பு ட்ரான்ஸ் ஏசியா ஹோட்டலில் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா முகாமிட்டுள்ளார் என்றும் தேர்தல் முடிவுகள் தமக்கு சாதகமாக அமைந்தால் இராணுவ புரட்சி ஒன்றைமேற் கொள்வதற்காகவே பொன்சேகா இந்த நடவடிக்கையை மேற் கொண்டுள்ளார் என்றும் சிறிலங்கா இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். சரத் பொன்சேக்கா தப்பி ஓடவிடாமல் அவரைக் கைது செய்ய இந்த முன்னேற்பாடா?
சரத் பொன்சேக்கா தமிழர்களுக்கு செய்த அநியாயத்திற்கு இனி அநுபவிப்பார். சரத் பொன்சேக்காவைப் பொறுத்தவரை அரசன் அன்று அறுக்கிறான் என்றால் ராஜபக்சக்களை நின்று அறுப்பது யார்?