அண்மையில் வெளிவந்த ஜூனியர் விகடனில் சிங்கள ரவுடியிஸம் அதிர்ந்த ஐ.நா சபை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. விகடன் குழுமப் பத்திரிகைகள் தங்கள் விற்பனையைப் பெருக்க இலங்கைத் தமிழர்களைப் பற்றி வாரம் ஒரு கட்டுரை எழுத வேண்டிய நிர்ப்பந்தம். அதனால் இலங்கைப் பிரச்சனை பற்றி தொடர்ந்து எழுதி வருகிறது. 2009 மே மாதத்திற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் மிகப் பலமுள்ளவர்களாக இருப்பதாகப் புளுகி எழுதியே தனது விற்பனையப் பெருக்கியது விகடன் குழுமம். அதன் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் பலமாக இருக்கிறார்கள் இலங்கைத் தமிழர்களைப் பற்றி இந்தியாவில் உள்ள தமிழர்கள் பயப்படத் தேவையில்லை என்ற போலியான நிலையை உருவாக்கும் விஷமத் தனமும் கலந்திருந்தது.
ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பாக அதன் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்களுக்கு ஆலோசனை கூற ஒரு நிபுணர்கள் குழுவை அமைத்தது. இதற்கு இலங்கையில் பலத்த எதிர்ப்புக் கிளம்பி அரச மந்திரி விமல் வீரவன்ச கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் பணிமனையை தனது அடியாட்கள் சகிதம் ஆக்கிரமித்து அங்குள்ளவர்களைப் இந்த நிபுணர் குழுவைக் கலைக்கும் வரை பணயக் கைதிகளாக வைத்திருக்கப் போவதாக காரியத்தில் இறங்கினார்.
ஜூனியர் விகடனின் சிங்கள ரவுடியிஸம் அதிர்ந்த ஐ.நா சபை என்ற கட்டுரையில் குறிப்பிடப் பட்டவை:
- இலங்கைக்கு எதிராக சர்வ தேச அளவில் நிலையில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகம் உள்ள அணிசேரா நாடுகள் ராஜபக்சவிற்கு ஆதரவாக நிற்கும் விநோதமான நிலை இப்போது.
- ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்த கதையாக, கடைசியில் இலங்கையின் கண்மூடித்தனமான வன்முறை வெறி, தங்களையே தாக்கியது பற்றிய ரிப்போர்ட்டை முழுமையாக வாங்கி ஸ்டடி செய்தபோது கலங்கியே போனாராம் பான் கீ மூன்!
- ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பலமுறை அடித்துச் சொல்லிவிட்டார் தான் அமைத்தது ஆலோசனைச் சபையே விசாரணைச் சபை அல்ல என்று. இது விகடன் அறியாததா?
- தமிழர் தரப்பு இந்த ஆலோசனைச் சபை இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவிக்கலாம் என்று நம்புகிறார்கள். முன்பு ஐநா மனித உரிமைக் கழகத்தில் இலங்கை போரின் போது செய்த மனித உரிமை மீறல்களைக் கண்டிக்க வந்த தீர்மானத்தை இந்தியா இலங்கைக்கு பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றி தான் ஒரு தமிழின விரோதி என்றும் தமிழினக் கொலை புரியும் சிங்களவர்கள் பின்னால் என்றும் நிற்பேன் என்றும் காட்டிக் கொண்டது. இது விகடன் அறியாததா?
- மஹிந்த ராஜபக்சவிற்கும் பான் கீ மூனிற்கும் பான் கீ மூன் தென் கொரிய வெளிநாட்டமைச்சராக இருந்த காலத்தில் இருந்தே நெருங்கிய நட்பு உண்டு.
- பான் கீ மூன் ஐநா பொதுச் செயலர் பதவிக்குப் போட்டியிட்ட போது இலங்கை தனது வேட்பாளரை போட்டியில் இருந்து விலக்கி பான் கீ மூன் வெற்றிக்கு உதவி செய்தது. அப்போது பான் கீ மூனிற்கும் இலங்கைக்கும் இடையில் திரைமறைவில் ஏதாவது உடன்பாடு ஏற்பட்டிருக்கலாம். சென்ற ஆண்டு நடந்த போரின் போது ஐநா பொதுச் செயலர் நடந்து கொண்ட விதங்கள் அவர் இலங்கைக்கு சார்பாக நடக்கிறார் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது விகடன் அறியாததா?
- இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச தான் கொழும்பில் உள்ள ஐநா பணிமனையை முற்றுகை இடப் போகிறேன் என்று சொன்னபோது ஐநா தரப்பில் அது ஒரு காந்திய ஒத்துழையாமை நடவடிக்கை அதற்கு இலங்கையப் பாராட்ட வேண்டும் என்று தெரிவித்தது. இது விகடன் அறியாததா?
- இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச செய்ததைப் போன்று வேறு நாடுகளில் நடந்த போது அதை ஐநா தரப்பு உடன் கண்டித்தது. ஆனால் இலங்கையில் நடந்ததை ஐநா கண்டிக்கவில்லை. இந்தியாவும் கண்டிக்க வில்லை. இரண்டும் இலங்கையின் கைக்கூலிகளா என்ற சந்தேகம் வலுவானது. இது விகடன் அறியாததா?
- பான் கீ மூன் கலங்கிப் போனார் என்று விகடன் சொல்கிறது. ஆனால் ஐநாவில் இருந்து வரும் செய்திகள் எதுவும் அப்படித் தெரிவிக்கவில்லை.
- பான் கீ மூனின் ஆலோசனைச் சபையினர் இலங்கைக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டர்கள் என்று இலங்கை அரசு அறிவித்தது. இது தொடர்பாக பான் கீ மூன் எந்தக் கருத்தும் இதுவரை கூறவில்லை. இலங்கை சென்று உண்மையை அறியாத ஆலோசனைச் சபையால் எந்தப் பயனும் இல்லை என்பதை விகடன் அறியாதா?
- சர்வதேச நெருக்கடிக் குழு, சர்வ தேச மன்னிப்புச் சபை ஆகியவற்றுடன் செல்வி நவநீதம் பிள்ளை சர்வதேச மட்டத்தில் இலங்கை போர் குற்றம் தொடர்பாக ஒரு விசாரணை தேவை என்று தொடர்ந்து குரல் கொடுத்து வந்தமையைச் சாமளித்து காலத்தை இழுத்தடித்து இலங்கையைக் காப்பாற்றும் நோக்கத்துடந்தான் விசாரணைக் குழு அமைக்காமல் ஆலோசனைக் குழு அமைக்கப் பட்டதா என்ற சந்தேகத்தை விகடன் அறியாதா?
- அடுத்த ஆண்டு பான் கீ மூனின் பதவிக்காலம் முடிந்தபின் அவர் மீண்டும் தெரிவு செய்யப் படுவதற்கு இந்த இலங்கை தொடர்பான விசாரணைப் பாசாங்கு பெரிதும் உதவும் என்பதை விகடன் அறியாதா?