
எகிப்திய மக்களுக்கு ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட மூன்று அடையாளங்கள் உண்டு. 1. எகிப்தியர், 2. அரபு நாட்டவர், 3. இஸ்லாமியர்.
தம்மை எகிப்தியர்கள் என்று பெருமைப்படுபவர்கள் இஸ்லாமிய மதத்திற்கு அப்பால் நின்று சிந்திக்கின்றனர். தம்மை அரபியர்கள் என்று நினைக்கிறவர்கள் எகிப்து அரபுநாடுகளுக்கு தலமைதாங்க வேண்டும் என்று நினைக்கின்றனர். காலம் சென்ற எகிப்திய அதிபர் அப்துல் கமால் நாசர் அரபு-எகிப்து அடையாளத்தில் சிந்தித்தார். 1928இல் ஹசன் அல் பன்னாவால் ஆரம்பிக்கப்பட்ட முசுலிம் சகோதரத்துவ அமைப்பு எகிப்தை ஒரு இசுலாமிய நாடாகப் பார்க்கிறது. ஹஸ்னி முபராக்கை பெரிய மக்கள் எழுச்சி மூலம் பதவியில் இருந்து விலக்கியபின் இந்த எழுச்சியில் பெரும் பங்கு வகித்த இளையோர் அமைப்புக்கள் எகிப்தின் எதிர்காலம் பற்றி வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.

இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு
இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்களுடன் உலகிலேயே செல்வாக்கு மிகுந்த அமைப்பு. இது தற்போது எகிப்தில் உள்ள ஒழுங்கு படுத்தப்பட்ட மிகப்பெரிய அரசியல் அமைப்புமாகும். இது மக்களும் அரசும் இஸ்லாமிய மத வழிகாட்டலுக்கு இணங்க நடக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. எகிப்தில் உள்ள இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு பல மருத்துவ மனைகள், வியாபார நிலையங்கள், பாடசாலைகள், வங்கிகள், பராமரிப்பு நிலையங்கள், மலிவு விலைக்கடைகள் எனப் பலவற்றை நிர்வகித்து வருகிறது. முன்னாள் எகிப்திய அதிபர் அப்துல் கமால் நாசர் கொலையில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகித்து அது தடை செய்யப்பட்டும் இருந்தது. இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு 1970முதல் வன்முறைகளைக் கைவிட்டு மக்களாட்சியில் நம்பிக்கையுடன் ஒரு தாராளவாதக் கொள்கையுடைய அமைப்பாக மறி வருவதாக சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

எகிப்திய படையினர்
உச்ச படைத்துறைச் சபை இப்போது 75வயதான பாதுகாப்புத் துறை அமைச்சரும் முபராக்கின் நீண்டநாள் ஆதரவாளருமான முஹமட் தந்தாவியின் தலைமையில் செயற்படுகிறது. இப்போதைய எகிப்தின் அதிபர் அவர்தான். முபராக்கின் படை அப்படியே இருக்கிறது. எகிப்தியப்படையின் உயர் அதிகாரிகளில் பெரும்பாலோனோர் அமெரிக்காவில் உயர் பயிற்ச்சி பெற்றவர்கள். முபராக்கிற்கு எதிரான புரட்சியில் அவரது படையினர் சிறந்த தொழில்சார் பணிவன்பை மக்கள் மீது காட்டியது பலரையும் வியக்க வைத்தது.

ஏப்ரல்-6 இயக்கம்(April 6 Movement)
அல் மஹால்லா அல் குப்ரா என்னும் எகிப்திய நகரில் 2008 ஏப்ரில் 6-ம் திகதி அங்குள்ள தொழிற்சாலை ஊழியர்களால் வேலை நிறுத்தத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது பேஸ்புக் குழு ஏப்ரல் 6 இயக்கம். ஏப்ரல் 6-ம் திகதி சகல ஊழியர்களும் கறுப்புப் பட்டி அணிந்து வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டது இந்த இயக்கம். இதன் ஆரம்ப கர்த்தாக்கள் அஹ்மட் மஹேர், அஸ்மா மஹ்ஃபவுஸ், இஸ்ரா அப்துல் பட்டா ஆகியோர்கள். அஹ்மட் மஹேர் 2009இல் வேறு பதினாறு பேருடன் கைது செய்யப்பட்டார். அவரது ஆதரவு இணையத் தளங்கள் முடக்கப்பட்டன. இந்த இயக்கத்திற்கு ஆதரவு பல்கிப் பெருகி இலட்சக்கணக்கன இளைஞர்கள் இதில் இணைந்து கொண்டனர். பெரும்பாலானோர் 20இற்கும் 30இற்கும் இடைப்பட்ட வயதுடைய படித்தவர்களே. மதசார்பற்ற இந்த இயக்கத்தினரே ஹஸ்னி முபராக்கை பதவியில் இருந்து விலக்கும் மக்கள் எழுச்சியை ஆரம்பித்தனர்.
பல இயக்கங்கள்
ஏப்ரல் 6 இயக்கத்தைப் போலவே பல இயக்கங்கள் முபராக்கிற்கு எதிரான புரட்சியில் ஈடுபட்டிருந்தன. பல அமைப்புக்களின் கூட்டணியே முபராக்கை விரட்டியது.
புரட்சியைப் பாதுகாக்கும் இயக்கம்
புரட்சிக்குப் பின்னர் எகிப்து போகும் பாதை திருப்திகரமாக இல்லாததால் புரட்சியைப் பாதுகாக்கும் இயக்கம் என்று பல இயக்கங்கள் சேர்ந்து உருவாக்கியுள்ளன.
அரசியலமைப்புத் திருத்தம்
எகிப்திய அரசமைப்புக்கு ஒன்பது திருத்தங்கள் செய்து அது மார்ச் 19-ம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்பட்டு மக்களின் அங்கீகாரம் பெறப்பட்டது. இந்தத் திருத்தங்கள் அவசரப்பட்டு மக்களுக்கு சரியான விளக்கங்கள் கொடுக்காமல் இடைக்கால படைத்துறை அரசால் கொண்டுவரப்பட்டது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. திருத்தத்தில் முக்கிய அம்சங்கள்: அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள்( ஒருவர் இருதடவை மட்டுமே) , தெரிவு செய்யப்படும் அதிபர் 30நாட்களுக்குள் துணை அதிபரை நியமிக்க வேண்டும், அதிபர் 40 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும், எகிப்தியரல்லாதவரை திருமணம் செய்தவர் அதிபர் பதவிக்குப் போட்டியிட முடியாது. திருத்தப்பட்ட அரசியலமைப்பின்படி புதிய அரசு தெரிவு செய்யப்பட்டு அது ஆறு மாதங்களில் புதிய அரசியலமைப்பை வரையும் என்றும் சொல்லப்படுகிறது.
அரசியலமைப்புத் திருத்ததில் முரண்பாடு தொடங்கிவிட்டது. முபாரக் ஆதரவாளர்களும் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பும் அரசமைப்புத் திருத்ததிற்கு ஆதரவு வழங்கினர். இளைஞர்கள் அமைப்புக்கள் பலதரப்பினர்களையும் கொண்ட ஒரு சபையால் அரசமைப்பு முற்றாக புதிதாக எழுதப்பட்டு அதன் அடிப்படையில் தேர்தல் நடத்தப் படவேண்டும் என்று விரும்புகிறது. 40வயதிற்கு மேற்பட்டவர்தான் அதிபர் பதவிக்கு போட்டியிடலாம் என்பது இளைஞர்களை ஒதுக்கவா? 2005இல் நோபல் பரிசு பெற்ற முஹமத் அல்பராடி இந்த அரமைப்புத்திருத்தம் எகிப்தியர்களுக்கு இப்போது தேவையானதில் ஒருமிகச் சிறிய பகுதியே என்றார். முஹமத் அல்பராடி எகிப்தின் அதிபராக வரலாம் என்ற சாத்தியம் உண்டு. முஹமத் அல்பராடிக்கும் பன்னாட்டு நெருக்கடிக்குழுவிற்கும் தொடர்புண்டு. பன்னாட்டு நெருக்கடிக் குழுவிற்கும் நாணய வர்த்தக முதலையான ஜோர்ஜ் ஸொரஸிற்கும் தொடர்பு உண்டு. இதனால் முகமத் அல் பராடி ஒரு வெளிநாட்டுக் கைக்கூலி என்று குற்றம் சுமத்துபவர்களும் உண்டு. முபாரக் ஆதரவாளர்கள், எகிப்தியப் படைத் துறையினர், இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு ஆகியவை கைகோர்த்து நின்றால் அது ஒரு அமெரிக்க சார்பு அணியா என்ற சந்தேகத்தைப் பலருக்கும் ஏற்படுத்தும். ஆண்டொன்றுக்கு எகிப்திற்காக இரண்டு பில்லியன் டொலர்களைச் செலவளித்த அமெரிக்கா கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சூயஸ் கால்வாயோரம் தனது நண்பர்களின் வசம் இருப்பதையே அமெரிக்கா பெரிதும் விரும்பும்.