Showing posts with label தைவான். Show all posts
Showing posts with label தைவான். Show all posts

Wednesday, 6 July 2022

தைவான்: ஒரு சீனா ஒரே பொய்

 அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடன் தைவான் சீனாவின் ஒரு பகுதி அல்ல என்றார். இது அமெரிக்காவின் நிலைப்பாடல்ல என்றார் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலைவன். அமெரிக்கா தைவான் தொடர்பாக வெளியில் சொல்வது வேறு அதன் செயற்பாடு வேறு. சீன ஆட்சியாளர்கள் தைவான் சீனாவின் ஒரு மாகாணம் என தொடர்ச்சியாக சொல்லி வருகின்றனர். ஆனால் தைவான் எல்லா வகையிலும் ஒரு தனிநாடாகவே செயற்படுகின்றது.

சீனாவின் ஐநா உறுப்புரிமை தைவானிடம்

1945 ஒக்டோபரில் ஐக்கியநாடுகள் சபை உருவான போது சீனாவும் அதில் ஓர் உறுப்பு நாடாகியது. அது பொதுவுடமை சீனா உருவாக முன்னர் இருந்த மக்கள் சீனக் குடியரசாகும். அதன் ஒரு பகுதியாக தைவானும் இருந்தது. 1949 ஒக்டோபரில் பொதுவுடமைவாதிகள் மாவோ தலைமையில் மக்கள் சீனக் குடியரசை உருவாக்கிய போது தைவான் ஒரு தனிநாடாகியது. அமெரிக்கா தைவானில் ஆட்சியில் இருப்பவர்கள் தான் உண்மையான சீன ஆட்சியாளர்கள் என்றும் தைவான் அரசுதான் சீனக் குடியரசு என்றும் அந்தக் குடியரசு தான் ஐக்கிய நாடுகள் சபையில் முழுச் சீனாவிற்குமான உறுப்புரிமை உடையது என்றும் அடம் பிடித்தது. 1943-ம் ஆண்டு எகிப்தில் நடந்த முதலாவது கெய்ரோ மாநாட்டில் உலகப் போரின் பின்னரான ஆசிய அரசுகள் பற்றி முடிவு செய்த போது ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்ட தைவான சீனக் குடியரசின் ஒரு பகுதியாக ஒத்துக்கொள்ளப்பட்டது. அது பொதுவுடமைப் புரட்சிக்கு முன்னரான நிலைப்பாடு.

கேந்திரோபாயத் தெளிவின்மையா (Strategic Ambiguity) கேந்திரோபாய பொய்யா?

தைவான் தொடர்பான நிலைப்பாட்டை “கேந்திரோபாயத் தெளிவின்மை” (Strategic Ambiguity) என்னும் பெயரிட்டு குழப்பமான ஒன்றாக அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் முன்னெடுக்கின்றார்கள். 1972-ம் ஆண்டு அமெரிக்க குடியரசுத் தலைவர் ரிச்சர்ட் நிக்சனும் சீனத் தலைவர் மாவோ சே துங்கும் சந்திக்கும் வரை தைவான் சீனக் குடியரசு எனவும் சீனா மக்கள் சீனக் குடியரசு எனவும் அழைக்கப்பட்டன. 1979இல் சீன அமெரிக்க உறவைப் புதுப்பித்தல் (Détente)செய்த போது சீனாவிற்கு அமெரிக்கா காட்டிய இரட்டை முகத்தில் இருந்து கேந்திரோபாய தெளிவின்மை செயற்படுத்தப்படுகின்றது. அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ரிச்சர்ட் நிக்சன் தைவான் சீனாவின் ஒரு பகுதி என்பதை விருப்பமின்றி ஒத்துக் கொண்டார். நிக்சன் எதை ஒத்துக் கொண்டார் என்பதற்கும் அப்போதைய சீன ஆட்சியாளர்கள் அதை எப்படி புரிந்து கொண்டார் என்பதற்கும் வித்தியாசம் உண்டு என 2000-ம் ஆண்டிலிருந்து அமெரிக்கர் சொல்லி வருகின்றார்கள். நிக்சனும் மாவோவும் பேச்சு வார்த்தை நத்திக் கொண்டிருக்கையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தைவான் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதுவரை தைவானை சீனக் குடியரசு என அழைத்து வந்த அமெரிக்க தைவான் பாதுகாப்புச் சட்டத்தில் “தைவானை ஆளும் அதிகாரப்பட்டயங்கள் (Governing Authorities of Taiwan) எனக் குறிப்பிட்டது. 1979இல் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக சீனாவை தன் நட்பு நாடாக்குவதற்காக அமெரிக்கா சொன்ன பொய் “ஒரே சீனா”. அந்த ஒரே சீனாவில் தைவான் இருக்கின்றதா இல்லையா என்ற கேள்விக்கான பதில்தான் “கேந்திரோபாயத் தெளிவின்மை”

இரு விமானம் தாங்கி கப்பல்களுக்கு அஞ்சிய சீனா!

பொதுவுடமைச்(?) சீனாவின் சிற்பியாகிய மாவோ சே துங்கின் குறிக்கோள் ஹொங் கொங்கும் தைவானும் சீனாவின் பிரிக்க முடியாத பகுதிகள் என்பதாகும். ஆனால் இன்றுவரை சீனாவால் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை. சீனா ஒரு போர் மூலம் தைவானைக் கைப்பற்ற முயன்றால் அமெரிக்கா சீனாவிற்கு எதிராக போர் செய்யும் என்பது போல அமெரிக்காவில் இருந்து கருத்து வெளியிடப்படுவது ஆண்டு தோறும் வலுவடைந்து கொண்டு போகின்றது. 1996-ம் ஆண்டு தைவானை ஆக்கிரமிக்க சீனா தயார் செய்த போது அப்போதைய அதிபராக இருந்த பில் கிளிண்டன் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை சீனாவிற்கும் தைவானிற்கும் இடையிலான தைவான் நீரிணக்கு அனுப்பியவுடன் சீனா தனது முயற்ச்சியைக் கைவிட்டது. பதினைந்து ஆழ்கடல் துறைமுகங்களைக் கொண்ட தைவானை சீனா கைப்பற்றினால் அதன் கடற்படை வலிமை மிகவும் அதிகமாகும்.

தைவான் வேறு சீனா வேறு என்கின்றது அமெரிக்கா

The American Enterprise Institute என்ற அமெரிக்க வலதுசாரிக் கருத்துக் கலம் வரலாற்று ஆய்வு ஒன்றைச் செய்து தைவான் சீனாவின் பகுதியாக இருந்ததில்லை என ஒரு நூலை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த நூல் சீனா தைவானை ஆட்சி செய்த காலத்திலும் பார்க்க நீண்ட காலம் மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஆசிய மற்றும் ஆபிரிக்காவில் உள்ள நாடுகளை ஆட்சி செய்தன என்கின்றது. கிங் கோமரபு (Qing Dynasty) தைவானை இரண்டு நூற்றாண்டுகளுக்கு (1683 – 1895) மேல் ஆட்சி செய்தது. கிங் கோமரபின் பிடியில் இருந்த சீனாவுடன் ஜப்பானியர்கள் 1894இல் போரை ஆரம்பித்தனர். 1895இல் முடிந்த முதலாம் சீன-ஜப்பான் போரில் ஜப்பான் தைவானையும் சீனாவின் காற்பங்கு நிலப்பரப்பையும் கைப்பற்றியது. கிங் கோமரபு ஆட்சியாளர்கள் உண்மையான ஹன் சீனர்கள் அல்ல அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களே என அமெரிக்க ஆய்வு நிறுவனம் சொல்கின்றது. கிங் கோமரபிற்கு முன்னர் தைவானை டச்சுக்காரர்களும் போர்த்துக்கேயர்களும் ஆண்டனர். பொதுவுடமை சீனாவைப் பற்றி பல நூல்களை எழுதிய Edgar Snow என்பவருக்கு மாவோ சே துங் 1936இல் வழங்கிய பேட்டியில் மாவோ தைவானை சீனாவின் ஒரு பகுதியாக குறிப்பிடவில்லை என்கின்றது The American Enterprise Institute.

சீனாவால் தைவானைக் கைப்பற்ற முடியாதாம்

சிலர் தைவான் தீவைக் கைப்பற்றக் கூடிய வலிமையான கடற்படை ஒரு போதும் சீனர்களிடம் இருந்ததில்லை என்கின்றனர். 23.6 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட தைவானைக் கைப்பற்ற போர் அனுபவம் இல்லாத சீனப்படையினர் எத்தனை பேர் தேவைப்படுவார்கள் என்ற கேள்விக்கு நூறு தைவானியர்களுக்கு ஒரு சீனப் படை வீரர் என்ற கணக்குப் படி பார்த்தால் 240,000 சீனப் படையினர் தேவைப்படுவார்கள். அவர்களையும் அவர்களுக்கு தேவையான போர்த்தாங்கிகள், ஆட்டிலெறிகள், துப்பாக்கிகள், சுடுகலன்கள், உணவுகள் போன்றவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு நூறு மைல்கள் தூரம் கடலைக் கடந்து செல்ல வேண்டும். அதற்கு தேவையான தரையிறக்க கப்பல்கள் (Landing Vessels) சீனாவிடம் இல்லை என்ற விவாதத்தை சில மேற்கு நாட்டு ஆய்வாளர்கள் முன்வைக்கின்றார்கள். சீனாவிடம் உள்ள எட்டு தரையிறக்க கப்பல்கள் மூலம் ஐம்பதினாயிரம் படையினரையும் ஆயிரம் போர்த்தாங்கிகளை மட்டும் தரையிறக்க முடியும் என்பது அவர்களது கருத்து. பகுதி பகுதியாக படையினரை இறக்கினால் மிகப்பெரும் அழிவை சீனப் படையினர் சந்திக்க வேண்டிவரும். சீனா தனது தரை, வான், கடல் நிலைகளில் இருந்து குண்டுகளை வீசி தைவானை தரைமட்டமாக்கிய பின்னர் படையெடுத்தால் சீனா தைவானின் தொழில்நுட்பத்தையும் பொருளாதாரத்தையும் கைப்பற்றும் நோக்கம் நிறைவேறாது. தைவானியர்களின் கரந்தடிப் போரை சீனா எதிர் கொள்ள வேண்டிவரும். தைவானைப் பாதுகாக்க அமெரிக்கா, ஜப்பான், ஒஸ்ரேலியா, பிரித்தானியா ஆகிய நாடுகள் களமிறங்கினால் நிலைமை மோசமாக இருக்கும். இவை உண்மையாயின் சீனா தொடர்ந்தும் தைவான் சீனாவின் ஒரு மாகாணம் என வாயளவில் (பொய்) சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இரசியா உக்ரேன் மீது படையெடுக்கும் போது சீனாவும் தைவான் மீது படை எடுக்கும் என எதிர்பார்த்ததும் நடக்கவில்லை.

முள்ளம் பன்றிக் கோட்பாடு

ஒரு முள்ளம்பன்றி சிறிதாக இருந்தாலும் அதன் எதிரிகள் அதைத் தொட்டால் அதன் முள்ளுகள் குத்தும். அப்படியாக இருக்கக் கூடிய மாதிரி தைவானை வைத்திருக்கும் திட்டத்தை 2008-ம் ஆண்டு அமெரிக்கா உருவாக்கியது. அத்திட்டத்தின் படி அமெரிக்கா போர் விமானங்கள் மற்றும் படைத்தாக்குதல் செய்யக் கூடிய ஆளில்லாப் போர் விமானங்கள்,  கணினியால் இயங்கும் கண்ணி வெடிகள் போன்றவற்றை தைவானிற்கு வழங்கியது. உக்ரேன் போரில் பெற்ற அனுபவங்களை அடிப்படையாக வைத்து தைவானின் படையினரை மாற்றி அமைக்க அமெரிக்கா முயல்கின்றது. அத்துடன் தைவானிற்கு மேலதிக படைக்கலன்களை விற்று பணம் சம்பாதிக்கவும் அமெரிக்கா முயல்கின்றது. சமச்சீரற்ற போர் முறைப் பயிற்ச்சியையும் அதற்குரிய படைக்கலன்களையும் தைவான் பெற வேண்டும் என அமெரிக்கப் படைத்துறை நிபுணர்கள் கருதுகின்றனர். 1979 தைவான் உறவுச் சட்டம் அமெரிக்கா தைவானிற்கு தற்காப்பு படைக்கலன்களை வழங்க வேண்டும் என்கின்றது. தாக்குதற் படைக்கலன்கள் இல்லாமல் சீனாவை தைவானியர்கள் எதிர் கொள்ள வேண்டும்.

தற்காப்பு படைக்கலன்களைப் பெற்றுக் கொண்டு உக்ரேனியர்கள் படும் பாட்டை தைவானியர்கள் அவதானித்துக் கொண்டு இருக்கும் வேளையில் இரசியாவின் இழப்புக்களை சீனர்களும் அவதானித்துக் கொண்டு இருக்கின்றனர்.

Sunday, 3 April 2022

உக்ரேனில் இரசியாவின் நிலை சீனாவின் தைவான் கொள்கையை மாற்றுமா?

  


உக்ரேன் இரசியாவின் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஆன்இரசியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை. தைவான் சீனாவின் ஒரு பகுதியாக இருந்தது. இன்றும் அதன் ஒரு பகுதி என்றே சீனா சொல்கின்றது. உக்ரேனை ஒரு தனிநாடாக 180இற்கு மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்ததுடன். ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல உலக அமைப்புக்களில் ஒரு நாடாக உறுப்புரிமை பெற்றுள்ளது. தைவான் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமை கொண்ட நாடல்ல. வத்திக்கான உட்பட 15 நாடுகள் மட்டும் தைவானை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. எந்த ஒரு நேட்டோ நாடும் தைவானை தனிநாடாக அங்கீகரிக்கவில்லை. இரசியா உக்ரேனை ஆக்கிரமிக்கும் என்பது பரவலாக எதிர் பார்க்கப்பட்ட ஒன்றல்ல. ஆனால் தைவானை சீனா ஆக்கிரமிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு பல பத்தாண்டுகளாக எதிர்பார்க்கப்படுகின்றது. உக்ரேன் போரை சீனாவும் தைவானும் உன்னிப்பாக கவனிக்கின்றன. இரசியா வேறு சீனா வேறு அது போலவே உக்ரேன் வேறு தைவான் வேறு. 1992இல் சீனாவினதும் இரசியாவினதும் பொருளாதாரம் ஒரே அளவிலானதாக இருந்தன ஆனால் 2022இல் இரசியாவின் பொருளாதாரத்திலும் பார்க்க சீனாவினது பத்து மடங்கு பெரியது. 

வளம் மிக்க சீனா

உக்ரேனில் ஒரு நீண்ட காலப் போர் செய்ய இரசியாவால் முடியுமா என்பது கேள்விக்குறி. ஆனால் தைவான் மீது போர் தொடுத்தால் அது எத்தனை ஆண்டுகள் எடுத்தாலும் சீனாவால் தாக்குப் பிடிக்க முடியும். இரசியாவிடம் பல தரப்பட்ட புதிய படைக்கலன்கள் இருந்தாலும் அவை போதிய எண்ணிக்கையில் இல்லை. ஆனால் சீனாவிடம் தைவானுடன் போர் செய்யக் கூடிய அளவு படைக்கலன்கள் இருக்கின்றன. போர் என்று ஆரம்பித்தால் மேலும் படைக்கலன்களை குறுகிய கால எல்லைக்குள் உற்பத்தி செய்து குவிக்கும் வளங்கள் சீனாவிடம் உள்ளன.

இரசியாவின் நகர்விலும் பார்க்க சீன நகர்வு கடினமானது

உக்ரேனுக்கு இரசியா தரைவழியாக படைகளை நகர்த்தியது. ஆனால் சீனா தைவானிற்கு 160கிலோ மீட்டர் நீளக் கடலை தாண்ட வேண்டியுள்ளது. கடல் தாண்டி படைகளை கொண்டு போய் இறக்க முன்னரே கடலில் வைத்து ஒரு போரை தைவானால் தனித்தும் செய்ய முடியும். உக்ரேன் இரசியா மீது ஏவுகணைகளை வீசவில்லை. ஆனால் தைவான் சீனாவின் ஹொங் கொங் மற்றும் ஷங்காய் உட்பட பொருளாதார கேந்திரோபாய நிலைகளை தாக்குவதற்கு என தனது ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளது. உக்ரேன் போரை  தைவானியர்கள் மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இன்று உக்ரேன் நாளை தைவான் என்ற தலைப்பில் பல கலந்துரையாடல்களை தைவானியர்கள் செய்து வருகின்றார்கள். சீனா தலையிடுமா? தைவான் தயாரா? அமெரிக்கா உதவி செய்யுமா? என்பவை பற்றிய விவாதங்களே தைவானில் பரவலாக அடிபடுகின்றது. தங்கள் தற்பாதுகாப்பிற்கு தற்சார்பு நிலை அவசியம் என்பதை தைவானியர்கள் உணர்ந்துள்ளனர். அமெரிக்காவை நம்பியிருக்காமல் தாம்மைத்தாமே பாதுகாக்க வேண்டும் என பல தைவானியர்கள் நினைக்கின்றார்கள். உக்ரேனிற்கு புட்டீன் படை அனுப்பியவுடன் தைவானில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் உக்ரேனியர்கள் தனியே இல்லை தைவானியர்கள் அவர்களுடன் நிற்கின்றார்கள் என்ற பதாகையும் காணப்பட்டது.

ஆழமறியாத இரசியா போல் ஆழமறியாத சீனாவா?

உக்ரேனை இரசியாவும் தைவானை சீனாவும் ஒரே நேரத்தில் ஆக்கிரமித்தால் அது அமெரிக்காவின் கவனத்தை சிதறச் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இது தொடர்பாக பல கட்டுரைகள் மேற்கு நாட்டு ஊடகங்களில் வெளிவந்தன. ஆனால் அப்படி நடக்கவில்லை. 2014-ம் ஆண்டு உக்ரேனை இரசியா பகுதியாக ஆக்கிரமித்த பின்னர் உக்ரேனியர்களிடையே இரசிய குரோதத்தை அமெரிக்கா வளர்த்து வைத்துள்ளது என்பது இரசியப் படையினர் உக்ரேனுக்குள் சென்ற பின்னர்தான் இரசிய அதிபர் புட்டீன அறிந்து கொண்டார். இரசியப் படைகளை உக்ரேனியர்கள் வரவேற்பார்கள் என்று புட்டீன எதிர்பார்ந்திருந்ததாக மேற்கு நாட்டு ஊடகங்கள் சொல்கின்றன. இந்த ஏமாற்றத்தால் இரசிய உளவுத்துறையின் இயக்குனரையும் அவரது உதவியாளரையும் புட்டீன் வீட்டுக் காவலில் வைத்தார் என்று கூடச் சொல்லப்படுகின்றது. தைவானியர்களின் நிலைப்பாடு தொடர்பாக சீனா எந்த அளவு அறிந்து வைத்திருக்கின்றது?

உன்னிப்பாக அவதானிக்கும் சீனா

உக்ரேன் எல்லையில் இரசியப் படைகள் 2021-22இல் குவிக்கப்பட்ட போது சீனாவின் முன்னணி ஊடகங்களான Xinhua, CGTV, People’s Daily ஆகியவை மௌனமாகவே இருந்தன. ஆனால் உக்ரேன் போர் நிலவரங்களை சீனா உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றது. இரசியப் படைகள் உக்ரேனில் இருந்து தோல்வியடைந்து வெளியேறினால் அது இரசியப் பாதுகாப்பு மற்றும் கேந்திரோபாய நலன்களைப் பொறுத்தவரை பாதிக்கிணறு தாண்டியது போலாகும். இரசியா இலகுவில் உக்ரேனில் இருந்து வெளியேற மாட்டாது. அல்லது ஏதாவது ஒரு போலி வெற்றியைச் சொல்லிக் கொண்டு இரசியா அங்கிருந்து வெளியேறலாம். அது இன்னும் சில வாரங்களில் இரசியா செய்ய வேண்டும். இரண்டும் தைவான் ஆக்கிரமிப்பிற்கு முன்னர் சீனாவை ஒரு தடவைக்கு இரு தடவை சிந்திக்க வைக்கும். வலிமை மிக்க காத்திரமான தயாரிப்பை செய்த பின்னரே சீனா தைவானை ஆக்கிரமிக்கும். அதற்கு இன்னும் சில ஆண்டுகள் எடுக்கலாம்.

உக்ரேனுக்கு படையனுப்ப மறுத்த மேற்கு

அமெரிக்கா உட்பட எல்லா மேற்கு நாடுகள் உக்ரேனுக்கு படையனுப்ப மறுத்துள்ளன. தைவானை சீனா ஆக்கிரமித்தால் அதே நிலைப்பாடு இருக்குமா? தென் சீனக் கடல் உட்பட ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான கடற்போக்கு வரத்தை வலியுறுத்தி அங்கு பிரித்தானியா, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லந்து ஆகிய நாடுகள் தம் கடற்படையை அனுப்பியதுடன் அமெரிக்காவுடன் இணைந்து போர்ப்பயிற்ச்சியை நடத்தின. அமெரிக்காவின் நேட்டோ பங்காளிகளின் உக்ரேன் தொடர்பான நிலைப்பாட்டிலும் பார்க்க கடுமையான நிலைப்பாட்டில் தைவான் தொடர்பாக ஜப்பானும் ஒஸ்ரேலியாவும் எடுத்துள்ளன. இருபத்தியாறு துறைமுகங்களைக் கொண்ட தைவான் தீவை சீனா கைப்பற்றுவது பசுபிக் பிராந்தியத்தில் வலிமை மிக்க ஒரு கடற்படையை சீனா உருவாக்கி அதில் ஆதிக்கம் செலுத்தும் நிலையை ஏற்படுத்தும் என்பதால் ஜப்பான் தைவானை சீனா கைப்பற்ற முயன்றால் அதன் மீது தாக்குதல் செய்வதற்கு தயாராக தைவானிற்கு அண்மையாக உள்ள தீவுகளில் தனது ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது. தனது கடற்படையையும் வலிமைப் படுத்தியதுடன் தனது துறைமுகங்களை ஒஸ்ரேலியா பாவிப்பதற்கு அனுமதியும் வழங்கியுள்ளது. இரசியர்களுக்கு இருக்கும் போர் முனை அனுபவம் சீனர்களுக்கு இல்லை என்பதையும் சீனா நன்கறியும். இரசியாவை சுற்றி வர உள்ள அமெரிக்கப் படைத்தளங்களிலும் பார்க்க வலிமை மிக்க படைத்தளங்கள் சீனாவை சுற்றி வர அமெரிக்கா வைத்திருக்கின்றது. நீண்ட காலப் போரில் ஈடுபடும் தைவானால் உலகப் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும். அதில் சீனாவிற்கு தான் பெருமளவு பாதிப்பு இருக்கும். உக்ரேன் மீது இரசியா படையெடுத்தவுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவின் முன்னள் படைத்துறை அதிகாரிகளையும் வெளியுறவுத்துறை அதிகாரிகளையும் தைவானுக்கு அனுப்பி அவர்களுக்கு நம்பிக்கையூட்ட முயன்றார். இரசியாவிற்கு எதிரான அமெரிக்காவின் போர் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஏற்படுத்தும் அழிவைப் போல் சீனாவிற்கு எதிரான போர் உருவக்க மாட்டாது.

வ்உக்ரேனில் இரசியாவுடன் நேரடி மோதலை அமெரிக்கா தவிர்த்துக் கொண்டிருப்பது. தைவானைக் கைப்பற்ற முயற்ச்சிக்கும் சீனாவுடன் நேரடி மோதலை செய்வதற்காகவா என்பதை சீனா சிந்திக்கும். சீனா தைவானை ஆக்கிரமிக்கும் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை உக்ரேனின் அனுபவத்தை வைத்து மீள் பரிசீலனை செய்து பல மாற்றங்களைச் செய்ய வேண்டிய நிலையை உக்ரேனியர்களின் உறுதிப்பாடும் இரசியாவின் திட்டமிடல் தவறுகளும் ஏற்படுத்தியுள்ளன. பல பாடங்களை போர் அனுபவமில்லாத சீனா கற்றுக் கொள்ல வேண்டியிருக்கும். சீனா தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியா இணைக்கும் நோக்கத்தை நிறைவேற்றும் நாளை தள்ளிப்போடும். அந்தக் கால இடைவெளியில் தைவானியர்களும் உக்ரேனிடமிருந்து பலவற்றைக் கற்றுக் கொள்வார்கள்.


Sunday, 2 January 2022

2022இல் உலகம் எப்படி இருக்கப் போகின்றது?

 



முன்னைய ஆண்டுகளில் இருந்து 2022இலும் தொடரும் பிரச்சனைகள்: 1. உக்ரேன் எல்லையில் இரசியப் படைக்குவிப்பு, 2. தைவானை ஆக்கிரமிக்க முயலும் சீனா, 3. செல்வாக்கிழந்த ஆட்சியாளரகள்,4. பணவீக்கமும் அரச நிதிப்பற்றாக்குறையும் 5. பெருந்தொற்று நோய், 6 பொருளாதாரப் பிரச்சனை.

உக்ரேன்

உக்ரேனை இரசியாவும் தைவானை சீனாவும் ஒரே நேரத்தில் ஆக்கிரமிப்பு செய்தால் அமெரிக்கா இருமுனைப் போரை எதிர்கொள்வதற்கு சிரமப்பட்டு திணறும் எனக் கருதப்பட்டது. இரசியா உக்ரேனை ஆக்கிரமிப்பதற்கு கடும் குளிர் நிலவும் ஜனவரி இறுதி உகந்ததாக இருக்கும். ஆனால் சீனாவின் 2022 பெப்ரவரியில் நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு முதல் சீனா தைவானை ஆக்கிரமித்தால் மேற்கு நாடுகள், ஜப்பான், கொரியா, ஒஸ்ரேலியா போன்ற நாடுகள் போட்டியைப் புறக்கணிக்கும். அதனால் சீனா பெரும் இழப்பீட்டைச் சந்திக்க வேண்டிவரும். நேட்டோ நாடுகள் உக்ரேனைப் பாதுகாப்பதில் உறுதியாக நின்றாலும் உக்ரேன் மீது இரசியா போர் தொடுக்கும் போது நேரடியாக நேட்டோப்படையை களமிறக்குவதற்கான வாய்ப்பு குறைவு. இரசிய படைகளை உள்ளே வரவிட்டு கரந்தடித் தாக்குதல் செய்வதற்கான வாய்ப்புக்கள் தான் அதிகம். அத்தாக்குதலில் போலந்து மற்றும் துருக்கியப் படைகள் பெருமளவில் இரகசியமாகப் பங்கேற்பர். நேட்டோ நாடுகளின் புதிய படைக்கலன்களுடன் மரபு வழிப்போர்ப் பயிற்ச்சி பெற்ற படையினர் இரசிய ஆக்கிரமிப்பு படையினர் மீது தாக்குதல் செய்யும் போது பெருமளவு ஆளணி இழப்புக்களும் படைத்துறைப் பார ஊர்தி இழப்புக்களும் ஏற்படும். அமெரிக்காவின் தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளுக்கும் உக்ரேனின் தாங்கிகளுக்கும் இடையிலான போட்டிக்களமாக உக்ரேன் மாறலாம். 2022  பெப்ரவரி இறுதியில் உக்ரேனில் ஒரு மோதல் நடக்கும். 

தைவான்

சீனாவின் தைவான் ஆக்கிரமிப்பு நடப்பதற்கு பல வழிகள் உண்டு. தொடர்ச்சியான அழுத்தங்கள் மற்றும் மிரட்டல்கள் மூலம் சீனா தைவானை ஆக்கிரமிக்க முயலலாம். அது வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. தைவானியர்களிடையே சீன எதிர்ப்பு மோசமாகிக் கொண்டே போகின்றது. சீனாவிற்கு அடிபணிய வேண்டும் என்ற எண்ணம் இளம் தைவானியர்களிடையே இல்லை. மிக அதிக ஏவுகணைகளை தைவான் மீது ஒரேயடியாக வீசி தைவானை தரை மட்டமாக்கி அடிபணிய வைக்க முயற்ச்சிக்கலாம். தைவான் சீனாவின் மேற்குகரையோர நகரங்கள் மீது தனது ஏவுகணைகளை வீசி சீனப் பொருளாதாரத்தை சிதைக்க முயலலாம். ஹொங் கொங்கையும் ஷாங்காயையும் இலக்கு வைத்து தைவான் பல ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது. தைவான் தனிய தன்னைப் பாதுகாக்க மாட்டாது. ஜப்பான் தைவானை ஆக்கிரமிக்கும் படைகளை இலக்கு வைத்து தைவானுக்கு அண்மையாக உள்ள தீவுகளில் பெருமளவு ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது. தைவான் நீரிணையக் கடக்க முயலும் சீனப் படைகளை ஜப்பானியக் கடற்படைகளும் அமெரிக்க கடற்படைகளும் இணைந்து முதலில் தடுக்கும். தடையை மீறிச் சீனப் படையினர் செல்ல முயன்றால் பெரும் கடற்போர் நடக்கலாம். அது முற்றிய நிலையில் அமெரிக்க நகரங்களையும் ஜப்பானையும் இலக்கு வைத்து சீனா தனது மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகளை வீசலாம். அது பல நேட்டோ நாடுகளையும் ஒஸ்ரேலியாவையும் தென்கொரியாவையும் வியட்னாமையும் சீனாவிற்கு எதிரான போரில் ஈடுபட வைக்கும். சீனாவின் இந்த போர்ச் சூழலைப் பயன்படுத்தி இந்தியா முழுக் கஷ்மீரையும் கைப்பற்ற முயலலாம். ஒது ஓர் உலகளாவிய போராக மாறும் இடர் உண்டு.

உலகப் பொருளாதாரம்

கோவிட்-19இற்கு எதிரான நடவடிக்கைகள் வெற்றி பெறுவதற்கு குறைந்தது 2022இல் ஆறு மாதங்களாவது எடுக்கும். நோய்க்கான மருந்தும் 2022இல் பரவலாக பாவனைக்கு வந்துவிடும். உலகில் பல நாடுகளில் அரச துறையில் ஆட்குறைப்பு செய்யப்படும். ஓய்வூதியங்கள் பெறுவோர் சிக்கல்களைச் சந்திப்பார்கள். பணிபுரிவோர் வீட்டிலும் பணிமனையிலும் இருந்து செயற்படுவது 2022இல் நிரந்தரமாகிவிடும். 2022இல் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பல சிரமங்களை அரசுகள் எதிர் கொள்ளும். அதனால் உலகெங்கும் வட்டி விழுக்காடு அதிகமாக இருக்கும். பல நாடுகளின் திறைசேரிகள் விற்பனை செய்யும் கடன் முறிகள் எதிர்பார்த்த அளவு நன்மையத் தாராது. 2009இன் பின்னர் நடந்தது போல் அளவுசார் தளர்ச்சி எதிர்பார்க்கும் நன்மையைத் தராது.

சூழல் பாதுகாப்பு

மேற்கு நாடுகள் புவிப்பந்தை அசுத்தப்படுத்தி பொருளாதாரத்தில் முன்னேறிய நிலையில் சீனா இந்தியா போன்ற நாடுகள் தாமும் தொடர்ந்து அசுத்தப்படுத்தினால் தான் முன்னேற முடியும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றன. இதனால் சூழல் வெப்பமாதலும் மாசுபடுத்தப் படுவதும் தேவையான அளவு குறைக்க முடியாமல் இருக்கும். புதுப்பிக்கக்கூடிய வலு (Renewable Energy) உற்பத்தியில் அதிக முதலீடுகள் செய்யப்படும். பசுமைக் கொள்கை பல நாடுகளில் வலிமையடையும்.

இந்தியா

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு 2022 ஓகஸ்ட் மாதம் இடம்பெறவிருக்கின்றது. 2022இன் ஆரம்பத்தில் கோவா, மணிப்புரி, பஞ்சாம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் சட்ட சபைக்கான தேர்தல் நடக்கவிருக்கின்றது. நல்ல தலைவர் இல்லாத காங்கிரசுக் கட்சி ஆளும் பரதிய ஜனதா கட்சிக்கு வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான வெற்றியின் இரகசியம் முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரசுக் கட்சியின் வலுவற்ற தலைமையில் தங்கியுள்ளது. இந்தியா 2022இல் சீனாவிலும் பார்க்க அதிக அளவு மக்கள் தொகை கொண்ட நாடாக உருவெடுக்க வாய்ப்புண்டு.

இலங்கை

2021இல் இலங்கை அரசின் நடுவண் வங்கி அந்நியச் செல்வாணிக் கையிருப்பு இன்மையால் நெருக்கடியை எதிர் கொள்ள வேண்டி ஏற்பட்டது. 2022 இலங்கையின் அரசுக்கு சொந்தமான வர்த்தக வங்கிகளான இலங்கை வங்கி, மக்கள் வங்கி ஆகியவை செயற்படா கடன்களால் நெருக்கடியை எதிர் நோக்கலாம். அவற்றுடன் ஹட்டன் நஷனல் வங்கி, வர்த்தக வங்கி போன்றவையும் நிதி நெருக்கடியைச் சந்திக்கலாம். அவற்றை நிதி நெருக்கடியில் இருந்து மீட்க முடியாமல் இலங்கையின் நடுவண் வங்கி திணறலாம். பெருமளவு நன்கொடை அல்லது உள்நாட்டுச் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதன் மூலம் மட்டுமே இலங்கை நிதி நெருக்கடியில் இருந்து தப்ப முடியும். அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்வதும் அதை அரசு இரும்புகரங்களால் அடக்குவதும் நடக்கும். இலங்கை ஆட்சியாளர்கள் படைத்துறையினரின் ஆட்சி வரும் என மிரட்டுவார்கள். ராஜபக்சே குடும்பத்தினர்களின் ஊழல்கள் பலவற்றை மேற்கு நாடுகளின் உதவியுடன் இலங்கை அரசியல்வாதிகள் அம்பலப் படுத்துவர். ஆட்சி கலையும் வாய்ப்புக்கள் குறைவு. ஆனால் ஆட்சியாளர்கள் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு பல விட்டுக்கொடுப்புக்களைச் செய்வார்கள். அமெரிக்காவுடனான SOFA ஒப்பந்தம் வேறு பெயரில் இலங்கையால் கைச்சாத்திடப்படலாம். இந்தியாவுடனான இலங்கையின் CEPA ஒப்பந்தம் மீளவும் காலம் கடத்தும் வகையில் பேச்சு வார்த்தை நடத்தப்படும்.

ஈழத் தமிழர்கள்

மீண்டும் ஈழத்தமிழர்களை 13இற்குள் முடக்கும் முயற்ச்சி 2022இல் உறுதியாக முன்னெடுக்கப்படும். ஏற்கனவே பல அரசியல்வாதிகள் அதற்கு விலைபோன நிலையில் மேலும் பல அரசியல்வாதிகள் விலைபோக வாய்ப்புண்டு. இலங்கையை 13-ம் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற நிர்ப்பந்திக்கும் ஆற்றல் இந்தியாவிடம் இல்லை. இந்தியாவைக் கையாளும் திறனை இலங்கை சிறப்பாக மேம்படுத்திக் கொண்டே வருகின்றது. எல்லாத் தமிழர்களும் இணைந்து இந்தியாவிடம் 13ஐ முழுமையாக நிறைவேற்ற வைக்கும் கோரிக்கை இறுதியில் இந்தியாவிற்கு ஒரு பெரும் சவாலாகவே அமையும். வலுவிழந்த நிலையில் இருக்கும் இலங்கை அரசு சிங்கள மக்கள் நடுவில் மேலும் செல்வாக்கு இழக்க வைக்கும் நகர்வான 13ஐ முழுமையாக நிறைவேற்றுவதைச் செய்ய மாட்டாது. இந்தியாவை ஏமாற்றுவதற்காக அரச ஆதரவுடன் 13இற்கு எதிரான கிளர்ச்சிகளை பிக்குகள் தலைமையில் பெருமளவு சிங்களவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர். இலங்கையில் உள்ள இந்தியாவின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம். அதனால் 13-ம் திருத்தம் மேலும் வலுவிழந்து பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்படலாம். இந்தியாவிற்கு எதிராக சிங்களவர்கள் செய்யும் கிளர்ச்சியை அமெரிக்கா ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கும். காணாமற் போனோர் பிரச்சனை தீர்க்கப்படமாட்டாது. காணி அபகரிப்பு தொடர்ந்து நடக்கும். ஜெனீவா இழுத்தடிப்பு தமிழர்களுக்கு பயனின்றி தொடரும். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்க அமெரிக்கா தமிழரகளுக்கு விடுதலை பெற்றுத்தரும் என்பது மனப்பாலாகவே இருக்கும்.

சீனா

சீனா செய்ய முயலும் பொருளாதாரச் சீர்திருத்தம் சீன மக்களுக்கு பல பிரச்சனைகளை கொடுக்கும். சீன அதிபரின் பொதுச் செழுமைத் திட்டம் பல பணமுதலைகளின் மறைமுக எதிர்ப்புக்கு உள்ளாகும். உலக அரங்கில் சீனாவின் ஏற்றுமதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படலாம். மோசமடைந்த சமூக ஏற்றத்தாழ்வுகள் சீர்திருத்தப்பட முடியாமல் இருக்கும். உள்நாட்டு நிறுவனங்களும் உள்ளூராட்சிச் சபைகளும் பட்ட கடன்களை அடைக்க முடியாமல் திணறும். ஜீ ஜின்பிங் ஆட்சியிலும் கட்சியிலும் தன் பிடியை இறுக்க எடுக்கும் முயற்ச்சிகள் எதிர்ப்பை சந்திக்கும்.

இரசியா

பெலரஸ் மற்றும் மோல்டோ நாடுகளை தன் பிடியில் வைத்திருக்க இரசியா தொடர்ந்து முயற்ச்சி செய்யும். இரசியாவின் பொருளாதாரப் பிரச்சனை சீர் செய்யப்படும். இரசியாவின் படைக்கல ஏற்றுமதி அதிகரிக்கும். தனது எரிவாயு ஏற்றுமதியை இரசியா அரசுறவியல் கருவியாக (Diplomatic Tool) மேற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் பாவிக்கும்.

படைக்கலப் போட்டி

உலக நாடுகளிடையே படைக்கலப் போட்டி மேலும் தீவிரமடையும். முன்னணி நாடுகள் எல்லாம் தமது படைத்துறைச் செலவை அதிகரிக்கும். அமெரிக்காவின் தொலைதூரக் குண்டு வீச்சுமானமன B-21 Raider, ஆறாம் தலைமுறைப் போர்விமானங்கள், Ford Class விமானம் தாங்கிக் கப்பல்கள், இரசியாவின் எஸ்-500 ஏவுகணை எதிர்ப்பு முறைமை, சீனாவின் அடுத்த மீயுயர்-ஒலிவேக(ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகள், இந்தியாவின் அக்னி-6 ஏவுகணைகள் 2022-ம் ஆண்டு முழுமையான பாவனைக்கு வரும். ஜப்பான் தனது படைவலிமையைப் பெருக்கும். அமெரிக்காவுற்கு அடுத்தபடியாக ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தை உற்பத்தி செய்யும் நாடாக ஜப்பான் இருக்கும். ஆனால் அம்முயற்ச்சி 2022இல் நிறைவடைவதற்கான வாய்ப்பு குறைவு.

துருக்கி ஒரு குழப்படி பிள்ளை போல் குறுக்கும் நெடுக்குமாக ஓடித்திரியும். சவுதி அரேபியா அடங்கும். இஸ்ரேல்-ஈரான் முறுகல் மேலும் தீவிரமடைந்து அவை இணையவெளியில் மோசமாக மோதிக் கொள்ளும். செயற்கை விவேகம் பல மடங்கு முன்னேற்றம் அடையும். துளிம கணினித்துறை (Quantum Computing) பெருமளவு முன்னேற்றமடையும். ஈரன் – அமெரிக்க யூரேனியப் பதப்படுத்தல் பேச்சு வார்த்தை இழுபறியில் இருக்கும்.

நாடுகளிடையே முறுகல்கள் தீவிரமடைவதும், பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் திணறுவதும், உலக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் புதிய படைக்கலன்களும், இயற்கை அனர்த்தங்களும் 2022இன் அம்சங்களாக இருக்கும்.

Wednesday, 17 November 2021

பைடன் – ஜின்பிங் சந்திப்பும் தைவானின் பாதுகாப்பும்

  


2021 நவம்பர் 15-ம் திகதி அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் மெய்நிகர் வெளியில் உரையாடுகையில் தைவானிய அரசு தைவானின் தற்காப்பு தொடர்பான கேந்திரோபாயக் கொள்கை பற்றிய பத்திரமும் பகிரங்கப் படுத்தப்பட்டுளது. தைவானை சீனா கைப்பற்றி விடுமா என்ற கரிசனையில் அமெரிக்காவும் தைவானை அமெரிக்கா அங்கிகரித்து விடுமா என்ற ஐயத்தில் சீனாவும் இருக்கும் நிலையில் இரு நாட்டு அதிபர்களும் சந்தித்துள்ளனர்.

மோசமான ஐந்து ஆண்டுகள்

2016-ம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் தேர்தலில் வென்றவுடன் தைவான் அதிபர் தொலைபேசி மூலம் டிரம்புடன் பத்து நிமிடம் உரையாடியது சீனாவை விசனப்படுத்தியது. 2018-ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகப் போர் (ஒரு நாட்டிலிருந்து செய்யப்படும் இறக்குமதிக்கு மற்ற நாடு அதிக வரி விதித்தல் அல்லது இறக்குமதிகளைத் தடை செய்தல்) ஆரம்பமானதில் இருந்து அமெரிக்க சீன உறவில் விரிசல் விழ ஆரம்பித்தது. 2019-ம் ஆண்டு உலகெங்கும் பரவிய கொவிட்-19 தொற்று நோய் சீனாவில் இருந்து ஆரம்பித்தது என்ற குற்றச் சாட்டை அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த போதும் அமெரிக்க சீனாவிடையிலான உறவு பாதிப்பிற்கு உள்ளானது. பின்னர் ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடையை சீனாவின் ஹுவாவே நிறுவனம் மீறியது எனக் குற்றம் சாட்டிய அமெரிக்கா அதன் உரிமையாளரின் மகளை கனடாவில் தடுத்து வைக்கும் வேண்டுகோளை கனடிய அரசிடம் விடுத்திருந்தது. ஹுவாவே நிறுவனத்தின் Meng Wanzhou கனடா தடுத்து வைக்கப்பட்டமைக்கு பதிலடியாக கனடிய ஊடகவியலாளர்க இருவரை சீனா தடுத்து வைத்தது. இதனாலும் அமெரிக்க சீன உறவு பாதிக்கப்பட்டது. 2020 ஆகஸ்ட்டில் அமெரிக்க சுகாதாரத்துறை அமைச்சர் தைவான் சென்றது சீனாவைக் கடும் விசனத்திற்கு உள்ளாக்கியது. 2021-10-28இலன்று தைவானின் அதிபர் சாய் இங் வென் தைவானின் அமெரிக்கப் படையினர் தங்கியிருந்து தைவானியப் படையினருக்கு பயிற்ச்சி வழங்குகின்றார்கள் என்பதைப் பகிரங்கப்படுத்திய போது சீனாவின் பதில் சினம் மிருந்ததாக இருந்தது. அப்படிப் பயிற்ச்சி வழங்குவது சீனா படை நடவடிக்கை மூலம் தைவானைக் கைப்பற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டை தீவிரப்படுத்துகின்றது என சீனா பதில் வழங்கியது. அந்நியப் படைகளுடனான ஒத்துழைப்பை தைவான் அதிகரிக்கும் போது சீனப் படைகள் தைவானை நோக்கி வரும் வேகமும் அதிகரிக்கும் என சீனப் பொதுவுடமைக் கட்சியின் ஊடகமான குளோபல் ரைம்ஸ் கருத்து வெளியிட்டது.

தணிக்க முயலும் பைடன்

ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் சீன அமெரிக்க முறுகலை தணிக்கும் நகர்வுகளைச் செய்து வருகின்றார். சீன அதிபரும் இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகல்கள் சீனப் பொருளாதாரத்தை பாதிக்கும் என உணரிந்து செயற்படுகின்றார். சீனா தொடர்ந்து 7%இற்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை பேணாவிடில் சீனாவில் பல சமூக குழப்பங்கள் ஏற்படலாம். இந்த நிலையிலேயே ஜோ பைடன் – ஜீ ஜின்பிங் சந்திப்பு 15/11/2021 நடை பெற்றது. பைடன் – ஜின்பிங் சந்திப்பின் போது தைவானின் தற்போதைய நிலையை சீனா ஒரு-தரப்பாக மாற்ற முயல்வது தைவானில் அமைதியை பாதிப்பிற்கு உள்ளாக்கும் என்றார் அமெரிக்க அதிபர் பைடன். அதற்கு ஜின்பிங்கின் பதில் காரம் நிறைந்ததாக இருந்தது. “தைவானின் சுதந்திரத்திற்கு உதவி செய்வது நெருப்புடன் விளையாடுவது போலாகும்; அப்படி விளையாடுபவர்கள் எரிபடுவார்கள்.” என்றார். ஜீ ஜின்பிங். இச் சந்திப்பிற்கு முன்னரே அமெரிக்க அதிபர் தைவானைப் பாதுகாக்க தேவையான எல்லாவற்றையும் அமெரிக்கா செய்யும் என்றார். தைவானை ஒரு தனிநாடாக அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு சீனா என்ற நிலைப்பாட்டில் தான் இருப்பதாக அமெரிக்கா சொல்கின்றது. ஆனால் 1979இல் அமெரிக்கப் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தைவான் பாதுகாப்புச் சட்டம் அமெரிக்கா தைவானைப் பாதுகாக்க உதவி செய்யும் எனச் சொல்கின்றது. தைவானுடன் அமெரிக்காவிற்கு அரசுறவு இல்லை, தைவானை ஒரு நாடாக அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை. அமெரிக்கா தைவானுக்கு தொடர்ச்சியாக படைக்கலன்களை விற்பனை செய்கின்றது. இவற்றால் தைவான் தொடர்பாக அமெரிக்காவின் கொள்கை “கேந்திரோபாய குழப்ப நிலை” என விபரிக்கப்படுகின்றது.

தெளிவாக்கப்படுமா கேந்திரோபாய குழப்ப நிலை?

அண்மைக் காலங்களாக தைவான் தொடர்பாக அமெரிக்கா ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் அமெரிக்க தரப்பில் இருந்து முன்வைக்கப்படுகின்றது. அமெரிக்க சீன உறவு பாதிக்கப்படாமல் இருக்க “கேந்திரோபாய குழப்பநிலை” தவிர்க்க முடியாதது. அதை அப்படியே வைத்துக் கொண்டு தைவானை இப்படியே (தனிநாடாக அங்கீகரிக்காமல்) வைத்திருப்பது ஆபத்து அற்றது. அதனால் தான் அதற்கு கேந்திரோபாயக் குழப்ப நிலை என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சீனா தைவானைக் கைப்பற்ற வேண்டும் என்ற கருத்தை தீவிரமாக முன்வைக்கும் போது அதைப் பாதுகாப்போம் என அமெரிக்கா அழுத்திச் சொல்கின்றது. 1996-ம் ஆண்டு தைவானை ஆக்கிரமிக்க சீனா தயார் செய்த போது அப்போதைய அதிபராக இருந்த பில் கிளிண்டன் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை சீனாவிற்கும் தைவானிற்கும் இடையிலான தைவான் நீரிணக்கு அனுப்பியவுடன் சீனா தனது முயற்ச்சியைக் கைவிட்டது. பதினைந்து ஆழ்கடல் துறைமுகங்களைக் கொண்ட தைவானை சீனா கைப்பற்றினால் அதன் கடற்படை வலிமை மிகவும் அதிகமாகும். பசுபிக் பிராந்தியத்தில் சீனா அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் கொடுக்கக் கூடிய நாடாக மாறும். அதனால் தைவானை சீனா கைப்பற்றுவதை அமெரிக்கா எந்த வகையிலும் தடுக்கும்.

தைவானின் பாதுகாப்பை முள்ளம் பன்றிக்கு ஒப்பிடுகின்றனர். தன்னை இரையாக்க வரும் மிருகங்களில் தன் முள்ளால் குத்தும் சிறு மிருகமான முள்ளம் பன்றியைப் போல் தைவானாலும் தன் எதிரிக்கு இழப்பை ஏற்படுத்த முடியும். தைவானின் தேசிய பாதுகாப்புச் சபை எப்படி சீன ஆக்கிரமிப்பை எதிர்கொள்வது என்பது பற்றிய திட்டங்கள் அடங்கிய பத்திரதை பகிரங்கப்படுத்த முன்னரே அதை ஜப்பானிய ஊடகம் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது. அதன்படி தைவான் சீனப்படைகளுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது:

1. போரையும் வெளி படைத்துறை அச்சுறுத்தலையும் தடுத்தல்.

2. தைவான் நீரிணையைக் கடக்கும் போது எதிரிக்கு பாரிய இடர்களை ஏற்படுத்துதல்.

2. தைவான் நீரிணையைக் கடக்கும் எதிரிக்கு அதிக ஆளணி இழப்புக்களை ஏற்படுத்தல்,

3. தைவான் நீரிணையை கடப்பதில் எதிரிக்கு உள்ள வலிமையற்ற புள்ளிகளை இனம் காணுதல்,

4. கடல் மூலம் தைவானைக் கைப்பற்ற முடியாது என்ற நிலையை உருவாக்குதல்.

ஆகியவை தைவானின் உபாயங்களாக இருக்கின்றன. ஆனால் தைவான் சீனாவின் மேற்குக் கரையில் உள்ள பொருளாதார நிலைகளை, குறிப்பாக ஷாங்காய், ஹொங் கொங் ஆகிய நகரங்களை நிர்மூலம் செய்யக் கூடிய ஏவுகணைகளை தானே உற்பத்தி செய்து வைத்திருக்கின்றது. சீன ஆக்கிரமிப்புக்கான ஏற்பாடுகளைச் செய்யும் போது தைவான் தனது ஏவுகணைகளை வீசலாம்.

இடர் மிகுந்த ஈருடகத் தாக்குதல்

உலகப் போர் வரலாற்றில் ஈரூடகத் தாக்குதல் (நீர் ஊடாக சென்று தரையில் தாக்குதல் செய்தல்) எதிரி எதிர்பாராத இடத்தில் எதிர்பாராத நேரத்தில் எதிரிக்கு தெரியாமல் செய்யப்படும் போதே வெற்றியளிக்கும் என்பது விதியாகும். தற்போதைய செய்மதி அவதானிப்புகள் வேவுவிமானங்கள், கண்காணிப்பு விமானங்கள் ஆகியவற்றின் அபரிமிதமான வளர்ச்சி ஈரூடகத் தாக்குதலை இடர் மிக்கதாக மாற்றியுள்ளது. சீனாவிடம் தைவானை தரைமட்டமாக்கக் கூடிய ஏவுகணைகள் தேவைக்கு அதிகமாக உள்ளன. ஆனால் படையினரை பெரும்ளவில் கொண்டு போய் தைவானில் இறக்குவது ஆபத்தானதாகும். அதுவும் எந்த ஒரு போர் முனை அனுபவமும் இல்லாத சீனப் படையினரை ஒரு எதிரி மண்ணில் வான் மூலமோ தரை மூலமோ இறக்குவதில் உள்ள ஆபத்தை சீனப் படைத்துறையினர் நன்கு அறிவர். போரில் அனுபவம் இல்லாதவர்களால் பயிற்ச்சி வழங்கப்பட்ட சீனப் படையினரை போர் அனுபவம் மிக்க படையினரால் பயிற்ச்சி வழங்கப்பட்ட தைவானியப் படையினர் ஒச்ரு மரபு வழிப் போரில் சமாளிக்க முடியும். தைவானியர்கள் கரந்தடிப் போர் முறைமையையும் பாவிக்கலாம்.

2021 நவம்பர் 3-ம் திகதி அமெரிக்கப் படைத்தளபதி ஜெனரல் மார்க் மில்லியின் கருத்துப் படி அடுத்த 24 மாதங்களுக்குள் சீனா தைவான் மீது போர் தொடுக்காது ஆனால் தைவானைக் கைப்பற்றக் கூடிய வலிமையை சீனா பெருக்கிக் கொண்டே இருக்கும்.

Wednesday, 25 November 2020

தைவானைச் சுற்றி ஆசியப்படை வலுப்பெருக்கல் போட்டி

 

இந்திய-சீன மற்றும் இந்திய-பாக்கிஸ்த்தான் படைத்துறைப் போட்டி தீவிரமடைவதற்கான காரணம் அமெரிக்கா தைவானைப் பாதுகாப்பதற்கு செய்யும் நடவடிக்கைகளாகும். அமெரிக்கக் கடற்படையின் Rear Admiral Michael Studeman 21/11/2020 தைவானிற்கு ஒரு பயணத்தை மேற்கொண்டதாக தைவானில் இருந்து செய்திகள் கசியவிடப்பட்டுள்ளன. இவர் அமெரிக்கப் படையின் ஆசிய பசுபிக் கட்டளையகத்தின் உளவுப் பிரிவின் உயர் அதிகாரியாவார்.  இதற்கு முன்னர் அமெரிக்கப் படையினர் தைவானியப் படையினருக்கு பயிற்ச்சி வழங்குவதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன. கடந்த ஓராண்டாக அமெரிக்கா பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான படைக்கலன்களை தைவானிற்கு விற்பனை செய்தது சீனாவைக் கடும் சினத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 

1995-96 தைவான் நெருக்கடி

1994 பில் கிளிண்டன் தைவானிய அதிபர் லீ டெங் கூ அமெரிக்கா செல்ல அனுமதி மறுத்தார். சீனாவுடனான உறவைக் கருத்தில் கொண்டே அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அமெரிக்க நாடாளமன்றம் 1995 மே மாதம் மக்களவையில் 396-1 என்ற பெரும்பான்மையுடனும் மூதவையில் 97-1 என்ற பெரும்பான்மையுடனும் அவருக்கு பயண அனுமதி வழங்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. 1979 ரிச்சர்ட் நிக்சன் அமெரிக்க சீன அரசுறவை நிலை நிறுத்திய போது தைவானும் சீனாவின் ஒரு பகுதி என ஒத்துக் கொள்ளப்பட்டது. 1995 ஜூலை தான் படித்த கோர்ணல் பல்கலைக் கழகத்தில் தைவானின் மக்களாட்சி பற்றி தைவானிய அதிபர் லீ டெங் கூ உரையாற்றினார். இதனால் ஆத்திரமடைந்த சீனா தைவானை இலக்கு வைத்து 1995-ஜூலை முதல் தொடர் ஏவுகணைச் சோதனை, கடற்படைப் போர் ஒத்திகை போன்றவற்றைச் செய்தது. சீனப் படைகள் ஃபிஜீயன் மாகாணத்திற்கு பெருமளவில் நகர்த்தப்பட்டனர். அவர்களை வைத்து ஈரூடக தாக்குதல் ஒத்திகை நடத்தப்பட்டது. தைவானை கைப்பற்றும் நகர்வுகளைச் சீனா செய்வதை அறிந்த அதிபர் பில் கிளிண்டன் USS NIMITZ, USS INDEPENDENT என இரு விமானம் தாங்கிக் கப்பல்களின் தலைமையில் இரு பெரும் கடற்படைப்பிரிவுகளை தைவான் நீரிணைக்கு அனுப்புகின்றார். அந்த இரண்டு கடற்படைப் பிரிவுகளையும் தம்மால எதிர் கொள்ள முடியாது என உணர்ந்த சீனா தனது தைவான் ஆக்கிரமிப்பு முயற்ச்சியைக் கைவிட்டது. இது சீனாவின் மூக்குடைபட்ட ஒரு நிகழ்வாகும். சினம் கொண்ட சீனா அவசரமாக இரசியாவிடமிருந்து பல தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள், எழுபத்தாறு SU-30-MKK, இருபத்தினான்கு SU-30-MK2 ஆகிய போர்விமானங்கள் போன்றவற்றை வாங்குகின்றது. அமெரிக்காவிற்கு இணையாக சீனா தனது படைவலுவை உயர்த்த முடிவு செய்தது. அதன் நீண்ட காலத் திட்டத்தால் அது இன்று அமெரிக்காவிற்கு சவால் விடக்கூடிய ஒரு படைத்துறையைக் கொண்டுள்ளது. அமெரிக்கா இன்று சீனாவின் வளர்ச்சியை இட்டு கரிசனை கொண்டுள்ளது. சீனாவின் படைத்துறை வளர்ச்சி அது தென் சீனக் கடலில் உள்ள தீவுகளை தனதாக்கி அங்கு தன் படை நிலைகளை நிறுவ வழிவகுத்தது. அதைத் தடுக்க அமெரிக்காவால் முடியவில்லை. அந்த தீவுகளுக்கு மேலாக அமெரிக்கா தனது போர் விமானங்களைப் பறக்க விடுவதும் அத்திவுகளுக்கு அண்மையில் தனது கடற்படைக் கலன்களை அனுப்புவதும் மட்டுமே அமெரிக்காவால் செய்ய முடிந்தது. இது பிலிப்பைன்ஸ் ஆட்சியாளர்களை அமெரிக்காமீது அதிருப்தி கொள்ள வைத்தது.

சீனாவின் அயல் நாடுகளின் கரிசனை

சீனாவின் கிழக்குப் பக்கம் ஜப்பானும் தென் கொரியாவும் சீன அச்சுறுத்தலைச் சமாளிக்க இரண்டு வழிகளைக் கையாள்கின்றன. ஒன்று தனது படைவலிமையைப் பெருக்குவது இரண்டாவது அமெரிக்காவுடன் படைத்துறை ஒத்துழைப்பை அதிகரிப்பது. மேற்குப் புறம் இந்தியா சீனப் படைத்துறை வளர்ச்சியால் அதிக கரிசனை கொள்கின்றது. சீனா அருணாச்சலப் பிரதேசம் தனது நாட்டின் ஒரு பகுதி எனச் சொல்கின்றது. ஆரம்பத்தில் இந்தியா இரசியாவுடன் படைத்துறை ஒத்துழைப்பையும் இரசியாவிடமிருந்து பெருமளவு படைக்கலன் கொள்வனவையும் செய்கின்றது. சீனா தொடர்ச்சியாக இந்திய எல்லையில் செய்யும் அத்து மீறல்களால் இந்தியா தனது பாதுகாப்பையிட்டு முழுமையான மனநிறைவு அடையவில்லை. அமெரிக்க இந்திய படைத்துறை ஒத்துழைப்பு உருவாக்கி அதிகரிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்தியாவின் படை வலிமை அதிகரிப்பால் பாக்கிஸ்த்தானைச் சிந்திக்க வைக்கின்றது. அதுவும் தன் படைவலிமையை அதிகரிக்கின்றது. இந்தியா தனக்கும் சீனாவிற்கும் இடையில் உள்ள படை வலிமை இடைவெளியை அமெரிக்க உறவால் நிரப்ப முயல பாக்கித்தானும் தனக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள படைவலிமை இடைவெளியை சீன உறவால் நிரப்ப முயல்கின்றது.

குவாட் உரையாடல்

சீனாவின் பொருளாதார, படைத்துறை, தொழில் நுட்ப வளர்ச்சியும் பசுபிக் பிராந்தியத்தில் உள்ள சிறிய நாடுகளுக்கு கடன் கொடுத்து அவற்றின் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதும் ஜப்பானையும் ஒஸ்ரேலியாவையும் கரிசனை கொள்ள வைக்கின்றது. இதனால் ஜப்பான் நான்குமுனை உரையாடல் (Quadilateral Dialogue) என்னும் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளைக் கொண்ட உரையாடலைத் தொடக்குகின்றது. இதன் நோக்கம் இந்து மாக்கடலிலும் பசுபிக் மாக்கடலிலும் சுதந்திரமான கடற்போக்குவரத்தை உறுதி செய்ய நான்கு நாடுகளும் ஒத்துழைத்தல் எனச் சொன்னாலும் அதன் உண்மையான நோக்கம் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் படைவலிமையை எதிர்கொள்வதற்கான ஒத்துழைப்பாகும்.

தைவான் சீனாவின் மணிமுடி

சீனாவின் தொழில்நுட்ப வலுவின்மையான புள்ளிகளில் semiconductors உற்பத்தியும் ஒன்று. தகவல் தொழில்நுட்பத்தின் உயிர்நாடியான அந்தத் துறையில் அமெரிக்கா, தென் கொரியா, தைவான் ஆகியவை உலகில் முன்னணியில் திகழ்கின்றன. தைவானை சீனாவின் ஒரு பகுதியாக்குதல் சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும்.  உலகெங்கும் துறைமுகங்களைத் தேடித் தேடி அபிவிருத்து செய்யும் சீனாவிற்கு 15 துறைமுகங்களைக் கொண்ட தைவான் பெரும் வாய்ப்பாகும். தைவானை சீனா கைப்பற்றினால் பசுபிக் பிராந்தியத்தில் அதன் ஆதிக்க வளர்ச்சிக்கு ஏதுவாக அமையும். 2019 ஜனவரியில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் தைவான் சீனாவினது ஒரு பகுதி என்றும் தேவை ஏற்படின் படைகளைப் பாவித்தாவது அதை சீனாவின் ஒரு பகுதியாக்குவோம் என முழங்கினார். தைவானின் தனித்துவத்தை காப்பாற்றுவோம் என அமெரிக்கா உறுதி பூண்டுள்ளதாக அறிவித்தது. அது தைவானியர்களின் சுதந்திரத்தில் கொண்ட அக்கறையால் அல்ல பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கவே.

சீனாவிற்கு எதிராக இந்தியாவை இழுத்த அமெரிக்கா

தைவானை நோக்கி சீனாவின் படைநகர்வுகளிற்கு பதிலடியாக 2018-ம் ஆண்டு அமெரிக்கா மூன்று தடவை தனது கடற்படையை சீனாவிற்கும் தைவானிற்கும் இடையில் உள்ள தைவான் நீரிணைக்கு அனுப்பவேண்டியிருந்தது. சீனா தைவானைக் கைப்பற்ற முயற்ச்சித்தால் ஒரு அமெரிக்க சீனப் போர் நிச்சயம் ஊருவாகும். இதில் சீனாவிற்கு பாதகமான சூழலை ஏற்படுத்த இந்தியா சீனா எல்லையில் சீனாவிற்கு எதிராக படை நகர்த்தலைச் செய்ய வேண்டும் என்ற திட்டம் இரகசியமாக ஆலோசிக்கப்பட்டது. சீனா தைவான் போரில் ஈடுபடும் வேளையில் பாக்கிஸ்த்தான் வசமுள்ள கஷ்மீரை இந்திய கைப்பற்ற திட்டமிட்டது. அமித் ஷா பாக்கிஸ்த்தானும் சீனாவும் கைப்பற்றி வைத்திருக்கும் கஷ்மீரை எப்படியும் மீட்போம் என இந்தியப் பாராளமன்றத்தில் முழங்கினார். அதை எப்படியோ அறிந்த சீனா தைவான் போரின் போது இந்தியா அப்படி ஒரு படை நகர்வை மேற்கொண்டால் பாக்கிஸ்த்தானும் சீனாவும் இணைந்து இந்தியாவிற்கு எதிராக ஒரு போர் செய்ய முடிவு செய்துள்ளன. பாக்கிஸ்த்தான் வசமுள்ள கஷ்மீரினூடாக சீன அமெரிக்க பொருளாதாரப் பாதை செல்கின்றது.

இரு குழுக்கள்

பாக் + சீனா ஒரு புறம் அமெரிக்கா+ஜப்பான்+இந்தியா+ஒஸ்ரேலியா+ தென் கொரியா + வியட்நாம் இன்னொரு புறம் என்ற போட்டி நிலை ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தீவிரமாகிக் கொண்டிருக்கின்றது. குவாட் பாதுகாப்பான கடற் போக்கு வரத்தை உறுதி செய்தல் என்னும் பெயருடன் ஒரு படைத்துறை ஒத்துழைப்பு. இது நேட்டோ போல் நெருக்க மாக இருக்காது. அமெரிக்கா நேட்டோ நாடுகளைப் பாதுகாக்க எடுத்த பொறுப்பைப் போல் சீனாவின் அயல்நாடுகளை சீனாவிடமிருந்து பாதுகாக்க முழுப்பொறுப்பு எடுக்காது. ஆனால் தனது தீவிர ஒத்துழைப்பை வழங்கும்.

இரசியாவின் நிலைப்பாடு

2014-ம் ஆண்டு கிறிமிய இணைப்பின் பின் நெருங்கி வந்த இரசிய சீன உறவு 2019இல் இருந்து நெருக்கம் குறைந்து கொண்டு போகின்றது. மத்திய ஆசியாவில் சீனா செய்யும் நகர்வுகளை இட்டு இரசியா கரிசனை கொண்டுள்ளது. இரசியா சீனாவிற்கு வழங்க ஒத்துக்கொண்ட எஸ்-400 என்ற வான் பாதுகாப்பு முறைமையை விநியோகிப்பதை தாமதப் படுத்தியுள்ளது. சீனாவின் நட்பு நாடாக வட கொரியாவும் கம்போடியாவும் மட்டும் இருக்கின்றன.

ஜோ பைடனின் தலைமையில் அமெரிக்கா

அமெரிக்க இந்திய படைத்துறை ஒத்துழைப்பில் ஜோன் பைடனும் அதிக அக்கறை காட்டுவார். டிரம்ப் இந்தியாவிற்கு எதிராக வர்த்தகப் போர் செய்ய தயாராக இருந்தார். பைடன் அதில் அக்கறை காட்டமாட்டார். ஆனால் இந்தியாவின் மனித உரிமை மீறல்களிற்கு எதிராக நிற்பார். கமலா ஹரிஸ் இந்தியப் பெண்களுக்கு ஆதரவான நிலைப்பாடு இந்துத்துவாவாதிகளைச் சினமடையச் செய்யலாம். சீனாவுடன் டிரம்பின் வர்த்தகப் போர். பைடனும் தொடர்வார். ஆனால் அமெரிக்காவிற்கு பாதகம் ஏற்படாத வகையில் அவரது நடவடிக்கைகள் இருக்கும். தைவானை அவரும் காப்பாற்றுவார். டிரம்ப் இருந்திருந்தால் தைவானில் இரகசியமாக இருக்கும் அமெரிக்கப் படைகள் அதிகரிக்கப் பட்டிருக்கலாம். ஜோன் பைடன் உலக தாராண்மைவாத்தை கையில் எடுப்பாரானால் ஆதிக்கப் போட்டி மற்றும் படைத்துறைப் போட்டி ஒரு புறம் இருக்க வர்த்தக ஒத்துழைப்பை சுமூகமாகச் செய்யும் முயற்ச்சியில் இறங்குவார். ஆசியான் நாடுகளும் சீனா, ஒஸ்ரேலியா, தென் கொரியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுமாக இணைந்து மொத்தம் பதினைந்து நாடுகள் Regional Comprehensive Partneship (RCEP) என்னும் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை செய்தது. இதுவும் ஆதிக்கப் போட்டி ஒரு புறமிருக்க நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் சுமூகமாக நடக்க வேண்டும் என்ற எண்ணத்துடனே செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் வளர்ச்சி சீனாவின் ஆதிக்க மனப்பான்மையை குறைக்க உதவாது. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை ஊரை அடிச்சு உலையில் போடுவது என்றால் சீனாவின் வெளியுறவுக் கொள்கை “உன் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய், என் விட்டுக்கு வரும்போது என்ன கொண்டு வருவாய் என்பதே”


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...